இருண்ட மேகங்கள்
கதையாசிரியர்: தேவன் யாழ்ப்பாணம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 17, 2025
பார்வையிட்டோர்: 457
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யுத்த மேகங்கள் உலகத்தைக் கௌவின. “இதோ! உலகத்தைப் பந்தாடுகின்றேன் என ஆரம்பித்தான் ஹிட்லர். பாவம்! சேம்பர்லேன் குடைசகிதமாய் ஜேர்மனிக்குப் பறந்தார். சமாதானமென்பது அவர் கைக்குள் அகப்பட மறுத்துவிட்டது. அந்த நல்ல மனுசன் சொன்ன வார்த்தைகளை ஹிட்லர் கேட்க வில்லை. கெடுகுடி சொற் வேகப் கேளாதுதானே! அதிசய ஆயுதங்கள், மின்னல் படையெடுப்புகள், நிபந்தனையின்றிச் சரணாகதிகள், வெற்றிகர மாகப் பின்வாங்குதல் இப்படிப் பல செய்திகள் உலகத்தை உலுக்கின. சமயம் பார்த்துக் குள்ளயப்பானியரும் குட்டையைக் குழப்ப முயன்றார்கள். பயமின்றி யுத்த செய்திகளைத் திண்ணைப் பேச்சாய் நினைத்து வந்த கிழக்கு நாடுகள் நடுங்க ஆரம்பித்தன. தங்கள் ஊரில் குண்டு விழுந்ததா என்று அறிய ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள ரேடியோ நிலையங்களைத் திருப்பிவிட்டுக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தனர். யப்பானியர் சீனத்திற் செய்த அநியாயங்களை யும் அட்டூழியங்களையும் கேள்விப்பட்டவர்கள் நடுங்கினார்கள். யப்பானியர் கைப்பற்றிய நாடுகளிலுள்ள மக்களைக் குரூரமாக நடத்தியிருக்காவிட்டால் அவர்களுடைய நிலை இன்று வேறா யிருக்கலாம். சரணாகதியடைய நேர்ந்திருக்காது. சமரசம் செய்து கொண்டு பலம்கொண்ட ஒரு ஏகாதிபத்தியமாக இன்று திகழக்கூடும். அடங்கி ஒடுங்கிப்போயிருக்க வேண்டியிருக்காது. தன் மக்களின் இரத்தத்தை, வேர்வையைப் பிறநாடுகளுக்குப் பொருள்களாக ஏற்றுமதி செய்து மலிவாக விற்பனை செய்தபோதெல்லாம் இருந்த நோக்கம் என்ன? பின்பு கைவசம் நாடுகள் வந்ததும் மிருகங்களாக மாறி ஆர்ப்பாட்டம் பண்ணியது ஏன்? இதெல்லாம் சர்வதேசச் சிக்கல்.
தகரமும் றப்பரும் ஏராளமாக விளையும் நாடு மலாயா. யுத்த தேவைகளுக்கு இன்றியமையாதவை இவை. இச் செல்வச் செழிப்பைத் தவிர, கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் ஒரு கேந்திரஸ்தானமாக விளங்குவதும் மலாயா. ஆகவே என்று அங்கே யப்பான் குதிக்குமோ என்று எல்லோரும் பயந்தார்கள். மலாயாவில் அந்நாட்டவரிலும் பார்க்கப் பிறநாட்டவரே அதிகம். எல்லாம் வந்தேறு குடிகள்தான். “மலாயா மலாயாக்காரருக்கே” என்றொரு கூச்சலை அங்கே கிளப்பினால் அத்தனை பரந்த செல்வம் நிறைந்த நாட்டை அனுபவிக்கப் போதிய மக்கள் மிஞ்சமாட்டார்கள். வந்து குடியேறியிருப்பவர்களும் அங்கே பலகாலம் வாழ்ந்த உரிமையைக் கைவிடத் தயாராயிருக்க மாட்டார்கள். சீனர், ஜப்பானியர், இந்தியர், இலங்கையர், வெள்ளையர் வாழ்ந்தது மட்டுமல்ல, அங்கே சகல துறைகளி லும் முக்கிய பதவிகளை வகித்தும் வந்தனர். வியாபாரம், நிர்வாகம்,தொழில், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம்… எல்லா வற்றிலும் எல்லோருக்கும் பங்கு இருந்தது. இலேசில் கைவிட மாட்டார்கள்.
ஆனால், யப்பானியர் கதவிலே தட்ட ஆரம்பித்த போது மூட்டை முடிச்சுகளைக் கட்ட அன்னியர் தயங்கவில்லை. இருந்த சொத்தையெல்லாம் பணமாக்கி, தங்கம், வெள்ளி, வைரமாக் கிக்கொண்டு பிரயாணத்துக்கு ஆயத்தம் செய்தார்கள். சிலர் கிடந்ததையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று ஓட ஆரம்பித்தார்கள். எங்கேயும் சாவு காத்திருந்தது. கடலிலே, காற்றிலே தரையிலே கிழக்கே, மேற்கே… எங்கும் ஆனால், உறவினர்கள் நடுவே, சொந்தமான வர்கள் மத்தியிலே உயிரைவிடுவது மேல் என்று கருதி ஓட்டம் பிடித்தார்கள். அங்கேயே தங்கி அகப்பட்டதைச் சுருட்ட நினைத் தவர்கள் அரை விலைக்கும், கால் விலைக்கும் இனாமாகவும் கிடைத்ததையெல்லாம் வாங்கிக் கொண்டார்கள்.
கப்பல்களில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. உயிர் அத்தனை வெல்லமாகிவிட்டது. சொகுசு தேடு கிறவர்கள் எல்லாம்… முதலாம் வகுப்புப் பிரயாணிகள் கூட… இப்பொழுது இடம் கிடைத்தாற் போதுமென்று நினைத்தார்கள். மழை, பனி, வெயில் முதலியவற்றைப் பற்றிக்கூடக் கவலைப் படவில்லை. மேல் தட்டிலே, திறந்த வெளியிலேயானாலும் ஊருக்குப் போனால் போதும் என்றுதான் எல்லோரும் நினைத் தார்கள்.
“சின்கீ றப்பர்த்தொழிற்சாலை” முதலாளி ஸ்மித்துரை தன் சீன மனைவியைக் கைவிட்டு ஓடுவதற்குக் கூடத் தயாராயி ருந்தார். இருட்டடிப்பு, அபாய அறிவிப்பு, ஆகாயத் தாக்குதல் பாதுகாப்புக் கிடங்குகள் இப்படிப் புதிது புதிதாக எவ்வளவோ முளைத்தன. பட்டினங்களில் மட்டுமல்ல… எங்கோ இருந்த குவா லபாருவிலும் கூட, மிலிடரி மோட்டார் வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களும், காக்கி உடைகளும், உருக்குத் தொப்பிகளும், பலசாதிக்காரரான பட்டாளக் காரரும், அவர்களுடைய தாடி மீசைகளின் கோணங்கிக் கோலங்களும், அவர்கள் பேசிய விளங்காமொழிகளும், தெருவிலே பெண்களைக் கண்டால் அவர்களுடைய கண் சாடைகளும் வினோதக் கூச்சல்களும் வர வர அதிகரித்தன.
ஏதோ, எங்கோ நடக்கிறது. பலர் பலமாதிரிப் பேசிக் கொண்டார்கள். பத்திரிகைகளை விழுந்து விழுந்து படித்தார் கள். அபாயக் குழல் ஒத்திகைக்காக ஊதுவதும், கையிலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு கிடங்குகளில் மறைந்து நின்று தலையை வெளியே நீட்டுவதும், சிலர் காயப்பட்டவர்கள் மாதிரி நடிப்பதும், அவர்களுக்குச் சிகிச்சைசெய்வதும், தண்ணீர் அணைக்கும் யந்திரங்கள் மணியடித்துக் கொண்டு வருவதும், பம்புகளை வைத்துத் தண்ணீர் அடிப்பதும், மண் சாக்குகளை அடுக்கிவைப்பதும்… இவையெல்லாம் தோட்டப் பாடசாலைச் சிறுவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
இந்த வேடிக்கை வெகுநாளைக்கு அப்படியே இருக்காது என்பது தெரிந்ததும்தான். கோபாலபிள்ளை வீட்டில் என்ன செய்வது என்ற பேச்சு எழுந்தது. சரஸ்வதி தன் கணவன் காலடியிலேயே கிடந்திருப்பாள் முன்பென்றால், ஆனால் இப்பொழுது அவளுக்கு தன் மூன்று குழந்தைகளைப் பற்றிய எண்ணமே தலைதூக்கி நின்றது. கோபாலபிள்ளையோ “நமக்கு மட்டும் தானா? எல்லோருக்குந்தானே. வருவது வரட்டும்” என்றார். ஆனால் அவளுக்கு அவரைப்போல் திடமாயிருக்க முடியவில்லை. சில நாட்களுக்கிடையில் கோபாலபிள்ளை
மனதை மாற்றவேண்டியதாயிற்று. முதலில் மனைவியையும் குழந்தைகளையும் கப்பலில் அனுப்பிவிடுவது, கடைசியில் ஆபத்து நெருங்கும் சமயம் அவரும் இலங்கைக்கு வந்து விடுவது என்று முடிவாயிற்று. கப்பலில் ஒழுங்கு செய்தார். ரங்க சாமிக்குத் தந்தி பறந்தது.
வீட்டிலுள்ள பெட்டிகளில் மூன்று பெரிய பெட்டிகளில் உள்ள விலையுயர்ந்த யாவற்றையும் ஒழுங்கு செய்ய ஆரம்பித் தனர். அதை எடுப்போம் இதை விடுமோமென்று பேசிக்கொண் டிருக்க நேரமில்லை. கடைசியாக ஆறு பெட்டிகளில் கொண்டு போகவேண்டிய யாவும் அடங்கின. ராஜமனோகரன் மட்டும் விடாப்பிடியாகத் தன் சிறிய கைப் பெட்டியையும் கொண்டு போக வேண்டுமென்று அடம் பிடித்தான். உன் பிரியப்படி செய் என்று அவனை விட்டு விட்டார்கள். அவன் தன்னுடைய பொருள்களைச் சேகரித்துக் கொண்டிருந்தான். எல்லாப் பெட்டி களையும் பூட்டிவிட்டு வீட்டைச் சுற்றிப்பார்த்த சரஸ்வதி சுவரிலே தொங்கும் தன் தாயின் படத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு யோசித்தாள். “இங்கே கொடு அம்மா! என் பெட்டியில் இடம்இருக்கு” என்று அதைப் பிடுங்கிக் கொண்டான் ராஜமனோகரன்.
கோபாலபிள்ளை துறைமுகம்வரை போய்த் திரும்புவது என்று திட்டமிட்டிருந்தார். இந்த அமளியில் இராணுவப் பொலி ஸார் ஸ்ரீமதி ஸ்மித்துடைய சீன வேலைக்காரனை யப்பானிய ஐந்தாம் படை உளவாளி என்ற சந்தேகத்திற் கைது செய்து கொண்டு போயிருப்பதாக யாரோ வந்து சொல்லிவிட்டுப் போனார்கள். அதைப்பற்றி யோசிக்கப் பொழுதில்லை. ரயிலுக்குப் போனார்கள். இராணுவ வீரர்களுக்கு ஒதுக்கி வைக்கப் பட்டதுபோக பிரயாணிகளுக்குப் பெட்டிகள் குறைவு. எப்படியோ ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டார்கள். சுப்பன் கண் களிலிருந்து கண்ணீர் ஓட ஆரம்பித்தது. அவன் கூடவே வந்திருந்த வேலைக்காரச் சிறுமி ராஜமனோகரனைக் கட்டி முத்தமிட்டாள். சாதாரணமாகவே பிரிவென்றால் நெஞ்சைப் பிளக்கும். அதுவும் இந்தச் சூழ்நிலையில்… இந்தப் பிறப்பில் மீண்டும் சந்திப்போமோ என்ற சந்தேகத்தில்… உருக்கமாயிருந் தது அந்தக் காட்சி. எஜமானர்… வேலைக்காரன் என்பதெல்லா வற்றையும் காணோம். துன்பத்திலும் துயரத்திலும் மனிதர் ஒற்றுமை எய்துவார்கள் என்பது உண்மைதான். கழுத்திலிருந்த ஒரு தங்கச் சங்கிலியைச் சரஸ்வதி கழற்றி அந்த வேலைக் காரச் சிறுமியின் கையில் கொடுத்தாள். “சுப்பா, அந்தப் பசு மாட்டை நீயே வைத்துக்கொள்” என்றாள். ரயில் ஓடத் தொடங் கியது. சரஸ்வதி மலாயாவில், கால் வைத்ததிலிருந்து சென்ற பதினெட்டு ஆண்டுகளையும் ஒரு கணம் நினைத்தாள்.
யப்பான்காரன் காத்திருக்கவில்லை. வெள்ளைக் காரர் அயர்ந்திருந்த சமயம் பார்த்துக் குண்டைத் தூக்கிப் போட்டான். மேல்நாட்டில் அவனுடைய சகபாடிகள் அடைந்த வெற்றிகள் அவனுக்கு வெறியை ஊட்டியிருக்கவேண்டும். அவர்களோடு ஒப்பந்தம் கூடவல்லவா செய்திருக்கிறான்! அச்சு நாடுகளின் ஆர்ப்பாட்டம் நேச நாடுகளைக் கதிகலங்கச் செய்து கொண்டிருந்தபோது… டிஸெம்பர் மாதம் 1941ஆம் ஆண்டு… கோபாலபிள்ளையின் குடும்பம் ஊருக்குப் புறப்பட்டுவிட்ட அன்று நாளும் நட்சத்திரமும் குறிப்பிட்டுவிட்டான். சிங்கப்பூரில் முதல் தாக்குதலிலேயே இரண்டு பிரமாண்டமான கப்பல்கள் மூழ்கின. அதே தினத்தில் அமெரிக்காவில் “பேர்ல்” துறை முகத்திற் சேதம் கொஞ்சமல்ல. சரித்திரம் கண்டும் கேட்டுமிராத முறையில் தாக்குதல் நடந்தது. “தற்கொலைக்குழாம்” ஒன்றாம் உயிரைக் கொடுத்தார்கள். ஆகாய விமானங்கள் கோழிக்குஞ் சைக் கண்ட வல்லூறுகள் போல மனிதரைக் கண்டதும் அலறிக் கொண்டு தரையை நோக்கி வந்தன. யந்திரத் துப்பாக்கிகளி னால் அகப்பட்டவர்களைச் சுட்டுத்தள்ளின. தனியொருவனைக் கண்டாலே போதும்… யாரென்ற சோதனையேயில்லை… யந்திர துப்பாக்கிக்கு இரைதான். எங்கும் கூக்குரல், அழுகை, ஓலம், பிணக்குவியல், தீ!
ரயில் குடுகுடு என ஓடலாயிற்று. ஒருவரில் ஒருவர் சாய்ந்தபடி தூங்கி வழிந்துகொண்டிருந்தனர். குடியும் பாட்டு மாக இருந்த இராணுவ பிரயாணிகள் கூட ஓய்ந்துவிட்டனர். அப்பொழுது ஒரு பெட்டியைக் கோபாலபிள்ளை கஷ்டப்பட்டுத் திறந்தார். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சிலருக்கு அது இடைஞ்சலாக இருந்தது. ஆனால் பிரயாணம் சம்பந்தப்பட்ட எதையோ அதற்குள் தேடுவதற்காகவே அவர் அதைத் திறந்தார். சரஸ்வதியும் விழித்துக்கொண்டாள். அவள் மடியிலே தலைவைத்துப் படுத்திருந்த ராஜமனோகரனும் எழுந்து விட்டான். அந்தப் பெட்டியிலிருந்து ஒரு காகிதக் கட்டைக் கையிலெடுத்தாள் சரஸ்வதி. “அதென்ன?” என்று கேட்டார் கோபாலபிள்ளை “காகிதங்கள்” என்றாள் சரஸ்வதி. அவர் அந்தப் பெட்டிக்குள் திரும்பவும் எதையோ தேட ஆரம்பித்தார். றப்பர் நாடாக்களாற் சுற்றிக் கட்டப்பட்டிருந்த காகிதங்களைக் கையிலேயே வைத்துக்கொண்டிருந்தாள் சரஸ்வதி. “அதென்ன அம்மா?” என்று ராஜமனோகரன் கேட்டான். “இந்தா, இதை உன் பெட்டியில் நீயே வைத்துக்கொள்” என்றான்.
பெண்கள் சில காரியங்களைச் செய்யும்போது காரணங் களைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. கடவுள் அவர்களுக்கு மேல திகமாக ஓர் அறிவைப் படைத்திருப்பானோ? ஆண்கள் சில சமயம் இதைச் செய்வோமா விடுவோமா என்ற யோசனையி லேயே மூழ்கி, வீண் கால விரயமும் செய்து, கடைசியில் ஒன்றையுமே செய்யாமல் சும்மா இருந்து விடுவதுமுண்டு. ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படித் தர்ம சங்கடமான நிலைமைகளில் யாரோ வந்து காதில் எதைச் செய்வது என்று ஓதி விடுகிறார்கள். அவர்கள் அதைச் செய்யாமல் விடவும் மாட்டார்கள். காரணங் கேட்டாலும் அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. பின்னால் அவர்கள் போன பாதைதான் சரியென்று படும். அற்ப விஷயங்களில் கூட இந்த உள்ளுணர்ச்சியை நம்பியே பெண்கள் வாழ்கிறார்கள். நீலப் புடவையை வாங்க லாமா அல்லது சிவப்புத்தான் எடுப்பாயிருக்குமா என்ற கேள்வி எழுந்தால் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அப்புறம் அவர்கள் வாங்கிய புடவைதான் பொருத்தமானது என்ற தெரியவரும். இந்தச் செலவைச் செய்யலாமா வேண்டாமா என்ற ஆராய்ச்சி நேரும்போது ஆண்களால் ஒரு முடிவுக்கும் வரமுடியாது. பெண்களால் ஒரு திட்டமான முடிவுக்கு வரமுடியும். ஆனால் காரணந்தான் காட்டமாட்டார்கள். அதனாலேயே வீட்டுச் செலவுப் பொறுப்பைப் பெண்களிடம் விட்டுவிடுவது சிறந்ததென்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அது கிடக்கட்டும், சரஸ்வதி அந்தக் காகிதங்களை ஏன் ராஜமனோகரனிடம் கொடுத்தாள்? அவளுக்கே அது தெரியாது. அதை அவனிடம் கொடுக்கவேண்டும் போல் தோன்றியது. கொடுத்தாள்.
ரயிலின் இரைச்சல் அதிகமாகிவிட்டதுபோலிருந்தது. என்னவென்று நிச்சயிக்க முடியாத சத்தம் ஒன்று காற்றிலே மிதந்துவந்தது. ரயிலில் இருந்த அத்தனை பிரயாணிகளும் விழித்துக்கொண்டார்கள். என்னவென்று பார்க்க வெளியே தலையை நீட்டினார்கள். ரயிலின் வேகம் குறைந்தது. தண்ட வாளங்களில் ரயில் சக்கரம் உராயும் சத்தம் கேட்டது. பெட்டி களோடு பெட்டிகள் மோதிக்கொள்வது போலும் சத்தம் கேட்டது. ரயில் நின்றே விட்டது.
நடுப்பாதையில் ரயில் நின்றாற் சந்தடியின் அமளி தாங்க முடியாது. அந்த ரயிலில் இருந்தவர்களிற் சிலர் குதித்து இறங் கினார்கள். வேறு சிலர் “என்ன சங்கதி?” என்று கேட்டார்கள். என்ன நடக்கிறதென்றே தெரியாமற் சிலர் விழித்தார்கள். அதிக நேரம் பிடிக்கவில்லை. ஆகாயத்திற் கூட்டம் கூட்டமாக விமானங்கள் தோன்றின. குண்டுகள் வீசப்பட்டன. வெடிச் சத்தமும் துப்பாக்கி வேட்டுகளும் காதைச் செவிடுபடுத்தின. அந்த ரயில் நின்ற இடம் திமிலோகப்பட்டது. “யப்பான்காரன்!” என்று ஒரு குரல் கிழித்துக் கொண்டு கேட்டது. அதற்குப் பிறகு ரயிலிலிருந்தவர்கள் வாசல்கள் வழியாகவும் சன்னல்கள் வழி யாகவும் முண்டியடித்துக்கொண்டு வெளியே இறங்கினர். இறங்கியவர்களில் சிலர் ஓடினார்கள். எங்கே என்று தெரியாமல், சிலர் தரையில் விழுந்து படுத்தார்கள். சிலர் உறவினரையும் கூட வந்தவர்களையும் உரக்கக் கூவி அழைத் தார்கள். சிலர் தோத்திரப் பாடல்கள் பாடினார்கள். இதற்கெல் லாம் அதிக அவகாசம் கிடைக்கவில்லை.
வந்த யப்பானியர் தங்கள் கடமையைக் கண்ணுங் கருத்துமாகச் செய்தார்கள். மனித வேட்டையாடுவதிற் கைதேர்ந்த புலிகள் என்று நிரூபித்துவிட்டார்கள். ஒரு குண்டு ரயில் நின்ற இடத்திலிருந்து கொஞ்சத் தூரத்துக்கு அப்பால் விழுந்து காது செவிடுபடும் படியான ஓசையோடு வெடித்து ரயில் பாதையை இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டது. சில நிமிஷங்களுக்கு ஆகாய விமானங்கள் கீழே வருவதும் மேலே ஏறுவதுமாயிருந்தன. ஒவ்வொன்றும் கீழே வந்து திரும்புவதற் குள் பலருடைய உயிரை வாங்கி விட்டது. எதிர்ப்பே இல்லாத இடத்தில் அவர்களுடைய அட்டகாசம் சொல்லத்தரமன்று. வந்த வேலை முடிந்ததும் விமானங்கள் திரும்பின.
எங்கோ தொலைவில் அபாயம் நீங்கிவிட்டது என்ற சங்கும் ஒலித்தது. இங்கே வீறிட்டழும் குழந்தைகளும், வலி தாங்காமல் கதறுகிறவர்களும் கையை இழந்தவர்களும், காலை இழந்தவர்களும், பற்றியெரியும் தீயிற் பொசுங்கிக்கொண்டிருந் தவர்களுமாக ஒரே பரிதாபமாக இருந்தது. “அம்புலன்ஸுகள்” வேகமாய் வந்தன. ஆனால் அநேகம் பேருக்கு அம்புலன்ஸ் வேண்டியிருக்கவில்லை. சவப்பெட்டிதான் வேண்டியிருந்தது. அப்படிப்பட்டவர்களை அகப்பட்ட துணியால் மூடிவிட்டு காயப் பட்டவர்களையும் வைத்திய உதவி தேவைப்பட்டோரையும் தேடித்திரிந்தார்கள் ஏ. ஆர். பிக்காரர். இராணுவப் பிரயாணி களிலே தப்பினவர்கள் அவர்களுக்கு ஒத்தாசை புரிந்தார்கள். அவர்களில் ஒருவர், “நல்ல வேளை! ரயிலில் ஒரு பெட்டி நிறைய வெடிமருந்து இருந்தது. அதில் தீப் பிடிக்கவில்லை. இல்லாவிட்டால் ஒருவருமே மிஞ்சியிருக்க மாட்டார்கள்.” என்றார்.
கோபாலபிள்ளைக்கு வலது தோள் பிய்ந்து போய் விட்டது. அவர் ஒரு கையால் அதை அழுத்திப் பிடித்தபடியே காயப்பட்ட கரத்திற் சகுந்தலையைப் பிடித்துக்கொண்டு அங்கு மிங்கும் பார்த்தார். சந்திரமனோகரனுக்கு நெற்றியிலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. விறைத்துப்போய் உட்கார்ந் திருந்தான். அழுகுரல் கேட்டது. சந்தேகமில்லை. ராஜமனோ கரன் தான் தன் கைப்பெட்டியுடன் கதறிக்கொண்டிருந்தான். அவனுக்கும் இலேசான காயங்கள் உடலில். அவன் அதற்காக அழவில்லை.
ஒரு வெள்ளைச் சீலையினால் சரஸ்வதியின் உடலை மூடினார்கள். அவளுடைய உடைகள் ரத்தத்தில் தோய்ந்திருந் தன. முகத்தில் மட்டும் ஒருவிதமான காயமும் இல்லை. நிஷ் களங்கமாக, நிச்சலனமாக இருந்தது. போர்த்திய உடலைத் திறந்து முகத்தைமட்டும் பார்த்தவர்கள் இறந்துபோய்விட்டாள் என்றே சொல்லமாட்டார்கள். அவளுக்கென்ன? எந்தப் பெண்ணும் ஆசைப்படும் பெரும் பேறு அவளுக்குக் கிடைத்தது. அவரிருக்கிற பொழுதே அவள் போய்விட்டாள். நெற்றியில் குங்குமம் மறையவில்லை. கைகளில் வளையல்கள் குலையவில்லை. கழுத்துத் தாலியை அகற்றவில்லை. இதற்கு மேல் அவள் விரும்பக்கூடிய பாக்கியம் வேறேது?
– தை 1956, கேட்டதும் நடந்ததும்.
– தேவன் யாழ்ப்பாணம் சிறுகதைகள், முதல் பதிப்பு: மே 2004, யாழ் இலக்கியவட்டம், யாழ்பாணம்.