வீம்புக்கு மருதாணி





(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முந்திக் கதை,
அப்போது குடியிருந்த வீட்டில் எங்களைச் சேர்த்து இரண்டு குடித்தனங்கள். நாங்கள் வந்து ஒரு மாதத்துக்குப் பின் அந்தக் குடித்தனம் ஏறியது.
முற்றத்தில் மருதாணி மரம்.
ஸார், என்னிலும் பத்து வயதேனும் இளையவர். புது நாட்டுப் பெண். மாமியார், நாத்தனார், நாத்தனாருக்கு ஒரு பெண், சின்னஞ் சிறுசு.
நாத்தனாரும் மன்னியும் வெகு ஒற்றுமை. மாமியார் பசு : ஸார், தங்கை மேல் உயிர்.
உத்தியோக ரீதியில் காலையில் போனால், விளக்கு வைக்கும் நேரத்துக்குத்தான் திரும்புவார். அதிகமாகப் பேச மாட்டார். முசிடு இல்லை. குரலும் தூக்காது. பேச்சு குரல், தோரணை எல்லாமே அமைதி. அழுத்தத்தில் அமைதி. Strong, Silent Male. அப்படியிருக்க எனக்கு ஆசை. ஆனால் அம்சம் இல்லையே!
துளசி,ஏதோ பள்ளியில் ஆசிரியையாக இருந்தாள். குடும்பத்துக்கு அவளால் இயன்றது குருவிக்கணக்கில் இருக்கலாம். ஆனால் குடும்பம் என்றால் எல்லாமும்தான் தேவையாயிருக்கிறதே! சுயகௌரவம் வேறே.
துளசி நல்ல நிறம். ஆனால் அழகு என்று சொல்வதற் கில்லை. அடர்ந்த ஆண் புருவம். சிறு கூடு. துருதுரு வென்றிருந்தாள். அவள் வளைய வருவதைக் காண்கையில் எனக்குச் சூரியனின் கதிர் நினைப்பு வந்தது. காலைக் கதிரின் உற்சாகத்தோடு கலந்த மாலைச் சோகம்.
துளசியின் நெற்றி வெறிச்சாயிருந்தது. ஆனால், கழுத்தில் சரடு தெரிந்தது. சரடு மட்டும்தான்? யார் வழிக்கும் யாரும் போகக்கூடாது என் கொள்கை பார், கவனி புழுங்கு, ஆனால் கேளாதே.
துளசி என்னோடு பேசுவதில்லை. Good. ஆண், பெண் இடையே அந்த ஒதுக்கம்தான் முறை எனும் கருத்தினன் நான். அந்தப் பரஸ்பர அத்துவில் ஒரு கலையழகு கண்டேன்.
பொதுவாக அந்தக் குடும்பம், பழகவும் கவனிக்கவும்: சந்தோஷத்தை விளைவித்தது.
ஆனால் – இதுதானே. புல்லில் பாம்பு! எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஏரி அமைதி. காற்றில் அலண்டாற்போல்; அங்கே சலனம் உணர்ந்தேன். அது உடனே வெளிக் காட்டவில்லை. அதன் சுழல் வெகு ஆழத் தினின்று உள்ளேயே திரள் கட்டிக்கொண்டு, வெளித் தெரிய வில்லை. கிசு… கிசுகிசு… கிசு… குமையல்…
ஸார் முகத்தில் கல் இறுக்கம் கண்டது. அதைக் கண்டு மாமியாருக்கும், நாட்டுப் பெண்ணுக்கும் பேஸ்து அடித்தது.
துளசிக்கு முகத்தில் காலைக் கதிரொளி கூடியது. லேசாகப் பாட்டு முனகல்கூட.
கூடிய சீக்கிரம் இரு குடும்பங்களின் மூதாட்டிகளிடையே விஷயம் உடைந்தது.
துளசியின் கணவன் வயணமில்லை. புதுக்குடித்தனத் தின் ஆறு மாதங்களுக்குள் நகைகள் காலி. அப்புறம் பண்டம். பாத்திரங்களின் படிப்படியான மறைவு. எங்கே போயின, எப்படிப் போயின? தெரியல்லியே மாமி! இத்தனைக்கும் கெட்ட பழக்கங்கள் இருப்பதாகத் தெரி யல்லே; சிகரெட் தவிர. ஆனால் இப்போ யார் பிடிக்கல்லே?
மளிகை. பால், அரிசி, வாடகை என்று எங்கும் பாக்கி வைத்துவிட்டுக் காணாமல் போய்விடுவானாம். இதுபோல் சாபம் மாமி! இதுவரை நான்கு முறைகள் ஆகிவிட்டன. சாபம்” மாமி தலையில் அடித்துக்கொண்டாள்.
அண்ணா பொறுமைசாலி. பொறுமை, கடலினும் பெரிது. ஆனால் கடைசி முறையில் கரை புரண்டுவிட்டது. இனிமேல் அவனுக்குச் செருப்பு. துளசியை எச்சரித்து விட்டார். பிறகு தங்கைக்கு ஆசிரியை வேலை தேடித் தந்தார். இங்கே குடித்தனம் வந்தபோது, குடும்பத்தின் நிலை இது.
இப்போ என்ன?
மூன்று வாரங்களுக்கு முன் துளசியின் கணவன் கண்ணில் பட்டானாம். பள்ளியின் தெருமுனையில் காத் திருந்து துளசியை மடக்கிச் சந்தித்து வாழ அழைக்கிறா னாம். மீண்டும் மீண்டும்.
ஓஹோ. அதான் துளசியின் புது மலர்ச்சியா?
எங்கே பஹுதூர், தூர் வானம் மௌனமாகக் குமுறு கிறது. இங்கே நெஞ்சு இடிகிறது. வான்விளிம்பில் மின்னல் படபடக்கிறது-தேவியின் விஷம கண்சிமிட்டல். ஆனால் அவளுடைய வேடிக்கை அவளுக்கே புரிகிறதோ?
அதோ வெகு எட்டத்தில் அலை திரள்கிறது. அதன் பெரிது இங்கே கரையிலிருந்தே தெரிகிறது. உருண்டு, திரண்டு, உயர்ந்து, விலகி புடைத்து கரை நோக்கி வருகிறது. கரை நோக்கித்தானே வரவேண்டும்! அதன் விதி வேறு.
எது? வந்தும், கரைமீது மோதி-
ஒருநாள் அவர்கள் கூடத்தில் உடைந்தது.
துளசி அவள் குழந்தை கையைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
“போயிட்டு வரேன் அண்ணா!”
அவர் அவளைக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. வெற்றிலைச் சுண்ணாம்புத் தடவிக்கொண்டு இருந்தார்.
பட்டுப்பட்டும், சொல்லச் சொல்லப் போறே. சரி. ஆனால் மறுபடியும் இங்கே படியேறமாட்டாய் என்றே எதிர்பார்க்கிறேன்; எக்காரணத்தைக் கொண்டும்-
எனக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. அந்த அமைதி, அந்த தோரணை, பொறுக்கியெடுத்த சொற்கள், ஊடே ஒரு Menoce.
பிள்ளை பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மாமி, பெண் பக்கம் நடந்தாள்.
அதற்கும் பிள்ளை முகம் நிமிரவில்லை.
ஒருநாள் தற்செயலாய் மாமியை மார்க்கெட்டில் சந்தித்தேன்.
“நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரக்கூடாதா? துளசியை சீர்வாதம் பண்ணக்கூடாதா?”
பதில் சொல்லத் தெரியாமல், அசட்டுச் சிரிப்பு சிரித்தேன். “சௌக்யம்தானே?” என்றேன்.
“எல்லாம் உங்கள் ஆசீர்வாதம். துளசி, வாழ ஆசைப் படுவது நியாயமில்லையா? ஆனால் ஸேது ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டான்.”
மாமியே இரண்டு பக்கமும் பேசிவிட்டாள். ஆனால் நியாயத்துக்கு இரண்டு முகம்தானா? நியாயமெனும் ஸ்படிக முப்பட்டகம்.
ஸார் வீடு மாற்றிக்கொண்டு போய்விட்டார். எனக்குத் தரிந்தவரை, அவர் அப்படி அவசரமாகப் போகும்படி, இங்கே அவருக்கு வசதிக் குறைவு இல்லை. ஆனால் அவரவர் சௌகரியம், சௌகரியமே நியாயம்,
என்னவோ நினைப்பு வந்தது. இங்கு இருந்தவரை துளசி அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்வாள். எனக்கு ஒரு குழப்பம். அவளே பறித்து, அவளே அரைத்து அவளே இட்டுக்கொள்ளும் நிலைமையில், ஆட்டுக்கல்லிலோ, அம்மி யிலோ மருதாணியை ஒரு கையால் தள்ளித் தள்ளி அரைக்கும் போதோ. அந்தக் கையில் பற்றிக் கொள்ளாதோ?
இல்லை. அழகுக்காக இட்டுக்கொள்ளவில்லை.ஏதோ ஒரு கனவைத் தன்னோடு இருத்திக்கொள்ளும் வீம்பில் இட்டுக்கொண்டாளோ? மருதாணிக் கனவு. கனவின் வீம்பு.
கனவின் வீம்பு.
ஒரு நாள், வாசல் அறையில் நான் ஏதோ பைலைப் புரட்டிக்கொண்டிருக்கையில், ஜன்னல் வழி நிழல் தட்டிற்று. தலை நிமிர்ந்தால் வெளியே மாமி.
“இன்னிக்கு நீங்கள் கட்டாயம் வந்தே ஆகணும்.துளசி உங்களை அவசியமாப் பார்க்கணுமாம். மறக்காதேங்கோ.” நிற்கவில்லை. போய்விட்டாள்.
Slum area மீன் கடை இரைச்சல். நாற்றம்கூட. பல தரப்பட்டோர் குடித்தனங்களிடையே வளை போன்று அவள் இடம். வளை போன்று இருட்டு.
“மாமா வாங்கோ வாங்கோ, சத்தே குனிஞ்சு – ஆனால் நான் தலையில் இடிச்சுண்டாச்சு. “ஐயோ ஸாரி, உக்காருங்கோ. என்ன சாப்பிடறேள்? காபி. ஹார்லிக்ஸ் B.V?”
அவள் பின்னாலிலிருந்து மாமி வேண்டாம் என்று அவசரமாக சாடை காட்டினாள். ஒருவரை ஒருவர் பார்த் துக்கொண்டு மெளனமாக நின்றோம். எந்நேரமோ?
சடக்கென்று அவள் முகம், அவள் கைக்குள் புதைந்தது. விக்கி விக்கி மாரே வெடித்துவிடும்போல்…
தலை நிமிர்ந்தபோது அவள் முகம் கொழுந்து விட்டெரிந்தது.
“எனக்கு அவசரமா ஐம்பது ரூபா வேணும்.”
நல்லவேளையாக பர்ஸில் அவள் கேட்டது இருந்தது. ஏதோ அவசரச் செலவுக்கு அன்றுதான் புரட்டினேன். ஆனால் யார் தேவை, முன்?
வெகு நாட்களுக்குப் பின்.
பிற்பகல் மூன்று மணி இருக்கும். சேத்துப்பட்டு மேம் பாலம் வழி போய்க்கொண்டிருந்தேன்.
ஸ்டேஷனுக்கு இறங்கும் இடத்தில், மூன்று ரௌடிகள் ஒருத்தியைச் சூழ்ந்துகொண்டு கலாட்டா பண்ணிக்கொண் டிருந்தார்கள். நான் ஒன்றும் சூரப்புலி இல்லை. என்னைக் கண்டதும் நழுவிவிட்டார்கள். ஒருகணம் எங்கள் கண்கள் சந்தித்தன. ஆனால் அவள் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் ‘விர்’ரென்று படிக்கட்டு வழியிறங்கி மறைந்து போனாள்.
மீண்டும் வெகுவெகு நீள இடைக்காலத்துக்குப்பின், மாலை வேளை மவுண்ட்ரோடு.
ஆபீஸ் விட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். முதல் தேதி சம்பளம். குழந்தைகளுக்கு 100 கிராம் சாக்லேட். என் பங்கு போகும் வழிக்கு – அதோ யார், எனக்கு நாலடி முன்னால்.
‘துளசி!’ வெடுக்கெனத் திரும்பினாள். என்னைப் பார்த்ததும் முகத்தில் சூரியன் புறப்பட்டது.
என்ன பேசுவதென்றே தெரியவில்லை. பேசாமல் கையை நீட்டினேன். ஐந்தாறு சாக்கலேட்டுகள்.
ஒன்று எடுத்துக்கொண்டாள்.
“எல்லாம் உனக்குத்தான். கமலிக்கு வேண்டாமா?” இன்னொன்று எடுத்துக்கொண்டாள். “நான் வரேன் மாமா” சரசரவென ‘ஜே ஜே’வில் மறைந்துவிட்டாள்.
ஏன், இந்த அவசரம்? என்னிடமிருந்து ஓட ஏன் இவ்வளவு கவலை?
வருடங்கள்.
நாங்கள் வீடு மாறி வேறு ரோந்துக்கே போய் விட்டோம். காலை ஆபீஸ் நேரம்.
அந்த பஸ் ஸ்டாப்பில் நான் ஏறுவதில்லை. அதுவே என் ‘ரூட்’ இல்லை. வேறு ஜோலியாக அந்தப் பக்கம் வந்து இசைகேடாக மாட்டிக்கொண்டு விட்டேன்.
‘மாமா சௌக்யமா?’
வயது 18, 19 இருக்கும். தோளில் பை, கையில் டிபன் பாக்ஸ்.
“என்னைத் தெரியல்லியா? கமலி.”
“ஓ!”
கேட்க ஆயிரம் கேள்விகள், பேச ஆயிரம் வார்த்தைகள் ஒரே சமயத்தில் முந்திக்கொண்டு நாக்கு நுனிக்கும் போட்டி யிட்டன.
“அம்மா சௌக்கியமா?” கத்தினேன். அவள் என்ன சொன்னாளோ, சொன்னதை பஸ் தன்னோடு அடித்துக் கொண்டு போய்விட்டது. கையை ஏதோ பலமாக ஆட்டுவது தான் தெரிந்தது.
ஜங்கிளில் திக்குத் தப்பி நின்றேன்.
தனக்கும் பயனின்றி, எதற்கும் பயனின்றி வெறும் வியர்த்தத்துக்கே ஒரு பிறவியில் உன் எண்ணம் என்ன, நியாயம் என்ன?
– தினமணி கதிர்
– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |