இரும்பை எலி தின்ற வழக்கு
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 8
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணுசாமி என்னும் பெயருடைய ஒருவன் இரும்பு வியாபாரம் செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் புண்ணியத்தலங்களுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. கைவசம் உள்ள இரும்பை உடனடியாக விற்பனை செய்யவும் முடியவில்லை. எனவே தனது நண்பனான முத்து என்பவனிடம் சென்றான்.
”முத்து, நான் என் குடும்பத்தாருடன் தல யாத்திரை போக நினைத்திருக்கிறேன். என்னிடம் பத்து பாரம் இரும்பு உள்ளது. அதை உன்னுடைய புறக் கடையில் போட்டு வைக்கிறேன். நான் திரும்பி வந்ததும் அதைப் பெற்றுக் கொள்கிறேன். இந்த உதவியைச் செய்வாயா?” என்று முத்துவிடம் கேட்டான் கண்ணுசாமி..
“ஓ, அதற்கென்ன! தாராளமாக உன்னிடம் இருக்கும் இரும்பை என் வீட்டுக் கொல்லைப் புறத்தில் போட்டுவை. நான் என்ன அதற்குச் சோறும் தண்ணீருமா போடப் போகிறேன். நீ எப்போது வந்தாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்” என்றான் முத்து.
கண்ணுசாமியும் தன்னிடமிருந்த இரும்பு முழுவதையும் முத்துவின் வீட்டில் கொண்டு வந்து போட்டான். பின்னர் அவன் தலயாத்திரைக்குப் புறப்பட்டு விட்டான்.
கண்ணுசாமி ஊரை விட்டுப் போனதும் அவன் கொடுத்துச் சென்ற இரும்பை நல்ல விலைக்கு விற்று விட்டான் முத்து.
பல மாதங்கள் கழிந்தன. கண்ணுசாமி தலயாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பி வந்தான். தன் நண்பன் முத்துவிடம் சென்று, “நண்பா, நான் உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போன இரும்பை திரும்பக் கொடுக்கிறாயா?” என்று கேட்டான்.
“இரும்பா? அதை எலி தின்று விட்டதே! என்றான் முத்து.
விதண்டாவாதமாகப் பேசுகிறவனிடம் நியாயம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்த கண்ணுசாமி, நேராக மரியாதைராமனிடம் சென்றான். முத்து தன்னை ஏமாற்றி விட்டதல்லாமல் விதண்டாவாதமாகப் பேசுவதையும் தெரிவித்தான்.
முழுக் கதையையும் கேட்ட மரியாதைராமன், “நீ வரும்போது அவனிடம் கோபமாகப் பேசியோ சண்டைபோட்டு விட்டோ வந்தாயா?” என்று கேட்டான்.
“நான் அவனிடம் ஒன்றும் பேசவில்லை நேராக உங்களிடம்தான் வருகிறேன்” என்றான் கண்ணுசாமி.
“நல்லவேலை செய்தாய் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். நான் இதற்கொரு யோசனை சொல்கிறேன். அதன்படி நட, மறுநாளே அவன் என்னிடம் வந்து நிற்பான். அப்பொழுது பேசிக் கொள்வோம்” என்று கூறிய மரியாதைராமன் கண்ணுசாமியின் காதில் இரகசியமாக ஏதோ சொல்லியனுப்பினான்.
மறுநாள் கண்ணுசாமி முத்துவின் வீட்டுக்குச் சென்றான். அவன், இரும்பு விஷயமாகத்தான் மீண்டும் தன் வீட்டுக்கு வந்திருக்கிறானோ என்று நினைத்தான் முத்து.
“முத்து, இரும்பு விஷயமாக நான் இப்போது வரவில்லை அது பழைய இரும்புதான்; அதை இலேசில் விற்க முடியாது. விற்கப் போனாலும் வாங்குவதற்கு ஆள் கிடையாது. அது போனதே ஒரு விதத்தில் நல்லதுதான். இல்லாவிட்டால் அதை வேறு சுமந்து கொண்டு என் வீட்டில் சேர்ப்பிக்க வேண்டும்” என்றான் கண்ணுசாமி.
முத்துவுக்குக் கண்ணுசாமியின் பேச்சு பரம திருப்தியாக இருந்தது.
“ஆமாம், ஆமாம், நீ சொல்வது உண்மை தான்” என்றான் முத்து.
“முத்து நேற்று உன் மகன் பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது அவனை என் மனைவி பார்த்து விட்டாள். அவனைப் பார்த்ததும் தன் தம்பி மகன் ஜாடையாக இருப்பது அவளுக்குத் தெரிந்தது. அவளுக்குத் தன் தம்பி மகன் பேரில் கொள்ளை ஆசை. உன் மகனைத் தன்கூட இரண்டு நாட்கள் வைத்திருக்கப் பிரியப் படுகிறாள். அதற்காகத்தான் வந்தேன்” என்றான் கண்ணுசாமி.
“இவ்வளவு பிரியமாகக் கூப்பிடும் போது என்னால் எப்படி மறுப்பு சொல்ல முடியும்? இரண்டு நாட்கள் வைத்திருந்து பின்னர் என் மகனைக் கொண்டு வந்து விட்டு விடுங்கள்” என்று முத்து தன் மகனைக் கூப்பிட்டுக் கண்ணுசாமியுடன் அனுப்பினான்.
இரண்டு நாட்கள் ஆயிற்று. கண்ணுசாமி முத்துவின் மகனைக் கொண்டு வந்து ஒப்படைக்க வில்லை. மூன்று நாட்கள் ஆகியும் கண்ணுசாமி முத்துவின் வீட்டுப் பக்கமே திரும்பவில்லை.
சந்தேகம் கொண்ட முத்து, கண்ணுசாமியின் வீட்டுக்குப்போய் “எங்கே, என் மகன்?” என்று கேட்டான்.
“நான் என்னவென்று சொல்லுவேன்? உன் வீட்டுக்குக் கூட்டி வரும்போது வழியில் ஒரு பெரிய பருந்து வந்து உன் மகனைத் தூக்கிக் கொண்டு போய் விட்டது” என்றான் கண்ணுசாமி.
“குழந்தையையாவது, பருந்தாவது தூக்கிச் செல்வதாவது? என்ன உளறுகிறாய்? உன்னைச் சும்மா விட்டேனா பார்!” என்று ஆவேசமாகக் கத்தி விட்டு நேரே மரியாதைராமனிடம் சென்று வழக்கைக் கூறினான்.
“அப்படியா! நான் கண்ணுசாமியை வரவழைத்து நியாயம் கேட்கிறேன்” என்று கூறிய மரியாதைராமன் கண்ணுசாமியை அழைத்து வர ஆள் அனுப்பினான்.
கண்ணுசாமி வந்ததும், “இவருடைய குழந்தையைப் பருந்து தூக்கிக் கொண்டுபோய் விட்டது என்று சொன்னீர்களாமே! இம்மாதிரி அதிசயம் எங்காவது நடைபெறுமா?” என்று கேட்டான் மரியாதைராமன்.
“ஏன் நடக்காது? இரும்பை எலி தின்னும் போது, குழந்தையைப் பருந்து ஏன் தூக்கிச் செல்லக் கூடாது?” என்றான் கண்ணுசாமி.
“எனக்கும் ஒன்றும் புரியவில்லையே? இரும்பையாவது எலி தின்னுவதாவது” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான் மரியாதைராமன்.
“அய்யா, என்னை மன்னித்து விடுங்கள். நான் தான் இவரை ஏமாற்ற நினைத்து அந்த மாதிரிப் பொய் சொன்னேன். இவருடைய இரும்பு விற்ற பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் மகனைத் திரும்பக் கொடுத்துவிடச் சொல்லுங்கள்” என்றான் முத்து.
“அப்படி வா, வழிக்கு?” என்று கூறிய மரியாதைராமன் இரும்பு விற்ற பணத்துடன் ஐம்பது பணம் சேர்த்துக் கண்ணுசாமிக்கு வாங்கிக் கொடுத்து அவனிட மிருந்த முத்துவின் மகனை முத்துவிடம் ஒப்படைத்தான்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |