இறந்த காலத்தின் தகிக்கும் வெய்யில்




அவன் வெள்ளிக் கிழமையைத் தவற விட்டுவிட்டான். அதை அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. அந்த வெள்ளிக் கிழமை பூமியிலிருந்து மொத்தமாகவும் தவறி விழுந்துவிடவில்லை. அதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவன் இப்படி ஒரு கதையைப் படித்திருக்கிறான். அது மிகவும் அபத்தமாய் இருந்தது. ஆனால் இப்போது அப்படி ஒன்று நடந்திருப்பதை அபத்தமாக நினைக்க முடியவில்லை. இந்த நிகழ்வை யாரிடம் சொல்ல முடியும் என்று யோசித்தான். யாரிடமும் சொல்ல முடியாது என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை. என்னதான் மணிக்கணக்காகப் பேசினாலும் யாரும் நம்பப் போவது இல்லை. சரி உங்களிடம் யாராவது வந்து (உங்கள் நண்பர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.)நான் வியாழக்கிழமை நைட் தூங்கப் போனேன். காலையில எந்திரிச்சப்போ சனிக்கிழமையா இருந்திச்சி வெள்ளிக்கிழமை எங்க போச்சுன்னே தெரியல என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள். அதே தான் நரேனின் பிரச்சனை. சரி ஒரு வெள்ளிக் கிழமைதானே போகட்டும் என்று முடிவெடுப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.
காபி கொண்டு வந்த சுகாசினியிடம் நேத்து நான் எங்க போயிருந்தேன் என்று மெதுவாகக் கேட்டான். அவள் அவன் தலையைத் தொட்டுப் பார்த்துவிட்டு “நல்லாத்தானே இருக்கீங்க ஏன் காச்சல் வந்தவராட்டம் உளர்றீங்க” என்றாள்.
இதை கடவுள் செயலாகவோ மாய மந்திரமாகவோ நினைத்துப் பயந்து போகும் அளவுக்கு அவன் முட்டாள் இல்லை. தனக்கு மனநோய் கண்டுவிட்டது எனவும் அவன் சந்தேகிக்கவில்லை. நிச்சயம் இது அறிவியல் விசயம்தான். ஜட உலகில் காலத்திற்கு ஒரு திசை உண்டு. அதில் புழுத்துளைகள் எனப்படும் காலத்துளைகளின் வழியாக ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்குள் தாவிச் செல்லும் சாத்தியங்கள் உண்டு. அவன் இதைப் பற்றி பிராட்பெரியின் கதை கூட ஒன்றைப் படித்திருப்பதாக நினைவு.
அந்த சனிக்கிழமையில் அவன் காலத்தைப் பற்றியும் அதன் திசை பற்றியும் புழுத்துளைகள் பற்றியும் ஏராளமான கட்டுரைகளை இணையத்திலிருந்து தரவிறக்கிப் படித்துக் கொண்டே இருந்தான். அவனால் ஓரளவிற்கு நம்பகமான முடிவிற்கு வர முடிந்தது. அன்றிரவு அவன் எங்கேயோ ஒரு நுண்ணிய புழுத்துளைக்குள் தவறி விழுந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவனது படுக்கை அல்லது அந்த அறை பிரபஞ்ச சலனத்தில் தானே புழுத்துளையாக மாறியிருக்க வேண்டும். அந்த இடத்தில் அவனும் இருந்ததால் அது அவனைப் பாதித்திருக்கிறது. அவனை வெள்ளிக் கிழமைக்கு கொண்டு செல்லும் வழக்கமான நடைமுறையில் இருந்து மாற்றி சனிக்கிழமைக்குள் கொண்டு சென்றிருக்கிறது. இப்படி யாராவது புழுத்துளைக்குள் தவறி விழுந்து வேறு காலத்திற்குச் சென்ற செய்தி எங்கேயாவது இருக்கிறதா என ஞாயிற்றுக் கிழமை முழுவதும் இணையத்தில் தேடிக் கொண்டே இருந்தான். ஆனால் அப்படி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தன் வீட்டில் ஒரு புழுத்துளை இருக்கும் விசயம் மட்டும் உறுதியாகிவிட்டால் உலகமே இதைக் கொண்டாடித் தீர்த்துவிடும். நிலாவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் மாதிரி இவனும் உலக வரலாற்றில் பதிவாகிவிடுவான். அன்று இரவு முழுவதும் அவனுக்கு இதே மாதிரியான இனிமையான கனவுகள் வந்து கொண்டே இருந்தன. தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அச்சத்தோடு படுக்கையைப் பார்த்தான். ஒருவேளை புழுத்துளை தன்னை இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு அப்பால் வீசிவிட்டால்? நினைக்கவே நடுக்கமாய் இருந்தது. படுக்கையை இழுத்து தள்ளிப் போட்டுக் கொண்டான்.
அந்த சம்பவம் அவனை வேறு ஒருவனாக மாற்றி விட்டது. எந்திரத் தனமாக அலுவலகத்துக்குப் போவது வேலைகள் செய்வது ஏதோ ஒரு சிந்தனையில் எப்போதும் நிலைத்திருப்பது என்று அவன் தனக்குள்ளிருந்து வெளியேறியவனைப் போல இருந்தான். வெய்யில் காலம் முழுவதும் அவனை இம்சித்து வந்த இந்த உணர்வு படிப்படியாகக் குறைந்துவிட்டது.
குளிர்காலத்தின் வெள்ளிக் கிழமை இரவு ஒன்றில் அவன் தன்னுடைய காஷ்மீரக் கம்பளியை நன்றாகப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வியர்த்துக் கொட்டி மூச்சு முட்டியது. தூக்கத்திலிருந்து அடித்து எழுப்பப் பட்டவனைப் போல எழுந்தவன் எரிச்சலூட்டிக் கொண்டிருந்த அந்தக் கம்பளியை வீசி எறிந்து விட்டு உட்கார்ந்தான். அவன் கண்கள் அணிச்சையாய்க் காலண்டரைப் பார்த்தது. காலண்டிரில் அது மே மாதம் பதினைந்தாம் தேதியாய் இருந்தது. ஒருவேளை தான் முன்னைப் போல ஒருவருடத்தை இழந்துவிட்டோமோ என்று பீதியோடு வெறித்துப் பார்க்கையில் அது கடந்து சென்ற மே மாதமாய் இருந்ததை அவன் மூளை கொஞ்சநேரம் கழித்துதான் புரிந்துகொண்டது.…
மீண்டும் ஒரு கோடை காலத்தை அனுபவிக்க வேண்டுமா என்கிற கேள்விதான் அவனுக்கு முன் எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு நின்றது. அல்லது ஏற்கனவே நடந்தது போல இன்று ஒரு நாள் மட்டுமா தெரியவில்லை.
அது பழைய நாளாய் இருந்தாலும் குறுக்கே மூன்று மாதங்கள் கடந்து சென்றிருந்ததால் அந்த நாளைப் பற்றிய ஒரு இம்மி அளவு கூட எதுவும் நினைவில் இல்லை. அந்த நாளுக்கே உரித்தான விசயம் என்று எதுவும் இல்லாததால் வெறுமனே போய்க் கொண்டிருந்தது. வெய்யில் மட்டும் தான் அந்த நாளின் பழமையை முகத்தில் அறைவது மாதிரி உணர்த்திக் கொண்டிருந்தது. சுகாவிடம் அவன் பேசிய வார்த்தைகள் கூட ஏற்கனவே பேசியதாய்த்தான் இருக்கும். ஒரு வேளை புதியதாய் எதாவது பேசியிருப்போமா என்பதை அனுமானிக்க முடியவில்லை. தான் குளிர் காலத்தில் இருந்து மீண்டும் இங்கே வந்துவிட்டதைப் பற்றிப் பேசினால் அது புதியதாய் இருக்கும் ஆனால் அது தேவையில்லாத குழப்பங்களை விளைவித்துவிடும்.
ஏதாவது ஒரு ஆதாரப் பூர்வமான விசயத்தைக் கையில் வைத்துக் கொண்டுதான் இதைப் பற்றி யாரிடமும் பேச வேண்டும் என்பதில் அவன் பிடிவாதமாய் இருந்தான். பெரிய விசயங்கள் கைகொடுக்காவிட்டாலும் சின்ன விசயங்கள் ஏதாவது ஒன்று அவனுக்குக் கை கொடுக்கும் என்று ஆணித்தரமாக நம்பினான்.
பேப்பரில் அவனுடைய அபிமான நடிகர் நடித்த படம் அடுத்த வாரம் வெளிவரவிருப்பதாக விளம்பரம் வந்திருந்தது. இவனுக்குத் தெரியும் அந்தப் படம் ரிலீசாகி ரெண்டே நாளில் எடுத்துவிட்டார்கள். இவன் இன்னும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்தப் படத்தை தான் பார்த்துவிட்ட விசயத்தைச் சொல்லி தான் எதிர்காலத்திலிருந்து இங்கே வந்திருப்பதை எளிதாகப் புரிய வைத்துவிடலாம். அந்தப் பக்கத்தில் விளம்பரம் செய்திருந்த எல்லாப் படங்களுமே ரிலீசாகிவிட்டிருந்தது. ஆனால் அவன் தான் ஒன்றைக்கூடப் பார்க்கவில்லை.
இந்த மூன்று மாதத்தில் வரலாற்றுச் சம்பவம் எதுவும் நடக்கவில்லை அப்படி நடந்திருந்தால் அதைப் பற்றி செய்தியைப் பரப்பி எதாவது சாகசம் செய்து ஒரே இரவில் உலகம் பூராவும் பிரபலம் ஆகிவிடலாம். ஆனால் அந்தக் கொடுப்பினை அவனுக்கு இல்லை. இதே ரீதியில் என்னவாவது ஞாபகம் வருகிறதா என்று சிந்தித்து சிந்தித்தே அவன் சோர்ந்துவிட்டான். கடைசியில் எல்லா ஆர்வங்களும் வடிந்துவிட்டது. ஒன்றும் நடக்கவில்லை. அவன் வேறு ஒரு காலத்திலிருந்து ஒரு மூன்று மாதம் பின்னோக்கி வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை இவ்வளவு சாதாரணமாக அவலமாகக் கழிந்துகொண்டிருக்கிறது.
images (2)
கிட்டத்தட்ட அவன் கைவிடப் பட்டவனைப் போல கையாலாகாதவனைப் போல என்ன செய்வது என்று தெரியாதவனாய் மறத்துப் போன மூளையோடு அந்த நாளை எதிர் கொண்டான். அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் உலகத்தில் யாருக்கும் கிடைக்காத இந்த வரம் தனக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது. இது மீண்டும் ஒரு முறை தன் வாழ்வில் நடக்கும் அப்போது அவன் கையில் உலகம் முழுவதும் சென்று சேரும் படியான அதிசயமான செய்தி சிக்கும். அப்போது இந்த உலகமே தன்னைத் திரும்பிப் பார்க்கும் என்று சமாதானம் செய்து கொண்டான்.
அன்று இரவு அவனால் சரியாக தூங்க முடியவில்லை. தூங்காமல் உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. ஒருவேளை தூங்காவிட்டால் பழையபடி தன்னுடைய காலத்திற்குத் திரும்பும் நிகழ்வு பாதிக்கப்பட்டுவிடுமோ எனப் பயமாய் இருந்தது. காலையில் எழுந்தபோது அவன் அதே கோடை காலத்திலேயேதான் இருந்தான். ஏமாற்றமாக இருந்தது. இதைப்பற்றி யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்றும் தெரியவில்லை. ஏதாவது சின்ன விசயத்தை வெளிப்படுத்தினால் கூட பரபரப்பை உண்டாக்கிவிடலாம். ஆனால் அது எப்படி என்றுதான் தெரியவில்லை.
பேப்பரைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அந்த யோசனை வந்தது. நிச்சயம் ஏதாவது கொலை பற்றியும் கொலை செய்த நபரைத் தேடுவதாகவும் செய்தி வந்திருக்கும் கொலைகாரனைப் பற்றி நாம் திரும்ப ஐந்தாறு நாளில் செய்தியைப் படித்திருப்போம். ஏதாவது ஞாபகம் வந்தால் நாமே போய் கொலைகாரனைப் பற்றிய விவரத்தைச் சொல்லி அதன் மூலம் தான் இந்த நாளை ஏற்கனவே வாழ்ந்துவிட்டதை உலகத்துக்கு நிரூபித்துவிடலேமே?
அவன் எதிர் பார்த்தமாதிரியே ஒரு கொலைச் செய்தி வந்திருந்தது. ஆனால் அந்தச் செய்தியை ஏற்கனவே படித்த மாதிரி கொஞ்சம் கூட ஞாபகம் இல்லை. அதிலும் கொலைகாரனைத் தேடுவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் அது சம்பந்தமாக எந்த ஞாபகமும் வரவில்லை. “தினமும் எந்திரிச்ச உடனே அரை மணிநேரம் அந்தப் பேப்பர்ல அப்படி என்னதான் பாப்பீங்களோ?” என்கிற சுகாவின் குரல் இப்போது திடீரென்று காதுக்குள் கேட்டது
வெய்யில் வறுத்தெடுத்தது. இந்த வெய்யில் காலத்தைத் திரும்ப அனுபவிக்க மட்டும்தான் நான் இந்தக் காலத்துக்கு வந்தேனோ என்று வெறுப்பாய் இருந்தது. அலுவலகத்துக்குப் போய்விட்டு வருவதற்குள் அப்பா எக்கச் சக்கமான வேக்காடு இன்னிக்கி மழ வந்தாலும் வரும் என்று அவன் காதுபட ஒரு நூறு பேராவது சொல்லியிருப்பார்கள். ஆமாம் கோடையில் ஒருநாள் திடீரென்று எதிர்பாராத விதமாக மழை வந்தது உண்மைதான் அது இந்த நாள்தானா அல்லது வேறு எந்தக் கருமம் பிடித்த நாளோ தெரியாததால் அப்படிச் சொல்பவர்களிடம் அமாம் என்பது போல மையமாகத் தலையை ஆட்டி வைத்தான். (உள்ளுக்குள் தலை தலையாய் அடித்துக் கொண்டான்.)
ஏற்கனவே குடியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரனான மோகனைக் கடைவீதியில் சந்தித்த போது அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றான். ஒருமாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்பது நரேனுக்குத் தெரியும் சூன் மாதத்தில் ஒரு நாள் இவனேதானே இழவுக்குப் போய்விட்டு வந்தான்‘. ஆனால் இந்த விசயத்தை அவனிடம் எப்படி சொல்வது? என்று யோசித்தவனாய் அப்படியா என்றான்.
தினம் தினம் தான் பழையபடி குளிர்காலத்திற்குச் சென்றுவிடுவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டே தூங்கச் சென்றான். ஆனால் அந்த பாழாய்ப் போன வெற்றுக் கோடைக் காலம் திரும்ப சாவகாசமாய் அவன் வாழ்க்கையில் மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. தனக்கு நடந்துகொண்டிருக்கும் விசயத்தை வெளியில் சொல்ல முடியாத அழுத்தம் அவன் மனதை அச்சம் தரும் வகையில் பாரமாக்கிக் கொண்டு வந்தது. நாளுக்கு நாள் இப்படியே கழியும் போது தன்னுடைய மூளை வெடித்துச் சிதறிவிடும் போல பயந்தான் மனதைச் சகஜமாக வைத்துக் கொண்டு தன்னுடைய பழைய காலத்திற்குப் போய்ச் சேருவோமா அல்லது இந்தக் காலச் சுழலிலேயே சிக்கி செத்துப் போய்விடுவோமா என்று பேரச்சமாய் இருந்தது. சுகா “நீங்க என்னமோ மாறிப் போயிட்டீங்க. ஏதோ ஒரு விசியம் உங்கள ரொம்ப தொந்தரவு செய்யுது ஆனா அது என்னன்னு எங்கிட்ட கூட சொல்ல மாட்டீங்கறீங்க” என்று ஒருநாள் திடீரென்று பிடித்துக் கொண்டாள். அவன் நடந்ததைச் சொல்லிவிட துடித்தான். ஆனால் அதற்குப் பின் கட்டாயம் மனநோய் டாக்டரைச் சந்திக்க வேண்டிவரும் என்பதால் அவன் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு ஒண்ணுமில்லையே என்றான்.
தூக்கத்தில் ஏதாவது உளறியிருக்க வேண்டும் அல்லது தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும் இரண்டு நாளில் சுகா சரி நாம இன்னைக்கி ஒரு டாக்டரைப் பாக்கலாமா என்று கேட்டாள். நரேன் கையிலிருந்த காபி கோப்பையை டிவியைக் குறிபார்த்து வீசியெறிந்தான் “எதுக்கு என்ன இப்ப டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகனும்ன சொன்ன?” என்று காட்டுத் தனமாய்க் கத்தினான். அவன் கைகள் நடுங்கியது. சுகா பேயறைந்தது போல நின்றாள். “உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி நடந்துக்கற? எனக்கு ரொம்ப பயமா இருக்கு கட்டாயம் நாம ஒரு சைக்கியாரிஸ்ட பாத்தே ஆகனும் இல்ல ஊருக்குப் போன் பண்ணி எங்க அப்பம்மா உங்க அம்மா எல்லாத்தையும் வரச் சொல்லப்போறேன்”. என்று அவளும் அழுதுகொண்டே கத்தினாள். இவனுக்கு கோபம் உச்சியைப் பிளந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டான். அந்த நிலையிலும் இது ஏற்கனவே நடக்கவில்லையே எனில் இந்த சூனியம் பிடித்த நாட்கள் எந்தக் காலத்தில் இருந்துதான் வருகின்றன என்று குழம்பினான். என் வாழ்க்கை இரண்டாகப் பிளந்து கொண்டதா இனி அந்த அமைதியான வேலையை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த பழைய காலத்திற்குத் திரும்பவே முடியாதா? ஒரு பைத்தியக் காரனுக்கு நிகரான பட்டத்தோடுதான் மீதி வாழ்க்கையா?
டாக்டர் அன்புச் செல்வத்திடம் சுகா நேரம் வாங்கியிருந்தாள். முதலில் அவரிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தான். ஆனால் அவர் அவனை உட்காருங்க என்ற உடனேயே கடகடவென்று எல்லா விசயங்களையும் கொட்டிவிட்டான். டாக்டர் நெற்றியைத் தேய்த்துக் கொண்டு நீண்ட நேரம் யோசித்தார். என்ன படிச்சிருக்கீங்க எங்க வேல பாக்கறீங்க எந்த நடிகரப் பிடிக்கும் என்பது போல சட் சட்டென்று சின்னச் சின்ன கேள்விகள் கேட்டார். கடைசியாக “சரி இந்த மூணு மாசத்த நீங்க ஏற்கனவே வாழ்ந்துட்டதா சொல்றீங்க அப்ப இப்படி ஒரு சம்பவம் நடந்ததா நீங்க என்ன வந்து சந்திச்சீங்களா இல்லையே அப்ப இது எப்படி பழைய நாள் ஆகும். இது வேற ஒரு புதுநாள்தானே?” என்று ஒரு கொக்கிக் கேள்வியைக் கேட்டு அவனை மூச்சுத் திணற வைத்தார்.
“அதான் டாக்டர் எனக்கும் புரியல”. என்றான். “சரி இந்த மூணு மாசத்துல நடந்த முக்கியமான விசயம் ஏதாவது ஒண்ணு சொல்லுங்க”. அங்கதானே டாக்டர் பிரச்சனை மூணுமாசமா சொல்லிக்கிற மாதிரி பெரிய விசயம் எதுவும் நடக்கல சின்னச் சின்ன விசயம் நிறைய நடந்திருந்தாலும் அது எதுவுமே எனக்கு சரியா நினைவில்ல. சரி நீங்க சொல்லுங்க நாலு நாளைக்கி முன்னாடி உங்க வீட்ல என்ன டிபன்?” டாக்டர் வாய்விட்டுச் சிரித்தார். உண்மைதான் உங்க நிலைமை எனக்குப் புரியுது. ஆனா ஆதாரம் இல்லாம நான் எப்படி இத நம்பறது. நீங்க சொல்றீங்க அப்படீங்கறதுக்காக நான் நம்பனுமா?”
எனக்கு ஒரு விசயம் ஞாபகம் வருது டாக்டர் போன வாரம் என்னோட பிரண்ட் ஆனந்த்தப் பாத்தப்போ அவிங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னான். ஆனா அவரு ஒரு மாசத்துல இறந்துட்டார் அது எனக்குத் தெரியும். அவர் இறந்துடுவார்னு நான் எப்படி அவன் கிட்ட சொல்ல முடியும். அதனால நான் எதுவும் சொல்லல. இப்ப சொல்றேன். அதுதான் ஆதாரம் அவரு இறந்துடுவார். ஆனா இப்ப ரொம்ப நல்லாவே இருக்கார்”.
டாக்டர் திரும்பவும் யோசித்தார். “ஒகே நாம இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனா என்னால இதை ஒரு ஆதாரமா ஏத்துக்க முடியல. நீங்க கோச்சுக்கலைன்னா ஒண்ணு சொல்வேன். உலகத்தில நடக்காத ஒரு கற்பனையான விசயம் தனக்கு நடந்துட்டதா நம்பறதும் ஒரு மனநோய்தான். கவலைப்படாதீங்க கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிடலாம்.”
டாக்டரின் முகத்தில் ஓங்கிக் குத்தாமல் தான் எப்படித் திரும்பி வந்தோம் என்று அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இந்தக் கருமம் பிடித்த காலம் எனக்கு இப்படி பைத்தியக்காரப் பட்டத்தை வாங்கித் தரவா என்னை இங்கே அனுப்பியது என்று நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டான். இப்பொழுது புதிய விசயங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டதைப் பார்த்தால் இனி ஏற்கனவே நடந்தது என நான் அனுபவித்தது கூட இனி நடக்குமா என்னவோ தெரியவில்லை. ஒருவேளை ஆனந்தின் அப்பா சாகாமல் கூட இருந்துவிடலாம். அப்போது தன்மீது லேசாக விழுந்திருக்கும் மனநிலை சரியில்லாதவன் என்கிற முத்திரை பலமாக ஸ்தாபிக்கப்பட்டுவிடும். எவ்வளவு யோசித்தும் இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. தன்னுடைய காலம் இரண்டாகப் பிளந்துகொண்டதா? காலம் இரண்டாகப் பிளந்து கொள்ளுதல் பற்றி அவன் இதுவரை எங்கேயும் படிக்கவில்லை. ஒருவேளை இப்படியே போனால் தானே அது பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கி விடலாம் என்று தோன்றியது. இது என்னுடைய நல்ல காலமா அல்லது கெட்ட காலமா? என்று தன்னையே அச்சத்தோடு கேட்டுக் கொண்டான்.
அவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்து கொண்டிருந்த இந்தக் குழப்பங்கள் எல்லாம் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. டாக்டரைப் பார்த்துவிட்டு வந்து இரண்டு நாள் கழித்து பழைய படி குளிர்கால விடியற்காலையில் எழுந்தான். நிம்மதியாய் இருந்தது. இனி எந்தக் காலத்துக்குள்ளும் நழுவிப் போகாமல் என்னை எல்லோரையும் போல நிலை நிறுத்திப் பிடித்துக் கொள் கடவுளே என்று கதறி அழுது வேண்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
சாப்பிடும் போது சுகாவிடம் கேட்டான் “ஆமாம் நாம எப்பவாவது சைக்யாரிஸ்ட்டப் பாக்கப் போனமா?” அவள் மேலும் கீழும் பார்த்துவிட்டு “இதென்ன கேள்வி உங்களுக்கு என்ன ஆச்சி” என்றாள். இவன் சிரித்துக் கொண்டு அப்ப அது கனவா இருக்கும்னு நினைக்கிறேன் என்று சமாளித்துவிட்டான்.
நகரத்தில் டாக்டர் அன்புச் செல்வன் என்று யாராவது இருக்கிறார்களா என முகவரிப் புத்தகத்தில் தேடிப் பார்த்தான். இருந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் போலத் தோன்றியது. அலுவலகத்திலிருந்து அன்று மாலையே அவரிடம் அப்பாய்மெண்ட் செய்து கொண்டான்.
images (1)
அதே அலுவலக அறைதான். அவரேதான். இவன் போகும் போது அறை அதீத சுத்தமாக இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் “டாக்டர் உங்களுக்காகத் தான் வெய்ட் பண்ணிகிட்டிருக்கார்” என்று ரிசப்சன் பெண் சொல்லவும் உள்ளே நுழைந்தான். டாக்டர் எழுந்து நின்று ஏற்கனவே அறிமுகமானவரைப் போலக் கை குழுக்கினார். இவனும் ஏற்கனவே பழகியவனைப் போலவே சிரித்துக் கொண்டிருந்தான். “நாம ஏற்கனவே சந்திச்சிருக்கோம் இல்லையா?” என்றான். டாக்டர் அதே புன்னகையோடு கருவிழிகளை மேலே உயர்த்தி இறக்கி எஸ் அப்கோர்ஸ் நாம ஏற்கனவே சந்திச்சிருக்கோம்னு சொல்லலாம் என்றார். திடீரென்று அவர் முகத்தில் வியப்பு பெருகியது.
இவனுக்கு ஆர்வத்தில் நெஞ்சு குதிக்க ஆரம்பித்தது. “நான் உங்ககிட்ட ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தேன் இல்லையா?” ஆமாம் என வேகமாய்த் தலையசைத்துக் கொண்டு வியப்பாய் இவனைப் பார்த்து “ஆனா அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றதும் வியப்பு இவனையும் தொற்றிக் கொண்டது. “என்ன சார் கேக்கறீங்க ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தது நான்தானே?” “இருக்கலாம் ஆனா நீங்க வந்தது என் கனவுல தானே அத எப்படி நீங்க கரெக்டா சொல்றீங்க?”
ஒரு நிமிடம் இருவரும் ஸ்தம்பித்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். “சரி கனவுல நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றான். “இருக்கு நேர்ல நடந்தது மாதிரி அப்படியே இருக்கு” “அப்ப நான் வேற வேற காலத்துக்கு ஜம்ப் ஆகிப் போறத நம்பறீங்களா?” டாக்டர் யோசனையோடு நெற்றியைக் கீறிக் கொண்டார். “கனவு கண்டத வச்சி ஒரு புது தியரிய உருவாக்கச் சொல்றீங்களா?” “ஆனா நான்தான் நேர்லயும் வந்திட்டேனே?” “எல்லாம் ஒரே விசித்திரமா இருக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. நம்பவும் முடியலை நம்பாம இருக்கவும் முடியலை. நீங்க என்னையும் ஒரு மனப்பிறழ்வு ஆளா மாத்திடுவீங்க போல இருக்கு. ஒண்ணு செய்யலாம் எனக்குத் தெரிஞ்ச எழுத்தாளர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட நாம ரெண்டு பேருமே நடந்ததைச் சொல்லுவோம் ஒரு இன்ட்ரஸ்டிங்கான கதை கிடைக்க வாய்ப்பு இருக்கு” என்றார். அவர் சகஜமாகத்தான் சொன்னார். ஆனால் கதையில்தான் இதெல்லாம் நடக்கும் என்கிற தொனி அதில் தொக்கி நிற்பது இவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தாலும் ஒரு நல்ல நகைச்சுவையோடு விசயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக மனம் விட்டு சிரித்து வைத்தான்.
“எனக்கென்னவோ நம்பிக்கையில்லை டாக்டர் அந்த எழுத்தாளர் நல்லாத்தான் இருக்கு ஆனா நம்பறமாதிரி இல்லை இதை எழுதினா என் பேர் பஞ்சர் ஆயிடும்னு சொல்லுவார்னு நினைக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கிளம்பும் விதமாக அவர் கைகளைப் பற்றிக் குலுக்கினான். டாக்டர் அட்டகாசமாகச் சிரித்தார்.
குறிப்பு:- புழுத்துளைகள் (wormholes) பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்தப் பக்கத்தில் காணப்படும் விபரங்களை ஒரு முறை பார்த்துக் கொள்ளவும். http://www.eegarai.net/t93790-topic