இன்பம் காண்போம்





படை வீரன் ஒரு நாள் அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு முனிவர் குளக்கரை ஆல மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிய படைவீரன் முனிவர் அருகில் போய் வெகு நேரம் நின்று அவரோடு பேசுவதற்காகக் காத்துக் கொண்டிரு;தான். ஆனால் முனிவர் தனது தவத்தினைக் கலையாமல் தொடர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார்.
பொறுமையிழந்த படைவீரன் ஞானியைப் பார்த்து, ஐயா நான் உங்களோடு பேசுவதற்காக வெகு நேரம் காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று சப்தமாகச் சொன்னான். அதற்கு முனிவர் ஓ அப்படியா. சரி என்ன பேசப் போகிறாய் என்று கேட்டார்.
அதற்குப் படைவீரன் ஐயா மோட்சம் நரகம் என்றுச் சொல்லுகின்றார்களே அது இருக்கின்றதா? உண்மையா? அதை நம்பலாமா? என்று கேட்டான். முனிவர் அவனிடம் நீ யார் என்றார். அதற்கு அவன் நான் இந்நாட்டின் படைத் தளபதி. அரசனின் மெய்க் காப்பாளர்களில் ஒருவனாகவும் இருக்கின்றேன் என்றான். அதற்கு முனிவர் என்ன நீ படைத்தளபதியா அரசனின் மெய்க் காப்பாளனா? என்ன முட்டாள்தனம். யார் உனக்கு இந்த வேலையைக் கொடுத்தது. உன்னைப் போய் மெய்க்காப்பாளனாக வைத்திருக்கின்றானே அரசன் அவன் ஒரு முட்டாள.; நீ அதை விட பெரிய முட்டாள் என்றார்.
அதைக் கேட்டதும் படைத்தளபதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற படைத்தளபதி உடனே தன் உறை வாளை உருவ எத்தனித்தான். அதைப் பார்த்த முனிவர் ஓ நீ உறை வாளை வைத்திருக்கின்றாயா. அப்ப அதை எடுத்து எனது தலையை வெட்டப் போகின்றாய் அப்படித்தானே என்று அவனைப் பார்த்து கேலியாகக் கேட்டுச் சிரித்தார்.
முனிவரது இந்த செய்கையால் படைத்தளபதிக்கு கோபம் தலைக்கேறியது. உடனே வாளை உறுவி முனிவரை வெட்ட ஓங்கினான். அதைப் பார்த்த முனிவர் படைத்தளபதியே கொஞ்சம் பொறு. நீ கேட்ட கேள்விக்கு உனது செயலிலேயே விடை ஒளிந்திருக்கின்றது. எப்போதெல்லாம் உனக்குக் கோபம் வருகின்றதோ அப்போதெல்லாம் நீ நரகத்தில் வாசலில் நின்று கொண்டிருக்கின்றாய் என்பதை மறந்து விடாதே என்றார் அமைதியாக.
படைத்தளபதிக்கு முனிவரின் செயல்பாட்டின் அர்த்தம் அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நாம் கேட்ட கேள்விக்கு விடை கொடுக்கவே முனிவர் அவ்வாறு கூறினார் என்று அவனுக்குப் புரிந்தது. உடனே எடுத்த வாளை உறையில் போட்டு அவரை வணங்கி நின்றான். அதைப் பார்த்த முனிவர் சிரிக்க ஆரம்பித்தார். ஏன் சிரிக்கின்றீர்கள் என்றான் படைத்தளபதி.
நான் முதலில் சொல்லும்போது உனக்கு கோபம் வந்ததல்லவா. அப்போது உனது செயல்பாடுகள் தீமையின் உச்சத்திற்குச் சென்றன. அதன்பின் நான் பேசியவுடன் உன்னை நீ உணர ஆரம்பித்ததினால் நீ நல்லவனாக மாறிப் போனாய் என்றார் முனிவர் அமைதியாக.
இப்போது இருக்கும் இதே நிலை தொடர்ந்தால் நீ மோட்சத்தின் வாசலிலே நிற்கின்ற நிலைக்கு வந்து விட்டாய் என்று அர்த்தம். சொர்க்கமும் நரகமும் நாம் செய்யும் செயல்களின் வெளிப்பாடுதான். நல்லது எப்போதெல்லாம் செய்கின்றோமோ அப்போதெல்லாம் நாம் சொர்க்கத்தை அனுபவிக்கலாம். தீயது எப்போதெல்லாம் நம்மைத் துரத்துகின்றதோ அப்போதெல்லாம் நாம் நரகத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டோம் என்பதை உணர வேண்டும்.
ஒரு வயதான பாட்டி ஒரு பள்ளிக் கூடத்திற்கு அருகில் இட்லி தோசை கடை நடத்தி வந்தாள். அங்கு அனைவரும் விரும்பி வந்து சிற்றுண்டிச் சாப்பிட்டுச் செல்வது வழக்கம். ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை என்று சிற்றுண்டி வழங்கி வந்தாள் பாட்டி. பள்ளி மாணவச் செல்வங்கள் அடிக்கடி அங்கு வந்து பசியாறிச் செல்வது வழக்கம். கொடுப்பதே தனது கடனாக அந்தப் பாட்டி வியாபாரம் செய்து வந்தாள். அதில் கடன் கூட அவ்வப்போது கொடுப்பது வழக்கம்.
ஒருமுறை ஒரு பையன் ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு ஏழு தோசை வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் சென்றான். அதைப் பார்த்த அவனது நண்பன் பாட்டியிடம், பாட்டி பாட்டி கமல் ஐந்து ரூபாய் கொடுத்து ஏழு தோசை சாப்பிட்டு விட்டுச் செல்கின்றானே உனக்குக் கணக்குத் தெரியாதா? அதை நீ பார்க்கவில்லையா. ஏன் அவனைச் சும்மா விட்டு விட்டாய் என்று கேட்டான்.
அதற்குப் பாட்டி சரி விடு பேரா. கமலின் அம்மா இறந்து நான்கு நாட்கள் ஆகின்றது. அப்பா குடித்து விட்டு எங்காவது விழுந்து கிடப்பான். பிள்ளை எப்படிச் சாப்பிடுகின்றானோ பாவம். நாளை வந்தவுடன் அவன் கொடுத்த காசை முதல் வேலையாக அவனிடமே கொடுத்து விடுகின்றேன். வாழ்வதே சாப்பாட்டிற்குத்தானே. வயிறார சாப்பிட்டுப் போகட்டுமே என்றாள்.
அதைக் கூறிய முனிவர் படைத் தளபதியிடம் தளபதியாரே இந்தக் கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள் என்றார். அதற்குத் தளபதி அந்த பையன் மன்னிக்கும் தன்மையில்லாமல் கமலைக்; காட்டிக் கொடுத்துப் பாவம் செய்தான்.
ஆனால் பாட்டி கமலின் நிலையைப் புரிந்து கொண்டு, அவன் மேல் பரிதாபப்பட்டு, அவனது வீட்டுச் சூழ்நிலையைப்; புரிந்து கொண்டு, அன்பு செலுத்தி அவனுக்கு இன்னமும் உதவி செய்ய வேண்டும் என்று விழைகின்றாள்.
நீங்கள் சொல்லியது போல மோட்சமும் நரகமும் நமது உணர்வுகளிலும் நமது செயல்பாட்டிலும்தான் இருக்கின்றது என்பதை நான் இப்போது தௌ;ளத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். எனக்குப் பரிய வைத்த தங்களுக்கு மிக்க நன்றி என்று கூறி அவரிடமிருந்து விடை பெற்றான்.
ஆம். ஆக்ரோஷமாகச் சண்டைப் போடும் இருவர் மிக மிக நெருக்கமாக இருந்தாலும் அதிக சப்தமாகக் கத்திப் பேசுகின்றார்களே. ஏனென்றால் அவர்கள் உடலால் அருகில் இருந்தாலும் அவர்களது மனது அவர்களை விட்டுத் தொலை தூரம் சென்று விட்டது என்பதைத்தான் இது காட்டுகின்றது.
எனவே கோபத்தால் ஜெயித்தவனுமில்லை. அன்பால் தோற்றவனுமில்லை என்பதை உணர்வோம். வாழ்க்கைப் பயணம் வெகு தூரமில்லை. அடுத்த நொடியும் நம் கையிலில்லை. இருக்கும் வரை சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து இந்த உலகத்தையே மோட்சமாக்கி இன்பம் காண்போம்.
நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |