உணவு உடை உறைவிடம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 850
முதற் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. பின்னணியில் பேருந்து நிறுத்தம் போன்ற அமைப்பு . வாட்டசாட்டமான நடுத்தர வயது பெரிய மீசை நபர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். மேடையின் வலப் பக்கத்திலிருந்து ஓர் இளைஞனும் ஒரு நடுத்தர வயது நபரும் வருகிறார்கள்.)
இளைஞன் : வணக்கம் சார்
மீசைக்காரர் : வணக்கம் … என்ன ?
இளைஞன் : என் பேரு ராஜா.. இவுரு எங்க மாமா நடராஜன்.. நாங்க பாரதிநகர் போகணும் பஸ் எப்ப வரும்?
மீசைக்காரர் : ம்ஹும்.. வர்றப்ப வரும்.. ஏதோ விபத்தால வாகன நெரிசலாம் . ஒரு மணி நேரம் ஆகும்ன்னு இப்பதான் ஒரு டூவீலர் காரர் சொல்லிட்டுப் போனாரு
ராஜா : கஜபதி சார்
மீசைக்காரர் : எப்படிய்யா பேரை கரக்ட்டா சொல்லிட்டே ..
ராஜா : குன்சா அடிச்சேன்
கஜபதி : சரி நீ எதுக்கு இப்ப பாரதி நகர் போகணும் ?
ராஜா : அது ஒரு பெரிய கதை சார்
கஜபதி : அப்படின்னா வேணாம் . அதுக்குள்ள பாரதி நகர் போற பஸ் வந்திடும் … யோவ் எங்கேய்யா ஒங்க மாமாவ காணோம் …
ராஜா : அவருக்கு பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை டீ குடிக்கணும் .. தம் அடிக்கணும் … என் கதையை சுருக்கமா சொல்றேன் ..
கஜபதி : பஸ் வேற வரலை சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டே சரி சொல்லு
ராஜா : மல்லிகை நகர்ல எங்க வீடு . எங்க தாத்தா , எங்க அப்பா , மாமா நான் எல்லாம் ஒண்ணா இருக்கோம்
கஜபதி : இவுரு எப்படி மாமா … தாய் மாமனா ?
ராஜா : இல்ல சார் இடையில பேசினா எனக்கு ப்ளோ போயிடும் ..
கஜபதி : சரி குறுக்கிடல மேல சொல்லு
ராஜா : எங்க தாத்தா பெரிய அதிகாரியா இருந்தவரு … நிறைய சம்பளம் வாங்கினவரு..
கஜபதி : பென்சன் வருமே
ராஜா : ஆமாம் அதனால தான் எங்க அப்பா , எங்க வீட்டு மாப்பிள்ளையான எங்க மாமா.. நான் யாரும் வேலைக்கு போகலை
கஜபதி : இத்தனை பேருக்கு உட்கார வெச்சு உணவு உடை உறைவிடம் கொடுக்கிற ஒங்க தாத்தா சோமசுந்தரம் சாரைப் பாராட்டணும்யா ..
ராஜா : எப்படி சார் எங்க தாத்தா பேரை கரக்ட்டா சொல்லிட்டிங்க
கஜபதி : எல்லாம் ஒரு யூகம்தான்
ராஜா : எங்க அப்பா சொன்ன பேச்சு கேட்காம ஊதாரியா இருக்காருன்னு எங்க அம்மா , எங்க அப்பாவோட இருக்க மாட்டேன்னு வீட்டை விட்டுப் போயிட்டாங்க
எங்க தாத்தா , எங்க அக்கா கண்மணி , காதலிக்கறான்னு தெரிஞ்சு அவங்க கல்யாணத்தை நடத்தி வெச்சாரு …. அவருதான் நடராஜன் எங்க அக்கா புருசன் . கல்யாணம் முடிஞ்சதும் அவரு எங்க அக்காவை அவங்க வீட்டுக்கும் கூட்டிகிட்டு போகலை . தனிக்குடித்தனமாவும் போகலை . உங்க வீட்லயே இருந்துடறேன்னு எங்க வீட்டுக்கே வந்துட்டாரு .
கஜபதி : பலே ஆளுதான் நல்ல மாப்பிள்ளையைத் தான் ஒங்க அக்காவுக்கு பிடிச்சிருக்கீங்க
ராஜா : இவுரும் பொறுப்பானவரா இல்லாம வேலைவெட்டி பார்க்காம இருந்தாரு … மாமனோரோட சீட்டாடிகிட்டு தண்ணி அடிச்சுகிட்டு பொழுதை ஓட்டினாரு … சொல்லி சொல்லி பார்த்த எங்க அக்கா கணமணி
கஜபதி : அதுவும் சொந்த வீட்டை விட்டு வெளியேறிடுச்சு…
ராஜா : கரெக்ட்டா சொல்லிட்டிங்க சார்
கஜபதி : ஒங்க பாட்டியாவது இருக்காங்களா?
ராஜா : அவங்க போய்ட்டாங்க..
கஜபதி : அவங்களும் கோபிச்சுகிட்டு போய்ட்டாங்களா? ஓ காலமாகிட்டாங்களா?
ராஜா : யாருக்கும் பெண்டாட்டியோட அனுசரிச்சு குடும்பம் நடத்த தெரியலை ன்னு எங்க தாத்தா , எங்க மாமாகிட்டயும் அப்பா கிட்டயும் சத்தம் போட்டாரு
கஜபதி : ஒங்க தாத்தா உனக்கு கல்யாணம் பண்ணனும்னு இறங்கலியா?
ராஜா : அவரோட நண்பர்கள் வட்டாரத்தில் அவங்களோட பேத்திகளை பொண்ணு கேட்டுப் பார்த்தாரு
கஜபதி : ஒங்க வீட்டுக்கும் பெண் பாலாருக்கும் தான் ராசி இல்லையே
ராஜா : அதனால தான் யாரும் பொண்ணு கொடுக்க முன் வரலை மேலும்
கஜபதி : நீயும் ஒண்ணும் சம்பாதிக்க ஆரம்பிக்கல
ராஜா : எங்க தாத்தாவுக்கு நாவுக்கு ருசியா சாப்பாடு வேணும்..
கஜபதி : அதுக்காக தாத்தா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரா? இருக்காது . ஒங்க வீடுதான் பெண்களை தங்க விட மாட்டேங்குதே..
ராஜா : அதுக்காகத்தான் எங்க தாத்தா உஷான்னு ஒரு அக்காவை சமையலுக்காக அப்பாயின்ட் பண்ணாரு . அவங்களும் நல்லா சமைச்சாங்க . எங்க தாத்தாவுக்கு அவங்க பக்குவம் பிடிச்சுப் போச்சு…
கஜபதி : அப்புறம் என்ன சாப்பாட்டுக்கு தி்ண்டாட்டம் இல்லாம ஒங்க நாலு பேர் வண்டி ஓடுது இல்ல
ராஜா : நீங்க சொல்றா மாதிரி நல்லா தான் ஓடிகிட்டு இருந்துச்சு..(நடராஜன் வருகிறான்) இதோ வர்றானே எங்க மாமா… அக்கா புருசன்..
கஜபதி : மரியாதை கொடுய்யா..
ராஜா : சரி வர்றாரே இவுரு பண்ண கூத்துல உஷா அக்காவும் போங்கடா நீங்களும் ஒங்க வேலையும்ன்னு போயிடுச்சு
கஜபதி : அது அக்காதானா… அவ்வை சண்முகி மாதிரி பொம்பள வேசத்துல இருக்கிற ஆம்பிளையா இருக்க போவுது ..
ராஜா : பெண்மணி தான் சார்
கஜபதி : அப்படி என்ன பண்ணாரு ஒங்க மாமா … அவங்க கையை பிடிச்சு இழுத்துட்டாரா ?
நடராஜன் : அதெல்லாம் பண்ணல ஐயா .. உறவுக்காரங்க கல்யாணத்துக்கு போகணும் னு அந்த அம்மா ஒரு நாள் லீவு எடுத்துச்சு. தாத்தாவும் அவரோட ப்ரெண்டோட எண்பது விழாவுக்கு போயிட்டாரு. நான் சமையல்ல இறங்கினேன் .
ராஜா : சும்மா இல்ல சார்… ஊர்வன பறப்பன கடல்ல வாழ்வது எல்லாத்தையும் கொண்டு வந்து சமையல் பண்ணாரு..
கஜபதி : என்ன தடபுடலா அசைவ உணவு சமைச்சிருக்காரு அதானல என்ன ?
நடராஜன் : அதானே நல்லா கேளுங்க ஐயா
ராஜா : சமையலறையில போட்டது போட்டபடி வெச்சிட்டு எங்க அப்பவோட சேர்ந்து தண்ணி அடிச்சிட்டு போய் தூங்கிட்டாரு…
கஜபதி : ஏன்யா … இவங்க சிகரெட் தண்ணி எல்லாத்துக்கும் ஒங்க தாத்தா ஸ்பான்சர் பண்ணறாரா?
ராஜா : வீட்ல என்னென்ன வீண் பொருட்கள் , நியுஸ் பேப்பர் இருக்கோ அதெல்லாம் விலைக்கு போட்டு அவங்க பாக்கெட் மணிக்கு தேத்திப்பாங்க … கேளுங்க .. மறு நாள் வேலைக்கு வந்த உஷா அக்கா , களேபரமா இருந்த சமையலறையை பார்த்துட்டு தலை சுத்திப் போய் இனிமே நான் வேலைக்கே வர மாட்டேன்னு எங்க தாத்தா கிட்ட சொல்லிட்டு அந்த மாச சம்பளத்தை கூட வாங்காம போய்ட்டாங்க … கிச்சனை நான்தான் ஒழுங்குப்படுத்தினேன் .
நடராஜன் : ஒரு வாரமா நாங்க மூணு பேரும் சேர்ந்து சமைக்கறோம் . பாத்திரம் தேய்க்க வந்த அம்மாவும் வேலைய விட்டு போய்ட்டதால நாங்க தான் பாத்திரமும் தேய்க்கிறோம் .
கஜபதி : மூணு பேருக்கும் தான் வேலை வேலைன்னு ஓடற வேலை இல்லையே… நீங்களே தொடர்ந்து சமைக்க வேண்டியதுதானே ஒங்க தாத்தாவுக்கும் சமையலருக்கு கொடுக்கிற சம்பள பணம் மிச்சமாகுமே…
ராஜா : எங்க தாத்தா நாங்க சமைச்ச உணவு வகைகளை நாய் கூட சாப்பிடாது்னு சொல்லிட்டாரு எங்க மூணு பேருக்கும் அசைன்மென்ட கொடுத்திருக்காரு …
கஜபதி : கேட்டரிங்ல கிராஷ் கோர்ஸ் இருந்தா சேரணுமா?
ராஜா : எங்க அப்பா , எங்க அம்மாவை தேடி கண்டுபிடிச்சு அவங்க கால்ல விழுந்து வீட்டுக்கு அழைச்சுகிட்டு வரணும்..
நடராஜன் : எனக்கும் அதே அசைன்மென்ட் தான் நான் என் மனைவி கண்மணிய பார்த்து கெஞ்சி கூத்தாடி வீட்டுக்கு கூட்டிகிட்டு வரணும்
கஜபதி : வாழ்க்கைத் துணைவி கால்ல விழலாம் தப்பு இல்ல..
நடராஜன் : இல்லேன்னா வீட்டுக்கு வரக் கூடாதுன்னு சொல்லிட்டாரு … நான் தனியா போய் தனிக்குடித்தனம் நடத்த முடியுமா?
கஜபதி : ஒண்டியா இருக்க ஒரு ரூம் பார்த்தாலும் அட்வான்ஸ் கொடுக்கணும் வாடகை கொடுக்கணும் உப்பு புளி மிளகா பால் தயிர் அரிசி காய்கறி வாங்க பணம் வேணும் அதுக்கு வேலைக்கு போகணும் ..
நடராஜன் : அதான் ஐயா அதெல்லாம் நெனச்சா பக்ன்னு இருக்குங்க ஐயா .. சரி நான் வரேன் சார் ….. என் மனைவி வேலை செய்யற எக்ஸ்போர்ட் கம்பெனி பக்கத்துல தான் இருக்கு.. நான் வரேன் ஐயா… வரேன்பா ராஜா
(நடராஜன் போகிறான்)
கஜபதி : உனக்கு என்ன பணி கொடுத்திருக்காரு ஒங்க பாட்டானார்?
ராஜா : அம்மாவும் அக்காவும் அப்பாவோடயும் மாமாவோடயும் வர மாட்டாங்க .. அதனால நீ உஷா மேடம் கால்ல விழுந்து அவங்கள கன்வின்ஸ் பண்ணி வேலைக்கு அழைச்சுகிட்டு வா ன்னு அசைன்மென்ட் கொடுத்திருக்காரு … அவங்க முகவரி இல்ல … பாரதி நகர்ல இருக்காங்கன்னுதான் தெரியும் … அவங்க போன் நம்பரும் இல்ல எப்படி கண்டுபிடிக்கப் போறேன்னு தெரியல சார்..
கஜபதி : தம்பி அதோ பாரதி நகர் பஸ் வருது… வா… பாரதி நகர்ல இறங்கி விசாரிச்சு பாரு …
(இருவரும் செல்கிறார்கள்)
(திரை)
இரண்டாம் காட்சி
( பூங்கா போன்ற பின்னணி . காலை நேரம் . பருமனான தேகம் கொண்ட இளமை மாறாத தோற்றம் உடைய எளிய சேலை அணிந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி திண்ணையில் அமர்ந்து இருக்கிறார் . அவர் அருகில் சூரிதார் அணிந்த ஒடிசலான , அழகான இளைஞி வருகிறாள் . )
இளைஞி : வணக்கம் குட் மார்னிங் வசந்தா மேம்..
வசந்தா : அட கண்மணி குட் மார்னிங் … எக்ஸ்போர்ட் கம்பெனில நீ மேமேஜரா கல்கறேன்னு கேள்விப்பட்டேன் …. பெண் ஊழியர்களுக்காக கருப்பை வாய் புற்று நோய் பரிசோதனை முகாம் எல்லாம் நடத்தினியாமே …. வாழ்த்துக்கள் .
கண்மணி : தேங்க்ஸ் மேம்
வசந்தா : தாத்தா என்னை வந்து பார்த்தாரு … நானும் உனக்கு கால் பண்ணி பேசணும் நெனச்சேன். வேற வேலைல விட்டுப் போச்சு ..
கண்மணி : (நின்று கொண்டே பேசுகிறாள்) என்ன மேம் தாத்தா என்னை பத்தி கம்ப்ளெயின் பண்ணாரா ?
வசந்தா : சேச்சே உன் மேல கொள்ளை பாசம் ஒங்க தாத்தாவுக்கு .. அவரோட ப்ராப்பர்டிஸ் பிசினெஸ் எல்லாமே ஒன் பேர்ல எழுதி வைக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தாரு..
கண்மணி : என்ன மேம் சொல்றீங்க … ஒரு வருசமா ஆச்சு நான் வீட்டை வெளியே வந்து … என் கிட்ட போன்ல கூட பேசலை … அவரு …
வசந்தா : நீயும் தான் அவர் கிட்ட பேசலை .. வீட்டு மாப்பிள்ளையா வந்த புருசன் சரியில்லேன்னு நீ சொந்த வீட்டை விட்டு வெளியேறினே … தாத்தா மேல என்ன கோபம் ? நீ அவர்க்கிட்ட பேசணுமா ? அவர் ஒன்கிட்ட பேசணுமா ? வக்கீல் பேசினா நம்பிக்கை வர மாட்டேங்குதா ? என் கூட வீட்டுக்கு வா .. டாகுமென்ட் ட்ராப்ட் வீட்லதான் வெச்சிருக்கேன். …
நீ அவரைப் பார்த்துக்றதுக்காகவாவது வீட்லேயே இருந்துருக்கலாம் … நீ ஒரு பக்கம் ஒங்க அம்மா ஒரு பக்கம் …. தாத்தாவுக்கு கஷ்டமாதானே இருக்கும் … வீட்டுப் பெண்மணிகள் இல்லாத வீடு வீடா இருக்காதே … ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு சொல்வாங்க .. நீ காதலிச்சு கட்டிகிட்ட ஒன் புருசனையும் ஒங்க அம்மா ஒங்க அப்பாவையும் வழிக்கு கொண்டு வந்திருக்கணும் …
சரி பர்சனல் விசயம் நான் பேசக் கூடாது …
கண்மணி : பேசக் கூடாதுன்னு பேசிட்டிங்களே … எங்க குடும்ப கதை தான் உங்களுக்கு தெரியுமே ….
வசந்தா : சரி … நான் கார்ல தான் வந்திருக்கேன் .. எங்க வீட்டுக்கு வர்றியா பிரேக் பாஸ்ட்டுக்கு ..
கண்மணி : ஒரு லீவு நாள்ல வரேன் மேம் … வழில தான் நான் இருக்கிற வுமன்ஸ் ஹாஸ்ட்டல் இருக்கு என்னை விட்டுடுங்க
வசந்தா : சரி வா (எழுந்து நிற்கிறாள்) (இருவரும் செல்கிறார்கள்)
(காட்சி மாற்றம்)
(பூங்காவுக்கு வெளியே வசந்தாவும் கண்மணியும் நிற்கிறார்கள்)
வசந்தா : கண்மணி அங்க எதிரே பார்த்தியா விசாலாட்சி சிறுதானிய உணவகம் ன்னு புதுசா ஆம்பிச்சு இருக்காங்க..
கண்மணி : அதுக்கு என்ன மேம் ?
வசந்தா : அதுக்கு என்னவா ? அங்க யார் இருக்காங்க பாரு ஒங்க அம்மா பேர்ல ஒங்க அப்பாவும் தம்பியும் ஒன் புருசனும் நடத்தறாங்க …. ஒங்க தாத்தா மூணு பேரையும் வெளியில அனுப்பிட்டாரு … எங்க ஹஸ்பெண்ட் … தான் அவங்களுக்கு தங்க ஒண்டு குடித்தன போர்சன் பார்த்து கொடுத்து இந்த பிசினெஸ் நடத்தவும் உதவி செஞ்சு இருக்காரு … போய் பார்க்கறியா அவங்கள ?
கண்மணி : இப்ப வேணாம் மேம் எவ்வளவு நாள் இதுல தாக்கு பிடிக்கறாங்கன்னு பார்ப்போம் …
வசந்தா : பொறுப்பு இல்லாம இருந்தாலும் தாத்தாவுக்கு வீட்ல பேச்சுத் துணையா இந்த மூணு பேரும் இருந்தாங்க திட்டு வாங்கறதுக்காகவாவது … இப்ப ஒங்க தாத்தா ஒண்டியா ஆயிட்டாரு … சமையல் வேலைக்கும் ஆளே கிடைக்காம வரவழைச்சு சாப்பிடவும் பிடிக்காம அவரே சமைச்சு சாப்பிட்டுகிட்டு இருக்கேன்னாரு ஒங்க தாத்தா …
கண்மணி : போங்க மேம் இந்த மேட்டரை தானே நீங்க முதல்ல சொல்லி இருக்கணும் …
வசந்தா : சொல்லி இருந்தா மட்டும் என்ன பண்ணி இருப்பே ?
கண்மணி : ஹாஸ்ட்டல் ரூமை காலி பண்ணிட்டு வீட்டுக்கு போறேன் மேம் .. நான் இருக்கும் போது தாத்தா ஏன் நாதியத்தவரா இருக்கணும் ..
வரேன் மேம் நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கறேன் ….
வசந்தா : அட இதைப் பாரேன் .. நீ வீட்டுக்கு போய்ட்டேன்னு தெரிஞ்சா ஒங்க அம்மாவும் ஒங்க வீட்டுக்கு வந்திடுவாங்க …. ஆம்பிளைங்கள ரொம்ப நாள் தவிக்க விடாதீங்க … இன்ட்டர் டிபன்டன்ஸ்தான் வாழ்க்கை .. வாழ்த்துக்கள் ..
கண்மணி : தேங்க்ஸ் மேம் … (கண்மணி விரைந்து செல்கிறாள். வசந்தா அவளை வியந்து பார்க்கிறார்.)
(நிறைந்தது)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
