உருவக்கேலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 124 
 
 
‘இவேன் ஏன் இப்படி இருக்கான் சித்தப்பு?’- என்று தண்டபாணி சொல்லும் போதெல்லாம் அருகில் இருப்பவர்கள் ‘கொல்’, என சிரிப்பார்கள். தன் மகன் முத்துமாலையை இப்படி பகடி செய்யும் போது அவர் மனம் சொல்லொண்ணா துயருரும். பிறப்பிலேயே சிறிது மனம் கோணி பிறந்தவன் முத்துமாலை. முத்துமாலையின் அப்பா சிங்காரம் தேனி பஜாரில் பழ வியாபாரம் செய்கிறார். முத்துமாலையை பட்டயப் படிப்பு வரை படிக்க வைத்துவிட்டார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தும் அதில் அவனால் நிலைக்க முடியவில்லை. சில வேலைகளின் நேர்காணலிலே தேர்வாகாமலும் போயிருந்தான். பாடசாலையில் நல்ல மதிப்பெண்னில் தேர்வாகியிருந்தும் வேலை அமையாததால் அப்பாவின் பழக்கடையில் வியாபாரத்தில் இருந்தான் முத்துமாலை.
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள். என்னதான் ஒப்பனை செய்து கொண்டாலும் ஒருவருக்கு அழகு என்பது அவர் கற்ற கல்வியே தரும். பணமும்-பதவிசான குணமும் தேடிவரும்.
முத்துமாலைக்கு மெலிந்த தேகம். நீண்ட கைகளிலும், நீண்ட கால்களிலும் சதைப் பிடிப்பு இல்லை. அவன் காதுகள் யானையின் காதுகளைப் போல் அகலமாகவும், முயல்களின் காதுகளைப் போல் நீண்டும் இருந்தது. அவனை பார்க்கும் யாவரும் உருவக்கேலி செய்யும்படி இருந்தது அவன் தோற்றம். வாடிக்கையாளர்களிடம் பேசும் போது முகம் பார்த்து பதிலுரைக்க மாட்டான். கண்கள் நேருக்கு நேர் சந்திக்காமலே சம்பாஷிப்பது என்பது வியாபாரத்திற்கு இடரலாகவே இருந்தது அதனாலேயே அவன் தந்தை ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்திவிட முயற்ச்சி செய்தார். அவனைவிட மூன்று வயது மூப்புதான் அவர் அண்ணன் மகன் தண்டபாணி. அவன் உணவு மற்றும் விடுதி மேலாண்மையில் பட்டயப் படிப்பு படித்து விட்டு வெளி நாட்டில் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் பணியாற்றுகிறான். அவன் ஊருக்கு வரும் போதெல்லாம் முத்துமாலையை சந்தித்துவிட்டுத்தான் செல்வான். ஒவ்வொரு முறையும் அவனை கிண்டல் செய்வதே அவனது வாடிக்கையாக இருந்தது. அவனை நேருக்கு நேர் பார்த்து பேசும் படி கட்டாயப்படுத்தும் போது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு சிரிப்பான் முத்துமாலை. ஆனால், ஒரு போதும் கோபம் கொண்டதே இல்லை. பிறவி சாதுவாக இருந்தான்.
பழக்கடை பக்கம் தண்டபாணி வரும் போதெல்லாம் வாயில் வாசனை பாக்கு மணக்கும். மிதமான போதையில் எப்போதும் இருப்பான். தன் சக உறவுக்காரர்களிடம் வெளிநாட்டு சரக்கு என்று பெருமையாக சொல்வான். அவன் பணியே, பணக்கார விருந்தினர்களுக்கு மது கலந்து தரும் ‘பார்’ எனும் இடத்தில்தான். வித விதமான வெளி நாட்டு மதுவகைகள் அங்கு இருக்கும். அந்த பகுதியின் பொறுப்பாளராக இருந்தான். நல்ல சம்பளம். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்தால் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு போவான். சம்பாதித்தவைகளையெல்லாம் இரண்டு மாதத்தில் மதுவில் கரைத்துவிட்டுதான் வெளி நாட்டிற்கு புறப்படுவான்.
ஒரு நாள், ‘சித்தப்பு உங்க வீட்ல போட்டோ படத்துல இருக்கிறவர் பெயரத்தான தம்பிக்கும் வச்சிருக்கீங்களே ஏன்?’-என்று கேட்ட போது முத்துமாலையின் அப்பா அந்த கதையை சொன்னார். வியாபாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தாலும் கதையை அவர் விடவில்லை. ‘ஊசிமண்ட’-என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். அவர் தன் பனிரெண்டு வயது வரை உடம்பில் துணி இல்லாமல் அல்லிநகரம் கீரைக்கல் பஜாரில் சுற்றிக் கொண்டிருப்பார். அவர் நிஜப் பெயர் ‘முத்துமாலை’. அவர் தலை சிறுத்து இருக்கும். மந்தியின் தோற்றத்தில் இருப்பார். ஆம்! அவர் பிறக்கும் போது அவர் தந்தை வன வேட்டையில் நிறை சூலியாக இருந்த மந்தியை சுட்டு வீழ்த்தினார் என்றும், அந்த பாவம்தான் மந்தியை போல் முத்துமாலை பிறந்தார் என்றும் ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
‘சரி சித்தப்பு, அவர் போட்டோவ உங்க வீட்ல கூடத்துல மாட்டி வச்சிருக்கீங்களே ஏன்?’- தண்டபாணி கிண்டலாகவும் ஆச்சரிய தொணியிலும் கேட்டான். முத்துமாலையின் தந்தை சிங்காரத்திற்கு தண்டபாணி சொந்த அண்ணன் மகன். அவர் அண்ணன் மீது பெரு மதிப்பு இருந்ததால், தண்டபாணி மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
பின் நாளில் அய்யணார் கோயிலே கதி என இருந்துவிட்ட ஊசிமண்ட எனும் முத்துமால பக்தர்கள் தரும் காணிக்கையை சேர்த்து வைத்திருந்தார். அது கணிசமான தொகையாக இருந்தது. ஒரு நாள் சித்தப்பா சிங்காரம் சொந்தமாக பழக்கடை வைக்க பணம் இல்லாமல் தவித்த போது யாரும் உதவ முன் வரவில்லை. ஊசிமண்ட முத்துமாலதான் தன் சேமிப்பை எடுத்து சித்தப்பா சிங்காரத்திடம் தந்து நல்ல படியா பிழைத்துக் கொள் என்று கொடுத்து உதவினார். அந்த நன்றியை மறவாமல் தன் மகனுக்கும் ‘முத்துமாலை’ என பெயர் வைத்து அவர் போட்டோவை வீட்டில் வைத்து நித்தம் வணங்கிவிட்டுத்தான் தொழிலுக்கு போவார்.
ஒரே ஒரு நிறுவனத்திலே சில மாதங்கள் வேலை செய்து இழந்துவிட்ட தன் வேலைக்குப் பின் தீவிரமாக யோசித்து மேற்படிப்பு படிக்க முடிவு செய்து தந்தையிடம் சொன்னான் முத்துமாலை. நான்கு வருட படிப்பை மூன்று வருட சலுகையில் படித்து பட்டதாரியாக ஆகிவிட்டால் மேல் அதிகாரியாக பணிக்கு செல்லலாம் என கணக்கு போட்டு கல்லூரியில் சேர்ந்துவிட்டான் முத்துமாலை. அவன் ஏற்கனவே அதே பிரிவில் பட்டயச் சாண்றிதழ் வைத்திருந்ததால் மூன்று வருட கல்வியே போதுமானது என கல்லூரி முதல்வர் தங்கள் விதியை சொன்னார். முத்துமாலை மூன்று வருடத்தில் பட்டதாரியாக ஆகிவிட வேண்டும் எனும் தீவிர கனவுகளுடன் படிக்கலானான். தான் வேலை செய்து சம்பாதித்த சம்பள தொகையை அய்யணார் கோயில் உண்டியலில் போடுவதாகவும் நேர்ச்சை செய்திருந்தான். அதன்படி நடந்தது.
‘எலேய், உன்னையயெல்லாம் எவ கல்லாணம் பண்ணப்போறா காலேஜ் போற’-என சக மாணவிகள் ஏகடியம் செய்தார்கள். ‘கழுதைக்கு பேரு முத்துமால’-என்று சொல்லி சிரிக்கும் போது எல்லோரும் சேர்ந்து சிரிப்பார்கள். ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றியது போல் இருக்கும் சிங்காரத்திற்கு. கல்லூரியில் படித்த நேரம் போக மீதி நேரமெல்லாம் பழக்கடையில் தந்தைக்கு உதவியாக இருந்தான் முத்துமாலை.
மூன்று வருட கல்லூரி படிப்பு மூன்று மாதம் போல் போய்விட்டது. முன்பைவிட நல்ல நிறுவனத்தில் முத்துமாலைக்கு வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். முதல் மாத ஊதியம் அய்யணாருக்கு என்று சொன்னான் முத்துமாலை. அவன் அப்பா சிங்காரம் ‘பொறுயா’, நல்ல அனாதை ஆசிரம்மா பாத்து கொடுக்கலாம் என்று சொன்னார். அது போல் ஊரில் உள்ள ஆசிரமங்களை தேடி விசாரிக்கலானார். பூதிப்புரத்தில் சிவசக்தி காக்கும் கரங்கள் எனும் மறுவாழ்வு மையம் இருந்தது. சாலை விபத்தில் படுகாயமடைபவர்களை குணப்படுத்தி அனுப்பும் சீறிய தொண்டை செய்து கொண்டிருந்தார்கள். அங்குதான் விசாரித்து வந்திருந்தார். நாளை காலை ஒருவர் குணமாகி போகிறாராம். அவருக்கு அப்பா,அம்மா கிடையாதாம்.மனைவியும் உடன் இல்லையாம். அனாதை என்று சொன்னார் மேலாளர் சிவபார்வதி. முடிந்தால் அவருக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
ஜன நெரிசல் மிகுந்த உலகில் யாரும் அனாதையாகிவிட முடியாது. ஆனால், ஒருவரது குணக்கேடான செயல்களே அவரை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடுகிறது.
சிங்காரமும்,முத்துமாலையும் மறுநாள் காலை ஆசிரமம் சென்றார்கள்.குணமான நோயாளியை நுழைவாயிலுக்கு அழைத்து வந்து ஆசிரம விதிகளின்படி கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அவனை அழைத்து செல்ல ஆட்டோ வரவழைக்கப்பட்டிருந்தது. பின்பு பண உதவி கிடைக்கும் பொருட்டு சிங்காரத்தையும்,முத்துமாலையையும் உள்ளே அழைத்தார்கள். உள்ளே வந்த சிங்காரத்திற்கும்,முத்துமாலைக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கால்களில் கட்டு முழுமையாக பிரிக்கப்பட்டிருந்தாலும் கையில் ஊன்று கோலுடன் நின்று கொண்டிருந்தான் தண்டபாணி.
ஆசிரம நிர்வாகி சிவ பார்வதியின் முன்னிலையில் முத்துமாலை தன் முதல் மாத ஊதியத்தை தண்டபாணியிடம் தந்தான் . அதை வாங்கிக் கொள்ள சிறிது தயங்கினாலும் வாங்கிக் கொண்டான் தண்டபாணி.
மிதமாக குடித்தவன் மிகுதியாக குடித்தான். புதுமனைவி பொறுத்துப் பார்த்து விவகாரத்து வாங்கி பிரிந்து சென்றாள். மகனின் செய்கையை தாங்க முடியாமல் தந்தையும்,தாயும் மகள் வீட்டில் நிரந்தரமாக குடியேறினார்கள்.மன உளைச்சலால் ஒரு நாள் சாலை விபத்தானது.பணம் இல்லாதவனை உறவுகள் யாவரும் கண்டு கொள்வதே இல்லை.
ஆட்டோவில் ஏறிக் கொண்டு சித்தப்பாவின் கரத்தையும்,முத்துமாலையின் கரத்தையும் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் அழுதான் தண்டபாணி. உருவக்கேலி செய்தவனுக்கு கிடைத்த தண்டனையோ என பிதற்றினான். ‘இல்லை அண்ணா இல்லை’-என்று தேற்றினான் முத்துமாலை. தண்டபாணியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
அதில் ஒரு துளியாவது அவன் வாழ்க்கையை மாற்றும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *