ஆஷா திருமண மண்டபம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 3,174

முன்னுரைக் குறிப்பு
இந்த சிறு நாடகத்தில் நமது சமகாலச் சூழல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன்.
நன்றி
அன்பன்
எஸ் மதுரகவி
(இந்த நாடகத்தின் சூழல், கதைப் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே . யாரையும் குறிப்பிடுவன அல்ல)
நாடகம் குறித்து கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் (ஜூலை 27, 1876 – செப்டெம்பர் 26, 1954) எழுதிய கட்டுரையிலிருந்து சில முத்துக்கள்…
“இந்த உலகம் ஒரு நாடக சாலை என்று ஷேக்ஸ்பியர் முதலிய பல அறிஞர்களும் கூறி உள்ளனர். இது நாடக சாலைக்கு வெளியிலிருந்து பேசும் பேச்சு . நாடக சாலைக்கு உள்ளிருந்து சொல்வதானால் , ‘ இந்த நாடக சாலையே உலகம் ‘ என்று சொல்ல வேண்டும் . ஏனென்றால் , உலக அனுபவங்கள் அனைத்தையும் இங்கே நாம் பார்க்கிறோம். …
மக்களின் அறிவை அபிவிருத்தி செய்வதற்கு நாடகத்தைப் போன்று ஒரு சிறந்த கருவி வேறு எதுவும் இல்லை. அதனாலேயே சரோஜினி தேவியார், ‘நாடகத்தைப் பாமர மக்களின் பல்கலைக் கழகம்’ என்று கூறி இருக்கிறார்கள்.
நாடகங்களில் அறையிலிருந்து படிக்கத் தகுந்தவையும் அரங்கில் ஆடத் தகுந்தவையும் உண்டு. இரண்டிலுமே பின்னதே மிக முக்கியமானது.
ஶ்ரீமான்கள் ராஜமாணிக்கம் பிள்ளை , டி.கே.எஸ். சகோதரர்கள் நல்ல தொண்டு செய்து வருகிறார்கள். இன்னும் பலர் இத்துறையில் ஈடுபட்டுத் தமிழ் நாடக கலையை முன்னேற்ற வேண்டியது அவசியமாகும் . “
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன . ஆஷா திருமண மண்டபம் , இந்திரா நகர் என்ற கொட்டை எழுத்துப் பதாகை .வாட்டசாட்டமான உருவம் , வெள்ளைத் தலை, முகத்தில் வெள்ளை தாடி கொண்ட மூத்த குடிமகன், மேடையின் வலப் பக்கத்திலிருந்து வருகிறார். அவர் செக்யுரிட்டி சீருடை அணிந்து கொண்டிருக்கிறார். அவர் பார்வையாளர்களின் பக்கம் திரும்பாமல் சைகை முறையில் (miming) மண்டபத்தைத் திறப்பது போலவும் கேட்டை தள்ளுவது போலவும் பாவனை செய்கிறார்.
உள்ளே போகிறார் . அங்கிருந்த மேசையில் கைப் பையையும் சிற்றுண்டி டப்பா அடங்கிய பையையும் வைக்கிறார். தனக்குத் தானே பேசுதல் –
‘ஆப் பண்ணாம இருக்கிற பேன் லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு வருவோம். மூடாம விட்ட குழாயை மூடி விட்டு வருவோம்.‘ மேடையின் நடுப் பக்கம் வழியாக செல்கிறார்.சில நிமிடங்களில் திரும்பி வருகிறார் . நாற்காலியில் அமர்கிறார் .
‘மேனேஜர் வர்றத்துக்குள்ள மனைவி கொடுத்த டிபனை சாப்பிடுவோம்’ என்று சிற்றுண்டி டப்பாவைத் திறக்கிறார். அதில் உணவு இல்லை. சாம்பார் டப்பாவைத் திறக்கிறார் . அதுவும் காலியாக இருக்கிறது. தண்ணீர் புட்டியின் மூடியைத் திறக்கிறார். அதிலும் தண்ணீர் இல்லை.
‘என்ன இது மாயமா இருக்கு … ரெண்டு நிமிஷம் அந்தப் பக்கம் போய்ட்டு வர்றத்துக்குள்ள யார் எடுத்து சாப்பிட்டுருப்பா? ‘
தனக்குத் தானே பேசிக் கொள்கிறார்.
மேடையின் இடப் பக்கத்திலிருந்து ஒல்லியான, தாடி முகம் கொண்ட, பேண்ட் சட்டை அணிந்த இளைஞனும் பருமனான தேகம் கொண்ட சூரிதார் அணிந்த இளைஞியும் வருகிறார்கள் .
பெரியவர் : இது என்ன திருமண மண்டபமா? மாயா பஜாரா ? பூட்டி இருந்த கல்யாண மண்டபத்துக்குள்ளே எப்படிய்யா நீங்க ரெண்டு பேரும் வந்தீங்க ?
இளைஞன் : அது எப்படியோ வந்துட்டோம் … இன்னிக்குத்தான் முகூர்த்த நாள் இல்லையே … இன்னிக்கு ஒரு நாள் எங்களுக்கு அடைக்கலம் கொடுங்க ….
பெரியவர் : நான் என்ன கொடுக்கறது … நீங்களே தான் வந்துட்டீங்களே … சினிமால காட்ற மாதிரி ஓடிக்கிட்டு இருக்கிற காதல் ஜோடியா நீங்க ? நான் வேலை செய்யற இந்த கல்யாண மண்டபம் தான் ஒங்களுக்கு கிடைச்சுதா ? என்னோட காலை உணவை மிச்சம் வைக்காம காலி பண்ணது நீங்க தானா ?
இளைஞன் : செம பசி … அதான் சொந்தம் என்கிற உரிமையில எடுத்து சாப்பிட்டு விட்டோம் நல்லா இருந்துச்சு டிபன் ..
பெரியவர் : சொந்தமா ? எந்த வகையில .. ? யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு சங்கத் தமிழ்ப் புலவர் சொன்னாரே .. அந்த வகையிலயா ?
இளைஞன் : இல்ல ஒங்களுக்கு நெருங்கின சொந்தம்
பெரியவர் : நெருங்கின சொந்தம் அறிமுகம் செய்துக்கற காலமா இருக்கு .. எப்படி சொந்தம் சொல்லுப்பா ..
இளைஞன் : நீங்க என்னை மாதிரி இளைஞனா இருக்கும் போது ஊரெல்லாம் சுத்திட்டு சாரி நண்பர்களோட நேரம் செலவழிச்சுட்டு ராத்திரி லேட்டா வீட்டுக்கு வரும் போது உங்களுக்காக காத்திருந்து உங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு வாசற் கதவை அடைச்சுட்டு தூங்கப் போவாங்களே உங்க அண்ணி …
பெரியவர் : ஆமாம் ராதா அண்ணி .. என்னைப் பத்தி நல்ல விதமா உன் கிட்ட சொல்லி இருக்காங்க ..
இளைஞன் : அவங்களோட பேரன் தான் நான் .என் பேரு பரணி …
பெரியவர் : எங்க அண்ணன் குணோவோட பேரனா நீ ? எங்க அண்ணனுக்கு ராமு ராஜா ன்னு ரெண்டு மகன்களாச்சே .. நீ யாரோட பையன் ?
பரணி : ராஜாவோட ஒரே புள்ளை நான் …
பெரியவர் : ராஜா ஜாடை தெரியுது .. மெட்ராஸ் வந்து நல்ல வேலைதான் பண்ணி இருக்கே ஆமாம் .. இந்த பொண்ணு யாரு … பெரிய இடத்து பொண்ணு மாதிரி தெரியுது…
பரணி : இந்த ஏரியால இருக்கிற பெரிய புள்ளி வாசு சாரோட டாட்டர் … பேரு சித்ரா …
பெரியவர் : என்னப்பா சொல்றே … அதான் நான் ட்யுட்டிக்கு வரும் போது அவரோட ஆளுங்க இந்த ரோட்ல சுத்திகிட்டு இருந்தாங்களா ?
சித்ரா : அதான் தாத்தா .. இன்னிக்கு ஒரு நாள் டே டைம் மட்டும் எங்களுக்கு இங்க அடைக்கலம் கொடுங்க ..
பெரியவர் : தாத்தா வா ?
சித்ரா : இவனோட தாத்தவோட தம்பி ..நீங்க … சின்ன தாத்தா தானே … அதனால தாத்தான்னு கூப்பிட்டேன் ..
பெரியவர் : உறவு முறை எல்லாம் கரெக்ட்டா சொல்றே ….ஆனா இவனை நம்பி கட்டின சூரிதாரோட கிளம்பி வந்துட்டியே …. … இப்ப மேனேஜர் வந்துடுவாரு முன்பதிவு செய்யறதுக்கு ஜனங்க வருவாங்க… என்ன செய்யறது?
பேராண்டி … எங்க ஓனர் மேடத்தோட கார் வருது … அவங்க மண்டபம் முழுசும் சுத்திப் பார்ப்பாங்க … நீங்க ரெண்டு பேரும் மாடில ஒரு ஸ்டோர் ரூம் இருக்கு அங்க போய் இருங்க அங்க தான் அவங்க வர மாட்டாங்க போங்க .. சீக்கிரம் … அப்புறம் என்ன பண்றதுன்னு பார்ப்போம் .
(இளஞ்சோடி , மேடையின் நடுப்பக்கம் வழியாக விரைந்து செல்கிறார்கள் )
(நடுத்தர வயது கொண்ட , பருமனான உடல்வாகு கொண்ட , விலையுயர்ந்த சேலை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிந்த இரண்டு பெண்மணிகள் மேடையின் வலப் பக்கத்திலிருந்து வருகிறார்கள்.)
பெரியவர் : காலை வணக்கம் மேடம் … வாங்க ..
முதல் பெண்மணி : (மலர்ந்த முகத்துடன்) வணக்கம் ராஜமாணிக்கம் .. ஹெல்த் நல்லா இருக்கா ?
பெரியவர் : நல்லா இருக்கு மேடம் …
முதல் பெண்மணி : இவங்க என்னோட ப்ரெண்டு திலகா .. என் பேர்ல இருக்கிற இந்த மண்டபத்தைப் பார்க்கணும்னு சொன்னாங்க … திலகா .. இவர் ராஜமாணிக்கம் … எங்க அப்பாவுக்கு பிடித்த ஸ்டாப்ல முக்கியமானவரு விசுவாசி .. அவரு கூடவே இருந்தவரு …கண்ணன் என் சேவகன் மாதிரி எதிர்பார்ப்பு இல்லாத தொண்டர் .. எங்க அப்பா ஆஸ்ப்பிட்டல்ல இருந்தப்ப , மூச்சு நிக்கற வரைக்கும் கூட இருந்தவரு இவர்தான் . எங்க அண்ணன்களும் அண்ணன் பசங்களும் வரலை . இவர்தான் ராப்பகலா பார்த்துகிட்டாரு .. எங்க அப்பா போனப்புறம் அண்ணன்கள் இவரை அனுப்பிட்டாங்க … நான்தான் தேடிப்பிடிச்சு இவரை இங்க உட்கார வைச்சிருக்கேன். .. மாணிக்கம் … நாங்க உள்ளே போய் பார்க்கறோம் மேனேஜர் ரவிசங்கர் வரலையா ?
(திலகா , ராஜமாணிக்கத்தைப் பார்த்துப் புன்னகைக்கிறார் )
ராஜமாணிக்கம் : வந்துட்டு வெளியே போய் இருக்காரு .. மேடம் வந்துடுவாரு இப்ப … காபி .. டீ .. வாங்கிட்டு வரவா மேடம் ..
ஆஷா : நீங்க அலைய வேணாம் … வேணும்னா ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்கறேன்…
(இருவரும் மேடையின் நடுப்பக்கம் வழியாக செல்கின்றனர். )
(மேடையின் வலப் பக்கத்திலிருந்து உயரமான , கனமான உடல்வாகு கொண்ட பெரிய மீசைக்கார நபர் வருகிறார். பார்மல் உடை அணிந்திருக்கிறார். அவர்தான் மண்டபத்தின் மேலாளர் ரவிசங்கர் . அவரும் ராஜமாணிக்கமும் மேலாளர் – ஊழியர் போல் இல்லாமல் நண்பர்களைப் போல் பேசிக் கொள்கிறார்கள் . )
ரவிசங்கர் : யோவ் கிழவா மேனேஜருக்கு குட் மார்னிங் சொல்ல மாட்டியா ?
ராஜமாணிக்கம் : குட் மார்னிங் சார் காலை வணக்கம் நமஸ்கார் நமஸ்தே ..
யோவ் கிழவாவா ? அன்னிக்கு ஒங்க பைல்லேந்து கீழே விழுந்த ஒங்க ஆதார் கார்டைப் பார்த்தேன் . அறுபது வயசுக் காரன் கிழவன்னா நீங்களும் தான் இன்னும் அஞ்சு வருசத்துல கிழவனாகப் போறீங்க …
ரவிசங்கர் : என் ஆதார் கார்டைப் பார்த்தது , ஓவரா பேசறது எல்லாமே குற்றம் .. இதுக்கே உன் சீட்டை கிழிக்கலாம் … எங்க சின்ன மாமனார் செக்யுரிட்டி வேலை வாங்கி கொடு ன்னு சொல்லிகிட்டு இருக்காரு …
ராஜமாணிக்கம் : கிழிப்பீங்க கிழிப்பீங்க .. முதல்ல ஒங்க வேலை இருக்கான்னு பாருங்க..
மேடம் அவங்க ப்ரெண்டு பெண் தொழில் அதிபரை அழைச்சுகிட்டு வந்திருக்காங்க … மண்டபம் கை மாறப் போவுது போல … கை மாறினா ஒங்க சீட் தான் ..
ரவிசங்கர் : யோவ் காலங்கார்த்தாலே நல்ல வார்த்தை வர மாட்டேங்குது … உன் வாயிலே
ராஜமாணிக்கம் : ஒங்களுக்கு என்ன கவலை ? வீட்லேந்து ரெண்டு தெரு தள்ளி இருக்கற இந்த மண்டபத்துக்குப் பதிலா ஒங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்கற மண்டபத்தில் சேர்ந்திடப் போறீங்க ..
ரவிசங்கர் : என்னை கேட்டாங்களா ?
ராஜமாணிக்கம் : ஒங்கள கேட்டாங்க .. வந்திட்டு வெளியே போய் இருக்காருன்னு சொல்லி வெச்சிருக்கேன் . போய் பாருங்க ..
(ரவிசங்கர் மேடையின் நடுப்பக்கம் வழியாக செல்கிறார் )
(விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஒளிர்கின்றன. )
(மேடையில் அதே ஆஷா திருமண மண்டப முகப்பு பகுதி –
இரண்டு பெரிய நாற்காலிகளில் ஆஷாவும் திலகாவும் அமர்ந்து இருக்கின்றனர். ராஜமாணிக்கமும் ரவிசங்கரும் நின்று கொண்டிருக்கின்றனர்.
மேடையின் வலப் பக்கத்திலிருந்து ஒரு கட்டுடல் இளைஞனும் நவீன உடை அணிந்த இளைஞியும் வருகிறார்கள் . ஓரத்தில் நிற்கிறார்கள் .
ஆஷா : மாணிக்கம் யாரு இந்த இளைஞனும் இளம்பெண்ணும் ?
ராஜமாணிக்கம் : அம்மா … இவங்க மல்லிகை எப்எம் லேந்து வர்றாங்க .. இந்திரா நகரில் உலா ங்கற லைவ் ஷோவுக்கு உங்கள பேட்டி எடுக்க வந்து இருக்காங்க … ஒங்க காரை பார்த்துட்டு நீங்க இருக்கீங்கன்னு வந்து இருக்காங்க …
ஆஷா : நீங்க கோத்து விட்டுட்டு காரை காரணமா சொல்றீங்க இல்ல ?
ராஜமாணிக்கம் : எப்எம் ல நீங்க நம்ம கல்யாண மண்டபத்தை பத்தி பேசலாம் னு தான் .. நமக்கும் ஒரு ப ப்ளிசிட்டி …
ஆஷா : சரி நீங்க சொன்னா சரிதான் .. வாங்க தம்பி …
(இருவரும் பெண்மணிகளின் அருகில் வருகிறார்கள் )
இளைஞன் : வணக்கம் மேம் … மல்லிகை எப்எம் ல இந்திரா நகரில் உலா லைவ் ஷோ நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறேன் . .. என் பேரு நரேன் இவங்க நம்ரதா (மைக்கை நீட்டுகிறான்)
ஆஷா : வணக்கம் … மல்லிகை எப் எம் நேயர்களுக்கு என்னுடைய வணக்கம் என்னுடைய பெயர் ஆஷா .. இது ஆஷா திருமண மண்டபம் …
நரேன் : ஒங்க கல்யாண மண்டபத்தின் தனித்தன்மை பத்தி சொல்லுங்க மேம் ..
ஆஷா : கடந்த பத்து வருசமா இந்த கல்யாண மண்டபம் இயங்கி வருது .. என்னோட தந்தையார் தொழில் அதிபர் பரமேஸ்வரன் என் பேரில் தொடங்கியது. எனக்காக இதை கொடுத்து இருக்காரு.. இவர் ரவிசங்கர் இவர் ராஜமாணிக்கம் இவங்க ரெண்டு பேரும் பொறுப்பா பார்த்துக்கிறாங்க … இவர் செக்யுரிட்டி யூனிபார்ம் ல இருக்காரு ன்னு நெனக்காதீங்க … இவங்க ரெண்டு பேரும் மண்டபத்தோட பில்லர்ஸ் … தூய்மைப் பணி உள்ளிட்ட வேலைகளைப் பார்க்க இன்னும் பத்து பேரு பே ரோல்ல இருக்காங்க பங்ஷன் ஈவன்ட் நடக்கும் போது பம்பரமா சுத்தி வேலை செய்வாங்க .. ஸ்டேஜ் டெகரேஷன் , முகப்பு அலங்காரம் உள்ளிட்ட அலங்கார வடிவமைப்புக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் ஒரு டீம் இருக்காங்க …
எங்களோட தனித்தன்மை ன்னு பார்த்தா குடும்ப சுப நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாம இங்க பல தடவை கிலோ புக் பேர் நடத்தி இருக்கோம் கிலோ புக் கான்செப்ட் இல்லாத புக் பேரும் நடத்தி இருக்கோம். கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்த இடம் கொடுத்து இருக்கோம் . அவங்களுக்கு எங்க கட்டணத்தில் ஐம்பது பர்சென்ட் தான் வாங்கினோம். வித்தியாசமான கண்காட்சி ன்னா … எது ரவிசங்கர்?
ரவிசங்கர் : அது வந்து ..
ஆஷா : என் கணவருக்கு மேல இவுரு .. எதுவும் ஞாபகத்துல இருக்காது ..
எழுத்தாளர் ரங்கநாதன் ஒரு முறை எங்க மண்டபத்துல தமிழ் சிற்றிதழ்களின் கண்காட்சின்னு ரெண்டு நாள் நடத்தினாரு … சிறிய பத்திரிகைகளை எல்லாம் டிஸ்ப்ளே பண்ணி இருந்தாரு … .இதுல. அவருக்கு கமர்சியலா எதுவும் கிடையாது .. அதனால நாங்களும் பக்கா கமர்சியலா இல்லாம அவர்கிட்ட கட்டணம் வாங்கலை மின்சாரக் கட்டணம் கூட வாங்கல .. இணைய இதழ்கள் பற்றிய காட்சி நடத்தணும் கேட்டுகிட்டு இருக்காரு அவரு … டேட்ஸ் இருக்கான்னு பார்க்கணும். இவங்க என்னுடைய தோழி – திலகா … இந்த வருசத்துக்கான சிறந்த தொழில் முனைவோர் விருது வாங்கினவங்க .. சாதனைப் பெண்மணி இப்ப எல்லாம் சொல்றாங்களே அது மாதிரி சிங்கப் பெண்மணி .. திலகா பேசா மடந்தை .. பேசு உன் குரலும் வானொலியில் ஒலிக்கட்டும்
நம்ரதா : மேம் எம்எஸ்எம்இ ல ஒங்க சாதனைய பத்தி சொல்லுங்க ..
திலகா : நேயர்களுக்கு வணக்கம் . என்னுடைய பெயர் திலகா .. ஆஷாவும் நானும் பள்ளி காலத்திலிருந்து தோழிகள் .. நான் சில பெரிய இன்டஸ்ரீஸ்க்கு தேவையான சின்ன சின்ன உதிரிப் பாகங்கள் மேனபேக்ச்சர் பண்ணி சப்ளை பண்ற குறுந்தொழில் நிறுவனம் நடத்தி வரேன். எம்எஸ்எம்இ குரல் ன்னு ஒரு மாதப் பத்திரிகையும் நடத்திகிட்டு வரேன் . எம்எஸ்எம்இ க்கு அரசாங்கம் கொடு்க்கிற பயன்கள் , ஸ்கீம்ஸ் பத்தி இதுல எழுதறோம். … எதிர்காலத்துல வரப் போற டார்க் பேக்ட்டரி பத்தி எல்லாம் எழுதி இருக்கோம் ஆண்களோட வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாருன்னு சொல்வாங்க இல்ல … இந்தப் பெண்மணியோட வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பது என்னோட ப்ரெண்ட் ஆஷாதான்.
நம்ரதா : கிரேட் மேம் .… டார்க் பேக்ட்டரி ன்ற டேர்ம் சொன்னீங்க ? அதைப் பத்தி சுருக்கமா ..
திலகா : அதுக்கு நிறைய முதலீடு தேவைப்படும் . மனித வளத்துக்குப் பதிலாக ரோபோக்களை வைத்து வேலை வாங்கறது … ரோபோக்களுக்கு டயூப் லைட் வெளிச்சம் தேவைப்படாது .. மனிதர்களுக்கு தான் வெளிச்சம் வேணும் … இருட்டில் ரோபோக்கள் மூலம் வேலை … மின்சாரம் மிச்சமாகும் அதுதான் டார்க் பேக்ட்டரி .ஜவுளித் துறையில் அது வரும்னு எதிர்பாப்ப்பு இருக்கு .
நம்ரதா : அருமையான தகவல் … நன்றி .. லிசனர்ஸ் இரண்டு சாதனைப் பெண்மணிகளை சந்தித்தோம். அவர்கள் இடையே உள்ள ஆழமான நட்பு பற்றியும் கேட்டு மகிழ்ந்தீர்கள் அல்லவா ? இன்ஸ்பயரிங் ஆக இருந்தது அல்லவா ? அவர்களுக்கு நன்றி கூறி இந்திரா நகரின் அடுத்த இடத்திற்குச் செல்வோம்… நன்றி மேம் ..
ஆஷாவும் திலகாவும் : மல்லிகை எப்எம் -ன் இளம் ஆர்ஜேக்களுக்கும் நேயர்களுக்கும் எங்கள் நன்றி … வாழ்த்துக்கள் ..
(இளைஞனும் இளைஞியும் மேடையின் வலப் பக்கம் நோக்கி செல்கிறார்கள்.)
ஆஷா : சரி திலகா நாமும் கிளம்புவோம் . உன்னை ஆபீஸ் ல விட்டுட்டு நான் வீட்டுக்குப் போறேன் …
திலகா : சரி வா
ஆஷா : வரேன் ரவி வரேன் மாணிக்கம் …
(இருவரும் மேடையின் வலப் பக்கம் நோக்கி செல்கிறார்கள் . இப்பொழுது மேடையில் ராஜமாணிக்கமும் ரவிசங்கரும் நின்று கொண்டிருக்கின்றனர் )
ராஜமாணிக்கம் : சரி நீங்க ஒங்க பர்சனல் வேலைய பார்த்துட்டு வாங்க …
ரவிசங்கர் : என்ன …?
ராஜமாணிக்கம் : இல்ல வெளியே பார்க்க வேண்டிய அபிஷியல் ஜோலிய பாரத்துட்டு வாங்க …
ரவிசங்கர் : ம்ஹும் … நீ ஒரு மாதிரியா தான் இருக்கே …
என்று சொல்லி விட்டு மேடையின் வலப் பக்கம் நோக்கி சொல்கிறார் .
ராஜமாணிக்கம் , நடுப்பக்கம் வழியாக செல்ல முற்படுகையில் ரவிசங்கர் மீண்டும் வருகிறார் …
ராஜமாணிக்கம் : என்ன சார் போன வேகத்துல வந்துட்டீங்க …
ரவிசங்கர் : மேடம் போன் பண்ணாங்க … போலீஸ் ஏசி பவானி மேடம் போன் பண்ணி போராட்டக் காரர்களை வெச்ச்க்கறதுக்காக நம்ம மண்டபம் வேணும்னு சொல்லி இருக்காங்களாம் . எப்ப வேணும்னாலும் வருவாங்க ன்னு சொல்லி இருக்காங்க … நீ போய் கீழ இருக்கிற மெயின் கதவை திறந்து வை . மாடில இருக்கிற மெயின் கதவையும் திறந்து வை. ஏசி இருக்கிற ரூம் எல்லாம் பூட்டி வை … போலீஸ் ஏசி மேடத்துக்கு நம்ம இடத்தோட லொகேஷன் அனுப்ப சொன்னாங்க இங்க நெட் வரலை நான் அனுப்பிட்டு வரேன் …
(ராஜமாணிக்கம் நடுப்பக்கம் வழியாக செல்கிறார் .ரவிசங்கர் வலப் பக்கம் நோக்கி செல்கிறார்.)
(விளக்குகள் அணைந்து மீண்டும் ஒளிரும் போது …. மேடையில் மங்கலான வெளிச்சம் . திருமண மண்டபத்தின் வாசலில் ராஜமாணிக்கம் நின்று கொண்டிருக்கிறார் . மேடையின் வலப் பக்கத்திலிருந்து உயரமான வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்த, மழித்த முகம் கொண்ட நடுத்தர வயது நபர் இரண்டு இளைஞர்களுடன் வருகிறார். அவர்தான் அந்த பகுதியின் பிரமுகர் வாசு )
ஓர் இளைஞன் : இந்த ஆள் தான் அண்ணே நம்ம பாப்பாவையும் அவனையும் உள்ளே வைச்சு இருக்கான் … சொல்லுய்யா …
(ராஜமாணிக்கத்தின் சட்டையைப் பிடிக்கிறான் )
ராஜமாணிக்கம் : ஐயா இவரை ஒழுங்கா நடந்துக்க சொல்லுங்க ..
வாசு : மணி சட்டையை விடு அவர் பெரியவரு … அதுவும் இல்லாமல் உள்ளே போலீஸ் இருக்கு …. எதுக்கு போலீஸ் இங்க … ?
ராஜமாணிக்கம் : மறியல் பண்ண போராட்டக் காரங்க உள்ளே இருக்காங்க ஐயா
வாசு : இன்னுமா ரிலீஸ் பண்ணல …. அது போகட்டும் ஒங்கள எங்கேயோ பார்த்து இருக்கேனே …. இப்ப ஞாபகம் வருது … நான் செல்ப் டிரைவிங் ல கார் ஓட்டிகிட்டு திருச்சி போகும் போது ஜிஎஸ்டி ரோடு ல ஊரப்பாக்கம் கிட்ட விபத்து நடந்தப்ப நீங்க தானே என்னை ஆஸ்பத்திரியில சேர்த்து காப்பாத்தினீங்க … அங்க மெயின் ரோட் ல இருந்த தேவா அபார்ட்மென்டல நீங்க செக்யயுரிட்டி ஆக இருந்தீங்க …ஒங்க பேர் கூட ராஜரத்தினம் …
ராஜமாணிக்கம் : என் பேரு ராஜமாணிக்கம் ஐயா … நான் மறந்துட்டேன் அந்த சம்பவத்தை ஐயா ஞாபகத்துல வெச்சு இருக்கீங்க ..
வாசு : மணி… உயிர் காப்பான் தோழன்னு சொல்வாங்கய்யா . இவரு உயிரை காப்பாத்தினதால தோழன் … சொல்லுங்க மாணிக்கம் பசங்க சொல்றா மாதிரி .. அவங்களுக்கு அடைக்கலம் கொடுத்தீங்களா ?
ராஜமாணிக்கம் : நான் அடைக்கலம் கொடுக்கலீங்க ஐயா … அவங்க ரெண்டு பேரும் இன்னிக்கு காலைல எப்படியோ எங்க மண்டபத்துக்குள்ள வந்துட்டாங்க … நான் ரெண்டு பேருக்கும் நல்லது சொல்லி இதெல்லாம் ஆகறதில்லை. ஒழுங்கா அவங்க அவங்க வீட்டுக்கு போங்க … அந்த பையன் முதல்ல தனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிட்டு வரட்டும்னு சொன்னேன் ஐயா .. ரெண்டு பேரும் சரின்னுட்டாங்க … போலீஸ் , போராட்டக் காரங்க எல்லாரும் போனப்புறம் ஒங்க பாப்பாவை வீட்ல கொண்டு விடலாம்னு இருந்தேன் . அதுக்குள்ளே சாயங்காலம் நாலு மணிக்கு பாப்பாவுக்கு உடல் சுகவீனம் ஆகிப் போச்சு . பெண்மை சார்ந்த பிரச்சினை … நான் அவங்கள ஆட்டோவுல அழைச்சுகிட்டு போய் பக்கத்துல இருக்கிற டாக்டர் கைலாசம் சார் கிளினிக்ல சேர்த்துட்டு வந்தேன். இப்ப டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க .. இங்க ட்யுட்டி முடிச்சுட்டு அவங்கள அழைச்சுகிட்டு ஒங்க வீட்ல விடலாம்ன்னு இருந்தேன். நீங்க என்ன சொல்வீங்களோன்னு பயத்துல இருந்தாங்க . அதான் நான் கூட வரேன்னு சொல்லி இருந்தேன் ஐயா .. .. போன்ல கூட ஒங்க கிட்ட பேச பயந்தாங்க …
வாசு : மணி .. என் பொண்ணு வாழ்க்கை தடம் மாறாம காப்பத்தி இருக்காருய்யா இவுரு பொறுப்பான மனுசன் . … அந்த பையன் எங்கே ?
ராஜமாணிக்கம் : ஐயா , அந்த இளைஞன் … எங்க அண்ணணோட பேரன் .. ஊருக்கு அனுப்பி வைச்சுட்டேன் … அவனை …. ஐயா …
வாசு : அவனை ஒண்ணும் பண்ண மாட்டேன் . கவலைப்படாதீங்க .
(ராஜமாணிக்கத்தின் கைபேசி ஒலிக்கிறது)
வாசு : பேசுங்க ..
ராஜமாணிக்கம் : வணக்கம் டாக்டர் சொல்லுங்க … அப்படியா சரிங்க டாக்டர் நன்றி ..
(வாசுவிடம்)
ஐயா டாக்டர் கைலாசம் சார் பேசினாரு … ஒங்க மனைவியார் மேடத்துக்கு கிளினிக் லேந்து யாரோ தகவல் கொடுத்து அவங்க அங்க வந்து இருக்காங்களாம் … என்னை வர வேணாமன்னு சொல்லிட்டாருங்க ஐயா
வாசு : அது சரிதான் . நானும் அங்க போறேன் . தாங்க்ஸ் .. என் வாழ்க்கைல இது வரை ரெண்டு தடவை எனக்கு நீங்க காலத்தினால் செய்த உதவி செஞ்சுட்டீங்க எப்படி நன்றிக்கடன் செய்யப் போறேன்னு தெரியல வரேன் ..
(வாசு , ராஜமாணிக்கத்தின் தோள்களைத் தட்டுகிறார்.)
ராஜமாணிக்கம் : ஐயா , ஒரு வேண்டுகோள் …
வாசு : பொண்ணு கிட்ட கடுமையா பேசிட கூடாது அதானே … கடிஞ்சு பேச மாட்டேன். திட்ட மாட்டேன் .. போதுமா … வரேன் .. வாங்கப்பா ..
(வாசுவும் அவரது ஆட்களும் மேடையின் வலப் பக்கம் நோக்கி செல்கிறார்கள் .
மண்டபத்தின் நடுப்பக்கம் வழியாக ரவிசங்கர் வெளியே வருகிறார்.)
ரவிசங்கர் : என்னய்யா. இந்த ஏரியா பெரிய புள்ளி வாசு சார் ஒன் கூட சகஜமா பேசிட்டு போறதை பார்த்தேன் மாடியிலிருந்து … அவர் உனக்கு நல்லா பழக்கமா ? என்ன பேசினாரு..?
ராஜமாணிக்கம் : அவங்க தம்பி ஜெயராமன் சார் நடத்தற கல்யாண மண்டபத்துக்கு இப்ப மேனேஜர் இல்லையாம்.. ஒங்க மேனேஜரை அங்க வேலைக்கு எடுத்துக்கலாமா ? எப்படி அவரு ன்னு என் கிட்ட கருத்து கேட்டாரு..
ரவிசங்கர் : நீ என்ன சொன்னே ?
ராஜமாணிக்கம் : நான் வேற நல்ல ஆளா பார்த்து தரேன்னு சொன்னேன் …
(ரவிசங்கர் , ராஜமாணிக்கத்தை அடிக்க வருகிறார். அவர் ஓடுகிறார்)
(திரை )
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
