இரும்பும் புரட்சியும்




(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
னக்கு ஜோஸியம் தெரியாது. ஆனால். ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வொரு உலோகம் உண்டென்று சொல்லுகிறார்களே – அது உண்மை என்று தோன்றுகிறது. சனி பகவானுக்கு இரும்பென்று சொல்லுகிறார்கள். தத்வ ரீதியாக இரும்புக்கும் புரட்சிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பதுதான் என் கேள்வி. இரும்பை ஆதி மனிதன் உபயோகிக்க அறிந்தபொழுது நாகரிகத்திலே பெரிய மாறுதல் உண்டாயிற்றென்றும், கொழுமுனையை உபயோகிக்க ஆரம்பித்த பிறகு உண்டான புரட்சிதான் விவசாயம் எனவும் அறிஞர்கள் சொல்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் யந்திரங் கள் தோன்றியபொழுதே புரட்சியும் தோன்றிவிட்ட தென்று பொருளாதார நிபுணர்கள் எழுதுகிறார்கள். அவ்வளவு தூரமெல்லாம் போவானேன். நமக்குத் தினசரிப் பழக்கமான பஸ்ஸையே எடுத்துக்கொள்ளுங்க ளேன். புரட்சிகரமான கருத்துக்களையும் சம்பாஷணைகளை யும் பஸ் பிரயாணத்தின்போது எத்தனை தடவை கேட் டிருக்கிறோம்! ரயில் பிரயாணத்தின்போது திடுக்கிடும்படி யான எத்தனை கருத்துக்களையும் அநுபவங்களையும் பெற்றிருக்கிறோம்! புரட்சிக்கு நாற்றங்கால் இரும்பு என்று சொன்னால் என்ன பிசகு?

இதைப்பற்றி எல்லாம் ஏன் எண்ணுகிறேனென்றால். நேற்றுப் பஸ்ஸில் பிரயாணம் செய்தபொழுது, அவ்வளவு புதிய கருத்துக்கள் அவுட்டாக வெடித்தன.
“குழந்தை குட்டி இல்லாத பேர் புண்ணியசாலிகள்.”
“‘தலைகீழாகப் பேசுகிறாயே, வாலிழந்த நரி சமாசாரமா?”
“அதெல்லாம் இல்லை. ஆழ்ந்து யோசித்துப் பாரேன். இரண்டு பேருக்குச் சம்பாதிக்கிறது எப்படி? நண்டும் சிண்டுமாக நாலு குழந்தைகள், வளர்ந்த பெண் இரண்டு, மழுங்கட்டை மக்கள் இரண்டு- இவ்வளவு பேருக்கும் சம்பாதித்துப் போடுவது எப்படி? அதுதான் புண்ய சாலியின் லட்சணமா?’
வெற்றிலை பாக்குக் கடையில் உட்கார்ந்து, கவனமாக இத்தகைய பேச்சைக் கேட்டுக்கொண் டிருந்தேன்.
“ஐயா! காலணா போடுங்க” என்று ஒரு கரகரப்பான குரல் என்னை இழுத்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு பிச்சைக்காரன். இடது பக்கம் முழுவதும் பாரிசவாயு வால் முடங்கிச் சூம்பிக் கிடந்தது. காக்கி அரைக்கை சட்டை ; காக்கி டிராயர்.
“ஐயா! காலணாப் போடுங்க” என்றான் மறுமுறை. நான் காலணாவை எடுத்துப் போட்டேன்.
பிச்சைக்காரர்களில் பலவிதம் உண்டு. காசு போட்ட உடனே, ‘மவராஜனாய் இருக்கணும்’ என்று வாழ்த்துவோர் உண்டு. ‘புண்ணியவான்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு போகிற பேரும் உண்டு. இவன் இந்தக் கோஷ்டிகள் ஒன்றையும் சேரவில்லை. காசை வாங்கிக்கொண்டு பேசாமல் திரும்பி விட்டான்.
சில நிமிஷங்கள் கழித்து வெற்றிலை பாக்குக் கடையைவிட்டு, பஸ்ஸின் முன்புறம் டிரைவருக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். எனக்கு இடது பக்கத்தில் ஓர் இளைஞன் உட்கார்ந்திருந்தான். பிச்சைக் காரனைக் கவனித்ததால் விட்டுப்போயிருந்த சம்பாஷணை மறுபடி கவனத்தைக் கவர்ந்தது.
“அப்படியென்றால் குழந்தை குட்டி இல்லாதவனைப் பாவி என்று எதைக்கொண்டு ருசுப் பண்ணுவாய்?’
”நரகவேதனைப் பட்டால் பாவி. சுகமாய் இருந்தால் புண்யசாலி. அவ்வளவுதான்.”
“நரக வேதனை என்றாயே, எனக்கு வேம்பாய் இருப்பது உனக்குக் கரும்பாய் இருந்தால்? ஒட்டகம் வேப்பிலை தின்கிறதே,உனக்கு இனிக்குமா?”
“ஐயா? காலணாப் போடுங்க” என்ற குரல் மறுபடி கேட்டது. எனக்கு இடது பக்கத்தில் உட்கார்ந்திருந்த வரிடம் யாசகம் கேட்க வந்த குரல்.
என் பக்கத்தில் இருந்த இளைஞன் ஒரு ‘வத்தக் காய்ச்சி?’ இருபது வயது இருக்கும். காதில் வாங்கிக் கொள்ளாமல் உட்கார்ந்திருந்தான். பிச்சைக்காரன் என்னைப் பார்த்துக்கொண்டே, மறு முறை இளைஞனைக் கேட்டான்.
“தம்பி, உன்னைத்தானே! காலணாக் காசு போடு. ஒழைச்சுப் புழைக்க முடியாத ஆத்மா?” என்று தொட்டுக் கேட்டான்.
தொட்டது பிசகாய்ப் போயிற்று.
“போடா, காசு கொடுக்க மாட்டேன்” என்றான் இளைஞன்.
“அப்படிச் சொல்லாதே தம்பி?’ என்று மறுபடி பிச்சைக்காரன் தொட்டுக் கேட்டான்.
அந்தச் சமயத்தில் பிச்சைக்காரனது முகமும், குரலும் பெரிய புதிராய் விளங்கின. வார்த்தைகள் என்னவோ கருணையைத் தூண்டுவனவாய்த்தான் இருந் தன. ஆனால், அவைகளில் ஏறி வந்த குரலோ உறுதி யாய் ஒலித்தது; எனக்குப் பிச்சை போடுவது உங்கள் கடமை என்று று தெளிவாகச் சொல்லுவதுபோன்ற அமுலுடன் ஒலித்தது. அவன் முகத்தைப் பார்த்தேன். அதில் ஒரு கொடுமை கண்களோ, கண்களா, பிச்சுவாக் களா!’ என்ற சந்தேகத்தை எழுப்பின.
இளைஞன் கல்லுப் பிள்ளையாராய் இருந்தான்.
“காலணாக் கொடுக்க மாட்டே? பொறக்கறப்போக் கொண்டுக்கிட்டு வரல்லே. போறப்போக் கொண்டுக் கிட்டுப் போகமாட்டே; பிச்சை கேக்கற ஆளா நான்? காலணாப் போடு” என்று அதட்டினான்.
பிச்சைக்காரன் குரல் என் மனத்தில் ஒருபுறம் பயத்தை உண்டாக்கிற்று. அதற்கு மாற்றாக அவனுக்குக் காலணா தர்மம் செய்திருக்கும் அகம்பாவம் எனக்கு மற்றொரு புறம் தெம்பளித்தது.
”ஏனப்பா? பிச்சை கொடுத்தால் வாங்கிக்கொள்ள வேண்டும். கொடுக்கா விட்டால், போய்விட வேண்டும். கோபித்துக்கொள்வதும் சாபமிடுவதும் அழகில்லையே” என்று நியாயத்தைச் சொன்னேன்.
என்னிடத்தில் என்ன கண்டானோ தெரியவில்லை. அடக்கமான குரலில் சொன்னான்:
“வேறே வழி இல்லிங்க. நியாயத்துக்கு மசிகிற உலகமா இது? அநியாயத்துக்குத்தான் இங்கே ஆட்சி. அழுத பிள்ளைதான் பால் குடிக்குமாம். இந்தக் கை. கால் இருந்தால் நான் பிச்சையா கேட்பேன்?”
என் பக்கத்தில் இருந்த இளைஞன் மனத்தில் என்ன தோன்றிற்றோ என்னவோ!
“பின்னே பாருங்களேன். தொட்டுக் கேட்கிறது. இதெல்லாம் என்ன கல்லடி மங்கத்தனம்” என்று சொல்லிக்கொண்டே ஒரு காலணாவைத் தகரக்குவளையில் போட்டான்.
காசை வாங்கிக்கொண்டதும் எந்த விதமான நன்றியையும் காட்டாமல் பஸ்ஸின் பின்பக்கமாகப் பிச்சைக்காரன் நகந்ந்துவிட்டான்.
“காலணா போடுங்க அண்ணே” என்ற சப்தம் இப்போழுது பின்புறத்தில் கேட்டது. அதே சொற்கள் இரண்டு மூன்று முறை கேட்டது. தடவைக்குத் தடவை குரலில் கடுப்பு விஷம்போல் ஏறிக்கொண்டிருந்தது. இளைஞனைவிட அழுத்தமான பேர்வழிகள் பின்னால் இருப்பதுபோல் தோன்றிற்று. திரும்பிப் பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். வெள்ளையும் சள்ளையுமாக சில மோட்டா ஆசாமிகள் தென்பட்டார்கள். இவன் பிச்சை கேட்டுக்கொண்டே இருந்தான்.
“காலணா போட்டா ஆண்டி ஆயிடமாட்டீங்க, அண்ணே.”
“சரிதான் போடா” என்று ஒருவர் அதட்டினார்.
“என்ன அடா புடாங்கறீங்க. காலணா பிச்சைபோட யோக்கியதை இல்லை. ஜம்பமா வெள்ளைச் சட்டை, மணி பர்ஸோடெ வந்தூட்டீங்க.”
“சும்மாப் போறியா இல்லாட்டி-?”
“ஒதச்சுப்பிடுவியா? பார் வேணா. ஒத்தைக் கைகால் வசமில்லேன்னு பாக்கிறயா? ஒதைச்சுப் பாரு.”
அதற்குள் பஸ்ஸில் கலவரம் உண்டாகி விட்டது. விஷயத்தை முற்றவிடாமல் வேறு யாரோ ஒருவர் அரையணாக் காசைக் கொடுத்துப் பிச்சைக்காரனை மெதுவாக அப்பால் அனுப்பினார். அவன் அப்பால் போய் விட்டபோதிலும் பஸ்ஸில் அமைதி ஏற்படவில்லை. சில நிமிஷங்களுக்குப் பிறகு ஒருவர் ஆரம்பித்தார்.
“அவன் பிச்சைக்காரன் இல்லீங்க; அதனால்தான் அப்படி.”
”நல்லாச் சோல்றீங்களே. அவன் பிச்சைக்கரரன் இல்லை என்றால், நாமா?”
“அப்படி இல்லீங்க, அந்த ஆள் நம்மைப்போல் நன்றாய் இருந்தவன்தான். சம்சாரம் பிள்ளை குட்டி எல்லாம் இருக்கு. இவன் மதுரைத் துணி மில்லிலே வேலை செஞ்சுக்கிட் டிருந்தான். அப்போ இவனைப் பார்க்கணும். இவன் வச்சுக்கிட்டிருந்த மீசையைப் பார்க்கணும்! போதாதகாலம் ; மிஷின் வார்பெல்ட் ஒரு தரம் கழண்டு போய், இவனை அடிச்சுப் புரட்டி இழுத்துவிட்டது. விழுந்தவன் தான். பிரக்ஞை இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனார்கள். ஒரு மாதத்திற்கு மேல் அங்கே இருந்த ஆள் என்னவோ பொழச்சுப் போய்விட்டான். ஆனால் ஒரு பக்கத்துக் கையும் காலும் சுவாதீனம் இல்லா மல் போய்விட்டது. நரம்புகளில் ஏதோ ஆய்விட்டதாம். அவ்வளவுதான்; அத்துடன் அவனுக்கு வேலையும் போய் விட்டது.”
“அப்படி என்றால் சட்டப்படி கம்பெனியில் நஷ்டஈடு கொடுக்க வேணுமே.”
”கொடுக்காமலா இருப்பார்கள்? கொடுத்தார்கள். அதைக்கொண்டு ஒரு பெண்ணைக் கட்டிக்கொடுத்தான். இரண்டு வருஷம் சாப்பிட்டான். கிடைச்சது காலி ஆகி விட்டது. தகரக் குவளையை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிட்டான்.”
“மிஷினிலே வேலை செஞ்ச ஆளா? அதான் சனியன் மாதிரி பிடிச்சுக்கிறான். மூஞ்சியைப் பாருங்களேன், இரும்பிலே செஞ்சாப்பலே?”
”பாவம்!”
“சொல்றோமே ஒழிய, எங்கே அது மாதிரி இருக்கி றோம். பெண்டாட்டி பிள்ளைங்களுக்கு இவன் தினம் சோறு போடவேண்டுமே? ஒரு ரூபாயாவது வேண்டாம்? இவ்வளவு தகராறுக்குப் பிறகு அவனுக்குக் கிடைச்சிருக் கிறது முக்கால் அணாதானே. கோபம் வராதா?”
“அதெல்லாம் சரிதான். இதுக்கெல்லாம் நாமா பிணை? போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ், இல்லாத போனால் கவர்ன்மென்டு. அங்கே போய்க் கல்லடிமங்கத் தனம் பண்ணட்டுமே. பிச்சைக்காரங்களைக் காப்பாத்தர கடமை நம்மதா? வேணுமானால் பிச்சைக்காரர் வரி என்று ஒன்றைப் போட்டு, அவர்களைக் காப்பாற்றுவதற் காக வாங்கிக்கொள்ளட்டும். இப்படிப் பிச்சைக்காரர்கள் வந்து மிரட்டி, தர்மத்தை நமக்குச் சொல்லிக்கொடுக்கிற தென்றால், சும்மாயிருக்க முடியுதா?”
“நீங்க சொல்றது சரிதான். அநியாயம் செஞ்சால் ல் தான் நியாயம் நிலைக்கிறது. கேட்ட உடனே நாமாகக் காலணா ஏன் போடவில்லை. சொல்லுங்கோ? இதுதான் இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாரம்.”
அந்தச் சமயத்தில் டிரைவர் தன் இடத்தில் வந்து உட்கார்ந்ததும் சினிமாச் சுருள் மாதிரி பேச்சு அறுந்து போய்விட்டது, பஸ் நகர்ந்தது.
பக்கத்துப் பஸ்ஸுக்கருகில் பிச்சைக்காரன் சத்தம்:
“காலணாப் போடுங்க அண்ணே. புசல் வருது அண்ணே. இப்பொ வந்ததிலே முந்நூற்று அம்பது பேருங்க. அடுத்ததிலே எவ்வளவோ? காலணாப் போடுங்க அண்ணே! புசல் வருது அண்ணே.”
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |