இங்கிலிஸ் வாத்தியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 944 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றைக் கையில் தூக்கிப் பிடித்துப் பார்த்த வண்ணம் வீட்டு மாலுக்குள் சாய்மனைக் கட்டிலில் வசதியாகச் சாய்ந்து படுத்துக் கொண்டிருக்கிறார் சோமு வாத்தியார்.

சோமு வாத்தியாரை அந்தக் கிராமத்திலும் அதன் சுற்றி வட்டாரத்திலுமுள்ள அயற் கிராமங்களிலும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அயற்கிராமங்களுக்கு அப்பாலும் அறியப்பட்டர் அவர். அந்தக் கிராமத்தில் வாழும் சின்னக் குழந்தையிடம் விசாரித்தாலும் சோமு வாத்தியாரை இனங் காட்டத் தவற மாட்டாது. சோமசுந்தரம வாத்தியார் என்று பெரியவர்களிடம் விசாரித்தாலும் ஒரு செக்கன் யோசித்துத்தான் விடை சொல்லுவார்கள். சோமு வாத்தியார் என்றால் பட்டென்று ஆளைச் சொல்லி விடுவார்கள். சோமு வாத்தியாருக்குப் பெற்றோர் சூட்டிய திருநாமம் சோமசுந்தரம். அந்தப் பெயர் இன்று மறைந்து போயிற்று.ஆனால் வாத்தியாரை அறியாதவர்கள் இல்லை எனலாம். அவருக்கும் சோமசுந்தரத்தை சோமுவாகச் சுருக்கி வாத்தியாரை இணைத்து ‘சோமு வாத்தியார்’ என்று எல்வோரும் அழைப்பதில் மனம் நிறைந்த பெரிய ஆனந்தம்.

அவருக்குச் சின்ன ஒரு மனக்குறை. தான் என்ன தமிழ் வாத்தியாரே! ஆங்கிலம் அறிந்தவர். அப்படிஇருக்க, எப்படி இவர்கள் வாத்தியார் என்று அழைக்கலாம்! எல்லோரும் என்னைச் “ஸேர்” என்றே அழைக்க வேண்டும் என்பதே அவர் உள்ளத்துள் கரந்துள்ள உணர்வு பூர்வமான எண்ணம்.

கிராமத்துச் சனங்களுக்கு வாத்தியாருக்கும் சேருக்கும் இடையேயுள்ள வித்தியாசம் எங்கே தெரியப் போகிறது? “பாவம்… அவர்கள் இங்கிலிஸ் தெரியாதவர்கள்” என வாத்தியார் பெரிய மனத்துடன் அவர்களை மன்னித்து விடுவார்.

வீட்டு வெளிக் “கேற்” மெல்லத் திறக்கிறது. அந்தச் சத்தங் கேட்டு, பார்த்துக் கொண்டிருக்கும் பத்திரிகையை விலக்கி கேற்ரைப் பார்க்கிறார் வாத்தியார்.

தரகர் தங்கத்துரை “கேற்”ரை திறந்து உள்ளே வந்து கொண்டிருக்கிறார்.

வாத்தியார் படித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையை மடித்துக் கீழே போட்டு விட்டு, “வா… மச்சான்… வா…!” என வரவேற்கின்றார். தனக்கெதிரேயுள்ள கதிரையைக் கையால் சுட்டிக் காட்டி, “அதிலே இரு மச்சான்” என்கிறார்.

தரகர் தங்கத்துரை கதிரையில் அமர்ந்த பின்னர், இங்கிலிஸ் பேப்பரில் என்று ஆரம்பித்து ஒரு குட்டிப் பிரசங்கம் செய்து முடித்து தமிழ் பத்திரிகைகளை கையாலும் தொடுவதில்லை என்கிறார். பிறகு, “என்ன மச்சான்… புதிசா எதுகும் கொண்டு வந்திருக்கிறியோ?” என வினவுகிறார்.

“கொண்டு வராமல் வெறுங்கையோடை நான் வருவனே!”

“நல்ல இடமோ?”

“இதென்ன கேள்வி! நான் கொண்டு வந்தால் ஒரிசினலாக இருக்கும்… சாதாரணமான இடமாக இருக்காது”

“அது எனக்குத் தெரியும்…” என்றவர் உள்ளே திரும்பி, “அம்மா துரை மச்சான் வந்திருக்கிறார்” என ஒருதரம் குரல் கொடுக்கிறார். நல்ல செய்தியுடன் வந்திருக்கும் மச்சானுக்கு, “தேநீர் ஒன்று கொண்டு வா” என்பது தான் அந்தக் குரலுக்குரிய அர்த்தம்.

“வேண்டாம்… வேண்டாம்… நான் இப்பதான் குடிச்சிட்டு வந்தனான்” எனத் தரகர் தங்கத்துரை மறுப்புக் குரல் கொடுக்கிறார்.

தரகர் தங்கத்துரைக்குச் சோமு வாத்தியார் தூரத்து உறவுக்காரன். தங்கத்துரையை விட இரண்டு வயத மூத்தவர் வாத்தியார்.

தங்கத்துரை இருபது வயதில் காதலித்துக் கல்யாணம் செய்தவர். அவருடைய மூத்த மகளுக்கு இப்போது வயது இருபதாகி விட்டது.

ஆனால் சோமு வாத்தியாருக்குப் பெண் பார்க்கும் படலம் இன்னும் நிறைவேறவில்லை. சோமு வத்தியார் ஏதோவொரு

பாடசாலையில் படிப்பிக்கும் ஆசிரியரல்ல. ஆசிரியர்களைப் பொதுவாக “மோட்டு வாத்திமார்” என்று சொல்வது அவர் வழக்கம். அதனால் அந்தப் பெயரை அவருக்கே இட்டு எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள். காலப் போக்கில் “மோடு” என்பது மறைந்து போக “வாத்தியார்” என்று மிஞ்சி நிற்கிறது.

மணமாகாத இளம் கன்னிப் பெண்களின் சாதகங்களுடன் தரகர் இடையிடையே வந்து போய்க கொண்டிருக்கிறார்.

வாத்தியாருக்கு எது எல்லாம் பொருந்தி வந்தாலும் வாத்தியார் இறுதியில் ஒரு கேள்வி கேட்பதற்குத் தவற மாட்டார்.

“பெம்பிளைக்கு இங்கிலிஸ் தெரியுமா?” என்பது தான் அவர் கேட்கும் பிரதான கேள்வி.

“ஓம் தெரியும்” எனத் தரகர் பதில் கூறினால், அடுத்த கேள்வி, “இங்கிலிஸ் பேசத் தெரியுமா?” என்று கேட்பார்.

“இங்கிலீஸ் பேசத் தெரியாத பெம்பிளை எனக்கு வேண்டாம். என்னட்டை வாற நண்பர்களும் இங்கிலீஸில் பேச வேணும். என்னுடைய மனைவிக்கு இங்கிலிஸ் பேசத் தெரியாது எண்டால் எனக்கு அவமானம்” என்பார்.

“மச்சான் நல்ல இடம், நல்ல வடிவான பிள்ளை. சீதன பாதனத்துக்கும் குறைவில்லை. நீ விரும்புகிறது போல இங்கிலிஸ் படிச்ச பிள்ளை. இங்கிலிஸ் ரீச்சர். நீங்கள் கேக்கிறதைத் தரக்கூடிய வசதியான இடம். இந்த இடத்தைத் தவற விடுகிறதிலே எனக்கு விருப்பமில்லை. இதைவிடப் பொருத்தமான இடம் வேறை வந்து வாய்க்காது.

“அது சரி மச்சான். இங்கிலிஸ் தெரிஞ்சால் மட்டும் போதாது. பேசத் தெரியுமோ எண்டதையும் விசாரி! இந்தக்காலத்து இங்கிலிஸ் ரீச்சரவைக்கு ஒரு வசனம் இங்கிலிஸ் பேசத் தெரியாது”.

“அந்தப் பிள்ளை நல்லா இங்கிலீசு பேசும்”

“அது உனக்கெப்படித் தெரியும்? உன்னோடை இங்கிலிஸில் பேசினவவே. ஆ… ஆ…”

“நீ இப்ப என்ன சொல்கிறாய்!”

“அது சரி… மச்சான்! உன்ரை மேளுக்கு மாப்பிள்ளை தேடுகிறாய் எண்டு கேள்வி”

“ஓமோம்… இனிப்பாக்கத் துடங்கினால்தான் இரண்டொரு வருஷத்துக்குள்ளே செய்து வைச்சு விடலாம்”.

தரகன் தான் அடிக்கடி கலியாணப் பேச்சுடன் அங்கு வந்து போவதை வைத்துக் கொண்டு தன்ரை மகளைத் திருமணம் செய்யும்படி வந்து ஆக்கினை கொடுத்து வற்புறுத்திக் கொண்டிருப்பதாக வாத்தியார் கதை கட்டி இருக்கிறார் என்பதும் தரகர் தங்கத்துரை காதில் வந்து விழுந்திருக்கிறது. மனதில் அதை வைத்துக் கொண்டு வெளியில் காட்டிக் கொள்ளாது வந்து போய்க் கொண்டிருக்கிறார். அவர் இப்பொழுது மகள் பற்றிப் பேச்சுக் கொடுத்ததும் தரகர் விழித்துக் கொண்டு விட்டார்.

வாத்தியார் தனக்கருகில் வைத்துக் கொண்டிருக்கும் திருமண அழைப்பிதழ் ஒன்றை எடுத்துத் தரகரிடம் காட்டுகிறார்.

அந்த ஊரில் இன்னும் இரண்டு தினங்களில் நடைபெற இருக்கும் திருமணஅழைப்பிதழ் அது. தரகருக்கும் அவர் வீட்டில் அந்த அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்கள். அந்த உண்மையைத் தரகர் வெளியில் கூறாது அழைப்பிதழை வாங்கிப் பார்க்கிறார். தரகர் எதிர் பார்த்தது போல வாத்தியார் அப்போது சொல்கிறார்:

“உந்தப் பெம்பிளையையும் எனக்குக் கேட்டு வந்தவை”

“ஓமோம்… நானும் கேள்விப்பட்டனான்” வேண்டுமென்றே மனசாரப் பொய் கூறுகிறார் தரகர்.

“அது சரி… மகளின்ரை விஷயம் எந்தளவிலே கிடக்கு?” வாத்தியார் வெகு அக்கறையோடு வினவுகிறார்.

“இன்னும் சரிவரவில்லை”

“என்ன மச்சான் வெண்ணெயைக் கையிலே வைச்சுக் கொண்டு நெய்க்கலைகிறாய்”

“ஆரந்தமாப்பிளை… எங்கே இருக்கிறார்…இடத்தைச்… சொல்லு!”

“ஆ… ஆ… மச்சான் உனக்கு ஒண்டுமே விளங்குதில்லை. என்னெண்டு தரகுவேலை பாக்கிறாய்! அப்பமெண்டால் புட்டுக் காட்ட வேணுமே!”

“உண்மைதான் உன்னளவு புத்திசாலி இல்லை நான். என்ன சொன்னாலும் இங்கிலீசு தெரிஞ்சனி யெல்லே!”

“சரியாகச் சொன்னாய் மச்சான்”

“சரி… சரி… மகளுக்குப் பொருத்தமான மாப்பிளை எண்டு நீ ஆரைச் சொல்லுகிறாய். நாங்கள் இரண்டு பேருமாகப் போய்ப் பேசுவம்… சொல்லு… சொல்லு…”

“இதென்ன கதை உனக்கு இன்னும் விளங்க வில்லையே?”

“இல்லை மச்சான்”

“நீ சரியான மோடு தான்… ஏன் மச்சான் நான் ஒருவன் இருக்கிறது உன்ரை கண்ணுக்குத் தெரிய வில்லையே…?” என வாத்தியார் கேட்டு வாய்மூடுவதற்க முன்னர், தரகர் கொதித்துக் கொண்டெழுந்து அவர் கன்னத்தில் “பளாரென்று” ஓங்கி அறைகிறார்.

அந்த ஒரு இடிமுழக்கத்தில் வாத்தியார் பொறி கலங்கி கண்களில் மின்னல் மின்னி கண்ணீர் திரண்டு வர கன்னத்தை ஒரு கையால் பொத்திக் கொண்டிருக்க…

அங்கெழுந்த அந்த கோடை மழை முழக்கம் கேட்டு, வாத்தியாரின் தாயார் அடுக்களைக்குள்ளே இருந்து வெளியே வந்து பார்க்கிறார்.

தரகர் சாரத்தை தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு வெளிக்’கேற்’றை நோக்கி உறுதியாக அடி எடுத்து வைத்து நிமிர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்.

– ஜீவநதி 12 ஆவது ஆண்டு மலர் மாசி 2019.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *