அழகி
கதையாசிரியர்: மட்டுவில் ஞானக்குமாரன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: March 3, 2024
பார்வையிட்டோர்: 1,513
(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவனது முகத்தை எங்கோ பார்த்தது போலவே எனக்குத் தோன்றியது. சமாதான காலத்தில் யாழ்ப்பாணம் வந்து நிற்கும் எனக்கு, பார்க்கிற எல்லாருமே உறவுகள் போலத்தான் தெரிந்தார்கள். கறுத்துப் போன அவனது முகமோ அல்லது தலைமுடியில் பாதியை இல்லாமல் ஆக்கிய அந்த வழுக்கையோ அவனை எனக்கு அடையாளப் படுத்தத் தடையாக இருந்திருக்கலாம். யோசித்து யோசித்து இறுதியாக கண்டுபிடித்து விட்டேன். நான் அவனை அறிய முன்னராகவே என்னை அவன் அடையாளம் கண்டு விட்டான்.
“என்ன புவி… கண்டு கனகாலமாப் போச்சுது. எப்படிச் சுகம்?” என்றேன்.
யாழ் பல்கலைக்கழகத்தை விட்டுப் பிரிந்த பத்து வருடங்களின் பின்னர் இன்று தான் சந்தித்துக் கொள்கிறோம். மாணவர் காலத்தில் எம்மிடமிருந்த முகத்தை அவன் மட்டுமல்ல நானும் தொலைத்திருந்தேன். அடையாளமே தெரியல்லை.
அவனை அழைத்துக்கொண்டு போய் சுபாஸ் கபேயில் (இது நாம் இருந்து சிரித்த அந்த சுபாஸ் அல்ல) குளிர்பானம் அருந்தியபடி பேசிக் கொண்டிருந்தோம்.
“எத்தனை கடிதம் போட்டன். ஒண்டுக்கும் ஏனடா பதில் போடல்லை?”

“வீட்டுக்கு வா ஆறுதலா… எல்லாத்தையும் விளங்கப்படுத்துறன்”
அவன் இப்போதிருக்கும் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு விடை பெற்றேன்.
புவியின் வீட்டுக்குப் போக வேண்டிய இன்னுமொரு காரணமும் எனக்குள் இருந்தததை உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.
வளாகத்தில் படிக்கும் போது அவனும் நானும் போட்டுக் கொண்ட பந்தயத்தின் வெற்றி தோல்வியை அறிய வேண்டிய தேவை என்னை அவனது வீடு தேடி அடுத்த நாளே துரத்தியது. அவன் வீடு தேடி முதலாம் குறுக்குத் தெருவுக்குள்நுழைகின்றேன்.
அவன் சொன்ன அடையாளங்களை வைத்து வீட்டைக் கண்டு பிடிக்க வேண்டும். என் மனதில் இருந்த குறுக்குத்தெரு அல்ல அது. கால ஓட்டம் மனித முகங்களை மட்டுமல்ல, தெருக்களையும், வீதிகளையும், ஊர்களையும், நகரங்களையும் மாற்றி விடுகின்றன. அதிலும் போர் நடந்த இடங்களில் காலம் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விடுகிறது. குறுக்குத் தெருவிலும் வீடுகள் இருந்த பல இடங்கள் பாழாய்க் கிடந்தன. ஒருவாறு அவனது வீட்டைக் கண்டு பிடித்தேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்த வேண்டிய இடத்தில் அறுந்த வயர் தொங்கியது. கதவைத் தட்டினேன். அழகான சின்னஞ் சிறிய பெண் குழந்தை சிரித்தபடி வரவேற்றாள். என் மகளின் நினைவுகள் மனதில் ஓடின. புவி சிரித்த முகத்தோடு வந்தான்.
“மச்சான் ஆரிந்தப் பிள்ளை?”
“என்னுடைய மகள் தான், ஓவியா”
“பிள்ளைக்கேற்ற பெயர் அல்லது பெயருக்கேற்ற பிள்ளை” என்றேன் சிரிப்புடன்.
“மச்சான்…” தயங்கியபடி இழுத்தேன்.
“ம்.. சொல்லு..”
“எனக்கும் உனக்குமான அந்த அழகிப் பந்தயம்!, மறந்திட்டியோ?”
“நான் மறக்கல்லையடா” என்றபடி இழுத்தான், பின் அவனே தொடர்ந்தான்.
“நான் முடிச்ச ஒரு உலக அழகி நிலையிலை இருக்கிறவளைத் தான் முடிப்பன் எண்டு பந்தயம் பிடிச்சனான், ஆனா…” என்றபடி தன் சாரத்தை இழுத்து வலது காலைக் காட்டினான். மரத்தினால் ஆன செயற்கைக்கால். அதைப் பார்த்ததும், அவனது காலைப் போலவே எனது மனசும் உணர்வற்றுப் போனது.
ஏன் இப்படிக் கேட்டேன் என்று மனதுக்குள் நொந்து கொண்டே “மன்னிச்சுக் கொள்ளடா” என்றேன்.
“இதில மன்னிக்க என்ன மச்சான் இருக்கு?’
“இல்லை, உனக்கு இப்பிடி நடந்தது எண்ட விசயம், எனக்கு இதுவரைக்கும் தெரியாதடா. என்ன நடந்தது?”
“அது இஞ்ச வழக்கமா நடக்கிறதுதான். என்னை அவசரமா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போன நேரத்தில, உயிரைக் காப்பாத்திறதே சந்தேகம் எண்டு டொக்டரே கையை விரிச்சிட்டார்”
“ம்”
“ஒருவருசமா கோமாவிலை நினைவில்லாமல் இருந்தன் மச்சான்”
என்றவன் என் முகத்தைப் பார்த்தான். பேச்சை ஆரம்பிக்க இருவராலும் முடியவில்லை. மீண்டும் புவிதான் பேசினான்.
“நான் அப்ப நேசிச்சது, உனக்கு நான் சொன்னமாதிரி ஒரு உச்சமான அழகிதான் மச்சான். அவள் அப்ப என்னைத்தான் காதலிச்சவள். அதே நேரம் அவளை எல்லா இளசுகளும் காதலிச்சவை” என்று சொன்னவன் மெல்லிய சிரிப்போடு தொடர்ந்தான் “என்னுடைய அந்தக் கனவுக் காதல் காலத்தில நீ இஞ்ச இல்லை”
“ம், பிறகு”
“என்ர காலும் போக அவளும் போட்டாள்” என்றவனின் முகத்தில் எந்த உணர்ச்சிகளும் இருக்கவில்லை.
ஏன் இங்கே வந்து இப்படி ஒரு கதையை ஆரம்பித்தேன் என்று என் மனம் என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.
மீண்டும் தொடர்ந்தான் புவி “என்னை ஒரு ஆளாக்கி நடமாட வச்சவள். இவள்தான்” என்றபடியே தனது மனைவியை அழைத்தான்.
குசினி வேலைகளை இடையில் நிறுத்தி விட்டு, விறாந்தைக்குள் வந்தாள் புவியின் மனைவி. அவள் அழகானவளா இல்லையா என்று பார்க்கும் நிலையில் என் மனம் இருக்கவில்லை. எனக்குத் தேனீரை நீட்டிய அவளின் கைகள் நரம்போடிக் கறுத்துக் கிடந்தன. நன்றி சொல்லி தேனீரை வாங்கிக் கொண்டேன். அங்கு நிலவிய மெளனத்தை புவிகலைத்தான்.
“அழகெண்டது முகத்திலை இல்லை, அகத்திலை தான் எண்டதை ஒரு தாதியா இருந்து இவள் காட்டின பராமரிப்பும் அன்பும் சொல்லித் தந்தது. மச்சான்”
இன்னும் நிறையப் பேசினோம். வளாக வாழ்க்கையை, நடந்த அழிவுகளை, பிரிந்த உறவுகளை எல்லாம் பேசித் தீர்த்தோம். விடைபெறும் நேரம்.
“நான் ஒரு வளாகப் பந்தயத்துக்கு விடை தேடி அவசரமா உன்னிட்ட வந்தன் மச்சான், இப்ப வாழ்க்கைப் பந்தயத்திலை வெண்ட ஒரு நல்ல நண்பனைப் பார்த்த சந்தோசத்திலை திரும்பப் போறன்” என்றபடி விடை பெற்றேன்.
– இருக்கிறம், 20-05-08