கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 1, 2025
பார்வையிட்டோர்: 309 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சங்கரா சிரித்தான். அவனுக்குத்தெரிந்தது அதுதான். போடா அந்தப்பக்கம் என்றான் டீக்கடைக்காரன். மறுபடியும் டீக்கடைக்காரனைப் பார்த்துச் சிரித்தான் சங்கரா. பொசு பொசுவென்று கோபம் வந்திருக்கவேண்டும். ஏதோ தன்மானக்குறைவாய் நினைத்த டீக்கடைக்காரன், பாய்லரிலிருந்து கொஞ்சமாய் பிடித்து அதை சங்கராவின் மூஞ்சியில் வீசினான். சுருக்கென்று சுருங்கிய முகம் சிறிது நேரத்தில் மெதுவாய் மலர சங்கரா சிரித்தான். ‘எலேய்.. சடைப்பயலெ போடெ அந்தப்பக்கம். காலங்காத்தால டீக்கடைக்காரரு கையில வெந்நீ பட்டு சாவாதே! போடா.போ.’ பாவம் பார்த்துச் சொன்னான் பக்கத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த அந்த நடுவயதுக்காரன்.

கனகசபையின் கைகால் நரம்புகள் புடைத்து, முறுக்கேறி கண்கள் கோபத்தில் தகித்துக்கொண்டிருந்தன. மூக்கில் படும் எந்தவொரு நீர்த்துளியும் ஆவியாகிவிடக்கூடிய அளவு அபாயம். கைப்பிடியில் அபலையாயிருந்த தொலைபேசி நிம்மதிப்பெருமூச்சோடு தன் இருப்பிடத்துக்குத் திரும்பிய நேரம் ‘யோவ்.. ஏட்டு, வாய்யா இங்கெ..’ என்று கூப்பிட்டார். குரலின் அதிர்வெண் அறிந்த ஏட்டு வேகமாய் வருவதற்காகத்தான் முயன்று பதட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தார்.

“ஐயா..!?” வழக்கத்தை விட பவ்யம் காட்டவேண்டியிருக்கிறது. ‘காட்டுப்பய.’

“என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்கான் இந்தத் தேவடியாப்பய. வந்த நாள்ல இருந்து ஏகமா கொடச்சல் குடுத்துக்கிட்டு இருக்கான். என்னெ என்ன பொட்டப்பயன்னு நெனைச்சுட்டானா? அவன் பொண்டாட்டியைக் கூட்டியாந்து விடச்சொல்லுய்யா, நா யாருன்னு காமிக்கிறேன். அன்னக்கி என்னடான்னா அந்த கலெக்டர் முண்ட முன்னாடி வெச்சு என்னைக் கேவலப்படுத்துறான். ஒரு ராத்திரி வீட்டுக்கு போன் பண்ணி கன்னாபின்னான்னு திட்டுறான். என்னய்யா, பெரிய மயிரா இவென்? மூணு எழுத்து படிச்சுட்டு வேலைக்கு வந்துட்டா சேவுகம் பண்ணணுமாக்கும், இந்தப் பொம்பளைச்சட்டிப் பயலுகளுக்கு. ரெம்பத்தாய்யா ஆடுறான். என்னை யாருன்னு தெரியாம பண்ணுறான். எங்கிட்டேயே இப்படி பண்ணிக்கிட்டியிருந்தான்னா அப்பறம் லாரிக்கடியிலதான் கெடப்பான். ஆமா”

“மன்னிச்சுக்குங்கய்யா. ஏதாவது கோபத்துல பெரியய்யா அப்படி பேசியிருப்பாரு. எல்லாம் சரியாயிரும். ஏழெட்டு வருசமா நீங்க தானெய்யா இங்கெ எஸ்.அய்யி. ஏரியாவுல நடக்குற நல்லது கெட்டது எல்லாத்துலேயும் முன்னாடி நிக்கிறவுக. எந்தக் கச்சி ஜெயிச்சு வந்தாலும் அந்தக் கச்சி ஆளு நீங்க. எல்லாம் போக ஜமீனு குடும்பம் வேற! வெவரம் புரியாமெ பேசியிருப்பாரு விடுங்கய்யா. ஆனாலும் புது டிஎஸ்பி ரெம்பத்தான்ய்யா படுத்துறாரு”.

“ஒன்னைவிட வாடா மவனே”

“இந்த தேவடியாப் பயலுக்கு என்னப்பத்தி என்னய்யா தெரியும்? ஏதோ இந்த கேசுல துப்பு தொளக்க முடியலேன்னா அதுக்காக என்ன வேணுன்னாலும் பேசிடுறதா? பன்னெண்டு மணிக்கி கடையப் பூட்டிட்டுத்தான் போனேன்னு சூப்பர்வைசரு சொல்லுறான். சேல்ஸ்மேனும் ஆமா, கூட இருந்தேங்குறான். ரெண்டு ரெண்டரை மணிக்கு எவனோ உள்ளே பூந்து கடையை ஒடச்சிருக்கான். சரக்கை யெல்லாம் அள்ளிட்டுப்போயிருக்கான். சரக்கு வித்த காசு நாலாயிரத்தை எடுத்துட்டுப் போயிருக்கான். சூப்பருவைசரும் சேல்ஸ்மேனும் சத்தியம் பண்ணுறாங்கெ. எவந்தாய்யா பண்ணியிருப்பான்?”

“ஐயா, சொல்லுதேன்னு தப்பா நெனைக்கக்கூடாது. அவிங்க ரெண்டு பேரையும் நம்ப முடியலைங்கய்யா. கூட்டியாந்து ரெண்டு சாத்து சாத்தி விசாரிக்கணுமுங்கய்யா. எனக்கென்னமோ சந்தேவமா இருக்கு.”

“யோவ் ஏட்டு, நீ கண்டுபுடுச்சுட்டியாக்கும். பெரிய சிபிஐ இவரு. அவிங்க எங்க சாதிப்பயலுக. அப்புடில்லாம் பண்ணமாட்டாங்கெ. பேசாமெ பிரைவேட்டு ஆளுங்களே இந்தப் பிராந்திக்கடைகளெ நடத்தியிருக்கலாம். அரசாங்கம் எடுத்து டாஸ்மாக் கீஸ்மாக்குன்னு நம்ம உயிரை வாங்குது. நாலுகாசு பாக்கவும் வழி இல்லாமெ இப்புடி திருட்டு கிருட்டுன்னு வேற நாய் மாதிரி அலைய வேண்டியிருக்கு. போய்யா போ. போயி ரெண்டு வடையும் டீயும் வாங்கிட்டு வா. ரெண்டு சிகரெட்டும்.”

“சரிங்கய்யா. பேனைப் போட்டுக்குங்க. வேர்க்குது பாருங்க. ‘ஒன்னைய மொதல்ல காலி பண்ணுறேன் பாரு’

‘உனது பெயர்?’

‘திருவேங்கடம்’

‘வாட்? தெருவெங்க்டாம்?’

‘ஆமாடா..தேவடியாப்பயலெ!’

‘வாட்? இடது பக்கம் திரும்பி, என்ன சொல்கிறான் இவன்?’

‘ஆமாமய்யா. திருவேங்கடம். டி.எச்.ஐ.ஆர். யு. வி.இ.என்.ஜி. எ.டி.எ.எம்.’

‘என்ன குற்றம்?’

‘ஒட்டன்சத்திரம் வந்த துரை அய்யாவைக் கொலை செய்யத் தீட்டம் தீட்டியது. தனது பண்ணையில் வேலை செய்யும் ஆட்களை நமக்கு எதிராகத் தூண்டிவிட்டது. நமது சட்டங்களுக்கு எதிராகவும் ஆட்சிக்கு எதிராகவும் இவனது நண்பன் மூக்கையாத்தேவனுடன் இணைந்து கையெழுத்துப்பிரதி வெளியிட்டது. அவற்றை நமது சொத்துக்களின் மீது ஒட்டி அவைகளுக்குச் சேதம் விளைவித்தது. நமது மாட்சிமை பொருந்திய ராணியார் திண்டுக்கல் நகருக்கு வருகை தந்தபோது அவரது வண்டிக்கருகே ஆணவமாய் வெடிவெடித்து குதிரையை மிரளச்செய்தது.’

சின்னச்சங்கரன் சந்தில் காலை வியாபாரம் சூடு பிடித்தது. விடிந்ததும் முதலில் விளக்கு வைத்து வியாபாரத்தை ஆரம்பிக்கும் குப்பாயி நெளிந்து கிடந்த இட்லிப்பானையை எடுத்து அடுப்பில் வைத்தாள். இருபது முப்பது வருடமாய்ச் சோறு போடும் இட்லிப்பானை அது. காலை அகலவிரித்து வைத்துக் கொண்டவள் பானையை அடுப்பில் வைத்துவிட்டுக் கை எடுத்துக் கும்பிட்டாள். தெருநாய் ஒன்று நிமிர்ந்து பார்த்து படுத்துக்கொண்டது. லேசான காற்று சந்துக்குள் சந்தேகமான சுதந்திரத்தோடு நுழைந்து பரவ தெருமுனை சாக்கடை வீச்சம் சந்துக்குள் இலவசமாய் உலவியது.

சைக்கிளை நிறுத்தி இறங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக கொட்டாவி விட்டுக்கொண்டு பூக்கடைக்காரன் கடையைத் திறக்க, இறக்கைகளில்லாத தட்டானாய்க் கிடந்த சரசு படக்கென்று எழுந்து சேலையைச் சுற்றிக்கொண்டு ஜாக்கெட்டைத் தேடி சரிசெய்தாள். பிறகு, ‘மன்னிச்சுக்க கோவாலு, ராத்திரில போலீசு தொல்லை தாங்கல. அதான் செத்தநேரம் இங்கெ கெடந்தேன்’ என்றாள். ‘ம்ம்’ போட்ட கோவாலு, ‘அடிக்கடி வராதே சரசு. எம் பொண்டாட்டிக்கித் தெரிஞ்சா அவளே போலீசுல ஒன்னைப் பிடிச்சிக் கொடுத்துருவா. அப்பறம் என்னையும் போட்டு அடிப்பா’ என்றான் கொஞ்சம் இரக்கத்தோடு. ‘அதுக்குத்தான் அவளே வேணுமுன்னு கட்டிக் கிட்டியாக்கும் அடி வாங்க..’ லேசான கிண்டல் தொனியில் அவள் சொல்ல, மெதுவாக மென்று விழுங்கினான் அவளைப் பார்த்துக் கொண்டே!

‘என்ன படித்திருக்கிறாய்?’

‘உன்னையும் உன் கூட்டத்தையும் இந்நாட்டை விட்டு விரட்டி விடும் அளவுக்கு தன்னம்பிக்கையையும் வீரத்தையும் திண்மையையும் படித்திருக்கிறேன். அது போதும் வாழ்வதற்கு வாழ்வதற்கு என்றும் நினைக்கிறேன்.’

உனது தந்தை பெரிய ஜமீன்தாரராமே. கேள்விப்பட்டேன். அத்தனை சொத்துக்கும் நீதான் ஒரே வாரிசு என்றும் கேள்விப் பட்டேன். செய்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள். இனிமேல் என் வாழ்நாள் முழுவதும் இம்மாதிரி செய்கைகளில் ஈடுபட மாட்டேன் என்றும் உத்தரவாதம் எழுத்து மூலம் கொடு. மூன்று வருடம் கழித்து உன்னை நானே உனது ஊருக்கு அனுப்பி வைக்கிறேன். நீ எங்களிடம் மாட்டிக்கொண்ட பொழுது உன்னுடன் இருந்தாளே ஒரு அழகிய பெண் அவளுடன் இணைந்து சந்தோசமாய் வாழலாம். ஜமீன் வாரிசு பிழைத்துப்போ. இல்லையேல் இந்த அந்தமான் சிறையில் உனது ஆண்குறி அழுகி உதிரும் வரை கிடந்து சாக வேண்டியிருக்கும். என்ன சொல்கிறாய்?’

‘உனது மட்டும் அழுகாது என்பது என்ன நிச்சயம்?’

அந்த ஆங்கில அதிகாரியின் கண்கள் கோபத்திலிருக்க இதழ் கெட்ட வார்த்தைக்காக பிரிந்து மூடியது.

மூக்கையாத்தேவனின் தங்கை நாச்சரம்மாள் அவன் காலடியில் விழுந்து அழுதாள். எக்காரணம் கொண்டும் இதைக் கலைத்து என்னை உயிரோடு கொன்று விடாதே என்று அரற்றினாள். தன் கண்ணெதிரில் தன் தங்கையின் வாழ்வு கருகுவதை மிகுந்த வேதனையோடு உணர்ந்து சிலையாக நின்றான் மூக்கையாத்தேவன். கண்களுக்குள் ஒரு அழகிய பசுமையான இளங்கொடி தீக்குள் விழுந்து எரிவதாய்த் தோன்ற கண்களைத் திறந்தான். ஒரு தீர்மானத் தோடு அவளது பிடியில் இருந்து நழுவிப் பிரிந்தான்.

“யோவ் ஏட்டு, எவ்ளோயா பணம் வெச்சிருக்கெ?”

‘படக்கென்று எடுத்து ஒளித்து வைக்கவா முடியும்?’ “பாஞ்சு ரூவா இருக்குங்கய்யா, என்னங்கய்யா வேணும்? ஏதாச்சும் வாங்கி வரணுமாங்கய்யா?”

“ஆமாய்யா. ரெண்டு பொம்பளையும் நாலு நிரோத்தும் வாங்கிட்டு வா. ஆளப்பாரு. பாஞ்சு ரூவா வெச்சுக்கிட்டு என்னங்கய்யா வேணுமாம் என்னங்கய்யா? பாஞ்சு ரூவாய்க்கி என்ன மயிரையா வாங்க முடியும்? வந்துட்டாங்கெ வயித்தைத் தள்ளிக்கிட்டு. யோவ் அந்த டி.எஸ்.பி நாலு நாளா ராத்திரி பகலா போன் பண்ணுறான்யா. டாஸ்மாக் ஒயின்ஷாப் திருட்டு பத்தி ஒடனே ஏதாச்சும் செய்யணுமாம். கவர்மெண்ட்டு சமாச்சாரம், மேலிடத்துல அரிக்கிறாங்கன்னு அவனும் பொலம்புறான்ய்யா. என்னய்யா பண்ணுறது?”

“நம்மால் முடியலேன்னு சொல்லிடலாங்கய்யா. அவங்களே ஒரு டீம் போட்டு எங்கொயரி பண்ண ஆரம்பிச்சிருவாங்க. நம்மளும் ஒதவி அது இதுன்னு ஏதாவது பண்ணி இந்தத் தொந்தரவுலேயிருந்து தப்பிச்சிரலாமுய்யா.”

“ம்ம். ஐடியாலாம் நல்லாத்தான் குடுக்குறே! இப்படியே குடுத்துக் குடுத்து ஏட்டாயிட்டே போலயிருக்கு! என்னய்யா அப்புடியா?”

“ஹி.ஹி..இல்லங்கய்யா…” ‘மவனே.. நீயும் அப்படி புரமோஷன்லே வந்தவன்தானடா’

சின்னச்சங்கரன் சந்திற்கு சற்றுத் தள்ளியிருந்த குட்டையில் எருமைகள் குளிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான் சங்கரா. மலப் புழுக்கள் நெளிவது போலிருந்தது. கொம்புடைய மலப்புழுக்கள். கண்களை மூடியவனுக்குள் திடுமெனத் துவங்கி ஓடியது அது. எதுவென்று இதுவரை தெரியவில்லை. நேராக ஓடி வளைந்து மீண்டும் நேராக ஓடுகிறது. மெல்ல ஆழ்ந்து பார்க்கிறான். ஓட்டத்தின் பின்னணியை அமைதியாக உற்று நோக்குகிறான். மெல்லிய நீல வானமாக எதுவோ இருக்கிறது. எப்போதும் அடையமுடியாதபடி அது ஓடுகிறது. ஒரே ஜீவனாய் அது ஓடினாலும் அதற்குப்பின்னே நிறைய ஓடி வந்திருக்க வேண்டும். ஓடி வந்த ஆயிரக்கணக்கான அதுகளில் ஏதோ ஒன்றுதான் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் வந்தததாய் இருக்கவேண்டும் இது. பின்தொடர்ந்து வந்தவைகள் என்னானது? இரும்புக்கோட்டை மூடப்பட்டிருக்கும். மோதி விழுந்திருக்க வேண்டும். தலை தப்பியது இதுவாகத்தான் இருக்கும். தலை தப்பி வந்ததது எதற்காக?

சரி எதுவரைதான் இது ஓடும்? ஓடும் வரை ஓடட்டும். அமைதியாக உற்றுநோக்கலாம். பின்புலத்தின் வீச்சுதான் புரியவேயில்லை. வானம் போன்ற நீலக்கலர் மெல்ல சில நேரங்களில் மாறுகிறது. வெள்ளைச்சுவற்றில் ரத்தக்கறை கோடுகோடாய்ப் படிந்திருக்கிறது. பிறகு நீளும் நீலம். நீலம் சிதிலமாகும் தருணத்தில் பச்சையாய் ஏதோ தொடர்கிறது. பச்சையும் நிரந்தரமாய் இல்லை. பச்சை முடிந்த பொழுதில் பின்புறமும் முடிந்தது போன்ற நிகழ்வு. திடுமென்று அது மோதுகிறது. ‘அம்மா’ என்கிறான். கண்கள் கலங்குகின்றன. மெல்ல கண்விழிக்கும்போது முகமெல்லாம் எரிகிறது. வெந்நீர் நல்ல சூடாகத்தான் இருந்திருக்கிறது.

‘எதற்கடா நீ இப்போது இங்கு வந்தாய், என்னையும் எங்காவது காவு கொடுத்துவிட்டு மொத்த சொத்துக்களையும் மோசடி செய்து விடலாம் என்றா?’

‘அய்யா! தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.’

‘இனியும் என்ன கேட்க வேண்டியிருக்கிறது? பெறாத தவமாய்ப் பெற்றிருந்தவனை இழக்க வைத்து விட்டாயல்லவா? மொத்தமாய் இழந்துவிட்டுக் கொள்ளி போடக்கூட வழியில்லாமல் இதோ செத்துக்கொண்டிருக்கிறோமே! இனிமேலும் என்ன கேட்க வேண்டியிருக்கிறது?’

‘அய்யா.. தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். என் உயிரைக் கொடுத்தாவது திருவேங்கடத்தை, என் உயிர் நண்பனை நான் காப்பாற்றுவேன். தயவுசெய்து எதையும் தவறாக நினைக்காதீர்கள். என் கடமை இது. என் நண்பன் வாழவேண்டும். நானே போய் சரண்டர் ஆகி விடுகிறேன், எல்லாவற்றிற்கும் நானே காரணம் என சொல்லிவிடுகிறேன். நீங்கள் தயவுசெய்து அழாதீர்கள். என் நண்பனின் தந்தையையும் தாயையும் அழவைத்த பாவம் எனக்கு வேண்டாம்.’

‘நிறுத்து. உனது உதவி எதுவும் எங்களுக்கு இப்போது தேவை யில்லை. முதலில் மரியாதையாக இங்கிருந்து போய் விடு. இல்லையேல் உனது கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிடுவேன். அவ்வளவு கோபம் இருக்கிறது. போய் விடு. ஆசைத்தேவர் எங்களது குடும்பத்திற்கே விசுவாசமானவர். அவரது மகனான நீ இப்படி எங்களுக்குத் துரோகம் செய்வாய் என்று கனவிலும் நினைக்க வில்லை. எனது குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டுவந்து நாசப்படுத்தி விட்டாய்.. போ.. போய்விடு.’

‘அய்யா..’

‘இப்போது நீ போகப்போகிறாயா? இல்லை நாங்களும் உன் கண் முன்னால் தற்கொலை செய்துகொள்ளட்டுமா? எல்லாச் சொத்துக் களையும் நீயும் உன் தங்கையுமே எடுத்துக்கொள்ளலாம்.’

‘அய்யா.. என்ன பேசுகிறீர்கள்? வயதில் பெரியவரய்யா நீங்கள். இப்படியெல்லாம் பேசக்கூடாது. அய்யா…’

‘போய் விடப்போகிறாயா? இல்லை..?’ குரல் குமுறலோடு உயருகிறது.

மூக்கையாத்தேவன் மனச்சஞ்சலத்தோடும் தாங்கவொண்ணா துயரத் தோடும் வெளியேறுகிறான்.

‘என் மகன் திரும்பி என் மகனாய் வராவிட்டாலும் பரவாயில்லை. இதோ போகிறானே இவனது தங்கையின் புருஷனாக மட்டும் என் கண்ணிலும் நான் காணக்கூடாது. ஜாதி விட்டு ஜாதி மாறி இந்தத் திண்ணியப்ப நாயக்கன் வீட்டில் திருமணமா?கேவலம்! முதலில் இவனை வெட்டிப்போடுங்கள். எல்லாவற்றிற்கும் இவன்தான் மூல காரணம்.’

‘வேண்டாம், விட்டு விடுங்கள். மிகவும் நல்ல பெண் அவள். மகனைத்தானே பிரிந்திருக்கிறோம். அவளாவது நம் அருகிலே இருக்கட்டுமே.. அவளது வயிற்றில் கூட..’

‘ச்சை! எழுந்து போ.. நாயே! கேவலம். நாயக்கனின் வாரிசு தேவனின் வீட்டில். செத்துப்போய் விடு. எல்லாம் சரியாகிவிடும்.’

திண்ணியப்ப நாயக்கனின் மனைவி சுவற்றில் போய் விழுந்தாள்.

கோவாலுவிடம் பேசிவிட்டு எழுந்து வந்ததிலிருந்து அடிவயிறு வலித்துக்கொண்டே இருப்பதைத் தாமதமாகத்தான் உணர்ந்தாள் சரசு. அவ்வப்போது இது வருவது சகஜமானபோதிலும் நேற்று வந்து விட்டுப்போன தடியனின் மீது எரிச்சலும் கோபமும் சேர்ந்து பொருமிக்கொண்டு வந்தன. காலை அகற்றி வைத்து நடந்து வந்தவள் குப்பாயிக்கிழவியைக் கண்டதும் சாதாரணமாக நடக்க முயன்று தோற்றாள். வழக்கத்திற்கு மாறாக தனது கடையைத் தாண்டிப் பேசாமல் போகும் சரசுவை, ஆச்சரியமாகப் பார்த்த குப்பாயிக்கிழவி, ‘என்னடியாச்சு? ஒடம்பு கிடம்பு செரியில்லையா?’ என்றாள் உண்மையான கரிசனத்தோடு.

இட்லிக்கடையின் வடக்குப்பக்கத்தில் வந்தமர்ந்தவள், ‘ஆமாங் கெழவி, அடுப்பும் இட்லிப்பானையும் வலிக்கி’ என்றாள், லேசான புன்னகையோடு.

மற்றநேரங்களில் சிரித்து விட்டுப்போகும் குப்பாயிக்கிழவிக்கு இன்று கோபம் வந்தது. ‘ஏண்டி, கேடு கெட்டவென் மவளே! இந்தப் பொழப்பு ஒன்னைய யாருடி பொழைக்கச் சொன்னா? இதா என்னியப்பாரு. எத்தினி வருஷம். இதே பானை. இங்கேயே கடை. ஓடலையா பொழப்பு. எதுக்குடி அதெல்லாம்?’

‘அடப்போ கெழவி, எல்லாம் ஆயிப்போச்சி. எப்போ என்ன ரயில்வே ஸ்டேசன்லே இருந்து கூட்டிட்டு வந்தியோ அன்னக்கி ஆரம்பிச்சேன் பூ வியாபாரம். கெட்டேன். அப்புறம், அந்த வியாபாரம், இந்த வியாபாரம். எல்லாம் போச்சி. இந்தா ஒன்னைய மாதிரி அடுப்பு இட்லிப்பான போட்டுத்தான் கடைசியா பொழப்ப ஆத்த வேண்டியிருக்கு. எல்லாப் பொம்புளகளுக்கும் ஆண்டவன் இதக் கொடுத்துருக்கான் கெழவி, ஒண்ணுமே ஆவாட்டியும் இத வெச்சாவது பொழச்சிங்குங்கடின்னு. அதான் இப்ப சோறு போடுது. போ கெழவி.’

குப்பாயிக்கிழவிக்கு மனசு குறுகுறுவென்றது. லாரிக்கடியில் செத்துப்போன அவனது மகனை மனசாரத் திட்டினாள். ‘ஒரு பொண்ணோட வாழுவைப் பொசுக்கிட்டுப் போயிட்டியேடா பொறம்போக்குப் பயலெ!’

‘என்ன கெழவி கம்முன்னு இருக்கெ.. எதுத்துப் பேசறேன்னு வருத்தப்படுறியா? ஒன்னைய விட்டா எனக்கு யாரு கெழவி? அடுப்பு, பானை எல்லாம் ஒடஞ்சி இங்கெ வந்து விழுவேன் பாரு. அப்போ ரெண்டு இட்டிலி குடு. அப்போத்தான் நானும் சும்மா கெடக்க முடியும். பாவம்ன்னு எல்லாரும் சும்மா விடுவானுக!’

நாச்சாரம்மாவின் பாதத்தில் விழுந்து வணங்கினார்கள் அவளது மகனும் மருமகளும். திருமணக் கோலத்தில் நின்றவர்களை நிறைந்த கண்ணீரோடு அணைத்துக்கொண்டவள், மகனது கையை எடுத்து விரித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். மண் வெட்டும் அவனது உள்ளங்கைகள் காய்த்துக் கருத்துப் போயிருந்தன. பிறகு மாமாவின் காலிலும் விழுந்து வணங்கிக்கொள்ளுங்கள் என்றாள். காலில் விழுந்த நாச்சாரம்மாவைத் தூக்கி விட்ட கணங்கள் கண்களில் நிழலாட உணர்ச்சிக்குவியலாய் அழுதபடியே அவர்களை ஆசீர்வதித்தார் மூக்கையாத்தேவர். கண்களுக்குள் திருவேங்கடம், ‘நன்றி நண்பா!’ என்றான்.

“யோவ்… எங்கய்யா கண்ணன், திருப்பதி..? எல்லோரையும் வரச் சொல்லுய்யா. ஒரு வேல இருக்கு.’

“ம்ம். சொல்லுங்க அய்யா. என்ன பண்ணனும்?”

“ஒரு முடிவுக்கு வந்துட்டேன்யா. டாஸ்மாக்ல திருடுனவனைப் புடிக்கப்போறோம்.”

“எப்புடிங்கய்யா. ஏதாச்சும் தகவல் வந்துச்சா….?”

“அதுலாம் அப்புறம் சொல்லுறேன். இப்போ கேக்குற கேள்விக்கிப் பதிலச் சொல்லுங்க. யோவ் ஏட்டு.. நீ எல்லாத்தையும் நோட் பண்ணிக்கய்யா. கேள்வியையும் பதிலையும்.”

“என்னக்கியா திருட்டுப்போச்சி? எத்தினி மணிக்கி?”

“போன மாசம் பாஞ்சாந்தேதி. நடு ராத்திரி 2 மணிக்கி.”

“என்னென்ன காணாமப்போச்சி?”

“ரெண்டு கேசு பிராந்திப்பாட்டிலும், நாலாயிரம் ரூவா காசும் போச்சி. அப்புறம் ரெண்டு குவார்ட்டர் பாட்டிலும் உள்ளேயெ ஒடச்சிக் கெடந்தது. திருட வந்தவன் அதைத் தொறந்து குடிச்சிட்டு ஒடச்சிருக்கணும்.”

“ம்ம். இதுலே ஒரு இக்கு வச்சுக்கோ. உள்ளேயே அவன் குடுச்சுருக்கான். சரியா? இங்க ஒரு ஆம்பளையின்னு எழுதிக்கோ! அப்புறம், நாலாயிரம் ரூவா.. பணமா? சரி. ரெண்டு கேசாய்யா பிராந்திப்பாட்டிலு?”

“ஆமாங்கய்யா..”

“சரி. கண்ணன் கான்ஸ்டபிள் ஐந்நூறு போடு. திருப்பதி கான்ஸ்டபிள் ஐந்நூறு போடு. ஏட்டு சுப்புரமணி ஆயிரம் போடு. எஸ்.ஐ. கனகசபை ரெண்டாயிரம் போடு. மொத்தம் எவ்வளவுய்யா வருது?”

“நாலாயிரங்க.”

“சரி. கணக்கை முடி. சேல்ஸ்மேனையும் சூப்பருவைசரையும் என்னய வந்து பாக்கச்சொல்லு. சரியா? வேறொண்ணுமில்லை. இன்னயோட இந்த ‘கேச’ இழுத்து மூடிறலாம். ஒரு ‘இக்கு’ இருக்குலய்யா, அதுக்கு அடுத்து வழி பண்ணணும்.”

பணம் போகும் எரிச்சலோடு எல்லோரும் எழுந்து போனார்கள். கனகசபை கணக்குப் பண்ணினார். ‘இந்த ரெண்டாயிரத்துக்கும் ரெண்டு கேசுப் பாட்டிலுக்கும் கூட அவங்களைத்தான் ஆட்டையப் போடணும். திருடிப்புட்டு சும்மா போறதுன்னா சாதிக்காரப் பயல்களானாலும் விட்டுறமுடியுமா?’

நாச்சாரம்மாள் சரசுவைக் கூட்டிக்கொண்டு திருவிழாவுக்குப் போனாள். வழியில் யாரோ அவளிடம் விஷயத்தைச் சொல்ல அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடிவந்தாள். ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்தான் அவளது மகன். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் நிறைமாத கர்ப்பிணியான அவளது மருமகள். கத்தியால் இவனைக் குத்திவிட்டு, அவளைத் தலையில் அடித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

‘சொத்து கேட்கவா வருகிறாய் சொத்து கேட்க? திண்ணியப்ப நாயக்கர் செத்துப்போய் இருபது வருடம் ஆகிறது, திருவேங்கடம் செத்துப்போய் முப்பது வருடம் ஆகிறது, சொத்து கேட்க வருகிறானாம், சொத்து கேட்க?! வாரிசாடா நீ? தேவன் வீட்டில் பொறந்தவன், நாயக்கன் வீட்டுக்கு வாறான், சொத்து வாங்க! இது அனாதைச் சொத்து இல்லேடா. அவங்க சித்தப்பன் சொத்து. இந்தச் சாத்தப்பன் சொத்து.’ சாத்தப்பன் குரூரத்தில் சிரித்தார்.

மண்டைக்குள் மலப்புழுக்கள் நெளிந்தன. சங்கரா படுத்திருந்தான். ஓட ஆரம்பித்து விட்டது அது. என்றைக்குமில்லாது அசுர வேகத்தில் ஓட ஆரம்பித்தது. நீலமும் கருப்பும் கலந்த நிகழ்வைப் பின்புலமாக்கி ஓடத்துவங்கி விட்டது. தலைகூட முளைத்திருப்பதாய்த் தோன்றியது அவனுக்கு. அதையே பார்த்தான். நிகழ்வுகள் மாறுகின்றன. ஏதோ ஒன்று எங்கோ நிழலாட கணத்துளிகள் அரவம் கொள்கின்றன. பிறகு சலனம். ஏதோ நடக்கப்போகிறது. என்ன அது ? யாரோ வருகிறார்கள். அவனருகில் வந்து படுத்துக்கொள்கிறார்கள். போர்வையை இழுத்துப்போர்த்தி நெஞ்சோடு அவனைக் கட்டிக்கொள்கிறார்கள். லேசான மல்லிகைப்பூ வாசனை. அது சரசு!

“என்னய்யா? வேட்டைக்கித் தயாரா? கெளம்பலாமா?”

“ம்ம். கெளம்பலாங்கய்யா. இதுதான் செம வெயிட்டு.”

“யோவ்.. ஏட்டு! எஸ்.ஐ யா புரமோஷன் வாங்கணுமுன்னா சும்மாவாயா கெடக்கு? நல்லாப் புடிச்சுத் தூக்கு. யோவ் நீங்களும் புடிங்கய்யா. அடுத்து ஏட்டாகணுமுல்லெ!”

“எங்கேல்லாம் போறோமுய்யா? மொதல்லெ மார்க்கெட்டு. அங்கெ சிக்குனா சரி, இல்லாட்டி மத்த எல்லா ஏரியாவும். செரிதானேய்யா?”

“செரிதாங்கய்யா.”

மலப்புழுக்களுக்கு மல்லிகைப்பூ வாசனை பிடித்திருக்கிறது. சந்தோசமாக நெளிந்து உழல்கிறது. சங்கரா வண்ணங்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

புழுக்களின் நசநச சத்தத்தோடு எங்கிருந்தோ கசிந்து வந்தது ஒரு சத்தம். சரசு முனகினாள். அவளின் ஒட்டுமொத்த உடலும் கொதித்தது. காய்ச்சலில் எரிவது போலிருந்தது உடம்பு. சங்கரா அவளது நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். நெற்றியில் பரவிய முடிகளை விலக்கி விட்டவன், அவளது தாடையைப் பிடித்து அசைத்தான். ம்ஹும். அவள் அசையவே இல்லை. மெதுவாக எழுந்தான். எழுந்த அவனை இழுத்து மறுபடியும் அணைத்துக் கொண்டாள் சரசு.

சரசுவையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் சங்கரா. மண்டைக்குள் மலப்புழுக்கள் நெளிந்தன. சூறாவளிக்காற்றில் தூசுகள் பயணிக்கும் வேகத்துடன் பயணிக்கின்றன அவை! என்ன இது? உறையவைக்கும் மாற்றங்களுடன், பின்புலமா இது? ஏதோ நீலமும் பச்சையுமாய் பரவிக்கிடந்த பின்புலமா இது? ஆங்காங்கு ரத்தத்துளிகள் சிதறிக்கிடந்த பின்புலமா இது? என்ன இது? ஏன் இப்படி? நான் யார்? நான்தான் ஓடுகிறேனா, இரும்புக்கதவு தாண்டி இடைவிடாமல் ஓடி வந்தது நான்தானா? ஆக இந்தப் பின்புலங்கள்?

படம் துவங்குவதைப்போல எங்கிருந்து இது தொடங்குகிறது எனத் தெரியவில்லை. கரடுமுரடான பாதைகளின் வழியே காட்சிகளாய் ஓடுகின்றன. யார் யாரோ பேசிக்கொள்கிறார்கள். புரிந்தும் புரியாதது மாய் வார்த்தைகள்; பாஷைகள். ஸ்மரணையற்றுக் கிடப்பவனின் மூளைக்குள் நடக்கும் உரையாடல்கள் போல அவை. ஏதோ ஒரு ஒளிக்கீற்று இருட்டுக்குள் நுழைந்து வெளியேறுகிறது. ஒளிக்கீற்று வெளியானவுடன் ஹா, திரை பிரகாசமடைகிறது. வண்ணங்களற்ற காட்சி! யாரோ ஒருவரைக் கேள்வி கேட்கிறார்கள். பதில் சொல்லுபவரின் முகம் மிகவும் ஒளி வீசுகிறது. எங்கேயோ பார்த்திருக்கிறேனோ? கேள்வி கேட்டவனுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை போலும். காலால் உதைக்கிறான் அவரை. அவ்வளவுதான், உதைத்த மறுவினாடியில் ‘சரட்’டென்ற சத்தத்துடன் குறுக்காக விழுகிறது கோட்டையின் கதவு போன்ற கனமான இரும்புத்திரை. பிறகு தொடர்ந்து இருட்டு. வெறுமையான இருட்டு.

“என்னய்யா பண்ணுறெ? கதவைத் தட்டுய்யா.”

“தட்டுறேங்கய்யா. யாரும் தெறக்கலை. ஒருவேளை ஆளு இல்லையோ?”

“எங்கேயோ பொயிட்டா தேவுடியா மக? தொறந்து பாருய்யா! எவங்கூடவாவது படுத்துத்தான் கெடப்பா. இவதான்யா கடைசி, இவளை விட்டோம் அவ்ளோதான்!”

அரவமின்றி தொடர்கிறது காட்சி. திடீரென்று மெல்லியதாய் மிகுந்த ஏக்கம் உண்டாக்கும் இரவலான இசை பரவுகிறது. பின்புலத்தில் மீண்டும் ஆட்கள் நடமாட்டம். வண்ணமும் கருப்பு வெள்ளையுமாய் கலந்து நிறைக்கும் பின்புலம். குளம் வெட்டுவதைப்போல சத்தம். ஆளுக்கு ஆள் இரைகிறார்கள். ஏதோ ஆட்சியைப் புகழ்கிறார்கள். பிழைக்க வழி வந்ததாய்ப் பேசுகிறார்கள். தெரிந்தவனைப் போல ஒருவன் மண் வெட்டுகிறான். அவனையே பார்த்துக்கொண்டிருக் கிறாள் மண் வெட்டும் இன்னொருத்தி. ஹா. இப்பெண்ணையும் எங்கோ பார்த்திருக்கிறோமே. தொடர்ந்து இரைச்சல்கள். என்ன நடக்கிறது என்பதையறிய முடியாதபடி இரைச்சல்கள். திடீரென்று குழந்தை அழும் சத்தம். ‘பெண்குழந்தையா பெண்குழந்தையா’ எனக் கேட்கின்றன நிறைய குரல்கள். கனமான நிசப்தம். பிறகுதான் அது நடக்கிறது.

தொப்புளான் போன்ற தலையுடைய அது வேகமாக நீந்தி வருகிறது. காட்சியில் கருமை. சிறிது நேரத்தில் காணவில்லை அதை. பிறகு நான் ஓடுகிறேன். பலவிதமான பின்புலங்களின் வழியே நான் ஓடுகிறேன். ‘சளுக்’ கென்று சத்தம். உணர்வெங்கும் ரத்தம். கோடு கோடுகளாய் கீற்று கீற்றுகளாய் நொருங்கிய கண்ணாடி போல சிதறி விழுகின்றன அவை. பிறகு பின்புலத்தில் எவையுமில்லை. மலப் புழுக்கள் மட்டும் மண்டைக்குள் நெளிகின்றன.

“அங்கே பாருடா கெடக்கா! புடிடா அவளை! எத்தினி வாட்டி கதவைத் தட்டுறோம், வெக்கம் சொரணை இல்லாமெ எவனையோ கட்டிப்புடிச்சிட்டு காசு பாக்குறா பாரு. அடிடா அவளை!”

சங்கரா விழித்துப் பார்த்தான். நான்கைந்து போலீஸ்காரர்கள் அருகில் நின்றார்கள். கனமான எதையோ அவர்களில் ஒருவன் உள்ளே கொண்டுவந்து வைத்தான். பாட்டில்களா?

“எழுப்புடா அவளை! மயங்கிட்டாளா இவங்கிட்டே! தூக்கு.”

“இல்லேங்கய்யா… இவென்.. அவளோட..”

“அடத்தெரியுமப்பு நீ பொத்து. ஒரு ‘இக்கு’ இருக்குல்ல. அதுக்குத் தான் இது! நீங்க ஏண்டா பாத்துக்குட்டு நிக்கிறீங்க.. ஜீப்புல ஏத்துங்க. அமுக்கினேன் பாத்தியா? கோழிய அமுக்குற மாதிரி. யாருடா நான்? கனகசபை. சாத்தப்பன் மகன் கனகசபை.

சரசுவின் காய்ச்சலால் உடம்பு முழுவதும் அனலாய் பரவ, வாயைத் திறந்து வைத்துக்கொண்டு நாற்காலியில் சாய்ந்து கிடந்தான் சா.கனகசபை. திறந்திருந்த வாய்க்குள் அதை வைத்து விசையை இழுத்தான் சங்கரா. வெடிச்சத்தத்தில் கம்பிகளுக்குப் பின்னே கிடந்த ‘சரசக்கா’வின் உடல் குலுங்குவதாய்த் தோன்றியது. மண்டைக்குள் மலப்புழுக்கள் செத்து விழுந்தன. ஓடி வந்தவர்களைப் பார்த்துச் சலனமேயில்லாமல் சிரித்தான் சங்கரா.

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *