இருமுகில்கள்





(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டுமே அவசரமாகப் போய்க்கொண்டிருந்தன.- மேலே மோதியதும் ஒன்று மற்றொன்றைப் பார்த்தது.
அவை இருமுகில்கள்!
வெண்மேகம் மேன்மேலும் போய்க்கொண்டிருந்தது; கருமுகில் தாழத் தாழ வந்து கொண்டிருந்தது.
வெண்முகில் கருமுகிலை அசட்டையாகப் பார்த்து கணப்பொழுது கழித்து, “எங்கேயடா புறப்பட்டாய்!’ என்று கேட்டது.
“மண்ணுலகிற்குப் போகிறேன். நீ எங்கே போகிறாய்?”
“சொர்க்கத்திற்கு?”
வெண்மேகம் ஆகாய விமானத்தைப் போல மேன் மேலும் பறக்கலாயிற்று. கருமுகில் உடைந்த ஆகாய விமானத்தைப்மோல ‘விர்’ என்று கீழே இறங்கலாயிற்று.
வெண்முகில் பெருமிதத்தோடு பின்னாற் திரும்பிப் பார்த்தது.
அந்தக் கருமுகில்தான் எவ்வளவு அழகு! அதிலே பளிச்சென்று ஒளிவீசும் அந்த மின்னல் — அது தெய்வீகக் காட்சி!
வெண்முகில் ஏமாற்றத்தோடு தன்னைப்பார்த்துக் கொண்டது. மின்னலில் லேசான தோற்றங்கூட அதனிடம் தென்பட வில்லை.
அது ஆவலோடு மேலே பார்த்தது. விரைவிலேயே தான் விண்ணுலகில் நுழையப்போகும் மகிழ்ச்சியில், கருமுகிலிற்றோன்றிய அந்தத் தெய்வீக ஒளியை அது மறந்துவிட்டது.
சிறிது நேரத்திற்கெல்லாம் அது திரும்பிக் கீழே பார்த்தது.
கருமுகில் எங்குமே தென்படவில்லை. பூமிமட்டும் ஸ்நான அறையிலிருந்து வெளிவரும் இளம் பெண்ணைப் போல தோன்றியது.
மரங்களில் வளைந்த கொடிகள் ‘கிசுகிசு’ மூட்டிய குழந்தைகளைப் போல நகைத்தன. பறவைகள் மரக் கிளைகளில் உட்கார்ந்து தங்கள் உடலைச் சிலிர்த்துக் கொண்டன.
வெண்முகில் சொர்க்க வாசலுக்கே போய்ச் சேர்ந் தது. தான் உள்ளே சுலபமாகப் போய்விடலாம் என்று அது எண்ணியிருந்தது.
ஆனால் காவலாளி அதை உள்ளே நுழைய விட வில்லை.
”உள்ளே ஒரே ஓர் இடந்தான் காலியாக இருந்தது. இப்பொழுது அது நிரம்பிவிட்டது” என்று அவன் சொன்னான்.
தன் பின்னால் வந்த பல வெண்முகில்களை இந்த வெண் முகில் வழியில் பார்த்திருந்தது. அது நினைவிற்கு வந்ததும், ‘எல்லாம் நமக்குப் பின்னால் வந்தனவே தவிர, முன்னால் ஒன்றுகூட இல்லையே!’ என்று அது நினைத்தது.
வெண்முகிலுக்கு ஒரே திகைப்பாக இருந்தது. “சொர்க்கத்தில் இருந்த அந்த இடம் யாருக்குக் கிடைத்தது” என்று அது கேட்டது.
‘ஒரு கருமுகிலுக்கு!’ என்று காவலாளி சொன்னான்.
‘கருமுகிலுக்கா?’
“ஆம்! வெப்பத்தால் கொதித்த மண்ணுலகைக் குளிர் விப்பதற்காக அது தன் வாழ்க்கையை – தன்னிடமுள்ள அனைத்தையும் – கொடுத்து விட்டது!” என்று ஆகாய வாணி பேசியது.
– வி.ஸ.காண்டேகர் எழுதிய ‘வெண்முகில்’ என்ற நாவலில் வரும் உருவகக் கதை.
– முல்லை கதைகள், 1945ல் முல்லை இதழில் வெளிவந்த கதைகள், தொகுத்தவர்: முல்லை பி.எல்.முத்தையா, முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, முல்லை பதிப்பகம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |