ஆசைமயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 3, 2024
பார்வையிட்டோர்: 2,305 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஐயா!’ 

மெல்லிய அந்த உருவத்தின் வேகமான நடை தளர்ந்தது. மெல்லப் பின்னுக்குத் திரும்பிப் பார்த்தார், ஆறுமுகம் ஆசிரியர்! அவர் கண்கள் அகல விரிந்தன. அந்த அசட்டுப்புன்னகை இதழ்க்கோடியில் நெளிந்து மறைந்தது. 

“ஈஸ்வர ….நீயா..!” என்று இழுத்தார். என்னுள்ளம் அலைமோதியது. மெல்லப் புன்னகைத்தபடியே ‘என்ன ஆசிரியரே என்னை மறந்துவிட்டீர்களா ……?’ என்று கேட்டு வைத்தேன். 

“மறந்துவிட்டேனா…? இல்லை, இல்லை…சும்மா..!” அவரின் சுபாவமே இப்படித்தான்! தனியே சந்திக்கிறபொழுது பாவம், இரண்டொரு சொற்களைத் தானும் முழுதாக வெளியிட முடியாது, அவரால். ஆனால் மேடையில் ஏறிவிட்டால் அமுதத் தமிழின்ப வெள்ளத்தில் அனைவரையும் ஆழ்த்திவிடும் வாசாலகமான மனிதர். ஐந்து வருடங்களுக்கு முந்திய சம்பவ எண்ணச் சுழல்கள் குமிழ்விடத் தொடங்கின இதய ஆழத்தில். இருவரும் அருகருகாக நடந்து கொண்டிருந்தோம், வசுநிலையத்தை நோக்கி! 

‘ஈஸ்வரி இப்பொழுது எங்கேயிருக்கிறாய்…?’ ஆசிரியர் கேட்டார். 

‘ஊரில்தான்!’ இரத்தினச் சுருக்கமாக நான் பதி லளித்தேன். தொடர்ந்து – ‘உங்கள்பாடு எப்படி ஐயா?’ என்ற கேள்வியையும் எழுப்பினேன். 

‘பரவாயில்லை ஈஸ்வரி ……!” அவர் அளித்த விடை இது! பேசுவதற்கு வார்த்தைகளுக்கும், பஞ்சம் வந்து விட்டதா? அவர் நடந்தார், நானும் நடந்துகொண் டிருந்தேன்! 

ஐந்து வருடங்களுக்கு முன்பு- 

நான் கல்லூரி மாணவி. எஸ். எஸ். ஸியில் படித் துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் ஆறுமுகம் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியராக வந்து சேர்ந்தார். எடுத்த எடுப்பிலேயே அவருடைய பேச்சும், தோற்ற மும், படிப்பிக்கும் பண்பும் என்னுள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய கவர்ச்சிகரமான பேச்சிலேயுள்ள, காந்தத் தன் மையில் கல்லூரி மாணவர் அனைவருமே கட்டுண்ட னர். அவர் எங்கள் சங்கத்தில் பேசுவதென்றால் எங் கள் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி! போட்டி போட் டுக்கொண்டு அவர் பேச்சைப் புகழ்வோம். நாளாக, ஆக அவர்மீது எனக்குத் தனியான ஒரு அபிமானம் ஏற்பட்டது. என்ன காரணத்தாலோ! அவர் ஒரு எழுத் தாளருங்கூட என்று தெரிந்தபின்பு அவரை ‘என் னுடையவர்’ என்று நினைக்கும் பழக்கமே எனக்கேற்பட்டுவிட்டது. என்ன நினைத்துக்கொண்டாரோ, அவர் என்னைக் கவனிக்கும்பொழுதும் ஒரு மாதிரியாகத்தா னிருந்தார். ‘ஒருபோதும் வளர்ந்த பெண்களை ஆண் ஆசிரியர்களிடம் கல்வி பயில விடக்கூடாது’ என்று இதற்காகத்தான் சொல்கிறார்களோ, என்னவோ! 

ஒரு நாளைக்கு அவர் தப்பித்தவறி வகுப்புக்கு வராவிட்டால் என் மனம் படும் பாடு! பெண்களின் உள்ளமே விசித்திரமானதுதான். என்னிதயத்தின் ஒலித்துடிப்பு ஒன்றுக்கு இரண்டாகப் பக்கத்து மாணவி களிலும் ஒலிக்கின்றதா? 

பார்வதி ஒரு நாள் கேட்டாள்! 

“நீ என்னடி, ஆறுமுகம் ஆசிரியரை அப்படிப் பார்க்கிறாய்……?” 

எனக்கென்னவோ உள்ளத்து நினைவுகள் யாவை யும் ஒருமித்துக் கொட்டிவிட வேண்டும் போலிருந்தது! 

எல்லாவற்றையும் உளறித்தள்ளிவிட்டேன்! பயம் பற்றிக்கொண்டது பின்புதான்! பார்வதி ஒருவேளை மற்ற மாணவிகளிடம் இதைக் கூறிவிட்டால், அவர்கள் ஆசிரியைகளிடம் கூறிவிட்டால், அவர்கள் அதிபரிடம் கூறிவிட்டால்…! அப்பப்பா, எவ்வளவு பயங்கரம்! ‘பார்வதி…!? 

‘பார்வதி! அவளுக்கென்ன……?’ ஆறுமுகம் ஆசிரி யர் கேட்டார். என்ன வேடிக்கை! பழைய நினைவுத் தாக்கங்களினால், நிகழ்காலத்தை மறந்து வாயைத் திறந்துவிட்டேன்! 

“ஒன்றுமில்லை ஐயா! அந்தக்காலத்தில், கல்லூரி வாழ்க்கையில்….அந்தச் சம்பவங்கள் நினைவுக்கு வந்தன!” 

‘அந்தக் காலம்……! மறக்க முடியாத நாட்கள்!!’ உணர்ச்சிவசப்பட்டவர் போல் வார்த்தைகளை உதிர்த்த ஆசிரியர் மீண்டும் மெல்ல மௌனமானார். 

ஒரு நாள்! 

பட்டினத்தில் நிகழ்ந்த களியாட்ட விழா வைபவம் ஒன்றிற்கு எங்கள் கல்லூரி மாணவர் எல்லோரும் போகவேண்டியிருந்தது. எங்கள் வகுப்பு மாணவி களைக் கூட்டிக்கொண்டு போய்வர வேண்டிய பொறுப்பு ஆறுமுகம் ஆசிரியருக்கும், இன்னொரு ஆசிரியைக்குமாகக் கிடைத்தது. இரவு நேரம்! எட்டு மணியிருக்கும். களியாட்ட வைபவத்திலிருந்து காரில் வந்துகொண்டிருந்தோம். காரில் ஆறுமுகம் ஆசிரியரும், ஆசிரியையும், நானும், வேறு மூன்று மாணவிகளுமாக இருந்தோம். ஆசிரியர் முன் இருக்கையிலிருந்தார். குளிர்ந்த காற்று வீசியது. தெருவிளக்குகள் வாலைக்குமரியரின் மந்தகாசப் புன்சிரிப்புதிர்த்து நின்றன. என்னுள்ளத்தை என்னவோ கிள்ளியெடுத்துக் கொண்டிருந்தது. கார் கல்லொன்றில் ஏறிக் கீழேயிறங்கியபோது ‘பொல பொல’ வென்றதிர்ந்தது. ‘என்னவோ ஏதோ’ என்ற அச்சத்தினால் ‘பின்னிருக்கை’யிலிருந்த எல்லோரும் ‘முன்னிருக்கை’யை இறுகப் பற்றினோம். என்கை விரல்களுக்கு இடையே என்னவோ ஒன்று ‘கிளுகிளு’த்தது. என்னவோ அது? அப்பாடா, இப்போதுதான் புரிந்தது! என்ன துணிச்சல் இவருக்கு! ஆறுமுகம் ஆசிரியரின் முகத்தில் வெயர்வை முத்துக்கள் மினு மினுத்தன. அவரது பஞ்சுக்கரத்தின், பவளவிரலின் ஸ்பரிசத்தைப் பறிகொடுக்க நான் இன்னும் தயாராயில்லை. நெஞ்சகம் விம்மித் தணிந்தது. கார் அள்ளி அடித்துக் கொண்டு பறந்தது! 

இதற்குப் பிறகு- 

கல்லூரி என்றால் எனக்குக் கரும்பு! சனி, ஞாயிறு நாட்களைச் சபித்துக்கொண்டிருந்தேன். ஆசிரியரும், நானும் பேசாவிட்டாலும் எங்கள் விழிகள், உதடுகள் ஒவ்வொன்றும் என்னென்னவோ பேசிக்களிக்கும். ஆனால், இந்த நிலை நீடிக்கவில்லை. பார்வதி என்ற பொறாமைப் பிண்டம் பற்றவைத்துவிட்ட தீ பரவி விட்டது, கல்லூரி முழுவதும். என்னிதயந் துடிதுடித் தது. அவரை நினைக்க நினைக்க உயிரைப் பிரிவது போலவிருந்தது. அதிபர், அவரையும் என்னையுந் தனித்தனி அழைத்துப் புத்திமதி கூறி அனுப்பினார். எப்படி நாங்கள் பேசாமலிருக்கமுடியும்? மல ரிடம் வண்டை யழையாதே என்றால் வண்டே மலரை அண்டாதே என்றால்-நிலவே ஒளியைப் பொழி யாதே என்றால் – நீரே தண்மை தாராதே என்றால் நிகழுமா இந்த நினைப்பு? 

கரும்பாக இனித்த கல்லூரி கசக்கத் தொடங்கி யது. அந்தப் போதையூட்டும் விழிகள், காவியச் சுவை யைப் பிழிந்து தரும் வார்த்தைகள், வெள்ளையுள்ளத் தின் பளிங்குத் தன்மையைப் பிரதிபலிக்கும் அகன்ற முகம், பிரேமையில் வீழ்த்தும் அந்த மெல்லிய உருவம்! ஐயோ, ஐயா, எப்படி மறப்பேன் உங்களை? பேசாதீர்கள் என்றல்லவா பேசவைத்துப் பிரலாபிக்கச் செய்கிறார்கள்! 

”ஈஸ்வரி, நீ ஏன், எனக்குக் கடிதம் எழுதுவதைத் திடீரென்று துண்டித்துக் கொண்டாய் ?” ஆசிரியர் கேட்டார். என்ன……? ஆசிரியரும் என்னைப் போலத் தான் கடந்தகாலச் ‘சொர்க்க பூமியில்’ சுற்றுப்பிரயாணஞ் செய்கிறாரா? 

நெஞ்சம் நைந்திடும் அந்த வேதனைக் கும்பலை எப்படி வெளியிடுவேன், என் ஆசிரியருக்கு! 

ஐயா…, அது பெரிய கதை…! 

‘சொல்ல விருப்பமில்லையா உனக்கு ……?’ 

“சொல்லாமல்…” 

கல்லூரிக்குச் செல்லாமல் விட்டபின்னர், என் வாழ்வே முற்றிலும் தாறுமாறாகி விட்டது. என் தமை யன்மார்கள் இருவரில் ஒருவர் ‘ஈஸ்வரி நீ படிக்க வேண்டும்’ என்றார். மற்றவர் ‘படித்தது போதும், இனி இல்லறத்தில் ஈடுபடுக’ என்றார். வெள்ளையுள்ளம் படைத்த என் பெற்றார் எனது இல்லறவாழ்வையே விரும்பினர், வஞ்சக நெஞ்சுகொண்ட அண்ணனின் அந்தரங்கத்தை அறியாது! ‘படிக்க வேண்டும்’ என்ற வர் மௌனியானார். இளைய சகோதரனின், நெருங்கிய நண்பன்’ என்ற தொடர்புடன் அறிமுகப் படுத்தப் பட்ட ஒருவருக்கு நான் மனைவியானேன். அல்ல மனைவியாக்கப்பட்டேன். அன்றிலிருந்தே என் வாழ்வு நரகமாகிவிட்டது. மூன்று வருடங்கள் அணு, அணு வாக அரிக்கப்பட்ட என் வாழ்வு முடியமுன்னமே, தாலியைக் கட்டிய ஒரு பெருங்கைங்கரியத்தினால் கணவனான அந்த மனிதர் மண்டையைப் போட்டுவிட் டார்! ஆசிரியரே, நான் மணமுடித்த அன்றிலிருந்து இன்றுவரை உங்களுக்குக் கடிதமெழுதவேயில்லை. எப் படி எழுத முடியும் ஐயா…? 

வாழ்வே நரகமாகிய பின்னர், குடிகாரக் கணவன் நோயாளி, வாழ்வு அவனுக்கு ஒரு எச்சில் இலை! சொறி நாய்க்கும், எச்சில் இலைக்கும் உள்ள பொருத் தம், எனக்கும், என் கணவருக்குமிடையே எப்படி ஏற்படும் ஐயா? ‘இல்லறம்’ நடத்திய மூன்று வருட மும் நான் மௌனியானேன். அதன் கருத்து உங்களை மறந்ததன்று ஐயா! 

அவர் என்னை விழித்துப் பார்த்தார்! நான் உள்ளம் திறந்து உணர்ச்சியோடு பேசுகிறேனாக்கும். 

இப்பொழுது நான் விதவை. இதயத்தின் ஓர் மூலையில் கல்லூரி வாழ்வும், நீங்களும் மறையாத ஒளியாக உங்களை என்றும் என்னால் மறக்க முடியா தென்பது உண்மைதான். ஆனால், பயனற்ற உண்மை! வெறும் ஆசைமயக்கம். நினைவில் இனிக்கும் ஒரு உணர்ச்சி! அவ்வளவுதான் ஐயா….! 

“ஈஸ்வரி, நீ சொல்வதென்னவோ உண்மைதான். நான்கூட ‘முன்னையை’ப் போலில்லை. மணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனாகி விட்டேன். ஆனால், வாழ்வு சுவைக்கவில்லை. காரணம்……? மனம், பொருள், இலட்சியம் எல்லாம் ஒன்றக் கிடைக்கும் இல்லறம் என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் கிடைக்கிறது. நீயும் நானும் அதிலே ‘கோட்டை’ விட்டவர்கள்!”

ஆசிரியரின் பேச்சு எனக்கு வியப்பளிக்கவில்லை. அவரும் உண்மையைத்தானே பேசுகிறார்! 

வசு நிலையம் வந்துவிட்டது. ஆசிரியரும் நானும் பிரியப்போகிறோம். எப்படியோ பிரியத்தானே வேண்டும்! 

“ஈஸ்வரி, நான் வரட்டுமா..?” 

அதே குரல், ஐந்து ஆண்டுகளாகியும், என்னுள்ளத்துள் ஒலித்துக் கொண்டிருக்கும் அதே குரல், அதே முகம், அதே பார்வை, அழியாத நினைவுச் சுவடுகளை ஆழப்பதித்த மெல்லிய அந்த உருவம்…. “வாருங்கள் ஐயா!” 

என்விழிகளின் விளிம்பில் நீர் கட்டி மெல்லப் பனித்தது. அவர் அதோ போய்க்கொண்டிருக்கிறார். 

ஐந்து ஆண்டுகளுக்குப்பின் அரிதாக – ஒரே ஒரு தடவை சந்தித்துவிட்ட அந்த ஆசை முகம் மறைந்து கொண்டிருக்கிறது. கடைசியாக ஆசிரியர் வேறு பாதையிலும் நான் வேறு பாதையிலும் கால் வைத்து விட்டோம். வெவ்வேறு வசுவண்டிகளில் போய்க்கொண் டிருக்கிறோம். கல்லூரி வாழ்க்கையில் துளிர்த்த எங் கள் ஆசை, அதே ஆசை இன்னும் அப்படியே கன்னி கழியாத இளமையைப் போல, எண்ணுந்தோறும் இன்பமளித்துக்கொண்டிருக்கிறது. இன்றுள்ள நிலையில் அதுவே எனக்கும், ஆசிரியருக்கும் போதுமானது போலும். வாழ்க அந்த “ஆசை மயக்கம்!”

– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழா

நாவேந்தன் நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *