ஷாஃனமா
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மைமந்தி என்னுடைய லக்ஷியம் நிறைவேறி விட்டதை இன்று இந்த சபையிலே அறிவிக்கச் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது” என்றான் பாரசீக வேந்தன் முஹம்மது ஸபுக்தெஜீன். அவனுடைய வார்த்தைகளில் மட்டற்ற மகிழ்ச்சி ஒலித்தது.
“நீண்ட நாட்களாக, நமது பாரசீக மன்னரின் வரலாற்றைக் காவியமாகப் பாட ஒரு கவிஞரைத் தேடி வருகிறேன் அல்லவா? கண்டு பிடித்துவிட் டேன், ஒரு மகாகவியை!”
இடுப்பில் செருகியிருந்த பொக்கிஷச் சாவி யைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே எழுந்திருந்தான். காஜா ஹசன் மைமந்தி. அவன்தான் பாரசீக அரசின் கஜானா அதிகாரி.
“சர்க்கார், தங்களுடைய ஆக்ஞைக்குக் காத்திருக்கிறேன்.”
“அபுல் காசிம் மன்சூர் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறான். அவன் பாடுகிற ஒவ்வொரு கவிக்கும், ஒரு பொன் பரிசளிப்பாயாக!”
அன்று சபை கலைந்ததும் மைமந்தி தனது ஜாகைக்குப் போகவில்லை. நேரே அபுல் காசிம் மன்சூரின் வீட்டிற்குத்தான் போனான்.
அபுல் காசிம் மன்சூர், டூஸ் பட்டணத்தில் ஒரு சிறந்த அறிவாளி என்பது மைமந்திக்குத் தெரியும். பெர்தௌசி என்ற புனைபெயரில் மன்சூர் அநேகப் பாடல்கள் பாடியிருப்பதையும் அவன் அறிவான்.
“மன்சூர், அல்லாவின் ஆசீர்வாதம் உங்களுக்குப் பரிபூரணமாக யிருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே பெர்தௌசியின் வீட்டில் நுழைந்தான் மைமந்தி.
“சலாம், உள்ளே வாருங்கள் ஹஸ்ரத்!” என்று அன்போடு வரவேற்றான், பெர்தௌசி
“நீங்கள் பாடும் ஒவ்வொரு கவிக்கும் ஒரு பொன் பரிசு கொடுக்கும்படி, எனக்குச் சுல்தான் கட்டளை!”
“சுல்தான் ஒரு பரம ரசிகன். அவன் ஆசியிருந்தால், எனக்கு இன்னும் எவ்வளவோ நலன்கள் ஏற்படும். ஆனாலும் நாணயங்கள் எனக்கு எதற்கு?” – பெர்தௌசியின் குரலில் உண்மை தொனித்தது.
“சுல்தானுடைய நன்கொடையை மறுப்பது உசிதமில்லை.”
“அப்படியானால், கவிக்கு ஒன்று வீதம் சேருகிற நாணயங்கள் அத்தனையும் சேமித்து வையுங்கள். மொத்தமாக வாங்கிக்கொள்ளுகிறேன். என்னுடைய டூஸ் பட்டணத்து உழவர்கள் மகசூல் காணவில்லை என்று தவிக்கிறார்கள். நமது தொழிலாளர்கள் உணவு போதவில்லை என்று கலங்குகிறார்கள். அவர்கள் துயரத்தைப் போக்க, டூஸ் பட்டணத்து லார் நதியில் ஒரு அணை கட்டவேண்டும். அந்தப் பணிக்கு இந்தப் பரிசுப் பொன்னை உபயோகிக்கிறேன்.”
“நல்ல யோசனை மன்சூர், அல்லாஹ் பூர்த்தி செய்வான். நான் வருகிறேன்”.
2
பெர்தௌசியின் மகா காவியம் பூர்த்தியாவதற்கு முப்பத்தைந்து வருஷங்கள் பிடித்தன. அறுபதினாயிரம் கவிகள் கொண்ட அந்த அழகிய காவியத்தை ‘ஷாஃனமா – வேந்தரின் வரலாறு’ என்று மகுடம் சூட்டி, அயாஸ் என்னும் தர்பார் உத்தியோகஸ்தனிடம் கொடுத்தனுப்பினான் பெர்தெளசி. அதைப் பார்த்த எல்லோரும் வியந்தார்கள். சொல் நயம் தெரிந்தோர் மனத்தைப் பறிகொடுத்தார்கள் சுல்தான் மெய்ம்மறந்துவிட்டான்.
“மைமந்தி, மாபெரும் யானை ஒன்று கொண்டு வா; அது தாங்கு மட்டும் பொன் சுமை ஏற்றி பெர்தௌசிக்கு உடனே கொண்டு போ!” என்று ஒரே எக்களிப்போடு சுல்தான் கூறினான்.
ஒரு யானைச் சுமை; அவ்வளவும் பொன் நாண யம்! கஜானா அதிகாரி காலைத் தேய்த்தான்!
“மைமந்தி, என்ன யோசிக்கிறாய்?”
“இல்லை சர்க்கார்-பெர்தௌசி ஒரு மகான். அவருக்குத் தங்க நாணயமும் மண் ஓடும் ஒன்று தான்! அவருக்குப் பிரயோஜனமில்லாத இந்தத் தங்க நாணயங்களை நாம் வேறு பிரயோஜனமான வழிகளில் உபயோகப்படுத்தலாமே என்றுதான் யோசிக்கிறேன்…”
“அப்படியானால்…….?”
“அறுபதினாயிரம் பாடல்களுக்கும், அறுபதினா யிரம் பொன்னுக்குப் பதிலாக அறுபதினாயிரம் வெள்ளிக் காசுகள் அனுப்பினால் போதும் என்று நினைக்கிறேன். எப்படியும் நமது அன்பிற்கு ஒரு அறிகுறிதானே?”
சுல்தான் அந்த யோசனையை ஆமோதித்தான். உடனே, அயாஸ் கிளம்பினான், அறுபதினாயிரம் வெள்ளியோடு.
3
‘அறுபதினாயிரம் வெள்ளி!..? அயாஸ், உங்கள் சுல்தான் விளையாடுகிறானா? யாருடன் விளையாடுகிறான் தெரியுமா? தெரியுமா உங்கள் சுல்தானுக்கு…?”
பெர்தௌசியின் கண்கள் இரத்தம்போல் சிவந்துவிட்டன. பல்லை நெறுநெறு என்று கடித் தான். மறுகணம் ஒரு மகாகவியின் ஆவேசத்தோடு எழுந்தான் அவன்.
“இந்தா பிடி,இருபதினாயிரம்! நீ, சொன்ன தைச் சொன்னபடி செய்யும் வேலையாள் – உன்னை மெச்சுகிறேன்!”
பெர்தௌசி அந்த அறுபதினாயிரம் வெள்ளிக் காசுகளைத் தன் கையால்கூடத் தொடவில்லை. இருபதினாயிரத்தை அயாஸிற்குக் கொடுத்தான். இன்னும் இருபதினாயிரத்தை டூஸ் பட்டணத்தில் அதிரம்யமான ‘ஹமாம்’ (ஸ்நான அறை) வைத்திருந்த தனது ‘தோஸ்த்’ ஒருவனுக்கு வெகுமதி கொடுத்தான்!
மற்ற இருபதினாயிரம் வெள்ளியையும் ரஹீமிற்குக் கொடுத்தான்; மது அங்காடி ரஹீமிற்கு!
“ரஹீம், நீதான் என்னுடைய ஆத்மாவை உணர்ந்த நல்ல ரசிகன்! அன்று நீ கொடுத்த பௌக்கா இருக்கிறதே, அரே அல்லாஹ்! அதை நினைத்த மாத்திரத்திலே போதை ‘கிர்’ என்று தலைக்கு ஏறுகிறது. பிடி உனக்கு இருபதினாயிரம் வெள்ளி – உனக்கே உனக்கு!”
பெர்தௌசியினுடைய வேகத்தை ஆற்ற முடியாமல் வெகுநேரம் திணறினான் அயாஸ்.
வீட்டிற்குள்ளே போன பெர்தௌசி கொஞ்ச நேரத்தில் முத்திரையிட்ட ஒரு கடிதத்தை அயாஸின் கையில் கொடுத்தான்.
“இருபது நாள் கழித்து சௌகரியமான நேரத்தில் இதை உங்கள் சுல்தானிடம் கொடு!”
அடுத்த நிமிஷம் பெர்தௌசி அங்கிருந்து மறைந்தான்!
4
உலக மகா இலக்கியங்கள் எதிலும் கண்டிராத ஆவேசம் அந்த முத்திரைக்குள் அடங்கியிருந்தது. மனித இதயங்களின் வெறுப்பை எல்லாம் ஒன்று திரட்டிக் கவிதையாகச் சமைத்து வைத்திருந்தான் பெர்தௌசி, அந்தப் பாடல்களிலே.
சுல்தான் பிரித்துப் பார்த்தான்:-
மகம்மதுன் தந்தையும் ஓர்
மன்னனாய்ப் பிறந் திருப்பின்
மகுடமே சூட்டி என்றன்
மகிமையைத் துதித் திருப்பாய்!
மகம்மதுன் அன்னை யென்பாள்
மாண்புடைக் குலத்தள் என்னின்
மாபெருஞ் செல்வங் கொண்டு
மகிழ்வொடு குவித்திருப்பாய்!
அந்த ஒரு செய்யுளைப் படித்ததுமே சுல்தானு டைய முகம் சிறுத்துவிட்டது. அடுத்த பாடலைப் படிக்க மனம் ஒப்பவில்லை.
”அயாஸ்…!”
அந்த அழைப்பிலே பூவுலகம் எல்லாம் நடுங்கியது!
அயாஸ், பாவம், நிரபராதி! அந்த முத்திரைக்குள் என்ன இருந்தது என்று மட்டும் தெரிந்திருந்தால், இதைக் கொண்டு வந்திருக்கவே மாட்டான்!
“பெர்தௌசியைப் பிடித்துக்கொண்டு வருபவருக்கு அறுபதினாயிரம் பொன் வெகுமதி!” என்றான் சுல்தான்.
மறுகணம் நகர முரசு அந்த ஆக்ஞையை எதிரொலி செய்தது!
5
ஊரை விட்டு ஊர்; நகரத்தை விட்டு நகரம்; தேசத்தை விட்டுத் தேசம் – அலைந்தான் பெர்தௌசி.
டார்ஜன் இளவரசன் காபூஸிடம் சென்று வாழ்ந்தான். ஆரம்பத்தில் அவன் பெர்தௌசியை அன்போடு ஆதரித்தான். பிறகு அவனுக்குங்கூட சுல்தானின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ள விருப்பமில்லை. பெர்தௌசிக்கு வேண்டிய பணம் கொடுத்து வழி யனுப்பிவிட்டான்.
பெர்தௌசி பக்தாத் சென்றான், காலிப்பிடம். அங்கு ‘திருக் குர்ஆனி’லிருந்து பிரசித்தி பெற்ற யூஸப் – சுலேகா காதலை ஒன்பதினாயிரம் குறள்களில் பாடினான். பின்னர் அங்கும் இருப்புக் கொள்ள வில்லை.
அலைந்தான். உலக சிரேஷ்டர்களில் ஒருவன் என்று இன்று மாந்தர் துதிக்கும் மகாகவிஞன் காடு மலை யெல்லாம் கடந்து கால் வலிக்க நடந்தான்.
“அலைந்து, அலைந்து என்ன கண்டோம்” என்று நினைத்து ஊர் திரும்பிய பெர்தௌசி, திடீரென்று திகைத்து நின்றான். வீதியிலே தெருப் புழுதியில் அளைந்துகொண்டிருந்த ஒரு குழந்தை, என்ன ஆச்சரியம், அழுத்தந் திருத்தமாய்ப் பாடியது :
“மகம்மதுன் தந்தையுமோர்
மன்னனாய்ப் பிறந்திருப்பின்,
…….”
பெர்தௌசி, அந்த இடத்தில் ஒரு வினாடி நின்றான். தான் இயற்றிய பாடலை ஒரு குழந்தை கூட அல்லவா பாடுகிறது!
“உலகம் என்னை உணர ஆரம்பித்துவிட்டது! இனி சுல்தானைப் பற்றி என்ன கவலை!”
‘விறு விறு’ என்று வழி நடந்தான். சுல்தா னுடைய உதாசீனத்தை உலகம் வெறுக்கிறது. தன்னிடம் பூரண அனுதாபம் கொள்கிறது என்ற நினைவு அவன் இதயத்தை இன்ப ஆவேசப் புயலில் சுழற்றியது!
6
காலம் என்பது, எத்தகைய கோபத்தையும், எந்தத் துக்கத்தையும், எவ்விதக் கசப்பையும் குணப் படுத்தும் பரம ஔஷதம் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு.
சுல்தானுக்குப் பெர்தௌசியிடமிருந்த வெறுப்பும், கோபமும், காலப்போக்கிலே தணிந்தன.படிப்படியாக அவனுடைய பெருமையுங்கூடத் துலங்க. ஆரம்பித்தது.
அந்தியின் மயக்க இருள், டூஸ் பட்டணத்திலே, சாய்ந்துகொண்டிருந்தது. வியாபகமான அந்தப் பட்டணத்தின் வடக்கு வாசல் வழியாக அயாஸ் ஒரு பார வண்டியிலே தங்க நாணயச் சுமைகளோடு சென்றான். இத்தனை நாளும் தேசாந்திரியாகத் திரிந்து கொண்டிருந்த பெர்தெளசி,இப்பொழுது டூஸ் பட்டணத்திற்குத் திரும்பி விட்டான் என்ற செய்தியைக் கேட்டுவிட்டு சுல்தான் அந்த வெகுமதியை அனுப்பினான்.
கதவைத் தட்டினான் அயாஸ். யாரோ ஒரு கிழவன் வந்து திறந்தான்.அயாஸ் அவனைக் கூர்ந்து பார்த்தான்: நிச்சயம், அது பெர்தௌசியில்லை.
“பெர்தௌசி இருக்கிறாரா?”
“நீங்கள் யார்?”
“சுல்தான் மகம்மது இபூசபூக்தஜீன் அனுப்பிய வேலைக்காரன்.”
“விசேஷம்?”
“ஷாஃனமா என்னும் மகத்தான காவியம் புனைந்த கவிஞர் திலகத்திற்கு வெகுமதிகள் கொண்டு வந்தேன், சுல்தானிடமிருந்து!”
“உங்கள் சுல்தானுடைய ரசிகத்தன்மை சற்றுப் பிந்திவிட்டதே!”
“என்ன!”
“உலக மகா கவிஞர்கள் முடிவாகச் சென்ற இடத்திற்கு நமது மகாகவியும் சென்று விட்டார்!”
அயாஸ் அப்படியே மனமுடைந்து சாய்ந்து விட்டான். அவனுடைய துக்கத்தை இன்னொரு மகா கவிஞனால் தான் கூற முடியும்!
டூஸ் பட்டணத்தின் வடக்கு வாசலிலே சுல்தான் அனுப்பிய பார வண்டி தங்கச் சுமையுடன் நின்றது. தெற்கு வாசல் வழியாக அந்த உலக மகாகவி பெர்தௌசியின் உடல் சென்றது!
– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: August 9, 2025
பார்வையிட்டோர்: 373
