அகாலிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2024
பார்வையிட்டோர்: 1,184 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கைக்கடிகாரத்தைப் பார்ப்பதும் நடப்பதுமாய் அவன் எட்டி மிதித்துப் போய்க்கொண்டிருந்தான். 

“ஏய் ரவி, எங்கே விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறாய்?” என்ற வனாய் அவன் முன்னே, அவனை இடைமறிப்பவனாய், அவன் நண்பன் வந்துகொண்டிருந்தான். 

“சிவா, மன்னிக்கவேணும். எட்டரைக்கு எனக்கு லெக்சர், மிஸ்பண்ண முடியாது. இப்போ அனேகமா எட்டரை ஆச்சு. நான் போகோணும்.” 

“ஒரு முக்கியமான விஷயம். ஒரு நிமிடம் ஒதுக்கடா” மற்றவன்.

“எக்ஸ்றீம்லி சொறி. லெக்சர் முடிந்து வந்து சந்திக்கிறேன்.”

அவன் ஓடுகிறான். 

எட்டரைக்கு லெக்சர் என்று ரவி சொன்னது, சிவாவுக்கு வேறொன்றை நினைவுபடுத்திற்று. 

கடிகாரத்தைப் பார்க்கிறான். 82க்கு இன்னும் இரண்டு நிமிடங்களே இருந்தன. 

அவனுக்கு அது சட்டென நினைவுக்கு வந்தது. 

காலகி அவனை 81/2 மணிக்குத்தானே வரச்சொல்லியிருந்தாள். ஏன் மறந்துபோச்சு? அவன் தலையில் அடித்தவாறு ஓடாக்குறை யாக, அவள் வரச்சொன்ன பூங்காவுக்கு விரைகிறான். 

காலகி நேரத்தைப் பார்ப்பதும் அவன் வரும் வழியைப் பார்ப்பதுமாய் நிற்கிறாள். 82 ஆயிற்று. மேலும் பத்து நிமிடம் பொறுத்தாள். அவன் வருவதாய் இல்லை. அவன் வந்தால், அலுவலகத்துக்கு லீவுபோடுவதாக நினைத்திருந்தவள், இப்போ ஓட்டோவைப் பிடித்துக்கொண்டு அலுவலகத்துக்கு ஓடுகிறாள். பதிவேட்டில் சிவப்புக் கோடு இழுபட்டுவிட்டதோ என்று நெஞ்சில் ஓர் அந்தரம். 

விரிவுரையாளர் கணேஷ் அவசர அவசரமாக வாய்க்குள் காலைச் சாப்பாட்டைத் திணித்தவராய் விரிவுரை நோட்ஸ் தாள்களை வாரிச்சுருட்டிக்கொண்டு விரிவுரை வகுப்புக்கு ஓடு வதற்கான அவசரம். அந்த நேரமாகப் பார்த்து வீட்டுத் தொலை பேசி கிணுகிணுத்தது. நேரத்தைப் பார்க்கிறார். 8.35. றிசீவரை எடுத்து, “ஹலோ” என்கிறார். 

“நான் காலகி, இங்கே” 

“என்ன விஷயம்?” 

“சரியாக ஒன்பது மணிக்குக் காரை ஸ்ரேசனுக்கு கொண்டு வாருங்க…” 

“என்ன…” என்று ஆரம்பித்தவர் பதில் சொல்ல முன்னரே அவள் கைத்தொலைபேசியை நிறுத்திவிட்டாள். 

‘யாரை ஸ்ரேஷனுக்கு அனுப்பலாம், இந்த நேரமாகப்பார்த்து யாரும் வீட்டில் இல்லையே’ என்று யோசித்தவாறு விரிவுரை வகுப்புக்குள் நுழைகிறார். 

அமைச்சரின் அறைக்குள் நுழைந்த சேவகன், ஒரு கடிதத்தை அவரிடம் நீட்டுகிறான். அதை அவர் அவசரஅவசரமாக உடைத் துப் படிக்கிறார். 

“இன்று காலை பத்து மணிக்குக் கூட்டம். எல்லா விஷயங் களும் ஏற்பாடாகியுள்ளன. கூட்டம் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும். தலைமையுரை 10.10, வரவேற்புரை 10.20, அமைச்ச ரின் சேவைபற்றிய உரை 10.30, அமைச்சருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு 11.00, அமைச்சரின் உரை 11.10, கால ஒழுங்கு பேணுதல் கூட்டத்தின் முக்கிய அம்சம். அறியத்தருவது காலகி.” 

கடிதத்தைப் படித்த அமைச்சர் அசாதாரண அவசரத்தோடு புறப்படுகிறார். சரியான நேரத்திற்குக் கூட்டத்திற்குச் சமூக மளிக்க வேண்டுமென்ற அந்தரம். 

பத்திரிகை அலுவலகத்திற்குப் பின்வரும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 

இன்று லண்டன் நேரப்படி காலை ஒன்பது மணிக்குக் காலத்தைச் சீர்குலைக்கும் அகாலிகளின் பயங்கரவாத நடவடிக்கை களுக்கு எதிரான மகாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு. 

மாலை 4 மணிக்கு அகாலிகளுக்கு எதிரான தொழிற்சங்கங் களின் எழுச்சிக் கூட்டம். 

‘காலை 10 மணிக்கு அகாலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி மறைந்த பாதுகாப்பு அமைச்சரின் பூதவுடலுக்குச் சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி.’ ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னாலும் காலகியின் உந்துதல் இருந்தது. 

காலகி ரயிலை விட்டு ஸ்ரேஷனில் இறங்கி அங்குமிங்கு மாகப் பார்க்கிறாள். அவன் வருவதாய் இல்லைப் போல் தெரி கிறது. கைக்கடிகாரத்தைப் பார்ப்பதும் சுற்றுமுற்றும் விழிகளை ஓட்டுவதுமாய் நிற்கிறாள். அவன் தலைக்கறுப்பே இல்லை. அவள் அந்தரம் மேலிட ஸ்ரேஷனை விட்டு வெளியே வந்து ரோட்டில் ஏறுகிறாள். 

காலகி நடந்துகொண்டிருந்தாள், தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை அடிக்கடி பார்த்தவளாய். அப்போது – 

நகர மையத்தில் எல்லோர் கண்களையும் உறுத்துவதுபோல் நிற்கிறது, பெரிய மணிக்கூண்டுக் கோபுரம். 

அதன் ராட்சத காலங்காட்டும் கம்பிகள் அசைந்துகொண்டி ருக்கின்றன. அக்கோபுரத்தின் மேலே ‘காலகி மாளிகை’ என எழுதப்பட்டுள்ளது. அதனடியில் காவலர்கள் நின்றுகொண்டிருக் கின்றனர். அக்கோபுரத்திலிருந்து மக்களை அச்சுறுத்துவதுபோல் சீரான இடைவெளிக்கொருதரம் ஒலிபெருக்கியில் எச்சரிக்கைக் குரல் ஒலிக்கிறது. 

“தலைநகருக்குள் அகாலிகள் ஊடுருவியுள்ளதாக எமது புலனாய்வு கூறுகிறது. சந்தேகத்திற்கிடமான முறையில் யாரும் நடமாடுவதைக் கண்டால், உடனே எமது பாதுகாப்புப் பிரிவுக்கு அறியத்தருமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.” 

அடிக்கொருதரம் இவ்வறிவித்தல் ஒலிக்கிறது. 

அம்மணிக்கூண்டுக் கோபுரத்திலிருந்து சற்றுத் தூரத்திற்கப் பால் ஓர் ஒதுக்குப்புறத்தில் யாரோ ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல் ஓர் இளைஞன் நின்றுகொண்டிருக்கிறான்.

அவன் கண்கள் அம்மணிக்கூண்டுக் கோபுரத்தைப் பார்க்கின்றன. 

அக்கோபுரத்தருகே வந்த காலகி, இப்பேரண்டத்தின் அசைவு முதல் ஓர் அற்ப அணுவின் சுழற்சிவரையுள்ள கால அட்டவணைத் தொகுப்பே தான் என்பவளாய், அதை மாலையாக அணிந் தவள்போல் சற்று நின்று, பின் அக்கோபுரத்தினுள் சென்று மறைகிறாள். 

திடீரென அந்த மணிக்கூண்டுக் கோபுரம் பெரும் காளி கோயிலாக மாறுவது அவன் கண்களுக்குத் தெரிகிறது. 

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் காளியம்மனுக்குத் தீபாரா தனை காட்டப்படுகின்றது. 

பக்தர்கள் கூட்டமாக நின்று, “தாயே காளியம்மா,அம்மா தாயே காளியாத்தா, அரோகரா அரோகரா!” என்று பக்தி மேலிட்டுக் கோஷமிடுகின்றனர். 

பின்னர் காளியம்மன் தேரேறி ஊர்வலம் வருகிறாள். ஆயிரக் கணக்கான பெண்களின் கைகளில் தேர்வடம் புரள்கிறது. அத் தேர்வடத்தினூடாக அத்தனை பெண்களுள்ளும் காளி நுழைகி றாள். காளியை விழுங்கியவர்களாகப் பெண்கள் ‘கலை’ ஏறிச் சன்னதம் கொள்கிறார்கள். ஹுக்கும்… ஹுக்கும்… சன்னதம் வேகம் கொள்கிறது. 

பல ஆண்கள் செடில்பூறி, காலக்கயிற்றில் தொங்கி ஆடுபவர் களாய், பறவைக்காவடி ஆடி வருகின்றனர். 

அவன் பார்த்துக்கொண்டு நிற்கிறான். 

பவனிவந்த காளியம்மன் திடீரெனப் பத்திரகாளியாக மாறுகிறாள். 

புலிவாகனத்தில் ஏறிவரும் அவள், மனித மண்டை ஓடுகளை மாலையாக அணிந்தவளாய், நாக்கை வெளியே நீட்டிக் கோர ரூபத்துடன் வருகிறாள். 

சனங்கள் பயந்து நடுங்குகின்றனர். 

பெண்கள் சிலர் உக்கிரம் கொண்டு, உருவேறிக் கலையாடத் தொடங்குகின்றனர். 

ஏன் மகாகாளி, பத்திரகாளியாக மாறுகிறாள்? 

ஹுக்கும்… ஹுக்கும்… பெண்கள் கலையாட்டம் வேகம் கொண்டது. 

அம்மாள் பலி எடுக்கப் போறாள்! அம்மாள் பலி எடுக்கப் போறாள்! ஹுக்கும்… ஹுக்கும்… உலகம் அழியப் போகுது! உலகம் அழியப் போகுது! 

காளியின் ஊழிக்கூத்து. 

காலரூபியின் கையில் உலக கோளங்கள் நெல்லிக்காயெனச் சிதறி ஓடுகின்றன. 

காலனின் கடை விரிப்பு! 

சனங்களின் அவலக் குரல் உலகை நிறைக்கிறது. 

அந்த இளைஞனின் முகத்தில் ஓர் சிரிப்பு மின்னல்போல் வெட்டி மறைகிறது. 

காலகி எப்போது காலனாக மாறுகிறாள்? ஏன் மாறுகிறாள்? என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்ட அவன், மீண்டும் மணிக்கூண்டுக் கோபுரத்தைப் பார்க்கிறான். 

மணி ஐந்தடித்து ஓய்கிறது. 

பரபரப்பான மாலை நேரம். நாலாபக்கமிருந்தும் வாகனங் களும் ஆட்களுமாகப் பெருகிக்கொண்டிருந்தது சந்தி. 

சனங்கள் வேகமாகப் போவதும் வருவதுமாய் நகர்ந்துகொண் டிருக்கின்றனர். கைக்கடிகாரங்களைப் பார்த்தவராய் ரயில் நிலை யத்தை நோக்கி ஓடும் பலர். இன்னும் பலர் பஸ் நிலையத்தை நோக்கி ஓடுகின்றனர். ஓட்டோவை நிறுத்தி, அதற்குள் நுழையும் சிலர். சைக்கிள், மோட்டார் சைக்கிள், வான், கார் என்று பல் வகை வாகனங்களின் காதடைக்கும் இரைச்சலின் மத்தியில் விரைந்துகொண்டிருக்கும் சனம். ஒரு கட்டத்தில் எல்லோரும் காலகியின் தோற்றத்தின் மறுவார்ப்புகளாக மாறிக்கொண்டிருப்பது போல்… 

மீண்டும் அவன் கண்கள் மணிக்கூண்டுக் கோபுரத்தைப் பார்க்கின்றன. மணி ஐந்தரை என, அதன் கைகள் சுட்டின. 

அவன் சிரித்தான். 

காலம் எங்கே இருக்கிறது? 

இந்த மணிக்கூண்டுக் கைகளின் அசைவில் காலம் சிக்கிக் கொள்கிறதா? அவன் திரும்பவும் சிரித்தான். 

காலத்தைக் கைக்கடிகாரத்திலும் கோபுரத்திலும் பார்த்தவாறு ஓடும் மனிதரில் தெறிக்கும் அந்தரமும் அவஸ்தையும்! பாவம், தாமே காலத்தின் ஊற்றுக்கண்ணாய் இருந்து பெருக்கெடுப்பதை உணராது ஓடும் இந்த மனிதர்! 

ஒவ்வொருவரின் மனநிலைக்கேற்ப காலம் பெருக்கெடுக்கிறது. புரண்டு வெள்ளமாய் ஓடுகிறது. வரண்டு, வற்றித் தேங்கிச் சிறுக் கிறது. பேரலைகளாய் கரைபுரண்டெழுந்து அவர்களைத் தூக்கி எறிகிறது. 

ஒவ்வொருவருள்ளும் காலம் ஒவ்வொருவகையாகப் பெருக் கெடுக்கிறது. 

அந்த இளைஞனின் கண்கள் சற்றுத் தூரத்தில், ரோட்டோரத் தில் குந்தியிருக்கும் பிச்சைக்காரனிடம் செல்கிறது. 

அந்தப் பிச்சைகாரனிடம் காலத்தின் ஊற்றுக்கண் அடைபட் டதாய் லேசான கசிவு மட்டுமே தெரிகிறது. அவனுக்குச் சற்று அப்பால், இன்னொரு பிச்சைக்காரன் தூங்கிக்கொண்டிருக்கிறான். மாலை வெயில் அவன் தாடியில் பட்டுத் தங்கமுலாம் பூசுகிறது. அவனில் காலப்பெருக்கின் பிரக்ஞையே இல்லை. ஆனால், முன்னர் பெரிதாகப் பெருக்கெடுத்து உறைந்துபோன அதன் தடங்கள் வெயிலில் வெடித்து ரேகைவிட்டுத் தெரியும் சேற்றுப் படிவுகளாய்க் கிடக்கின்றன. 

இன்னும் சற்றுத்தள்ளி, ஓர் ஒதுக்குப்புறமாக, ஒருவர் உடலை ஒருவர் தழுவியவர்களாய் நின்றுகொண்டிருக்கும் காதலர்கள், அவர்களைக் காலம் ஒளிவேகத்தில் எங்கெல்லாமோ அள்ளிச் செல்கிறது. மெய்மறந்த நிலை. திடீரென அவர்கள் மணிகூண்டுக் கோபுரத்தின் மேலிருந்து விழுந்தவர்கள் போன்ற அதிர்ச்சியிலிருந்து எழுகின்றனர். நீருக்குள் அமுங்கிப்போனவர்கள் மேலெழ, மேலெழ நீர் வந்து அமுக்குவதுபோன்ற கால அவிழலில் சிக்குண்ட அவர்கள், சுயவிழிப்புற்று வீடு நோக்கி விரைகின்றனர். 

அவசர காரியமாகப் பல்வகை வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருள்ளும் காலம் அவர் முன்னெழுந்து பெருஞ்சூறையாய்ப் போகவிடாது பின்தள்ளுகிறது. 

அங்கு விரைந்துகொண்டிருக்கும் வாகனங்களும் மக்களும் திடீரென எறும்புகளாகி ஊர்வன போன்ற தோற்றம். 

அவன் பார்த்துக்கொண்டு நிற்கிறான். காலகியின் பலதள நிலைக் கோலங்களைக் கண்டுகொண்டிருந்தவன் முன்னே, அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த இளைஞன் வந்து நிற்கிறான். வந்ததும் வராததுமாக அவன் தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த பெரியவ னிடம் மிக ரகசியமாக, “மன்னிக்க வேணும், நான் வரச் சுணங்கி விட்டது. கனநேரமா காத்து நிற்கிறாயா?” என்றான். 

“என்ன, நீ காலகியின் ஆட்கள்மாதிரி கதைக்கிறாய்? நீ சுணங்கவும் இல்லை. நான் காத்திருக்கவும் இல்லை. நாங்கள் அகாலப் போராளிகள் என்பதை மறந்துவிட்டாயா?” பெரியவனின் கேள்வி. 

“நான் இப்போதானே உங்களோடு வந்து சேர்ந்தேன். இன்னும் என் பழைய பழக்கதோஷம் விடவில்லை.” – சின்னவனின் விளக்கம். 

“மீண்டும் ‘இப்போ’ ‘அப்போ’ என்று காலத்தை இழுக்காதே. நீ எப்போதும் எம்மோடுதான். எல்லாவற்றினது இருப்பும் அகாலமா னது. அதுதான் உண்மை வாழ்க்கை. அதை அறிவதுதான் விடுதலை. 

“எனக்கு நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லை. என்ன தான் சொன்னாலும் நாங்கள் காலத்திற்குள்ளேதானே வாழ்கி றோம்?” 

“இது பிழையான கருத்து. செக்கு இழுக்கும் மாடு பழக்க தோஷத்தில் சுற்றிச்சுற்றி வருவதுபோல் காலம் என்ற இல்லாத ஒன்றை, சுற்றிவரும் பழக்கதோஷம்.” 

“காலம் இல்லாத ஒன்றா?” 

“ஆம், இல்லாத ஒன்றே இருப்பதாக அதிகாரம் செலுத்துகிறது. பகல் விடிவதும் இரவு வருவதும், இரவில் நித்திரை கொள்வதும் பகலில் விழித்தெழுவதும் காலம்பற்றிய பொய்மையை அறியாத வனுக்கு உண்மையாய் உள்ளன. தூக்கத்தையும் விழிப்பையும் ஒன்றாகக் காண்பவனுக்குக் காலம் இல்லை.” 

“நாம் எப்போதாவது காலகியின் கட்டுக்குள் இல்லாது வாழ்ந் திருக்கிறோமா?” 

“உங்கள் மனநிலை மாறாதவரைக்கும் இந்தக் கேள்வி வந்து கொண்டுதான் இருக்கும். உங்களைப் போன்றவர்கள் காலகியின் அதிகாரத்தை மறப்பது தூங்கும்போதுதான். விழித்ததும் அவள் தான் உங்கள் எஜமான் அவள் ஆட்டிப்படைக்கும் அடிமைகள் நீங்கள். அதோ பார், ரயிலைப் பிடிக்கக் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு எத்தனைபேர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அதோ பார், இன்னும் பலர் முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸுக்குள் தொற்றுவதை… ஏன் இந்த அந்தரம், ரென்ஷன், பயம் எல்லாம்? இவற்றை வைத்துக்கொண்டுதான் காலகியின் ஆட்சி நடக்குது…!” 

“காலம் இல்லாது நீங்கள் காண விழையும் உலகிலும் வேலை, உழைப்பு, இயக்கம் எல்லாம் இருக்கத்தானே செய்யும், அதை நெறிப்படுத்தக் காலம் தேவைதானே?” சின்னவனின் கேள்வி. 

“அது பிழையான கற்பிதம். காலம் வேலையை நெறிப்படுத்துவ தில்லை. மாறாக, சீரழிக்கிறது. ஆனால், காலம் இல்லாத இயக் கத்தில் பூரண விழிப்பே ஒவ்வொரு செயலையும் சிறப்புறச் செய்விக்கிறது. தெரியுமா?” என்று பெரியவன் விளக்கிக்கொண்டி ருக்கையில்… 

“அண்ணே, அதோ பார், எங்களை நோக்கிக் காலகியின் காவலர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். என்ன செய்யலாம்?” என்ற கேள்வியில், சின்னவனின் அந்தரம் தெரிந்தது. 

“பயப்படாதே, என்னால் அவர்கள், எங்களை அண்டாமல் செய்ய முடியும்” என்று சொன்னவனாய், தன் இடது கையை உயர்த்தித் தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்கிறான். இதைக் கண்டதும் அவர்களை நோக்கி வந்த காலகியின் காவலர் திரும்பி வேறு பக்கமாகச் செல்கின்றனர். 

பெரியவன் சிறியவனைப் பார்த்துச் சிரிக்கிறான். “ஏன் சிரிக்கிறாய்?” சின்னவனின் கேள்வி. 

“நான் கையில் கட்டியிருப்பதைக் கடிகாரம் என்று நினைத்து எங்களையும் தங்களைப் போல் காலத்தைச் சேவிக்கும் காலகியின் ஆட்கள் என்று நினைத்துக்கொண்டார்கள்.” – பெரியவனின் விளக்கம். 

“அப்போ, நீ கையில் கட்டியிருப்பது கடிகாரம் இல்லையா?” மற்றவனின் கேள்வி. 

“இல்லை, இது எமது அகால இலச்சினை” என்று அவன் விளக்குகையில், “எனக்கொரு சந்தேகம். இப்போ வந்த காலகியின் காவலர்கள் எதையும் பொருட்படுத்தாது எங்களைச் சந்தேகத்தில் கைது செய்ய வந்திருந்தால்…?” என்று சின்னவனின் குறுக்கீடு. 

“அந்த நிலையில் நான் எப்போதும் எவரையும் அகால வெளிக்குள் தள்ளிவிட வல்லவனாகவே இருக்கின்றேன். அச் சந்தர்ப்பத்தில் எம்மை அணுகும் எவரும், பழக்கமில்லாத இப்புது அனுபவ நுழைவினால் தடுமாறித் தாம் வந்த நோக்கையே மறந்து விடுவர்.” 

“அகாலவெளிக்குள் தள்ளுவதா? அது என்ன?” 

“அது, உனக்கு இப்போ விளங்காது. பின்னர் விளங்கும். இனிமேல் ஆயுதங்களின் பாவிப்பே அர்த்தமில்லாததாகிவிடும். அதுக்கு இன்னும் கொஞ்சகாலம் இருக்கு. இப்போ வா போவோம் எங்கள் பாசறைக்கு. அங்கே காலம் காட்டாத வாழ்க்கை, காலம் காட்டாத இருப்பு, காலம் காட்டாத மொழி, காலம் காட்டாத வேலை, இயக்கம் என்ற புதிய ஒழுங்கைக் காண்பாய்” என்றவன் கூறுகையில் மற்றவன் ஒருவிதமாகப் பார்த்தான். 

“என்ன சந்தேகமா?” – பெரியவன். 

“என்னதான் காலம் காட்டாத வாழ்க்கை வாழ்ந்தாலும், காலன் வந்தால் சாக வேண்டியதுதானே?” 

“இன்னும் உனக்குப் புரியவில்லை. காலம் இருந்தால்தானே காலன் வருவதற்கு?’ 

“அப்போ சாவில்லையா…?” 

“புதுப்புதுத்தள இருப்புத்தான் இருக்கும், புதுவழிச் சித்தர்கள் எழுவர், புரிகிறதா?” என்று கூறியவாறே சின்னவனை இழுத்துக் கொண்டு நடக்கிறான். 

இருவரும் அகாலவெளிக்குள் சென்று மறைகின்றனர். 

– 2005

– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.

மு.பொன்னம்பலம் மு.பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *