அந்த அவள்…




(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் யாறை மறக்க முயலுகின்றேனோ? எனது வாழ்க்கைப் பயணத்தில் இணைந்து எண்ணற்ற இன்ப நினைவுகளை ஏற்படுத்தி, இன்று போய் இரு வாரத்தில் வருகிறேன் என்று இயம்பிச் சென்ற அந்த அவள் ?
பூமலையில், கடற்கரையில், பொதுவிடங்களில் எனது கையோடு கைகோத்து உலாவி, காதல் மொழி பேசிக் கனியிதழ் சுவைதந்து காலமெல்லாம் உங்கள் காலடியில் கவிழ்ந்து கிடப்பேன் என்று கதிர்மேல் மதிமேல் ஆணையிட்டுக் கூறிய அந்த அவள்?
பூவிரியும் சோலையே, காவிரியின் நீரழகே, பாவேந்தன் பாவரியே, பைந்தமிழே பைங்கிளியே பண்ணிசைக்கும் யாழே, தங்கக்குடமே தளிர்க் கொடியே, என்றெல்லாம் நான் யாரைப் பாராட்டிப் புகழ்ந்தேனோ அந்த அவள்?
நாளெல்லாம் எனது நினைவில் வந்து என்னை நோவுகை (வேதனை)ப் படுத்தும் அந்த அவளை மறப்பதற்காக, கூம்புகை (சோகம்) குடிகொண்ட நெஞ்சத்திற்குக் கொஞ்சம் ஆறுதலுக்காகத் தான் அந்த இடத்திற்குச் சென்றேன். அதுவும், என் நண்பன் அறிவழகனின் வற்புறுத்தல் தாங்கமாட்டா மலேயே சென்றேன்.
அந்த இடம் உரிமம் இல்லாத மறைமுகமாய் நடத்தப்பெறும் களிப்பகம் (உல்லாச விடுதி).
அங்கே, பலர் காதல் காமக் களி யாட்டத் தோடு கட்டிப் பிடித்துக்கொண்டு ஆங்கிலேயர் நறவும் (மது) அருந்திக் கொண்டிருந் தனர்.
அதனைக் கண்ட எனக்கும் களிப்பூட்டும் அந்த உலகத்தில் கலக்கவேண்டுமென்ற அலைவாசை (சபலம்) ஏற்பட்டது.
“அறிவழகா, புதிதாக மலேசியாவில் இருந்து ‘சரக்கு’ வந்திருப்பதாகச் சொன்னாயே, பார்க்கலாமா?”
“அதோ பார் மாடிப்படிக்கட்டு அருகே நிற்பதை!”
திரும்பிப் பார்த்தேன்… அந்த அவள்?
ஒரு மலைப்பு,
திகைப்பு,
வியப்பு…
தலை கிறுகிறுத்தது. மனத்திலே பழைய நினைவுகள் நிழலாடின.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் நான் “ஜுரோங்” கப்பல் கட்டும் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
நாள் தோறும் பேருந்திலே பேருந்திலே பணிக்குச் செல்லும்போது அந்தப் பாவையைச் சந்திப்பேன். அவளும் அந்த வட்டாரத்திலே இயங்கிவந்த ஒரு துணி ஆலையில் வேலை செய்து வந்தாள்.
ஒவ்வொரு நாளும் அண்ணல் நான் நோக்குவேன். அணங்கு அவளும் நோக்குவாள். கண்ணோடு கண் நோக்கும் போது வாய்ச்சொற் களுக்கு என்ன வேலை?
“ஜுரோங்” விளையாட்டு அரங்கத்தை ஒட்டிய சாலையின் நடைபாதையில் ஒவ்வொரு புதன் கிழமையும் அப்பொழுது அல்லங்காடி (பசார் மாலாம்) கூடுவதுண்டு.
அந்த அவளை அங்கே சந்திக்கும் வாய்ப்பு கிட்டி யது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் வளைத்துக் கொண்டேன். அவளும் அப்படி யொரு வாய்ப்பை எதிர் பார்த்திருந்தாள் போலும். எனது வேலை எளிதாக முடிந்தது. எங்கள் உறவு தொடர்ந்தது.
உள்ளத்துள் உறங்கிக்கிடந்த காதல் கண்விழித்தது. இருவரும் இணையானோம்.
அதன்பின் வேலை முடிந்து வீடு திரும்பும் முன்னிரவில் ஜுரோங் பறவைப் பூங்கா அருகே சந்திப்போம். காதலர்கள் சந்தித்தால் என்னென்ன நடக்கும்?
அவற்றைச் சொல்லவும் வேண்டுமா? கடைசிப் பேருந்து வரும் நேரத்தில்தான் இல்லம் திரும்பு வோம்.
அவள் மலேசியப் பெண் வேலை அனுமதிச் சீட்டில் வேலை செய்துகொண்டு கிறித்துவப் பெண்கள் விடுதியில் தங்கி இருந்தாள்.
எனக்கு என் அன்னையைத் தவிர்த்த வேறு யாருமில்லை. நான் ஒரே பிள்ளை, அதுவும் செல்லப் பிள்ளை.
பின் சொல்ல வேண்டுமா? நான் எங்கு வேண்டுமானாலும் செல்வேன். எந்நேர மானாலும் வீடு திரும்புவேன். என் தாய் என்னை எதுவும் கேட்க மாட்டார்.
அத்தகைய விடுதலைப் பறவை நான். “பூன்லே” வீடமைப்புப் பேட்டையில் உள்ள ஒரு அடுக்ககத் (புளோக்)தில் தான் எனது வீடு.
என்றும்போல் அன்று நாங்கள் சந்தித்தபோது அவள் முகம் கூம்புகை (சோகம்) கொண்டிருந்தது, மிகுந்த கவலையோடு தோன்றினாள்.
நான் ஏதேதோ கேட்டும் பதில் கூறாமல் இருந்தாள். கண்களில் நீர்த்துளிர்க்கத் தொடங்கியது. அவளிடம் நான் காரணத் தைக் கேட்டேன்.
அதற்கு அவள், கோலாலம்பூரில் இருக்கும் தன் அக்காளுக்குத் திருமணம் என்றும், அதற்கு வரும்படி அவளின் தந்தை மடல் விடுத்திருப்பதாக வும் கூறினாள்.
“ப்பூ இவ்வளவுதானா?”
மனத்திலிருந்த பெரிய பாரம் சரிந்தது. நான் முகமலர்ச்சி யோடு;
“இதற்குப் போய் ஏன் கலங்குகிறாய்? உனக்காகக் காத் திருப்பேன். நீ சென்று வா” என்று கூறி அடுத்தநாள் அவளை வழியனுப்பி வைத்தேன்.
வாரங்கள் இரண்டு மூன்று கடந்தும் அவளிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை.
எனக்குப் பித்துப் பிடித்ததுபோல் இருந்தது. ஓர் இயந்திர மனிதனைப் போல் வேலைக்குச் செல்வதும் வீட்டுக்கு வருவதுமாக நாட்கள் நகர்ந்தன.
இன்று வருவாள் நாளை வருவாள் என்று காத்துக்கிடந்த எனக்கு அவளிடமிருந்து ஒரு மடல் வந்தது:
“அன்புள்ள இளங்கோ, வணக்கம். இங்கே என் அக்கா ளுக்கு நடைபெற இருந்த திருமணம் நின்று போய்விட்டது.
அதற்குக் காரணம் அவள் யாரோ ஒருவரைக் காதலித்து கர்ப்பம் அடைந்திருந் ததே. என் அப்பா அவளுக்கு முடிவு செய்து இருந்த மாப்பிள்ளையை எனக்கு மணம்முடிக்க முடிவு செய்துவிட்டார்.
அவரது முடிவை மாற்ற என்னால் முடியவில்லை. ஒப்புக்கொண்டு விட்டேன்.
எனக்குக் கணவராக வரப்போகிறவர் அழகானவர். சொந்தத் தொழில் நடத்துபவர். பெரிய வளமனையும் (பங்களா) மகிழுந்து (கார்)ம் இருக்கின்றன.
இனிமேல் நான் சிங்கப்பூர் வந்து வேலை செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. என்னை மறந்துவிடுங்கள்; மன்னித்துவிடுங்கள்.
இப்படிக்கு, சீதா.”
மடலைப் படித்ததும் நெஞ்சம் குமுறியது. திரைப் படங்களில் வில்லன்களால் உடைத்து நொறுக்கப்படும் கண்ணாடிகள் போல் எனது இதயம் சிதறியது.
“வஞ்சகி, வளமான வாழ்வு என்றதும் உளமாற நேசித்தவனை உதறிவிட்டாளே,
சீதாவாம் சீதா. அந்த இராமாயணக் கதைத் தலைவி பெயரை இவளுக்குச் சூட்டியவர் மடையர்.
காட்டுக்குச் செல்லவேண்டிய இராமனோடு தனது அரச வீட்டுச் சுகத்தை யெல்லாம் விட்டுவிட்டுச் சென்றவள் அல்லவா கீதை? அந்தச் சீதையின் பெயரா இவளுக்கு? இரண்டகி இழிமகள்”
என்றெல்லாம் வாய் அரற்றியது. மனம் ஒடிந்து, இருக்கையில் வீழ்ந்தேன்.
நினைவோட்டம் நின்றது. திரிவிளக்கு அளவிலான சிவப்பு விளக்கின் ஒளி தெரிந்தது. அந்த ஒளியிலே முன்னர் நான் கண்ட காம இன்பக் காட்சிகள்!
“டேய் இளங்கோ என்னடா சிந்தனை?”
நண்பன் அறிவழகன் என்னைத் தன்நினைவுக்கு வரத் தோளைத் தட்டினான்.
“ஒன்றுமில்லேடா! என்னவோ மலேசியாவி லிருந்து புதிதுகள் வந்துள்ளதாய் சொன்னாயே?”
“அதான்டா சற்று முன்னர் மாடிப்படியருகே பார்த்தாயே அவர்கள்தாம். இருவரும் அக்கா தங்கை. மூத்தவள் லீலா, இளையவள் மாலா. இருவருமே எழிலரசிகள், இன்பச் “சரசி”கள்.”
அடுக்கிக்கொண்டே போனான் அவன். அவனது சொற்கள் எனக்கு, எரிகின்ற நெருப்பிலே கல்நெய் (பெட்ரோல்) ஊற்றியது போல் தழல்விட்டெரிந்தது.
‘ஆம், அந்த அவள் மூன்றாண்டுகளுக்குள் ஏன் இந்த நிலைமைக்கு ஆளானாள்?’
எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் கலங்கியது. அறிந்துகொள்ளும் ஆர்வம் தோன்றவில்லை.
பணம் படைத்தவர்களைத் தேடிச் செல்லும் பாவையர் பலர் கைவிடப் பட்டுக் கணிகையர் ஆன கதை நாட்டிலே நடப்பதுதானே!?
– தமிழ்மலர், 20-10-1979.
– மண்மணச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2014, பாத்தேறல் இளமாறன் வெளியீடு, சிங்கப்பூர்.
![]() |
(தமிழ் தெரிந்த சமையற்காரர்) தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச் சாலையில் 2-1-1945ல் பிறந்த பாத்தேறல் இளமாறனின் இயற்பெயர் மெ. ஆண்டியப்பன். 12'ம் வயதில் சிங்கப்பூருக்கு வந்த இவருக்குச் சமையல் கை வந்த கலை. ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள X ஆன் சிட்டி கடைத் தொகுதி திறக்கப்பட்டபோது அதில் சாப்பாட்டுக் கடை நடத்த உரிமை பெற்ற ஒரே தமிழர் இவர். மணமான இவர் தம் குழந்தைகளுக்கு கண்ணகி, தமிழ்க் கோதை,…மேலும் படிக்க... |