உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 55

மழைக் காலத்தின் நாளொன்றில், சோழ நாட்டின் சிறுகுடி என்னும் ஊரின் விடியற் காலைப் பொழுதில் எங்கெங்கோ சென்று இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் காவிரிக்கு அன்று என்ன தான் மகிழ்ச்சியோ சற்றே சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தாள். சிறுகுடியில் வாழும் வள்ளல் பண்ணன் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் உண்டிக் கொடைக்கு தானும் தான் ஒரு காரணம் என்ற பெருமிதமாக இருக்க வேண்டும் இந்தப் பொன்னித் தாய்க்கு.
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்த சில நாழிகைகளில், பூம்பொழில்களும் சோலைகளும் குளங்களும் நிறைந்த பண்ணனின் இருப்பிடம் நோக்கி பாணர்களும் புலவர்களும் எளியவர்களும் வரத் தொடங்கினர். அவரது இருப்பிடத்தின் வாயில் அருகே சிறுவர்கள் வரிசையில் நின்று காய்கறிகள் நிறைந்த கதம்ப சோற்றின் திரளை வாங்கிச் சென்று கொண்டிருக்க , உள்ளே மாளிகையின் ஒரு புறத்தில் மகளிர் மட்டும் அமர்ந்து பல்வகை உணவு வகைகளுடன் கூடிய உணவை உண்டு கொண்டிருந்தனர். நரைத்த தலையும் கம்பீர தோற்றமும் கொண்ட உயரமான பண்ணன் மலர்ந்த முகத்துடன் தமது மனைவியார் பொன்னியுடன் இணைந்து வந்திருந்த மகளிருக்கு உணவு வகைகளைக் கேட்டுக் கேட்டுப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
சாப்பிட்டு முடித்த பெண்கள் வெளியேறிக் கொண்டிருக்க , மாளிகைக்கு வெளியே உள்ள சோலையில் உள்ள திண்ணையில் எளிய சேலை அணிந்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியும் அவரது பதின்பருவ அழகிய புதல்வியும் அமர்ந்தனர். அந்த துருதுரு வளர் இளம் பெண்ணுக்கு உட்காரப் பிடிக்குமா என்ன? அவள் அந்தப் பகுதியைச் சுற்றி சுற்றி வந்து மாளிகையின் வாயிலில் இருந்த கூண்டில் இருந்த அழகான கிளியைப் பார்த்து மகிழ்ந்தாள். கிளி சும்மா இல்லாமல், அரசியார் வாழ்க , இளவரசியார் வாழ்க என்று மிழற்றியது.
கிளியின் மிழற்றலை செவியுற்ற பண்ணனும் அவரது மனைவியார் பொன்னியும் இளவரசியின் அருகில் வந்தனர். இளவரசி அம்மா அருகில் வந்து நின்றாள். ஆம். திண்ணையில் அமர்ந்து இருந்த அந்தப் பெண்மணி, சோழப் பேரரசன் கிள்ளி வளவனின் மனைவியார் அரசியார் பூங்கொடி துருதுரு பதின் பருவ மங்கை அவரது புதல்வி இளவரசி அம்மங்கை.
பண்ணனும் பொன்னியும் அரசியின் எதிரில் கைகூப்பி நின்றனர்.
பண்ணன் பேசினார் –
“அரசியாரும் இளவரசியாரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எங்கள் குடிலுக்கு வந்து விட்டீர்களே … எங்களை சோதனைக்கு உள்ளாக்கி விட்டீர்களே …. முன்கூட்டியே சொல்லி இருந்தால் மேளதாளம் இசையுடன் தங்களை வரவேற்றிருப்போமே … தங்கள் முகப் பொலிவைப் பார்த்து அப்போதே நினைத்தேன் … நீங்கள் இருவரும் கோநகரத்திற்கு இப்படி வந்த சுவடு தெரியாமல் செல்ல அடியேன் அனுமதிக்க மாட்டேன். சிவிகை ஏற்பாடு செய்கிறேன். என்னுடன் ஊர் மக்களும் வருவார்கள் அரண்மனை வரை அதற்கு தாங்கள் இசைவு தெரிவிக்க வேண்டும்”
அரசி , இளவரசியின் முகத்தைப் பார்த்தாள் . இளவரசி பேசினாள் –
“ஐயா, என்னுடைய அப்பா இந்த சோழ நிலத்தின் மாமன்னர் , வயதில் பெரியவரான தங்களை வாழ்த்தி யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய என்றும் தங்களை பசிப்பிணி மருத்துவன் என்றும் செங்கோல் பிடித்த கையால் எழுதுகோல் எடுத்து பாடல் பாடியுள்ளார். தங்களைக் கொண்டாடி உள்ளார் ஏடெடுத்துப் பாடிய செந்தமிழ்ப்பாட்டில் . தங்கள் ஊரையும் தங்களின் வள்ளன்மைத் திறத்தையும் நேரில் காணவே அம்மாவும் நானும் தனியாக எளிய உடை தரித்து இங்கு வந்து அடிசில் உண்டோம் . இதோ உணவுத் திரளை எடுத்துச் செல்லும் சிறார்களை மழைக் காலத்து எறும்புகளுடன் ஒப்பிட்டு அந்தப் பாடலில் அப்பா பாடியுள்ளார். எங்களை எவரும் அறியவில்லை. ஆனால் , இந்த பச்சைக் கிளி எங்களைக் கண்டு பிடித்து விட்டது பாருங்கள்.”
அரசியார் மலர்ந்த முகத்துடன் ஆம் என்றார். அரசியும் இளவரசியும் பண்ணனது மாளிகையில் இருக்கும் செய்தி சில மணித்துளிகளில் ஊர் முழுக்க பரவியது.
ஊர் மக்கள் மகாராணிக்கு கையுறையாகத் தாங்கள் கொண்டு வந்த கனிகள் , காய்கறிகள், தேன் ,தினை மாவு ஆகியவற்றை வழங்கி வணங்கி நின்றனர்.
பொன்னி , இளவரசியிடம் “நாங்கள் வளர்த்த கிளியால் தங்களைக் காணும் பேறு பெற்றோம் இல்லாவிட்டால் … “
“அம்மையே அறிவு உள்ள கிளி தான் தாங்கள் வளர்த்த கிளி … “
“அவள் பெயரே அறிவு தான் “
“ஓ பெண் கிளியோ” என்றாள் இளவரசி. பொன்னியும் அரசியும் புன்னகை பூத்தனர்.
(இந்தப் புனைகதைக்கான ஆதாரம்
1) சோழ அரசன் கிள்ளி வளவன் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறநானூறு – 173 – பாடியவர் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். பாடப்பட்டவர் – சிறுகுடி கிழான் பண்ணன்)
2) தமிழறிஞர் நாவலர் பண்டித வேங்கடசாமி நாட்டார் அவர்களின் (1884 – 1944) பசிப்பிணி மருத்துவன் என்ற தலைப்பிலான கட்டுரை. இந்தக் கட்டுரையில் நாவலர் அவர்கள், பண்ணன், ஆயிரத்து எண்ணூற்று ஆண்டுகளுக்கு முன்பு சோழநாட்டின் காவிரிக் கரையோரம் உள்ள சிறுகுடியில் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார்.)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
