ஊர்ச்சோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 405 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“யம்மோ…வ், சோ…று போடுங்கம்மா… ஆ…வுடைச்சி வந்திருக்கேன்…”

வாசல்படிக்குக் கீழே ஓரமாக நின்னு ராகம் போட்டுச் சத்தம் கொடுத்தாள். இடுப்பில் எவர் சில்வர் குத்துச் சட்டி அதில் கலர் கலராய் சோறு. பழுப்பும், மஞ்சளும், வெள்ளையுமாய் பல வீட்டுச் சோறு.

“என்ன… ஆவடைச்சி, இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டே போலிருக்கே.”

உள்ளிருந்து வந்த குரலைத் தொடர்ந்து வலது கை நிறைய சோற்றுடன் வீட்டுக்காரி.

“ஆமம்மா… மூத்தபய சாப்டுட்டு காட்டு வேலைக்குப் போகணும்னு பறக்கான்லே? கால்லே கொதி வெந்நியை ஊத்திக்கிட்டு நிப்பான்.”

“காட்டு வேலைக்குத்தான் போறானா?’

“ஆமம்மா…”

“ராக்கப்பன் வேலையை கத்துக்கிடலியா? அவனுக்கும் வயசாகுதுலே? அவனுக்குப் பின்னாலே ஒம்மவந்தானே குடிவேலை செய்யணும்?”

“நானும் அந்த மனுசனும் படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டோம்மா. கேக்குற வழியில்லே. மாட்டேன்னு பிடிசாதனையா நிக்கான்.”

“ஏனாம்?”

“இது… ஊருக்கு அடிமைப்பட்ட வேலையாம். வீடு வீடா பிச்சைச் சோறு எடுத்துப் பொழைக்கிற பொழைப்பு அவனுக்குப் பிடிக்கலையாம்.”

“ஊர்ச்சோறு அவனுக்குப் பிச்சைச் சோறா?”

“அப்படித்தான் சொல்லுதாம்மா… விலாவுலே வெடிச்ச பய. தாய் தகப்பன்மார்க. நீங்க, உங்க சோத்தை பிச்சைச் சோறுன்னு சொன்னா… அவன் உருப்படுவானாம்மா? ஊரை மதிக்காத அம்பட்டையன், சீப்புக்குப் படியாத ரோமந்தானம்மா? சிலுப்பிக்கிட்டிருக்கிற ரோமம் கத்தரிப்பான் வாய்லே கடிபடத்தானே செய்யும்?”

“கூரை நிழல்லே உக்காந்து ஊருக்கு முடி வெட்டுறதை விட, வாட்டியெடுக்கிற காட்டு வெயில்லே கெடந்து சீரழியுறது… உசத்தியாக்கும்? என்னமோ… அந்தச் சாமிதா ஓம் மவனுக்கு நல்ல புத்தியை குடுக்கணும்…”

“என்னத்தை நல்ல புத்தி வரப்போகுது…! நா வாரேம்மா… இன்னும் பத்துவீடுக கெடக்கு. சோறு எடுக்கணும்.”

பெருமூச்சோடு நகர்கிற ஆவுடைச்சியை அனுதாபத் தோடு பார்க்கிறாள் வீட்டுக்காரி.

ஆலமரத்தடியில் முடிவெட்டிக் கொண்டிருந்தான், ராக்கப்பன். குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிற அவன் கையில் கத்தரிக்கோல் ஒரு பரபரப்போடு இயங்கியது. பசியெடுத்த மைனாவைப்போல ‘கர்ரீச்… கர்ரீச்… கர்ரீச்’சென்று பதற்றமாகக் கூவியது.

அவன் நிழலில் ஒரு சிறுவன், கழுத்தும் தலையும் சாய்ந்து கொண்டே போயிற்று. அழுது சிணுங்கி அடங்கிய விம்மல். “நேர… இரும்மையா” என்று எரிச்சலோடு நிமிர்த்து வைத்தான். இடது கையில் இரும்புச் சீப்பு, ‘வருட், வருட்’டென்று இழுத்தான். சீப்புக்குள் படியாமல் சிலுப்புகிற ரோமத்தை யெல்லாம் ‘கர்ரீச், கர்ரீச்’ சாக்கினான். சீப்பும் கத்தரியும் அவன் கைகளில் முளைத்த விரல்களைப் போல ஒன்றிப் போயிருந்தன.

ராக்கப்பனுக்கு இந்த நாலைந்து நாளாய் ஓர் ஆசை. சிறுபிள்ளைத்தனமான சபலம். ஒரே மாதிரியான கஞ்சியை குடித்துக் குடித்துச் சளைத்துப்போன ஏழ்மையின் நோய், இன்றைக்கு இந்த ஆசை உச்சத்தில் போய் ஏறிக் கொண்டது.

இட்லிக்கடையில் சட்னியும் சாம்பாருமாய் சுடச்சுட நாலு இட்லியாச்சும் திங்கணும் என்று நாக்கு அலைபாய்ந்து வந்தது. முறுகலாய் தாளித்த சட்னியில் கிடக்கும் கடுகு வாசனை, அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

எட்டு மணிக்கு மேலாகி விட்டால் இட்லி விற்றுத் தீர்ந்து போகுமே என்கிற ஏக்கம். அவனுக்கு அந்தப் பரபரப்பு. சட்னியின் தாளித்த வாசம் மனசைச் சுண்டியிழுக்கிறது. அடிமனசின் நரம்புகளெல்லாம் அதிர்கிறது. இட்லியின் மிருதுச் சூட்டை நுனிவிரல் உணர்கிற பிரமை.

இறக்கை கட்டிப் பறக்கிற மனசு. மனசுக்கு முந்திக் கொண்டு ‘கீச், கீச்’ சென்று பறக்கிற கத்தரி.

தக்கென்று வந்து நிற்கிற ஒரு நிழல். ராக்கப்பன் கழுத்தைத் திருப்பி நிமிர்ந்தான். அவனுக்குள் பரவுகிற வெக்கை. பற்றிக்கொண்டு வருகிற எரிச்சல்.

முனியசாமிதான் வந்து நிற்கிறான். மூத்தபயல். கைலியை மடித்துக் கட்டியிருந்தான். கையில் சோற்றுத் தூக்குச் சட்டி. தலையில் வட்டக்கட்டாகத் துண்டு. தோளுக்கு மேல் வளர்ந்த பயல். கை மீறிப் போனவன். தனது நிழலாக இருக்க மறுக்கிறவன். ரத்த நிழல்தான். புத்தி நிழலில்லை.

மனசின் வேக்காடு வார்த்தையின் கடுப்பில்.

“என்னலே? எங்கே கெளம்பிட்டே?”

“விறகு வெட்டப்போறேன்.”

“முடி வெட்டுறது ஒனக்குக் கேவலமாப் போச்சோ? வெறகு வெட்டுறது பெருமையோ? கிரீடமா வைச்சு விடுவாக?”

பயத்தின் மவுனத்தில் முனியசாமி, தரையைப் பார்க்கிறான்.எங்கோ பார்க்கிறான். அப்பனின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் அலை பாய்கிற பார்வை.

“எனக்குப் பிடிக்கலே.” முணுமுணுப்பாக மகன்.

“ஏம்லே?”

“உங்க காலம் வேற. இப்பக் காலம் வேற.”

“காலம் என்னடா… காலம்? அடைஞ்ச பொழுது விடியுது, நாளும் பொழுதும் நகருது. இதுலே எதுடா மாறிருச்சு? அப்பன் மாமனாயிருவானா? ஆத்தா அத்தையாயிருவாளா? இல்லே… நீங்கதான் தலையை தரையிலே ஊனி நடந்துருவீகளா?”

கனன்று சீறுகிற ராக்கப்பனின் கண்களை மோதுகிற அந்த இளவட்டப் பார்வை. அந்த இளங்கண்களின் ஒளித்தெறிப்பு. அதில் விம்மி விடைத்து ஒளிர்கிற மறுப்புகள். சத்தமாகிவிடாத மறுப்புகள். மவுனக் கவசத்துக்குள் மறைந்து நிற்கிற மறுப்புகள்.

“இங்கே எதுக்குலே இப்ப வந்தே?”

“நாகர்கோவிலுக்குப் பக்கத்துலே ஆரல்வாய் மொழி யிலே அணைக்கட்டு வேலை நடக்கு. நம்மூர்லேயிருந்து

நெறைய பேரு வேலைக்குப் போறாக. என்னையும் கூப்புடுதாங்க. நாப்பது ரூவா சம்பளமாம்.”

“அதெல்லாம்… வேண்டாம். எங்கேயும் போய்ச் சீரழிய வேண்டாம். இங்கேயிருந்து எந்தொழிலைக் கத்துக்க. ஊருக்குப் புள்ளையாயிருந்தீன்னா… ஒரு கொறையுமில் லாமப் பாத்துக்குவாக.”

“இந்தத் தொழிலையா…? இந்த ஊர்லேயா?”

“ஆமா… இந்தக் ‘குடிவேலை’ யிலேதா உங்கப்பன் காலம் போயிருக்கு, உங்க தாத்தன் காலம் போயிருக்கு. தாத்தனுக்குத் தாத்தனெல்லாம் இந்த ஊர்லேதான் இருந்துருக்காக? என்ன கொறைச்சல்? வீடு குடுத்துருக்காக. கல்யாணம் காட்சியை பாத்துக்கிடுவாக. நல்லது பொல்லதுன்னாலும் கவனிச்சுக்கிடுவாக. அவுக வீட்டுப் புள்ளையா நம்மளை மதிப்பாக. அவுக சாப்புடுறதை நமக்குப் போடுவாக.”

“அந்தக் காலமெல்லாம்… போயிருச்சு.”

“என்னடா சொல்லுதே?”

“இப்ப இருக்கற ஊரு… பழைய ஊருல்லே.”

மறுத்து மறுத்து எதிர்வாதம் செய்கிற சின்னப் பயல், நேற்று முளைத்த சிறுகீரை. எல்லாக் காலத்தையும் அளந்து முடிச்சிட்ட அறிவாளி மாதிரி…

ராக்கப்பனுக்குள் சண்டாளமாய் வந்தது.

“பூராவும் தெரிஞ்சிட்டீயோ… தேவடியா மவனே? மப்பேறிப் போன ராஸ்கல், போடா…அங்குட்டு. மூஞ்சியிலே முழிக்காதே… போடா… நாயி.”

ராக்கப்பனின் ரத்தச்சூடும் சத்தமும் சட்டென்று அதிகரிக்க… கண்களில் கனல். கோபத்தின் அழுத்தத்தில் மட்டியை கடித்தான். நாசித்துளை விடைத்தது.

தழைந்து தழைந்து நிமிர்கிற மகனின் பார்வை. கண்ணீர் மல்குகிற பார்வையில் மறுப்புச் சத்தங்கள். எது எதுவோ சொல்ல வேட்கைப்படுகிற உதடுகள். வெறுமனே முணுமுணுப்பில் நகர்ந்து விட்டான்.

அடங்க மறுத்துப் பீறிடுகிற ஆத்திரம் ராக்கப்பனுக்குள்.

“வந்து பொறந்துருக்கான் பாரு… வவுத்துலே மூத்த பிள்ளையா, மயிர்கணக்கா, அப்பன் காலடி வாழையா அனுசரிச்சு வளருவான்னு ஆசைப்பட்டா… இவன் என்னடான்னா… தலைமுறை தத்துவமாயிருந்து வர்ற வழமுறையை அறுக்குற பயலா வந்து வாய்ச்சிருக்கான். எடுபட்ட பய. தலைக் கொழுப்பு ஏறித் திரியுதான்…”

இன்னும் நீளம் நீளமாகத் தெறிக்கிற மனப் பொறிகள். உள் கொதிப்பை உளறிக் கழித்தான். வேலை வேலையாகவுமிருந்தது.

சிறுவனுக்கு முடிவெட்டி முடித்தான். கத்தியை எடுத்து நிமிர்த்தி சுற்று வழிப்பும் முடித்து, முதுகில் ஒட்டியிருந்த ரோமக் கற்றைகளை தட்டி உதறினான்.

வேலை முடிந்த நிறைவில்… மனசுக்குள் பழைய இழை. இட்லி சாப்பிடப் போகிற ஆசை. தாளித்ததில் பொறிந்த கடுகுவாசம். கருகிச் சுருண்ட கருவேப்பிலை மணம்.

வேட்டியிலும் பனியனிலும் ஒட்டியிருந்த ரோமத்துகள் களை அடித்து உதறிக் கொண்டு எழுந்தான். முழங்கால் மூட்டுக்களின் நெறுநெறுப்பு, பொழுதுக் காலை பார்த் தான். மணி எட்டை நெருங்கும்.

இட்லிக் கடையில் இலை போட்டுச் சாப்பிடுகிற சுகம். இட்லியைப் பிய்த்துப் பிய்த்து சட்னியில் குழைத்து…அட்டா!

அந்நேரம் பார்த்தா… நாட்டாண்மை வந்து மறிக்க வேண்டும்? இட்லி சாப்பிடணும் என்று அவரிடம் போய்ச் சொல்லவா முடியும்? “ஏண்டா, அம்பட்டைப் பயலுக்கு இந்நேரம் இட்லி கேக்குதோ?” என்று நாலு வசவு நாறவசவாக வைய்யவா?

“என்ன மோலாளி…”

“முடிவெட்டணும்பா.”

இவனுக்குள் பூரான் ஊர்கிற உணர்வு. ஈர்க்கிற இட்லிச் சபலம். வழி தேடித் தவிக்கிற கூண்டெலியின் யத்தனிப்பு. “வீட்லே ஒரு சின்ன வேலை. போனதும் வந்துருதேனே மோலாளி.

“நா ஒம்பது மணிப் பஸ்ஸுக்கு குளிச்சிட்டு, சாப்ட்டுட்டுப் போகணும்பா. இப்பவே லேட்டா யிடுச்சு.”

“அப்படியா மோலாளி…”

“ஆமப்பா… போய்ட்டு சாயங்காலம் வண்டிக்கு வந்தாகணும்லே? இன்னிக்குப் பவுர்ணமியில்லே? ஊர்க்கூட்டம் இருக்குல்லே?”

“ஆமா… நெசந்தா.”

“நீயும் சாயங்காலம் வீடு வீடாப் போய் ஊர்க் கூட்டம்னு சொல்லிரு.”

“ஆட்டும் மோலாளி.”

நாட்டாண்மையின் சொற்கள் எதுவும் மனசில் ஒட்டவேயில்லை, அவர்மீது இவனுக்குள் எரிச்சல் எரிச்சலாக வந்தது. இப்படிக் காலடிச் செருப்பாகக் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டியிருக்கிறதே என்று கசந்து வந்தது. நேரங்கெட்ட நேரத்தில் வந்து கழுத்தறுக்கிறாரே என்கிற கடுப்பு.

எட்டு மணியாகி விட்டால்… இட்லி காலியாகிப் போகும். இட்லியின் மிருதுச்சூடு மனசுக்குள் சோகமாக ஆவி பிரிந்தது. உள் ஒடுங்கிய உணர்வலைகளுடன் சுருட்டி யிருந்த கத்திப்பையை மீண்டும் விரித்து உட்கார்ந்தான்.

அவர் சம்மணம் போட்டு உட்கார, இவன் குத்துக்கால் வைத்து உட்கார்ந்தான். கிண்ணியிலிருந்து தண்ணீரையள்ளி அவரது பிடறிப் பக்கம் தெளித்துத் தேய்த்தான்.

“என்ன ராக்கப்பா… மூத்த பய கையிலே கத்தரியைத் தரக்கூடாது? ஒனக்கும் வயசாகுது. அவனையும் வசக்கணும்லே?”

“எனக்கும் நெனைப்புத்தான். அவந்தா வசங்கி வரமாட்டேங்கான்.”

“ஏனாம்?”

“அவுக முகரைக்கு இந்தத் தொழிலு பிடிக்கலையாம்.” “வரட்டும். பயலை நா சத்தம் போட்டு அரட்டிவிடு தேன். சின்ன நாய், நம்மளை மிஞ்சியா போயிரும்?”

மறந்து போயிருந்த மனசில் மீண்டும் புண் வேதனை. முனியசாமி படிய மறுக்கிற அவனது அறியாமை. கட்டுப் பட்டு வாழ்கிற வாழ்வுக்குள் இருக்கிற சுகத்தையும் பாதுகாப்பையும் உணராமல்… புத்தி கெட்டுத் திரிகிற பொசை கெட்டபயல்.

ரண அதிர்வாய் நினைவலைகள்.

இரும்புச்சீப்பும், கத்தரியும் கற்றை கற்றையாக நரை முடியை வெட்டித் தள்ள… நாட்டாண்மையிடம் வாய் வாயாக இருக்க… மனசு மட்டும் எங்கோ எங்கோ…

ஆவுடைச்சியை கல்யாணம் ‘மூய்த்து’க் கொண்டு வந்த அன்றைக்கு அப்பன் முனியன்தான் சொன்னான்: “ஏலேய் ராக்கா, ஊர் மோலாளிமார்க கால்லே விழுந்து திருநூறு பூசச் சொல்லுடா.”

மாலையும் கழுத்துமாய் வீடு வீடாகப் போனான். ஆவுடைச்சியைக் கூட்டிக் கொண்டு காலில் விழுந்து எழுவார்கள். ஜோடியாக. திருநீறுத் தட்டை நீட்டுவார்கள். எடுத்து இருவர் நெற்றியிலும் பூசுவார்கள். கும்பிட்ட கைக்குள் ரெண்டோ ஐந்தோ ரூபாயை திணிப்பார்கள். வந்த வரவு ஜாஸ்தி.

கல்யாணச் செலவு முழுவதையும் சரிக்கட்டி, மிஞ்சி நின்ற பணத்தில் ஆவுடைச்சிக்கு ஒரு சேலையை எடுத்தான்…

…பங்குனிப் பொங்கல். ஊரெல்லாம் ஓலைக் கொழுக் கட்டை அவிப்பார்கள். பச்சரிசிமாவும், கருப்பட்டிப்பாலும் பிசைந்து, அறுபட்ட குருத்தோலைகளில் மாவை வைத்து வேக வைத்து எடுப்பார்கள். கத்தி போல இருக்கும். கடித்தால் தித்திப்பும் வாசமும் மனசைக் கிறங்கடிக்கும்.

அவித்த வீடுகளில் ரெண்டு நாளைக்கு இருந்தால்… அதிகம். எல்லா வீட்டார்களும் குடி மகன், ஏகாலிக்கும் கொழுக்கட்டை போடுவார்கள். பிள்ளைகளுக்குத் தருகிற பாங்கில்.

இவன் வீட்டில் வந்து நிறைந்து போகும். பத்து நாளைக்குப் பிறகும் மிஞ்சிக் கிடக்கும். காயக்காய ருசி. காய்ந்த கொழுக்கட்டையையும், தேங்காச் சில்லையும் கடித்துக் கடித்துத் தின்றால்…. அந்த ருசியே… தனீ.

…ஆடி தீபாவளி என்றால் ஊர்ப்பட்ட தோசை இட்லியெல்லாம் இவன் வீட்டில். கறிக்காசு வேறு தனியாகத் தந்துவிடுவார்கள்.

-ஊரில் எந்த வீட்டில் கல்யாணம், இழவு என்றால் இவன் காரியம் இல்லாமல் போகாது. இவனையும் வீட்டுப்பிள்ளையாகக் கருதி வேட்டித் துண்டு அரிசி பருப்பு காய்கறியெல்லாம் தந்து, மேற்கொண்டு ‘சுதந்திரப் பணமும்’ உண்டு.

நாவிதர் தானே என்று இளப்பமாக நினைத்து அடுத்த சாதிக்காரர்கள் யாரும் நாக்கில் பல் போட்டு ஒரு சொல் கூட பேசி விட முடியாது. தப்பித் தவறி யாராச்சும் பேசிவிட்டால்… அம்புட்டுத்தான். ஊரே கொதித்துவிடும்.

“எங்க சாதி நாவிதனை பேசுறதும், எங்க சாதியை வையுறதும் ஒண்ணுதான், பைசல் பண்ணாம விடமாட் டோம்”னு வரிந்து கட்டிக்கொண்டு ஒத்தைக்ககாலில் நிற்பார்கள்.

இம்புட்டுச் சௌகர்யம்… வாஞ்சை… பாதுகாப்பு… இத்தனையையும் அத்து விட்டுட்டுப் போகணும்னு மழைக்காட்டுத் தவளைக்கணக்கா கத்துதானே… இந்தத் தறுதலைப்பய… இதெல்லாம் இவனைப் பிடிச்ச ஏழரை நாட்டான்தானே? இவனைப் பிடிச்ச ஏழரை நாட்டான் இவனோட போகுமா? குடும்பத்தையும் பிடிச்சு ஆட்டத் தானே செய்யும்?…

ராக்கப்பனுக்குள் கவலைப் பின்னல்களாய் நினைவுச் சுழல்கள்.

நாட்டாண்மைக்கு முடிவெட்டி முடித்து, முகச் சவரம் செய்து, மீசையை சரிபண்ணி, நாசிரோமங்களைக் கத்தரித்து, கம்மங்கூடும் வழித்து முடித்த போது, முள் ளெடுக்கணும் என்று காலை ஏந்திக் கொண்டு ரெண்டு பேர்.

ஆக.. ‘அந்தா, இந்தா’ என்று நேரமாகி, எழுந்திருக்க மணி ஒன்பதரை. கடையில் இட்லி விற்றுத் தீர்ந்து போயிற்று.

ராக்கப்பன் மனசுக்குள் சப்பென்று அறைகிற ஏமாற்றம். முன்பே உணர்ந்ததுதான். எதிர் கொள்கிறபோது ஏற்படுகிற சலிப்பு, ஏக்கம், எரிச்சல். காய்ந்து கிடந்த இட்லித் தட்டுகளை ஏக்கமாய்ப் பார்த்தான்.

சாயங்காலம். பொழுதடைந்துவிட்டது. மேலடி வானத்துச் சாரல். மேகங்களில் மட்டும் சூர்யமிச்சம். கன்றிச் சிவந்த மேகத்து வெளிச்சம்.

ராக்கப்பன் வீடு வீடாகப் போய்ச் சொன்னான்.

“யம்மோ…வ்”

“என்ன ராக்கப்பா?”

“மோலாளி இருக்காகளா?”

“புஞ்சைக்குப் போயிருக்காக. இன்னும் வல்லே.”

“இன்னிக்கு மடத்துலே ஊர்க்கூட்டம். ராக்கப்பன் சொல்லிட்டுப் போறான்னு மோலாளி கிட்டே சொல்லிருங்கம்மா.”

நூற்றியெட்டு தலைக்கட்டு, அத்தனை வீடுகளுக்கும் நடையாய் நடந்து செத்தான். நாலைந்து வீடுகளின் முன்னால்…ஆட்டுரலில் உளுத்தம் மாவு போட்டு ஆட்டிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் ஊறி நனைந்த அரிசி. உரல் முழுக்க வெள்ளை வட்டமாய் குழையும் மாவு.

‘இப்ப என்ன?… பண்டிகை தீவாளின்னு ஒன்னு மில்லியே… இவுக வூடுகள்லே மட்டும் ‘ஆசை’க்கு போடுதாகளோ…’

ராக்கப்பன் மனசுக்குள் இட்லி தோசை சபலம், சவலைப் பிள்ளையாய் சிணுங்கியது.

விடிந்தது. ராக்கப்பனுக்கு ஆலமரத்துக்குப் போகவே மனசில்லை. போர்வையை இழுத்து மூடிப் படுத்துக் கொண்டான். முடி வெட்டணும், முகச்சவரம் பண்ணணும் என்று தேடி வந்த ரெண்டொருவரிடமும் “காய்ச்சல்” என்று பாவலா பண்ணிவிட்டான்.

ஆலமரத்தடிக்குப் போய் விட்டால்… வேலை நாறிப்போகும். சாப்பிட முடியாது. பத்து மணிக்குமேல் தான் சாப்பாட்டை நினைக்க முடியும்.

இன்றைக்கு அப்படி இருக்க முடியாது, ராக்கப்பனால். வறுத்த கறி இருக்கிற உரியைச் சுற்றிச் சுற்றி வருகிற பூனை மாதிரி… அவன் மனசு வாலாட்டிக் கொண்டே யிருந்தது.

முற்றம் தெளிக்க, வீடு பெருக்க என்று வழமையான வீட்டு வேலையாக இருந்த ஆவுடைச்சியை விடாமல் நச்சரித்தான். ‘சீக்கிரம் சோறு எடுக்கப் போ’ என்று.

ஆவுடைச்சிக்கு புருஷன் புதுசாகத் தெரிந்தான். புதிராகவும் தெரிந்தான், “என்ன மனுசா, இன்னைக்கு ஒனக்கு என்னாச்சு? என்னை இந்தப் பாடு படுத்துறே?”

சலிப்போடு எரிந்து விழுந்த பெஞ்சாதியிடம் “ஒன்னு மில்லை” என்று அப்பாவித்தனமாய் சொல்லி விட்டு, பூனையாகச் சுருண்டு முடங்கிக் கொண்டான்.

சோறெடுக்க தெருவுக்குப் போயிருந்த ஆவுடைச்சி வருவதற்குள், அடுப்புச் சாம்பலில் பல்தேய்த்துக் கொண்டான். போர்வையை இழுத்து மூடிக்கொண்டு கையில் கிளாஸுடன் இட்லிக் கடைக்கு ஓடினான். ‘குற ஜாலம்’ போட்டு ஓசிச் சட்னி வாங்கிக் கொண்டு வந்தான்.

பாலுக்குத் தாயை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கிற சோனிப் பிள்ளையாய்… மனசு.

ஆவுடைச்சி வீடு நுழையவும், ராக்கப்பன் ‘தடபுடா வென்று எழுந்தான். பரபரத்தான்.

“சரி… எடுத்துவை.”

“என்ன?”

“சாப்புடணும்லே?”

“இந்நேரத்துலேயா?”

“சாப்புட்டுட்டுத்தான் ஆலமரம் போவணும்.”

“என்ன. ன்னைக்கு எல்லாமே புது வழமை யாயிருக்கு.”

இடுப்பிலிருந்த குத்துச்சட்டியை இறக்கிவைத்தாள். சின்னப்பிள்ளை மாதிரி ஆவல் பறப்போடு சட்டியை எட்டிப் பார்த்தான், ராக்கப்பன். கலர் கலராய்ச். சோறு. சோறுகள்.

விருட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோப வெக்கை. சீறிவிடைக்கிற நாசி. முகம் முழுக்க ஆத்திர விறைப்பு.

“எல்லா வீடுகள்லேயும் சோறு எடுத்தீயா?”

“ஆமா?”

தெற்குத்தெருவில் மாவாட்டிக் கொண்டிருந்த அந்த நாலைந்து வீட்டுக்காரர்களின் பெயர்களைச் சொன்னான், படபடவென்று.

“அங்கெல்லாம் போனீயா?”

” ஆமா?”

“என்ன போட்டாக?”

“பழைய சோறுதான்.”

“எல்லாமே சோறுதானா?’

“ம்.”

“வெறொன்னுமில்லே…?”

“இல்லே. என்ன இப்படி கேக்கே சோறு போடாம், தங்கக் கட்டியா தூக்கிப் போடுவாக?”

கோப விறைப்பில் விம்மிக் கிடந்த அவன் முகத்தில் சட்டென்று ஒரு தளர்வு. சுருங்கி இடுங்கிய கண்கள். முகத்தில் துல்லியமாய் துடித்து நின்ற ஏமாற்றம். நம்பிக்கையின் ஆணிவேரையே சுட்டுக் கருக்கி விட்ட கொடிய ஏமாற்றம். கோபமும், வாட்டமுமாய் குலைந்து கிடக்கும் புருஷனின் மனநிலை புரியாமல், அவனையே ஓர் அதிர்வோடும் பரிவோடும் பார்த்தாள்.

அவனது கண்ணிலிருந்த கற்றைச் சோகம், அவளுள் திணறடித்தது. மனப்பிசைவோடு கேட்டாள்:

“ஏன்யா… என்னாச்சு ஒனக்கு?”

உடைந்த குரலில் கரகரத்த அவளை நிமிர்ந்து பார்த்தான். ‘அவன் முகத்தில், அடிபட்ட பறவையின் வலி.

“தாய் தகப்பன்மார்க தோசை இட்லியை தின்னுட்டு, புள்ளைகளுக்கு பழைய சோறு போடுவாகளா?”

“எதுக்கு இப்படிக் கேக்கே?”

“இல்லே ஆவுடை, நம்ம ஊரு முந்தி மாதிரியில்லே. தலைகீழாப் போயிருச்சு.”

அவன் குரலில் எல்லையற்ற கனத்த சோகம். தன்னையே இழந்து விட்ட மாதிரி- தானே இழிவு படுத்தப்பட்ட மாதிரி அவன் முகத்தில் அப்படியோர் அவமான அவஸ்தை.

“என்னய்யா… சாப்புடலியா?’

“இல்லே…”

“எங்க கெளம்பிட்டே?”

“வாயெல்லாம் கசந்து கெடக்கு. கடையிலே போய் காசக்குடுத்து நாலு இட்லி சாப்புடணும்.”

“ஏன்… நெசமாவே காய்ச்சலா?”

“ம்.”

வாசலுக்குப் போய் திரும்பிப் பார்த்தான்.

“மூத்தபய முனியசாமி அணைக்கட்டு வேலைக்குப் போவணும்னு சொன்னான்லே?”

“ஆமா!”

“போவச் சொல்லு. போவட்டும்” என்றான்.

– புதியபார்வை.

– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *