அவள் அப்படித்தான்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 4,398 
 
 

உனக்கு ரோஷமில்லே….! – எடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் கடித்தார் விநாயகம். அதற்கென்றே விடிகாலையில் பேச ஆரம்பித்தது போல் இருந்தது. அவளை அப்படிச்சொல்வதில் உள்ளூர ஒரு இன்பம் இருப்பதாய் உணர்ந்தார் அவர். எங்கிட்டே எவ்வளவு ரோஷமா, கெத்தா இருந்தா…..இப்போ…? என்பதுதான் அவர் மானசீகக் கேள்வி. ஆனால் அவர் உணர்வது போலவே அவளும் உணர வேண்டும் என்பது என்ன கட்டாயம்? இந்த வயசுலயும் உணர மாட்டாங்கிற வயித்தெறிச்சல்லதான பேசறதே…! அவ வாயைப் பிடுங்குறது எதுக்காக? சரசமாடவா…!

உங்களமாதிரி என்னால இருக்க முடியாது….இருக்கவும் விரும்பலே…. –ராஜம் இப்படிச் சொன்னாள். தான் தனியே கிளம்பி வந்த பின்பும் அவளின் உறுதி குலையவில்லை. ரெண்டு பேரும் இங்கு இருக்கும்போதே கௌரவத்தை இம்மியும் விட்டுக் கொடுக்காதவள், இப்போதா இறங்கி வரப் போகிறாள்?

இருக்கவும் விரும்பலே… – என்றாளே. அப்படியானால் எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும் தயாராகிவிட்டாள் என்றுதானே பொருள். மருமகள் வாயால் வார்த்தைகள் கேட்கக் கூடத் தயார். பையனுக்காக….அப்படி மழுங்கிப் போவது கூடப் பரவாயில்லை…ஆனால் தன்னோடு வந்து இருக்க முடியாது…அதுதானே…!

அப்போ நீ எதையும் பொருட்படுத்தாம, துடைச்சிவிட்டுட்டு அங்கயே இருந்து கழிக்க வேண்டிதான்…வௌக்கெண்ணை வியாபாரம்தான் இனி…..வழ வழா கொழ கொழான்னு…

பரவாயில்லே…அப்டியே இருந்துக்கிறேன்…. நீங்க நெய்யா அங்க தனிய்ய்ய்யா மணத்துண்டு இருங்கோ…. – இப்படிப் பதில் சொல்வதில் அவளுக்கு வெட்கம் இல்லை…கூச்சம் இல்லை…அவரிடம் போய் இப்படிச் சொல்கிறோமே என்கிற எண்ணமும் இல்லை. இந்த மனநிலையை என்னவென்று சொல்வது?

தன்னோடு அவள் இருந்த பொழுதுகளில் ஒரு வார்த்தையை விட்டுக் கொடுத்ததில்லை. விநாயகம் நினைத்துப் பார்த்துக் கொண்டார். பதிலுக்கு பதில், வார்த்தைக்கு வார்த்தை சொல்லாமல் அடங்காது அவளுக்கு. சுள்ளுச் சுள்ளென்று வந்து விழும். எதிர்த்துப் பேசுவதில் அத்தனை திருப்தி. தன்னிடம் மட்டும்தான் இப்படியா அல்லது பிறந்த இடத்திலேயே இப்படித்தான் இருந்தாளா, வளர்ந்தாளா? இதெல்லாம் யோசித்து யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

ஆனாலும் உங்க பொண்ணுக்கு வாய் ஜாஸ்தி….!

நீங்கதான் அரவணைச்சுக் கொண்டு போகணும்…

யாராச்சும் ஒருத்தர் விட்டுக் கொடுத்தா எல்லாம் சரியாப் போயிடும்…அது நீயா இருந்துட்டுப் போயேன்…இதிலென்ன நஷ்டம்…? – புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன ஏத்த இறக்கம்? இது அம்மா.

இந்த ரேஞ்சுல பேசினாத்தான் உனக்கு மனசு ஆறுமா…? பதிலுக்கு பதில் சொல்லலைன்னா நெஞ்சு வெடிச்சிடுமா…? இப்டிப் பட்டுத் தெறிக்கிறியே….? – எத்தனையோ முறை….எத்தனையோ முறையென்ன, வார்த்தை வெடிக்கும்போதெல்லாம்என்றே சொல்லி விடலாம். ஒரு முறை கூட அவள் அவரை எதிர்த்துப் பேசாமல் இருந்ததில்லை. அவர் எது சொன்னாலும் ஒத்துக் கொள்ளமாட்டாள். மறுத்துப் பேசுவாள். அவர் எது சொன்னாலும் உடனே செய்ய மாட்டாள். பார்க்கலாம் என்பாள். வெறுத்தே போனார் விநாயகம்.

அவர் காரியங்கள் அனைத்தையும் அவரேதான் செய்து கொள்வார். யார் உதவியையும் அவர் எதிர்பார்த்ததில்லை. அப்படித் தன்னை மாற்றிக் கொண்டார். இவகிட்ட என்ன போய் நிக்குறது? சொல்லணும்…கேட்கணும்…காதுல விழுந்தும் விழாத மாதிரி இருப்பா…இப்பச் செய்றேன்…அப்புறமாச் செய்றேன்ம்ப்பா….அதுக்கு நானே செய்துட்டுப் போகலாம்…நாளைக்கு உன் காரியத்துக்கு என்கிட்டே வந்து நிப்பேல்ல…அப்டி ஒரு சந்தர்ப்பம் வராமலா போகும்? அப்பப் பார்த்துக்கிறேன்… – மனசுக்குள் கறுவிக் கொள்வார்.

இப்போது பையன் எது சொன்னாலும் உரைப்பதில்லை அவளுக்கு. போதாக்குறைக்கு மருமகள் மறைபொருளாய்ச் சொல்வதைக் கூடப் பொருட்படுத்துவதில்லை. பென்ஷன் வாங்கும் இவளுக்கு அவசியமேயில்லைதான். ஆனாலும் பிள்ளைப் பாசம் யாரை விட்டது? பையனோடயே கடைசி மூச்சுவரை இருந்தாகணும்…அது ஒண்ணுதான் அவ குறிக்கோள். இவளைப் போய் அங்கேயிருந்து அடியோடு பெயர்த்து எடுக்க முடியுமா?

அவளின் இன்றைய இருப்பு…பழசையெல்லாம் கிளறிவிடுகிறது இவருக்கு. என்ன ஆட்டம் போட்டா என்கிட்டே? அடங்கமாட்டாளே….! மிகவும் வேதனைப் பட்டிருக்கிறார். கல்யாணமே பண்ணியிருக்க வேண்டாமோ என்று கூட நினைத்திருக்கிறார். பெண்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்களோ என்றும் நினைத்து பயந்திருக்கிறார். அவ கண்ணுக்கு முன்னாடி இன்னொருத்தியச் சேர்த்துக்கிட்டாக்கூடப் பரவாயில்லை என்கிற அளவுக்குப் போயிருக்கிறார். அவளப் பழிவாங்க அது ஒண்ணுதான் சரியான வழி என்கிற அளவுக்கு நினைத்திருக்கிறார்.

ச்ச்சே….! இவள்ட்டப் பேசவே கூடாதுன்னு நினைக்கிறது….எப்டியோ பேச்சு வந்திடுது…எதாச்சும் ஒரு விஷயத்துக்குப் பேசியே ஆக வேண்டியிருக்கு….அது சண்டைல முடிஞ்சு போகுது…எந்த ஒரு வாட்டியாவது இவளோட பேசி ஜெயிச்சோம்னு இருக்கா…? அட…ஜெயிக்கக் கூட வேண்டாம்….நாம சொன்னத சரின்னு என்னிக்காவது இவ கேட்டிருக்காளா? …ஓ.கே…ன்னு ஒரு நாளாவது சொல்லியிருக்காளா…? அப்டியே ஒப்புதல் இருந்தாலும் கம்முன்னுதான போவா…காட்டிக்கவே மாட்டா…! அவ்வளவு திமிரா இவளுக்கு? என்னத்தையோ கட்டி எடுத்திட்டு வந்த மாதிரி….பெரிய்ய்ய்ய்ய மகாராணி….! சுமக்க முடியாத ஐவேஜோட.வந்து சேர்ந்தா பாரு…! நாமளும்தான சம்பாதிக்கிறோம்ங்கிற திமிரு இவளுக்கு. இருக்கிற நாள்ல சந்தோஷா இருந்திட்டுப் போவோம்ங்கிற புத்தி இல்ல….இவளெல்லாம் என்னைக்குப் பக்குவப் படுறது?

அவளை, தான் நினைத்தபடி அடக்க முடியாமல் அல்லது மாற்ற முடியாமல் போய், மனதுக்குள் புழுங்கியிருக்கிறார் விநாயகம். அலுவலக வேலை, ஆபீஸ் இன்ஸ்பெக் ஷன், சங்கக் கூட்டம் அது இது என்று ஏதேனும் ஒன்றைச் சொல்லிக்கொண்டு கிளம்பிப் போய் விடுவார். அவைதான் அவரின் இனிமையான நாட்கள். நண்பர்களோடு இருப்பது…சுற்றுவது….சினிமாப் பார்ப்பது…தண்ணி அடிப்பது (அதுவும் ஓரிரு முறை நடந்தேறியிருக்கிறதுதான்-நல்லவேளை ஒட்டிக் கொள்ளவில்லை) ….என்று. பலவும்.

வீட்டுல தனியா இருப்பாளே…பயந்துக்குவாளோ….எவனாச்சும் திருடன் வந்திடுவானோ…? என்றெல்லாம் நினைத்திருக்கிறார். அந்த மாதிரி எண்ணம் அவளுக்குக் கிஞ்சித்தும் இல்லை. எவனாவது வந்தால், ராட்சசியாய் மாறி, தலையில் அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டாலும் போச்சு….செய்தாலும் செய்வாள்.

ஜாலிதான் உனக்கு….நாலு நாளைக்கு நான் இல்லேல்ல….சமைக்காம ஆபீஸ் கேன்டீன்ல கூடச் சாப்பிட்டுக்கலாம். ஏன்…சாப்பிடாமக் கூட இருந்துக்கலாம்…வேலை செய்ய வேண்டாம்….! பாத்திரம் தேய்க்க வேண்டாம்…! – என்பார்.

ஆமா…அப்படித்தான்….நீங்களோ போறீங்க…நான் எப்படி இருந்தா உங்களுக்கென்ன? எப்டியோ இருந்திட்டுப் போறேன்…திங்கறேன்…இல்ல பட்டினி கிடக்கிறேன்…. அது என் இஷ்டம்… – இதுதான் அவள் பதில்.

கொஞ்சங்கூட வளைஞ்சு கொடுத்துப் பேசத் தெரியாத நீயெல்லாம் ஒரு மனுஷியா? பொம்பளதானா நீ…? அப்டியென்ன பெரிய்ய்ய்ய கௌரவம் உனக்கு? என்கிட்டயே உனக்கு அப்டி இருக்கத் தெரிலன்னா, வேறே யார்ட்ட இருக்கப் போறே…? என்ன வளர்ப்பு இது? ஆபீஸ்ல நீயெல்லாம் நாலு பேரோட எப்டி கலந்து வேலை பார்க்கிறே…? வயசுதான் ஆகியிருக்கு….வயசு மட்டும்தான் ஆகியிருக்கு…

அதை நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்…நான் எப்டின்னு எனக்குத் தெரியும்….நீங்க உங்க ஜோலியப் பார்த்திட்டுப் போங்க….வந்து பாருங்க…என் கூட எல்லாரும் எப்டி ஒட்டிண்டு இருக்காங்கன்னு….எங்க எப்டியிருக்கணும்னு எனக்குத் தெரியும்….

அப்போ ஆபீஸ்ல வேறே மாதிரி இருக்கேன்னு அர்த்தம். அங்க உன்னை மாத்திக்கிற நீ…என்கிட்டே மட்டும் என்ன எப்பவும் விரைப்பா? தலைல கிரீடம் ஏதும் வச்சிருக்கியா…? இல்ல கொம்பு கிம்பு முளைச்சிருக்கா….?

ஆம்மா…கொம்புதான் முளைச்சிருக்கு…வச்சிக்குங்களேன்…..நான் இருக்கிறபடிதான் இருப்பேன்….யாருக்காகவும் என்னை மாத்திக்க முடியாது….! மாத்திக்கணும்ங்கிற அவசியமுமில்லே….

நல்ல மெச்சூரிட்டி….இப்டியே மெய்ன்டெய்ன் பண்ணு… விளங்கிடலாம்…

ஓங்கி ஒரு அறை விடலாம் போலிருக்கும் இவருக்கு. அடக்கிக் கொள்வார். அந்த அளவுக்கு அநாகரீகமாய் என்றும் சென்றதில்லை. ரொம்பவும் மனசு நோகும் சமயங்களில் விருட்டென்று இடத்தைக் காலி செய்து விடுவார். அதாவது வீட்டை விட்டு வெளியேறி விடுவார். இன்றுவரை அவர் தன்னைத்தான் அடக்கிக் கொண்டிருக்கிறார். தன் சுபாவம் அது என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார். நாய் நம்மளக் கடிக்குதேன்னு நாம திரும்பக் கடிக்க முடியுமா? இப்படிச் சங்கடமாயும் உணர்ந்திருக்கிறார்.

சாப்பிட்டுப் போங்க…. – என்றுமே அவள் சொன்னதில்லை. போனால் போகட்டும் என்றுதான் இருந்திருக்கிறாள். திரும்பி வந்த சமயங்களில் சாப்பிட்டீங்களா…? என்றும் கேட்டதில்லை. சமைத்து வைத்தவை தீர்ந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு, கொஞ்சமும் தயங்காமல் எடுத்து வெளியே கொட்டி விடுவாள். பொருட்களை வீணாக்குவது அறவே பிடிக்காது இவருக்கு.

ஏன்…அந்தச் சாதத்தை தண்ணி ஊத்தி வச்சா காலைல ஆகாதா? பழைய சோறு ஒரு நாளைக்கு சாப்பிட்டா குறைஞ்சா போயிடுவ….உடம்புக்கு நல்லதுதானே…! எனக்கு வை…நா சாப்பிடுறேன்…அறுபது ரூபா கொடுத்து அரிசி வாங்கிட்டு இப்படித் தூர எறிய முடியாது…..

அசால்ட்டா இப்படிக் குப்பைல போடுறியே….எப்படி மனசாகுது உனக்கு? அந்தக் காம்பவுன்ட் சுவர்ல வைக்கலாமில்ல…பறவைகளாவது சாப்பிடும்….

அதுகளுக்கு புதுசு எது, பழசு எதுன்னு தெரிஞ்சிருக்கு…உங்களுக்குத்தான் தெரியல….வச்சா இடம்தான் அசிங்கமாகும்…நீங்க கொட்டிக்க வேண்டிதானே…! இனிமே தண்ணிய ஊத்தி வைக்கிறேன்…– இன்ன வார்த்தை என்றில்லை. மரியாதைக் குறைவாச்சே என்ற எண்ணமில்லை. எல்லாம் சர்வ சாதாரணம்.

நீ என்ன ரௌடிப் பொம்பளையா…இப்டிப் பேசறே…? ஒரு ஆபீஸ்ல வேலை பார்க்கிறவ பேசுற பேச்சா இது? கேட்டே விட்டார் ஒரு நாள்.

எனக்கு உங்களைப் பார்த்தா அப்டியெல்லாம்தான் வார்த்தை வருது. எரிச்சலா இருக்கு…..எங்கிட்டே பேச்சுக் கொடுக்காதீங்க…குறைச்சுக்குங்க…ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கலாம்….

அவளுக்கு நிம்மதி…..எனக்கு? பதமாய்ச் சொன்னாலும் பலனில்லை. கோபமாய்ச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. அவளிஷ்டம் எதுவோ அதுதான். எதைச் சொல்வது…எதை விடுவது? ஒரு கோடி விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன அவர்கள் முன்னே…!

கையில் ஃபோனோடு கொல்லைப்புறம் வந்திருந்தார். பின்புறம் வீடு. தான் பேசுவது அவர்களுக்கு நிச்சயம் கேட்கும். எதற்காக அவர்களுக்குத் தெரிய வேண்டும்? காலத்துக்கும் ஓயாத இந்த வாய்ச் சண்டை, இன்னும் அவர்களுக்கும் தெரிந்து நாற வேண்டுமா? என்ன…அந்த வீட்ல…எப்பப் பார்த்தாலும் சலுப்பக் குடி மாதிரி….! இது தேவையா?

மாமி நல்லாயிருக்காகளா…? பேரன் நல்லா விளையாடுறானா…? மருமக வேலைக்குப் போகுதா…? – கேட்கத்தான் செய்தார்கள். இவரும் சந்தோஷமாய்ப் பதிலிறுத்தார். இது போதுமே….! உள்ளே நாறிக் கொண்டிருக்கும் பிரச்னைகள் அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்? தலையை சிலுப்பி விட்டுக் கொண்டார் விநாயகம். சூடேறிப் போனது போல் ஒரு உணர்வு.

பக்கத்துக் காலி ப்ளாட்டில் இருந்த தென்னை மரத்திலிருந்து மளுக்கென்று காம்பவுன்ட் சுவரில் பாய்ந்த அணில் ஒன்று இவர் வைத்திருந்த சாதப் பருக்கைகளை ஒவ்வொன்றாய் எடுத்து அவசரம் அவசரமாய்த் தின்னும் அழகை ரசித்தார். எதற்காக இப்படிப் பயந்து பயந்து சாப்பிட வேண்டும்? யார் வரப் போகிறார்கள்? யார் விரட்டப் போகிறார்கள்? அது, அதற்கென்று வைத்த சாதம்தான் என்று யார் சொல்வது? வைத்தவுடன் எங்கிருந்தோ பார்த்து, ஓடி வர மட்டும் தெரிகிறது. …..பயமின்றி, பதவாகமாய், ஆற, அமர உண்ண மட்டும் ஏன் தெரியமாட்டேனென்கிறது? அது எடுத்துக் கொண்டது போகத்தான் மீதியைப் பறவைகள் ருசிக்கின்றன….இது சாப்பிடுகையில் வேறு எதுவும் அங்கு வருவதில்லை. விரட்டுவதில்லை. போட்டி என்பதே கிடையாது.. பிறகு என்ன பயம்? விநாயகம் தன்னை, அதனிடத்தில் பொருத்திப் பார்த்துக் கொண்டார்.

தானும் பயப்படுகிறோமோ? பையனிடம் நிமிர்ந்து சொல்லத் தைரியமில்லையோ? ஒரு வேளை நாளை படுக்கையில் விழுந்தால் பார்க்க ஆள் வேண்டுமே…என்கிற பயம் தன்னிடமும் வந்து விட்டதோ? இல்லையென்றால் நேரடியாய்ச் சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே…! அப்படிச் சொன்னால் நிச்சயம் விடமாட்டான் என்பது தெரிந்துதானே வேறு மாதிரிச் சொன்னோம்? அது அவனை ஏமாற்றுவதாகாதா? அவனையென்ன…அவளையும் ஏமாற்றும் வேலைதானே அது? அவளாவது தான் இல்லாததைப் பொருட்படுத்தப் போவதில்லை. அந்த நல்ல புத்தி சாகும்வரை அவளிடம் வரப்போவதில்லை. அதற்கு, தான் கொடுத்து வைக்கவில்லை. ஆனால் பையன்? வருத்தப்படுவானே….!

இங்க உனக்கு என்னப்பா குறைச்சல்? யாரு…உன்னை என்ன சொல்றாங்க…? நீபாட்டுக்கு சாப்பிட, பேப்பர் படிக்க, டி.வி. பார்க்கன்னு இருந்திட வேண்டிதானே…! – இன்றுவரை அவன் அப்படித்தான் சொல்லியிருக்கிறான். அது ஒன்றுதான் அவருக்கு நிறைவு. ஆனால் இவள்? போனால் போகட்டும் என்று நினைக்கிறாளோ? நல்ல காலத்திலேயே தில்லைநாயகம் அவள்…இப்போதா வருந்தப் போகிறாள்?

என்னதான் பையன் சொன்னாலும் அசௌகரியங்கள் அவருக்கு இல்லாமலா இருக்கிறது? அவன் சொல்லுவதுபோல், நினைத்த நேரத்தில் டி.வி.போட முடிகிறதா? நினைத்த சேனலைத் திருப்பிப் பார்க்க முடிகிறதா? சத்தம் குறைவாக வைத்துக் கொள்ள முடிகிறதா? மருமகள் அலறவிடுவது எட்டு ஊருக்குக் கேட்கிறது. அறையில் அமர்ந்து கதவைச் சாத்திக் கொண்டாலும் கிழித்துக் கொண்டு கேட்கிறது. எப்பப் பார்த்தாலும் அதென்ன பாட்டும் கூத்தும்? இந்த வாழ்க்கை என்ன அப்படி மகிழ்ச்சியானதா? வெறுமே பாடிண்டும் ஆடிண்டும் இருந்தாப் போதுமா? மத்த வேலையெல்லாம் எவன் பார்க்கிறது? அதுக்குத்தான் இவ இருக்காளே…அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்திட்டு…!

யப்பப்பா…போதுண்டா சாமி….எட்டடிக் குச்சுக்குள்ளே முருகா…எத்தனை நாளிருப்பேன்….

சரி….பிறகு உன் இஷ்டம்….நான் சொன்னா நீ கேட்கவா போறே…! ஆனா என்னோட முடிவுல எந்த மாறுதலும் இல்லே….நான் என்னைக்குமே தனிக்காட்டு ராஜாதான் ….. –ஃபோனை ஆஃப் செய்தார் விநாயகம்.

புதிதாய் ஒன்றும் இப்போது பேசி விடவில்லை. எல்லாம் அங்கே இருக்கும்போதே பேசியதுதான். விவாதித்ததுதான். அவளைக் கிளப்ப முடியாது. இவர் கிளம்பி விட்டார். அவ்வளவுதான். அதுவும் நான் அங்கயே போறேன் என்று ஒரேயடியாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பவில்லை. ஒரு மாசம்போல இருந்திட்டு வர்றேன்….என்றுதான் கிளம்பி வந்திருந்தார். பையன் விடுவதாய் இல்லை. தெரிந்தால் மிகவும் வருந்துவான். ஆனாலும் அவருக்கு தன் ஊரில், தன் வீட்டில் இருப்பதில் ஒரு ஆத்மார்த்தமான நிறைவு, திருப்தி. அந்த வீட்டை ஒரு உயிர்ப்பொருளாய்க் கருதி அதனோடு பேசுவார். அம்மா, அப்பா காலடி பட்ட வீடு. கோயில் மாதிரி. லேசில் விட்டுவிட முடியுமா?

அது ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? ஒரு மாசம் போல என்று….! அவருக்கே அவர் மீது நம்பிக்கை இல்லையோ? தனித்து, தன்னாலேயே இருக்க முடியுமோ, முடியாதோ என்கிற சந்தேகம் வந்து விட்டதோ? உடம்பு முன்புபோல் ஒத்துழைக்குமோ இல்லையோ என்கிற பயம் வந்துவிட்டதோ?

தனிமை எனக்குப் பிடிக்கும்…. தனிமைலதான் இனிமை காண முடியும்ங்கிறது என்னோட பலமான அபிப்பிராயம்.

எப்டி சார்…ஒத்த ஆளா தனியா இருக்கீங்க…? தாத்திரி பயமா இல்லியா? உள்ளே தாழ்ப்பாள் போட்டுட்டுப் படுக்கிறீங்க…திடீர்னு உடம்புக்கு ஏதாச்சும் செய்திச்சுன்னா…(அப்டி எதுவும் வராது…வர வேண்டாம்….) என்ன பண்ணுவீங்க…?– எதிர்வீட்டு நண்பர் பாஸ்கரன் ஒவ்வொரு முறையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

அவருக்கும் தன் வயதுதான். அறுபதைத் தாண்டிய போராளி. ஆம்… போராளிதான். ஷூகர், ரத்த அழுத்தம் என்று எதுவும் வந்துவிடக் கூடாது என்று அனுதினமும் தன்னை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டு இந்த வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்தான். எப்பொழுது பார்த்தாலும், ஏதாவது வேலை செய்துகொண்டேதான் இருப்பார். வீடு துடைப்பார், கழுவி விடுவார், தூசி எடுப்பார், செடி கொடிகளுக்கு மண் அணைத்துக் கொடுப்பார்…சைக்கிளில் குடத்தை மாட்டிக் கொண்டு நல்ல தண்ணீர் எடுக்கப் போவார்….கடைக்குப் போய்ச் சாமான்கள் வாங்கி

வருவார்….துணி மணிகளைத் தோய்ப்பார்…உலர்ந்த துணிகளை மடித்து வைப்பார்….அயர்ன் பண்ணுவார்….அவர் செய்யாத காரியமில்லை. காலையில் எழுந்தது முதல் ராத்திரிப் படுக்கைக்குச் செல்லும்வரை ஏதாவது வேலை செய்துகொண்டேதான் இருக்கிறார். போதாக்குறைக்கு அருகிலுள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து விடாமல் படித்துக்கொண்டுமிருக்கிறார். பெரும்பாலும் இரவு ஒண்ணு, ஒன்றரைக்குத்தான் லைட்டை அணைத்து விட்டு உறங்கச் செல்கிறார்….

அதனாலென்ன பாஸ்…..நீங்கள்லாம் இருக்கீங்கள்ல…காலைல கவனிக்கலேன்னாலும், கொஞ்சம் பொறுத்தாவது என்னாச்சு…சாரு…இன்னும் கதவைத் திறக்கக் காணோம்…னு தேடுவீங்கதானே….அப்டி தூக்கத்துலயே போயிருந்தேன்னா…கதவை உடைச்சிற வேண்டிதான்….பிறகு தெரிஞ்சிட்டுப் போகுது….இதுக்கெல்லாம் பயந்தா ஆகாதுங்க…அப்டியொரு சுகமான முடிவா கிடைக்கப்போகுது…? எனக்கு நம்பிக்கையில்ல….! எனக்கு இந்த வீட்ல உறால்ல அக்கடான்னு படுத்தாத்தான் நிம்மதியான தூக்கம் வருது…..இது அங்க இல்ல…சொன்னா அவங்களுக்குப் புரிய மாட்டேங்குது…என் பெண்டாட்டிக்கே புரியலையே…பிறகு யாரைச் சொல்ல…? அவ உலகம் தனி….என் உலகம் தனி…ஆனா இத்தனை காலம் குடும்பம் நடத்தியிருக்கோம்…அதான் அதிசயம்….ஆயிரம் சண்டை போட்டிருப்போம்…பேசாம இருந்திருப்போம்…டைவர்ஸ் அது இதுன்னு அநாவசியமா ஒரு வார்த்தை எங்களுக்குள்ள வந்ததில்லே…அவளும் எவ்வளவோ பேசுறவதான்…ஆனாலும் அந்த வார்த்தை சொன்னதில்லை…பொருத்தமில்லாத நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து குப்பை கொட்டணும்னு விதிச்சிருக்கு…அது நடந்திருக்கு…அவ்வளவுதான்…சண்டை போட்டுட்டே வாழ்ந்து முடிச்ச தம்பதிகள்னா அது நாங்கதான்…அதையெல்லாம் நினைச்சுப் பார்க்க ஒரு இடம் வேண்டாமா? அதனால இந்தத் தனிமை எனக்கு இனிமை….

ஊர்ல போய் அவங்களோட இருந்தீங்கன்னா இந்தப் பொலப்பம்லாம் இருக்காதில்ல….ஓடி ஓடி வந்திர்றீங்க…அப்டியெல்லாம் இந்த வயசுல தனியா இருக்கக் கூடாது சார்….அது ரெண்டுபேத்துக்குமே நல்லதில்லே….

ஒண்ணும் ஆகாது…நீங்க ஏன் பயப்படுறீங்க….? நானே தைரியமா இருக்கேன்….

சும்மாச் சொல்லிக்கிறலாம் சார்….ஒரு சமாதானத்துக்கு….ஆனா நீங்க அங்க இருக்கிறதுதான் சரிம்பேன்…இல்லயா…அவங்கள இங்க வரவழைச்சிக்குங்க…உங்க பையனும் மருமகளும் பிள்ளையோட அங்க இருந்திட்டுப் போறாங்க…வாழ வேண்டியவங்க…அவங்க….வாழ்க்கையை வாழ அவங்களுக்குத் தெரியாதா? அதான் கடமையப் பூராவும் முடிச்சாச்சில்ல….இன்னும் என்ன…?

நானா மாட்டேங்கிறேன்…அவதான் பசை போட்ட மாதிரி ஒட்டிட்டிருக்கா….பையன விட்டு வர மனசில்லாம….அவனுக்கும் அம்மாவ விட மனசு வரமாட்டேங்குது….அதுல ஒண்ணு கவனிக்கணும்….அவ இருக்கிறதுனால நானு…இருந்திட்டுப் போகட்டும்னு…அவ இல்லாட்டி…..? எம்பாடு தாளம்தான்…..அதான் என்னை இப்டிப் பழக்கப்படுத்திக்கிறேன்….எதையும், யாரையும் சார்ந்து இல்லாம கழிச்சிட்டுப் போயிடணும்ங்கிறது என் பாலிஸி……

பாலிஸியெல்லாம் ஒரு வயசு வரைக்கும்தான் சார்….. கடைசிவரைக்கும் செல்லாது….. – பாஸ்கரனின் பதில் ஆணித்தரமாய்த்தான் வரும். மறுக்க முடியாததாய் இருக்கும்.

இருந்தாலும் அவனைச் சார்ந்திருப்பதுதான் தன் கௌரவம் என்று அவள் எப்படி நினைக்கிறாளோ அதுபோல் யாரையும் சாராமல் இருப்பதே தன் கௌரவம் என்று, தான் ஏன் நினைக்கக் கூடாது? கடவுள் அந்த அதிர்ஷ்டத்தைத் தனக்கு வழங்க மாட்டானா என்ன? –

சட்டென்று பேச்சை மாற்றினார் விநாயகம். ஆளாளுக்குத் தன்னை விமர்சிப்பதை அவர் மனது ஏற்கவில்லை.

பின்னாடி இருக்கிற தென்னை மரத்துல தேங்காய் பறிச்சிக் கொடுத்திட்டுப் போனானே…அவன் ஒரு நாள் ராத்திரி திருட வந்த கதை சொன்னேனா… உங்ககிட்டே? ஜன்னல் வழியா நான் படுத்திருக்கிறதைப் பார்த்திட்டிருக்கான்…சட்டுன்னு முழிச்சிட்டேன்…எந்தச் சத்தம் கேட்டுன்னு தெரில…உடனே விறு விறுன்னு வாசலுக்கு வந்து காம்பவுன்ட் சுவர் ஏறி ரோட்டுல குதிக்கிறான்…உள்ளேயிருந்தமேனிக்கே லைட்டைப் போட்டு ஜன்னல் வழி அவன் முகத்தைப் பார்த்தி்ட்டேன்….அடப்பாவி….நீயா….? நீயேன்யா இப்டி வர்றே…? ஏதாச்சும் வேணும்னா கேட்டிருக்கக் கூடாது? முடிஞ்சதைக் கொடுத்திருப்பனே….என்னா ஆளுய்யா நீ….ன்னு கத்தினேன்….திரும்பிப் பார்த்தமேனிக்கே நடையைக் கட்டிட்டான்….ஆனா ஒண்ணு….கொல்லைப் புறத்துல பறிச்ச காய்களை உறிச்சுப் போட்டப்ப…அவன் பார்வை உள்ளயே பதிஞ்சிருந்ததை இப்ப நினைக்க வேண்டிர்க்கு… …..ஆவன் மீசையும் ஆளும்….அச்சு அசல் …சினிமாத் திருடன் மாதிரியே இருந்தான்யா…..ஆனா ஒண்ணு அதுக்கப்புறம் எத்தனையோ வாட்டி வர்றேன்…போறேன்…..அவன இந்த ஏரியாவுலயே எங்கயும் காணலை…எங்கயாச்சும் திருடிட்டு ஜெயிலுக்குப் போயிட்டானோ என்னவோ….ஏன்…நான் பார்த்திட்டேங்கிற பாதிப்புல…திருந்தியும் இருக்கலாமே…! ஒரு மனுஷன் திருந்துறதுக்கு பெரிய சந்தர்ப்பமா வேணும்….சிலபேர் சட்டுன்னு தன்னை மாத்திக்கிறதில்லயா….? முதல் முறையா திருட்டுப்புத்தி நம்ம வீட்டுக்கு வந்ததுலர்ந்து ஆரம்பிச்சிருக்கலாமே…! ஆளு தனியாத்தான் இருக்காருங்கிற தெம்பு வந்திருக்கலாம்…என்கிட்டே என்ன இருக்கு…சட்டியும் பானையும்…!

அந்தாளு அவரை மாத்திக்கிறது இருக்கட்டும்.அது எவனோ ஒருத்தன்… நீங்க உங்கள மாத்திக்குங்க…உங்க வீட்ல பையனே சதம்னு பாதுகாப்பா இருக்காங்க….நீங்கதான் பாதுகாப்பில்லாம அலைஞ்சிட்டிருக்கீங்க…பார்த்துக்குங்க….ஒரு சமயம் போல ஒரு சமயம் இருக்காது….அத மனசுல வச்சிக்குங்க….உங்க மேல இருக்கிற கரிசனத்துல சொல்றேன்….

பாஸ்கரனின் வார்த்தைகளை அசை போட்டவாறே படுத்திருந்தார் விநாயகம்.

ச்சே…மனுஷனுக்கு வயசாகக் கூடாது….அத மாதிரிக் கொடுமை எதுவுமில்லை…..என்னல்லாம் நினைக்க வைக்குது….மனசும் பலவீனமாகி….உடம்பும் பலவீனமாகி….

காலையில் தான் பேசியபிறகு மதியத்திற்கு மேல் அவள் பேசுவாள் என்று எதிர்பார்த்திருந்தார் விநாயகம். எந்தச் சத்தமும் இல்லை. அவளுக்கு மன இறுக்கம் அதிகம்தான். அன்றிருந்ததுபோல்தான் இன்றும் இருக்கிறாள். ஒரு மாற்றமில்லை. சர்வீஸில் இருந்ததுபோலவேதான் இன்றும் இருக்கிறாள். கொஞ்சமும் தளர்ந்த மாதிரித் தெரியவில்லை. நான்தான் தளர்ந்துபோய்….மனசும்…உடம்பும்….எதற்கு இந்த வெட்டி வீராப்பு…? யாரை வெற்றி கொள்ள? அல்லது யாரைத் திருப்திப்படுத்த? அல்லது எதிலிருந்து தப்பிக்க?

ஒரு மாதம் என்று சொல்லிவிட்டு வந்தாயிற்று. வெறும் ஐந்து நாட்கள்தான் கழிந்திருக்கின்றன. இன்னும் இருபத்தைந்து நாட்கள் மீதி….சொன்னால் சொன்னபடி இருக்கத்தான் வேண்டுமா? கிளம்பிப் போய் நின்றால் உள்ளே வராதே என்றா சொல்லப் போகிறான்? எதுக்கு அதுக்குள்ளேயும் வந்திட்ட?என்றா கேட்கப் போகிறான்? ஒரு வேளை அவள் கேட்பாளோ…? கேட்டு விடுவாளோ? மகன், மருமகள் முன்னால் கேட்டு மானத்தை வாங்கி விடுவாளோ? எதுக்கு இந்த அசட்டு வீம்பு என்று போட்டு உடைத்து விடுவாளோ? இப்போதும் அவளை நினைத்தால் பயமாய்த்தான் இருக்கிறது.

செல்ஃபோன் அலறியது……எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியாமல் சுற்று முற்றும் பார்த்தார். வழக்கமாய் எதிர் அலமாரியில்தான் கைக்கெட்டும் தூரத்தில் வைப்பார். அங்கே இல்லை. பிறகு எங்கே போயிற்று? தள்ளியிருந்துமா இவ்வளவு சத்தம்? எழுந்து பரபரப்பாய்த் தேடலானார்.

மணிச் சத்தம் நின்று போனது. இதென்னடா வம்பா இருக்கு? என் வீட்டுக்குள்ளயே எத எங்க வச்சேன்னு நானே தேடணுமா?ஒரு வேளை கை மறதியா இங்க வச்சிட்டனோ? பக்கத்திலிருந்த குளிர் சாதன அறைக்குள் நுழைந்தார். படுக்கை அருகே கிடந்தது. இங்க எப்ப வச்சோம்…? காலைல கொல்லைப் பக்கம் போய் பேசிட்டு நேரா இங்க வந்து வச்சிருக்கனா…? பிறகு நான் இங்க படுக்கவேயில்லையே? அப்புறம் எதுக்கு இங்கே கொண்டு வச்சேன்…..? – உள்ளே என்னோட டேபிள்லதானே கொண்டு வச்சிருக்கணும்? அதுலயும் தடுமாற்றமா? அடக் கடவுளே….!

மனக் கிலேசத்தோடு ஃபோனைக் கையிலெடுத்து இணுக்கிப் பார்த்தார் விநாயகம். பையனின் எண்தான். அவன்தான் பேசியிருக்கிறான்….என்ன அவசரமோ….? திரும்பப் பேசவில்லையே…! அவன் எண்ணைத் தேடி அழுத்தினார். எதிர்ப்புறம் சட்டென்று பதில்..

என்னப்பா….எங்க போன….? ஃபோனை வீட்டுல வச்சிட்டு வெளில போயிட்டியா…? எத்தனை வாட்டி போடுறது….?

அதெல்லாமில்லப்பா….சொல்லு….. என்ன விஷயம் ….?– ரொம்ப நிதானமாய்க் கேட்டாலும் மனசு படபடத்தது இவருக்கு.

அதுக்கில்ல…..நாலஞ்சுவாட்டி போட்டனே….ரிங் போயிட்டே இருந்ததே…? பயமாயிருக்கில்ல….….

நாலஞ்சுவாட்டியா….? காதுலயே விழலியே…..! இப்பத்தான் அலறினமாதிரி இருந்தது. ஓடி வந்து எடுத்தேன்…

நல்லா எடுத்த போ…..ஃபோன் வர்றதுகூடத் தெரியாம இப்டி இருந்தேன்னா….நீ தனியாப் போயி அங்க இருக்கிறது சரியான்னு யோசிச்சிப் பாரு….

அதெல்லாம் இருக்கட்டும்ப்பா….எதுக்கு ஃபோன் பண்ணினே…அத முதல்ல சொல்லு….. – புதிர் விலகாமல் கேட்டார் விநாயகம்.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ரெண்டு நாளா….டாக்டர்ட்ட இன்னைக்குத்தான் போயிட்டு வந்தோம். நான் லீவு போட்டிருக்கேன்….உன்னைப் பார்க்கணுமாம்…….

என்னது…..? என்ன சொன்னே….? சரியாக் காதுல விழலே…..திரும்பச் சொல்லு…..

உன் ஃபோனை ஸ்பீக்கர்ல போடு…அப்பத்தான் நல்லாக் கேட்கும்…அம்மாக்கு உடம்பு சரியில்லே. கடுமையான ஜூரம். உடனே உன்னைக் கிளம்பி வரச்சொல்றா….இன்னைக்கே புறப்படுவியாம்……

உடம்பெல்லாம் சிலிர்த்துப் போனது விநாயகத்துக்கு. தொடர்ச்சியாக வியர்த்துக் கொட்டியது. என்னவோ நினைப்பில் வயிற்றைக் கலக்கியது. வயிற்றில் திடீரென்று ஏதோ அமிலம் சுரப்பதுபோல். பாத்ரூம் போக வேண்டும்போல் மனது பரபரத்தது.

அப்பா….யப்பா…..நான் சொன்னது காதுல விழுந்திச்சா….டிக்கெட் போட்டுட்டு மெஸேஜ் அனுப்பறேன். கிளம்பி வந்துடு….சரியா…..அம்மாட்டப் பேசறியா…..கொடுக்கறேன்…..ரெண்டு வார்த்தை பேசு…..உடனே கிளம்பி வருவியாம்….அம்மாதான் சொல்லச் சொன்னா……

பையனின் குரல் காதில் அறைந்தது. .அம்மாதான் சொல்லச் சொன்னா…!அப்போ…? நீயும் சொல்லலியா இதை? உனக்கு நான் வேண்டாமா?- ச்சே…இந்த நேரத்தில் இதென்ன கோணல் புத்தி? புடனியில் பட்டென்று தட்டிக் கொண்டார்.

விழியோரத்தில் துளிர்த்திருந்த நீரைத் துடைக்க மனமில்லாமல் மனைவி ராஜத்தையே நினைத்து நெகிழ்ந்தவாறு கழிவறை நோக்கி நடக்கலானார் விநாயகம்.

உஷாதீபன் 1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *