அப்பா





“அப்பா….., இந்தப் ponytail சரியாக இருக்கா? இப்பிடிக் கட்டினால்தான் என்ரை நெற்றி பளபள எண்டு தெரியும்…” என்ற மழலைக் குரலின் சிரிப்பு வீடெங்கும் பரவியது.
“பிள்ளையின்ரை அப்பாவுக்கு உது தான் பிடிச்ச சிரிப்பு….. உங்கடை சிரிப்பும், அந்தச் சின்ன நெற்றியில விழுகிற வெளிச்சமும் எவ்வளவு வடிவாக இருக்குத் தெரியுமே…… என்ரைச் செ..ல்..ல..ம்”
“நீங்க எனக்கு அம்மா போல இருக்கிற…..அ..ப்..பா?”
“ஓ….தெரியாமப் போச்சே? உங்கடை பிறந்த நாளுக்கு நான் சீலை கட்டிக்கொண்டு அடுப்படிக்கை பலகாரம் செய்யிறன். யாராவது வந்து அம்மா எங்கே எண்டு கேட்டால், என்னைப் பார்த்துக் கையைக் காட்டுங்கோ….என்ரை குஞ்சு….. நீங்கள்”
“எனக்கு அம்மாவும், அப்பாவும், எல்லாமும் நீங்கதான் அப்பா…”
அந்த எல்லாமும் ஆன அப்பாவின் பெயர் பொன்னையா. வயது 52 இருக்கும். அவரது மனைவி லச்சுமி, மகள் பிறந்த சில வாரங்களில் இறந்து போனாள். மனைவியை இழந்த தனிமையை, மகளின் சிரிப்பில் மறந்து கொண்டிருந்த பொன்னையா, பெயருக்கு ஏற்றமாதிரி பெருந்தன்மையுள்ள அன்பான மனிதர். தனது ஒரே மகளான ரோகினிதான், தனது வாழ்க்கையின் சிறகாகவும் ஆதாரமாகவும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ரோகினி நல்ல கெட்டிக்காரி. பள்ளியில் முதல் மதிப்பெண்கள், மேடைப் பேச்சில் விறுவிறுப்பான பெண், விளையாட்டில் சுட்டி இப்படியாக அவளிடம் நிறைய சிறப்புக்கள். அன்று ஒரு மழைக்கால வானத்தில், சிறுமியாக இருந்த ரோகினி, பள்ளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். வெளியில் மெல்லிய பனிக்காற்று வீசியது. பொன்னையா, தனது பழைய பட்டாணி நிறச் சட்டையுடன் அவளுடைய பாடசாலைப் பையையும் சுமந்தபடி கதவின் அருகில் நின்றுகொண்டு, ரோகினியை விரைந்து வரும்படி குரல் கொடுத்தார்.
“ஏன் அப்பா, நீங்கள் என்ரை bag ஐத் தூக்குறீங்க?” ரோகினி கண்ணை சிமிட்டியபடி கேட்டாள்.
“வெளியில சரியான காற்று வீசுது. உந்தக் காற்றுக்குள்ளை என்ரை சின்னப்பிள்ளை தனியாக நடந்து போகும்போது காற்று அவளைத் தூக்கிக்கொண்டு போய்விட்டால்…..பிறகு நான் என்ன செய்யிறது?” என்று பொன்னையா சிறு புன்னகையுடன் கூறும்போது அவள் கலகலவெனச் சிரித்தாள்.
‘இந்தச் சிரிப்பு, இந்தக் குரல், இந்த நெற்றிப் பளபளப்பு எல்லாம் என்னோடை எப்போதும் இருக்குமா?’ என்ற ஏக்கம் அவரது மனதில் ஏனோ தோன்றியது. ஆனாலும், அவளது நிமிர்ந்த நடை, உற்சாகமான குரல், “வாங்கோ அப்பா!” என்ற கெஞ்சல், அவரைத் தாக்கிய ஏக்கத்தையெல்லாம் கரைத்துவிட்டது.
“என் லட்சுமி போனதற்குப் பிறகு, இந்த ரோகினியாலதான் நான் ஒரு குடைமிளகாயைப் போல மாறாமல், இப்பவும் ஒரு மரம் போல நிற்கிறன்…” என்று அடிக்கடி தனக்குள் நினைத்துக் கொள்வார்.
அந்தச் சந்தோசமான காலங்கள் மெது மெதுவாக காலச்சக்கரத்தில் மங்கிய வண்ணம் இருந்தன. சிறுமி, இளம் பெண்ணாக வளர்ந்தாள். நகர வாழ்க்கைக்கும், வேலைக்கும் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டாள். இப்போதெல்லாம் தந்தையின் துணை அவளுக்குத் தேவையில்லை எனத் தோன்றியது.
“அப்பா, உங்களுக்கு வேலைக்கு நேரம் ஆகுது. எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நீங்கள் போங்கோ அப்பா?”
“நீதான் என்ரை முதல் வேலை ரோகினி, உன்னைவிட எனக்கு எதுவும் பெரிசில்லை.”
“அப்பா… emotional ஆக இருக்காதேங்கோ, நிஜத்தைப் புரிஞ்சு கொண்டு வாழுங்கோ”
“நான் உன்னைக் காரில கொண்டு போய் வேலையில விட்டிட்டுப் போறன், உந்த பஸ்சுக்குள்ளை நெரிஞ்சு கொண்டு நீ போகவேண்டாம்.”
“அப்பா….நான் என்ன சொல்றன், நீங்கள் என்ன பேசுறீங்கள். எனக்கு என்ன வேணும், என்ன செய்யவேணும் என்று எல்லாம் தெரியும். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கேலாது. தயவு செய்து, எல்லா விசயத்துக்கும் எனக்குப் பின்னால வராதேங்கோ.”
பொன்னையா சற்றே நடுங்கினார். அவளுடைய வார்த்தைகள் அவரது உள்ளத்தை வெட்டியவாறே சென்றன. ஏதோ சொல்ல வேண்டும் என்று வாயைத் திறந்தார், ஆனால், வார்த்தைகள் வரவே இல்லை. தான் எதையோ எதிர்பார்த்தது போலவும் ஆனால் எதுவோ கடந்து செல்வது போலவும் தோன்றியது.
“நான் உன்னைப்பற்றி யோசிக்காமல் வேறை யாரைப்பற்றி யோசிக்கிறது, பிள்ளை?”
“ஐய்…யோ, நான் பெரியவளாயிட்டன் அப்பா. எனக்கு மூளை இருக்கு, எனக்கும் யோசிக்கத் தெரியும். நானே எனக்கான முடிவுகளை எடுக்கிறன்…try to understand my feelings…..please.”
“எனக்கும் யோசிக்கத் தெரியும், என் முடிவுகளை நானே எடுக்கிறன்” என்று அவள் கூறியதும் பொன்னையாவின் மனதுக்குள் ஒரு குழப்பம் நிறைந்த வலி ஏற்பட்டது.
“நீ பெரியவளா வளர்ந்தது எனக்கும் சந்தோசம்தான் ரோகினி, ஆனால் எனக்கு நீ இன்னும் சின்னப்பிள்ளை மாதிரித்தான்.” என்று மெதுமெதுவாகக் கூறி, தனது கண்களை மறைக்க முயற்சி செய்தார். ஆனால் அதையும்மீறி பொன்னையாவின் கண்களிலிருந்து நீர் கசிந்தது.
“அப்பா…” என்றவாறே ரோகினி மெல்ல நெருங்கி, அவரது கைகளைப் பற்றினாள்.
“நீங்கள் எப்பவுமே எனக்கு முக்கியம்தான், அப்பா. ஆனால் எனக்காக உங்கடை வாழ்க்கையை நீங்கள் நிறுத்தக் கூடாதப்பா….எனக்கென்றும் ஒரு வாழ்க்கை இருக்கு, அதை நான்தான் வாழ வேண்டும். இதைப் புரிஞ்சு கொண்டு, பேசாமல் என்ரை பக்கத்திலை நீங்கள் இருந்தாலே போதும்.”
அவரது கைகளுக்குள் அவளது விரல்கள் குழந்தைபோல நழுவிச் சென்றாலும், அவளது வார்த்தைகளில் ஒரு இளம் பெண்ணின் பரிணாமம் இருந்தது. பொன்னையா கண்ணீரை உள்ளுக்குள் தள்ளிக்கொண்டு, சிரிக்கத் தயாரானார்.
“இண்டைக்கு உனக்குப் பிடிச்ச கத்திரிக்காய் கூட்டு செய்திருக்கிறன், வந்து சாப்பிடு.” அவரது குரலில் பாசமும், ஏக்கமும், மன நிறைவும் கலந்திருந்தது.
ரோகினியின் சைக்கிள் சத்தம் வீதியில் கேட்டவுடன், பொன்னையா கதவை மெதுவாக மூடினார். அவரது உள்ளத்தில் ஏதோ ஒன்று பிசைந்துகொண்டிருந்தது.
“பிள்ளைகள் வளர வேண்டும் என்பதற்காகவே வளர்க்கிறோம். ஆனால் அவர்கள் வளரும்போது நாம் ஏன் சுருங்கிக் கொள்கிறோம்.” என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டார்.
அதன்பின்பு ரோகினி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தந்தையிடமிருந்து கொஞ்சம் விலகியே நின்றாள். முன்பு போல “அப்பா” என்ற அழகிய சொல்லில் இருந்த பாசம் மங்கியதுபோல் தோன்றியது. தந்தையின் அதீத அக்கறை அவளுக்கு ஒருவித சுமையாகத் தோன்றியது போலும்.
அன்று காலை, வழக்கம்போல் அவளுக்காக காலை உணவைத் தயாரித்துக் கையில் கொண்டு வந்தார்.
“அப்பா… என்ன இது இட்லியா? இப்போ என்னால சாப்பிடமுடியாது. அதுமட்டுமில்லை, எனக்கு நீங்க சமைக்கிற சாப்பாடுகளும் பிடிக்குதில்லை. Can you please stop doing this?”
பொன்னையா அந்த இட்லிப் பெட்டியை சற்றே இறுக்கமாகப் பிடித்தபடி, கதவின் முன்னால் எதையோ தொலைத்தவர் போல் நின்றார்.
“இப்பதான் அம்மா செய்தனான். இண்டைக்கு சரியான வெய்யில், வெளியில போய் சாப்பிடவேண்டாம் ரோகினி, இதைக் கொண்டு போ.”
“நீங்கள், என்ரை வாழ்க்கையை வாழாதேங்கோ அப்பா….எனக்கு சுலபமாக வாழத்தெரியும். எத்தனை முறை சொல்லியிட்டன். என்னைத் தனியாக விட்டிடுங்கோ அப்பா? எனக்கான சுதந்திரம் எனக்கு வேணும்”
“நீ என்னமோ என்னைவிட்டு விலகிப்போற மாதிரிக் கிடக்குது. உன்னைக் கவனிக்கிறதை விட எனக்கு வேறை என்ன வேலை, சொல்லு?”
“அப்பா, உங்களுக்காக நான் எப்பவும் குழந்தையாக இருக்க முடியாது. I’m 26 now, எனக்கு 26 வயசு, இப்பவும் பழைய மாதிரி இருக்கவேணும் எண்டு நினைக்காதேங்கோ”
“பழைய மாதிரி” என்று அவள் கடுமையாகச் சொன்ன அந்த ஒரு வார்த்தை, அம்பு போல இருந்தது. பொன்னையா, பேச முடியாமல் கலங்கிய கண்களுடன் அவளைப் பார்த்தார்.
தனது தந்தையின் மனதில் ஏற்பட்ட காயம் அவரது முகத்தில் வெளிப்பட்டதை அவளும் உணர்ந்தாள். ஆனால் தனது ஈகோ வை அவளால் விலக்க முடியவில்லை. ஒன்றும் பேசாது கதவைத் தட்டி மூடிக்கொண்டு வெளியில் சென்றாள். வீடு முழுக்க ஒரு ஆழ்ந்த வெறுமை பரவியவண்ணம் இருந்தது.
ஒரு காலத்தில், அந்தக் கதவின் வாசலில் அவனது காலைக் கட்டிக்கொண்டு “அப்பா, நீங்களும் என்னோடை பள்ளிக்கூடத்திற்கு வா..ங்…கோ” என்று கதறியதை நினைத்துப் பார்த்தபடி, சாப்பாட்டுப் பெட்டியை மெதுவாக மேசைமீது வைத்தார். இட்லியும் சாம்பாரும் குளிர்ந்து கொண்டிருந்தன. அந்த உணவைப் போலவே, பொன்னையாவின் உள்ளமும் சற்று குளிர்வது போல் தோன்றியது. யன்னல் வழியாக வானத்தைப் பார்த்தார். திடீரென, மழை தரும் மேகங்கள் எங்கிருந்தோ குவிந்துகொண்டு வந்தன.
“”இட்லி” இல்லை இங்கை பிரச்சனை, நான் இப்ப, தேவையில்லாதவனாக மாறிவிட்டன்…ம்…” என்ற பெருமூச்சுடன் சமையலறைக்குச் சென்று அவளுக்குப் பிடித்தமாதிரி எதைச் சமைக்கலாம் என்று மீண்டும் யோசிக்கத் தொடங்கினார். ஒரு தந்தையின் கவனமும், பாசமும், தேடலும் அதில் வெளிப்பட்டது.
சில நாட்களுக்குப் பின்பு, ரோகினி திடீரென்று வந்து ஒரு முக்கிய முடிவைத் தந்தையிடம் கூறினாள்.
“அப்பா, நான் Australia க்குப் போகப் போறன். அங்க ஒரு Project Officer வேலை கிடைச்சிருக்கு. நிறைய scope ம் இருக்கு. அங்கை போனால், நான் சுதந்திரமாக இருக்கலாம்….என்ரை வாழ்க்கைபற்றிய முடிவுகளை நானே தீர்மானிக்கலாம்.”
“ஏன் இப்ப உந்தத் திடீர் முடிவு ரோகினி, உனக்கு இங்கை இருக்கப் பிடிக்கேல்லை எண்டதுதானே உதுக்கு அர்த்தம்?”
“இல்லை அப்பா, ஆனால்… இங்கை இருக்கிறது ஒரு மாதிரி எனக்குப் pressure ஆக இருக்கு. நான் என்ரை decisions ஐ free ஆக எடுக்க வேணும். எனக்கு இப்ப affection தான் வேணும், over protection இல்லை.”
“அப்ப….. நான் உனக்கு ஒரு தடையாக இருக்கிறன் எண்டு நினைக்கிறாய் என்ன?”
மனதுக்குள் சிறு குற்ற உணர்ச்சி இருந்த போதும் அதைச் சொல்ல முடியாமல்
” please….அப்பிடி நினைக்காதேங்கோ அப்பா. ஆனால், எல்லா நேரமும் நீங்கள் காட்டுற அதீத அக்கறையை என்னால Handle பண்ண முடியாமல் இருக்கு.”
ரோகினி தனது பயணத்திற்கான பெட்டிகளைத் தயார் செய்து கொண்டிருந்தாள். வீட்டின் வாசலில் பொன்னையா நின்று கொண்டிருந்தார். அவள் தன்னுடைய பயணப் பெட்டிகளை வாகனத்திற்குள் ஏற்றும் போது, ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள். பொன்னையா சற்றே தலையைத் தொங்க விட்டுக் கொண்டு அமைதியாக நின்றார். முகத்தில் தப்பிக்க முடியாத வெறுமை. கண்களில் வரையறுக்க முடியாத சோர்வு.
“அப்பா, நீங்கள் சரியாகச் சாப்பிடவேணும், காலையில எதாவது லைட்டாச் சாப்பிடுங்கோ, too strong ஆ கோப்பி குடிக்க வேண்டாம். குளிராக இருந்தால் கம்பளியால போத்துக்கொண்டு படுங்கோ” என்றாள் ரோகினி, மெதுவாக.
தனது தந்தை மீதான பாசம் இன்னும் தனக்குள் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவளது வார்த்தைகளுக்குள் அந்தப் பாசம் வெளிவருவதை ஏதோ ஒன்று தடுக்கின்றது என்பதையும் இருவரும் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.
“அப்பா… நான் வருவன் அப்பா.” என்று கூறிய ரோகினி, தலை குனிந்து கொண்டே வண்டியில் ஏறிச் சென்றாள். வண்டி சென்ற பின், பொன்னையாவின் மனசைப்போல் வீடும் இருட்டானது.
“நீ யாரு ரோகினி?” அவர் மனதுக்குள் கேட்டுக் கொண்டார். “சின்னக் கையுடன் என்னைப் பிடித்து அழுத குட்டி ரோகினியா? அல்லது, முடிவுகளைச் சுயமாக எடுக்கத் துடிக்கின்ற வளர்ந்த பெண்ணா?” மௌனம் மட்டுமே அவருக்கான பதிலானது.
ரோகினியின் சிரிப்பு ஒலிக்காமல் அந்த வீடு குரலற்றுப் போனது. அவள் போன நாள் முதல், அந்த வீட்டில் சமைக்கப்படும் இட்லிக்கு சாம்பார் தேவைப்படவில்லை, எதைச் சாப்பிட்டாலும் அதில் ருசி இருக்கவில்லை, யார் பேசினாலும் பதில் கிடைக்கவில்லை.
பொன்னையா, சில நாட்களாகவே மௌனமாகவே இருந்தார். சொல்ல வேண்டிய வார்த்தைகள் அவரது கண்ணீராகவே வெளி வந்தன. ஆனால், தனது “அன்பு ஒரு போதும் பிழைக்காது, ரோகினி திரும்பி வருவாள்” என்ற நம்பிக்கை மட்டும் அவரிடம் மாறாமலே இருந்தது.
அவள் திடீரென வேறு நாட்டுக்கு மாறினாலும், ஒரு தடவையாவது தகப்பனை வந்து பார்த்திருக்கலாம். ஆனால் அவள் தந்தையைப் பார்க்க வருவதற்கு யோசிக்கவில்லை. அவர் எழுதிய கடிதங்களுக்கும் அவள் பதில் எழுதவில்லை.
பொன்னையாவோ தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தார். இதற்கிடையில் ரோகினி காதலித்துத் திருமணமும் செய்து கொண்டாள், ஆனால் தந்தைக்கு எந்த செய்தியையும் அவள் தெரிவிக்கவில்லை.
பொன்னையா, தனது ஒவ்வொரு கடிதத்திலும் ஏதாவது பழைய நினைவுகளை இணைத்து எழுதுவதை தனது வழக்கமாக்கிக் கொண்டார். அதன் மூலம் தனது நினைவுகளில் அவரால் வாழமுடிகிறது போலும். சிலநேரங்களில் பழைய புகைப்படங்களை ஒட்டிவிடுவார், சில நேரங்களில் பாடசாலை நாட்களில் ரோகினி வரைந்த ஓவியங்களை இணைத்திருப்பார். இப்படியாக அவரது காலங்கள் ஓடின.
“செல்லம்மா, இன்றும் உன் வாசலில் பூத்துக்கிடக்கும் ஒரு பூவாகவே நான் இருக்கிறேன். சாய்ந்து விழுவதும் மலர்வதுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன், நீ ஒருமுறையாவது என்னை வந்து பார்த்துவிட்டுப் போகலாம் அல்லவா.” தனது கடிதத்துடன் ஒரு சிறிய பொம்மையையும் இம்முறை அனுப்பியிருந்தார். அவளது நான்காவது பிறந்த நாளில் வாங்கிய பொம்மை அது. “ரோகினி, உனது பொம்மை இன்றும் என்னோடேயே இருக்கு, ஆனால் நீ இல்லை” என்பதை அதில் அவர் சொல்லாமல் சொல்லியிருந்தார்.
இப்போதெல்லாம் தபால் நிலையத்தில் மட்டும் தான் அவ்வூர் மக்கள் பொன்னையாவை மீண்டும் மீண்டும் பார்த்தனர்.
“ஐயா, இவ்வளவு கடிதமும் போதும். அந்த பெண் உங்களுக்கு கடிதமும் போடமாட்டாள், உங்கட கையை வந்து பிடிக்கவும் மாட்டாள். ஒரு நாளும் உங்களுக்குப் பதில் வராது, ஐயா……. விட்டிடுங்கோ”
வயதான பொன்னையா தலையசைத்துக் கொண்டே “அவள் பதில் எழுதுவாளோ இல்லையோ, அது எனக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கடிதங்கள் அவள் மனசுக்குள்ளை ஒருநாள் போகும்…..நிச்சயமா ஒரு நாள் போகும்.”
“ம்.., உங்கடை பிள்ளைக்கு எழுதுகிற 56 வது கடிதம் இது, இதுக்குப் பிறகும் எழுதப் போறீங்களா, நாங்கள் சொன்னால் கேட்கவா போறீங்கள்……..எழுதுங்கோ, எழுதுங்கோ”
“பெற்றோரை விட்டிட்டுப் போன பிள்ளைகளால……ஒருபோதும் பெற்றோரின் உயிர் போறதில்லைப் பாருங்கோ…… இந்தக் கடிதத்திலை என்ன எழுதுறதென்றே எனக்கும் தெரியேல்லை, கண்ணீரை மட்டும்தான் வார்த்தையாக எழுதியிருக்கிறன். ஆனால், ஒன்று மட்டும் உண்மை, என்ரை பிள்ளையின்ரை பதிலுக்காகக் காத்திருக்கும் எனது கண்கள் ஒரு போதும் மரணம் அடையாது…..அது என்றும் நிழலாகத் தொடரும்.”
பொன்னையா தனது மகளிடமிருந்து வரும் பதிலுக்காக நீண்டநாட்களாகக் காத்திருந்திருக்கிறார். அப்படி இருந்தபோதும், கோபத்துடன் தனது கடிதத்தை அவர் என்றும் எழுதியதில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது தொடர்ந்தும் அவர் எழுதிக்கொண்டிருப்பது ஒரு தந்தையின் பேரன்பையே வெளிப்படுத்தியது.
“மழை பெய்கிறது மகளே…..உன்னை நினைத்து ……. இதுவரை நடக்காத பாதைகளில் எல்லாம் நான் நடந்திருக்கிறன். என் கடைசித் தூறலாக நீ வருவாயா? நீ வராமலே போனாலும், உன்னை நான் எப்போதும் நினைத்திருப்பேன் ரோகினி. நீ எப்போதாவது மனம்மாறி வருகின்றபோது நான் இங்கு இல்லையென்றால் என்னை மன்னித்துக்கொள் மகளே….என் கண்ணீரால் தான் இதை என் பேனா எழுதுகிறது.”
இக்கடித்தின்பின் அவர் உடல்நிலை குறைந்து வீட்டில் தனிமையில் இருந்தார்.
ஏதோ ஒரு பிடிவாதத்திலும், ஏகாந்தத்திலும் ரோகினியின் காலங்கள் சென்றாலும், அந்தக் கடிதத்தைப் படித்தவுடன் அவளது உள்ளத்தில் ஓர் உலை வெப்பம் பரவியது. “நீ வராமலே போனாலும், உன்னை நான் எப்போதும் நினைத்திருப்பேன்…….என் கடைசித் தூறலாக நீ வருவாயா?” போன்ற வரிகள் அவளது உள்ளத்தைத் துவைத்தன.
தனது பேனாவை எடுத்து உடனே பதில் எழுதத் தொடங்கினாள், ஆனால் அவளால் எழுத முடியவில்லை. அன்றைய முழு இரவையும் அந்தக் கடிதத்துடன் தூங்க முடியாமல் கழித்தாள். மறுநாள் காலையில் வேலைக்குச் செல்லும்போதும், தந்தையின் முகம் அவளது கண்முன்னே வந்து கொண்டிருந்தது. அவள் பேசி நிறுத்திய வார்த்தைகள், இப்போது கதறல்களாக அவளது மனதுக்குள் ஒலித்தன. “Can you please stop doing this?, leave me alone, I need my freedom” போன்ற வார்த்தைகளை….எப்படி அவள் உச்சரித்தாள் என்று நினைத்துப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.
தான் நேரில் சென்று தந்தையுடன் பேச வேண்டியது நிறைய இருக்கிறது என்று முடிவு செய்தவள், கடிதம் எழுதுவதற்குப் பதிலாக விமானச் சீட்டைப் பதிவு செய்தாள். ஆனால், விமான நிலையத்தில் அவளுக்குக் கிடைத்தது ஒரு துயரமான செய்தி. “பொன்னையா, மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.” ரோகினியின் மனம் நிலை தடுமாறியது.
தந்தையின் வீட்டுக்குள் நுழைந்தபோது, மழை நனைந்த அந்த வீடு பசுமையாக இருந்தாலும், சோகமாக இருந்தது. கதவுகள் திறந்தே இருந்தன. பாத்திரங்களில் சுவை மாறாத பலகாரங்கள், யன்னல்களில் எப்போதும் காத்திருந்த பார்வைகள், அடுப்பில் மூடிய நிலையில் இருந்த காலையுணவு……..ரோகினியின் காதுகளுக்குள் ஏதோவொரு சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. பொன்னையா அடுத்த வாரம் கடிதம் எழுதுவற்காக காத்து வைத்திருந்த வார்த்தைகள் அங்கே தவித்துக்கொண்டிருந்தன போலும்.
கடந்த வாரதம் தந்தை எழுதிய கடிதம், அவளது கையில் இருந்தது. அதிலிருந்த “என் கண்கள் மரணம் அடையாது, அது என்றும் நிழலாகத் தொடரும்” என்னும் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவளை தொட்டுக் கொண்டிருந்தன. யன்னலோடு அருகில் இருந்த நாற்காலியில் சென்றமர்ந்தாள். பொன்னையா தினமும் அமர்ந்திருக்கும் இடம் அது. அந்த மழைக்காற்றில், ரோகினி வெறும் ஒரு வார்த்தை மட்டும் தான் கூறினாள்…… “அப்பா…” அவளது குரலற்ற சப்தம் அந்த வீட்டின் சுவர்களில் ஒலித்தது.
பொன்னையாவின் வார்த்தைகள் உண்மைதான் “பெற்றோரை விட்டிட்டுப் போன பிள்ளைகளால் ஒருபோதும் பெற்றோரின் உயிர் போறதில்லை, அது நிழலாக என்றும் தொடரும்”
“அப்பா, நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறன். ஏன் இவ்வளவு நாள் கழித்து வந்தேனோ தெரியவில்லை. ஆனால் என் உள்ளம் இப்போது உங்களைத் தேடுகிறது. என்னால எப்படி… இவ்வளவு நாட்கள்….உங்களைப் பார்த்துப் பேசாமல், உங்களது கடிதங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பதில் எழுதாமல்…., ஏன் அப்பா நான் இப்பிடி இருந்தனான்…….. எப்படி என்னால் உங்களைத் துன்பப்படுத்த முடிந்தது” அவள் தந்தையின் புகைப்படத்தைப் பார்த்து அழுதாள்.
நாம் விட்டுப் போன பாசங்கள், நம்மை மீண்டும் அழைக்கும் என்பதற்கு ரோகினியின் இந்த மனமாற்றம் ஓர் எடுத்துக்காட்டு.
“ரோகினி, உன்னோட அப்பாவைப் பற்றி இதுவரை நீ ஒருபோதும் நினைக்கவே இல்லையா…. ?” என்று ரோகினியின் மாமா மெல்லக் கேட்டார்.
அவளது கண்கள் சற்று கீழே விழுந்தன. மனதுக்குள் அடங்கிக் கிடந்த உணர்வுகளை அவர் வாசித்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சியில் சிறிது நேரம் மௌனமாக இருந்தபின்பு, தனது மனதை மெதுவாகத் திறந்தாள்
“அப்பாவை நினைத்தாலே என் மனசு என்னைக் குற்றவாளியாகக் காட்ட ஆரம்பித்தது மாமா. நான் ஒரு பொறுப்பற்ற, தகுதியற்ற மகளாக இருந்துவிட்டேன் என்று எனது உள்ளம் சொல்லிக்கொண்டே இருந்தது. அது எனக்குள் ஒரு பயத்தையும், தவிர்க்க முடியாத குற்ற உணர்வையும் உருவாக்கிவிட்டது”
அவள் கூறிய காரணம் அதிர்ச்சியாக இருந்தாலும், அதற்குள் இதுவரை அடக்கப்பட்ட பாசத்தின் நெடுங்கனம் ஒன்று உருகிக் கொண்டிருப்பது அவளது கண்களில் தெரிந்தது.
மாமா மெதுவாக அவளது கைகளைப் பற்றினார் “தலைமுறை இடைவெளி இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால், அந்த இடைவெளிக்காக நீ உன்னைத் தண்டித்திருக்கக் கூடாது ரோகினி. நீயும் உன் அப்பாவும் பேச வேண்டிய பாசம் நிறையவே இருந்தது, ஆனால் நீ அதைத் தடுத்து விட்டாயே.”
அந்த வார்த்தைகள் ரோகினியின் உள்ளத்தில் தீயைப்போல் ஊர்ந்தன. அவளது கால்கள் தாங்கமுடியாமல் தள்ளாடின. தரையில் அமர்ந்தவாறு முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். வெளியில் மழை வானத்தைக் கிழித்துப் பொழிந்து கொண்டிருந்தது.
சில பாசங்கள் மழையாகப் பிறக்கின்றன போலும். ரோகினியின் உள்ளத்தில் புதைந்திருந்த பாசமும் கண்ணீராக வழிந்துகொண்டிருந்தது. பாசத்தின் வாசல் சில சமயங்களில் உயிரை எடுத்த பிறகு தான் திறக்கின்றது.
“இவ்வளவு நாளாக, இந்த வீடு என் பெயரைச் சொல்லிச் சொல்லி, நான் திரும்ப வருவேனா என்று காத்துக் கொண்டிருந்திருக்கும்” என்று கூறியவளது குரல் உடைந்திருந்தது.
“நான் செய்த மிகப்பெரிய தவறு மாமா இது, எனக்கான கர்மா, இதை நான்தான் அனுபவிக்க வேணும்.”
“அப்பா…உங்களோட கடைசி வார்த்தைகளை நான் கேட்க முடியாமல் போய்விட்டது, ஆனால் இப்போ, அந்த வார்த்தைகளுக்குப் பதிலாக, நானே ஒரு மன்னிப்பாக இந்த வீட்டில் தனியாக நிற்கிறேன். உங்களை விட்டுப் போன மகளாக இல்லை, அன்பைப் புரிந்துகொள்ள முடியாமல் சென்ற பொறுப்பற்ற பெண்ணாக நிற்கிறேன்……..என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ அப்பா…”
ஒரு மன்னிப்பு, மிகவும் தாமதமாக அங்கே அரங்கேறியது.
மழை மீண்டும் வேகமாகப் பொழிந்தது. அதில் ரோகினியின் கண்ணீரும், பொன்னையாவின் பாசமும் கலந்து நனைந்துகொண்டிருந்தன. பொன்னையா உயிரோடு இல்லையென்றாலும், அவளது உணர்வுகள்
உடைந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவர் வெளிப்பட்டார், மௌனமாக… ஆனால் முழுமையாக.
வாசலில் நின்று கொண்டிருந்த ரோகினிக்கு ஒரு உணர்வு திடீரென்று வந்து உள்ளத்தை நிரப்பியது.
“அப்பா, என்னிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை, தன் கடிதங்களிற்கான பதிலைக்கூட அவர் எதிர்பார்க்காமல்தான் எழுதிக் கொண்டிருந்தவர். எதையும் எதிர்பாராமல் அன்பு செய்வதுதானே பேரன்பு? நிச்சயமாக அப்பா எனக்காக இங்கேதான் காத்துக்கொண்டிருப்பார். நான் தன்னை மறந்துவிட்டேன் என்ற எண்ணம் அவருக்கு ஒருபோதும் வந்திருக்காது. நான் இப்போது…அவரைத்தேடி இங்கு வந்திருப்பதே அவருக்குப் போதும்.”
அந்தத் தருணத்தில் ஒரு உண்மை வெளிப்பட்டது…“மரணம் என்பது முடிவல்ல, பாசத்தின் மறுபக்கம்.”
தந்தையின் மறைவுக்குப் பின்பு, ரோகினியின் வாழ்க்கை மெல்ல மெல்ல மாற்றமடைந்தது. ஒவ்வொரு நாளும், வேலைக்குப் பின் வீடு திரும்பும்போதும், தனது தந்தையின் கடிதங்களை மீண்டும் மீண்டும் எடுத்து வாசிப்பாள். அதன்மூலம் கிடைக்கும் மங்காத உணர்வுகள் அவளை மென்மையாக மாற்றின. பாசம் கொடுப்பது அதன் பிரதிபலனுக்காக அல்ல, அதுதரும் தன்னலமற்ற உந்துசக்திக்காகவே இருக்க வேண்டும் என்பதை அவள் நன்றே கற்றுக்கொண்டாள். தந்தையின் பாசம் எப்படி இருந்ததோ, அதே பாசத்தை அவள் மற்றவர்களுடனும் இப்போது பகிர்ந்துகொள்கிறாள்.
அதன்பின்பு, தந்தையின் நினைவாக அவரது வீட்டில் ஒரு சிறிய பூங்காவை உருவாக்கினாள். அங்கிருந்த ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு பூவும், பாசத்தின் நினைவுகளாக நின்றன. அந்தப் பூங்காவில் இப்போது குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், பெரியவர்கள் சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மூலம் பாசத்தின் வாசனையும் அங்கே விரிந்து கொண்டிருக்கிறது.
“பாசம்” காலத்தால் அழிக்க முடியாத ஒன்று என்பதற்கான அழகிய நிரூபணமாக மாறியது ரோகினியின் வாழ்க்கை.