இவளுக்கும் ஒரு புருஷன் இருப்பான் என்றது
கதையாசிரியர்: இராயர்-அப்பாஜி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 79
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராயரும் அப்பாச்சியும் ஒருநாள் சாயங்காலம் ஒரு வீதியிலே வேடிக்கையாகப் போகையில் ஒரு திண்ணையின் மேலே ஒருத்தி குரூபியாகவும் சமீபத்து வந்தவரெல்லாம் அசங்கியப்படத்தக்க கெட்ட நாற்றமுடையவளாகியும் பூரண கெற்பமுடையவளாகியும் படுத்துக்கொண்டு இருக்கிறதை இராயர் கண்டு, “இவளையும் ஒருவன் சேருவானா?” என்று கேட்டார்.
அதற்கு அப்பாச்சி, “இவளுக்கும் ஒரு புருஷன் இருப்பான்” என்று சொன்னான். “அவன் எப்படிப்பட்டவனோ அவனைப்பார்க்க எனக்கு இச்சையுண்டாயிருக்குது” என்று சொன்னார்.
அப்புறம் கொஞ்சதூரம் போகையில் நல்ல வேஷ்ட்டியும் தலைப்பாகையும் சொக்காயும் உத்தரியமும் உடையவனாகக் கையிலே வெற்றிலை பாக்கு வைத்துக்கொண்டு வருகிற ஒருவன் கையிலிருந்த உலர்ந்த சுண்ணாம்புக்கு ஈரமுண்டாக்கத் தெருச் சாக்கடை நீரை அருவருப்பில்லாமல் அள்ளிவிட்டுக் கொண்டான்.
அதை அப்பாச்சி பார்த்துச், “சுவாமி இவன்தான் அவளுக்கு நாயகம்” என்றான்.
அதைச் சோதிக்க அவனுக்குப் பின்னாலே திரும்பி வந்தார்கள். அவன் சரேலென்று போய் அவள் பக்கத்திலே உட்கார்ந்து அவளுக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்துச் சரசம் செய்துகொண்டிருந்தான்.
அதைக் கண்டு இராயர் அப்பாச்சியின் புத்தி நுட்பத்தை மிகவும் மெச்சினார்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை : மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க... |
