அவனோட மனசு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 2,279 
 
 

“அடப்பாவி பயலே.…இவன் போகும் போது, என்னத்த அள்ளிக்கிட்டு போகப் போறான்.. எங்க இருந்து வந்தான் இவன்…? ஒரு பள்ளி கூட பசங்க போறதுக்கு ஒரு ஒத்தையடி பாத…அதைவிட மாட்டேன்னு சொல்லிட்டு… இப்படி இரும்பு கேட் போடுகிறானே..!”

“சிவக்குமாராம்…சிவக்குமார்… சரியான சவக்குமார்… எல்லாரோட வயித்தறிச்சல கொட்டிக்கிட்டா… சவக்குழிக்குத்தான் போவான். புதுசா இந்த வீட்டை வாங்கிட்டானாம். என் வீட்டு சந்தில் யாரும் போகக்கூடாது என அடம் பிடிக்கிறான். ஒரு அடி சந்து… ஒரு பத்து நிமிஷம் பசங்க போ போறாங்க..இதுக்கு என்ன பாடு…படுத்துறான்…!” கொட்டி தீர்த்தாள் திலகா.

“அரை நிமிடத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகள்….இப்ப ஐந்து கிலோமீட்டர் சுற்றி பள்ளிக்கு போக வேண்டியிருக்கு… நம்ம பழைய சீனிவாசன். எப்படி பட்ட மனுஷன். நம்ம குழந்தைங்க… அவர் வீட்டு சந்து வழியா போறத நின்னு… பார்த்து ரசிப்பார். பசங்க ஸ்கூல் போற நேரத்துல…அவரு வீட்டுக்கு வெளியில வந்து, எல்லாருக்கும் டாட்டா சொல்லுவார். நம்ம குழந்தைகளை பார்க்கிறபோது…அவர் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். இப்ப இவன் சுத்த கடுகடுத்தானாவுல இருக்கான்.” இது ஆனந்தியின் ஆதங்கம்.

அந்தத் தெருவில் உள்ள அத்தனை பேரும், சிவக்குமாரிடம் சென்று, பேசி பார்த்தனர் . அவன் சரி சொல்வதாய் இல்லை. அந்த ஊர் கவுன்சிலரும் சென்றுபேசிப் பார்த்தார். அப்போதும் அவன் கேட்க வில்லை. அவன் மனசு அப்படி…! இது என் வீட்டு சந்து. இது வழியா ஏன் போகனும் என சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

“அவன் வீட்டு சந்து தான்…யாரு இல்லையினா. குழந்தைங்க அது வழியாக, நடந்து போனா… தரை தேஞ்சா போயிரும்.” பொறுமினாள் பொன்னி.

“குழந்தைகள் செல்வது அவனுக்கு தொந்தரவாக இருந்தாலும் , ஒரு பத்து நிமிடம் தானே. காலையில் ஒரு பத்து நிமிடம். மாலையில் ஒரு பத்து நிமிடம்.‌. திறந்து வைத்தாலே போதும். கல் மனசுகாரன்.” அங்கலாய்தாள் ஆனந்தி.

அந்த ஒரு அடி சந்திற்கான பணத்தினை… எட்டு குடும்பங்களும் சேர்ந்து பங்கிட்டு கொடுப்பதாய் சொல்லியும் அவன் மறுத்து விட்டான்…

ஒரு நாள் அனைவரும் சேர்ந்து அந்த கதவினை திறக்க முற்பட்டனர். சிவக்குமார் 100க்கு போன் செய்துவிட்டான்..போலீஸ் வந்து விசாரித்தனர்.

“என்னப்பா… பள்ளி குழந்தைகள் தானே. ஒரு பத்து நிமிஷம் திறந்து விடுவதால் உனக்கு புண்ணியம் தானே. சமாதானமா போப்பா….!” போலீஸ் வந்து சமாதானம் பேசியும், அவன் கேட்டை திறப்பதாய் இல்லை.

அந்த தெருவில் உள்ள 8 வீடுகளின் பள்ளிக் குழந்தைகள் மட்டுமே அந்த ஒரு அடி சந்தில்… பக்கத்து பள்ளிக்கு செல்வார்கள். மற்ற யாருக்கும் அந்தப் பக்கம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒரு சைக்கிள் கூட நுழைய முடியாது..

திடீரென்று அந்த எட்டு பேருக்கும் கோர்ட்டில் இருந்து சம்மன் வந்தது. அதிர்ந்தனர் அனைவரும். சிவக்குமார் தான் கேஸ் போட்டுள்ளான். தனது கேட்டை உடைக்க வந்ததாகவும் , தன்னை அடிக்க வந்ததாகவும், கேஸ் போட்டிருக்கிறான். நஷ்ட ஈடு ரெண்டு லட்சம் கேட்டும்… கேஸ் போட்டிருக்கிறான்.

அடப்பாவி… இந்த சிவக்குமார் இப்படி கேஸ் போட்டு இருக்கானே….! சம்மன் வந்தா கோர்ட்டுக்கு போகணுமா…? சிலருக்கு சந்தேகம். ஆமாம்மா கண்டிப்பா போகணும் இல்லாட்டினா…அவனுக்கு சாதகமா ரெண்டு லட்சம் கொடுக்க தீர்ப்பாயிடும்…. எட்டு பேர் மேலயும் கேஸ் போட்டு இருக்கான். போய் தான் ஆகணும். கோர்ட்டுக்கு போனால் தீர்ப்பு வர ரொம்ப நாள் ஆகுமே…! ஐயோ இது எதுக்கு…என் புள்ளையை ஆட்டோவுல அனுப்பிக்கிறேன்…பலரும் பலவாறு பேசி கொண்டனர்.

ரெண்டு வருஷமா கேஸ் நடந்தது. எட்டு வீட்டு நபர்களுக்கும்…கேஸ்க்காக வக்கீல் பீஸ்…அது… இது… என …ஒரு இலட்ச ரூபாய் செலவானது.

இரண்டாம் ஆண்டு இறுதியில் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில் ஒவ்வொரு குடும்பமும் ஐந்து ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கும், குழந்தைகள் நலன் கருதி, கதவினை காலையில் அரை மணி நேரமும் மாலையில் அரை மணிநேரமும் திறந்து வைப்பதற்கும் உத்தரவு இடப்பட்டது. அவன் கேட்ட நஷ்ட ஈடு தள்ளுபடி செய்யப்பட்டதாக திர்ப்பானது.

கோர்ட் தீர்ப்பு வந்த பிறகும்… அவன் கதவை திறக்கவேவில்லை. எட்டு வீடுகளும், வீட்டுக்கு ஐந்தாயிரம் என 40 ஆயிரம் கொடுக்க தயாராய் இருந்தனர். ஆனால் அவன் கதவை திறக்க முடியாது என அனைவரிடமும் தெரிவித்து விட்டான்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்ற கருத்தினை கண்ணன் முன்வைத்தார். ஆனால் செல்லையா அதை மறுத்து விட்டார். “இனிமேலும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம். அது அவன் இடம். அவனுக்கு மனமில்லை. அது அவனோட மனசு. அவனே மாறினால் ஒழிய….நம்மால் மாற்ற முடியாது. நாம் நம்மை மாற்றிக் கொள்வோம். என் பேரனை நானே சைக்கிளில் கொண்டு விட தீர்மானித்து விட்டேன்” என்றார்.

அந்த எட்டு குடும்பங்களில் வயதில் மூத்தவர் செல்லையா. அனுபவம் மிக்கவர். அனைவராலும் நல்ல மனிதர் என போற்றப்பட்டவர். அவர் கூறியதில் மற்றவர் யாரும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. அனைவரும் கட்டுபட்டனர்.

இதற்கு மேல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பயனில்லை எனக் கருதி , 8 குடும்பங்களின் குழந்தைகள்… ஐந்து கிலோமீட்டர் சுற்றி, அந்த ஸ்கூலுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டனர்.

ஆனால் அந்த எட்டு குடும்பங்களுக்கும்… அவன் மேல் இருந்த கோபம் தனியவே இல்லை. இப்படி ஒரு அடாவடி பேர்வழியா இருக்கிறானே என உள்ளூர கொதித்தனர். அவனே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து , நம்மை அலயவிட்டு… பின் அவனே நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல் அடம் பிடிக்கிறான். இவனை என்ன செய்வது….?. இதுவே அனைவரின் ஆதங்கம்….!

சிவகுமார்… சிவகுமார்…என்னப்பா பண்ற…? தள்ளாத வயதில் மூச்சிறைக்க ஓடி வந்தார் செல்லையா.. அந்த ஐயா இவனை நோக்கி ஓடி வருவதை கண்டு… சிவகுமார் அதிர்ந்து போனான்.

“அப்பா… சிவக்குமாரு…தம்பி….உன் பையன் சைக்கிள்ல போகும்போது, காலேஜ்…பக்கத்துல ரோட்டுல விழுந்து கிடந்தான்ப்பா. கடைக்கு போன நான் நல்ல நேரம் பார்த்தேன். தலையில நல்ல காயம். இரத்தம் உறைஞ்சு கிடந்தது. உடனே நம்ம பாலாஜி மருத்துவமனையில் சேர்த்துட்டு வர்றேன். தலையில தையல் போடணுமாம். ஸ்கேன் எடுக்கனுமாம். உடனே பத்தாயிரம் கட்ட சொன்னாங்க. உடனே கட்டிட்டேன். நீ உடனே கிளம்புப்பா.

சிவக்குமார் சிலையாய் நின்றான். எப்படி இவருக்கு இப்படி. மனம்…வந்தது…? நமக்கு சொந்தமான இடத்தில் மற்ற குழந்தைகள் நடந்து செல்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக கேஸ் போட்டு அவர்களை அலக்கழித்தேன். இவர் எப்படி என் மகனுக்காக பத்தாயிரம் ரூபாய் கட்டிவிட்டு….இந்த வயதில் இப்படி ஓடி வருகிறார். சிவக்குமாருக்கு தலை சுற்றியது.

ஐயா…! என கையெடுத்து கும்பிட்டான் சிவக்குமார். குரல் தழுதழுத்தது. கண்கள் பனிந்தன.

முதல்ல ஆஸ்பத்திரிக்கு போப்பா…சிவா.. இன்னும் காசு தேவைப்பட்டால் கேளுப்பா…தரேன் அப்புறம் திருப்பி கொடுக்கலாம்..

இந்த வார்த்தையை கேட்டு சிவக்குமார் உறைந்து போனான்.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

2 thoughts on “அவனோட மனசு

  1. சில பேராசைக்காரர்கள் திருந்த மாட்டார்கள்.

  2. கதையின் சாரம் சிறப்பு . முடிவு மிகச் சிறப்பு. இப்படிப்பட்ட மனிதர்கள், மனிதாபிமானமே இல்லாமல் இருக்கத்தானே செய்கிறார்கள். கதாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *