கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 749 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மாவால் மேலும் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஊன்றிக் கொண்டு வந்த கோலை கெட்டியாகப் பிடித்தவாறே, அருகிலிருந்த மதகில் அமர்ந்து கொண்டாள். கண்களில் ஒளிமங்கிக் கொண்டு வருமாப் போலிருந்தது. வீதி வழியே சென்று கொண்டிருப்பவர்களையோ அல்லது வாகனங்களையோ பார்க்க முடியாத அளவிற்கு, படிப்படியாகக் கண்கள் இருண்டு கொண்டு வந்தன. இங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு இன்னும் ஒரு கிலோ மீற்றர் தூரமாவது நடக்க வேண்டும். அம்மாவால் இந்நிலையில் எப்படி இவ்வளவு நீண்ட தூரத்தைக் கடந்து செல்ல முடியும்? கண்கள் இருண்டு கொண்டு வந்தாலும்,அம்மாவுக்கு இன்னமும் நினைவுகள் தெளிவாகவே உள்ளன.

அம்மாவுக்கு பெற்றோர் இட்ட பெயர் அன்னம்மா. ஆனால், உணவு முத்திரைக்கான அட்டையில் மட்டுமே அப்பெயர் பதியப் பட்டிருந்ததே தவிர, அக்கம் பக்கத்தார் உட்பட பழகிய சகலருமே அன்னம்மாவில் அன்னத்தை விழுங்கி விட்டு வெறுமனே ‘அம்மா’ என்று மட்டுமே அழைத்து வரலாயினர். உணவு முத்திரைக்கான உலர் ணவுப் பண்டங்களை விநியோகிக்கும் சங்கக்கடை மனேஜர், அடுத்தது அன்னம்மா என்று அன்னம்மாவைப் பார்த்து அழைத்தாலும், அது பின்னாலை யாரையோவாக்கும் என்று அம்மா ஆறுதலாக வெற்றிலை போட்டுக்கொண்டு இருக்குமளவிற்கு… இன்று ஏறத்தாழ தன் முழுப்பெயர் அன்னம்மாவுக்கே மறந்த நிலை யில் அம்மா என்ற பெயரே நிலைத்து விட்டது.

அம்மாவுக்கு மறந்து போனது தன் முழுப்பெயர் மட்டுமல்ல. வாழ்ந்த குடும்பமும் தான். அம்மாவுக்கு உடன் பிறப்புகள் ஏழு பேர். அம்மா தான் அப்பு, ஆத்தைக்கு தலைப் பிள்ளை. உனக்கேன் படிப்பை?சனியன், வீட்டிலை போய் அடுப்பை ஊதன்! அம்மா ஐந்தாம் வகுப்பு படித்தபோது வல்லிபுர வாத்தியார் ‘சேட்டிப்பிக்கட்’ கொடுத்த ஒரு சில நாட்களில், அவளது மூன்றாவது தம்பி பிறந்தபோதாகத்தான் இருக்க வேண்டும், ஆத்தைக்கு உதவிக் காக அம்மா பள்ளிக்கூடம் போவதை நிறுத்திக் கொண்டாள். அதன் பிறகு பிறந்த அத்தனை தம்பிமாருமே அம்மாவைத்தான் தமது தாயென எண்ணிக் கொள்ளுமளவிற்கு, தன் உடன் பிறந்தவர்கள் நலனுக்காக அம்மா தன்னையே அர்ப்பணித்துக் கொண்டாள்.

அம்மாவுக்கு பூப்பெய்திய சில நாட்களுக்குள்ளேயே திருமண மும் நடைபெற்றது. திருமணம் என்றால் ரோகிணி நட்சத்திரமும், அமிர்த யோகமும், கன்னி லக்கினமும் கூடிய சுப வேளையில், கெட்டி மேளம் கொட்ட ‘மாங்கல்யம் தந்துனானே’ என்று ஐயர் சொல்ல, தங்கத் தாலியெல்லாம் கட்டி டாம்பீகமாக அல்ல! அம்மாவுக்குத் தூரத்து உறவில் மச்சான் முறையில் உள்ள ஒருவரை ஒரு நல்ல நாளாகப் பார்த்து அழைத்து வந்து அன்றைய மைமல்ப் பொழுதில் சோறு குடுப்பித்து, மிக எளிமையான சடங்காகத் தான் திருமணம் ஒப்பேறியது. இரண்டு பரப்புக் காணியிலமைந்த ஓரறை வீட்டில் தனிக்குடித்தனமாக அம்மாவின் இல்வாழ்க்கை ஆரம்பமானது.

பிரமன் அம்மாவின் தலை விதியை நிர்ணயித்தது பெரும்பாலும் மஞ்சள் கயிறு கழுத்தில் ஏறியதன் பின்பாகத்தான் இருக்க வேண்டும். அம்மாவுக்கு வாய்த்த கணவன் ‘இனிஷலுக்கு’ மட்டுமே அந்த ஸ்தானத்தில் இருந்தானே தவிர, குடும்பப் பாரத்தை அம்மாவே சுமக்க வேண்டி இருந்தது. தனக்கு வாய்த்தவன் தன் உழைப்பை எல்லாம் உறிஞ்சி ஆதாரமாக இருந்த சொத்துக்களிலும் கைவைத்து ஊதாரியான போதும் அம்மா தன் கணவனைச் சினக்கவில்லை. இறுதியில், இருக்கும் இரு பரப்புக் காணியும் ஈட்டில் போகும் நிலை ஏற்படுமோ என்ற பயம் வந்த போது தான் எதிர்காலம் பற்றி கணவனுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தாள்.

மனைவியிடமிருந்து புத்திமதிகளைத் தவிர இனி ஒரு சதக் காசுமே கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட பின்பு ஒரு மாரிக் கால காலைப் பொழுதிலிருந்து, அம்மாவின் கணவன் காணாமல் போய்விட்டான். ”இவர் இறுதியாகக் காணப்பட்ட போது நீல நிற ‘பற்றிக்’ சாரமும், வெள்ளை நிற ‘சேட்டும்’ அணிந்திருக்கக் காணப் பட்டார். அத்துடன் சவரஞ் செய்யப்படாத முகத்துடன் காட்சி யளித்தார். அவரைக் கண்டவர்கள் தயவு செய்து அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தரவும்”, என அம்மா பெரிதாக எதுவும் விளம்பரப்படுத்த விரும்பவில்லை.

கணவனின் இழப்பு ட்டு நிரப்பப்படமுடியாத வெற்றிடம்’ என்று ஒன்றும் கதிகலங்கிப் போய்விடவுமில்லை. ஆனால் கணவனின் போக்காலும் பாராமுகத்தாலும் பத்தாண்டு களாக உறவுகள் விடுபட்டு, வேறுபட்டிருந்த தன் உடன் பிறப்புகள் மீண்டும் தன்னை நாடி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்ற மாய்ப் போனது தான் அம்மாவுக்கு கவலை அளித்தது.

அருகிலிருக்கும் பல்கலைக்கழக மாணவர் சிலருக்கு உணவு சமைத்துக் கொடுத்து, அதில் வரும் சொற்ப இலாபத்தில் அம்மாவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டு களாக மாறி மாறி வரும் பல்கலைக்கழக மாணவர்களே அம்மாவுக்கு பிள்ளைகள், குடும்பம், உலகம் எல்லாமே சாப்பிட வரும் ஒவ்வொரு மாணவனும் சாப்பாட்டு விடயமாக அம்மாவிடம் உரிமையாகப் போர்க்கொடி தூக்கும் வேளைகளில் தனக்குப் பிள்ளைகள் இல்லையே என்ற குறை அம்மாவுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

தன் பின் பிறந்த எழுவரில் அறுவர் இலண்டன், கனடா, சுவிஸ் என ஒருவர் பின் ஒருவராகக் கப்பலேறி விட்டதாகவும், கடைக்குட்டி கனகன் மட்டும் மருத்துவக் கல்லூரியில் ‘டொக்டருக்குப் படிப்ப தாகவும் அம்மாவின் காதுகளுக்கு அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தன. ‘எங்கை இருந்தாலும் என்ரை பிள்ளையள் நல்லா இருந்தால் அது ஒண்டே போதும்’ எனச் செய்தியாளர்கள் மத்தியில் அம்மா கருத்துத் தெரிவிப்பாள். ஆனாலும், இத்தனை நீண்ட காலங்களாகத் தன் தம்பிமார் தன்னுடன் தொடர்பின்றி அந்நியப் பட்டுப் போவதற்கு அவர்களுக்கு தான் என்ன குறை வைத்ததாக அம்மாவின் மனம் உள்ளூரக் கலங்காமல் இல்லை. “அந்தாள் அமர் கொண்டு திரிஞ்சதுக்கு நான் என்ன செய்ய? அந்தாளிலை உள்ள வெறுப்பை ஏனிதுகள் என்னிலை காட்டுதுகள்?”

அம்மாவுக்கு இப்போது வயது அறுபதை நெருங்குகிறது. ஆனால், தன் பெரும்பாலான காலத்தை வேதனையிலும், விரக்தி யிலும் கழித்ததில் பார்ப்பதற்கு அம்மா எழுபது வயதைத் தாண்டிய வரைப் போலவே காட்சியளித்தாள். கடந்த சில மாதங்களாக அம்மாவுக்கு எதுவுமே முடியவில்லை. சாப்பிட வந்த மாணவர்களும் ‘அம்மாவுக்கு இனி இயலாது’ என ‘அறிவித்தல் பலகையை மாட்டி விட்டுத் தமது உணவிற்கு வேறிடம் பார்த்து விட்டார்கள்.

சதா அடுப்பு வெக்கைக்குள் இருந்து வேகி பலபேருக்கு அவித்துப் போட்ட அம்மா படுக்கையில் வீழ்ந்த போது பக்கத் திலிருந்து ஒரு வெந்நீர் தானும் வழங்க எவருமே இல்லை. நிலைமை மேலும் மோசமடையவே ‘ஒருக்கால் ஆஸ்பத்திரிக்குக் காட்டிப் பார்ப்பம்’ என்ற அங்கலாய்ப்பில் தான் இன்று காலையிலேயே கிளம்பியிருந்தாள் அம்மா.

நோயால் உடல் மிகவும் பலவீனப்பட்டுப் போனதாலும் கடந்த நான்கைந்து தினங்களாக எதுவுமே உட்கொள்ளாததாலும் தான் அம்மாவுக்கு இப்படி நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.

மதகில் இருந்த அம்மாவிற்கு இப்போது படிப்படியாக நினைவு களும் மங்கிக் கொண்டு வந்தன.

மீண்டும் அம்மாவுக்கு நினைவு திரும்பியபோது கைகள் இரண்டிலும் வலியெடுப்பது போன்ற ஓர் உணர்வு. ஏதோ ஒரு சூழலில் பஞ்சணையில் படுத்திருப்பதைப் போன்ற பிரமை. கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள். ‘இப்ப நான் எங்கை இருக்கிறன்?’ என்ற சினிமாப் பாணிக் கேள்விக்கு அவசியமே இல்லாது, முதல் தெரிந்த திரை மறைவே, இருக்கும் சூழலைப் படம் பிடித்தது. உதயனோ, ஈழநாடோ ஏதோ ஒரு பத்திரிகையில் தன்னை மெய்மறந்திருந்து விட்டு தற்செயலாகத் திரும்பிப் பார்த்த போது, அம்மா விழித்திருப் பதைக் கண்டு விட்ட தாதி ஒருத்தி, அம்மாவின் அருகில் ஓடி வந்தாள். கிட்ட வந்தவள், அம்மாவின் முகத்தை ஒரு தடவை உற்றுப் பார்த்துவிட்டு, பயிற்சி பெறும் தாதியாக இருக்கலாம் சாதாரண உடையில் இருக்கும் இன்னொரு தாதியைக் கூப்பிட்டு கூறிக் கொள்வதும் அம்மாவால் கேட்க முடிகிறது. “இந்தப் பேசன்ரைக் கவனமாப் பார்த்துக் கொள்ளும். இவ டொக்டருக்கு மிக வேண்டியவ. நான் ஓடிப்போய் டொக்டரைக் கூட்டிக்கொண்டு வாறன்.

அம்மாவுக்கு எல்லாமே புதிராக இருந்தது. மெல்ல அண்ணாந்து பார்த்தாள். ஒரு பக்கத்தில் இரத்தமும், மறுபக்கத்தில் ‘சேலைனும்’ உடலிற்குள் ஏறிக் கொண்டிருந்தன. கைகள் வலி யெடுப்பதற்கான காரணம் புரிந்தது. வெளியே சென்ற தாதி உள் நுழைவது தெரிந்தது. இவள் மிக அண்மையில் தனது தனிப்பட்ட தேவை ஒன்றிற்காக ‘டொக்டரின்’ சிபாரிசை எதிர்பார்த்து நிற்பவ ளாக இருக்க வேண்டும். நினைவு திரும்பிய அம்மாவின் வியப்பு அவளுக்கும் புரிந்தது. அருகில் வந்து கூறுகிறாள். “நீங்கள் மதகடியில் மயங்கி விழுந்து கிடந்தீங்களாம். காவல்துறைப் பொடியன்கள் தான் தங்கடை ‘பிக்கப்பிலை’ உங்களை ‘ஓ.பீ.டீக்கு’ கொண்டு வந்திச்சினம். அப்ப ‘ஓ.பீ.டீ’யிலையிருந்த ‘டொக்டருக்கு ‘ நீங்கள் தெரிஞ்சனீங்களாம். மிக்க வேண்டியவராம். அவரே முன்னுக்கு நிண்டு உங்களுக்கு வேண்டியதெல்லாத்தையும் செய்தார். இவ்வளவு நேரமா இங்கையே இருந்திட்டு இப்ப தான் சாப்பிட்டுட்டு வாற னெண்டு போனார்.”

அம்மா சமைத்துக் கொடுக்கும் காலங்களில் சமையல் முடியு முன்பே மாணவர்கள் சாப்பாட்டிற்கு வந்துவிட்டால் நேரத்தைப் போக்காட்டுவதற்காக முற்றத்திலிருந்தவாறே தாம் முதல் நாள் இரவு ‘செக்கண்ட் ஷோ’ பார்த்த எம்.ஜி. ஆர், சிவாஜி கணேசனது திரைப் படங்களைப் பற்றி விவாதிப்பார்கள். நடைமுறைக்கு முரணான சம்பவங்களையே தமிழ்த் திரைப்படங்களில் காட்டுகிறார்கள் எனக் கூறிக் குறைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால், தனக்கு இப்போது நிகழ்ந்ததைப் பார்த்தால் வாழ்க்கையின் நடைமுறைகளைத் தான் சினிமா நாடகங்களிலும் சித்திரிக்கின்றார்கள் என ஒரு வேளை அவர்கள் ஒப்புக் கொள்வார்களோ என்னவோ? என அம்மா நினைத்துக் கொண்டாள்.

எது எப்படியாயினும் அம்மாவின் வியப்பெல்லாம் எனக்கு இப்படி பெத்த பிள்ளை போல் உதவிற அந்த ‘டொக்டர்’ யார்? அம்மாவின் கண்கள் ‘டொக்டரின்’ வரவை நோக்கி அகல விரிந்து கொண்டிருந்தன.

பத்து நிமிடங்கள் கூடக் கடந்திருக்காது. ‘டொக்டர்’ மிக வேகமாக வருவதை அம்மாவால் உணர முடிகிறது. அம்மாவுக்கு அருகில் வந்து கட்டிலில் ஊன்றியவாறே ‘டொக்டர்’ கேட்டார் ‘அம்மா எப்பிடி இருக்கு?.

அம்மாவால் எதையுமே கதைக்க முடிய வில்லை. சொற்களைக் கூட்டிப்பார்த்தாள். நாக்கு நகர மறுத்தது.

“அம்மா என்னை உங்களுக்குத் தெரியேல்லையா? வடிவா உற்றுப் பாருங்கோ!”

அம்மா ‘டொக்டரின்’ கண்களை உற்றுப் பார்த்தாள். எங்கேயோ மிக அறிமுகமான கண்கள். நித்தமும் பழகியதைப் போன்ற உணர்வு. ஆனால், இன்னாரென்று மட்டுக்கட்ட முடிய வில்லை. ‘டொக்டர்’ தொடர்ந்தார்.

“அம்மா, பத்து வருஷத்துக்கு முந்தி ‘யூனிவசிட்டியிலை’ நான் படிக்கைக்குள்ளை உங்களட்டைத்தான் சாப்பிட்டனான். ஒரு நாள், இரண்டு நாளில்லை, ஐந்து வருஷங்கள் உங்களின்ரை கையாலை சாப்பிட்டுத் தான் நான் படிச்சன். டொக்டரானன். கிட்டடியிலை தான் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்தன். அப்ப நான் முதலிலை உங்களைப் பற்றித் தான் விசாரிச்சன். இப்ப நீங்கள் சமைச்சுக் கொடுக்கிறதில்லை எண்டும், சுகமில்லாமல் இருக்கிறியளெண்டும் அறிஞ்சு உங்களைப் பார்க்க வரவேணும் எண்டு இருக்கைக் குள்ளைதான் காலமை நீங்கள் மயக்கமா வீதியிலை விழுந்து கிடந்ததாக ஓ.பீ.டீ,க்கு கொண்டு வந்திச்சினம்.”

அம்மா ஏதோ சொல்ல விரும்பியவளாக மீண்டும் ஒருமுறை கதைக்க முயற்சித்தாள். “அம்மா, நீங்கள் இந்த நேரத்திலை எதுவும் கதைக்கக் கூடாது. உங்களோடை எவரும் கனக்கக் கதைக்கவும் கூடாது. உங்களுக்கு ஓய்வு தேவை. நீங்கள் சுகப்பட்டதும் இனி எங்கேயும் போய் தனியாகக் கஷ்ரப்படத் தேவையில்லை. என்ரை ‘குவாட் டேசுக் கே’ வாங்கோ. அம்மா கடைசி வரையில் இனி உங்களைக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை”.

அம்மாவின் இதயத்துடிப்பை ‘டொக்டர்’ பரீட்சித்துக் கொண்டிருந்தார். இதுவரை ஆயிரம் பேர் அம்மாவை “அம்மா” என அழைத்திருக்கலாம். ஆனால், இன்று இந்த டொக்டர் “அம்மா அம்மா” எனத் தன்னை அழைப்பதே அர்த்தமுள்ளதாக அம்மாவுக்குப் பட்டது.

– 1992

– நெஞ்சாங்கூட்டு நினைவுகள்!, முதற் பதிப்பு: 25.12.2006, மீரா பதிப்பகம், கொழும்பு.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *