எதிர் வீட்டுப் புதிர்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 140

சமீப காலமாக , குமார குருவிற்கு காதல் என்ற வார்த்தை மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போது அவனுக்குள் அறுந்து போன செருப்பைப் போல அது அடங்கி ஒடுங்கி ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்தது.
பட்டப்படிப்பை முடித்த குமாரகுருவிற்கு, ஒரு வேலையைத் தேடிக் கொள்ளவும் , தனது வயலில் விளைந்த காய்கறிகளை உடனுக்குடன் தனக்குத் தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் விநியோகம் செய்வதற்கும் கும்பகோணத்தில் வாடகைக்கு ஒரு வீடு தேவைப்பட்டது.
ஒரு வழியாக அவன் கும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியில் ஒரு வாடகை வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தான்.
அவன் வாடகைக்கு குடியிருக்கும் அந்த ஐந்து சதுர சிறிய வீடு, சுற்றிலும் மதில்சுவர் சூழ்ந்திருக்க, அந்த மனைக்கட்டின் ஓர் ஓரத்தில் ஒதுங்கியிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே குமாரகுருவிற்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், பிடிப்பதில்லை.
‘அது ஒரு மாயவலை’ என்று தன் மனதிற்கு ஓர் இரும்புப் பூட்டைப் போட்டு பூட்டி அதனை இறுக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
இந்த வாடகை வீட்டிற்கு வந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன. வந்தபோது வெறும் பூண்டும் புதருமாக இருந்த அங்கே, மூன்று மாதங்களில் மண்ணின் மீதான அவனது நேசத்தால் வீட்டின் ஒருபுறம் மரக் கன்றுகளும், இடைவெளியில் பல வகையான காய்கறி, கீரைகளையும் வளர்த்து, அப்பகுதியை அமைதியான சோலையாக மாற்றி இருந்தான்.
அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு நேர் எதிரே “இனிய இல்லம்” எனும் பெயரைத்தாங்கிய, ஒரு வசதியான குடும்பத்தின் வீடு இருந்தது. எனினும், அந்த வீட்டைப் பற்றிய வேறு எந்த தகவலும் குமாரகுருவுக்குத் தெரியாது.
காரணம், அந்த . வீட்டில் உள்ளவர்கள் வெளியே நடமாடுவதே இல்லை. ஆனாலும், வீட்டின் உள்ளே சிலர் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் மட்டும், அடிக்கடி குமாரகுருவின் காதுகளை எட்டும்.
அந்த வீட்டில் தலைவன், தலைவி, இரண்டு பெண்கள், ஒரு பையன் என ஐந்து பேர் இருப்பதாக, அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவனால் எதையும் உறுதியாகத் தீர்மானிக்க முடியவில்லை.
குமாரகுரு குடிவந்த மூன்று மாதங்களில், அந்த வீட்டின் உள்ளே இருந்து ஒரு நாயின் வினோதமான சத்தம் பகல் நேரங்களில் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தக் கூக்குரல் குமாரகுருவின் நிசப்தத்தைக் கலைத்து, எரிச்சலின் உச்சத்திற்கு அவனை இழுத்துச் சென்றது. நாய் தந்த எரிச்சல், இந்த வீட்டில் குடியிருப்போரைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை முற்றிலும் அறுத்து விட்டிருந்தது.
குமாரகுரு பெரும்பாலும் பகல் பொழுதில் அந்த வீட்டில் இருப்பதில்லை. ஆனால் கடந்த ஒரு வார காலமாக
பகல் பொழுதில், அவன் அந்த வீட்டில் இருக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது. அப்போது அந்த வீட்டின் உள்ளே இருந்து வந்த ஓர் இனிய குரல் அவனை உள்ளுக்குள் மெல்ல மெல்ல ஈர்த்துக்கொண்டிருந்தது.
ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஓர் இனிய வாசகனைப் போல, பல நாட்களாக வீட்டின் உள்ளிருந்து கேட்கும் உரையாடல்களில் தனித்துவமாய் தெரிந்த, இனிமையான அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு, மேல் எழுந்த வாரியாக .அவன் மனதில் மிதந்து கொண்டிருந்தது.
மறுநாள் அவன் தோட்டத்தில், பத்து நாட்களுக்கு முன்பு நடப்பட்டிருந்த நான்கு வாழைக் கன்றுகளின் வளர்ச்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர் வீட்டு மாடியில் நின்றபடி, ஓர் அழகான இளம்பெண் அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணை அவன் இப்போதுதான் முதன் முதலில் பார்க்கின்றான். அவள் பார்க்க அழகாகத்தான் இருக்கின்றாள். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் பல நாட்களாகக் கேட்ட அந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரி அவள்தான் என்று அவன் யூகித்தான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் உள்ளே ஓடி மறைந்து விட்டாள். அந்தப் பெண் நிச்சயமாக அந்த வீட்டுக்காரரின் மகளாக இருக்கும் என்ற எண்ணம் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
இரண்டு வாரங்கள் அந்த இளம் பெண்ணை அவனால் பார்க்க முடியவில்லை. ஆனால் பகல் பொழுதில் வீட்டிற்குள்ளே அவள் சிலருடன் சிரித்துப் பேசுகின்ற உரையாடல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. அவள் யார்? அவள் என்ன செய்கிறாள்? அவள் படிக்கின்றாளா? அல்லது வேலைக்குச் செல்கின்றாளா? வீட்டிற்குள்ளே இருந்து சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருப்பவள் ஏன் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறாள்?” இப்படி பலப்பலக் கேள்விகள் அவனுக்குள் பதுங்கிக் கிடந்தன.
