விட்டில் பூச்சிகள்





(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 10
“நீ பேசறதெல்லாம் நல்லார்க்கா மஞ்சு?” அப்பா நிதானமாக கேட்டார்.

ரொம்ப நாள் கழித்து அப்பா நேருக்கு நேர் தன்னோடு பேசியதால் ஒரு நிமிடம் மஞ்சு பேசவே தயங்கினாள். அம்மாவிடம் பேசியது போல் எடுத்தெறிந்து அப்பாவிடம் பேச முடியாமல் தடுமாறினாள்.
“உங்களை நா படிக்க வெச்சுது உலகத்தை நீங்க தெரிஞ்சுக்கணும், அறிவை வளர்த்துக்கணும், யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. எந்த சூழ்நிலையையும் நீங்க சமாளிக்கத் தெரிஞ்சுக்கணும்னுதான் மஞ்சு. இப்டி எடுத்தெறிஞ்சு பேச இல்ல.”
“என் கல்யாணத்தை முடிவு செய்யற உரிமை எனக்கில்லையாப்பா?”
“தாராளமா. உனக்கு பிடிச்சிருக்குன்னு நீ சொல்றவனைத்தான் கட்டி வெப்போம். நாங்க பார்க்கற பையனை பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு சொல்ற உரிமை உனக்கிருக்கு.”
“எனக்கு இப்பொ கல்யாணம் வேண்டாம்ப்பா.”
“உனக்காக நா ஒரு அருமையான பையனை பார்த்திருக்கேன் மஞ்சு, ரொம்ப நல்ல மனுஷங்க. அடுத்த வாரம் அவங்க இங்க வருவாங்க. நீ பொம்மை மாதிரி நிக்க வேணாம். கீழே விழுந்து கும்பிட வேண்டாம். சாதாரணமா உட்கார்ந்து கேஷீவலா பேசிப்பார். அதுக்கப்புறம் கல்யாணம் வேணாமா, வேணுமான்னு சொல்லு போதும்.”
மஞ்சு ஏதோ சொல்ல வாயெடுக்க, “போதும் மஞ்சு இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். பெண்கள் சுதந்திரமா வானத்துல பறக்க வேண்டியதுதான். அதே நேரம் கயிறு எங்க கைலதான் மஞ்சு இருக்கணும். அதான் உங்களுக்கு நல்லது. கட்டறுத்துக்கிட்டு போனா பிஸிகல் அரேன்ஜ்மென்ட்டுன்னு கொஞ்சம் முந்தி நீ சொன்ன உங்க உடம்புக்குத்தான் ஆபத்து. உலகத்துல நிறைய முள்வேலிகளும் தந்திக் கம்பிகளும் உண்டு. கிழிஞ்சு காணாம போயிடுவ ஜாக்ரதை.”
அப்பா மிக கண்டிப்பாக கூற, மஞ்சு செயலிழந்து நின்றாள்.
இரவு முழுக்க மஞ்சு தூங்கவில்லை. அழகான, அந்தஸ்தான ஒரு வாழ்க்கை அவளுக்காக காத்திருக்கும்போது அப்பாவுக்கு பயந்து எதற்கு அதை இழக்க வேண்டும். இது வரை அவள் யாரையும் காதலித்ததில்லை. ஆனால் முதன் முதலில் ஒருவனால் காதலிக்கப்படுகிறாள். அதுவும் சாதாரணமானவன் அல்ல. ஒரு ராஜகுமாரனால். தலை கீழாக நின்றாலும் அப்பாவால் இவ்வளவு அழகும் அந்தஸ்தும் நிறைந்தவனை மாப்பிள்ளையாக கொண்டு வந்த நிறுத்த முடியாது. இவர் அந்தஸ்துக்கு சாதாரண குடும்பத்தோடுதான் சம்பந்தம் பேசியிருப்பார். மிஞ்சிப் போனால் அவனுக்கு இவளுக்கு நிகரான சம்பளமோ ஒன்றிரண்டு நூறுகள் அதிகமாகவோ இருக்கலாம் அவ்வளவு தான்.
நடுத்தர வர்க்கத்தில் பிறந்து விட்டதால் அதே வாழ்க்கைதான் தொடர வேண்டுமா என்ன? பணம் பணத்தோடு சேரவேண்டும். வறுமை வறுமையோடு சேர வேண்டும். நடுத்தரம் நடுத்தரத்தோடு இணைய வேண்டும் என்பது என்ன சித்தாந்தம்? இந்த சித்தாந்தத்தை உடைப் பதற்காகத் தான் இறைவன் காதல் என்ற அற்புதமான அஸ்தரத்தையும் படைத்திருக்கிறானோ. அழகும் அந்தஸ்தும் பணமும் தானாக இறங்கி வந்து இவளிடம் ஐ லவ் யூ என்கிறது! இதை வேண்டாம் என்று சொல்வது முட்டாள் தனமில்லையா? அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் அப்பாவின் நோக்கம் என்றால் அவரைவிட இவள் தேடிக்கொள்ளும் வாழ்க்கை நல்ல வாழ்க்கையெனில் அவரை மீறுவதில் என்ன தவறு? நல்ல வாழ்க்கையைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் மனம் மாறுகிறார். அவர் விருப்பப்படியே வரன் வரட்டும். தாராளமாக அவளைப் பார்க்கட்டும். அதன் பின்னர் இந்த பையனை பிடிக்கவில்லையென்று சொல்லி விட்டால் போகிறது. எதற்கு பயப்பட வேண்டும். எத்தனை பெண்களை பிடிக்கவில்லையென்று ஆண்கள் சொல்லியிருக்கிறார்கள். பிடிக்கவில்லையென்று சொல்லும் உரிமை அவர்களுக்கு மட்டும்தானா? மஞ்சு ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். அதன் பிறகு நிம்மதியாக தூங்கினாள்.
காலையில் எழுந்து சகஜமாக கிச்சனுக்கு வந்தாள். அம்மா சொல்லிக் கொடுத்தபடி உருண்டை குழம்பு செய்து டேஸ்ட் பார்த்தாள். நன்றாகவே வந்திருந்தது. டிபன் பாக்ஸ் ஒன்றில் கொஞ்சம் குழம்பை எடுத்து மூடி வைத்த பிறகு குளிக்கப் போனாள்.
அம்மா வியந்தாள். நேற்று இரவு அப்பா பேசியதற்கு அவள் விடிந்ததும் பத்ரகாளியாய் சண்டை போட்டுக் கொண்டு சாப்பிடாமல் போவாள் என்று தான் நினைத்தாள் அவள். பரவாயில்லை அப்பா கத்தினதும் பெண் அடங்கித்தான் விட்டாள். உள்ளுக்குள் புருஷனை மெச்சிக் கொண்டாள் அவள். சரியான நேரத்திற்கு லகானை இழுத்து பிடித்து விட்டாரே என்று.
தன்னை ஒரு தேவதையாக மாற்றிக் கொண்டு உருண்டை குழம்பை பத்திரமாக கைப்பையில் வைத்து எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் மஞ்சு.
சரியாக சாப்பாட்டு நேரத்திற்குதான் வந்தான் அசோக். வந்ததும் வராததுமாக மிக சீரியசாக கோப்புகளில் மூழ்கி போனான். தானாக அவனிடம் போய் எதுவும் பேச இயலாமல் தவித்தாள் மஞ்சு. இரண்டு மணிக்கு மேல்தான் சோம்பல் முறித்தபடி கோப்பிலிருந்து தலை நிமிர்ந்தான். எழுந்து சென்று கை கழுவி விட்டு சாப்பாட்டு டேபிளில் அமர்ந்தான். வீட்டிலிருந்து வந்த கேரியரைப் பிரித்தான். உருண்டைக் குழம்பு பற்றி அவனே கேட்பான். என எதிர்பார்த்த மஞ்சு, அவன் எதுவும் கேட்காமல் வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்த போது என்ன செய்வதென புரியாமல் தயங்கினாள். மறந்து விட்டானா? அதெப்படி? மறக்கக்கூடிய ஒன்றா காதல்?
குழம்போடு அவளே சென்றால் மகிழ்வானா? மதிப்பானா அல்லது இளக்காலமாகப் பார்ப்பானா? ஏன்? அவன்தானே கேட்டது? கொடுத்தால் என்ன தவறு?
மஞ்சு வேகமாக சென்று தன் கைப்பை திறந்து குழம்பு பாக்ஸோடுவந்து அவன் பின்னால் நின்று லேசாக செருமினாள்.
“யெஸ் மஞ்சு… என்ன வேணும்?”
மஞ்சு பாக்ஸை அவன் முன் வைத்தாள்.
“என்னது?”
“உருண்டைக் குழம்பு.”
“நா உருண்டைக் குழம்பு கேட்டா ஆயிரம் பேர் கொண்டு வந்து இப்டி வெச்சுட்டு போவாங்க தெரியுமா?”
மஞ்சு திகைப்போடு பார்த்தாள். மளுக்கென்று அவள் கண்கள் நிறைந்தது. பத்தோடு நீயும் பதினொன்று என்கிறானா?
“உண்மையா காதலிக்கறவ இப்டி வெச்சுட்டு போக மாட்டா. தன் கையாலயே பறிமாறி ஊட்டி விடுவா.”
“யப்பா…நா பயந்தே போய்ட்டேன்” மஞ்சு கண்ணீரோடு சிரித்தாள்.
“அதுக்குள்ள கண்ல தண்ணியப் பாரு. பொம்பளைங்களே இப்டித்தாம்பா. ரெடிமேட் டியர்ஸ்.”
மஞ்சு பாக்ஸ் திறந்து அவனுக்கு குழம்பு ஊற்றினாள்.
“சாப்டுங்க.”
“என் கையாலயா? உன் கையாலயா?”
“ப்ளீஸ் நா மாட்டேன். வெக்கமார்க்கு.”
“அட கம்ப்யூட்டர் வெட்கப்படுதுப்பா.”
“இது பொம்பளை கம்ப்யூட்டர்”
“அப்டியா செக் பண்ணிக்கவா?” அசோக் அவள் கையைப் பிடித்து அருகில் இழுக்க, அவன் கைபட்டதும் உடம்பெல்லாம் ஏதோ இன்பம் பரவுவதை உணர்ந்தாள் மஞ்சு. குப்பென்று முகம் சிவந்தது.
“விடுங்க ப்ளீஸ்… யாராவது வரப் போறாங்க.”
“அப்பாவே வந்தாலும் பயமில்ல. மீட் மை லவ்னு அறிமுகப்படுத்துவேன்.”
“சரி இப்போ உட்கார்ந்து சாப்டுங்க.”
“ஓகேமா. சாதாரணமா சாப்பிடறவங்க தான் சர்வர்க்கு டிப்ஸ் தருவாங்க. பட் இங்க நீ எனக்கு டிப்ஸ் தரணும்.”
“எதுக்கு?”
“தைரியமா உன் உருண்டை குழம்பை சாப்பிடப் போறேனே அதுக்கு…”
“ம்ஹீம்! என்ன டிப்ஸ்…”
“அது சாப்ட்டு முடிச்சுட்டு சொல்லுவேன். டேஸ்ட்டை பொருத்துதான் டிப்ஸ் என்னன்னு டிசைட் பண்ணுவேன்.”
“சரி சாப்டுங்க.”
அசோக் சிரித்தபடி சாப்பிட ஆரம்பித்தான். அவன் முகத்திலிருந்து எதுவும் புரியவில்லை. எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்து எழுந்தான். கை கழுவிவிட்டு வந்தவனுக்கு டவல் கொடுத்தாள்.
“எப்டி இருந்துச்சு?”
“வெரி பேட் டேஸ்ட்! கஷ்டப்பட்டு முழுங்கி வெச்சேன்.”
“பொய்…”
“நிஜமா! என்ன டிப்ஸ் தெரியுமா. ரொம்ப கஷ்டப்பட்டு முழுங்கியிருக்கேன். ஸோ சாப்ட்ட வாய்க்கு ஸ்வீட்டா ஒரு கிஸ் கொடுக்கணும். அதான் டிப்ஸ்.”
“ச்சீய்… நா மாட்டேன்.”
“சரி போ. டிப்ஸ் தராட்டி இனிமே உன் கையால கிரீன் வாட்டர்கூட குடிக்க மாட்டேன். வேற பி.ஏ. போட்டுக்குவேன்” மஞ்சு அவனை முறைக்க அவன் சிரித்தாள்.
மஞ்சு மெல்ல அவன் அருகில் வந்தாள். இது தவறா, சரியா என்று யோசிக்கும் திறனை சுத்தமாய் இழந்தாள். அவன் காதலுக்குரியவளாவதே லட்சியம் என்றானது.
அதற்காக எதையும் செய்யும் மனோநிலையோடு அவனை அணைத்து அவன் இதழோடு இதழ் பதித்தாள்.
“வாவ்… தேவாம்ருதம்னா இதானா?”
மஞ்சு முகம் சிவந்தாள். அசோக் அவளை இன்னும் இறுக்கியணைத்தான்.
“குழம்பு நல்லால்லேன்னு பொய் சொன்னேன். தெரியுமா? சூப்பர் டேஸ்ட். அதைச் செய்த ஆளுக்கு இப்போ நா டிப்ஸ் தரப் போறேன்.”
அசோக் அவள் முகம் முழுக்க இதழ் பதித்தபோது அவள் ரத்தம் சூடேறியது.
‘விடுங்க ப்ளீஸ்’ என்று முனகினாளே தவிர விடுபட முயலவில்லை.
அத்தியாயம் – 11
நாலு மணிக்கு அவர்கள் வந்தார்கள். யசோதாவும் ஷண்முகமும் முகம் மலர வரவேற்றார்கள். பையன் கம்பீரமாக இருந்தான். பெயருக்கேற்றாற்போல் சக்கரவர்த்தியாகத்தான் இருந்தான். நல்ல உயரம், மாநிறம். கண்ணியம் தெரிந்த கண்கள்.மஞ்சு அலட்சியமாகத்தான் அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தாள். ஆனால் பையனை பார்த்ததும் அவள் முகம் வியந்தது.
அவன் பேச்சும் கண்ணியமான பார்வையும் சிரிப்பும் அவளை ஒரு விநாடி குடைந்தது. காதல் என்ற வட்டத்துக்குள் சிக்கியிராவிடில் இந்த சக்கரவர்த்தியை மணக்க அவள் கண்டிப்பாக சம்மதித்திருப்பாள் என்று தோன்றியது. தான் செய்வது சரியா, தவறா என்று புரியவில்லை. முத்தம் வரை வந்துவிட்ட காதல் சத்தமின்றி மடிந்து விடுமா என்ன? எவ்வளவு பெரிய மாளிகை! எவ்வளவு பெரிய பணக்காரன். அவள் அதிர்ஷ்டம் அவன் மனம் அவளுக்கு அடிமையாகி யிருக்கிறது.
அந்த மாளிகைக்கு ராணியாக முடிசூட்டிக் கொள்ளப் போகும் பாக்கியம் அவளுக்குக் கிடைத்திருக்கும்போது அதை இழக்க அவள் முட்டாளா? பாவம் இந்த சக்கரவர்த்தி. அவள் அழகென்ன, சாதாரணமானதா? அதை அடைய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டாமா? அந்த அதிர்ஷ்டக்காரன் வேறொருவன் என்று தெரியாமல் இங்கே பெண் பார்க்க வந்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் ஏமாறப் போவது தெரியாமல் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறான்.
அம்மா உள்ளேபோய் அவர்களுக்கு இனிப்பும் காப்பியும் கொண்டு வந்தாள்.
“என்னடா பெண் எப்படி?”
சக்கரவர்த்தி அம்மாவை பார்த்து விரித்தான்.
“பொண்ணுக்கு சம்மதம்னா தேதி குறிச்சுடுங்க” என்றான்.
மஞ்சு எழுந்து உள்ளே போனாள். அம்மா அவ பின்னாடியே போனாள்.
“நீ என்ன மஞ்சு சொல்ற? பையன் சொன்னதைக் கேட்டயில்ல.”
“எனக்கு புடிக்கலம்மா.”
“என்னடி இப்படி சொல்ற? பையன் சொன்னதைக் கேட்டும் கூடவா?”
“அது சரி அந்தாள் பிடிச்சிருக்கன்னு சொன்னா நானும் பதிலுக்கு சொல்லிடணுமாக்கும்.”
“புத்தியில்லாதவங்கதான் இப்டி எடுத்தோம், கவுத் தோம்னு பேசுவாங்க மஞ்சு.”
“அப்போ புத்தியிருக்கிற ஒரு பொண்ணைப் பார்த்து கட்டிக்கச் சொல்லு அந்தாளை.”
“ஏண்டி பிடிக்கல? என்ன குறை அந்த பையன்கிட்ட?”
”த பாரும்மா படுத்தாத! குறை எதுவும் இல்லதான். அதுக்காக பிடிச்சுடணும்னு இல்ல. என்னவோ என் மனசு ஓகே சொல்ல மாட்டேங்குது. இதுக்கு மேல் எதுவும் கேக்காத.”
“இதை நா எப்டிடி போய் சொல்வேன். எவ்ளோ பெருந்தமையோட எதுவும் வேணாம்னு வந்திருக்காங்க. வரதட்சணை, சீர் சினத்தின்னு எதுவும் கேக்கலடி அவங்க. கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லு.”
“அம்மா அவங்க நல்லவங்கதாம்மா. சந்தேகமேயில்ல. தயவு செஞ்சு என்னை விட்ரச் சொல்லு. வேற ஒரு நல்ல பொண்ணைப் பார்த்துக்கச் சொல்லு.”
“அப்டின்னா நீ கெட்டு சீரழிஞ்சவளா?” அம்மா மெதுவாகத்தான் கேட்டாள். என்றாலும் மஞ்சுவுக்கு தூக்கிவாரிப் போட்டது.
“என்ன சொல்றா மஞ்சு” அப்பாவும் உள்ளே வர. அம்மா அவளை முறைத்து விட்டு சொன்னாள்.
“இவளுக்கு பிடிக்கலையாம்.”
“ஏன் மஞ்சு?”
“இதை விட ஒரு பெரிய இடம் எனக்கு கிடைக்கும்னு நம்பறேம்ப்பா.”
அப்பா அவளை கூர்ந்து பார்த்தார்.
“இது நம்பிக்கையா பேராசையா மகளே?’
“கூடிய சீக்கிரம் நீங்களே புரிஞ்சுக்குவீங்க.”
“நாளைக்கு கிடைக்கப் போற விருந்தை நினைச்சுக்கிட்டு இன்னிக்கு கிடைக்கற கஞ்சியை வேணாம்னு சொல்றது அசட்டுத்தனம் மஞ்சு.”
“சார்.”
அறை வாசலில் குரல் கேட்க ஷண்முகம் திரும்பினார். சக்கரவர்த்தி நின்றிருந்தான்.
“உங்க பெண்ணை வற்புறுத்த வேண்டாம். அவங்க யோசிக்கட்டும். ஒரு மாசம் கூட யோசிக்கட்டும். நா காத்திருக்கேன். ஏன்னா நா பார்க்கற முதல் பெண் இவங்க தான். முதல் பெண்ணையே கட்டிக்கணுங்கறது என்னோட ஆசை. நாங்க புறப்படறோம்.”
அவர்கள் புறப்பட்டார்கள்.
அப்பா தர்மசங்கடத்தோடு அவர்களை வழியனுப்ப, அம்மா அவளை எரிச்சலோடு பார்த்தாள்.
“பச்சப்புள்ளையார்ந்தா பளார்னு நாலு அறை விட்டு புத்தி சொல்லலாம். படிச்ச பொண்ணுன்னு நினைச்சேன். படிப்புக்கும் அறிவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லைன்னு நிரூபிக்கற” பொருமிக் கொண்டே போனாள்.
அன்று முழுக்க யாரும் அவளோடு பேசவில்லை. அனைவரும் கவலையில் ஆழ்ந்திருக்க மஞ்சு காதலில் ஆழ்ந்திருந்தான். இதுவரை முகமற்றிருந்த அவள் கனவு நாயகனுக்கு முகம் கிடைத்து விட்டது. ஆனால் எல்லாமே நனவாகப் போகும்போது இனி கனவெதற்கு? மஞ்சு சிரித்துக் கொண்டாள்.
அத்தியாயம் – 12
“இன்னிக்கு நாம வெளிய போய் சாப்டலாமா மஞ்சு?”
“எங்கே?”
“பார்க் ஷெராட்டன்.”
“யம்மாடி அவளோ பெரிய ஹோட்டலுக்கா. என் டிரஸ் நல்லால்லயே. சொல்லியிருந்தா கிராண்டா வந்திருப்பேன் இல்ல?”
“டிரஸ்தானே உன் பிராப்ளம்? வா போலாம்.”
கார் சாவியை சுழற்றிக் கொண்டே நடந்தான் அசோக். மஞ்சு பின்னால் செல்ல, ஆபீஸ் முழுக்க அவர்களை வேடிக்கை பார்த்தது.
கார் ஒரு பெரிய ரெடிமேட் ஷாப்பின் முன் நின்றது.
“செலக்ட் பண்ணு” என்றான் அசோக்.
“இப்பொ எதுக்கு… யாருக்கு?’
“உனக்குதான். டிரஸ் நல்லால்லன்னு சொன்னயே நல்லதா வாங்கிக்க.”
“அய்யோ வேணாம். வாங்க.”
“ப்ஸீ… நீ நகரு. நானே செலக்ட் பண்றேன் பாரு.”
அசோக் நிறைய டிரஸ் பார்த்தான். இறுதியாக இரண்டாயிரம் ரூபாயில் ஒரு அழகான சுரிதார் வாங்கினான். மிகத் தரமான துணியில் கண்ணை உறுத்தாத நிறத்தில் நவீன யுத்தியில் டிஸைன் செய்யப்பட்டிருந்தது. கடையை ஒட்டி ஒரு பியூட்டி பார்லர் இருந்தது.
“அங்கே போய் டிரஸ் மாத்திக்கிட்டு அப்படியே லைட்டா மேக்கப்பும் செய்துகிட்டு வா” என்றான்.
அரை மணி நேரத்தில் ஒரு அழகான இந்தி நடிகை போல வந்தவளை ஏற இறங்க பார்த்தான். “பார்க் ஷெராட்டன் ஸ்தம்பிச்சு நிக்கப் போவுது பார் இந்த ஸ்டன்னிங் பியூட்டி யாருன்னு. பட் நா ரொம்ப கர்வத்தோட கை கோர்த்துக்கிட்டு நடப்பேன். இந்த அழகுக்கு சொந்தக்காரன் நான்தான்னு. அவனவன் வெந்துடுவான் பாரேன்.”
அவன் பேசப் பேச அவள் எங்கோ மிதந்தாள். ஒரு முறை அவனுடைய ஸ்பரிசம் ஏற்படுத்தியிருந்த கிறக்கம் அவள் மூளையை முழுக்க போதைக்குள்ளாயிருந்தது.
அப்பா, அம்மா, மது, இந்த உலகம், தன் சுற்றம் சூழல் எல்லாவற்றையும் பற்றிய பிரக்ஞை மறைந்திருந்தது யாரைப் பற்றியும் பயமில்லை. மற்றவர் ஏதேனும் பேசுவார்கள் என்ற நினைப்பும் எழவில்லை. காதல், காதல் காதல் மட்டுமே அவள் மனதை நிறைத்திருந்தது. அது ஒன்றே இன்பமாயிருந்தது. நாள் முழுக்க அவனோடு இருப்பதையும் உலகை மறந்து அவனோடு ஊர் சுற்றவும் மட்டுமே விரும்பினாள்.
பார்க் ஷெராட்டன் போர்டிகோவில் நுழைந்து கம்பீரமாய் அவனுடைய டாட்டா எஸ்டேட் கார் நிற்க இருவரும் இறங்க காவலாளி சல்யூட் அடித்து வரவேற்றான். அசோக் அவள் கையோடு தன் கையை பிணைத்துக் கொண்டு நடந்தான். மெல்லிய வெளிச்சம் மட்டுமே படர்ந்திருந்த ரெஸ்ட்டாரண்ட்டினுள் நுழைந்தார்கள். ஓட்டலின் அழகும் அலங்காரமும் பிரமாண்டமும் கண்டு பிரமித்துப் போனாள் மஞ்சு. அவளையும் அறியாது அந்த ஓட்டலில் சாப்பிடப் போவது பற்றி கர்வம் எழும்பியது. இனி அடிக்கடி அந்த ஓட்டலுக்கு அவர்கள் வருவார்கள்.
கையை பிணைத்துக் கொண்டு நடந்தவன் இப்போது அவள் இடுப்பை சுற்றி கை போட்டு அணைத்தபடி நடந்தான். மூலையில் இருட்டாயிருந்த டேபிள் நோக்கி நடந்தார்கள். இதுவரை அவள் சாப்பிட்டறியாத புதுப்புது சிற்றுண்டிகளுக்கு அவன் ஆர்டர் செய்தான்.
“அடுத்த வாரம் நான் ஆபீஸ் விஷயமா மும்பை போறேன் மஞ்சு. ஆஸ் எபி.ஏ. நீயும் என்னோட வர சரியா?’
“எவ்ளோ நாள்?”
“நாலஞ்சு நாள்தான்.”
மஞ்சு சிறிதும் தயங்கவில்லை. அவனை விட்டு பிரிந்திருக்க அவளால் இயலாது. எனவே, “வித் பிளஷர்” என்றாள்.
“சாப்ட்டுட்டு நாம நேரா பாப்பாலால் போறோம். உனக்கு ஒரு டைமண்ட் செட் வாங்கப் போறேன்.”
“என்ன?”
“என்ன திகைச்சுட்ட? என் தேவதைக்கு என்னோட சின்ன காணிக்கை” சொன்னபடி அவன் கைகள் அவள் மேனி முழுக்க சுதந்திரமாய் படர்ந்தது. அவன் ஸ்பரிஸம் படப்பட அவள் கிறங்கினாள். மயங்கினாள் தன்னை விட அதிர்ஷ்ட சாலியும் உண்டா என இறுமாந்தாள்.
“நாலஞ்சு நாள் பம்பாய்ல தங்கறதா? என்னடி சொல்ற?”
“ஆபீஸ் வேலையா போறேம்மா.”
“கூட யார் வராங்க?”
“எங்க பாஸ்.”
“லேடீஸ் யாரும் வராங்களா?”
மஞ்சு அம்மாவை முறைத்தாள். “சுத்த பத்தாம் பசலிம்மா நீ. நிலாவுக்கே பெண்கள் தனியா போற காலமிது.”
“உங்க அப்பாகிட்ட சொல்லு.”
“ஏன் அவர் என்ன சொல்லிடுவார்.”
“வீட்டை விட்டு நீ வெளியூர் போய் நாலு நாள் தங்கறதை அவர் விரும்ப மாட்டார்.”
“அப்பொ வீட்டை விட்டு வெளிய அனுப்பி எங்களை படிக்க வெச்சிருக்கவே கூடாது. த பாரும்மா. யார் தடுத்தாலும் நா போவேன்.”
மஞ்சு தன் அறைக்குச் சென்று கதவை சார்த்திக் கொண்டாள். கைப்பை திறந்து வைர செட்டை வெளியில் எடுத்தாள். மெல்லிய தங்க செயினின் நடுவில் மட்டும் பூ போன்ற டிசைனில் பதிக்கப்பட்ட வைரங்கள். அதேபோல் தங்க தொங்கட்டானில் மின்னிய ஒன்றை வைரக்கல், மூன்று வைரம் பதிக்கப்பட்ட அழகிய மோதிரம் மஞ்சு அவற்றை அணிந்து கொண்டாள். அவள் கழுத்துக்கு மிக அழகாய் இருந்தது அந்த மெல்லிய நெக்லஸ். அப்படியும் இப்படியும் அவள் திரும்பியபோது விளக்கொளி பட்டு காதிலும் கழுத்திலும் பளீர் பளீரென மின்னியது. காதலின் முதல் காணிக்கையே கற்பனைக் கெட்டாத விலையில் கிடைத்திருக்கிறது. நினைக்க நினைக்க மனம் இனித்தது, நகையை கழட்டி எடுத்து பத்திரமாக பூட்டி வைத்தாள். அடுத்த வாரம் எப்போது வருமென்றிருந்தது.
“ஏன் மஞ்சு மும்பை போறயா?” சாப்பிடும்போது அப்பா கேட்க “ஆமாம்” என்றாள்.
“நா வேணா கூட வரவா?”
“தாராளமா கூட வாங்க ஆனா திரும்பி வந்ததுக்கு பிறகு இந்த வீட்ல நா தங்க மாட்டேன். ஹாஸ்டலுக்கு போய்டுவேன். சந்தேகப்படறவங்க கையால சாப்பிடறதை விட சாகலாம்.”
மஞ்சு தீர்மானமாக சொல்ல, அப்பா வாயடைத்து போனார்.
நாலு நாள் கழித்து புதன்கிழமை காலை பிளைட்டில் அசோக்கோடு புறப்பட்டாள்.
விமானம் பறக்க பறக்க அவளுக்கு சகலமும் மறந்தது. மனம் முழுக்க மகிழ்ச்சி. காதலனோடு தனித்திருக்கப் போகும் இனிமையான நாட்களை நினைத்து நினைத்து முகம் சிவந்தாள்.
தாஜ் ஓட்டலில் இருவருக்கும் சேர்த்து டபுள்ரூம் ரிஸர்வ் செய்து வைத்திருந்தான் அசோக்.
– தொடரும்…
– விட்டில் பூச்சிகள் (நாவல்), முதற் பதிப்பு: 1999, கண்மணி வெளியீடு, சென்னை.