உதவி செய்தல்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மக்கள் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தேவையான வைகளையும் தாங்கள் விரும்பும் பொருள்களையும் தாமே தேடிக்கொள்ளவேண்டியது உண்மையே. ஆனால், மக் கள் எல்லோருமே பொதுவான தொடர்புகொண்டு பற் பல வகையில் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்கள் செவ்வி நேரும்போதெல்லாம் ஒரு வருக்கொருவர் நலங்கருதித் தொண்டும் உதவியும் செய்து கொள்ளவேண்டும். இதனால் மக்கட்குள் இன்பம் பெருகி இணக்கமுண்டாகும்.

இவ்வுலகில் மக்கட்கு எதிர்பாராத இக்கட்டுக்கள் வர லாம்; நோய் நொடிகளால் மக்கள் பலநாட்கள் பாயும் படுக்கையுமாக விருக்கலாம்; செய்முயற்சிகளெல்லாங் கைவிட்டுப் பாழ்பட்டுப் போய்விடலாம்; வறுமை வெறு மைகளால் துன்புற்றிருக்கலாம். அப்போது உடனுள்ள மக்கள் அவர்கட்கு ஆறுதல் தேறுதல் சொல்லித் தங்களா லான உதவியுஞ்செய்து துன்புறுவோரை இன்புறச்செய்ய வேண்டும்.
மக்கள் வாழ்க்கையில் பற்பல நன்மை தீமைகள் கலந்திருக்கின்றன. சிலர் உடல்வலிமையும் மனவலிமை யுங் கொண்டுள்ளனர். சிலர் இரண்டும் அற்றிருக்கின்ற னர். சிலர் சில தவறுகளுக் குட்படுகின்றனர். சிலர் செய்யுந் தவறுகள் பலவாகும். சில தாய் தந்தையர் தம் மக்கட்குக் கல்விப் பயிற்சி கொடுத்துப் பொருளும் வைக் கின்றனர்; சில மக்கட்கு இவ்விரண்டில் ஒன்றுகூட இல்லை. இதுபோலவே பல்வேறுநாட்டு மக்களின் நிலைமைகளும் பற்பல வேறுபாடுடையவைகளாக இருக்கின்றன. மேலும், சிலர் நாகரிகமுற்றும் சிலர் அஃதற்றும் இருக்கக் காண் கின்றோம். தனி மக்களாகட்டும், ஒரு நாட்டுச் சமூகமக் கள் ஆகட்டும் ஒருவருக்கொருவர் அக்கறை யெடுத்துக் கொண்டு, வலிமை பெற்றோர் அஃதற்றோருக்கும், நன்ன டக்கையுள்ளோர் அஃது இல்லோருக்கும், பொருள்பெற்றோர் அஃது பெறாதோர்க்கும், நாகரிகர் நாகரிகம் இல் லார்க்கும் அவரவர்க்கேற்ற உதவிசெய்து, அவரவர் நிலைமைகளை உயர்த்த முயலவேண்டும்.
பிறர்க்கு உதவிசெய்யும் உணர்ச்சி மக்கட்கு இயற் கையிலேயே உண்டு. ஒருவன் தன்னைத்தான் விரும்பு வதுபோலவே, அயலாருக்கும் அன்புகாட்டி உதவிசெய் தல் வேண்டுமென்று பேரறிவாளர் கூறியிருக்கின்றனர்.
உதவிசெய்வதிலும் பகுத்தறிவு வேண்டும். ஒருவ னைச் சோம்பேறியாக்கவும், தீவினைவழிச் செல்லவுஞ் செய்யும் உதவியைச் செய்வதைவிடச் செய்யாமலிருப்பதுவே மேலாகும். பிறர் சீர்படச்செய்வது உதவியே. உதவி பெற்றவன் அவனைக்கொண்டு தன்னைத்தானே காப்பாற் றிக்கொள்ள வல்லவனாகப் பெறின் அவ்வுதவியே சிறந்த பயன்பெற்ற தொன்றாகும்.
