இல்லற தெய்வம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2026
பார்வையிட்டோர்: 71 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் பத்மாசனி. அவள் மனத்தில் மோதிக் கொண்டிருந்த எண்ண அலைகள் அவனை ஒரு நிலையில் இருக்க விடவில்லை. மூன்று நாட்களாக மழை அப்பொழுதும் ‘பிசு பிசு’ வென்று தூறிக் கொண்டு தான் இருந்தது. எனினும் அவளது உடல் வேர்த்தது. அடிக்கடி பெருமூச் செறிந்தபடி இருந்தாள். ‘முண்டக்கண்ணித் தாயே! நீதான் காப்பாற்ற வேணும்’. என்று அவள் உள்ளம் பிராத்தனை செய்தபடியேதான் இருந்தது.

இரவு பதினொரு மணி.

திடீரென்று முன்புறத்தில் என்னவோ அரவம் கேட்டது. பத்மாசனி பதறி எழுந்தாள். ‘ஐயோ, எதிர்பார்த்தது நடந்தே விட்டதா?” என்று கணத்தில் துணுக்குற்றாள். ஹரிக்கேன் விளக்கைப் பெரிதாகத் தூண்டி எடுத்துக் கொண்டு பரபரப்புடன் முன்புறம் சென்றாள்.

நல்ல வேளையாக அங்கே அவள் எதிர்பார்த்த விபரீதம் எதுவும் நடைபெறவில்லை. பாலு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். முன் கதவு தாளிட்டபடியே தான் இருந்தது. ஜன்னலின் மேற் பகுதிக் கதவுகள் மட்டும் வழக்கம் போல் திறந்திருந்தன. வெளியே தூற்றலின் சந்தடி தவிர வேறு இல்லை. அந்த அமைதிதான் அவள் பயத்தை மேலும் அதிகரிப்பதாக இருந்தது. நீண்ட பெருமூச்சுடன் அவள் திரும்பினாள்.

மேஜையின் அடியில் அவ்வளவு நேரம் பதுங்கியிருந்த பூனை ‘மியாவ்’ என்று ஒரு குரல் கொடுத்துவிட்டு, ஜன்னல் வழியே தாவிப் பாய்ந்து வெளியே ஓடிற்று. “நீ நாசமாய்ப் போக!” என்று அதை வாயாரச் சபித்தாள் பத்மாசனி. பாலு புரண்டான். பத்மாசனி சட்டென்று அவனிடம் குனிந்தாள். தோளைப் பற்றிக் கொண்டு குலுக்கி அசைத்து அவனை எழுப்பினாள் அவள்.

“உஸ், என்ன பத்மா..?”

“உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. தயவு செய்து உள்ளே வந்து படுத்துக் கொள்ளுங்களேன்….!”

“உனக்கு அறிவில்லையா? எத்தனை முறை சொல்வது, என்னால் அது முடியாது என்று?”

சீறிவிட்டு மறுபுறம் திருப்பிப் படுத்துக் கண்ணை மூடலானான் பாலு.

பத்மாசனி மீளவும் பெருமுச் செறிந்தாள்.ஒன்றுந்தோன்றாமல் சற்று நேரம் திகைத்து நின்றாள்: “தாயே, முண்டக்கண்ணியம்மா! நீதான் காப்பாற்ற வேணும்!”

“பாதி நிசியிலே தீவட்டியுங் கையுமாய் எதற்காக இங்கே வந்து நிற்கிறய் பத்மா. என் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு?”

பத்மாசனி கூடத்தின் உள்ளே போய் விட்டாள்.

‘…ஆனாலும் இவருக்கு இத்தனை பிடிவாதம் வேண்டாம். மற்ற சமயங்களில் மற்ற விஷயங்களில் செய்கிற முரட்டுப் பிடிவாதத்தையே இன்னும் இந்த விஷயத்திலே கடைப் பிடிக்கிறாரே? நடக்கக் கூடாதது, நடந்து விட்டால்…? இன்று ஒரே இரவு. நாளை இந்நேரம் அவர்கள் ரெயிலில் போய்க் கொண்டிருக்கப் போகிறார்கள். மழைதான் பெய்கிறதே? இன்று ஒரு ராத்திரி மட்டும் இங்கே படுத்துக்கொண்டால் என்ன? பிடிவாதம்! அவர்கள் கோழை என்று எண்ணிவிடக் கூடாது: சூரப்புலி என்று எண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற நினைப்பு. அசட்டு நினைப்பு! அந்தப் பாழாய்ப் போன கதவாவது சரியாக இருக்கிறதா? அழுத்தித் தள்ளினால், தாழ்ப்பாள் திறந்து கொள்கிறது. போகிற போக்கில் அப்பாவும் பெண்ணும் ஏதாவது…’ – அவளுடைய உள்ளமும் உடலும் ஒருங்கே குலுங்கின. படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். திகில் நெஞ்சை வாட்டி எடுத்தது. அழுகையும் ஆத்திரமும் குமுறிக் கொண்டு வந்தன. ‘அடித்தாலும் அடிக்கட்டும் என்று அவர் காலடியிலே போய்ப் படுத்துக்கொள்ளலாமா? அதற்குத்தான் அவர் அனுமதிக்க மாட்டேன் என்கிறாரே? தாயே, பரதேவதே!…’

பாவம், அவள் தவித்தாள்….!


மாலை ஐந்து மணிக்கு மகாதேவனும் அவர் பெண் மஹிமாவும் வாடகைக் காரில் வந்து இறங்கினார்கள். அந்த வீட்டில் குடியிருக்கும் ஆபத்சகாயன்தான் ரெயிலடிக்குச் சென்று அவர்களை அழைத்து வந்தார். அப்போது பாலு காரியாலயத்திலிருந்து வந்திருக்க வில்லை. பத்மாசனிக்கு வந்தவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் மஹிமா வெளியே வந்து பத்மாசனியைக் கூர்ந்து நோக்கின போது, அவளது மனம் ஏதேதோ எண்ணமிடலாயிற்று.

பாலு வந்தான். வருகிறபோதே மஹிமா அவன் கண்ணில் பட்டாள். உடனே அவன் முகம் கடுத்தது. படபடவென்று நடந்து தன் அறைக்கு வந்தான். பத்மாசனி பரபரப்புடன் அவனிடம் நடந்தாள். “கமலாவின் வீட்டுக்கு ஒரு கிழவரும் ஒரு பெண்ணும் வந்திருக்கிறார்கள். அந்தப் பெண் வந்தது முதல் ஏதோ கண்காட்சி பார்ப்பது போல் என்னைக் கண் கொட்டாமல் பார்க்கிறாள்….” என்றாள்.

பாலு செயலற்று உட்கார்ந்திருந்தான். முகத்திலே பலவித பாவங்கள். சற்றுப் பொறுத்து மனைவியை நிமிர்ந்து பார்த்தான். பலவந்தமாகச் சிரித்தான். “சின்னக் குழந்தை தன் பொருளை மற்றொரு குழந்தை கைப்பற்றினால் அதைத் திரும்பப் பெற எத்தனையோ முயற்சிகள் செய்யும். ஒன்றும் பலிக்கா விட்டால் கடைசியில் அழும். பெரியவர்கள் மட்டும் என்ன? அதே மாதிரிதான். குழந்தை மாதிரி பலர் அறிய அழ மாட்டார்களே தவிர….!” – அவன் பேசிக் கொண்டே போனான். அவளுக்குச் சகிக்கவில்லை “போதுமே, உங்கள் சிறுகதைப் பாணி” என்று அலுப்புடன் குறுக்கிட்டாள்.

“விஷயத்தைக் கூறுவதற்குள் அவசரப் படுகிறாயே? உன் மனம் தைரியமடைந்து தயாராவதற்குத் தான் இப்படிச் சுற்றி வளைத்துப் பேசுகிறேனே தவிர, சிறுகதைப் பாணியும் இல்லை; நெடுங்கதைப் பாணியும் இல்லை. அந்தப் பெண்ணின் உடைமை உன் வசம் இருக்கிறது. அதனால்….”

பத்மாசனியின் கையில் இருந்த ‘டபராவும் தம்ளரும் தடாலென்று தரையில் விழுந்தன. காப்பி அறை முழுவதிலும் கொட்டிற்று.

“நினைத்தேன்” என்று உதட்டைக் கடித்தாள் அவள். உடலில் தெறித்த திவலைகளைத் துடைத்தபடி “என்ன வென்று நினைத்தாய்?” என வினவினான் பாலு.

“அந்தப் பெண்தான் ஒருவேளை மஹிமாவாக இருக்குமோ என்று தான் நினைத்தேன்…?”

“எதனாலோ?”

“ஒட்டுதலாக இருந்த காலத்திலேதான் கமலா என்னிடமும். ஆபத்சகாயன் உங்களிடமும் சொல்லியிருக்கிறார்களே, மஹிமா தங்களுக்கு எட்டின உறவு என்று. நாலைந்து நாள் முன்பு யாரிடமோ கமலா சொல்லிக் கொண்டிருந்தாள். இரண்டு நாளில் பங்களூரிலிருந்து தன் வீட்டுக்கு விருந்து வரப்போவதாக. இன்று அவர்களுக்குத் தந்தி வந்தது. அவர் ரெயிலடிக்குப் போனார். அந்தப் பெண் என்னை ஊடுருவிப் பார்க்கிற முறையோ என்னவோ போல் இருக்கிறது. இன்னும் என்ன வேணும். நான் ஊகிக்க? கமலாவும் அவள் கணவரும் முன்பெல்லாம் நம்மிடம் ராசியாக இருந்திருந்தால் இவர்கள் வரப்போகிற விஷயத்தை அறிவித்திருப்பார்கள். நாமும் கொஞ்சம் நகர்ந்து கொடுத்திருக்கலாம்.”

“இரு இரு. அடுக்கிக்கொண்டே போகிறாயே? அவர்கள் வருவதற்காக நாம் நகர்ந்து கொடுப்பதா? ஒன்றுமே புரியவில்லையே?”

“ஹம், ஒருநாள், ஒருபொழுது என்றால் உள்ளூரிலேயே எங்காவது போய்த் தங்கி யிருக்கலாம். சில நாள் தங்குவார்கள் என்று தெரிந்தால் லீவு போட்டு விட்டு ஊருக்காவது போய் வரலாம்…”

“எதற்காக அப்படியெல்லாம் செய்வது?”

“நெற்றி முட்டு நேர் முட்டாகச் சந்திக்காமல் இருக்கத்தான்.”

“சந்தித்தால் என்னவாம்? இதோ பார் பத்மா. அவர்கள் கோர்ட்டில் கோரின ஜீவனாம்சத் தொகையை உடனடியாகவே செலுத்தி விட்டேன், கண்ணான நிலத்தை விற்று. அப்புறம் என்ன தொடர்பு இருக்கிறது?”

“உஸ்….ஏன் இரைகிறீர்கள்! புருஷர்களே இப்படித்தான்…. அதிலும் நீங்கள் படு மோசம்!”

“எந்தவிஷயத்தில்…?”

“எதிராளி சொல்வதை வாங்கிக்கொள்ளாமல் படபடப்பதில்.”

“சரி. நீ என்னதான் சொல்கிறாய்? சொல், கேட்கிறேன்.”

“இருங்கள். வேறு காப்பி கலந்து கொண்டு வருகிறேன்.”

“எனக்கு இப்பொழுது காப்பியில் நாட்டம் இல்லை. நீ சொல்.”

“சட்ட முறைமைக்கு நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். அதை ஒரு புறம் ஒதுக்கி விட்டு, மனித உள்ளத்தை – அதிலும் பெண் உள்ளத்தை நினைத்துப் பேச வேண்டும். நான் அதைத் தான் சொன்னேன். ஏன், நீங்களே எடுப்பில் குழந்தைச் சண்டையை உதாரணமாக்கி அதைத் தானே சொல்ல வந்தீர்கள்? என்ன இருந்தாலும், தான் வாழ வேண்டிய இடத்தில் வேறொரு பெண் வாழ, தன் வாழ்வு பாழ்த்து விட்டதே என்று எண்ணும் போது, தன் இடத்தைப் பிடித்துக் கொண்டவளைப் பார்க்கும் போது மனம் குமுறத்தானே செய்யும்?”

“அதற்கு யார் என்ன செய்ய முடியும்? அதற்குரிய புத்தியும் செயலும் அடிநாளில் இருந்திருக்க வேண்டும்.”

“பாவம், பரிதாபமாக இருக்கிறது.”

“எனக்கும்தான்.”

பாலுவின் தொண்டை அடைத்துக் கொண்டது.

“கூடிய வரையில் அழகாகத் தானே இருக்கிறாள்?”

“இல்லையென்று யார் சொன்னது?”

“முகத்தைப் பார்த்தால் குணத்திலும் குறை இராதென்று தோன்றுகிறது.”

“பிறர் பேச்சைக் கேட்டுக் குட்டிச்சுவரானதுதான் குறை.”

“நீங்கள் மனமார அனுதாபப் படுகிறீர்கள் அல்லவா?”

“பரீட்சை செய்கிறாயா, பத்மா?”

“இல்லை, உண்மையாகவே கேட்கிறேன்.”

“அப்படியானால் என் அனுதாப மும் உண்மைதான்.”

“எனக்கு ஒன்று தோன்றுகிறது.”

“சக்களத்தியை அழைத்து கொள்ளலாம் என்றுதானே?”

“அதேதான்.”

“ஏன், அமைதியான வாழ்க்கையில் புயலைக் கிளப்பவா? என் வாழ்க்கைப் புத்தகத்தில் புது அத்தியாயம் தொடங்கவா?”

“அப்படியெல்லாம் எதற்காகச் சொல்கிறீர்கள்?”

“அசடே, உனக்குத் தெரியாது. ‘உங்கள் பெண் என்னோடு இனி வாழட்டும்’ என்று நானே போய் வணங்கிக் கேட்டாலும், பெண்ணின் வாழ்வும் ஆயிற்று – எல்லாம் ஆயிற்று என்று வணங்கிய என்னை சந்தர்ப்பம் வசமாக வாய்த்துக் கொண்டால், கத்தியால் ஒரே குத்தாகக் குத்திப் போட்டுவிடக் கூடியவர் அந்த மகாதேவன்!”

“ஆ!…” என்று வீரிட்டபடி இரு செவிகளையும் பொத்திக் கொண்டாள் பத்மாசனி.

அதே சமயம், “பாலு!” என்று வெளியில் நின்று குரல் கொடுத்தான் அவனது நண்பன் நாகசாமி. பாலு உடை மாற்றிக் கொண்டு அவனோடு வெளியே சென்றான்.


கதைகளை ஏராளமாகப் படித்துக் கற்பனையிலே நன்றாக ஊறிவிட்ட பத்மசானிக்கு அதன் பிறகு வீட்டில் நல்ல இருப்பே கொள்ள வில்லை. மனக்கண் எதிரே ‘பளபள’ வென்ற பட்டாக் கத்தி சுழன்றபடி இருந்தது. அந்நாளில் மெய்ப் பொருள் கண்ட நாயனார் போன்ற பக்தர்களின் கதைகளை வேறு படித்திருந்தாள் அவள். ஆகவே, தன் கணவன் மஹிமாவின் தங்தையின் முன் வணங்குவது போலவும். அவர் அவனைக் குத்தக் கத்தியை ஓங்குவது போலவும் ஒரு காட்சியைக் கற்பனை செய்து கலங்கிச் கண்ணீர் சிந்தியபடி இருந்தாள். அருகே கோயில் கொண்டுள்ள முண்டக்கண்ணி அம்மனை வேண்டிக் கொண்டிருந்தாள்.

பாலு இரவு ஒன்பது மணிக்கு வந்தான். முதலில் மனைவியின் முகத்தைக் கவனிக்கவில்லை. குரல் கரகரத்ததிலிருந்து முகத்தைப் பார்த்தான். முகம் அழுது அழுது விங்கியிருந்தது. கடிந்து கொண்டான். பல பல தைரிய மொழிகளைக் கூறி அவளைத் தேற்றினான். இவ்வளவும் செய்தானே தவிர, அவள் மனம் நிம்மதி பெறத்தக்க முக்கியமான காரியத்தைச் செய்ய மட்டும் பிடிவாதமாக மறுத்து விட்டான்.

அந்தக் காரியம் இதுதாள்.


கொஞ்சங்கூடப் புழுக்கம் பிடிக்காதவன் அவன், அவனுடைய ஜாகை காற்றுக் குறைவுடையது. இரண்டாவது அறையில் காற்றே வராது. மழையும் பனியும் கொட்டினலும் அவன் முன் அறையிலே தான் படுப்பான், கைக் குழந்தைக் காரியான பத்மாசனி அடக்கமாக இரண்டாவது அறையில் படுப்பாள். இன்று ஒருநாள் அந்த வழக்கத்தில் மாறுதல் செய்ய விரும்பினாள் அவள். அவன் இணங்கவில்லை. “போடி, பைத்தியக்காரி! இடறிவிழுந்தால் பிராணன் போய் விடுகிற நிலையில் இருக்கிறார் அந்த மனிதர். வயசான நிலையோடு உடற்கோளாறு வேறு. பிறர் உதவி இன்றி நடமாடக்கூட முடியாத நிலை. நீதான் பார்த்தாயே? அந்தக் கிழவன் என்னைக் கத்தியால் குத்தவே முடியாது. நான் ஏதோ பேச்சுக்குச் சொன்னதைக் கொண்டு நீ அரண்டு விட்டாய். வீண் கவலையை விட்டுவிடு, நிம்மதியாகத் தூங்கு. என் ஜாதகத்தில் எண்பத்தாறு வயசு கெட்டியாகப் போட்டிருக்கிறது.” என்று கிண்டலாகவும் கேலியாகவும் கூறிவிட்டு வழக்கம் போல் முன் அறையிலே படுத்தான். சிறிது நேரத்தில் உறங்கியும் போய்விட்டான். அவளுக்கோ இமையோடு இமை சேரவே இல்லை. தவித்தாள் அவள். தவிப்புக்கு ஏற்ப அந்தப் பூனையின் கலாட்டா வேறு நடந்தது.


“ஐயோ!” என்று அலறி எழுந்தாள் பத்மாசனி. அதே சமயத்தில் முன்புறத்திலிருந்து, “ஆ!” என்ற சத்தம் கேட்டது. ‘ஐயையோ, கனவு நனவாகி விட்டதா?’ என்றெண்ணியபடி விளக்கை எடுத்தாள் அவள். முன்புறத்தில் சந்தடி, அவள் விரைந்தாள். அதற்குள், “பத்மா!” என்று இரண்டு மூன்று முறை கூவி விட்டான் பாலு.

ஆ. அங்கே எத்தகைய கோரமான சம்பவம்! தன் மீது விழுந்த உருவத்தை உதறி விட்டு எழுந்தான் பாலு. அவனுடைய மேனி யெல்லாம் ரத்தம்!

மீண்டும் “ஐயோ!” என்று அலறினான் பதமாசனி. அங்கே மஹிமா அலங்கோலமாய்க் கிடந்தாள், அவளுடைய கழுத்திலே கத்தி! அவளது தகப்பனார் மகாதேவன் அங்கிருந்து தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந்தார். பேய் போலச் சிரித்துக் கொண்டே போனார்.

இதற்குள் சந்தடிகேட்டு விழித்த ஆபத்சகாயனும் கமலாவும் தங்கள் அறையினின்று வெளிப்பட்டு ஓடி வந்தார்கள். “தீர்ந்தான் பயல்: தீர்ந்தான் பாலு!” என்று மெல்ல உருப் போட்டபடி எதிரே வந்து கொண்டிருந்த கிழவரைப் பார்த்ததும் – அவரது சொற்களைக் கேட்டதும் துடித்துப் போய் விட்டான் ஆபத்சகாயன். ஆனால் ரத்த வெள்ளத்தில் மஹிமா அல்லவா மிதந்து கொண்டிருந்தாள்….?

பாலு அவள் உடலை மெல்ல அப்புறம் படுத்தி விட்டு, பாய்ந்திருந்த கத்தியைப் பிடுங்க முயன்றான்.

நொடியில் ஆபத்சகாயன் அனைத்தையும் ஊகித்து உணர்ந்து கொண்டார்.

டாக்டரை அழைத்துவரப் புறப்பட்டான் பாலு. “பாவி மனுஷரே! ஆதி காலத்தில் பெண்ணின் வாழ்வைப் பாழ் செய்தது போதா தென்று அந்திம காலத்தில் அவளது உயிருக்கே உலை வைத்து விட்டீரே….?” என்று போகிற போக்கில், சீறிவிட்டுப் போனான்.

கிழவர் மகாதேவனும் நிலவரத்தை உணர்ந்து கொண்டார் போலும்! என்ன பயன்! அந்த விநாடியிலேயே அவருடைய சித்தம் பேதலித்து விட்டது.

கண்ணீர் சிந்திக் குலுங்கி அழுதபடி அருகே நின்றிருந்த பத்மாசனியைக் கண் திறந்து பார்த்தாள் மஹிமா. ஒரு கை காயத்தைப் பொத்தியிருந்தது; மறு கை அவனை நோக்கி நீண்டது.

“…பத்மா. உன்னைப் பற்றிக் கமலா சொன்னாள். மிகவும் உத்தமமான பெண் என்று. எனக்குச் சந்தோஷம். என் தகப்பனார் இரண்டு முறை அவரைக்கொல்ல முயன்ற போது விழித்திருந்து தடுத்தேன். மூன்றாம் முறையில் சற்றே கண்ணயர்ந்து போனேன். திடுக்கிட்டுக் கண்விழித்து எழுந்து ஓடி வருவதற்குள், அப்பா இங்கே வந்து விட்டார். நான் குறுக்கிடவே, ஆள் நிதானம் தெரியாமல் என்னைத் தாக்கி விட்டார். வயசான காலத்திலே அவருக்கு என்னென்ன இன்னும் அநுபவங்கள் பாக்கியோ?

“பத்மா, நீ பாக்கியசாலி. நானும் ஒரு வகையில் பாக்கியசாலியே. அவர் கைப் பொறி வேண்டும் என்று தவமிருந்தேன். என் தவம் பலித்து விட்டது. அவருடைய காலடியிலேயே உயிரை விடப்போகிறேன். பத்மா, அன்று நான் முட்டாள்; இன்று விவேகி. நம் கணவர் – ஆம். அவர் குழந்தை போன்ற சுபாவம் உடையவர். நீயாவது அவர் மனம் போல் நடந்து கவனித்துக் கொள். நீ என்றென்றும் இல்லற தெய்வமாக விளங்க வேண்டும். அப்பா …ம்.. அப்பாவை நினைத்தால் தான் ஆ… ஐயோ…!”

குரல் வளையை அழுத்தியபடி நெளிந்தாள் அவள். துக்கம் தொண்டையை அடைக்க, “உன் அப்பாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் கவனித்துக் கொள்கிறேன்….” என்றான் பாலு.

டாக்டர் வந்து பார்த்தார். விவரம் விசாரித்து அறிந்தார். சந்தர்ப்பம், சாட்சியங்கள் அனைத்தும், பைத்தியம் பிடித்த மகாதேவனின் செயல் அக்கொலை என்று விளக்கின. டாக்டர் அபிப்பிராயத்தை வெளியிட்டபோது அதைச் செவியேற்ற மஹிமா, “ஆமாம்” என்று கடைசி முறையாகச் சொல்லி, உயிர் நீத்தாள்.

“மஹிமா பரம உத்தமி. சாகு முன் கணவனின் உயிரைக் காப்பாற்றினாள். செத்த பின் தன்னுடைய தகப்பனின் உயிரைக் காப்பாற்றினாள்!”

– 1957-இல் வந்த கதை.

நன்றி: https://s-pasupathy.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *