அப்பாச்சி இராயரை மீட்டுக்கொண்டு வந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 124 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாச்சாவானவன், அப்பாச்சி துணையாயிருக்கிறவரைக்கும் இராயரைச் சண்டை பண்ணி வெல்லக் கிட்டாது. ஆகையால் மோசம் செய்து வெல்லவேணுமென்று நினைத்து விலை உயர்ந்தவைகளாக ஆயிரம் குதிரைகளுடன் ஆயிரம் சேவுகர்களை ஆயுதங்கள் மறைத்துக்கொண்டு குதிரை விற்கிறவர்கள் போலே பொய்வேசம் செய்து இராயரைப் பிடித்துக் கொண்டுவரும்படி அனுப்பினான். அவர்கள் அந்தக் குதிரைகளைக் கொண்டுபோய், இராயர் பட்டணத்திற்குக் காதவழி தூரத்தில் இறங்கி, இராயருக்குச் சமாசாரம் அறிவித்தார்கள். 

இராயர், ஒருநாள் சாயங்காலம் சிலபேர் குதிரைப் பரீக்ஷைக்காரரை வீட்டுக்குக் கூட்டிவந்து குதிரைகளைப் பார்த்து, “இந்தக் குதிரைகள் என்ன விலை?” என்றார். 

“ஒவ்வொரு குதிரை(யும்) ஆயிரம் வராகன். எல்லாம் ஒரே மாதிரி நடையாகையால் ஒரு விலைதான். நீங்கள் பரீக்ஷை பண்ண வேண்டுமானால் ஒரு குதிரையின் மேலேறிக்கொண்டு சவாரி பண்ணுங்கள். மற்ற குதிரைகளையெல்லாம் அதற்குச் சரியாக விட்டுக்கொண்டு இருக்கிறோம் பாருங்கோள்” என்றார்கள். 

அப்படியே ஒரு குதிரையின் மேலேறிக் கொண்டு சவாரி விட்டார். மற்றக் குதிரைக்காரர்களெல்லாம் அவனவன் குதிரை மேலேறிக்கொண்டு நாலு நாழிகை வழி போனபின்பு இராயரை ஒரு பல்லக்குள்ளே எடுத்துப் போட்டுக்கொண்டு, பாச்சாவிடத்திற்குக் கொண்டுபோய்விட்டார்கள். 

அப்பாச்சி அதைக் கேள்விப்பட்டு ஒரு உபாயம் தனக்குள்ளே ஆலோசித்து அறிந்து பயித்தியக்காரனைப் போல வேஷம் போட்டுக்கொண்டு பாச்சாவின் பட்டணத்துக்குள்ளே போய், “நானே அப்பாச்சி எங்கள் இராயரை இட்டுக்கொண்டு பாச்சாவைப் பிடித்துக் கொண்டுபோக வந்திருக்கிறேன்” என்று எல்லோரும் கேட்கும்படியாகச் சொல்லி ஓகோவென்று கூவி எழும்பிக் குதித்துக் கொண்டு திரியத் தொடங்கினான். 

இப்படியே பாச்சாவின் சபைக்கு முன்னேயும் அவர் சவாரி போகிற இடங்களிலேயும் மந்திரி முதலானவர்கள் வீட்டுக்கு முன்னேயும் மற்றும் பலவிடங்களிலேயும் சொல்லிக்கொண்டு இருக்கையில், ஒருநாள் பாச்சாவானவன், இவன் உண்மையாகவே பயித்தியக்காரனோ அல்லது திருட்டு வேஷக்காரனோ? இதை அறிவிக்கவேண்டுமென்று சேவுகர் சிலரை, “இவன் எங்கே சாப்பிடுகிறான்? இவனை அறியாமல் இவன் பின்னே போய்ச் சோதித்து வாருங்கோள் என்று அனுப்பினான். 

வேஷக்காரன் இராத்திரிப் பத்து நாழிகைக்குமேல் பிச்சை எடுத்து அரிசியும் ஒரு பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு சுடுகாட்டுக்குப் போய் ஓரடுப்பு வைத்துப் பிணம் வேகுற கொள்ளியதாலே சோறாக்கிக் கொண்டிருக்கும்போது சேவுகர் வந்து இருக்கிறதோ எப்படியோ தெரிந்து அங்கேயும் அப்படியே கூவிச் சோற்றுப்பாத்திரத்தை உடைத்துவிட்டு ஓடிப் போனான். 

அச்சேவுகர் போய்ப் பாச்சாவுக்குத் தெரியப்படுத்திப் பயித்தியக்காரனென்றே நிச்சயித்துக்கொண்டான். பின்பு அப்பாச்சி ஒரு பெரிய கப்பலின் மேலே சில விலையுயர்ந்த ரெற்றினங்களை (இரத்தினம்) ஏற்றிக்கொண்டு விற்கிறதற்குக் கொண்டு வருகிறதுபோலக் கொண்டுவரும்படி எழுதியனுப்பினான். 

அப்படியே கப்பலில் கொண்டுவந்தவர்கள் சில இரத்தினங்களை எடுத்துக்கொண்டுபோய் பாச்சாவிடம் காண்பித்தார்கள். பாச்சா இரத்தினப் பரீக்ஷைக்காரரைக் கொண்டு மதித்த விலைக்கு அவர்கள் அதிகமாகச் சொல்லி, இப்படிப்பட்ட இரத்தினங்களை விலைமதிக்க இராயரொருத்தருக்கே தகுமேயல்லாமல் மற்றபேருக்குத் தகுமோ என்றார். 

அதை அப்பாச்சா கேட்டு, “உங்களிடத்திலின்னம் இருக்கின்ற இரத்தினங்களை எல்லாம் கொண்டுவாருங்கள்” என்றான். அதற்கு வர்த்தகர், நாங்கள் கொண்டு வந்திருக்கிறபடியால், நீங்களே அங்கு வந்தால் பார்த்து உங்களுக்கு வேண்டியவைகளை எடுத்துக் கொண்டுவரலாம்” என்றார்கள். 

“அப்படியே ஆகட்டும்” என்று பாச்சா இராயரையும் இன்னம் சிலர் தன் பரீட்சைக்காரரையும் இட்டுக்கொண்டு கப்பலுக்குப் போனார். பயித்தியக்காரனும் பாச்சாவின் பின்னே தன் வழக்கப்படி சொல்லிக்கொண்டு கூடப்போகக் கப்பலிலேறி அங்கேயும் அப்படியே கூவிக்கொண்டிருந்தான். 

அத்தருணத்தில் கப்பற்காரர்கள் நங்கூரத்தைத் தூக்கிப் பாயை விரித்துவிட்டார்கள். கப்பல் இராயரை சீமையில் வந்து சேர்த்தது. 

பாச்சாவை இராயர் அரண்மனைக்கு இட்டுக்கொண்டுபோய் வெகுமரியாதைகள் செய்து சிலநாள் வைத்துக்கொண்டு இருந்தார்கள். பாச்சா, தனக்குச் செய்த மோசத்தை அறிந்து, அப்பாச்சி புத்தியுக்திகளை மெச்சிக்கொண்டு இராயனப் பார்த்து, இனிமேல் உன் சோலிக்கு வருகிறதில்லை என்று உத்தரவு கொடுத்துவிட்டுப் போய்விட்டான். இராயர் அப்பாச்சியைத் தழுவிக்கொண்டு, “நீயே என் பங்குக்குத் தெய்வம்” என்று கொண்டாடினார். 

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

இராயர் அப்பாஜி கதைகள் பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை.  இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *