அச்சம்!
கதையாசிரியர்: சிறுவர் கதைகள்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,858
ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன. எதைக் கண்டாலும் அவை அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்தன.
இப்படிப் பயந்து சாவதை விட ஒரேயடியாக செத்துப் போய்விடலாம் என்று அந்த முயல்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
எல்லா முயல்களும் ஓரிடத்தில் கூடின. ஏதாவதொரு மலையுச்சியை அடைந்து அங்கிருந்து கீழே உள்ள குளத்தில் ஒன்றாகச் சேர்ந்து விழுந்து உயிரை விடுவது என்று முடிவெடுத்தன.
திட்டமிட்டபடி முயல்கள் அனைத்தும் மலையுச்சிக்கு வந்து அங்கிருந்து குளத்தில் விழத் தயாராகின.
குளக்கரையில் இருந்த தவளைகள் இதைக் கவனித்தன. முயல்களின் கூட்டத்தைக் கண்டதும் அவற்றுக்கு பயம் வந்தது. மிகவும் கலக்கமுற்ற அந்தத் தவளைகள் அனைத்தும் திடீரென்று நீருக்குள் குதித்து மறைந்தன.
தங்களைவிட அச்சத்தில் வாழும் உயிரினங்களும் இந்த உலகத்தில் இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்த முயல்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டன. தங்கள் இருப்பிடம் திரும்பிச் சென்றன.
– தங்க.சங்கரபாண்டியன், சென்னை (ஜூன் 2012)