கடன்பட்டு உதவிசெய்வது தவறு; கொடுக்க வேண் டிய கடனைக் கொடாமல் அத்தொகையினால் உதவி செய் வது அதனினுந் தவறு; அது கொடுப்பதன்று. கொள்ளை. யடிப்பதேயாகும்.
1. வரதர் என்னும் வள்ளல்
இங்கிலாந்தில் வரதர் என்னும் வள்ளலொருவர் வாழ்ந்துவந் தார். மக்கள் படுந் துன்பங்களைத் தீர்க்க அவர் பட்டபாடு அளவற் றது. அவர் இலிஸ்பன் நகர் நோக்கிக் கப்பற் பயணஞ் செய்த. போது, பிரான்சியர் அவரையும் அவரோடிருந்தவர்களையும் பிடித். துக்கொண்டுபோய் ஓர் இருட்டுச் சிறைச்சாலையிற் போட்டுவிட்ட னர். அங்கு அவர்கள் பாறாங்கற் படுக்கையிற் பட்டினி கிடந்து படாதபாடு பட்டனர். அங்கு அவர் தாம் பட்ட துன்பத்துக் வருந்தாமல் உடனிருந்தார் படும் துன்பத்தைக் கண்டு பொறாரா உள்ளம் நொந்து உருகினர்; இங்கு அவர் இரக்கமயமே யாய்விட் டார். இவர் சிறைநீங்கித் தந்நாடு சென்றதும், அங்கொரு பெருங் கிளர்ச்சி யுண்டாக்கிப் பிரான்சியர் சிறையிலுள்ளாரை இரக்கத். தோடும் இணக்கத்தோடும் பாதுகாக்கவேண்டுமென்று தந்நாட் டரசியலார் மூலம் ஒரு முறைப்பாடு அனுப்பிவைத்துப் பிரான்சிய அரசியலாரை அங்ஙனமே செய்விக்கச் செய்தனர்.
இங்கிலாந்தில் பெட்போர்டு என்னும் நகருக்கருகில் ஒரு பேரூ ளில் இவருக்கு நல்ல நிலச்செல்வமும் பொருட்செல்வமுமுண்டு. சுற்றுப்புறங்களிலுள்ள மக்கள் எல்லோரும் இவர்தம் உதவிபெற்று உளமகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்தம் வயல்களில் ஆயிரக் கணக்கான உழைப்பாளிகள் வேலைசெய்து நல்லூதியம் பெற்றுவந் தனர். வரதர் அவர்களெல்லோரையும் தாயன்புகாட்டித் தாங்கிவந் தவர். அங்கே அவர் ஏழைப்பிள்ளைகள் படிக்க இலவசக் கல்விச் சாலையொன்று ஏற்படுத்தி நடத்திவந்தார். தமது வருமானத்தில் முக்காலே மூன்று வீசத்தையும் ஈகையறத்துக்கென்றே ஈடுபடுத்தி வந்தார். அவர்தம் உணவோ மிக எளியநிலையில் அமைந்தது ; அஃது ஊழியர் கொள்வதற்குமேல் சிறிதும் உயர்ந்ததன்று.
பின்னர் அவர் மனப்போக்குச் சிறைச்சாலைச் சீர்திருத்தத்தின் மேற் றிரும்பியது. ஏனெனில், தந்நாடாகிய இங்கிலாந் திலேயே சிறைச்சாலைகளெல்லாம் கொலைக் குகையாகக்கேடுகெட்டிருந்தன. உடல்நல மென்பதொழிந்து தீங்குகள் நிறைந்துகிடந்தன. அவர் பெருமுயற்சி செய்து தம்மூர்ப் பக்கமிருந்த சிறைச்சாலைகளையெல் லாம் ஒருவாறாகச் சீர்ப்படுத்தினர். பிறகு பிரிட்டிஷ் தீவுகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கெல்லாஞ்சென்று, அவைகளின் துன்பநிலைமை களையெல்லாம் நன்குதெரிந்துகொண்டு, அவைகளை அரசியலாருக் கெடுத்துக்காட்டிக் கைதிகளின் உடல்நலம் பேணுதற்கென்று ஒரு சட்டத்தையே பாராளுமன்றமொப்பப் பிறப்பித்தார். இவ்வாறு தந்நாட்டுச் சிறைச்சாலைகளின் நலங்கண்டு மனநிறைவடைந்தபின் அயல்நாடுகளுக்குச் சென்று ஆங்குள்ள சிறைச்சாலைகளின் நிலை மைகளை ஆராய்ந்து ஆவன செய்வதற்கெண்ணி அயல்நாடுகளுக்குப் புறப்பட்டார்.
ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு நாட்டின் சிறைச்சாலைகளை யெல்லாம் பார்வையிட்டு, அவர் அவ்வச்சாலைகளின் நிலைமைகளை யெல்லாம் அறிந்து, அவைகளின் சீர்திருத்தங்களுக்காக அந்தந்த அரசியலாரிடம் வாதாடி வருந்திக் கேட்டுக் கொண்டார். அவர் எங்கே போனாலும் சிக்கன உணவுடைகளையே கொண்டு, சிறைச் சாலை வாழ்க்கையிலுள்ளார்க்கு உதவியாக மிக்க தொகை செலவு செய்துகொண்டுவந்தார். தாம் சென்றவிடங்களிலெல்லாம் சிறைச் சாலைகளில் தாம் கண்ட குற்றங்குறைகளை யெல்லாம் வெளிப் படுத்தி அவைகளுக்கேற்பச் செய்யவேண்டியவைகளை இன்னவை யென்றுந் தெரிவித்துவந்தார். இப்படிச் செய்ததனால் சிறையில் வாழ்வார்க்குப் பலப்பல நன்மைகளேற்பட்டன. இவ்வாறு அவர் சிறைச்சாலைச் சீர்திருத்தத்துக்காகவென்று நாற்பத்தீராயிரம் மைல் தம் பணச்செலவோடு சுற்றிவந்தார்.
மத்தியதரைக் கடலையடுத்த நாடுகளில் அக்காலத்தில் நோய் மிகுதியால் மக்கள் மிக வருந்தியிருந்தனர். ஆங்காங்கே வருவார் போவார்களைச் சிலநாட்கள் தங்கவைத்துத் தேர்வுசெய் தனுப்பும் தொற்றுநோய் மருத்துவச்சாலைகள் பலவுண்டு. அச்சாலைகளு நன்னிலைமையில் வைக்கப்படாமையால் நோயினால் மாளும்மக்கள் எண்ணிக்கையைவிட அங்கு மாண்டுபோவார்களுடைய எண்ணிக் கையே மிகுதியாயிற்று. நம் வரதர் அச்சாலைகளைப் போய்ப் பார்த்துவர உடன் வேலையாள் ஒருவனுமில்லாமல் ஒன்றியாக புறப்பட்டார் ; ஏனெனில் வேறொருவரை நோய்வாய்ப்படச்செய்ய அவர் மனம் ஒப்பவில்லை.
வரதர் மத்தியதரைக் கடற்கரையோர நாடுகளிலுள்ள பற்பல நாடுகளுக்குச்சென்று ஆங்காங்குள்ள தொற்றுநோய் மருத்துவச் சாலைகளைப் பார்வையிட்டார். வெனிஸ்நகரத் தொற்றுநோய்மருத் துவச் சாலையில் தம்முயிரைத் துரும்புபோல் நினைத்து நாற்பது நாட்கள் தங்கியிருந்தார். இவருடைய தன்மதிப்பையுந் தயாள குணத்தையுங்கண்டு ஜெர்மானிய மன்னன் இவரைப்போல் ஓர் உரு வச்சிலை செய்து நாட்டிவைக்க வேண்டுமென்று முயல, அவ்வாறு செய்வது தமது மனப்பான்மைக்கு ஒவ்வாததென்று அரசர் பெருமானை வேண்டிக்கொண்டு அதனைத்தடுத்துவிட்டார். அடக்க முடைமையை அணியாகக்கொண்ட வரதர், புகழை விரும்புவாரோ !
இவ்விடம்விட்டு உருஷியாவுக்குப் போனதே அவர்தம் கடை. சிப் பயணமாகும். ஆங்குச் செர்சன் நகரில் ஒரு பெருமாட்டிக்கு. நச்சுக்காய்ச்சல் கண்டிருந்தது. அவருக்கு வேண்டியதைச் செய்ய வரதர் அவரிடம் சென்று வந்தார். அதுவே. காய்ச்சலாய் இரண் டொரு நாட்களில் வரதர் விண்ணுலகடைந்தார். உருஷியமன்னர் அலெக்சாண்டர் என்பவர் வரதர் நினைவுக் குறிக்கென்று ஓர் அழகிற் சிறந்த கல்லறை கட்டுவித்தார்.
வரதர் தம் பொருளையும் உடலையும் உளநோய்ப்பட்டோருக் கும் உடல்நோய்ப்பட்டோருக்கும் பயன்படுத்திவந்தார். ஆதலால், அவர்தம் ஈவிரக்கமுடைமைக்கு ஈடு காண்பதரிது ! அவர் தமக் கென வாழாது பிறர்க்கென வாழ்ந்துவந்தார். அவரைத் தற்காலத் தனிவள்ளல் என்று சொல்வது மிகையாகாது.
2. சீராளர் சிட்னி
சிட்னி என்பவர் ஒரு சிறந்த போர்வீரர். அவர் போர் செய்தபோது காலில் அடிபட்டுப் பாசறையிலிருந்தார். அப்போது ஒருநாள் அவர் நீர் வேட்கைகொண்டு தண்ணீர் கேட்டார்.
தண் ணீர் கொண்டுவந்தனர்; அவர் அதனை ஆவலோடு குடிக்கத் தொடங்கும்போது, அண்மையிலிருந்த நோயாளி ஒருவன் நீர் வேட்கையால் வருந்தப் பார்த்து, வாயில் வைக்கப் போன நீரே னத்தை உடனே அவன் கையிற் கொடுத்துவிட்டு, “தம்பி! நீ எனக்குமேல் நீர் வேட்கை கொண்டிருக்கின்றாய்,” என்றனராம்!
3. நீதித்தலைவர் திறமைந்தர்
எடின்பரோ நகரில் திறமைந்தர் என்னும் ஒரு நீதித்தலைவர் இருந்தார். அவர் ஒருநாள் நகர்வெளி ஒரு சாலைவழியே போய்க்கொண்டிருந்தார். அங்கு ஒரு அங்கு ஒரு பிணத்தைப் பாடையின் மேல் வைத்து, உடன்வருவார் ஒருவருமின்றி, நான்குபேர்களே தூக்கிக்கொண்டு போவதைக் கண்டார். அஃது ஓர் ஏழைப்பிண மெனக் கருதினார். அதனால், அதனைப் பின்தொடர்ந்து போனார். வழியில் வந்தவர்களெல்லோரும் இவரைக் கண்டஞ்சி இவருடன் சேர்ந்து கொண்டனர். கூட்டம் பெருகிப்போயிற்று. எல்லோரு மாக இடுகாடு செல்ல, அப்பிணத்தைத் தாமும் உடனேந்திச் சவக் குழியில் விட்டனர். பிறகு இறந்தவரின் தாயும் மனைவியும் உயி ரோடிருப்பதாகக் கேட்டறிந்து உடன்வந்த குலமக்களை நோக்கி, ”பெருமக்களே ! நாம் எல்லோரும் வியக்கத்தக்க வழியில் ஒன்று சேர்ந்தோம்; உயிர்நீத்தவருடைய குடும்பத்துக்கென்று நாமெல் லோருஞ் சேர்ந்து ஒரு நன்கொடை யளிப்பது நல்வினை யென் றெண்ணுகின்றேன்,” என, உடனே யாவரும் தங்கள் தங்களால் கூடிய தொகைக்குக் கையொப்பஞ் செய்தனர். திறமைந்தரும் ஒரு பெருந்தொகை ஈந்து, மொத்தப் பணத்தையும் நீத்தார் மனைவி யிடம் கொடுத்துதவினர்.
4. பரிவுற்ற படைத்தலைவர்
பல்லாண்டுகட்கு முன் நமது தமிழ் நாட்டில் படைத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் தம்போர்வீரன் ஒருவனை ஓர் அலுவலாகத் தமது குதிரையிலேறிப் பக்கத்திலுள்ள ஊருக்குச் சென்று வரக் கட்டளையிட்டனுப்பினார். அவன் அலுவலை முடித்துக் கொண்டு திரும்பிவந்து தலைவரைநோக்கி, “ஐயா ! இனி யான் அலுவலாகச் செல்லும்போ து இக்குதிரையோடு ஒரு பை நிறையப் பணமுங் கொடுத்தனுப்பவேண்டும்,” என்றான். தலைவர் காரணங் கேட்க அவன், ‘எந்தப்பிச்சைக்காரன் எதிர்வந்து கையேந்தினாலும் உமது குதிரை உடனே நின்றுகொண்டு பிச்சைக்காரனுக்கு ஏதாவது கொடுக்கும்வரையில் நின்றவிடம்விட்டு நகரமாட்டேனென்கிறது; என் கையிற் பணமேது ! பிச்சைக்காரனுக்கு ஏதாவதொன்று கொடுக்கிறாப்போல் அங்கங்கே பாசாங்குசெய்து கொண்டே வந்து விட்டேன்,” என்றான். பிள்ளைகளே ! இவ்வரலாற்றினால் என்ன தெரிந்துகொள்கின்றீர்கள் ? சொல்லுங்கள் பார்ப்போம் !
5. மனமாண்புசேர் மன்னன்
அன்றாடம் ஒரு நன்மையாவது செய்யாமல் படுக்கைக்குப் போகாத ஓர் அரசன் ஒருநாள் யாதொரு நன்மையும் எவருக்குஞ் செய்ய நேரிடாமல் அன்றிரவு, “இந்நாள் பாழ்பட்டுப் போய்விட் டதே!” என்று சொல்லிப் பட்டினியாகப் படுக்கையில் வருந்திக் கிடந்தானாம்!
க. ஒருவருக்கொருவர் அன்புகாட்டி வாழுங்கள்.
உ. வெந்துயர் அடைந்தோர்க்கு வேண்டியதைச் செய்யுங்கள்.
ங. வறுமையாளர்க்கு வெறுங்கை காட்டாதீர்கள்; நிறைந்த கை காட்டுங்கள். -விவில்லியம்.
ச. பெற்றோரைப் பாதுகாக்குக.
ரு. இடுக்க ணுற்றோர்க்கு இடுக்கண் தீர்ப்பவன் இடுக்கணிலிருந்து தீர்க்கப்படுவான். -நீதிமொழி.
சு. பெருநிதி படைத்தோர் பெருமனங் கொண்டிருக்க வேண்டும். – நீதிமொழி.
எ. உடனுள்ளார். உனக்கு அன்பு காட்டாவிட்டால், அஃது உன் குற்றமே. நீ அவர்கட்கு அன்பும் நட்பும் காட்டினால், அவர்களும் உனக்கு அன்பும் நட்புங் காட்டாம லிருக்க முடியாது. உன்னிடம் அன்புகாட்டுந் தன்மை யும், தன்மறுப்புத் தன்மையுமிருந்தால், உனக்கு நண்பருக் குக் குறைவு இராது. நட்புத் தருவது அழகும் அன்று; செல்வமுமன்று; அதனைத் தருவது அன்புந் தயையுமே. -நாட்கடமை.
அ. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக. -திருவள்ளுவர்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |