அனுமதி
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் தொண்ணூற்றெட்டில் அந்த மோட்டார் சைக்கிளை வாங்கினான். றீகொண்டிசன்ட். ஹொண்டா சி50. கொஞ்சம் புதிசு மாதிரி. அவனுக்குப் புதிசா எதையும் வைத்திருக்க ராசி இல்லை. அவனுடைய சைக்கிள் கூடப் பழசுதான். றலி. எழுபதில், நூற்றிநாப்பது ரூபாவுக்கு வாங்கியது. இப்போதும் அதை வைத்திருப்பதிலும் பராமரிப்பதிலும்அவனுக்கு ஒரு திருப்தி இருந்தது.
மோட்டார் சைக்கிள் வாங்கியதிலிருந்து அவனது சைக்கிள் ஓட்டம் குறைந்துவிட்டது. அதனால் அவனுக்கு லேசான தொந்தி. நடப்பதிலும் சிரமம் இருந்தது. மூச்சுவாங்கியது. ‘தொந்தி கரைய டற்பயிற்சி வேணும்.. சைக்கிள் ஓடலாம்… சிவராசா புத்திமதி கூறினான்.
சிவராசாவின் ஆலோசனைகளுக்கு முன்னதாகவே, சைக்கிளை அவன் அதிகம் பயன்படுத்த வேண்டிவந்துவிட்டது. மோட்டார் சைக்கிளுடன் வீதியில் இறங்கப் பயமாக இருந்தது. வீதிப் பழக்க வழக்கம் தாறு மாறாக இருந்ததொரு காரணம். இன்னொரு காரணம் காக்கிச் சட்டைக்காரர்களின் கெடுபிடி. பொலிஸார் பல விஷங்களில் பல் உடைபட்டாலும் ஒரு விஷயத்தில் மட்டும் உசாராயிருந்தார்கள். அது வாகன அனுமதிப்பத்திரப்பரிசோதனை. வீதி முனைகளிலும் முடக்குகளிலும் திடீரெனத் தோன்றி, வளைத்துப்போட்டு, ஹிம்சை செய்தார்கள். ‘சப்போர்ட்… சப்போர்ட்…’ என்று கூவினார்கள். அந்தக் கூவுகை சிலருக்குப் புரிந்தது; பலருக்குப் புரியவில்லை. புரிந்தவர்கள் ஒரு மஞ்சள் நோட்டை, காவலர்களின் கையில் ஒரு ரகசியப் பேணுகையுடன் பொதித்துவிட்டுத் தப்பித்துக் கொண்டார்கள். புரியாதவர்கள், காவல் நிலையத்துக்கும் தபாலகத்துக்கும் தண்டப்பணத்துடன் அலைந்து திரிந்தார்கள்.
‘இப்படிப்பட்ட வல்லமை எனக்கு இருக்கிறதா…
‘அனுமதிப்பத்திரம் இல்லாமல் சில நாளாவது சமாளிக்க முடியுமா?’
அவனுக்கு மலைப்பாக இருந்தது.
இந்த ஐந்து வருஷகாலமாக, அவனது வாகனம் பாதசாரிகளையோ, வாகனங்களையோ லேசாக முகரப்பார்த்த போதும் – அழுத்தமாக முத்தமிடவில்லை. இதுக்கெல்லாம் அவனது நிதானமும் வேகம் குறைந்த ஒட்டமுமே காரணமாய் இருந்தன. என்ன இருந்தென்ன, வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் வீதியில் இறங்க முடியாத நிலை. அவனிடம் ராக்ஸ், இன்சூரன்ஸ், வாகனப் பதிவுப் பத்திரம் எல்லாம் இருந்தன. இவை எல்லாம் பொலிஸாரை மசியவைக்கா தென்பது இவனுக்குத் தெரிந்திருந்தது.
அனுமதிப்பத்திரம் இல்லாது அவன் பொலிஸாருடன் கண்ணாமூச்சி விளையாடினான். அப்படியான பல சந்தர்ப்பங்கள் அவனது ஞாபகத்தில் இருந்தன. அவனது இரண்டு கண்களுமே பொட்டைக்கண்கள். கண்களில் புரைவளர்ந்து, சத்திர சிகிச்சைக்கு உட்பட்டவனவன். இருந்தும், எவ்வளவு தூரத்தில் வைத்தும் அவனால் காக்கிச்சட்டைகளை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. பொலிஸாரைக் கண்டமாத்திரத்தில், சைக்கிளைப் பூட்டிவைத்துவிட்டு எவ்வளவு தூரமானாலும் நடந்து சென்று, தனது கருமத்தை முடித்துத் திரும்புவான். சைக்கிளை எப்பொழுதும் தனது கண்பார்வைப் புலத்தினுள்ளேயே வைத்திருக்க விரும்புவான். இப்படித் தூரப்படுதல் அவனுக்குப் பல சந்தேகங்களைக் கிளர்த்திவிடும். ‘சைக்கிள் களவு போய்விட்டால் என்ன செய்வது…’ பதட்டப்படும் அவன், போன காரியத்தை அரைகுறையாக முடித்துக்கொண்டு, சைக்கிள் இருக்குமிடம் திரும்பிவிடுவான்.
மோட்டார் சைக்கிள் வாங்கிய ஆரம்பநாட்களில் ‘எல்’ போர்ட் போட்டு ஓடியது. ஞாபகம் வர; அவன் புதிதாக ஒரு ‘எல்’ போர்ட்டைத் தயார்செய்து, சைக்கிளில் மாட்டிப்பார்த்தான். கொஞ்சம் அநுகூலம் இருந்தபோதும் அவனுக்கு அது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. ‘எல்’ போர்ட்டைக் கழட்டி, தூரவீசிவிட்டு, ஓடத்தொடங்கினான். ஒரு சமயம், எதிரும் புதிருமாக, பொலிஸைச் சந்திக்க நேர்ந்துவிட்டது. பதட்டப்பட்ட இவன் பாதசாரி ஒருவரின் இடதுகாலை இடிப்பதுபோல மோட்டார் சைக்கிளை நிறுத்தவேண்டி வந்துவிட்டது. நிறுத்தியவன், இறங்கி மோட்டார் சைக்கிளை உருட்டியபடி நடந்துசென்றான். பொலிஸ் அவனைக் கண்டு கொள்ளவில்லை. கடவுள் என்ற கருத்துருவத்தில் அதிக நம்பிக்கை இல்லாதவனாக அவன் இருந்தபோதும் கடவுள்தான் அன்று தன்னைக் காப்பாற்றியதாக இன்றுவரை அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்.
பாடசாலை முடிந்த கையுடன், மாலை ரியூசன் வகுப்புக்குப் போய், மாணவர்களிடம் மல்லுக்கட்டி விட்டு, வீடுவந்தபோது மனைவி பல வேலைகளை, ஒன்றன் பின் ஒன்றாக இவனுக்கு ஏவினாள். சிவப்பிரகாசம் பத்தரிடம் போய் ‘எஸ்’ போடக்கொடுத்த அவளது சங்கிலியை வாங்கி வரும்படி கூறினாள். அது முடிந்த கையுடன், ‘அப்பன் முன்பக்கத்துப் பூக்கண்டுகளுக்கு கொஞ்சம் தண்ணிவிடுங்க.. என்றாள். செடிகளுக்கு நீர்வார்த்ததும், சுடச்சுடப் பசுப்பால் கோப்பி தந்தாள். கோப்பி குடித்ததும் அலுப்புச் சற்றுத் தளர்ந்தது போலிருந்தது.
பிரம்புக்கதிரையை இழுத்துப்போட்டுக்கொண்டு, ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்துடன் உட்கார்ந்தான். பக்கங்களுள் நுழைய முடியாத சோர்வும் சோம்பலும் கண்களைச் சுழட்ட, கதிரையில் இருந்தபடி, தூங்கி வழிந்தான். ரீ.வியில் செய்தி பார்க்கும் அக்கறையும் அவனுக்கு அன்று ஏனோ இல்லாமல் இருந்தது.
குளிர்ந்த கைகள் அவனைத் தீண்டின. விழித்துக் கொண்டான். ‘சாப்பிடவாருங்க…’ செல்விதான் அழைத்தாள். அவளது கண் மலர்களிலும் ஈரமான உதடுகளிலும் முத்தமிட மனசு மறுகியது. ‘இந்தக் கூத்து இப்போதைக்கு வேண்டாம்.’ எனும் நினைப்பு உடன்வர அவளைப் பின் தொடர்ந்தான்.
சாப்பாட்டு மேசையில் ஆவிபறந்தபடிக்கு அரிசி மாப்பிட்டும் முட்டைப்பொரியலும் அவற்றுடன் ஒரு சிறு கண்ணாடிக் குவளையில் ஒரு அவுன்ஸ் அளவிலான ஸ்கொச் விஸ்கி. அவன் அதிகம் களைப்படைந்திருந்தால் அவள் இப்படி உபசரிப்பாள்.
விஸ்கியை லபக்கென ஒரு மிடறில் விழுங்கியவன், பிட்டைப் பொரியலுடன் சேர்த்துச் சாப்பிட்டான். இஞ்சி சேர்த்தரைத்த பச்சை மிளகாய் சம்பலையும் தொட்டுக் கொண்டான். எல்லாமே வாய்க்கு இதமாகவும் ருசியாகவும் இருந்தது. அதிக அளவு சாப்பிட்ட உணர்வுடன் எழுந்து, கையை அலம்பிக் கொண்டான்.
பெட்ரூமுக்குச் சென்றவனைத் தொடர்ந்தவள், கட்டிலைத் தட்டி, சீற்றை விரித்துவிட்டாள். ஏறிப்படுத்தவன் அவளை அணைத்து, அவளது கண்களில் ஆழ்ந்து முத்தமிட்டான். உதடுகளுடன் உதடுகள் பொருந்தியபோது மெதுவாக இவனைத் தள்ளியபடி கூறினாள்:
“எட்டடிச்சுப் பழகுங்களப்பா… லைசன்ஸ் எடுக்காமல் மோட்டார் சைக்கிளோடை றோட்டிலை இறங்கேலாது… ஆத்திரம் அவசரத்துக்கு நீங்க பொலிஸுக்குப் பயந்து.. பயந்து ஓடிறது எனக்குச் சரியான எரிச்சலாய் இருக்கு…”
பட்டென எல்லாமே இறுகி உறைந்து போனதான உணர்வு அவனுக்கு அந்த மார்கழி மாதக்குளிரிலும் அவனுக்கு வேர்த்தது. அவனது கையாலாகாத் தனத்தை அவள் இடித்துக் காட்டுகிறாளா? அவளுடன் அப்படி என்ன ‘அந்த இது’ வேண்டிக்கிடக்கிறது! காயப்பட்ட நானின் உளைச்சலுடன் அவன் திரும்பிப்படுத்துக் கொண்டான்.
“கோவமா…? அடுப்படிவேலை முடியேல்லை… கொஞ்சம் பொறுங்க ராசன்…”
குழைந்தவள், அவனது நெற்றியில் முத்தமிட்டபடி விலகிப்போனாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் இடையில் விழித்துக் கொண்டான். செல்வி எப்பொழுது வந்து படுத்தாள்? அவளது வலது கரம் இவனது மார்பில் படர்ந்து கிடந்தது. அவளைக் குழப்பாது கையை எடுத்துக் கட்டிலில் வைத்தவன், எழுந்து உட்கார்ந்து கொண்டான். அவளது குழந்தைத்தனமான உறக்கத்தை ஒருகணநேரம் ரசிப்புடன் பார்த்தவன், மீளவும் படுத்துக் கொண்டான். அரைகுறைத் தூக்கத்தில் உழன்ற அவனுக்கு அந்தக் கனவு வந்தது.
நல்லூர் கந்தசாமி கோவில் மேற்குவீதி. அதை, அரசடி வீதி தொடும் சந்தி. இளங்காலை. பனி சுமந்த ஈரமும் குளிரும். இவன் மோட்டார் சைக்கிளில் அல்ல சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். இவனுக்கு முன்பாக யமகிங்கரர்போல இருவர். கறுத்த உருவம், கொம்புகளும் அவர்களுக்கு இருந்தன. அண்டா அளவு முழிசல் கண்கள். அவை சிவந்து கிடந்தன. தொந்தியை மேலும்கீழுமாகத் தடவியபடி நின்றார்கள். அவர்கள் பக்கமாக ஒரு பழைய மோட்டார் சைக்கிள். அது அவர்களுடையதுதான். கோவணதாரிகளான அவர்களது கோவணத் துண்டைப் பார்த்தான். அது காக்கி நிறத்தில் இருந்தது. அவர்கள் இவனுக்குப் புரியாத அந்நிய பாஷை பேசினார்கள். அவர்கள் பேசியபோது, நிணவாடையுடன் இரத்தவெடிலும் அடித்தது. அந்த வெடில் இவனது மூக்கில் முட்டிமோதியது. அதிர்ந்த அவன் – பொய்மூக்கு உடைந்து, இரத்தம் கசிவதை உணர்ந்தான். அவனுக்குச் சட்டென எல்லாமே வெளிச்சமாகியது.
அவர்கள் பொலிஸ்காரர்கள்!
லேசாகத் திரும்பியவன், அரசடி வீதியில், அதிவேகமாக வந்த பல்ஸரைக் கண்டான். அதில் ஒரு இளசு மிதந்தது. சிவன்கோவிலை நெருங்கிய அந்த இளசு, பொலிஸாரைக் கவனங்கொண்டிருக்க வேண்டும். சடாரென வட்டமடித்து, வந்த திசைக்கு எதிர்த்திசையில் அது பாய்ந்தது.
‘அந்த இளசும் என்னைப் போலத்தானா…? அதனிடமும் லைசன்ஸ் இல்லையா..?’
இவனுள் இழையும் நினைவுகள்.
உசாரான பொலிஸார், மாறி மாறி விசிலடித்தார்கள். பல்ஸரின் பதிவெண்ணைப் பார்த்து எழுத முயற்சித்தார்கள். எதுவுமே பலிதமாகவில்லை. ஒரு பொலிஸ்காரன் அங்கு பக்கத்தில் நின்ற, மோட்டார் சைக்கிளை இயக்க முயற்சித்தான். அவனது நோக்கம் இவனுக்குப் புரிந்தது. பல்ஸரைத் தொடர்ந்து சென்று, அந்த இளசை மடக்க விரும்புகிறான் போலும். அவனது மோட்டார் சைக்கிள் இயங்க மறுத்தது. மக்கர் செய்தது. காபரேட்டருடன் இணைத்திருந்த ரப்பர் குழாயை மற்றக் காக்கி தம்பிடித்து ஊதியது. பதகளிப்பில் அதன் கோவணம் அவிழ்ந்து தொங்கியது. சுதாரித்துக் கொண்ட அது, கோவணத் துண்டைச் சரிசெய்து கொண்டது. மண்ணெண்ணெயில் இயங்கும் சைக்கிள் போலும்; ‘பொக்… பொக்… என ஓசை எழுப்பிய வாகில் அது மூச்சுப் பாறி நின்றது. அப்பொழுது பல்ஸரில் வந்தவன் காற்றில் கரைந்த மாயம் நடந்தது.
இவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.
இவனது பக்கமாகப் புரண்டுபடுத்த செல்வி, இவனை அணைத்தபடி கேட்டாள்:
“என்னப்பா வயிறு குலுங்கிற சிரிப்பா இருக்கு… கனவுகினவு கண்டனியளே…?”
“கனவுதான்…!”
அவனது குரலில் லேசான பதகளிப்பு.
அவன் கனவுகண்டால் அதிகமாக அது பலித்துவிடுவதுண்டு. ஒருசமயம் அவன் கண்ட கனவு வித்தியாசமானது.
ஊர் முத்துமாரி அம்மன், தண்டிகையில் அலங்கார பூசிதையாய் வீதி உலா வருகின்றாள். திடீரென அம்மன் முகம் அழிய இவனது அம்மாவே தண்டிகையில் வருவது போலிருந்தது. அம்மா இறந்த செய்தி காலையில் கிடைத்தபோது இவன் அதிர்ந்துபோனான்.
அந்த ஞாபக இழை அவனுக்குப் பயந்தருவதாய் இருந்தது. ‘நனவிலி மனதின் ஆழத்தில், புதைந்துகிடந்த மோட்டார் சைக்கிள் பற்றிய எண்ணங்களின் சடைவுதான் கட்டவிழ்ந்து இப்படிக்கனவாக விரிகிறதோ…?”
மனதில் லேசான பதட்ட உணர்வு படர, சில தீர்மானங்களை அவன் எடுத்துக் கொண்டான்:
‘காலையில் எக்காரணம் கொண்டும் மோட்டார் சைக்கிளை எடுப்பதில்லை… அப்படி எடுத்தாலும்… பொலிஸ் ரோந்து இல்லாத பகுதியாகப் பார்த்து ஓடவேணும்…’
பல யோசனைகளின் அடைசலால் அலைப்புண்ட அவன், நித்திரை இல்லாது உழன்றான்,
செல்வியின் ஆழ்ந்த நித்திரை அவனுக்கு எரிச்சலூட்டுவதாய் இருந்தது. அடுத்த கணம். ‘பாவம் அவள்… தூங்கட்டும்… பாடசாலை, வீடு என்று அடித்துக் கொடுத்து உடைந்து போய்விட்டாள்’ என நினைத்துக் கொள்ளவும் செய்தான்.
காலையில் எழுந்ததும் செல்வி குழைந்தபடி கூறினாள்:
“பாங்குக்குப் போகவேணுமப்பா..!
“பாங்குக்கா…? இண்டைக்குச் சனிக்கிழமை..”
“சனிக்கிழமையிலும் இப்ப வேலை செய்யினம்…”
காலை, சாப்பிட்டானதும் இலங்கை வங்கி, பிரதான கிளைக்குப் புறப்பட்டார்கள்; அங்குதான் அவர்களது நடைமுறைக்கணக்கு இருந்தது.
வங்கிக்குப் போவதற்கு கோவில் வீதி, கொஞ்சம் நாவலர் வீதி, ராசாவின் தோட்டம், ஆஸ்பத்திரி வீதி என எடுப்பது, பொலிஸ் தொந்தரவு இல்லாத பாதுகாப்பான பாதை என்பதுடன், மிகவும் அநுகூலமானதாகவும் அவனுக்குத் தோன்றியது.
அன்று காலையும் அப்படியே அவன் கோவில் வீதியால் வந்து, நாவலர் வீதியில் இறங்கி, இராசாவின் தோட்டத்தில் ஏறியபொழுது, காக்கிச் சட்டைகளின் சிலமன் ஏதுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டான். மோட்டார் சைக்கிளைச் சற்றுத் துரிதப்படுத்தினான். வேகம் கொண்ட சைக்கிள், ஸ்ரேசன் சந்தியை அண்மித்த பொழுது கைக்கெட்டிய தூரத்தில் அவர்கள்; அந்தக் கனவுலக வாசிகள், கொம்புகள், கோவணம் ஏதுமில்லை. காக்கிச் சட்டைகள் மட்டும் அணிந்திருந்தார்கள்.
இவனை கை அமர்த்தி மறித்ததான ஓர் உள்ளுணர்வின் சொடுக்கல். சடுதியில் ஒரு ‘எஸ்’ வெட்டு வெட்டி, சைக்கிளின் அக்ஸிலறேற்றறை முறுக்கினான். போன பாதை வழியே திரும்பிய வாகனம் காற்றில் மிதந்தது. றோட்டு வளைவுகளில், பாதசாரிகளையும் வாகனங்களையும் முட்டி மோதாமல், அவனது துணிவும் லாவகமும் அவனையும் அவனது செல்வியையும் கைலாசபிள்ளையார் கோவில் சந்திவரை கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது.
குலுங்கி, முகஞ்சிவந்து சிரித்தபடி செல்வி சொன்னாள்:
“போதும் போதுமப்பா… வேகத்தைக்குறையுங்க.. இந்த வெட்டும் ஓட்டமும் போதும்… உங்களாலை நிச்சயமா எட்டடிக்கேலும்… கச்சேரியிலை லைசன்ஸ் எடுக்க விண்ணப்பத்தைக் கொடுங்க..”
“சரி…. சரி அம்மா… வங்கி அலுவலையும் திங்கள்தான் பாக்கவேணும்…!” என்று கூறியவன் மிகமெதுவாக வாகனத்தை வீடு நோக்கிச் செலுத்தினான்.
“அனுமதிப்பத்திரம் கட்டாயம் எடுக்கவேணும்… இனியும் சாக்குப் போக்குச் சொல்லிக் காலங்கடத்தேலாது…”
செல்வி புலம்பினாள். அவளது புலம்பல் அவனுக்குச் சரியானதாகவே பட்டது.
அவன் அவளை வாஞ்சையுடன் திரும்பிப் பார்த்தான். அவளது உதடுகளில் உடையும் மெல்லிய சிரிப்பு. அந்த அழகும் சிரிப்பும் அவனுக்குப் பிடித்தமாய் இருந்தது.
– தாயகம், ஜூன் 2004.
– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.
![]() |
க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 620
