அபஸ்வரங்கள்





(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பருத்த உடம்பை வைத்துக்கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அலமேலு மாடிப்படிகளில் இறங்கி வருவதற்குள் இரண்டு மூன்றுமுறை அழைப்பு மணி வீறிட்டு விட்டது. கீழே ஹாலில் வந்து பீப்பிங் துவாரம் வழியாகப் பார்த்தபோது வேலைக்காரி வீரம்மா வந்து சொன்னது முழுக்க முழுக்க நிஜம்தான் என்று புலப்பட்டது.

வெளிக் கேட்டைத் திறந்துகொண்டு ஸிட் அவுட் ஸெட்டியில் யாரோ ஒரு முரடன் வந்து உரிமையோடு உட்கார்ந்திருக்கிறான். முகத்தில் தாடி மீசை. கையில் ஒரு கத்தி…
இவளுக்குத் திக்கென்றது. ஜன்னலின் ஒரு கதவை மட்டும் லேசாய்த் திறந்து ‘யாரு?’ என்று இவள் கேட்டபோது சப்தம் எங்கிருந்து வருகிறது என்று அறியாமல் அவன் அங்குமிங்கும் முகம் திரும்பிப் பார்ப்பது தெரிகிறது. கடைசியில் இவளைக் கண்டுகொண்டு எழுந்து ஜன்னல் அருகில் வருகிறான்.
‘அண்ணா இல்லையா?’
இவள் புரியாமல் விழிப்பதைப் பார்த்து, ‘அதுதான் ராமசாமி அண்ணா இல்லியா?’ என்று மிகவும் சகஜ பாவத்தோடு அவன் வினவினான்.
‘இல்லை… டூர் போயிருக்கார்… நீங்கள்….’
‘என்னைத் தெரியல்லியா? சொல்றேன். சித்தெ கதவைத் திறங்கோ…’
இவள் தயங்குவதைக் கண்ணுற்று, ‘என்ன பயமா இருக்கா? தைரியமாகக் கதவைத் திறக்கலாம்… நானும் உங்களவாதான்… அசல் வடமா கோத்திரம்…’ என்று சொல்லிச் சிரித்தவாறு சட்டைக்குள் கையை விட்டு அழுக்கடைந்து சாக்கு நூலைப் போல் இருந்த பூணூலை வெளியே இழுத்துக் காட்டினான்.
இப்போது இவளுக்கு ஒரு தைரியம் வந்தது. கண்ணில் இருந்த கண்ணாடியைச் சரி செய்துகொண்டே, பின்னால் பீதியோடு நிற்கும் வீரம்மாவிடம், ‘கதவைத் திற… ஆனால், அவன் போவது வரைக்கும் நீ என் பக்கத்திலேயே நிற்கணும்’ என்று ரகசியமாய்க் கட்டளையிட, ‘ஆகட்டும்’ என்று தலையாட்டி விட்டு அவள் பிளஷ்டோரைத் திறந்தாள். மத்தியான வெயிலின் ஒளி ஹாலுக்குள் ஓடி வந்து நிரம்பியது.
எப்போது வேண்டுமானாலும் பின் வாங்கிக்கொள்ளும் வசதியில் முன்னெச்சரிக்கையாய் வாசலில் நின்றுகொண்டு, ‘புரியலையே…’ என்று அவனைக் கூர்ந்து நோக்கியபடிச் சொன்னபோது, அவன் கடகடவென்று சிரித்தான். தேங்காய் மூடியைச் சிமெண்டு தரையில் தேய்ப்பதுபோல் ஒலித்த அந்தச் சிரிப்பில் ஊடாடி யிருந்த இன்னதென்று தெரியாத ஏதோ ஒரு த்வனி இவளை மேலும் பயமுறுத்தியது.
‘தெரியல்லியா? பாலக்காட்டில் திவான் பேஷ்காரா இருந்த பிச்சு ஐயரைத் தெரியாதா?”
‘கேள்விப்பட்டிருக்கிறேன்…’
‘அவரோட ரெண்டாவது பையன்தான் நான்… பெயர் சேஷன்…’
‘ஓகோ… அப்படியா… உட்காருங்கோ’ சற்று முன்வரை யாரும் சொல்லாமலேயே உட்கார்ந்திருந்த அதே ஸெட்டியில்போய் அவன் உட்கார்ந்து கொண்டான்.
அவன் கையில் இருந்த கத்தியிலேயே இவள் விழிகள் இருப்ப தைக் கண்டு, ‘ஓஹோ… இந்தக் கத்தியைப் பார்க்கிறேளா! சொல்றேன். முதலில் எனக்குக் கொஞ்சம் தீர்த்தம் கொண்டுவரச் சொல்லுங்கோ. தொண்டை என்னமா வறளுது…’ என்றான், இவள் தோளின் வழியாக வீரம்மாமீது பார்வையைச் செலுத்தியவாறு.
வீரம்மா இவளைப் பார்த்தாள். எங்கே அவள் தன்னை இங்கே இவனிடம் தனிமையில் விட்டுவிட்டு உள்ளே போய் விடுவாளோ என்று இவளுக்குப் பயமாய்ப் போய்விட்டது.
‘அதுக்கென்ன… கொண்டு வரேனே’ என்று அவசரப்பட்டுக் கொண்டு சொல்லிவிட்டு, திரும்பி வீரம்மாவிடம் அங்கேயே நிற்குமாறு சைகை காட்டி, இவள் உள்ளே விரைந்து சென்றாள். ஃபிரிட்ஜைத் திறந்து லெமன் ஜூஸை எடுத்துக்கொண்டு டீபாயில் வைத்ததும் தம்ளரைக் கையில் எடுத்து, ஸ்டாராவைத் தூக்கிக் கீழே போட்டுவிட்டு, மடமடவென்று ஒரே மூச்சில் அவன் குடித்தான். பிறகு, தம்ளரைக் கீழே வைத்துவிட்டு, ‘ராமையரை உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.
‘எந்த ராமையர்?’
‘அதுதான் உங்க ஆத்துக்காரர் ராமசாமியண்ணா ஆபீஸ் சூப்பிரண்டன்ட்…’
‘ஓகோ… அவரா… மதுரையிலிருந்து பெண் எடுத்திருக்கிறாரே…’ என்று இவள் இழுத்தபோது, ‘ஆமாமா சாட்சாத் அவனேதான்… அவன் ஆத்துக்காரியின் கூடப் பிறந்த தங்கையைத்தான் நானும் கட்டியிருக்கிறேன். முறைக்கு அவன் என் ஷட்டகர்…’ என்றான் அவன்.
‘என்ன…?’
‘ஆமா… ஆனா… இப்போ அவள் என்கூட இல்லை. இந்த ராமையரும் இன்னும் ஏழெட்டுப் பிராமண ரவுடிகளுமா என் ஆத்துக்கு வந்து, வயிறும் பிள்ளையுமா இருந்த என் ராஜியைத் தூக்கிக் காரில் போட்டுக் கடத்திக்கிட்டு போயிட்டாங்க…’
‘அட ராமா…’
‘ஆமா… இப்போ சண்டாளங்க அவளை எங்கேயோ ஒளிச்சு வச்சிருக்காங்க.’
‘என் பிள்ளையையும், பெண்ணையும்கூட என் கண்ணில் காட்டுவதில்லை… அதுதான் நான் இப்படிக் கத்தியும் கையுமா நடந்துண்டிருக்கேன்… வாகா, வசதியா என் கையில் சிக்கட்டும். அந்த ராமையரின் கழுத்தைச் சீவிப் போடுவேன் சீவி.’
அவன் முகத்தில் விழிகளில் எரிந்த வெறியும், கையிலிருந்து ஆடிய கத்தியும் இவளைத் திகிலடைய வைத்தன.
‘சே… சே… அதெல்லாம் மகா பாபமல்லவா… பிரம்மஹத்தி… ராமையருக்கும் பிள்ளை குட்டிகள் இல்லையா? கல்யாண பிராயத்தில்கூட ஒரு பெண் இருக்கிறாளே…’
‘பிறகென்னவாம்! அவனுக மட்டும் இப்படியெல்லாம் நடந்துக்கலாமா? நீங்க பெரியவங்களா இது சம்பந்தமாகப் பேசி, மரியாதைக்கு என் ஆத்துக்காரியை எங்கிட்டே கொண்டு விட ஏற்பாடு பண்ணினா நான் ஏத்துக்குறேன்… ஆமா…’
‘சரி… சரி… எதுக்கும் அவர் ஊரில் இல்லை… வரட்டும் ராமையர் கிட்டெ இது சம்பந்தமா பேசிப் பார்க்கிறோம்…’
அவன் மேலும் என்னவெல்லாமோ வளவளவென்று பேசத் தொடங்கினான். அவனை எப்படிப் போகச்செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் இவள்.
திடீரென்று ‘மணி என்னாச்சு?’ என்று கேட்டான் அவன்.
சுவர் கடிகாரத்தை எட்டிப் பார்த்துவிட்டு ‘மூணரையாச்சு…’ என்றாள் இவள்.
‘பார்த்தேளா… உங்ககிட்டெ பேசிக்கிட்டு இருந்ததில் சாப்பாடு கூட மறந்து போச்சு… இனி லாட்ஜில் சாப்பாடு வச்சிருக்கி றானோ, என்னமோ…’ என்று அவன் மெல்ல இழுத்தபோது, இவளுக்கு என்னவோ மாதிரி இருந்தது. இவள் வீரம்மாவைப் பார்த்தாள்.
‘சாதமெல்லாம் ஆறிக் குளிர்ந்து போயிருக்கும்…’ என்று அவள் அலமேலு மட்டும் கேட்கச் சொன்னதற்கு ‘அதுக்கென்ன என் வாழ்க்கையே இப்படி சூடு சொரணை இல்லாமல் ஆயாச்சு…’ என்றவாறு எழுந்தான் சேஷன்.
உள்ளே அவனைக் கூப்பிடவும் அச்சமாக இருந்தது. ஆனால், அவன் எந்தத் தயக்கமும் இன்றி ‘பாத்ரூம் எங்கே இருக்கு? கை காலை அலம்பிக்கிறேன்…’ என்றபோது வேறு வழியில்லாமல், பாத்ரூமைக் காட்ட வேண்டிவந்தது. அவன் உரிமையாடு உள்ளே நுழைந்தான்.
ஒரு விதத்தில் அவனுக்குச் சாப்பாடு போட்டு வெளியில் போகச் செய்து, கதவைச் சாத்தித் தாழைப் போட்டு விட்டு, முதல் வேலையாக இவள் டெலிபோனில் ராமையரைக் கூப்பிட்டு, சேஷன் வந்திருந்த விவரத்தைத் தெரிவித்தாள்.
‘அடப்பாவி… அங்கேயும் வந்துட்டானா? அவனுக்கு இதே வேலையாப் போயிட்டுது… உங்க ஆத்துக்காரருக்கு எல்லாம் தெரியும். நான் சொல்லியிருக்கிறேன்…’
‘கையில் கத்தி வேறு வச்சிண்டிருக்கிறானே…’
போனில் இப்போது சிரிப்பொலி…
‘ஆமா… என்னைக் குத்தப் போறானாம்… நேற்றைக்குக் காலம்பர என் அகத்தில் வந்து, ‘என் ஆத்துக்காரியைத் திரும்பத் தர்றியா, குத்திக் குடலை எடுக்கட்டுமா’ன்னு சத்தம் போட்டான். அவனோட ஆத்துக்காரி என் பையிலா இருக்கிறாள்; இவன் கேட்டவுடன் எடுத்துக் கொடுக்க! கொஞ்ச நேரம் சகித்துப் பார்த்தேன். அவன் போகிற லட்சணம் இல்லை… வழக்கம் போல் கன்னத்தில் ரெண்டு கொடுத்த பிறகு பேசாமல் போனான். அவன் வியாதிக்கு இதுதானே மருந்து.’
‘என்னா …?’
‘ஆமா இப்போ புரிஞ்சிருக்குமே… அவனுக்கு மூளை சரியில்லே…’
‘அப்படீன்னா மெண்டல் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணாமல் அவனை எதுக்கு இப்படித் திறந்து விட்டிருக்கிறாங்க?’
‘அங்கேதான் கிடந்தான். எவ்வளவு நாளாகத்தான் அங்கே வச்சிண்டிருப்பாங்க? இது ‘ஹோப்லஸ் கேஸுன்னு டாக்டர்கள் எல்லோரும் கை விட்டுட்டாங்க… அடிக்கடி இப்படி வெளியில் வரும்போது எல்லோருக்கும் பெரிய உபத்திரவமா இருக்கு.’
‘கல்யாணத்துக்கு முன்னமே இப்படித்தானா?’
‘ஆமாம். சின்ன வயசிலிருந்தே அவனுக்கு இந்தக் கோளாறு உண்டாம். ’ ‘பிறகெப்படி இவனை மாப்பிள்ளையாக்கினீங்க?’
‘உம்… அதொண்ணும் சொல்ல வேண்டாம். பெரிய கதை… நம்ம தலை விதின்னுதான் சொல்லணும்… அவன் அண்ணா சாமிநாதன் என் கிளாஸ்மேட், எர்ணாகுளத்தில் வேலையா இருக்கிறப்போ அவன் திடீரென்று ஒருநாள் வந்து இது பற்றிப் பேசினான்…’
‘டேய்… உன் ஆத்துக்காரியின் தங்கையை என் தம்பிக்குப் பார்ப்போமா?’… அப்டின்னு கேட்டான். பையன் கிராஜுவேட், பி.டபிள்யு.டி.யில் நல்ல வேலை. இவ்வளவுதான் தெரியும். இப்படிச் சிநேகத் துரோகம் செய்வான்னு எனக்கு எப்படித் தெரியும்? மேற்கொண்டு யாரிடமும் ஆலோசிக்கவில்லை. என் மாமியாருக்கு மாமனார் தவறிப் போனார். மதுரைக்குக் கடிதம் எழுதினேன்… மளமளவென்று காரியங்கள் நடந்தன. கல்யாணம் முடிஞ்சுட்டது.’
‘இவன் இப்படீன்னு எப்படித் தெரிஞ்சுது?’
‘சேஷனுக்கு அப்போ கோழிகோட்டில் வேலை. புருஷனும் பெண்டாட்டியும் அங்கே புதுக் குடித்தனம் போட்டு நாலாம் மாசத்தில் மதுரையில் என் மாமியாரிடமிருந்து எனக்கு லெட்டர் வந்தது… ‘ராஜியை புருஷன் ரொம்ப கஷ்டப்படுத்துகிறானாம்… அதோடு இப்போ முழுகாமல் வேறு இருக்கிறாளாம். அவா அடுத்தாத்து ரெஜிஸ்ட்ரார் பகவதீஸ்வரய்யர் ஆத்துக்காரி லக்ஷ்மி மாமாகிட்டே இருந்து கடிதம் வந்திருக்குது; போய் விசாரிக் கணும்’ அப்படின்னு. நான் கோழிக்கோட்டுக்குப் போவதற் கிடை யில் அவன் ராஜியை எங்கோ கடத்தி விட்டான். என்னைக் கண்டதும் தாறுமாறாத் திட்டினான். ‘அவ என் பெண்டாட்டி… நீ யாரு…? உனக்கும் அவளுக்கும்…?’ அப்படி இப்படின்னு அசிங்கமா எல்லாம் பேத்தத் தொடங்கிட்டான். அக்கம் பக்கத்தில் விசாரிச்சதில் கேள்விப்பட்டது நிஜம்தான்னு தெரிஞ்சுது.’
‘என்ன காரணமாம்?’
‘இந்த மாதிரி மூளைக் கோளாறு உள்ளவங்களுக்கு இதுக்குன்னு தனியா காரணம் வேறு ஏதாவது வேணுமா? வீட்டில் புருஷனைத் தேடி ஏதாவது ஆண் பிள்ளைகள் வந்தால் அவுங்ககிட்டெ பேசினால் சந்தேகம்… துணி வெளுக்கிற டோபிகிட்டே பேசினா அதுவும் சந்தேகம். ஏதாவது ஆண் பிள்ளைகள் போகிற திசையில் திரும்பிப் பார்த்தால், அவனை நேரமே தெரியுமான்னு அடி உதை…’
‘ராஜியை எங்கே கடத்தியிருந்தானாம்?’
‘எங்கெல்லாமோ கூட்டிக்கிட்டுப் போயிருக்கிறான். கடைசி யில், பாலக்காட்டில் அவனோட பூர்வீக வீட்டில் இருப்பதாகச் செய்தி கிடைச்சுது. எல்லா விவரமும் தெரிவிச்சு நான் மதுரைக் குக் கடிதம் எழுதினேன். என் மாமியார் உடனேயே புறப்பட்டு இங்கே வந்தார். எல்லோருமா கூடி ஆலோசிச்சோம்…’
‘பாலக்காட்டில் போய்த்தான் ராஜியைக் கூட்டிக்கிட்டு வந்தீங்களா?’
ஆமா நம்மவங்களில் நல்ல ஆரோக்கியமுள்ள வாட்ட சாட்டமான ஏழெட்டு தடியன்களையும் கூட கூட்டிக்கிட்டு ரெண்டு டாக்ஸியில் டாக்ஸி டிரைவர்களிடமும் விஷயமெல் லாம் சொல்லி வச்சிருந்தோம். பாலக்காட்டுக்குப் போனோம். பொம்மனாட்டியா என் ஆத்துக்காரியை மட்டுமே கூட்டிக்கிட்டுப் போயிருந்தேன். ஒரு காரை பஸ் ஸ்டாண்டுப் பக்கமா ஒதுக்கிப் போட்டுவிட்டு, முதலில் நாங்க நாலைஞ்சு பேர்கள் அவுங்க அகத்துக்குள் ஏறிப் போனோம்… எங்களைக் கண்ட உடனேயே கொஞ்சம் மரியாதை இல்லாமல் அவுங்க தோப்பனார், மகன், அம்மா, எல்லோருமா தாறுமாறா ஏசினாங்க. அவ என் பெண்டாட்டி பார்க்க முடியாது… கெட் அவுட்…’ அப்படீன்னு சத்தம் போட்டான் சேஷன். ‘கர்ப்பமா இருக்கிற பெண் இப்போ பிறந்தகத்தில் இருப்பதுதான் முறை’ என்று பேசத்தொடங்கிய என்னை முழுதும் பேச விடவில்லை அவன்.
‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்; மைன்ட் யுவர் பிஸினஸ்…’ என்று கத்தினான். இனியும் தாமதிப்பது சரியல்ல என்று நானும் குரலைக் கொஞ்சம் உயர்த்தியே சொன்னேன். ‘நீங்க இப்படிச் சொல்லி விட்டா நாங்க இறங்கிப் போய்விடப் போவதில்லை. எதுக்கும் துணிஞ்சு தான் நாங்க இப்போ இங்கே வந்திருக்கிறோம்… இப்போ ராஜியை எங்களுக்குக் காட்டாட்டி இங்கே கொலை விழும்.’ …என் கூட வந்திருந்தவங்களும் எழுந்திருந்து நின்னாங்க… கடைசியில் வேறு வழியில்லாமல் ராஜியை உள்ளேபோய்க் கூட்டிக்கிட்டு வந்தான். ஆள் அடையாளம் தெரியாமல் இளைச்சுத் துரும்பாகி விட்டிருந்தாள். ஒரு வார்த்தைகூட வாய் திறந்து எங்களிடம் அவளால் பேச முடியவில்லை… மாலை மாலையாய்க் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். முன் திட்டப் படி நானும் மற்ற ஆண் பிள்ளைகளும் சேஷனையும் அவன் அப்பா அம்மாவையும் தடுத்துக்கிட்டு நிற்க, நொடிப் பொழுதில் என் ஆத்துக்காரி ராஜியின் கையைப் பிடித்திழுத்துக்கொண்டு வெளியில் ஓடி, தயாராக நின்ற காரில் ஏற, கார் பறந்து சென்று மறைந்தது. நாங்க எல்லோரும் கொஞ்ச நேரம்கூட அங்கேயே நின்று, அவங்களிடம் அவங்க வேகத்திலேயே காரசாரமாய்ப் பேசி விட்டுக் கைகலப்பு நடக்கும் கட்டம் வரை வந்தது. நடக்கவில்லை அவ்வளவுதான். பஸ் ஸ்டாண்டில் வந்து காரில் ஏறி இங்கே வந்து விட்டோம்… பிறகு பத்திரமா அவ அம்மாகூட மதுரைக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தோம்…’
‘பிரசவம் அங்கேதான் நடந்ததா?’
‘ஆமாம்… மதுரையில் நடந்தது. ட்வின்ஸ் இரட்டைக் குழந்தைங்க… ஒரு ஆண், ஒரு பெண்…’
‘இப்போ குழந்தைகள், ராஜி எல்லாம் எங்கே இருக்கிறாங்க?’
‘ராஜி ஸ்டேட்ஸில்… குழந்தைகளுக்கு இப்போ எட்டு வயசிருக்கும். போர்டிங் ஸ்கூலில் படிச்சுக்கிட்டிருக்கிறாங்க. அடுத்த வருஷம் வரும்போது குழந்தைகளையும் கூட்டிக்கிட்டுப் போய்விடுவாள்.’
‘என்ன?’
‘ஆமாம்… ஏற்கெனவே அவ பி.எஸ்.ஸி. பாஸாகியிருந்தாள். பிரசவம் கழிந்த பிறகு, பங்களூரில் எம்.எஸ்.ஸி.க்குச் சேர்ந்து படித்தாள். அங்கே ஹாஸ்டலிலும் அடிக்கடி சேஷன்போய் தொந்தரவு செய்தான். ஆனால், வார்டனுக்கும் மற்றவங்களுக் கும் எல்லாக் கதையும் தெரியுமாதலால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பங்களூரில் அவள் புரொபஸரின் ஏற்பாட்டில்தான் அமெரிக்காவில் ஒரு வேலையும் கிடைச்ச போது அங்கே போய்ச் சேர்ந்து விட்டாள். இப்போது இவன் அடிக்கடி, இப்படி வந்து எங்களைத் தொந்தரவு செஞ்சுக்கிட்டிருக்கிறான். அவன் நினைப்பு இங்கே எங்கோ அவளை நாங்க பூட்டி வச்சிருக்கிறோமுன்னு! உங்களைப்போல் என்னைத் தெரிஞ்ச எனக்கு வேண்டிய அகங்களில் எல்லாம் போய், இப்படித் தொந்தரவு வேறு செய்துகொண்டிருக்கிறான். இனி அங்கே வந்தால் தப்பித் தவறிக்கூட அவனுக்கு இரக்கம் காட்டி காப்பி, சாப்பாடு, அது இது ஒண்ணும் கொடுத்தி டாதீங்க… உடனடி போலீஸைக் கூப்பிட்டுப் பலமா ரெண்டு கொடுக்கச் சொல்லுங்கோ… அதுதான் அவனுக்கு வேணும்… பிறகு அந்தப் பக்கம் வரமாட்டான்.’
– 08.08.1974 – சுதேசமித்திரன், 11/1974.
– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.
![]() |
நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ…மேலும் படிக்க... |