கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 1,243 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா! இண்டைக்குச் சமையலுக்கு அரிசி இல்லை, கறிச் சரக்குகளும் முடிஞ்சு போச்சு.” 

அடி வளவுக்குள் இருந்து காய்ந்த மூரித்தண்டுகளும் பனை மட்டைக் கங்குகளுமாக விறகு கட்டை சுமந்துகொண்டு வந்து முற்றத்தில் போட்டுவிட்டு திண்ணையில் இளைப்பாறப்போன பொன்னாம்மாவிற்கு. மதியச் சமயலைப் பற்றி மகள் சரஸ்வதி கொடுத்த முன்னெச்சரிக்கை, அலுப்பைக் கொடுத்தாலும், தான் படுத்தால் காரியங்கள் எல்லாம் படுத்துவிடும் என்ற பொறுப்புணர்ச்சியில் விளைந்த வேதனை நெஞ்சை அழுத்த… 

“ம்… எனக்கு ஒரு நாளும் அடங்காது: ஓட்டமும் பாட்டமும்தான். பெட்டியைக் கொண்டுவா! களையோட களையாக கூப்பன் அரிசியையும் எடுத்துக்கொண்டு வர சலிப்புடன் மொழிந்தவள். கொடியில் மடித்துப் போட்டிருந்த புடவையை எடுத்து உடை மாற்றுவதில் முனைந்தாள். 

அரிசிப் பங்கீட்டுப் புத்தகங்கள். பெட்டி, காசு, வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியல் யாவையும் தாயிடம் நீட்டிய சரஸ்வதி, 

“அம்மா! இண்டைக்குச் சுப்பிரமணியம் அண்ணன் வந்தவர் அல்லோ!” 

“எந்தச் சுப்பிரமணியம்?” 

“அவர்தான்.. சங்கக் காரியதரிசியாக இப்ப புதுசா தெரியப்  பட்டிருக்கிறார்…” 

“என்னவாம்?” 

“அப்புவைச் சந்திக்க வேணும் எண்டார். அப்பு தோட்டத்துக்குப் போயிட்டார் எண்டு சொல்ல உங்களை விசாரிச்சார். அம்மா விறகுக்குப் போயிட்டா எண்டு சொன்னனான். 

“என்ன சங்கதியோ?” வெற்றிலைத் ‘தைலா’வில் இருந்து பாக்கு வெற்றிலையை எடுத்து வாய்க்குள் அவசர அவசரமாகத் திணித்தாள் பொன்னம்மா. 

“ஏதோ சங்க விசயமாம். இலாபக் காசு ஏதோ கொஞ்சம் இருக்காம். அதோட கூடுதலாக காசு கட்டச் சொல்லி…” 

“நல்ல சங்கம், நல்ல இலாபக் காசு. இங்க படுகிற பாட்டுக்குள்ளை சங்கத்திற்கு இன்னும் காசு கட்ட முடியாது. அவன்கள் கிடந்தான்கள். கொண்டா பிள்ளை பெட்டியை, நான் போக…” 

தலையிலே பெட்டியும் மனதிலே சுமையுமாக நடந்தாள். தெருவில் இறங்கிய பொன்னம்மாவிற்கு சங்கத்தைப் பற்றி நினைக்கையில் ஆத்திரம் ஆத்திரமாக பற்றிக்கொண்டு வந்தது. “முன்னம் ஒரு வாட்டி காசு கட்டி இலாபக் காசு கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. சங்க மொண்டு இருந்தும் நாங்கள் கொத்த மல்லிக்கும் கிழங்குக்கும் சீனிக்கும் படுகிற தவண்டை அடிப்பு சொல்லி மாளாது. சங்கம் எண்டு அவதிப்படுகிறான்கள். என்ன சாதிச்சவன்கள்.” 

“நான் இந்தக் காசு ஐம்பது ரூபா மிச்சம் பிடிச்சு வைச்சது. ஒரு மூக்குத்தி வேண்டவெண்டு. அதுக்கும் ஏதோ அனுத்த காலம் போல.” 

மனதில் ஒரு பட்டிமன்றம் அமைத்து பொங்கி எழும் எண்ணப் பிரவாகங்களை அலசி ஆராய்ந்து சங்கம் தேவைதானர் என்று தீர்ப்புக்காணும் முயற்சியில் தோல்வியுற்றவளாய் நடந்தாள். நறுவிலி வைரவர் கோயில் முடக்கையும் தாண்டி அடிப்பாதை இட்டுச் செல்லும் பனங்காணித் தொங்கலை அடைந்து விட்டவள் யாரோ கூப்பிட்ட குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். 

கமலாம்பிகை தான் வந்து கொண்டிருந்தாள். கணவனுடன் கொழும்பில் இருந்தவள். வயது என்னவோ ஒரு முப்பதைத்தான் சேரும். என்றாலும் மற்றப் பெண்களைப் போல் ஒரு டாம்பீகம், எடுப்புச் சாய்ப்பு, கர்வம் துளி கூடக் கிடையாது. இப்போதைய சிங்காரிகள் சிதறுதொங்கலும், குருவிக் கொண்டையுமாக அலங்காரத்திலேயே வாழ்க்கையின் அரைப்பொழுதை விரயமாக்குகிற நேரம், இவள் ஊரில் உற்பத்தியாகிற கைத்தறிச் சேலையைக் கொண்டு பழைய பாணியில் தான் உடுப்பு: சாதாரண குடுமி. கர்வம் துளிகூட இல்லாத அடக்கமான பெண். இவளுடைய கணவன் வகிக்கிற உத்தியோகத்திற்கு இவள் ஒன்றுக்கு மூன்று வேலைக்காரரை அமர்த்த முடியும். ஆனால் ‘தன் கையே தனக்குதவி என்ற தன்மான உணர்ச்சி, உழைக்க வேணும் என்ற துடிப்பு, அவளை இப்போது சங்கக்கடைக்கு பெட்டியுடன் கால் நடையாக வர வைத்திருக்கிறது. 

“கொழும்பிலையிருந்து எப்ப வந்தனி பிள்ளை?” என்றாள் பொன்னம்மா வாயெல்லாம் பல்லாக. 

“நான் வந்து ஒரு கிழமை இருக்கும். மாமி. எனக்கு அந்தப் பட்டினத்திலே இருந்தாலும் மனம் இங்கதானெணை. பள்ளிக்கூடம் போகிற பிள்ளைகளை இங்கே விட்டுட்டு அங்கை இருக்க மனம் கேட்கயில்லை. எவ்வளவுதான் சொகுசாக திண்டு குடிச்சிருந்தாலும் ஊரில் கிடைக்கிற நிம்மதியும் ஆறுதலும்..” 

“அது சொன்னாயே நூறு முறையும் சரி. பிள்ளை, நீயும் சங்கக் கடைக்குத்தான் போறியோ?” 

“ஓம் மாமி” 

“சரி எட்டி மிரி பிள்ளை. பொழுது ஏறிப்போச்சு. உங்கே எத்தினை அலுவல் கிடக்கு.” 

கமலாம்பிகை கொழும்பில் வசித்து வந்த கால எல்லைக்குள் ஊரில் நடந்த விருத்தாந்தங்களை பொன்னம்மா வக்கணையாக அள்ளித் தெளிக்க. கொழும்புப் புதினங்களை கமலாம்பிகை கதை கதையாக அளந்து கொட்ட நடந்த அலுப்புத் தெரியாமல் சென்றவர்கள் ஒற்றைடிப் பாதை வழியாகப் பனங்கூடலையும் தாண்டி, மக்கிப் பாதையில் இறங்கி விட்டனர். அந்த மக்கி ஒழுங்கையையும் கடந்தால் பிறகென்ன சங்கக் கடைதான். 

சர்ச்சைகளில் ஈடுபட்டுக்கொண்டு முன்னே நடந்து கொண்டிருந்த கமலாம்பிகை திடீர் ‘பிரேக்’ போட்டவளாய் ஏதோ காணாததைக் கண்டுவிட்ட மாதிரி ‘சடக்’ கெனத் திரும்பினாள். லட்ஷையுடன் முகம் என்னவோ பச்சைப் பாகற்காயைக் கடித்துவிட்டவள் மாதிரிப் பல கோணங்களில் நெரிந்து நொறுங்கியது. 

‘ஏன் பிள்ளை?’ எனப் பரபரத்தபடி முன் தெருவில் பார்வையை நழுவ விட்ட பொன்னம்மாவின் உதடுகள் வெறுப்பில் பிதுங்கின. 

“சீ! மூதேவிகள். பெண் பிரசு கடை கண்ணிக்குப் போக, உலாவ வழியல்லை. இது என்ன அலங்கோலமடி” எனப் புறுபுறுத்த வண்ணம் மறுபக்கம் வேலியோரமாகத் திரும்பிக் கொண்டாள் பொன்னம்மா. 

அவர்கள் கண்ட காட்சி..! 

அங்கே தெரு முடக்கில் யாரோ ஒரு வாலிபன் கண்ணியமற்ற முறையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் புகைந்து கொண்டிருக்கும் பீடித்துண்டு. உடுத்திருந்த சாரம் சொல்வழி கேட்காமல் அரையில் இருந்து நழுவி அடம்பிடித்தது. அப்படியும் ஒரு வெறியோ! நாகரிகம் முன்னேற்றம் என்று இளவட்டங்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களிலும் இப்படியும் ஒரு வெட்கக் கேடான செயலா? 

“ஆரடி பிள்ளை பொடியன்?” இது பொன்னம்மா. 

“தெரியாதோ மாமி! வேறே ஆர் அவன்தான் சுந்தரம். தங்கம் அக்காவோட மோன்.” 

“அதுதானே பார்த்தன். வேறே ஆர் இந்தக் கிலிசை கெட்ட வேலை செய்யிறது. ஏனடி கமலாம்பி இசந்து பொந்து வழிய குச்சொழுங்கை வழிய என்ன அலுவல். ஆளைப் பார்த்தால் வன்னிமாடு மாதிரி. வேலை வெட்டி இல்லாமல் திண்ணைக்கு மண் எடுத்துக் கொண்டு… இப்பிடியான ஆட்களால் தானே ஊரின்ரை மதிப்பே கெட்டுக்கிடக்கு. அவள் தங்கம் என்ன தங்கமான மனுஷி. அவளுக்குப் பாவம் இப்படி ஒரு தறுதலை வந்து பிறந்துதே!” 

“பாருங்கோ மாமி! பிற தேசத்திலை உள்ளவன்கள் என்ன தொழில் எண்டாலும் சந்தோஷமாக ஏற்று, கிடைச்சதைக் கொண்டு சந்தோஷமாக. மானம் மரியாதையாக இருக்கிறான்கள். இவை என்னடி எண்டால் நாலெழுத்துப் படிக்க முன்னம் காற்சட்டை உத்தியோகம் வேணுமாம்…” 

பொன்னம்மா இடை வெட்டினாள். 

“கண்டறியாத களிசான் உத்தியோகம். என்ன தொழில் எண்டாலும் செய்யும் தொழிலே தெய்வம் எண்ட எண்ணம் வேணும். அதுசரி. இவன் சுந்தரம் என்னம்போ இந்தப் பொடியள் சொல்லுங்கள், வாயிலும் வராதாம்.. சீ… சீ…” 

“என்ன மாமி ‘ஜீ.சீ.ஈ’ யோ”

“ஓம்பிள்ளை! அதுதான். அதுகூட அவன் ‘பாஸ்’ பண்ணவில்லையாம். நாலோ ஐஞ்சு தரம் எடுத்தும் பெயிலாம்.. ஒரு யோக்கியமில்லாத பொடியன்… அவரும் அவற்றை கூட்டாளியளும் கோயில் மடத்திலை நிக்கிறதும், சந்திக்குச் சந்தி நிற்கிறதும். விசில அடிக்கிறதும்….” 

“அது தானே! பெண் பிள்ளைகளை காலை மாலை எண்டு கடை கண்ணிக்கெண்டு தெருவழிய உலாவ விடவும் பயமாக் கிடக்குது.” 

அப்போது… 

ஓரக்கண் பார்வையை வீசியபடி, சாரத்தை அவிழ்த்து உடுத்து. சண்டிக்கட்டுக் கட்டியபடி அவர்களைக் கடந்து மறுகி மறுகி நடந்து செல்கிறான் சுந்தரம். அவனைக் கண்டதும் உலகத்திலுள்ள வெறுப்பு முழுதையும் ஒன்றாகச் சேர்த்து உமிழ்பவள்போல் அவன் மேல் உமிழாகக் குறைாயக வேலியோரம் காறி உமிழ்ந்தாள் பொன்னம்மா. 

“பாருங்கோவன் அவரட நடையும் ‘மங்கி தலை இழுப்பும், கிறுதா மீசையும்… இவனுக்கென்ன கொள்ளை. அவள் சின்னம்மாவின்ர மோன் ராசேந்திரன் சப்பாணி. உவன் எங்கே ஆளா வரப்போகிறான் எண்டு தான் எல்லாரும் நாக்கு வளைச்சவையள். அவள் சின்னம்மா செய்த புண்ணியம் பொடியன் தீராத நோய் தீர்ந்து, எழும்பி, நெசவுத் தறி ஒண்டு சொந்தமாக வைச்சு நாளுக்கு நாற்பது ரூபா உழைக்கிறதானாம். முயற்சி இருந்தால் முன்னுக்கு வரலாம்தானே. அதைவிட்டு இவன் சுந்தரன் போல வீட்டுக்கும் ஊருக்கும் பாரமாய்..” 

“இப்ப எங்கடை சங்கத்திலேயே பயிர் செய்ய எத்தினை வழி வகைகள் வகுத்துக் கொடுக்கினம். விதை கிழங்கு கூட எடுத்துத் தருவினமாம். தோட்டக் காணியெல்லாம் வெறும் காடாகக் கிடக்குது. விவசாயம் செய்தால் என்ன குறைஞ்சு போமோ..?” 

“ஓமடி பிள்ளை! நல்ல சங்கங்கள் தான். இவை சங்கம் சங்கம் எண்டு என்னத்தை அளந்து விட்டவை.” இது பொன்னம்மா வெறுப்புடன் மொழிந்தவை. அவளுடைய வெறுப்பு சங்கப் பக்கம் திரும்பியது. 

“பாவக் கதை பறையக் கூடாது மாமி. முந்திச் சங்கத்திலை இருந்தாக்களே பதவிக்கும் பணத்துக்கும். புகழுக்கும் ஆசைப்பட்டு. நெஸ்பிறேயும். கொத்தமல்லியும் பின் கதவாலை அனுப்பிற ஆட்கள் எங்கட சங்கத்தை குட்டிச் சுவராக்கினாங்கள். இப்ப இருக்கிற தலைவர். காரியதரிசி மற்ற நிர்வாககிகள் எல்லாரும் எவ்வளவு கஷ்டப்படுகினம். அவை செய்தால் போதுமோ? சங்கம் எண்டால் ஒரு ஊரே சேர்ந்தது. ஊர் எண்டால் எத்தனையோ குடும்பங்கள். குடும்பம் எண்டால் ஒரு வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் சேர்ந்து ஒற்றுமையாக நடந்தால் சங்கத்திற்கும் விருத்தி, ஊருக்கும் நன்மை, பெருமை. அதை விட்டுவிட்டு இதென்னடா சிலர் இவைக்கென்ன சங்கம் எண்டு நெளிக்க சிலர் காசு கட்டப் பின்னுக்கு நிற்க…. எங்களிலும் குறைபாடு இருக்க குறையை அவர்கள் தலையில் போடுறது என்ன நியாயம்.” 

“ஓமடி பிள்ளை! நீ சொல்றதிலும் நியாயம் இருக்குமாப்போல, இப்ப உள்ள சங்கம் பிறம்பாகக் காய்கறிக்கடை கூட போட்டிருக்காம். இப்பிடி எல்லாரும் தன்நலம் மட்டும் கருதாமல் ஒற்றுமையாக சேவை செய்தால் ஊர் தானாகவே திருந்தி விடாதே! என்ன?” 

“அதை விட்டுட்டு மாமி, ஒவ்வொருவரும் யோசிக்காமல், முன்னேற்றம், திருத்தம். விருத்தி எண்டு மேடைகளில் பேசுறதிலும் கூட்டங்களில் விளாசுவதிலும் குறைச்சல் இல்லை. செயற்பாட்டிலை பின் தங்கி நிற்பினம்.” 

“அது சரி பிள்ளை. நாங்களும் உணர்ந்து நடக்க வேணும் தானே.” 

“பாருங்கோ மாமி. முன்னே எப்போதோ நாங்கள் கட்டிய இருபது ரூபா இலாபக் காசுமாகச் சேர்ந்து எழுபது ரூபா அளவிலை இருக்காம். அதை இப்ப எடுக்காமல் இன்னும் முப்பது ரூபா போட்டால் ஒரு முதலாக இருக்கும். காசு இருந்தால் அவர்களும் நல்ல முறையிலை நடத்துவினம் தானே. இப்ப சங்கத்திலை என்ன சாமான் இல்லை. குறைஞ்ச விலையில் நிறைஞ்ச சாமான்கள். 

“ஓமடி பிள்ளை. நீ சொல்றது சரிதான். கதைச்சு கதைச்சு கடையடிக்கும் வந்திட்டம். எடி ஆத்தே! சரியான கூட்டம். எப்ப சாமான் வேண்டி எப்ப திரும்புகிறது. 

“ஆ! பாருங்கோ! காரியதரிசி. கணக்கர் எல்லாரும் வந்தாலோ ‘படபட’வென வேலை முடிச்சுப் போடுவினம்.” 

அப்படி இருக்கையில் ஒரு சலசலப்பு. குழுமியிருந்த பெண்கள் குழாமிற்குள், வெண்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி பெரிய ஆரவாரம் போட்டுக் கொண்டு இராசம்மா வந்து பெட்டியைத் தொக்கெனப் போட்டாள். கூப்பனை ‘தொக்’ கென மேசையில் வீசியவள் விற்பனையாளர் குமாரை நோக்கி “தம்பி! இந்தச் சாமான்களைச் சட்டுப் புட்’ டெண்டு போடு, நான் கொஞ்சம் அவரசரமாகப் போகோணும்” என்றாள். 

இத்தனை பெண்களும் காத்திருக்க. இவள் மட்டும் இப்பொழுது வந்து சாமான்களை வாங்கிக்கொண்டு செல்ல எத்தனித்தால் யாருக்கம் கோபம் வராதா? காரியதரிசி சுப்பிரமணியத்தின் தமையன் மனைவி என்றால் அந்த உறவுமுறை வீட்டில். அதற்காக இந்தப் பொது இடத்தில் என்ன ஒழுங்கீனம்? 

இராமு இயல்பாகவே துடுக்கான பையன். விட்டானா? “என்ன இராசம்மாக்கா! நீ இப்ப வந்திட்டு, ‘சுடுகுது மடியைப்பிடி’ எண்டு நாண்டு கொண்டு நிற்கிறாய். இந்தனை பெண்டுகள் உங்களுக்கு முன்னம் வந்து, காத்துக் கொண்டிருக்கிறது தெரியேல்லையோ?” 

“அவை எத்தனையோ பேர் வேலை இல்லாமல் இருப்பினம். போகிற நேரம் போவினம், எனக்கெண்டா செண்டு போச்சு.” 

கூப்பன் துண்டுகளை வெட்டி ஒட்டிக் கொண்டிருந்த மனேஜர் தன்னுடைய கண்ணாடிக்கு கீழாக நோக்கியவண்ணம் ஒரு புன்னகையைக் கசிய விட்டார். 

காரியதரிசியும் எட்டத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கவும், அவருடைய மதனிக்குத் தான் சொல்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் நேருக்கு நேர் நல்ல சூடு கொடுத்தான். நியாயத்தை பேச ஏன் தயங்க வேண்டும்? வெளியில் சொல்லிக் காண்பிக்காவிட்டாலும், விற்பனையாளரின் நேர்மையான போக்கைக் கண்டு எல்லோரும் மனதிற்குள் வியந்தனர். 

மேலே கூட்டுறவுச் சங்கம்’ என்று கொட்டை எழுத்தில் பொறிக்கப் பட்டிருக்கிறது. கீழேயோ கூட்டுறவும் நாட்டுயர்வும் காற்றில் பறக்கிறது. இப்படி ஒற்றுமையின்மையால் தானே ஊரே கெட்டுக் கிடக்கிறது என மனதிற்குள் மறுகிக் கொண்டே ‘பாரத்தை’ எடுத்துத் தலையில் வைத்தாள். 

சுமையைத் தலையில் ஏற்றி, காலை எட்டி வைத்த பொன்னம்மா யாரோ அழைத்த குரல் கேட்டுத் திரும்புகிறாள். சுப்பிரமணியம்; காரியதரிசி, 

“என்ன தம்பி வீட்டுக்கு வந்தியாம்?” 

“ஓமணை உங்கட இலாபக்காசு நாற்பது ரூபா..” 

“அது இருக்கட்டும் தம்பி. இந்த பத்து ரூபா இதையும் சேர்த்து எங்களின்ரை பேரிலை போடுங்கோ. தம்பி! இந்த முறை விதை கிழங்கு சங்கத்தாலை எடுத்துத் தாறதாக …” 

“ஓமணை! அம்மானை ஒருக்கால் சந்திக்கச் சொல்லுங்கோ ஒழுங்கு செய்கிறம்.” 

அகமும் முகமும் மலர பொன்னம்மா திரும்பி அடி எடுத்து வைத்தாள். 

– தினகரன் வாரமஞ்சரி, 1971.

– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *