ஆசை





பிரதான சாலைகளின் கடைத் திண்ணைகளில் படுத்துறங்குபவர்களை எட்டு மணிக்கு முன்பே தண்ணீர் அடித்து எழுப்பிவிடுவார்கள். இன்று சூரியன் வந்து சுட்டெரிக்கும் வரையில் மீளாத தூக்கம் அவர்களுக்கு. இப்படி அரிதாகத்தான் அவர்களுக்கு விடுமுறைகள் வாய்க்கும்.எந்த நாளும் யாசகம்தான் அவர்கள் தொழில். கிடைக்கும்,சில நாட்கள் கிடைக்காது. ஆனால்,இன்று அப்படியில்லை. விழிக்கும் முன் தலைமாட்டில் இருக்கிறது ஒரு உணவு பொட்டலம்.நல்லவர்கள் செய்யும் புண்ணிய காரியம். பிரதான சாலைகளை தேடி தனது இருசக்கர வாகனங்களில் குடும்ப சகிதமாக சென்று உணவு தந்து உதவுகிறார்கள், பிச்சைக்காரர்களுக்கு. மாலை நேரங்களில் தண்ணீர் பாட்டிலும் பிஸ்கோத்துகளும் தந்து செல்கிறார்கள் என்றால் பாருங்களேன். பெருந்தொற்றுகள் வெட்கிப்போய் நிற்கிறது இவர்கள் முன்னால்.
ஊரைவிட்டு வெகுதூரம் வந்து பிரம்மச்சரியம் புரியும் என்னைப் போன்ற தொழிலாளிக்கு ஊரடங்கில் அரைப்பட்டினியோ அல்லது முழுப்பட்டினியோதான் வாய்க்கிறது. கிணற்று நீரை சேந்திக் குளித்துவிட்டு நெற்றிநிறைய திருநீர் பூசிக் கொண்டு பிரதான சாலையை நோக்கி நகர்வலம் வருகிறேன். ஒரு குண்டுமணியை போட்டாலும் அதன் கணீர்ரென ஓசை உறுதியாக கேட்கும். அத்தனை துல்லியம். அமானுஷ்யம். மற்ற நாட்களில் வெடிகுண்டு விழுந்தாலும் சட்டை செய்யாது செல்லும் ஜனக்கூட்டம். பொதுவாக மனிதர்கள் பயந்துவிட்டார்கள் அல்லது பணிந்துவிட்டார்கள். வாகனாதிகளின் இரைச்சல் கேட்கும் சாலையில் அமைதிக்கு இடமேது. ஒரு செவலை நாய் பிரதான சாலையில் குழிபரித்து அதனுள் சுருண்டு படுத்துறங்குகிறது.
மேம்பாலத்தின் கீழேதான் அந்தக் காட்சியை கண்டேன். ஒரு மின்சார இருசக்கிர வாகனத்தில் கணவனும் மனைவியும் பை நிறைய சாப்பாட்டு பொட்டலங்களுடன் விரைந்து வந்து நிற்கிறார்கள். அவர்கள் பெரும் பணக்கார்கள் இல்லை என்பதை தோற்றம் சொல்கிறது.

ஆளுக்கு ஒன்றுயென்று வாங்கி கொண்டார்கள். சிலர் பின்னாடி யாரையோ காண்பித்து மேலும் ஒன்று பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் அனைவரும் யாசகர்கள்தான். எனக்கு ஒன்று தர முன்வந்த அவர்களை பார்த்து ஒரு கும்பிடு போட்டேன்.
அடுத்த மேம்பாலத்தை நோக்கி விரைந்தது அவர்கள் வாகனம். சற்று நின்று அவதானித்தேன். வாங்கியது யாசகம்யெனினும் அதிலும் பொய் சொல்லி தேவைக்கு அதிகம் பெற்றுக் கொண்ட அவர்கள் முகத்தில் ஒரு கள்ளச் சிரிப்பு தெரிந்தது. ஒரு தாடிக்காரர் ஜம்பமாக உட்கார்ந்து கொண்டு “சரி விடு, தர்மன் பொய் சொல்லவில்லையா?” – என்றார்.
தர்மத்தின் வெற்றிக்காக அதர்மத்திற்கு எதிராக திட்டமிட்டபடி ஒரு பொய் சொல்வார் தர்மமகாராஜா. போர்களத்தில் அசுவாத்தமன் உயிருடன் இருந்தும் இறந்து விட்டதாகத்தான் அது. குலக்குரு துரோணாச்சாரி வீழ்வார். பொய்யை சமன் செய்ய அசுவாத்தமன்யெனும் யானையை பீமன் கொல்வார்.
பசுமை புரட்சி கண்டுவிட்ட பாரதத்தில் பிடி சோற்றுக்காகவெல்லாம் பொய்யுரைக்கும் மனிதநிலை.
ஆசையிருக்கும்வரையில் பொய்யும் இருக்கும் போல..!