வெண்சங்குகள்
கதையாசிரியர்: நிர்மலா சந்திரசேகர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 162

வழக்கம் போல பரபரப்பான காலை நேரம். இன்றும் அப்படி தான்.என் பெயர் கொண்ட விக்னேஷ்வரன் காலை பத்து மணிக்கு என் முன் வந்து நின்று கை கூப்பி வணங்கி, கண் அவர் விட்ட காலனியை பார்த்துக்கொண்டே, வாய் எதையோ வேண்டிக் கொண்டே, கை கன்னத்தில் போட்டபடியே கிளம்பி விட்டார்
நான் ஒரு வீட்டின் வெளியே மூன்று தெருக்கள் கூடும் ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமைக்கப்பட்ட பிள்ளையார். அன்பு வினாயகர் என் பெயர் .அவசரமாக வேலைக்கு செல்பவரின் வேண்டுதல் கடவுள்.
இந்த அவசர யுகத்தில் வேக வேகமாக செல்பவருக்கு கோவிலுக்கு போய் வேண்டுதல் சொல்ல நேரமில்லாதது நியாயம் தான்.
காலையில் இந்த வீட்டின் வேலை செய்யும் பெண் விஜி, என் இடத்தை சுத்தம் செய்து, புது பூக்கள் மாற்றி, விளக்கை துடைத்து, தீபம் ஏற்றி என் இடத்தின் முன் அழகிய கோலம், போட்டு மங்கலகரமாக மாற்றுபவள். பக்கத்து தெருவில் இருக்கும் இராஜ கணபதிக்கு கூட என் மாதிரி மங்கலகரம் இருந்தது இல்லை. அவர்கள் வீட்டுக்கு வேலைக்கு ஆள் இல்லை வீட்டு ஓனரே பொறுப்பு எடுத்துக்கொள்வதால், சில நேரம் பூக்கள் மாற்றாமல் சிறிய கோலத்துடன் கூட காடசி அளிப்பார்.
எதிர் தெருவில் இருக்கும் செல்வ கணபதிக்கு ஒரு ஐயர் வந்து சுத்தம் செய்து,மந்திரம் ஓதி, அவரே பூட்டை திறந்து, அவரே மூடி சென்று விடுவார்.எனக்கு விஜி செய்கின்ற சர்விஸ் ரொம்ப திருப்தி தருகிறது .ரொம்ப சந்தோஷம்.
ஆனால் ஒரே ஒரு விஷயம் நெருடலாக இருக்கிறது.வீட்டு சாவி.எங்கள் வீட்டு ஓனர் அம்மா வேலைக்கு போறவங்க. பூஜைக்காக சங்கு வடிவ அபிஷேகப்பாத்திரம் இங்க என் அருகில் இருக்கும். தீப ஆராதனைக்கு தூபகலசம், ருத்ரணி, நீர் வெளாவ சின்ன பித்தளை சொம்பு, ஊதுவத்தி ஸ்டேன்ட் இத்தனையும் என் அருகில் இருக்கும். இதில் சங்கு பாத்திரத்தில் வீட்டு சாவியை போட்டு விட்டு செல்வார் ஓனர் அம்மா
ஒரு மணி வாக்கில் விஜி வந்து சாவியை,எடுத்து வீட்டை திறந்து,வீட்டு வேலை முடித்ததும் அவள் தோழிகள் அனுசியா, ராணி இவர்களும் விட்டிற்குள் நுழைந்து டீவி பார்ப்பதும், ஏசி போட்டு படுப்பதும், குளித்து ட்ரெஸ் செய்து கொண்டு, அரட்டை அடித்தபடி ஒரு மூணு மணி வாக்கில் வெளியேறி போவதுமாக இருப்பது ரொம்ப நெருடலாக இருந்து வருகிறது. இன்றும் அப்படி தான். ஆனால் வரும் போதே சோகமாக விஜி ராணியிடம், ‘பணத்துக்கு என்னப்பண்ணபோறேன்னே தெரியல? ஹாஸ்பிடல்ல அப்பாவை விட்டுட்டோம்’னு புலம்பியபடியே உள்ளே நுழைந்தது தெரிந்தது. ஆச்சு மணி ரெண்டு முப்பது. கதவை பூட்டி விட்டு சாவியை சங்கு பாத்திரத்தில் போட வந்தனர். வெளியே வரும் பொழுது கையில் கையில் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் எண்ணியபடியே சிரித்தபடி சாவியை சங்குப்பாத்திரத்தில் போட்டு விட்டு கிளம்பினர் மூவரும்.
ராஜகணபதி, செல்வகணபதி விட்டில் எல்லாம் எப்படி. இப்படியா. என்ன நடக்குது. இதை ஹவுஸ் ஓனர் எப்படி எடுத்துக்கொள்வார்.வெகுளியாக இருக்கிறாரா?. ஆறு, ஏழு மணி வரை என்னவோ தோணியது.
ஏழுமணி வாக்கில் ஹவுஸ் ஓனர் லஷ்மிஅம்மாள் சாவி எடுக்க வந்தார்கள் கூடவே போன் வேறு. ”சொல்லு விஜி .ஏன். ஏன். நான் பத்து எடுத்துக்க தானே சொன்னேன். அஞ்சு போதுமா? சம்பளத்தில பிடிச்சிக்கறேன். பிடிச்சிக்கறேன். நீ தான் பிடிவாதக்காரியாச்சே? நான் வேண்டான்னா விட்டுடுவியா. பிடிச்சிக்கறேன். நீ நான் சொன்னா கேக்கவா போற.”
“ஏசி க்கு உன் தம்பிய சர்விசுக்கு அனுப்பறியா. சத்தம் வருதா ஓகே ஓகே.அப்பாவுக்கு எப்படி இருக்குனு அப்புறம் ஞாபகமா போன் பண்ணி சொல்லு”.
“விநாயக சதுர்த்தி வருது. நம்ப அன்புகணபதியை சூப்பரா அலங்காரம் பண்ணனும் வச்சிடட்டா”. சாவியை சங்கு பாத்திரத்திலிருந்து எடுத்துக்கொண்டார் ஹவுஸ் ஓனரம்மா.
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் பொருளாச்சே.சங்கு இல்லை சங்குகள். அன்பு சங்குகள்.