ஆத்திரக்காரனுக்கு…
கதையாசிரியர்: நா.க.தங்கரத்தினம்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 389
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பத்மநாதன் மாஸ்ரர் பாடசாலையில் இருந்து மத் தியானச் சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்ததும் வராததுமாகத் தனது நாசனலுக் குள்ளே இருந்த காசைப்பற்றி மாலினியோடு கதைக் கத் தொடங்கினார்.
“மாலினி! என்னுடைய நாசனலுக்குள்ளே இருந்த காசு இரண்டு ரூபாவைக் காணவில்லை. நீங்கள் எடுத்த னீங்களா?’
“நான் எடுக்கவில்லை.”
“உண்மையைச் சொல்லுங்க”
”சத்தியமாக நான் எடுக்கவில்லை.”
“காலையிலே யாராவது இங்கு வந்தார்களா?”
“இல்லையே”.
“ஒருவரும் வரவில்லையென்றால் வேறு யார் எடுத்தது?”
“எனக்குத் தெரியுமே?”
“மாலினி! ஏன் பொய் சொல்லுகிறாய்? உன்னு டைய தம்பிக்கு நீதான் எடுத்துக் கொடுத்திருப்பாய்.” என்று ஆத்திரத்தோடு கூறினார் பத்மநாதன் மாஸ்ரர்.
”என்ன! என்னுடைய தம்பிக்கு நான் எடுத்துக் கொடுத்தேனா? யார் சொன்னது?”
“மாலினி! ஏன் எனக்கு மற்றவர்கள் சொல்ல வேண்டும்?”
“அத்தான்! என்னிடத்திலே உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையில்லையா?”
“ஒரு காலத்தில் அது இருந்தது. இப்பொழுது….”
“இப்பொழுது…?”
“நீ கள்ளியாக மாறிவிட்டாய்” என்று பத்மநாதன் மாஸ்ரர் கூறியது மாலினிக்கு உயிரையே எடுத்து விடுவது போல இருந்தது. பத்மநாதன் மாஸ்ரர் மாலினியை ‘நீ’ என்று கதைக்கத் தொடங்கியது இது தான் முதல் முறை.
“என்ன? நான் கள்ளியாக மாறிவிட்டேனா? நான் களவெடுத்துத்தானா உங்களுக்குச் சாப்பாடு போடுகிறேன்?”
“நீ களவெடுத்து எனக்குச் சாப்பாடு போடவில்லை. உன் பெற்றோருக்குத்தான் சாப்பாடு போடுகிறாய்.”
”ஐயோ! கடவுளே! நீதான் இதைக் கேட்க வேண்டும்.”
“என்னடி களவெடுத்துப் போட்டுக் கள்ள நேர்த் திக்கடன் போடுகிறாய்?” என்றதும் மாலினிக்கு ஆத் திரம் வந்து விட்டது. மாலினி இதுவரை பத்மநாதன் மாஸ்ரரோடு எதிர்த்துக் கதைத்தது கிடைக்காது. பத்ம நாதன் மாஸ்ரர் இன்று அவளைத் தாறுமாறாக ஏசியதால் அவளும் எதிர்த்துக் கதைக்கத் தொடங்கினாள். பொறு மையும் ஒரு அளவுக்கல்லவா இருக்கும். அளவுக்கு மிஞ்சினால்….
“அத்தான்! ‘எடி பிடி’ என்று மாத்திரம் பேசாதீர் கள். என்னுடைய தகப்பனார் என்னை நிலத்திலை விடா மல் வளர்த்தவர். என்ரை காலம் எனக்கு இப்படி வந்து நேர்ந்து விட்டது.*
“எடியெடியே, நீ வளர்ந்த வளர்ப்பு எனக்குத் தெரியுமடி.”
“அந்தக் கோதாரிவருவான். உன்னிட்டைத் தள்ளி விடாவிட்டால்…” – மாலினியும் ஆத்திரத்துடன். கதைக்கத் தொடங்கிவிட்டாள்.
“என்னிட்டைத் தள்ளாவிட்டால் நீ இப்ப மகாராணி யாகவெல்லே இருப்பாய்…”
“ஓ! அப்பிடித்தான் இருப்பன்.”
“என்னடி வாய்க்கு வாய் காட்டுகிறாய்.”
“ஓ! இனி வாய்க்கு வாய்தான் காட்டுவன்.”
“எங்கை காட்டடி பாப்பம்” என்று சொல்லிக் காலாலும் கையாலும் மாறி மாறி அடித்தார் பத்ம நாதன் மாஸ்ரர்.
பத்மநாதன் மாஸ்ரர் ஒரு காலமும் மாலினிக்கு அடித்தது. இல்லை. இன்று மாத்திரம் ஆத்திரத்தால் அடித்து விட்டார்.
இதற்கு முன்னெல்லாம் நாசனலுக்குள்ளே காசு வைத்து விட்டுப் போனால் மாலினி எடுப்பது வழக்க மாகவே இருந்தது. மாலினி காசு எடுத்தாலும் அவர் கேட்டவுடனே எடுத்ததாகச் சொல்லிவிடுவாள். அவரும் அவள் தேவைக்குத் தானே எடுத்திருப்பாள் என்று நினைத்து ஒன்றும் கதைக்காமல் விட்டுவிடுவார். ஆனால், இன்று அவர் ஏசியதற்குக் காரணம் அவள் பொய் சொல்லி விட்டாள் என்பதும் கடையிலே சுருட்டு வாங்கி விட்டுக் காசு கொடுப்பதற்குக் காசை நாசனலுக்குள்ளே பார்த்தபோது’ கரசு இல்லாமல், அவர் கடைக் காரரிடம் வெட்கப்பட்டதும்தான் காரணம்.
எவராகுதல் எவரையேனும் கேட்காமல் சட்டைப் னுள்ளோ காசுப் பையினுள்ளோ இருந்து காசு எடுப்பது தவறாகும். இப்படி எடுப்பதால் அவர்கள் போக்குவரவு செய்யும் நேரத்திலே எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்பதை எவர்தான் அறியப்போகி றார்கள்…?
பத்மநாதன் மாஸ்ரர் மாலினிக்கு அடித்து விட்டுப் பாடசாலைக்குப் போகப் புறப்பட்டார். மாலினி அவர் அடித்ததையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டுப் போகும்படி கேட்டாள். அவர் தனக்குச் சாப்பாடு தேவை யில்லை என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
உடனே மாலினி அவருக்கு முன்னே ஓடிச் சென்று, “அத்தான்! சாப்பிட்டு விட்டுப்போங்கோ அத்தான். சாப்பிடாமல் போக நான் விடமாட்டேன்.”
“எனக்குச்: சாப்பாடு வேண்டாம். நீயே அந்தச் சாப்பாடு எல்லாவற்றையும் சாப்பிடு.”
“:அத்தான்! நீங்கள் காலையிலும் அதிகம் சாப்பிட வில்லை. இப்பொழுதும் சாப்பிடாவிட்டால் உடம்பு என் னத்துக்குக் கூடும்” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே பத்மநாதன் மாஸ்ரரின் காலில் விழுந்து அழுதாள் மாலினி. பத்மநாதன் மாஸ்ரர் அவள் பிடித்த பிடியையும் உதறித் தள்ளிவிட்டு விறு விறு என நடந்து போனார் பாடசாலைக்கு. அவருடைய நடையிலே ஆத் திரத்தின் கேவம் அப்படியே பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
பத்மநாதன் மாஸ்ரர் பாடசாலைக்குப் போனதும் மாலினியும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தாள்.
மாலினிக்குத் தன் கணவன் மீது மிகுந்த ஆசை. அவர் ஒரு நேரம் சாப்பிடாவிட்டால் அவளுக்கு உயிரே போய்விடுவது போலத்தான் இருக்கும். அவள் தன் கணவனைக் கண்கண்ட தெய்வமாகவே கருதி அவரு டன் பண்போடு பழகினாள். கணவன் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் எங்களுக்கென்ன என்று நினைத் துக் கணவனுக்குத் தெரியாமலே சாப்பிட்டு ‘மாடு மாதிரி’ உடம்பை வளர்க்கும் மற்றைய பெண்களைப் போன்றவளல்ல மாலினி. மாலினி படித்தவள் – பண்புள்ளவள்.
பத்மநாதன் மாஸ்ரருக்கும் மர்லினி மீது ஆசை தான். அவர், மாலினியை ஒரு நேரமாகுதல் சாப்பிடா மல் இருக்க விடமாட்டார். அவர் தான் சாப்பிடும் போது மாலினியையும் தன்னுடன் சேர்த்தே சாப்பிடு வார். கல்யாணம் செய்து இரண்டு வருடங்களாகியும் இரண்டுபேரும் ஒரே பாத்திரத்தில் ஒன்றாகவே சாப்பிடு கிறார்கள். என்றால் அவர்களின் அன்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
ஆனால், இன்று மாத்திரம் அந்த அன்பு எங்கே? இரண்டு ஆண்டுகளாக வைத்திருந்த அந்த அன்பை அவசர புத்தியால் வந்த ஆத்திரம் அழித்துவிட்டது.
அவசரபுத்தியும் ஆத்திரமும் எத்தனையோ கொடு மைகளையெல்லாம் எதிர்பாராத விதமாகச் செய்துவிடு கின்றன. இதனாலோ என்னவோ ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆத்தி ரத்தை அடக்க வேண்டும். அதை அடக்காதவனை ‘மிருகம்’ என்றே சொல்லலாம்.
பத்மநாதன் மாஸ்ரர் பாடசாலைக்குப் போனதும் அவரால் படிப்பிக்க முடியவில்லை. அவர் வீட்டுவேலை செய்து கொண்டுவராத மாணவர்களை எல்லாம் ஒரு நாளுமில்லாத மாதிரி அடித்து விட்டார். அவரின் முகம் கறுத்திருப்பதைக் கண்ட மாணவர்கள் ” இண்டைக்கு மாஸ்ரர் பெண்சாதியோடை சண்டையாக்கும்” என்று தங்களுக்குள்ளே கதைத்துக்கொண்டனர்.
ஆசிரியர்கள் வீட்டிலே எப்படியும் சண்டைபிடிக் கலாம். ஆனால், வீட்டுக் கோபத்தை மனதிலே வைத்து மாணவர்களுக்கு அடிப்பது – ஆசிரியத் தொழிலுக்கே அவமானமாகும்.
அவர் வீட்டு வேலைகளைச் செய்யும்படி மாணவர் களுக்குச் சொல்லிவிட்டுக் கதிரையில் அமர்ந்தார். அவருக்கு வீட்டு நினைவே முன்னுக்கு வந்தது. அவர் தான் செய்த செலவுகள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தார். இருந்த காசும் செலவு செய்த காசும் சரியாகவே இருந்தது.
‘காசு களவு போகவில்லை’: என்பதைத் தெரிந்து கொண்டதும், தான் அவசரப்பட்டு அவளோடு நடந்து கொண்சுவைகளைச் சிந்தித்துப் பார்த்தார். அவருக்கு வெட்கமாகவும் துக்கமாகவும் இருந்தது.
அவர், தான் தவறாக நடந்து கொண்டதால் தன் மனைவி சாப்பிடாமல் பட்டினி கிடக்கப் போகிறாளே என நினைத்துச் சொற்பநேர லீவுக்குக் கடிதம் எழுதினார்.
அப்போது –
“மாஸ்ரர்! ‘பிறின்சிப்பல்’ உங்களை ஒருக்கா வந்து விட்டுப் போகட்டாம்” என்று ஒரு மாணவன் கூறிய தும் பிறின்சிப்பலின் காரியாலயத்துக்குப் போனார் பத்மநாதன் மாஸ்ரர்.
“மாஸ்ரர் உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கிறது மாஸ்ரர்” என்று தந்தியைக் கொடுத்தார் ‘பிறின்சிப்பல்.’ பத்மநாதன் மாஸ்ரர், ‘தந்தியை வாங்கி வாசித்தார். அதில் – ”உங்கள் மனைவியாருக்குச் சுகமில்லை. ஆஸ் பத்திரிக்குக் கொண்டுபோகிறோம். உடனே வரவும்” என்று இருந்தது. தந்தியை வாசித்ததும் அவரது கைகள் இரண்டும் நடுங்கின. சொற்பநேர லீவுக் கடி தத்தை அதிபரிடம் கொடுத்து விட்டு ஆஸ்பத்திரிக்குப் போனார்,
ஆஸ்பத்திரிக்குப் போனதும் டாக்ரரை விசாரித் தார். டாக்ரர் மாலினியின் பிள்ளை இறந்துவிட்ட. தாகச் சொன்னார்.
“டாக்ரர், எதற்காக டாக்ரர் பிள்ளை இறந்தது?” என்று பத்மநாதன் மாஸ்ரர் கவலையோடு கேட்டார்.
“மாஸ்ரர்! ஒன்பது மாதக் கர்ப்பவதிக்கு மாடு குத்தினால் சும்மா இருக்குமா?”
“என்ன டாக்ரர்! மாடு குத்தியதா?” ஆச்சரியத் தோடு கேட்டார் மாஸ்ரர்.
“ஆமாம் மாஸ்ரர், உங்கள் மனைவியார்தான் இன்று தனக்கு மாடு குத்திவிட்டதாகப் பொலிசுக்குச் சொன்னா. மாஸ்ரர், இனிமேலாகுதல் கர்ப்பவதியாக இருக்கும் போது கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். கர்ப்ப வதியாக இருக்கும்போது சின்னஞ் சிறு குழந்தை தட் டினாலும் அது கெடுதியாகத்தான் முடியும்” என்றார் டாக்ரர்.
அப்பொழுதுதான் பத்மநாதன் மாஸ்ரருக்குத்தான் செய்த தப்பிதங்கள் எல்லாம் தெரிய வந்தது. அவசர புத்தியால் இல்லாத ஒன்றிற்காகத் தான் செய்த தவறி னாலேயே தன்பிள்ளை இறந்து விட்டது என்று வருந்தினார். தான் பெற்ற பிள்ளை இறந்தும் தன்னைக்காப் பாற்றவே பொலிஸ் பகுதியினருக்கு மாலினி மாடு குத்தியதாகச் சொல்லியிருக்கிறாள் “என்று நினைத்து அவளது அன்பின் பெருமையைப் போற்றினார் பத்ம நாதன் மாஸ்ரர். பதிபக்திக்காகப் பிள்ளைப் பாசத்தையே மறந்து அவள் சொன்னதை நினைக்க நினைக்கப் பத்ம நாதன் மாஸ்ரருக்கு……. அவள் மேல் அன்பு மேலும் வளர்ந்தது. அவர் தான் தன்மனைவியோடு புகல் நடந்து கொண்டதை நினைத்துப் பார்த்தார்.
“மாஸ்ரர், என்ன மாஸ்ரர் ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள்? இறைவன் பிள்ளையைத் தருகிறான். பின்பு பறித்துக் கொண்டு போகின்றான். இது ‘இயற் கையின் நியதி. இதையிட்டு வருந்துவதில் அர்த்த மில்லை” என்றார் டாக்ரர்.
“டாக்ரர், நான்தான் டாக்ரர் என் பிள்ளையைக் கொன்றேன். என்னால்தான் டாக்ரர். என் பிள்ளை இறந் தது” என்று மாஸ்ரர் சொல்லும் போது மாஸ்ரரின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் நிலத்தில்” விழுந்து சிதறித் தெறித்தன.
“என்ன? நீங்கள் கொன்றீர்களா? யார் சொன் னது?”
“டாக்ரர், நான்தான் டாக்ரர் கொன்றேன். என் பதற்கு இதோ விளக்கம் தருகிறேன்” என்று சொல்லி நடந்தவற்றைச் சொன்னார் பத்மநாதன் மாஸ்ரர்.
பத்மநாதன் மாஸ்ரர் நடந்தவற்றை எல்லாம் சொன் னதும் டாக்ரருக்கு மாலினி மாடு குத்தியதாகச் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. மாலினி எவ்வளவு பண்புள்ளவள். தன் கணவனைக் காப்பாற்ற வேண்டு மென்றும் தன் கணவனின் ஆத்திரச் செயலை மற்றவர் கள் அறிந்தால் தூற்றுவார்கள் என்றும் நினைத்து மாடு குத்தியதாகச் சொல்லிவிட்டாளே! “இதுவல்லவா ‘பதிபக்தி” என்று னக்குள்ளே நினைத்துக் கொண்டு பத்மநாதன் மாஸ்ரருக்குப் புத்திமதி கூறத் தொடங்கி னார் டாக்ரர் கனகராஜன்.
“மாஸ்ரர், நீங்கள் படித்தவர்கள். *வருங்காலத்து அரசியல் ஞானிகளையும் பெரிய பெரிய விஞ்ஞானிகளை யும் பண்டித வித்துவான் களையும் உற்பத்தியாக்கி, நாட் டின் முன்னேற்றத்திற்கு உதவுபவர்கள். நாட்டின் முன் னேற்றத்திற்கு முதற் காரணகர்த்தாவாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான். இதனாலேயே ஆசிரியர்களைக் குரு வரீகக் கருதுகிறார்கள். இத்தகைய, பெருமை பெற்ற நீங்கள் ஒரு பெண்ணுக்கு அடிப்பதென்றால்… அதுவும் கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்கு அடிப்பதென்றால் உங்களை எப்படிக் கூறுவதென்றே தெரியவில்லை. நீங்கள் சுகாதாரம் நன்றாகப் படித்தவர்கள். சின்னஞ் சிறு குழந்தைகளுக்கெல்லாம் சுகாதாரம் படிப்பிப்ப வர்கள். அத்தகைய நீங்களே மிருகத்தனமான கொடிய செயலைச் செய்தால் குழந்தைகள் என்ன செய்வார்கள்? உங்களைப் பின்பற்றியல்லவா? அவர்களும் நடப்பார்கள். அவர்களும் உங்களைப் பின்பற்றி நடந்தால் உலகம் என்னாவது? நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையிலே நல் லனவற்றையெல்லாம் செயல் மூலம் காட்டி, மாணவர்கள் பின்பற்றி நடக்க வழிகாட்டியாக இருக்கவேண்டும். மாஸ்ரர் நான் கூறியவற்றில் ஏதாவது பிழைகள் இருந் தால் என்னை மன்னித்து விடுங்கள் மாஸ்ரர்.”
“டாக்ரர், நீங்கள் கூறியவை யாவும் உண்மை தான் டாக்ரர். நான்தான் டாக்ரர் அவசரப் பட்டு ஒரு நாளும் செய்யாத கேவலமான செயலைச் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் டாக்ரர் என்றார் பத்மநாதன் மாஸ்ரர்.
“மாஸ்ரர், நீங்கள் இன்றைக்கே உங்கள் மனைவி யாரை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். ஆனால் ஒன்று, இனிமேலாகுதல் மிருகத்தனமாக நடக்காது கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு ‘டொக் டொக்’ என்ற ‘பூட்ஸ்’ சத்தத்துடன் நகர்ந்தார் டாக்டர் கனகராஜன்.
டாக்ரர் போனதும் பத்மநாதன் மாஸ்ரர் மாலினி இருந்த அறைக்குப் போனார்.
“மாலினி அவசர புத்தியால் மிருகத்தனமாக நடந்து கொண்ட என்னை மன்னித்து விடு மாலினி.”
“அத்தான்! யார் யாரை அத்தான் மன்னிப்பது? நீங்கள் ஆத்திரத்தோடு ஏசுகிறீர்களே என்று தெரிந்து கொண்டும் உங்களோடு எதிர்த்து வாய்க்கு வாய் காட் டிய என்னைத்தான் அத்தான் நீங்கள் முதலில் மன்னிக்க வேண்டும்” என்று சொல்லிப் பத்மநாதன் மாஸ்ரரின் காலில் விழுந்தாள் மாலினி.
காலில் விழுந்த மாலினியை இரண்டு கைகளாலும் தூக்கி, அவளுக்கு ஆறுதல் மொழிகள் பல கூறி # அவளைத் தேற்றிக் கொண்டு அரவணைத்தபடி வெளியே அழைத்துச் சென்றார் பத்மநாதன் மாஸ்ரர்.
– 09-05-1965, ஈழநாடு.
– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.
![]() |
சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க... |
