உண்டியல்
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 145

எனது மகன் அர்ஜூன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான் அவன் இப்போதே சேமிப்பின் மகிமையை உணர்ந்து அவனாகவே ஒரு அட்டைப்பெட்டியில் உண்டியலை உருவாக்கி அதில் காசு சேமித்து வந்தான்.தினமும் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் இருபது ரூபாய் என்று அந்த உண்டியலில் போட்டு சேமிக்க ஆரம்பித்தான்,ஒரு சில நேரத்தில் நூறு ரூபாய் இருநூறு ரூபாய் என்று கொடுப்பேன் அதையும் உண்டியலில் போட்டுவிடுவான்,அதுபோக வீட்டிற்கு வரும் உறவினர்கள் தரும் ரூபாயையும் உண்டியலில் போட்டுவிடுவான்,இவனை பார்க்கும்போதெல்லாம் என் சிறுவயது தான் ஞாபகத்திற்கு வரும்.இவன் வயதில் எல்லாம் நான் எனது அம்மா,ஆச்சி வைத்திருக்கும் காசை திருடிக்கொண்டு கடையில் மிட்டாய்,பம்பரம் என்று வாங்கிவருவேன் ஆனால் என் பையன் காசின் மதிப்பை புரிந்து சேமித்து வருகிறான் என்று நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கும்,அப்படி ஒருநாள் கடைக்குச் சென்ற எனது மகன் வீட்டிற்கு வரும்போது கையில் ஒரு சிறிய உண்டியலுடன் வந்தான்,வீட்டில் அவன் செய்த பெரிய உண்டியலே இருக்கும்போது இன்னுமொரு உண்டியலை எதுக்கு வாங்கி வருகிறான் என்று நான் யோசித்தேன்,அதனை அவனிடம் கேட்கவும் செய்துவிட்டேன்.
“எல்லாம் ஒரு காரணமாகத்தான் அப்பா! இந்த உண்டியலிலேயும் இனிமே காசு போடனும் சரியா?”
“இந்த உண்டியல் எதுக்கு? நீ தான் வேற ஒன்னு வெச்சிருக்கியே”
“இது நான் வேறு ஒரு பர்ப்போஸ்க்காக வெச்சிருக்கேன், அது எதுக்குன்னு நான் ஒரு நாள் சொல்றேன்,இப்போ ஒரு பத்து ரூபாய் தாங்க”
என்று கையை நீட்டினான் சரி எதுக்கோ சேமிக்கின்றான்னு எனக்குள்ளேயே சொல்லிவிட்டு அவன் கையில் ஐம்பது ரூபாயை கொடுத்தேன்
“ஓ ஐம்பது ரூபாயா?சந்தோஷம் சந்தோஷம்”
என்று சொல்லிக்கொண்டே வாங்கி அந்த சிறிய உண்டியலில் போட்டான்.
பிறகு தினமும் அவன் செய்த உண்டியலோடு அந்த சிறிய உண்டியலிலேயும் காசு போட்டுக்கொண்டிருந்தான் எப்போதாவது நான் நூறு ரூபாய் இருநூறு ரூபாய் கொடுக்கும்போது அதனை கடைக்குச் சென்று மாற்றி ஐம்பது ரூபாயை அவன் செய்த உண்டியலிலும்,மீதி ஐம்பது ரூபாயை அந்த சிறிய உண்டியலிலும் போடுவான்.
இப்படியே மூன்று மாதம் சென்றது அந்த சிறிய உண்டியலும் காசு சேர்த்து சேர்த்து நிரம்பிவிட்டது,பிறகு அந்த உண்டியலை உடைத்து நான்,எனது மனைவி,எனது மகன் பிறகு யூகேஜி படிக்கும் எனது செல்ல மகள் என குடும்பமே சேர்ந்து அந்த உண்டியலில் சேர்த்து வைத்திருந்த காசை எண்ணிக்கொண்டிருந்தோம், எண்ணியதில் மொத்தம் 390 ரூபாய் இருந்தது.அவனுக்கு நாம் மூன்று மாதத்திலேயே இவ்வளவு சேர்த்துவிட்டோம் என்று ஒரே மகிழ்ச்சி.
பிறகு என்னை பிரியாணி கடைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டான் நான் எதற்கு என்று கேட்டதற்கு என்னை ஒரு பார்வை பார்த்தான், சரி சரி என்று சொல்லி அவனை பிரியாணி கடைக்கு அழைத்துச் சென்றேன்,சென்றதும் அவன் தனது டவுஸர் பாக்கேட்டில் கையை நுழைத்து உண்டியலில் சேர்த்து வைத்திருந்த அந்த 390 ரூபாயை அந்த கடையின் ஓனரிடம் கொடுத்து
“இந்த காசு நான் உண்டியல்ல மூனு மாசமா சேர்த்தேன் அங்கிள், இதுல 390 ரூபாய் இருக்கு இந்த காசுக்கு நீங்க எவ்வளவு பிரியாணி தருவீங்க அங்கிள்?”
என்று கேட்க,எனக்கு ஒன்றும் புரியவில்லை 390 ரூபாய்க்கா பிரியாணி வாங்குகிறான்? நான் அவனை கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டிருந்தேன்,அந்த கடையின் ஓனரோ சிரித்துக் கொண்டே
“கண்ணா!இந்த காசுக்கு ஏழு பிரியாணி கிட்ட வரும்”
“ஓ ஏழு வருதா?, சரி அப்போ ஏழு பிரியாணி பார்சல் பண்ணிடுங்க அங்கிள்”
“சரி பார்சல் பண்ணிடுறேன், இந்த பார்சல் யாருக்காக?”
என்று கேட்டார் அதற்கு அவனோ என்னை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு அவரின் காதில் சென்று ஏதோ கூறினான், கூறியதும் அவர் நான் சொல்லமாட்டேன் என்பது போல் வாயில் விரலை வைத்து அமைதியாக இருந்துக்கொண்டார்,பார்சலும் ரெடியானது கூடவே தண்ணீர் பாட்டிலும் வைத்தார்கள்,தண்ணீர் பாட்டிலுக்கான காசை என்னை விட்டு கொடுக்கச் சொல்லிவிட்டு ஏழு பொட்டலங்கள் அடங்கிய பார்சலை வாங்கிக்கொண்டு எனது வண்டிக்கருகில் நின்றுக்கொண்டான்.
“இப்பவாவது சொல்லுப்பா உன்னோட சஸ்பென்ஸ் என்னால தாங்க முடியல”
என்று அவனிடம் காலில் விழாத குறையாக கேட்டேன், அதற்கு அவனோ ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு சற்று தொலைவில் பிளாட்பார்ம் ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் அருகில் சென்று கவரில் இருந்து ஒரு பிரியாணி பொட்டலத்தையும், தண்ணீர் பாட்டிலையும் எடுத்து
“இந்தாங்க அங்கிள் சாப்பிடுங்க!”
என்று கையில் கொடுத்தான் நன்றியுடன் வாங்கிய அவர் பேச முடியாத காரணத்தால் சைகை மொழியில் அவனுக்கு தனது நன்றியை தெரிவித்தார், பிரியாணி பொட்டலத்தை திறந்து சாப்பிட தொடங்கியவரின் விழியின் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்திருந்தது, பிறகு அவருக்கு ‘பைபை’ சொல்லிவிட்டு என் அருகில் வந்தான்.
“எதுக்கு இந்த உண்டியலில் ரூபாயை சேமிக்கிற சேமிக்கிறன்னு கேட்டுக் கிட்டேயிருப்பியே, இதுக்கு தான் இந்த ரோட்டிலிருக்கிற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தர்மம் எடுப்பவர்களுக்கு உதவி செய்யனும்ங்கிறதுக்காகதான் இந்த மாதிரி உண்டியலில் கொஞ்சம் கொஞ்சமா காசு சேத்துக்கிட்டிருந்தேன், அன்னைக்கு நம்ம சிக்னல்ல நின்னுக்கிட்டிருக்கும்போது பிளாட்பார்ம்ல படுத்திருந்த ஒரு பிச்சைக்காரர் சோறு தண்ணி கிடைக்காம இறந்து கிடந்தார்லப்பா?அவர் பாடியை கூட போலீஸ்காரங்கதான எடுத்தாங்க?அவரை மாதிரி இன்னும் எவ்வளவோ பேர் சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுவாங்க அவங்களுக்கு இவரை மாதிரி நிலைமை வந்துடக்கூடாதுன்னு நினைச்சேன் அதனால தான் இந்த மாதிரி ஒரு உண்டியலை வாங்கி அதில் இவங்களுக்கு உதவி செய்யலாம்னு நான் காசு சேர்க்க ஆரம்பிச்சேன்ப்பா”
என்று அவன் சொன்ன பிறகுதான் எனக்கு அந்த சிக்னலில் நடந்த சம்பவமே ஞாபகத்துக்கு வந்தது, நான் கூட அந்த பிச்சைக்காரரின் நிலைமையை பார்த்து உச்சிக்கொட்டிவிட்டு எனது வேலையை கவனிக்க சென்றுவிட்டேன், ஆனால் நான்காம் வகுப்பு படிக்கின்ற இந்த சின்னப்பையனுக்கு இவரைப் போல் வேறு யாரும் பசியால் இறக்கக்கூடாது என்று தனியாக ஒரு உண்டியலை வாங்கி அதில் காசு சேர்த்து வருகிறான், ஆனால் நானோ இதுபோல் பிளாட்பார்மில் கஷ்டப்படும் மனிதர்களை பார்த்து ‘பாவம்!ஏன்தான் ஆண்டவன் இப்படி பண்றானோ’என்று புலம்பிக்கொண்டு சென்றுவிடுகிறேன்,நினைத்திருந்தால் நானும் ரோட்டின் பிளாட்பார்மில் படுத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தோ அல்லது ஏதோ ஒரு உதவியை செய்திருக்கலாம் ஆனால் ஏன் செய்யவில்லை,இதுபோல் ஒரு பிரியாணியை என்னால் வாங்கிக் கொடுத்திருக்க முடியும்தானே?அந்தளவிற்கா நான் கஞ்சத்தனமாக மாறிவிட்டேன் அல்லது மனிதத்தன்மை இல்லாதவனாக மாறிவிட்டேனா?
இப்படி என் மனதில் பல எண்ணங்கள் கேள்விகள்,அவனோ எனக்கு முன்னதாக வண்டியில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு
“சீக்கிரம் வாங்கப்பா,மத்தவங்களுக்கெல்லாம் பிரியாணி கொடுக்க வேணாமா?சீக்கிரம் வண்டியை எடுங்க”
என்று அழைத்துக்கொண்டிருந்தான் அவன் அருகில் சென்ற நான் அவன் நெற்றியில் முத்தமிட்டு கட்டி அணைத்துக்கொண்டேன்.