பதினைந்து நாட்களுக்குப் பிறகு, ஒரு காலைப்பொழுதில் அவன் அவளை எதிர்வீட்டின் முன்பு பார்த்தான். கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அந்தப் பெண் அருகில் சென்றான். அந்தப் பெண் இவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல், அவனை, “வாங்க உள்ளே வாங்க!” என்று சொல்லி வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கே கூடத்தில் இருந்த நாற்காலியில் அவனை அமரச் செய்தாள். அவளின் குரலை நன்கு கவனித்த குமாரகுருவிற்கு கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. அவன் பகல்பொழுதுகளில் கேட்கும் அந்த இனிய குரல் நிச்சயமாக இந்தப் பெண்ணின் குரல் அல்ல என்பதை உணர்ந்தான். அவனது குழப்பம் மேலும் அதிகரித்தது. சிறிது நேரம் யோசித்த பின், அவன் அவளிடம் சில கேள்விகளை முன் வைத்தான்.
“நீங்க இந்த வீட்டுக்காரரோட மகளா? உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க, இல்லன்னா பரவாயில்ல!”
“நான் இந்த வீட்டுக்காரரோட தங்கச்சிப் பொண்ணு. என் பேரு தாமரைச் செல்வி.”
“அப்படியா! அப்ப நீங்க எங்க இருக்கீங்க?”
“எனக்குச் சொந்த ஊரு, மன்னார்குடி. இது எங்க மாமா வீடு. சரி உங்க பேரு ”
“என் பேரு குமாரகுரு. இப்போதைக்கு நான் விவசாயம் பார்த்துகிட்டு இருக்கேன்”
“அதனால் என்ன? நல்லது தானே! எனக்கு விவசாயம் பார்க்கிறவங்களை ரொம்பப் பிடிக்கும்!”
“சரி பகல்ல இந்த வீட்ல யார் யார் இருக்காங்க?”
“இந்த வீட்ல இருக்கிற மாமா, அத்தை, மாமாப் பையன் மூணு பேருமே அரசு வேலைல இருக்கிறாங்க. அவங்க மூணு பேரும் பகலில் வேலைக்கு வெளியூர் போய்டுவாங்க. விடுமுறை நாட்களில் கூட அவங்க சொந்த பந்தங்களைப்
பாக்குறதுக்கு வெளியூர் போயிருவாங்க. அதனால வீட்டில பகலில் யாருமே இருக்க மாட்டாங்க”
“சரி பகல்ல வீட்ல ஆள் இல்லைன்னு சொல்றீங்க. ஆனா நான் பகல்ல நிறைய நாள் ஓர் இளம் பொண்ணு யரோடயோ சிரிச்சு பேசிகிட்டு இருக்கிறத பல தடவை கேட்டு இருக்கேன். அது எப்படி?” அவனுக்குள் சந்தேகம் வலுத்தது. இந்த வீட்டில் ஏதோ ரகசியமான வேலைகள் நடக்கின்றது. அதனை இந்தப் பெண் மறைக்கப் பார்க்கிறாள் என்று அவன் நினைத்தான்.
“ஒரு நிமிஷம் இருங்க. இதோ வரேன். அப்புறம் எல்லாத்தையும் நான் பொறுமையா சொல்றேன். கொஞ்சம் இருங்க. இதோ வந்துடறேன்.”
இப்படிச்சொல்லிவிட்டு அந்தப் பெண் வீட்டுக்குள்ளே சென்றாள்.
ஆளில்லாத வீட்டில் இளம் பெண்ணின் குரல் எப்படி கேட்கிறது? அடிக்கடி வினோதமாகக் கத்திக் கொண்டிருக்கக் கூடிய அந்த நாய் எங்கே போனது? ஒருவேளை பேய் பிசாசுகளின் நடமாட்டமாக இருக்குமோ? அல்லது தனது மனப்பிரம்மையாக இருக்குமோ? ஒருவேளை பலான வேலைகள் நடக்கும் இடமாக இருக்குமோ? என்றும் அவன் குழம்பிப் போனான். அவனது குழப்பம் எப்போது எப்படி தீர்வை காணப் போகிறது என்று அவனது உள் மனம் அவனை உறுத்திக்கொண்டிருந்தது.
வீட்டிற்கு உள்ளே சென்ற தாமரைச்செல்வி, சிறிது நேரத்தில், தேன் கலந்த எலுமிச்சை சாறு நிரம்பிய இரு குவளைகளை எடுத்து வந்தாள். ஒன்றை அவனிடம் நீட்டினாள். மற்றொன்றை தனக்கு வைத்துக் கொண்டாள். அதனை வாங்கிக் கொண்ட குமாரகுரு, அவளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, எலுமிச்சை சாற்றினை பருகாமல், தோட்டத்தின் பக்கம் நோட்டம் விட்டபடியே அமர்ந்திருந்தான். அவளிடம் கேட்பதற்கு அவன் உள்ளே நிறைய கேள்விகள் உறங்கிக் கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றையும் மெல்ல அவள்முன் வெளிப்படுத்தினான்.
“இங்க ஒரு நாய் வித்தியாசமா சத்தம் போட்டுக்கிட்டே இருக்குமே அதையும் காணோம்?”
“ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்த வீட்ல ஒரு நாய் இருந்துச்சு. ஆனால் அது இப்ப இல்ல. அது செத்துப் போச்சு.” அவள் பதிலளித்தாள்.
“சரி இந்த வீடு உங்கள் வீடு இல்லை. பிறகு நீங்கள் இந்த வீட்டிற்கு ஏன் அடிக்கடி வருகிறீர்கள்? இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? நான் அதைத் தெரிந்து கொள்ளலாமா?” அவன் கேள்வியை அவள் முன் வைத்தான்.
“நான் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இங்கே வருவதற்குக் காரணம்; இது மாமாவின் ஓர் அன்பான வேண்டுகோள். வீட்டில் திருட்டுப்புரட்டு எதுவும் நடக்காமல் இருப்பதற்கு, அவ்வப்போது வந்து பார்க்கும் ஒரு கண்காணிப்பாளராக நான். இங்கு வந்து போகிறேன் அவ்வளவுதான்”
“சரி நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்? நான் தெரிந்து கொள்ளலாமா?” அவன் கேட்டான்.
“நான் தையல் கலையில் பட்டப்படிப்பு படித்துள்ளேன். இப்போது ஒரு பதினைந்து பெண்களை வைத்து ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். விரைவில் வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யும் எண்ணமும் எனக்குள் இருக்கிறது”
“அப்படியா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”
“மிக்க நன்றி. மகிழ்ச்சி”
“சரி எனக்கு இன்னும் குழப்பம் தீரவில்லை. இந்த வீட்டைப் பற்றிய முழு விவரங்களையும் நீங்கள் சீக்கிரம் சொன்னால் நன்றாக இருக்கும்”
“நான் இப்பச் சொல்லப் போற விஷயத்தை நீங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்பித்தான் உங்ககிட்ட சொல்லப் போறேன்.”
இப்படி அவள் சொல்லவும், அவனுக்குள் அந்த வீட்டில் பலான வேலைகள் நடக்கின்றதோ என்ற ஐயம் அதிகரித்தது. அந்தப் பெண் குமாரகுருவைப் பார்த்தாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலும் திகைப்பும் கலந்தபடி அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் திடீரென்று எழுந்தாள்.
“கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள். இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவள் மீண்டும் வீட்டிற்குள்ளே சென்றாள். திரும்பி வரும்போது அவள் ஒரு சிறிய ஒலிப்பெட்டியோடு வந்தாள். அந்தப் பெண், அந்த இசைப் பெட்டியை ஓட விட்டாள். அதில் அந்த இளம் பெண் சிலரோடு சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டிருக்கும் உரையாடலும், ஒரு நாயின் வினோதமான குறைக்கும் சத்தமும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது.
அந்தப் பெண் தொடர்ந்து விவரிக்க ஆரம்பித்தாள்.
“இது சூரிய மின்கலத்தால் இயங்கக்கூடிய ஒரு இசைப்பெட்டி. இதில் காலை பத்து மணி முதல் மாலை 4 மணி வரை பதிவு செய்யப்பட்ட, ஒரு இளம் பெண்ணின் பலதரப்பட்ட இனிய உரையாடலும், ஒரு நாயின் வினோத சத்தமும் மாறி மாறி அரை மணி நேர இடைவெளியில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆள் இல்லாத வீட்டில் பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாட்டை மாமா செய்திருக்கின்றார். தயவு செய்து இதை நீங்கள் யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம்.”
“கண்டிப்பாக நான் வெளிப்படுத்த மாட்டேன். இன்னும் ஒரே ஒரு சந்தேகம். அந்த ஒலிப்பெட்டியில் அடிக்கடி வெளிப்படும் அந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரப் பெண் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”
“அது எனது மாமா மகளின் குரல். அவளுக்குத் திருமணம் ஆகி அவள் இப்பொழுது மதுரையில் இருக்கின்றாள்.”
வீட்டிற்கு இப்படி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பது கண்டு, குமாரகுரு சிறிது நேரம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் எலுமிச்சை சாற்றை துளித்துளியாய் ருசித்தபடி அமர்ந்திருந்தான்.
தாமரைச்செல்வி அவனையே சிறிது நேரம் ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
