கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 75 
 
 

பிரிட்ஜில் வைத்திருந்த கோக்கை எடுத்து குடித்துக்கொண்டே சோஃபாவில் உட்கார்ந்து டி.வியை ஆன் செய்து யூடியுபிற்குள் நுழைந்து ‘கோஸ்ட் வீடியோஸ்’ என்று செர்ச் செய்து பார்த்துக்கொண்டிருந்தான் ராஜ்.அவன் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அதே வேளையில் மாடியில் உள்ள அறையில் யாரோ ஒரு பெண் கத்தும் சத்தம் கேட்டது, இவனும் டி.வியை பாஸ் செய்துவிட்டு மாடிகளில் மெதுவாக ஏறினான்.

உள்ளறையிலிருந்து தான் அந்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, பயத்துடன் அந்த அறையிலிருந்த ஜன்னலை நெருங்கி உள்ளே எட்டிப் பார்த்தான். ஆனால் அவன் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை, என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான், பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக அருகிலிருந்த ஒரு தடியை எடுத்துக் கொண்டு மெதுவாக அந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

அந்த அறை இருட்டில் நிரம்பியிருந்தது. எப்படியோ சுவற்றைத் தட்டித்தடவி சுவிட்சை கண்டுப்பிடித்து ஆன் செய்தான், இப்போது அந்த அறையில் இருள் அகன்று வெளிச்சம் பரவியது, ஆனால் அவனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அங்கு ஒரு பெண் கயிற்றால் இறுக்கி கட்டப்பட்டிருந்தாள். அவள் முகத்தில் ரத்தக்காயங்கள் அங்கு அங்கு இருந்தன. இவனைப் பார்த்ததும் அவள் பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தாள்.

இவனும் அவள் அருகில் சென்று அவளைக் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்க ஆரம்பித்தான். அவன் அவிழ்ப்பதைப் பார்த்து அந்தப் பெண்ணிற்கு ஒன்றும் புரியவில்லை, கயிற்றை அவிழ்த்ததும் அந்தப்பெண்ணிடம்

“எப்படியோ இங்கிருந்து தப்பிச்சு ஓடிரு, என் அண்ணன் கிட்ட மாட்டிக்கிட்டா உன்னை சாகடிச்சிடுவான். அதனால சீக்கிரம் இங்கிருந்து தப்பிச்சு ஓடிரு”

என்று சொல்ல அவளோ இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நீ ஏன் இப்படி பாக்குறேன்னு எனக்குத் தெரியுது? கடத்துனவனே நம்மளை போகச் சொல்றான்னுதான பாக்குற? உன்னை கடத்துனது என் அண்ணன் தான், நான் உன்னை கடத்தல, நாங்க ரெண்டு பேரும் டிவின்ஸ். என் அண்ணன் தான் உன்னை கடத்தி இங்க வெச்சிருக்கான். அவன் இப்போ வெளியே போய்ருக்கான. அவன் திரும்பி வருவதற்குள் எப்படியோ தப்பிச்சிடு”

என்று கூறி அவள் தப்பிப்பதற்கு உதவி செய்தான். அவளும் ‘என்னை விட்டால் போதும்’ என்று அந்த இருட்டில் ஓடிக்கொண்டிருந்தாள், அப்போது அவள் பின்னால் ஒரு உருவம் சுத்தியலுடன் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

மறுநாள்.

‘நடுராத்திரியில் இளம்பெண் சுத்தியலால் அடித்துக்கொலை’

இதுதான் செய்தி ஊடகங்களுக்கு அன்றைய நாளுக்கான ஹாட்நியூஸாக இருந்தது.

பத்திரிக்கையாளர்கள் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வந்தனர் காவல்துறையினர்.

இவையெல்லாவற்றையும் டி.வியில் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜ், பிறகு மெல்லமாக தலையை திருப்பி பார்த்தான், அவன் பார்த்த இடத்தில் ஒரு பெண் கயிற்றால் கட்டப்பட்டிருந்தாள், அவளது வாய் டேப்பால் சுற்றி அடைக்கப்பட்டிருந்தது. இவனும் பதறிக்கொண்டு அந்த பெண்ணின் அருகில் சென்று அவள் வாயில் ஒட்டியிருந்த டேப்பையும், கயிற்றையும் அவிழ்த்தான்

“இந்தப் பாரும்மா! என் அண்ணன் ஒரு சைக்கோம்மா அவனுடைய ட்வின் பிரதர் தான் நான், இந்தா இப்போ நியூஸ்ல சொல்றாங்களே இந்தப் பொண்ணையும் என் அண்ணன்தான்மா கொலைப் பண்ணான், தயவு செஞ்சு இங்கிருந்து எப்படியாவது தப்பிச்சுப் போய்டுமா உனக்கு தப்பிக்க நான் ஹெல்ப் பண்றேன்”

என்று கூறி அவள் தப்பிப்பதற்கு கதவைத் திறந்தான், இவளும் ஒரு நொடி யோசித்துவிட்டு பிறகு அந்த வீட்டிலிருந்து வேகமாக வெளியே ஓடினாள்.

அந்நேரம் வானமும் இருட்டத்தொடங்கி அந்ந இரவு நேரத்தை மேலும் இருளடையச் செய்தது, சிறிது நேரத்தில் சோவென்று மழை பெய்ய ஆரம்பித்தது, சிறு தூறலாக ஆரம்பித்த மழை பெருமழையாக மாறத்தொடங்கியது.

அப்பெண்ணும் மூச்சுப்பிடிக்க அந்த மழையில் ஓடிக்கொண்டிருந்தாள், அப்போது எதிர்பாராவிதமாக அவளது கால் அங்குள்ள சேற்றுக்குழியில் மாட்டிக்கொண்டது. இவளும் காலை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. அப்போது அவளது அருகில் யாரோ இருப்பது போல் உணர்ந்தாள், என்ன என்று திரும்பிப் பார்ப்பதற்குள் அவளது பின்மண்டையிலேயே யாரோ ஒருவர் சுத்தியலால் பலமாக தாக்கினார்கள். தாக்கியதில் அப்படியே பின்மண்டையில் இரத்தம் சொட்ட மயங்கி கீழே விழுந்தாள்.

அவளை சுத்தியலால் தாக்கியது வேறு யாருமல்ல அவளை அந்த வீட்டிலிருந்து தப்பிக்க வைத்த ராஜ்தான், பிறகு அரை மயக்கத்தில் கிடந்த அவளின் முன்னால் வந்து நின்றவன் சிரித்துக் கொண்டே அவளிடம்

“என்னம்மா? இப்படியொரு ட்விஸ்ட்டை நீ எதிர்ப்பாக்கலை தானே? என்னத்தை சொன்னாலும் நம்பிடுறது, ம்”

என்று கேட்க அவளோ மயக்கத்திலிருந்து லேசாக கண்ணை திறக்க முடியாமல் திறந்துப் பார்த்தாள்

“நான் ஏன் தெரியுமா உன்னை முதலில் தப்பிக்க விட்டேன்? ஏனா என்கிட்ட சிக்குன ஆடுங்களை எல்லாம் ஆடவிட்டு அடிச்சுத்தான் பழக்கம், உங்களை கடத்துனது நான் இல்லை என்னோட ட்வின் பிரதர்தான்னு சொல்லி உங்களை தப்பிக்க விட்டதும் உங்களுக்குள்ள ஒரு சந்தோஷம் வருமே அதை நான் பார்க்கனும், அப்படியே தப்பிச்சு சந்யோஷமா வெளியே ஓடும்போது எப்படியோ நாம தப்பிச்சிட்டோம்னு நினைக்குற அந்த கேப்ல உங்க மேல ஒரு சுத்தியல் பாயும் அப்போ ரியலைஸ் பண்ணுவீங்க நாம தப்புக் கணக்கு போட்டோம்னு, இதுல இன்னொரு வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா எனக்கு முதல்ல ட்வின் பிரதரே கிடையாது,நானே உங்களை தப்பிக்கவும் வைப்பேன், நானே உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கவும் செய்வேன்,குட் பை!”

என்று சொல்லிக்கொண்டே அவளது தலையை சுத்தியலால் ஓங்கி ஓங்கி அறைந்தான். அவளது இரத்தமும் மழையின் நீரோடு கலந்து சேற்றில் ஓடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *