இழப்பு
(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எவ்வளவு நேரந்தான் இப்படி அழுது கொண்டிருக்கப் போகிறாய்? நீ அழுவதைப் பார்த்ததும் குழுந்தைகளும் ஒப்பாரி வைக்க ஆரம்பிக்குதுகள்…” – காளிமுத்து மனைவியைச் சமாதானப் படுத்தும் வகை தெரியாமல் தவித்தார்.
“பையனாய்… இருந்தாக் கூடப் பரவாயில்லீங்க… பதினெட்டு வயசுப் பெண்ணாச்சே, யார் கையில் அகப்பட்டாளோ! நாம கேள்விப்படுவதைப் பார்க்க என் பெண்ணை நான் மீண்டும் உயிரோடு காண்பேன் என்கிற நம்பிக்கையே போச்சுங்க. பெற்ற வயிறாச்சே! பற்றி எரியுதுங்க” மறுபடியும் அவளது புலம்பல் ஆரம்பிக்கவே தன் இரண்டாவது பையனைக் கூப்பிட்டுக் காதில் ஏதோ கூறினார் காளிமுத்து.
ஏழெட்டு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த பையனின் கையில் நித்திரைக்கான மாத்திரையொன்றிருந்தது.
“இந்த மாத்திரையைப் போட்டு கொஞ்சம் தண்ணி குடி, சற்று நேரம் நிம்மதியாகத் தூங்கலாம்” என மனைவியின் கையில் அதனைக் கொடுத்தார்.
வேண்டா வெறுப்பாக அதனைப் போட்டு விழுங்கினாள் அவர் மனைவி, தேவகி.
இனக்கலவரத்தில் கை-கால்களையிழந்து தீக்காயங்களுடன் வந்தவர்களில் பல பேர் இரத்மலானை விமான நிலையக் கட்டிடத்தில் சேர்ந்திருந்தார்கள். அதுமட்டுமல்ல… கலுபோவில மருத்துவமனைக்குள்ளே புகுந்து நோயாளிகளாகப் படுத்திருந்த தமிழர்களைத் தாக்கத் தொடங்கியதும் மருத்துவமனையை விட்டுச் சிதறியோடிய தமிழ் நோயாளிகளும் அங்கே தான் வந்து தஞ்சம் புகுந்திருந்தார்கள்.
அவர்களது அதிர்ஷ்டம் தான்… அகதிகளாக வந்து அந்த நிலையத்தில் அடைக்கலமானவர்களில் பல டாக்டர்களும் நர்சுகளும் மருத்துவமனைத் தொழிலாளர்களும் இருந்தனர். அதனால் ‘ரெட்குறொஸ்’ தரும் மருந்துகளை வைத்து நோயாளிகளுக்குச் சிகிச்சை நடைபெற்று வந்தது..
அந்த டாக்டர்களின் ஆலோசனையின்படிதான் இந்த ஏழெட்டு நாட்களாகத் தேவகிக்கு தூக்க மாத்திரை கொடுத்துத் தூங்க வைக்கிறார் காளிமுத்து. இல்லா விட்டால் அவள் இரவு பகலாகப் புத்தி பேதலித்தவள் போல் புலம்பிய வண்ணமேயிருந்திருப்பாள்.
தேவகியைக் கண்டித்து, தூக்க மாத்திரையைக் கொடுத்து அடக்கி விட்டாரே தவிர, நிர்மலாவை நினைத்து பொங்கியெழும் தன் இதயக்குமுறலை எங்கே கொட்டுவதெனத் தெரியாமல் தவித்தார்.
“அப்பா சாப்பிட்டாச்சா? வெந்நீர் போட்டிருக்கேன்; குளித்து முடித்து விடுங்களப்பா! எனக்கு இந்தக் கலர் பிடிக்கலேப்பா! தம்பிக்கு டியூசன் வைக்க வேண்டுமப்பா” என நொடிக்கொரு அப்பா போடும் நிம்மியின் அழகு முகம் அவரை நிம்மதியாக உட்கார்ந்திருக்க விட வில்லை.
கடந்த ஆண்டு அவரது மூத்த மகன் ரவியை இந்தியாவுக்கு அனுப்பி விட வேண்டுமென்கிற தன் முடிவைக் குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறிய போது எல்லோரும் ஹாய் ஊய் எனக் குதித்தார்கள்.
ஆனால் உண்மையான நிலையைப் புரிந்து கொண்ட நிர்மலா தான் எல்லோரையும் சமாதானப்படுத்தி, அண்ணன் பல சிங்களவர்களைப் பகைத்துக் கொண்டு விட்டார். நண்பர்களாக இருந்தவர்கள் கூட இனக்கலவரத்தால் பகைவர்களாகி விட்டார்கள். பழைய மாதிரியான இனக் கலவரம் இன்னோர் தடவை ஏற்பட்டால் முதலில் ரவியை வெட்டிப் போட்டு விட்டு அவன் குடும்பத்தை மொரட்டு வையிலிருந்து அடித்து விரட்டி விட்டுத்தான் மற்றவைகள் என ஒருவர் இருவரில்லை ஊரிலுள்ள சிங்களவர்கள் அனைவரும் கூட்டு மொத்தமாக முடிவு பண்ணியிருப்பதைத் தெரிந்து கொண்டதிலிருந்து அண்ணாவை எவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்பி விடத் துடிக்கிறார் எனத் தந்தையின் நிலையை விளக்கிக் கூறினாள். ரவியையும் சூழ்நிலையை உணர்ந்து அதற்கு ஒப்புக் கொள்ள வைத்தாள்.
ஆனாலும் வீட்டை விட்டுப் புறப்படும் சமயத்தில் மனங்கலங்கிப்போன ரவி விமான நிலையத்தில் தங்கைகள் மூவரையும் அழைத்து வைத்து “சந்தர்ப்ப சூழ்நிலையால் உங்களை விட்டு நான் பிரிந்து போனாலும் என் நினைவுக ளெல்லாம் உங்களைச் சுற்றியே இருக்கும். இந்தச் சிங்களவர்களால்தான் நான் உங்களை விட்டுப் பிரிந்து போக வேண்டியிருக்கிறது” எனக் குரல் தழுதழுக்கக் கூறிவிட்டு விமானம் ஏறினான்.
நிர்மலா தாயைவிட அழகி. தாய்க்கில்லாத தந்தையின் சுருட்டை முடியும் அவளுக்கு அதிகபட்சப் புள்ளியாக வாய்த்திருந்தது. அதனால் அவளுக்குக் கணவனைத் தேர்ந்தெடுப்பதில் சற்று நிதானத்தை கடைப்பிடித்தார்.
அழகு, படிப்பு, குணம் அத்தனையிலும் சோடை போகாத தன் பெண்ணுக்கு ஏற்ற கணவன் வரவேண்டும் என நினைத்தார்.கண்ணை மூடிக்கொண்டு எவன் கையிலும் அவளைப் பிடித்துக் கொடுத்து தன் கடமையை நிறைவேற்றி விட அவர் விரும்பவில்லை
மகளின் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களில் லயித்தபடி சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் காளிமுத்து. யாரோ தட தடவென வாசலில் பலமாக தட்டும் ஒலிகேட்டு, தன் கடைசிப் பையள் ரங்குவை அழைத்து யாரெனப் பார்க்கும்படி கூறினார்.
ரங்கு கேட்டைத் திறந்து விட்டதும் சுருட்டுக் கடை முதலாளியின் வேலைக்காரப் பையன் மூச்சிரைக்க பதற்றத்துடன் ஓடி வந்து, “ஐயா கொழும்பெல்லாம் பெரிய கலவரம். இங்கேயும் பாணந்துறையில் தமிழர்களெல்லாம் எரியுது. பாணந்துறை முருகன் கோவிலுக்க புகுந்து நம்ம கைலாயநாதக் குருக்களை முருகன் விக்கிரகத்தோட வைத்தே ஒரே வெட்டாக வெட்டிப்போட்டாங்களாம். நம்ம ஐயாவுக்கு பாணந்துறை போலீசில் இருந்த தமிழ் ஐயா ஒருவர் ரகசியமாய் “போன்” போட்டு சொன்னார். நம்ம முதலாளி கடையை மூடிவிட்டு ஒரு முஸ்லிம் வீட்டில் போய் ஒளிந்திருக்கிறார். உங்களுக்கும் போய் இதனைச் சொல்லி விட்டு என்னையும் பதுகாப்பான இடத்துக்கு ஓடி விடச் சொன்னார். நான் ரொட்டிக்கடை நானா வீட்டுக்கு ஓடப் போகிறேன்” என்றான்.
இதற்கிடையே சமையற்கட்டில் இருந்த அவர் மனைவி, குழந்தைகள் அத்தனை பேரும் அவரைச் சுற்றி நின்றனர். எல்லோர் முகத்திலும் பீதி.
“எழுபத்தி ஏழிலும் இப்படி ஆரம்பித்தான்கள். தமிழனைக் கொல்வது சிங்களவனுக்கு விளையாட்டாகி விட்டது” நிர்மலா தனக்குள் நினைத்ததை வாய்விட்டுச் சொன்னாள்.
“சமையலெல்லாம் அப்படியப்படியே இருக்கட்டும். இந்த இடத்திலுள்ள சிங்களவர்கள் மிக மோசமானவர்கள். இங்கிருப்பது ஆபத்து. காசிம் வீட்டுக்குப் போகலாம் புறப்படுங்கள்” என அவசரமாகத் தனது தோளிலிருந்த துண்டை எடுத்தெறிந்துவிட்டு, ஜிப்பாவை மாட்டினார்.
நிர்மலா அவசரம், அவசரமாகத் தான் போட்டிருந்த நீண்ட கவுனுக்கு மேல் கையில் கிடைத்த சேலையொன்றைச் சுற்றினாள். அதற்குள்ளாக –
“ஜெயவேவா… ஜெய… வே… வா.. ஜெய.. வேவா ‘ என்ற பெருங் கோஷமொன்று ‘கேட்’டண்டை கேட்டது.
காளிமுத்துவினால் தனித்து நின்று என்ன செய்ய முடியும்…
பிள்ளைகளைப் பின்புறமாக ஓடும்படி கூறிக்கொண்டே தானும் ஓடினார்.
அப்போது காளிமுத்துவின் இரும்பு கேட்டில் இடி விழுந்தது போல் பெரிய சத்தம். தொடர்ந்து ஓ…வெனத் திறந்த கேட்டுக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் தீப்பந்தங்களுடனும், பெற்றோல் டின்களுடனும் ஓடிவருவதைக் கண்டதும்…
காளிமுத்துவுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை.
பின்னால் ஆறடி உயரத்திற்கு கண்ணாடித் துண்டுகள் பதித்த மதில்.
ஒரு கணப்பொழுதில் ஏதோ தீர்மானத்திற்கு வந்தவராய் மதிலோடு ஒட்டி நின்ற கொய்யா மரத்தில் விறுவிறுவென ஏறினார், காளிமுத்து.
சேலையை இழுத்துச் செருகியபடி கீழே வந்துநின்ற நிர்மலா, தம்பி தங்கைகளை கைலாகு கொடுத்து ஒவ்வொருவராக மேலே ஏற்றவும் – காளிமுத்து ஒற்றைக் கையால் அவர்களைத் தாங்கி மதிலுக்கு வெளியே ‘தொப் ‘தொப்’ பெனப்போட்டார்.
பின்னால் இருண்டு தென்னந் தோப்பு.
கடைசியாக பயத்தில் நடு நடுங்கிக் கொண்டு நின்ற தாயாரை “ஏறும்மா ஏறு”என அவசரப்படுத்திய நிர்மலா தாயாரை ஏற்றிவிட்ட சமயம்…
“பித்திய உட தெமலை பணினவா… அள்ளபாங்! அள்ளபாங்!! அறங்கினி …அத்துளதாண்ட கெவால்த் தெக்க… கினிகால மராண்ட…”
“மதில்மேல் ஏறிக்குதிக்கிறார்கள்…பிடி, பிடி. பிடித்து எரியற நெருப்பில் போடு. சேர்ந்து எரியட்டும், செத்து ஒழியட்டும்” எனச் சிங்களத்தில் கூக்குரலிட்ட வண்ணம் பலர் ஓடிவரவே ஒன்றும் செய்வதறியாத நிர்மலா…
“அப்பா நீங்களும் குதியுங்கோ. நான் ஏறிக் குதிக்கிறேன். நீங்க சீக்கிரமாக் குதியுங்கப்பா” எனக் கதறியபடி கொய்யா மரத்தில் கால் வைத்தாள்.
மேலே இரண்டாவது காலையும் வைத்துவிட்டாள். மறுபடியும் இடது காலைத் தூக்கி இன்னோர் கிளையை எட்டு முன்னர் அவசரமாகச் சுற்றிய சேலைத்தலைப்பு அவிழ்ந்து – மரக்கிளையில் சிக்கியது.
அதைக் குனிந்து எடுப்பதா… அல்லது சேலையை உருவி விட்டுவிட்டுக் கவுனுடன் வெளியே குதிப்பதா…? எனத் தீர்மானம் பண்ணும் ஒரு கணத்துக்குள்…
”அடோய், ரவிக்கே நங்கி அள்ளபாங்” என்ற வெறிக் குரல்கள் காதைப் பிளந்தன.
மறுவினாடி “அப்பா… அண்ணா… ரவியண்ணா… ரவி யண்ணா… அப்…பா…ண்ணா…” நிர்மலா பெரும் சத்தத்தில் அலறுவது மதிலுக்கு வெளியே நின்ற காளிமுத்துவுக்குக் கேட்டது.
“நிம்மி… நிம்மி… ஏறு. சீக்கிரமாக ஏறிக்குதி… குதி… குதி…” -வெளியே நின்றபடியே காளிமுத்து தொண்டை கிழியக் கத்தினார்.
“நிம்மியக்கா, அக்கா…க்கா…ஏறு ஏறு, குதி குதி, சீக் கிரமாகக் குதி” – குழந்தைகள் மாறி மாறிக் கூக்குரலிட்டன.
மதிற்சுவரில் ஒரு நிழல் விழுந்தது. “சீக்கிரம் சீக்கிரம், நிம்மி பயப்படாதே குதி” – காளிமுத்து தென்புடன் குரல் கொடுத்தார்.
அடுத்த கணம் இரத்தம் சொட்டச்சொட்ட தகதக வென மினுங்கும் வாளொன்றைப் பிடித்தபடி முரட்டுக்கர மொன்று மதிலைத் தாண்ட முயற்சிப்பது தெரிந்தது.
ஒருவரையொருவர் தரதரவென்று இழுத்தபடி பாய்ந்தோடினார்கள்.
ரோட்டு முகப்புக்குச் சென்று திரும்பிப்பார்த்த காளிமுத்துவின் கண்களுக்கு வீட்டுக்கு மேலே மேகக்கூட்டம் போல் புகைமண்டலம் எழும்புவது தெரிந்தது.
– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.
![]() |
அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக! அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்! இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க... |