தென்பிராந்திய ஜுரம்
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2026
பார்வையிட்டோர்: 70
(1981ல் வெளியான ஆர்மேனியச் சிறுகதை 1991ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆயிரம் வருஷங்கள் ஆனாலும்கூடத் தென்பிரதேச மக்கள் கிழவேட்டைக்காரன் பாபெஹை நினைவு வைத்திருப்பார்கள். ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகும், பாப்பி வயல்களிலிருந்து திரும்பி வருகிற, வெயிலில் காய்ந்து களைத்துப்போன விவசாயி கள் அந்தக் குன்றின் சரிவு மீது நின்று, பாபெஹைப்பற்றித் தங்கள் மூதாதையர் பின்னியிருக்கும் கதைகளை நினைவுகூர்வர்.
கிழவன் சொன்னதை நான் நினைத்துக்கொள்கிறேன்! “நான் மூன்று முறை கீழே இறங்கி, நாணல் காட்டினுள் போனேன். ஆனால், புலிகளைத் தேடி அல்ல. அங்கே வெகு தூரத்தில் ஒரு இடத்தில் நீரூற்று ஒன்று இருக்கிறது; அதன் நீர் ஆகாய நீல நிறத்தில் இருக்கும் என்று என் தந்தை என்னிடம் சொல்வது வழக்கம். அந்த நீரூற்றைக் கண்டுபிடிக்க நான் ஆசைப்பட்டேன்.”
நாங்கள் மெதுவாகச் சிரிப்போம். ஏனெனில் பாபெஹ் ரொம்ப முதியவன்.
பாபெஹ் அவனது வாழ்நாளில் அந்த நீரூற்றைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால்,நொறுங்கிப்போன அவனது மிச்ச சொச்சங்களை நாங்கள் கண்டோம். அவற்றை எடுத்து வந்து இங்கே குன்றின் சரிவில் புதைத்தோம்.
பாபெஹுக்குப் பிறகு, கிராமத்தில் சாய்ஃபி எனப் பெயர் கொண்ட மூன்று சகோதரர்கள் தோன்றினார்கள். அவர்களில் மூத்தவன் பெயர் வாலி – வாலி சாய்ஃபி. அவன், வரிசையாகச் சென்ற அமெரிக்க லாரிகளைக் கொள்ளையடித்து வருவதற்காகத் தன் சகோதரர்கள் இருவரையும் அனுப்பினான். ஆனால், நாங்கள் கிராமத்திலேயே இருந்தோம். அவன் ஒரு அமெரிக்கனுக்கு நாற்பது புட்டி பேரீச்சை மதுவும், நாற்பது கிலோகிராம் கஞ்சாவும் கொடுத்து, பதிலுக்கு ஒரு சாதாத்துப்பாக்கியும் ஒரு பெட்டி நிறையத் தோட்டாக்களும் பெற்றுக்கொண்டான் என்று ஜனங்கள் சொன்னார்கள். அவன் நாணல் காட்டுக்கு வழக்க மாகப்போவான். பாபெஹ் போல அவன் கீழே இறங்கி நாணல் காட்டுக்குள்ளே போகவேண்டிய அவசியம் இல்லை. தூரதரிசிக் கண்ணாடி பொருத்திய ஒரு சாதாத் துப்பாக்கி அவனிடம் இருந்தது. நாணல் காட்டிலிருந்து அரை மைல் விலகி அவன் உட்கார்ந்திருப்பான். தனது நாணல் காட்டைவிட்டு மடத்தன மாக வெளியே வருகிற எந்தப் புலியையும் அவன் சுட்டுவிடுவான். பிறகு தனது இரையைத் தோளில் சுமந்துகொண்டு கிராமத்துக்குத் திரும்புவான்.
அவன் எப்படி நடந்தான்!
அந்தக் காலத்தில், ஒரு ஆகஸ்டு மாத நடுப்பகலில், அஸிரியன் ஜியார்ஜின் திறந்தவெளி விடுதியில் நாங்கள் ஜின் குடித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் சோர்வடைந்து, ஒரு வரை ஒருவர் பார்த்தபடி, வெயிலால் பாதிக்கப்பட்டு எங்களில் எவராவது ஒருவர் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்குவதை எதிர் பார்த்துக் காத்திருந்தோம். நாங்கள் ஐந்து பேர்: பூக், ஹேரி, ரிவே என்று மூன்று அமெரிக்கப் போர்வீரர்கள்; கூர்ஜென் ஹோவ் ஹான்னிசியன் எனும் பெயர் உடைய செம்படை வீரன் ஒருவன்; மற்றும் நான்.
ரஸ்தாவுக்கு அப்பால், மறுபுறத்தில், கோபுரம்போல் ஒரு மலை நிமிர்ந்து நின்றது.குகே மார் – பாம்பு மலை – என்று பூர்வ குடியினர் அதைக் குறிப்பிடுவர். அதன் அடிவாரத்தில் உள்ள பாதை வழியாக விவசாயிகள் வீடு திரும்பிக்கொண்டிருந் தார்கள். பாப்பி வயல்களிலிருந்து அவர்கள் திரும்பி வந்தார்கள். தூரத்தில், குனிந்து நடந்த கறுப்பு மனிதர்களையும், அவர்கள் காலடிகளிலிருந்து கிளம்பிய வெள்ளைப் புழுதியையும் நாங்கள் பார்க்க முடிந்தது. சரிவான பாதை முடிவுக்கு வந்த இடத்தில், அவர்கள் எங்களுக்குத் தென்படாமல் மறைந்தார்கள். வெகு நேரத்துக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் தோன்றினார்கள். மாலை வேளையில் குளுமையாக இருக்குமா இராதா என்று அவர்கள் முகங்களைப் பார்த்து நாங்கள் யூகிப்பது வழக்கம்.
அப்புறம் வாலி சாய்ஃபி, தான் கொன்ற ஒரு புலிக் குட்டியைத் தோள்மீது சுமந்துகொண்டு காட்சி அளிப்பான்.
ரஸ்தாமீது அவன் ஷா -இன்-ஷா (சக்கரவர்த்தி) மாதிரி நடப்பான். தனது மஞ்சள் மீசையினூடாக எங்களை நோக்கு வான். எங்களுக்கு வணக்கமாகத் தலையசைப்பான்.
கூர்ஜென் மகா எரிச்சல்கொண்டு, தனது தானியங்கித் துப்பாக்கியின் கட்டையை உள்ளங்கையால் அறைவான்.
“என்னை அனுமதியுங்கள்! நான் அந்த ஆளை ஒரு நாயைச் சுடுவதுபோல் சுட்டுத்தள்ளுவேன்… பாபெஹுக்குப் பிறகு இவன் என்ன மனுஷன்…? சாதாத் துப்பாக்கியும் அவன் தோரணையும்!” என்று கூறுவான்.
ஒரு நாள் நான் சட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். “நாளை,விடியலுக்கு முன்னே, நான் நாணல் காட்டுக்குப் போகிறேன். நீல நீரூற்றை நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று சொன்னேன்.
நாங்கள் மீண்டும் அஸிரியன் ஜியார்ஜின் திறந்தவெளி விடுதியில் இருந்தோம்.
எவ்விதமான காரணமும் இல்லாமலே எல்லோரும் எழுந்து நின்றார்கள். அவர்களது விசித்திரக் கண்களை நான் வெகுநேரம் கவனித்தேன். அவர்கள் பார்வை, வழக்கமில்லாத விதத்தில் “தெற்கத்திய ஜுரம்” என்று கூறுவதாக எனக்குப் பட்டது.
பிறகு, பனிப்படலத்தில் நான் கூர்ஜென்னைப் பார்த்தேன். அவன் தனது கைக்கடியாரத்தைப் பார்த்துவிட்டு வெளி யேறினான். போர் வீரர்களான ரிவே, ஹேரி, பூக் மூவரும் வேறு திசைகளில் போனார்கள். அவர்களில் ஒருவன் தரையில் விழுந்து, சாக்கடையை நோக்கி உருண்டான். அஸிரியன் ஜியார்ஜ் அவனை அருகே இழுத்து, அவன் மண்டைமீது ஒரு குளிர்ந்த துவாலையைப் போட்டான். மற்றவர்கள் பிரிந்து மறைந்தார்கள்.
உதயத்திற்கு முன்பே நான் புறப்பட்டேன். இரவில் காற்றே இல்லை. தெற்குப் பிரதேச ஒலியாந்தர் மரங்களின் அகல இலைகள் தளர்ந்து தொங்கிக்கொண்டிருந்தன. வழியில் நான் கிராமவாசிகளைச் சந்தித்தேன். நாங்கள் பேசினோம். உலகத்தின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் மேகங்கள் மறைந்து விட்டன; மழையே இல்லை என்றும், பொதுவாக உலகில் என்ன தான் இருக்கிறது என்றும் அவர்கள் அனைவரும் வருத்தப் பட்டார்கள்.
“நீங்கள் இந்த ரோடு வழியே எங்கே போகிறீர்கள், ஐயா?” என்று அவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கேட்டார்கள்.
“இவ்வழியே போய் கீழே இறங்கி நாணல் காட்டுக்குள் போகப் போகிறேன். அங்கே நீலநிற நீரூற்று ஒன்று இருக்கிறது என்று பாபெஹ் சொல்வது வழக்கம். அந்த நீல ஊற்றை நான் கண்டுபிடிக்கப் போகிறேன். உங்களுக்கு பாபெஹைத் தெரியுமா?” என்றேன்.
குடியானவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். வருத்த மாய்ச் சிரித்தார்கள். பாப்பி வயல்களை நோக்கிச் சரிவின் மேலேறி நகர்ந்தார்கள்.
சூரியன் இப்போதுதான் மலைச் சிகரங்களுக்கு மேலே தலை காட்டியது. நாணல் காடு பொன்மயமாக மாறியது. ஆ கடவுளே, என்ன பிரகாசம்! சூரியனைவிடச் சிறந்தது; சூரியனைப் பார்க்கிலும் அதிகப் பிரகாசம் கொண்டிருந்தது அது!
நாணல்களை விலக்கிக்கொண்டு நான் முன்சென்றேன். நான் திரும்ப வேண்டிய வழி அடியோடு தவறிவிட்டது என்று எண்ணிக் கொண்டேன். நீரூற்றைக் காண்பது வரையில், எவ்வளவு தூரம் கடந்துவிட்டேன் என்று நான் அறியேன். அது நேர்த்தியாக இருந்தது. தண்ணீர் கனமாய், நீலநிறமாக, நுரையின்றி இருந்தது. நான் அதன் அருகில் அமர்ந்து, பாபெஹை நினைத் தேன். தண்ணீர்க் குளுமையின் அழகை ரசிப்பதற்காக நான் வெகுநேரம் அங்குத் தங்கியிருந்தேன். திடீரென நாணல்கள் சலசலக்கத் தொடங்கின. என் புறங்கழுத்தில் வெப்பமான மூச்சுப் பட்டதை நான் உணர்ந்தேன்.
“எங்கள் உலகத்துக்கு உன் வருகை நல்வரவு ஆகட்டும். ஆயிரம் நல்வரவு உனக்கு” என்று ஒரு களைத்துப்போன குரல் கூறியது.
நான் உலர்ந்த புல்லின்மேல் வைத்திருந்த துப்பாக்கியை எடுக்கக் கையை நீட்டினேன்.
“சுடு! கொல்லு! எங்கள் தோல்களைத் தோளில் வை, போ! ஜனங்கள் மத்தியில் பெருமையாய் நட!”
பேசியது ஒரு கிழட்டுப் புலி. உலகத்திலேயே மிகவும் கிழடான புலி அதுவாகவே இருக்கலாம். துப்பாக்கிக் கட்டையி லிருந்து அது எப்படித் தனது பாதத்தை அகற்றிவிட்டு என்னைப் பார்த்து நின்றது என்று நான் கண்டேன்.
“என்ன மனிதன் அந்த வாலி சாய்ஃபி? எப்படிப்பட்ட மனிதன் அவன்?” என்று புலி கேட்டது.
அது தனியாக இல்லை. எங்களைச் சுற்றியிருந்த நாணல்களின் பின்னால் மேலும் அநேக புலிகள் காத்திருந்தன என்பதை நான் கவனித்தேன்.
“அவன் தன் இரண்டு சகோதரர்களையும் அமெரிக்க லாரிகளைக் கொள்ளையிடுவதற்காக அனுப்பியவன். ஒரு துப்பாக்கி பெற்று, உங்களைச் சுட்டுக்கொண்டிருப்பவன். அரை கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து, தன் துப்பாக்கியின் டெலஸ்கோப் மேலேயிருக்கும் விசையைத் தட்டி, உங்கள் நெற்றிக்கு நேரே குறிவைத்துச் சுடுகிறான். சரியாகத் தாக்கிவிடுகிறான்” என்று நான் சொன்னேன்.
“லோரஸ்தானின் பாபெஹை உனக்குத் தெரியுமா ?”
“நிச்சயமாக நான் அறிவேன்.”
கிழட்டுப் புலி என்னைச் சுற்றி வட்டமிட்டு அசைந்தது. கிழடு தட்டிய அதன் பிடரியையும், பழுப்பு நிறமாக இருந்த கண்களையும் நான் பார்த்தேன். அக் கண்கள் ஊடுருவி நோக்கின.
“அவர் நாணல் காட்டுக்குள் வருவது வழக்கம். பலமுறை பழுதுபட்டு ஒக்கிட்ட ஒரு துப்பாக்கி அவரிடம் இருந்தது. அவர் வயது முதிர்ந்தவராகி, எங்களை நேசிப்பதை நிறுத்தும் வரை நாங்கள் அவரை நேசித்து வந்தோம். அப்புறம் அடிக்கடி அவர் எங்களில் ஒருவரைச் சுட்டு, தனது இரையை வீட்டுக்குக் கொண்டு போனார். அப்போது என் உறவினன் ஒருவன் அவரை அடித்துக் கொன்றான்.வாலி சாய்ஃபியை நாணல் காட்டுக்குள் கூட்டி வா” என்று அது சொன்னது. “அவனை நீ நாணல் காட்டுக்குள் இட்டு வரவேண்டும் என்று நாங்கள் எல்லோரும் கேட்டுக்கொள்கிறோம்” என்று இறுதியாகச் சொன்னது.
பிறகு அது திரும்பி, நாணல்களை நோக்கியது. உடனே புலிகள், இரைஞ்சும் பிடரிகளுடன், கெஞ்சும் வால்களுடன், யாசிக்கும் பார்வைகளோடு வெளிப்பட்டன.
“வாலி சாய்ஃபியை இங்கே கூட்டி வா” என்று அவை தங்கள் வாயை அசைத்துக் கெஞ்சின.
கிழப் புலி கூறியது:
“வாலி சாய்ஃபி இவர்களை எல்லாம் துக்கத்திற்கு உள்ளாக்கி விட்டான். இவர்களின் குழந்தைகளை அவன் தோளில் தூக்கிப் போனான். இவர்களின் தந்தைகளையும் தாய்மாரையும் வண்டி களில் போட்டுக்கொண்டு போனான்.”
எல்லாப் புலிகளும் ஏக காலத்தில் தங்கள் வாய்களை உயர்த்தி துக்கத்தோடு உறுமின. அவற்றின் செம் மீசைகளூடு கண்ணீர் உருண்டு ஓடுவதை நான் பார்த்தேன்.
“நல்லது. இப்போது என்னைப் போகவிடுங்கள். நான் வாலி சாய்ஃபியை இங்கே அழைத்து வருவேன். இங்கேயே விட்டுச் செல்வேன்” என்றேன்.
“மார் …ர்…ர்…” என்று புலிகள் உறுமின. ஆனந்தத்தோடு மண்ணைப் பிறாண்டின.
கிழப் புலி என்னைப் பார்த்துச் சொன்னது: * அந்தத் தண்ணீரில் ஒரு வாய் குடி. கனத்த நீல நீரிலிருந்து நான் குடித்தேன். “நாளை உதயத்தில்” என்றேன். “இப்போது நான் போகட்டும்!”
“எங்கள் எல்லை வரை நானும் உன்னோடு வருவேன். உன் துப்பாக்கியை எடுத்துக்கொள்” என்று கிழப்புலி கூறியது.
நான் துப்பாக்கியை எடுத்தேன். பாம்பைச் சுழற்றி வீசுவது போல் நான் அதை வீசி எறிந்தேன். “அது தேவையில்லை” என்றேன்.
புலிகள் “மற்ரர்..ர்ர்…ர்ர்…” என்று கூறித் தரையைப் பிறாண்டின.
நாணல்களை விலக்கிக்கொண்டு அது வழிகாட்டியது. அதன் வால் நுனி முதல் வாய் முனை வரை ஒரு முடிவற்ற சோகம் நிலைத் திருப்பதை நான் கண்டேன்.
எல்லையை அடைந்ததும், “நன்றி, இதோ ரோடு வந்து விட்டது. இனி நான் என் வழியைக் கண்டுகொள்வேன்” என்றேன்.
கிழப்புலி கண்களை மூடி, என் கையை நக்கியது.
வாலி சாய்ஃபி வீட்டில் இல்லை. அவன் மனைவி சோனி வீட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றாள். சொன்னாள்!
“ஐயா, நீங்கள் ரொம்பவும் தூசி படிந்து, ரொம்பவும் களைத்திருக்கிறீர்கள். அந்தச் சோபாவில் படுத்திருங்கள். வாலி எந்த நேரத்திலும் வந்துவிடுவார். நான் உங்களுக்காகத் தேநீர் தயாரிப்பேன்.”
நான் வெகுவாகக் களைத்திருந்ததால், சோபாவில் படுத்தேன்.
“வாலி எங்கே?” என்று கேட்டேன்.
“அவர் நாசமாய்ப் போக…”
சோனி அழுதிருந்தாள். இப்போது அவள் துயரத்தால் தன் விரல்களைக் கடித்தவாறு இருந்தாள்.
“என்ன நடந்தது?” என்று கேட்டேன்.
அவள் தன் சிங்கார ஆடையை அகற்றிவிட்டு அம்மணமாக என் முன் நின்றாள்.
“ஐயா, வாலி என்னை என்ன பாடு படுத்தியிருக்கிறார், பாருங்கள்.”
அந்த அழகிய பெண்ணை அவன் தகர்த்து நொறுக்கி, வெறுமனே உயிரோடு மட்டும் விட்டுவைத்திருந்தான்.
“நாளை விடியற்காலை நாம் அவனை அகற்றிவிடுவோம்” என்றேன்.
வாலி சாய்ஃபி துப்பாக்கி தோளில் தொங்க வீடு வந்து சேர்ந்தான். அம்மணமாய் நின்ற மனைவியையும், சோபாவில் படுத்திருந்த என்னையும் அவன் தன் மீசையினூடாகப் பார்த்தான்.
“வாருங்கள்,ஐயா. நீங்கள் உங்கள் வீடு மாதிரி நினைத்து எல்லாச் சவுகரியங்களையும் அனுபவியுங்கள். இப்போது நாம் ஜின் குடிப்போம்” என்றான்.
ஆகவே நாங்கள் குடிக்க ஆரம்பித்தோம்.
நான்காம் முறை குடித்தபிறகு நான் சொன்னேன்: “வாலி, பொன்னிறப் புலி ஒன்று நாணல் காட்டில் வந்திருக்கிறது. பலபேர் அதைப் பார்த்திருக்கிறார்கள். அதன் தோலுக்கு இருபத்தையாயிரம் தருவதாக அமெரிக்கன் கர்னல் அறிவித் திருக்கிறார். நீ என்ன சொல்கிறாய்?”
வாலி சாய்ஃபி உற்சாக வெறியில் கத்தினான்.
”நாம் நாளைக்கே அதிகாலையில் போவோம் ஐயா. ஏய் சோனி, இன்னும் ஜின் கொண்டு வா…! இருபத்தையாயிரம்! அது தீர்ந்தது!’
நான் அந்தக் கிழட்டுப் புலியையும், நாணல்களின் பின்னா லிருந்து வந்த துயரம் நிறைந்த புலிகளையும் எண்ணிக் கொண்டேன். அவை அனைத்தும், ‘வாலி சாய்ஃபியை இங்கே கூட்டி வா!” என்ற அர்த்தத்தில் “மார்..ர்..ர்” என்று குரல் கொடுத்தன.
சோனி இப்போது வேறொரு சிங்கார ஆடையினால் தனது காயங்களை மூடி மறைத்து, உதயவேளைக்காகக் காத்திருந்தாள். அடிவானம் வெளுக்கத் தொடங்கியதும், வாலி மூன்றாவது காலி பாட்டிலை வெளியே எறிந்துவிட்டுச் சொன்னான்!
“நாம் போவோம், ஐயா.”
அவன் தனது துப்பாக்கியை நன்றாகப் பரிசோதித்தான். அதை முத்தமிட்டான். நாங்கள் புறப்பட்டோம்.
சோனி ரகசியக் குரலில் என்னைக் கெஞ்சினாள்:
“ஐயா, அவரை அங்கேயே விட்டுவிடுங்கள்!”
அந்த நேரத்தில் அவளுடைய கண்கள், கிழப் புலியின் கண் களைப்போல் மட்டுமன்றி, “வாலி சாய்ஃபியை இங்கே கூட்டி வா!” என்று கெஞ்சிக் கேட்ட எல்லாப் புலிகளின் கண்களைப் போலவும் தோன்றின.
நடந்து தள்ளாடி நாங்கள் மிகுந்த களைப்புடன் அந்த இடத்தை அடைந்தோம்.
நாணல்களையும் தன் துப்பாக்கியையும் மாறி மாறிப் பார்த்தபடி, “நான் இவைகளைச் சுட்டுப் பரத்திவிடுவேன்” என்று வாலி அர்த்தமில்லாமல் கத்தினான்.
நாங்கள் நீல நீரூற்றருகில், நாணல்கள் சலசலக்கும் வரை அமர்ந்திருந்தோம்.
மண்வாசனை என்னை அணுகியது. புலிகள் சந்தோஷத்தால் மண்ணைப் பிறாண்டுகின்றன என நான் புரிந்துகொண்டேன்.
“ஆயிரம் நல்வரவு, வாலி சாய்ஃபி. உனக்காக நாங்கள் நீண்ட நெடுங்காலமாய்க் காத்திருக்கிறோம்.”
சாய்ஃபி, உலர்ந்த புல்மீது கிடந்த துப்பாக்கியை எடுக்கக் கை நீட்டினான். அதே நேரத்தில் கிழட்டுப்புலி, துப்பாக்கியி லிருந்து தன் பாதத்தை உயர்த்தி, அவனை நேராக நோக்கி நின்றது.
“சுடு, வாலி சாய்ஃபி, லோரஸ்தான் ராஜாவே!”
இதர புலிகள் நாணல் புதர்களினூடாக முன்னே வந்தன. அவை தங்கள் கண்களால் என்னிடம் பேசின. இவனை இட்டு வந்ததற்காக நன்றி. இப்போது வீட்டுக்குப் போ. யாராவது உன்னை எல்லைவரை கொண்டுவிடுவர்… யார் போவது?”
“நான்” என்று அவை அனைத்தும் கத்தின.
ஒரு புலி என்னோடு வந்தது. பாறைகளுக்குப் பின்புறமிருந்து அது சுடப்பட்டிருந்தது. அப்படி அடிபட்டதில் அதன் பின்பக்க இடதுகால் நொண்டியாகிவிட்டது. அது நாணல் புதர்களை விலக்கியவாறு முன்னே சென்றது. முணுமுணுத்தது.
“வாலி நெற்றியில் குறிவைத்துச் சுடுவதில் கெட்டிக்காரன். இப்போது இது என்ன நிலைமை?”
ஒரு நொண்டிப் புலியினால் உண்மையில் என்ன பயன் என்று நானும் எண்ணத் தொடங்கினேன். சந்தேகமின்றி அது இரவில் நாணல் காட்டைவிட்டு வெளிப்பட்டு, மலை விளிம்புகளுக்கு வரவேண்டும். நட்சத்திர ஒளியினால் போதையுற்று, நகங்கள் நீண்டிருக்கக் கால்களை நீட்டி, ஒளியோடு ஒரு நட்சத்திரத்தை எட்டிப் பிடிப்பதற்காக அது சுற்றித் தாவும். அவ்வளவுதான். அதன் அழிவை நோக்கி மகத்தான வீழ்ச்சி.
”போ’ என்றது நொண்டிப் புலி.
நாங்கள் எல்லையை அடைந்துவிட்டோம். அங்கிருந்து ரஸ்தா ஆரம்பமாயிற்று.
“நாங்கள் எல்லோரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று கடமை உணர்வோடு முனகிவிட்டு அது திரும்பி நடந்தது.
நான் ரஸ்தாமீது உட்கார்ந்து அதைக் கவனித்தேன். அது சாவகாசமாக நடந்தது. அங்கே நடக்கவேண்டியது எல்லாம் முடிந்திருக்கும் என்ற நிச்சய உணர்வு உடையவர்கள் அப்படித் தான் நடப்பார்கள்.
ஆனால் நாணல் காட்டுக்குப் போகிற பாதை ஆரம்பிக்கிற சரிவின் ஓரத்தில் அந்த நொண்டிப் புலி நின்றது. அதற்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில், அது திரும்பிப் பார்த்தது.
‘போ’ என்று அது கூறியது.
நான் போனேன்.
– அபிக் அவாகியன் (1919)
– ஆர்மேனியச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ஸோஃபி அவாகியான், ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபெய்னா கிளாக்கொலீவா, ஏ.மக்ஹொவ்லியன், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், தமிழாக்கம் முதற் பதிப்பு: 1991, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
பிழி திறன்
உரு.வளவன்
October 21, 2026