அக்கினி வளையம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2025
பார்வையிட்டோர்: 66 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முக்குறுணிப் பிள்ளையார் மீது ‘கஸ்டம்ஸ்’ வேலா யுதத்துக்குத் தனியானதொரு பற்றுதல். திரிகோணமலை யில் பன்குளத்துக்குச் சற்றுத்தள்ளி திருமலை -யாழ்ப் பாணம் வீதியிலிருந்தது அந்தக் கோயில். 

எழுபத்தி ஏழாம் ஆண்டு சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமிடையில் ஏற்பட்ட கலவரத்தின்போது அப்பிள்ளையாரை அருகிலுள்ள ஆற்றில் தூக்கியெறிந்து விட்டு ‘பிள்ளையார்-நாண்டகியா’ பிள்ளையார் குளிக்கச் சென்று விட்டார் எனச் சிங்களத்தில் விஷமிகள் சிலர் எழுதியிருந்தனர். 

அதனைப் பார்த்ததும் வேலாயுதத்தின் மனம் புண்ணாகியது கலவரம் அடங்கியதும் முதற்காரியமாய் பொதுமக்கள் பலரிடம் நிதி திரட்டி, கோயிலை புதுப் பித்து மீண்டும் அச்சிலையை பிரதிஷ்டை பண்ணுவித் தார். அன்றிலிருந்து நாள்தோறும் அலுவலகம் செல்லும் பொழுதும் பின் அங்கிருந்து திரும்பும்பொழுதும் அக் கோயிலுக்குச் சென்று வழிபடத் தவறுவதில்லை. 

ஆனால் இன்று எல்லாமே அவசரக் கோலம் “தாயாரின் உயிர் ஊசலாடுகிறது. உடனே புறப்பட்டு வரவும்” என யாழ்ப்பாணத்திலிருந்து அவரது தம்பி தந்தி கொடுத்ததிலிருந்து அவரால் ஒரு காரியத்திலும் சிரத்தையுடன் ஈடுபட முடியவில்லை. பேனாவை எடுத்து ‘ஆபீஸ்’சுக்கு லீவு எழுதும் பொழுதும் பதட்டம். அதனைத் தன் ஆபீஸ் நண்பன் மூலமாகக் கொடுத்து. விடச் சைக்கிளில் சென்றபோதும் ஓட்டத்தில் நிதான. மில்லை. 

வீட்டுக்கு வந்ததும்; ‘அதை எடுத்து வை. இதை எடுத்து வை’ என மனைவியிடம் கூறினாரே தவிர, தானாக. எதுவும் செய்யவில்லை. அதற்காக உமா அவரை மனம். நோகவுமில்லை. 

அவருக்குத் தாயாரின் மேலுள்ள பாசம் எவ்வள வென்பது உமாவுக்கு நன்றாகத்தெரியும். சின்ன வயதி லேயே தந்தையை இழந்து விட்டவர். தாயார்தான் அவரை மிகவும் சிரமப்பட்டு வளர்த்து படிப்பித்து நல்ல நிலைமைக்கு உருவாக்கியவர். 

”உமா, புறப்படுவதற்கிடையில் கோயிலுக்கு ஒரு தடவை போய்விட்டு வரட்டுமா? என் மனசு நிம்மதி யில்லாமல் தவிக்கிறது.” 

“என்னங்க, நீங்க. குழந்தை மாதிரி மனதைப் போட்டுக் குழப்பிக்கொண்டு… புறப்படும். நேர மாயிடுச்சே. இவங்க இரண்டுபேரையும் நான் எப்படித் தனியாகச் சமாளிப்பேன்” பெரிய பையன் கோகுலுக்கு ஷேர்டை அணிந்து கொண்டே பதில் கூறினாள் உமா. 

“சரி சரி, நான் போகவில்லை. ‘பஸ்’ போற வழியில் தானே, கோயிலிருக்கு. ‘பிரைவேட் பஸ்தானே. ஒரு தடவை அதை நிறுத்தச் சொல்லியாவது முக்குறுணிப் பிள்ளையாருக்குச் சிதறுதேங்காய் போட்டுவிட்டுச்  செல்ல வேண்டும் -தனக்குள்ளேயே பேசிக்கொண்டு பிரயாணத்துக்கு ஆயத்தமானார் வேலாயுதம். 

தனியாருக்குச் சொந்தமான ஜப்பான் – நிஸான்ரக மினி பஸ், திரிகோணமலையின் பிரதான பஸ் ஸ்டாண் டுக்கு எதிர்ப்புறமாக நின்றது. கண்டக்டர் பயணிகளின் பொதிகளை வாங்கி ‘பஸ்’ கூரைக்கு மேலே வைத்து தாம்புக் கயிற்றால் இறுகக் கட்டிக் கொண்டிருந்தார். டிரைவரைக் காணவில்லை. நீண்ட தூரப் பயணம் என்ப தால் அவரவர் தங்கள் தங்கள் பொதிகள் நழுவாமல் இருக்க வேண்டுமேயென்ற கவலையுடன் கண்டக்டருக்கு கயிற்றை ‘இபபடி மாட்டு, அப்படி முடிச்சுப்போடு” என ஆலோசனை வழங்கிய வண்ணமிருந்தார்கள். 

கண்டக்டருக்கு அது எரிச்சலை மூட்டுகிறதென்பது அவன் கயிற்றைப் போட்டு இழுக்கும் அவசரத்தில் தெரிந்தது. 

உமாவையும், குழந்தைகளையும் பஸ்சுக்குள் ஏறி உட்காரும்படி வேலாயுதம் கூறினார். 

உமா பையன்களை முதலில் ஏற்றி விட்டு, உள்ளே காலடி எடுத்து வைக்கும் சமயம் டிரைவர் சற்றுப் பரபரப்புடன் வந்தார். முகத்தில் சுரத்தில்லை. வெளியே நின்றபடி ‘பாக்கெட்’டிலிருந்த ‘பீடி’யை எடுத்துப் பற்றவைத்து ஒருதரம் ‘தம்’ இழுத்துவிட்டு – பஸ்சின் கூரையிலிருந்து இறங்கிய கண்டக்டரிடம் ஏதோ ரகசிய மாய்ப் பேசினார். 

“என்ன, பஸ் புறப்படுமா? பஸ் ஸ்டாண்டுல என் னவோ கலவரம்,. கொள்ளை, அது, இதுவென்று பேசிக் கொள்கிறார்களே. இப்படி ஆண்டுக்கொரு தடவை ஆளுக்காள் அடிச்சுக்கொள்வதால் நாட்டில வியாபாரம், தொழில் எதையுமே நிம்மதியாய் நடத்த முடியாமல் போச்சு” – அப்பொழுதுதான் பெட்டியும் கையுமாக வந்த முஸ்லிம் வர்த்தகரொருவர் எரிச்சலுடன் முணு முணுத்தார். 

அவர் இந்த ‘பஸ்’சில் யாழ்ப்பாணம் போய் நாளை இரவு யாழ்தேவியில் கொழும்புக்குச் சென்று பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந் தார். அவரிடம் ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் மதிப் புள்ள வீடியோ டெக், கலர் டி. வி. எல்லாம் இருந்தது. அவைகளைக் கொடுப்பதற்கு யாழ்ப்பாணம் ‘நியூ மார்க் கெட்’ வர்த்தகர் ஒருவரிடம் பேரம் பேசியிருந்தார். அந்த அவசரம் அவருக்கு. 

“கொழும்பில, கண்டியிலயெல்லாம் கலவரம் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனா பேப்பரில் எதையும் காணோம். கால், கை முளைத்த வதந்திகளாகவும் இருக்க லாம். எதற்கும் நாம பொழுதோடயே ஹொரப்பத்தா னையை தாண்டிவிட்டால் மிகுதி நம்ம பகுதிதானே. பயப்படத் தேவையில்லை”-டிரைவர் பிரயாணிகளுக்கு தைரியம் கூறிவிட்டு டிரைவர் ‘சீட்’டில் ஏறி உட்கார்ந்தார். 

‘பஸ்’ புறப்படுவதற்கு முன்னதாக வழக்கம்போல் அன்றும விநாயகரை நினைத்துச் சிதறுதேங்காய் ஒன்றை பஸ்சுக்கு முன்னால் அடித்து விட்டு, பஸ்சுக்குள் வந்து ஏறினார் கண்டக்டர். 

எல்லோருக்கும் பின்னால் ஏறிய வேலாயுதம் மனைவிக் குப்பக்கத்தில் வந்தமர்ந்தார். 

ஜன்னலோரம் உட்காருவதற்கு சண்டைபோட்ட தன் பையன்களை உமா சமாதானப் படுத்தினாள். பாதி தூரத் துக்கு இளையவன் உட்காருவதென்றும் மிகுதி தூரத்துக் குப் பெரியவன் உட்காருவதென்றும் முடிவாயிற்று. 

‘பஸ்’ புறப்படுவதற்கு முன்னாலேயே உமாவுக்கு தூக்கம் கண்களை சுழற்றியது. தந்தி வந்த நேரத்திலிருந்து அவளுக்கு இடுப்பொடிந்த வேலை. அடிக்கொரு தடவை கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டாள். 

நாட்டிலேற்பட்டிருக்கும் கொந்தளிப்பை ஜாடை மாடையாய் கேள்விப்பட்ட பின்னரும் எவரும் பிரயா ணத்தை ஒத்திப் போடவில்லை. ஒவ்வொருவருக்கும் ஓவ் வொருவிதமான பிரச்சனைகள். மினி பஸ் முழுவதும் நிரம்பியிருந்தது. கண்டக்டர் பிரயாணிகள் எல்லோரும் வந்து விட்டார்களா என்பதை ‘லிஸ்டின்’ பிரகாரம் எண்ணிப் பார்த்துக் கொண்டார். 

ஏறக்குறைய முப்பத்தைந்து பேர் இருந்தனர்.எல்லோ ரும் முன்ன தாகவே ரிசேர்வ் பண்ணி வைத்தவர்கள்தாம். தாயாரின் ஆபத்தான நிலைமை; மனைவியின் பிரசவம்; அபூர்வமாக கிடைத்த இன்டர்வியூ; தங்கையின் கல்யா னம் இப்படி எத்தனையோ தவிர்க்க முடியாத பிரச்சனை களை தலையில் சுமந்த மனிதர்களுடன் ‘பஸ்’வேகமாக நகர்ந்தது. 

நகரத்து வீடுகளும், கடைகளும் ஒவ்வொன்றாக விடை பெற்றன. முக்குறுணிப் பிள்ளையார் கோயில் வருவதற்கு முன்னர் வேலாயுதம் எழுந்து ‘டிரைவர்’ பக்கம் சென்றார். 

டிரைவர் கேள்விக் குறியுடன் நிமிர்ந்து நோக்குவது முன்னாலிருந்த கண்ணாடியில் தெரிந்தது. 

“பிள்ளையார் கோயில் வரும்போது சற்று நிறுத் தப்பா. நாலு சூடம் கொளுத்திவிட்டு வந்துவிடுகிறேன்.”

“என்ன சார், பொழுதாகுமுன்னர் ஹொரப்பத்தானை எல்லையைத் தாண்டிவிட வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கிறேன். நிலைமை தெரியாமல்” -மீண்டும் வீதியில் தன் கண்களைச் செலுத்திய ‘டிரைவர்’ எரிந்து விழுந்தான். 

“அவனின்றி ஓர் அணுவும் அசையாதப்பா… ஒரு ஐந்து நிமிஷம் போதும்.” 

“விதண்டாவாதம் பண்ணாதீர்கள் சார். நானும் கடவுள் நம்பிக்கையுள்ளவன் தான். யாழ்ப்பாணம் கொண்டுபோய் இறக்கி விடுகிறேன். ஊருக் கொரு பிள்ளை யார் இருக்கிறார். வேண்டியமட்டும் தரிசனம் பண்ணுங் கள்” இப்ப என்னைக் குழப்பாதீர்கள் சார்.” 

“ஸ்… இங்க வந்து உட்காருங்க. அதைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.” 

பஸ் டிரைவரிடம் வேலாயுதம் வாக்குவாதம் புரிவதை பிடிக்காத உமா மெதுவாகக் கூப்பிட்டாள். 

“சே…இந்தக் காலத்துப் பையன்களுக்கு ஒரு பயபக்தி கிடையாது வேலாயுதம் முணுமுணுத்தபடியே வின் பக்கத்தில் வந்தமர்ந்தார். 

“போகட்டும் விடுங்கள்’- உமா அவரது கையை அழுத்திப் பிடித்து சமாதானம் கூறினாள். 

ஆத்திரம் அடங்கியதும் தன்னிடமிருந்த பத்திரிகையை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார் வேலாயுதம். 

ஜன்னலோரம் இருந்த இளைய பையன் தூங்கி விழ ஆரம்பிக்கவே-அவனை இழுத்துத் தன் மடிமீது சாத்திய உமா பெரிய பையனை ஜன்னலோரம் நகர்ந்து உட் காரச் சொன்னாள். அவன் உற்சாகத்துடன் நகர்ந்து, வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். 

உமாவின் கண்களைத் தூக்கம் அழுத்தியது; அவளால் சமாளிக்க முடியவில்லை. வேலாயுதத்தின் தோளில் மெது வாகத் தலையைச் சாய்த்தபடி கண்களை மூடினாள். இர வின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ‘பஸ்’ பெரிய இரைச்சலுடன் சென்றது. 

ஏறக்குறைய இரண்டு ‘பர்லாங்’ தூரம் அமைதியா கச் சென்ற பஸ், திடீரென ‘கிறீச்’சென்ற சப்தத்துடன் குலுங்கி நின்றது. 

பாதித்தூக்கத்தில் போய்க் கொண்டிருந்த பயணி கள் திடுக்கிட்டு விழித்து ஒருவரையொருவர் மிரண்டு போய் பார்த்தனர். 

உமாவின் மடியிலிருந்து நழுவிக் கீழே விழுந்த வலி ‘யில் ‘ஹோ’வெனக் கதறிய பையனைச் ‘சட்’டென்று தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டாள். 

ஆண்களெல்லோரும் முண்டியடித்துக்கொண்டு வெளியே எட்டிப் பார்த்தனர். 

பஸ்சுக்கு முன்னால் வீதியில் பெரிய மரமொன்று குறுக்காக விழுந்து கிடந்தது. அது கிடந்த விதத்தில் வேண்டுமென்றே சாலையோரத்து மரத்தை வெட்டி வீழ்த்தி வீதியின் குறுக்காகப் போட்டிருப்பது ‘பளிச் செனப் புரிந்தது. 

“இது சிங்களக் காடையர்கள் வேலைதான்! வண்டி யைத்திருப்பி வந்த வழியே விடு, ஏதாவது குறுக்கு வழி யில் போகலாமா பார்” உள்ளேயிருந்தவர்கள் தலைக் கொருவராக ஆலோசனை கூற ஆரம்பித்தனர். 

டிரைவர் பஸ்சை வேகத்துடன் பின்னே நகர்த்த முற்பட்ட சமயம்; ஈசல்களைப் போல் நான்கு பக்கப் புதர்களிலிருந்தும் துப்பாக்கி, கத்தி, கோடரி, அரிவாள் களுடன் ஓடிவந்த சிங்களக் குண்டர்கள் ‘பஸ்’சை மொய்த்துக் கொண்டனர். 

டிரைவர் வெலவெலத்துப்போய் ‘ஸ்டியரிங் ‘கிலிருந்து கையை எடுத்தார். 

திடுதிப்பென்று ‘பஸ்’சின் பூட்டிய கதவைத் திறந்து கொண்டு, நீட்டிய துப்பாக்கியுடன் சிங்களக் குண்டர்கள் ஏறினர். 

குழந்தைகள் எல்லாம் அலறத் தொடங்கின; பெண் கள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்துகொள்ளத் துடித் தனர். தமிழ்ப்பயணிகளின் அத்தனை உடமைகளும் துப் பாக்கி முனையில் பறித் தெடுக்கப்பட்டன. 

தன் தங்கை கல்யாணத்துக்கெனக் கொண்டு சென்ற ஐம்பதினாயிரம் ரூபாயை அவர்களிடம் பறிகொடுக்க மன மில்லாது முரண்டு பண்ணிய ஒரு இளைஞனின் கழுத்தில் ஆழமான கத்திக் குத்தொன்று விழுந்தது. அவன் அலறிக்கொண்டே ‘சீட்’டில் விழுந்தான். 

பயத்தில் மிரண்டு போய் தன் கழுத்தைக் கட்டிப் பிடித்திருந்த குழந்தைகள் இரண்டையும் அணைத்த வண் ணம், “நகைகள், பணம் எல்லாவற்றையும் தந்து விடுகிறோம். எங்களை விட்டுடுங்க குழந்தைகளை ஒன்றும் செய்து விடாதீங்க” எனச் சிங்களத்தில் கெஞ்சியவண் ணம், உமாவின் தாலிச் சரட்டையும் கழட்டிக் கொடுத்தார் வேலாயுதம். 

நான்கைந்து நிமிடத்துக்குள் வந்த காரியத்தை. முடித்துக் கொண்ட சிங்களக் குண்டர்கள், பஸ்சை விட்டு இறங்க ஆரம்பித்ததும் எல்லோர் மனதிலும் ஒரு நிம்மதி பிறந்தது. 

துப்பாக்கியுடன் நின்றவன் கடைசியாக இறங்கும் பொழுது, குறிப்பாக உள்ளே இருந்த முஸ்லிம் வர்த்த கரை மட்டும் கீழே இறங்கும்படி சமிக்ஞை செய்தான். 

அதற்கிடையே வெளியே ‘பஸ்’சைச் சுற்றி நின்ற காடையர்கள் ‘பஸ்’சின் ‘ஷட்டர்’களை படபடவென இழுத்து மூட ஆரம்பித்தனர். 

உள்ளே இருந்தவர்களுக்குப் ‘பளிச்’சென எதுவோ ஒன்று புரிய ஆரம்பித்தது. முஸ்லிம் வர்த்தகரைத் தொடர்ந்து எல்லோரும் வேகமாக இறங்க முற்பட்டனர். 

இரண்டு பையன்களையும் ஆளுக்கொருவராகத் தூக் கித் தோளில் சாத்திய வேலாயுதமும், உமாவும் முண்டி யடித்துக் கொண்டு முன்னால் செல்ல முயன்றனர். 

அவர்களைப் போல் குழந்தையும் கையுமாக நின்றவர்கள் ஏழெட்டுப் பேர். 

வாசல் கதவை வெளியிலிருந்தவர்கள் அழுத்தமாக மூடிவிடவே, ஜன்னல் கண்ணாடிகளை உள்ளிருந்தபடியே கைமுட்டிகளினால் அடித்து உடைத்து வெளியே குதித்து விட துடித்தனர். 

வேலாயுதம் அடித்த அடியில் பின்பக்கம் ஜன்ன லொன்று ‘கலீ’ரெனச் சிதறியது. 

அந்தத் துவாரத்தின் வழியே, வெளியில் கத்தியும், அரிவாளுமாக நின்றவர்களைப் பார்த்ததும், உமா ‘வீல்’ எனக் கத்தியபடி கணவனை இறுகக் கட்டிக்கொண்டாள். 

இதற்கிடையே, “ஒக்கம தாண்ட… ஒக்கம தாண்ட, முழுவதையும் ஊத்து…முழுவதையும் ஊத்து” எனச் சிங்களத்தில் கூட்டத்தினர் ஒருவருக்கொருவர் கட்டளை யிடுவது உள்ளிருந்தவர்களின் காதில் கேட்டது. 

‘பெட்ரோல் டின்’ னுடன் நின்றவர்கள் அபிஷேகம்- பண்ணுவது போல் ‘பஸ்’சின் சகல பகுதிகளிலும் பெட்ரோலை ஊத்தினர். யாரோ ஒருவன் தீக்குச்சியைக் கிழித்தான். 

“அம்… மா… ம்… மா… எங்களை எரிக்கப் போராங்க களா… அம்மா பயமாயிருக்கம்மா… நான் பாட்டியைப் பார்க்கணுமேயப்பா…அப்பா… எங்களை எரிக்கவிடா தேயப்பா… யப்பா…அப்பா… நெருப்பு சுடுமேயப்பா… ” வேலாயுதத்திடமும், உமாவிடமும் மாறி மாறித் தாவிய குழந்தைகள் பயத்தில் வீறிட்டன. 

“எங்களை விட்டுடுங்க. உங்களுக்குக் கோடி புண்ணிய முண்டு. ஐயா…எங்களை விட்டுடுங்க. முக்குறுணிப்பிள்ளை யாரே எங்களை காப்பாத்து…”- வேலாயுதம் தன் தொண்டை கிழியுமட்டும் ஓலமிட்டார். 

எல்லோரும் பெருங்குரலெடுத்துக் கதறினார்கள். இதை யொன்றையும் சட்டை செய்யாத தீயின் நாக்குகள் ‘பஸ்’ சின் நான்கு பக்கமும் தாவித்தாவி அட்டகாசமாய் எரிந்தன. 

உமா தன் கணவனை இறுகக் கட்டிக் கொண்டாள். அவர்கள் நெஞ்சுடன் குழந்தைகள் ஒட்டிக்கொண்டனர். 

“அம்மா… ம்மா… ஐயோ… கடவுளே… காப்பாத்… துங்க…” கதறல்கள் மெதுவாக அடங்கத் தொடங்கின. 

காட்டின் நடுவே தீப்பிழம்பாக எரிந்து கொண்டிருந்த ‘பஸ்’சைப் பார்த்துப் பலமாகச் சிரித்தபடி நகர்ந்து கொண்டிருந்தது சிங்களக் காடையர்கள் கூட்டம். 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *