கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2025
பார்வையிட்டோர்: 580 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விசேஷ மலரில் வெளியிட ஒரு சித்திரம் தேவை என்று கேட்டிருந்தார்கள். அது மட்டுமா! மிகவும் உயர்ந்த மாதப்பத்திரிகையின் கோரிக்கை அது. இதைவிடப் பிரம்மானந்தம் வேறு வேண்டுமா? குடியானவனின் அழகிய பெண், தன் பேரெழிலைத் தானே அறியமாட்டாள் என்பதில்லை. ஆனால், அரசிளங்குமரன் அவளை வரிக்க வந்துவிட்டானாயின்! அப்போது அவள் அந்தக்கரணத்தில் ஆனந்தத்தோடு ஆச்சரிய அலைகளுங்கூட எழும்பும் அல்லவா? அப்படித்தான் இருந்தது, அந்த இளஞ் சித்திரகாரனுடைய நிலை. 

அவன் மனக்கண் முன்பு ஆகாயமளாவிய கோயி லொன்று நின்றது. ‘இந்த அழகிய கோயிலின் சிருஷ்டி ரகசியத்தை உலகத்துக்குப் புலப்படுத்த வேண்டும். சித்திரம் எவ்வளவு அழகாக அமைய வேண்டும், தெரியுமா!’ என்று அவன் நினைத்தான். 

காலையும் மாலையும் அவன் கடற்கரைக்குச் சென்று வருவான். நள்ளிரவில் உதிக்கும் அஷ்டமி சந்திரனின் உதயத்தை அவன் கண்டான். குன்றின் மேலிருந்து தென்படும் சுற்றுப்புறத்து யக்ஷபூமியைப் பார்த்தான். ஆனால், அவன் மனம் எதிலும் ஈடுபட வில்லை. பசி எடுத்த குழந்தையை அதன் சிற்றன்னையும் பெரியம்மாவும் அத்தையும் எவ்வளவுதான் சீராட்டினாலும், அதன் ரோதனை நிற்குமா? அதற்குத் தாயின் முன்றானையிலேதான்- 

 வேட்கையுற்ற அவனுடைய கலைப்பார்வை, தன் தாயைத் தேடிப் பிடித்தது. வயல்வழியே செல்லும் போது, அவன் வலது புறம் திரும்பினான். சமீபத்தில் தான் விதைப்பு ஆகியிருந்தது. பச்சைப் பசேலென்ற வயலின் நடுவே, சில புறாக்கள் உல்லாசமாக அமர்ந்திருந்தன. தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு, வயலின் நடுவில் யாரோ வெண்மலர்களைக் குவித்து வைத்தாற்போலத் தோன்றும். ஓவியனின் கால்கள், அந்தப் புறமாகப் பையப் பைய நடந்தன. புறாக்கள் இடையிடையே கழுத்தை வளைத்து இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டும் இடையே அலகினால் எதையோ கொத்திக்கொண்டும் இருந்தன. பசுமையான ரத்ன கம்பளத்தின் நட்டநடுவிலே, நாசுக்காக நடையிடும் அவற்றின் நர்த்தனத் திறமையைக் கண்டு, ஓவியன் தன் மனத்தைப் பறி கொடுத்தான். ஓங்கி வளர்ந்த தென்னைமரங்களின் வரிசையாகிய நிலைக்களம்; சமீபத்தில் நாற்று விட்ட பயிரின் இளம் பசுமை; வெள்ளைவெளேரென்ற புறாக்கள் – எவ்வளவு அழகிய காட்சி ! அமெரிக்காவின் கரையில் அடி வைத்தவுடனே கொலம்பஸுக்கு என்ன ஆனந்தம் உண்டாகியிருக்கும் என்பதை ஓவியன் இப்பொழுது ஒருவாறு உணர்ந்துகொண்டான். 

தான் கவியாக இல்லையே என்று அவன் வருந்தினான். எவ்வளவு மனோகரமான காட்சி அது மேகமில்லாத ஆகாயத்தில் மினுமினுக்கும் நக்ஷத்திரக் கூட்டம், ஒரு பெண்மணியின் முன்றானையிலே உருளும் அழகிய முத்துமாலை; இவை போன்ற எத்தனையோ சௌந்தரியக் கற்பனைகள், அவ்வழகிய புறாக்களைக் கண்டு அவனுக்குத் தோன்றின. தன் காலடிச் சப்தத்தைக் கேட்டுப் புறாக்கள் பறந்துவிடாமல் இருக்கவேண்டுமே என நினைத்து, அவன் சற்றுத் தொலைவிலேயே நின்றான். ‘இந்தக் காட்சியை நான் சித்திரித்துவிட்டேனாயின்!-எவ்வளவு மென்மை யான பறவைகள்! அவற்றின் நடையிலேதான் என்ன இனிமை! இந்த அழகிய ஓவியத்தின் மாயா ஜாலம் -‘ என்று எண்ணமிடலானான். பிள்ளையில்லாத மடந்தை, மழலைச்சொற்கள் பேசும் குழந்தையை எவ்வளவு ஆவலோடு பார்ப்பாளோ, அவ்வளவு ஆவல் நிரம்பிய பார்வை அப்பொழுது அவனுடைய ரஸிகக் கண்களிலே தோன்றியது. 

“ஹு ! ஹூ! ஹு!” என்ற கடும் கூச்சலினால் அவனுடைய கலைச் சமாதி கலைந்தது. கந்தை யணிந்த, கொழுகொழுத்த, கருமனிதன் ஒருவன் அந்தப்புறாக்களைத் தொலைவிலிருந்தே பயமுறுத்தியவாறு, ஓவியனிடம் வந்துகொண்டிருந்தான். அவனுடைய கர்ண கடோரமான ஒலியைச் செவியுற்ற ஓவியன், தன் சமாதியைக் கலைக்கும் மனிதனைக் கோபத்தோடு பார்க்கும் ரிஷியைப்போல, அந்தப் பட்டிக்காட்டானைச் சுடர்விழியால் நோக்கினான். குடியானவனைப் போல் காணப்பட்ட அம்மனிதன் அருகில் வந்ததும், ஓவியன் அவன்மீது சினந்து வீழ்ந்தான்: “அடே முட்டாள்-!” 

“நானா முட்டாள்? நீ மட்டும் பெரிய கெட்டிக் காரனோ?” என்று அவன் குறும்பாகப் பேசினான். 

“பாவம்! பக்ஷிகள் எவ்வளவு அழகாக உட்கார்ந்திருந்தன!” 

“தம்மைப் போட்டோ பிடிக்க வேண்டும் என்றே அவை அவ்விதம் உட்கார்ந்திருந்தனவோ!” 

“இல்லையப்பா; போட்டோ அல்ல. நான் அவைகளின் சித்திரம் வரைய நினைத்திருந்தேனே?” 

“போதும் ஐயா, நீ சித்திரம வரைந்தது! என் பிள்ளைகுட்டிகள் குடிக்கக் கஞ்சி இல்லாமல் சாக வேண்டும் என்பது உன் எண்ணமா?” 

சித்திரகாரன் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தான். கலைக்கு உயிரளிக்கும் புறாக்களுக்கும் இந்தப் பேதை மனிதனின் குழந்தை குட்டிகளின் சாவுக்கும் என்ன சம்பந்தம்? 

அவன் குடியானவனை நோக்கிப் பரிகாசத்துடன், “பைத்தியம் பிடித்துவிட்டதா அப்பா, உனக்கு!” என்றான். 

“எனக்கு இல்லை; உனக்குத்தான்! இவ்வளவு நேரம் வரப்பின் மேல் நின்றுகொண்டிருந்தும், ஒரு பறவையை ஓட்ட உன்னால் முடியவில்லையே? நேற்றுத்தான் நாற்று விட்டிருக்கிறது! விதையையே புறாக்கள் தின்றுவிட்டால், என் குழந்தை குட்டிகள் பட்டினியாகத்தானே சாக வேண்டும்?” 

விசேஷ மலரில் ஓவியன் வரைந்த அந்த அழகிய காட்சி ஓவியம் வெளிவந்தது. எல்லோரும் அதை ரஸித்தார்கள். அதில் இருந்த புறாக்கள் மாத்திரம் வயலில் உல்லாசமாக அமர்ந்திராமல், பயந்து ‘விர்’ என்று ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தன. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *