உபதேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 8,077 
 
 

கிழக்கு திசையில் இருந்து ஒருவனும், மேற்கு திசையில் இருந்து ஒருவனும் அடர்ந்த காட்டின் ஒற்றையடி பாதையில் நடந்து வந்து, ஓர் இடத்தில் சந்தித்து கொண்டனர்.

“என்னப்பா?, இங்கே ஒரு துறவியின் குடில் இருக்கிறதாமே, ஒனக்கு தெரியுமா? என கிழக்கு திசையில் இருந்து வந்தவன் கேட்டான்.

“அங்கேதான், நானும் போகிறேன். வாருங்கள் சேர்ந்தே போவோம்” என்றான் மேற்கில் இருந்து வந்தவன்.

அமைதியாய் நடந்து சென்று கொண்டு இருந்தனர். சிறிது நேரத்திற்கு பின்.. கிழக்கு திசையில் இருந்து வந்தவன் பேச்சை ஆரம்பித்தான்.

“என்ன விசயமாய் துறவியின் குடிலுக்கு போகிறாய்?

ஐயா, துறவியிடம் உபதேசம் வாங்கத்தான்” என்றான் மேற்கு திசையில் இருந்து வந்தவன்.

“என்னது, உபதேசமா? ஒனக்கா? கேள்வியில் எகத்தாளம் கூடியது. உதட்டில் ஒரு சுழிப்பும் சோ்ந்து, மேற்கு திசையில் இருந்து வந்தவன் மீது அலட்சிய பார்வையை படரவிட்டான் கிழக்கு திசையில் இருந்து வந்தவன். தொடர்ந்து கேள்விகளை கேட்டான்

ஒனக்கு மகாபாரதம் தெரியுமா?.

தெரியாது, ஐயா

இராமாயணம் படிச்சிருக்கியா?

இல்லீங்கோ.. அதெல்லாம் தெரியாதுங்கோ

பக்தி நூல்கள் ஏதாச்சிலும் படிச்சிருக்கியா? இல்லே வேதபாராயணங்கள் ஏதாச்சும் கேட்டிருக்கியா?

ஐயா, ஒரு மண்ணும் எனக்கு தெரியாது, துறவிகிட்ட உபதேசம் வாங்கணும் அம்புட்டுதான் என்றான்.

ஒண்ணுமே தெரியாது நீ உபதேசம் வாங்கி என்ன பண்ணப்போறே?

எதுவும் தெரியலன்னா இன்னாங்க, அதான் துறவி உபதேசம் ஒண்ணு இருக்கே. அதைக் கெட்டியா பிடிச்சுக்குவேன்.

இப்படி பேசிக் கொண்டே குடிலை இருவரும் அடைந்தனர்.

துறவியின் குடிலில் பணிவிடை செய்பவன் இருவரையும் வரவேற்று உபசரித்தான். பின் விவரம் கேட்டான்.

துறவியிடம் உபதேசம் வாங்க வந்திருப்பதாக இருவருமே கூறினார்கள்.

“என்னங்க, ரெண்டு பேருமே தாமதா இருட்டுற நேரமா பார்த்து வந்து இருக்கீங்க. அதுவுமில்லாம நாளைக்கு துறவி மௌனவிரதம் இருக்கிற நாள். உபதேசம் கொடுக்கறது சந்தேகம்தான். இருந்தாலும் கேட்டு சொல்றேன்” என்று உள்ளே போனான்

உள்ளே போனவன் திரும்ப வந்து, நாளை மௌனவிரதம் இருப்பதால், யாருக்கு உபதேசம் கொடுப்பது என்பதைக் குறிப்பாலேயே உணர்த்துவாராம். அதை நீங்களே புரிஞ்சுகிட்டு உங்களில் ஒருத்தர் மட்டும் தங்க சொன்னார் என்றான் பணியாள்.

மறுநாள் காலைக்கடன்களை முடித்து விட்டு குடிலுக்குள் இருந்தார் துறவி

இருவரும் உள்ளே நுழைந்தனர்.

மௌனமாக சைகையாலயே ஆசிர்வதித்து அமரச் சொன்னார் .

இருவரையும் கூர்ந்து கவனித்தார் துறவி முகத்தில் ஒரு புன்னகைத் தவழ்ந்தது

அவர் எதிரில் இரண்டு சிறிய மண்குடுவைகள். ஒன்றில் தானியங்கள் நிரம்பி வழிந்தும், மற்றொன்று காலியாகவும் இருந்தன.

துறவி காலியாக இருந்த மண்குடுவையை கைகளில் ஏந்தி வானத்தை பார்த்தபடி மனதுக்குள் பிரார்த்தித்தார்.

எல்லாவற்றையும் கரைத்து குடித்தவர் குடிலை விட்டு வெளியேற…

”ஒரு மண்ணும் தெரியாது” என்று சொன்னவன் துறவியின் உபதேசத்துக்காக காத்து இருந்தான்.

Ashokan இயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)தந்தை பெயர்: த.குப்புசாமிபிறந்த நாள்: 13 Decemberதொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208தொடர்பு எண்: 9047896065மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவிமகன் பெயர்: அ.ராஜ்மோகன் இலக்கிய பணி:தாய்மண்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *