ஆட்சி சாதனைகள்

தென்னிந்தியாவின் அனானிமஸ் மாநில முதலமைச்சர் பிரம்மாண்டமான மாநாட்டு மேடையில் பெருமிதம் பொங்க முழங்கிக்கொண்டிருந்தார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் எண்ணற்ற சாதனைகள் புரிந்துள்ளோம். அவற்றை உங்கள் முன் பட்டியலிட்டு நினைவுபடுத்த விரும்புகிறேன்…”
மக்கள் கூட்டத்தில் ஆவல் நிறைந்த அமைதி நிலவியது.
முதலமைச்சர் கர்ஜித்தார்:
“மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி; வேறெந்தக் கட்சிகளையும் விட ஊழல்களில் தலை சிறந்தவர்கள் நமது கட்சியினரே என்பதை நாம் தொடர்ந்து நிரூபித்துள்ளோம். அதோடு, நம் ஊழல்களை, அராஜகங்களை, அட்டூழியங்களை எதிர்ப்பவர்களை அதிகார துஷ்ப்ரயோகங்களால் அடக்கி ஒடுக்கி, ஒழித்துக் கட்டும் வல்லமை நம் அரசுக்கு உண்டு என்பதை நாடே அறியும். எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது, கை கால்களை முறிப்பது என்பதையெல்லாம் நாம் திறம்பட செய்திருக்கிறோம். நம் கட்சித் தலைவர்களைக் கண்டால் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள்; அரசியல் விமர்சகர்கள் பயந்து நடுங்குகிறார்கள். சமூக வலைத்தளங்களில் நம் ஆட்சிக்கு எதிராக எவரேனும் உண்மை பேசினால் குண்டர் தடுப்பு சட்டத்தோடு பாய்கிறோம்…”
கட்சிக் கரைத் துண்டு – வேட்டி, சேலை – ரவிக்கைத் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
“அரசுத் திட்டங்களில் உள்ள குறைகளைச் சொல்பவர்களை, இலவசப் பொருட்களின் தரமின்மை பற்றிக் கேள்வி கேட்பவர்களை நாம் சிறையில் அடைக்கிறோம்; சித்திரவதை செய்கிறோம். கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை பெருகியுள்ளது. கள்ளச் சாராயத்தால் சில நூறு ஆண்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துள்ளோம். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், கொடூரக் கொலைகளும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது நம் மாநிலத்தில் 435% உயர்ந்துள்ளது. இவை யாவும் நமது மகத்தான சாதனைகள்…”
இளைஞர் அணிகள் கரவொலியிலும், மகளிர் அணிகள் சீழ்க்கையிலும் ஆர்ப்பரித்தன.
முதல்வர் கைகளை நீட்டி, பெருமையுடன் கூறினார், “வேறு எந்தக் கட்சியின் ஆட்சியிலாவது இவ்வளவு சாதனைகள் செய்ய இயலுமா? இதெல்லாம் அவர்களின் கனவிலும் நடக்காதே! ஆனால், நமது ஆட்சியில் இவை நிஜமாகியுள்ளன. இது வேறு எவராலும் ஒருபோதும் தொட இயலாத இமாலய சாதனை!”
ஜே – ஜே கோஷங்கள் மாநாட்டு மேடையையே குலுங்க வைத்துவிட்டன.
முதலமைச்சர் கையை உயர்த்தி தொண்டர்களை அமைதிப்படுத்தினார்.
“இன்னும் ஒரு விஷயம். அடுத்த முறையும் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த மாநிலத்தையே சுடுகாடாக மாற்றிக் காட்டுவோம் என உறுதியளிக்கிறேன்…”
மக்கள் கூட்டம் வெறித்தனமாகக் கை தட்டி ‘வாழ்க, வாழ்க’ கோஷமிட்டது.
– நடுகல் இணைய இதழ், மே, 2025.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |