விடுதலை
கதையாசிரியர்: முனைவர் வெங்கடேஷ் கணபதி
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2026
பார்வையிட்டோர்: 156
அத்தியாயம் – 1 | அத்தியாயம் -2

வெளியே மேகம் கருத்திருந்தது. மழை வரலாம் என்பது போல காற்று வேறு வீசியது. ஜன்னல் கதவைச் சாத்தலாமா வேண்டாமா என்று செந்தில் யோசிக்கும் போதே அலைபேசி அழைத்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவாறே அலைபேசியை எடுத்தான் செந்தில். . பாண்டிச்சேரியில் இருந்து பரணி. நண்பன் ஒருவனின் திருமணத்திற்காக பாண்டிச்சேரி வந்து இருந்தான் பரணி. இருவருமே – செந்திலும் பரணியும் – பெங்களூரில் வெவ்வேறு கல்லூரிகளில் விரிவுரையாளர்கள்.
பரணியும் செந்திலும் முன்னர் ஜுபிடர் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். இருவருமே மிகுந்த சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளான பின்னர் ஐந்து வருடங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். வேறெங்கிருந்து? தமிழ் நாட்டில் இருந்து தான்.
தமிழ் நாட்டில் முனைவர் பட்டம் வாங்க வேண்டும் என்றால் அந்த மாணவன் அல்லது மாணவி பலவிதமான செயல்களை விரும்பியோ விரும்பாமலோ செய்தே ஆக வேண்டும். அவர்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கும் கைட் அல்லது ஆராய்ச்சி மேற்பார்வையாளர் – அவரே கடவுள்.. அவரே ராஜா… அவரே மந்திரி. அவரை எதிர்த்துப் பேசினால் PhD பட்டம் வாங்கின மாதிரி தான். ஒவ்வொரு விண்ணப்பத்தில் மற்றும் படிவத்திலும் மேற்பார்வையாளரின் கையெழுத்திற்காக நாய் படாத பட வேண்டும். அரசாங்கத்தில் இருந்து வரும் உதவித்தொகையில் ஒரு கணிசமான பங்கு அந்த மேற்பார்வையாளருக்கு அழ வேண்டும்.
ஓஹோ.. அப்படியென்றால் பெண்கள் ஆராய்ச்சி மேற்பார்வையாளர்கள் ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. ஆனால் பலசரக்கு வாங்குவதில் இருந்து, காபி பொடி திரித்துக்கொண்டு வருவதில் இருந்து மேற்பார்வையாளர் வீட்டுக் கக்கூஸைக் கூடக் கழுவத் தயாராக இருக்க வேண்டும் ஆராய்ச்சி பட்டம் பெற விரும்பும் மாணவ மாணவியர். I am referring to all the students who register and enrol for a PhD degree. இப்பொழுதெல்லாம் எல்லாமே ஆன்லைன் என்றாகி விட்டது. ஆனால் பத்து பதினைந்து வருடங்கள் முன்னால்?
மேற்பார்வையாளர் இந்த மாணவர்களை (குறிப்பாக மாணவர்களை) படுத்தின பாட்டைக் கேட்டால் கண்களில் குருதியே உதிரும். புழுவை விடக் கேவலமாக இவர்களை மதித்து ஒரு அடிமையை ப்போல் நடத்தி வாழ்க்கையே வெறுக்கும் படி செய்த கதைகள் நிறைய உண்டு.
ஒரு முறை ஒரு ஆராய்ச்சியாளரை திருச்சியில் ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்திற்கு காணச் சென்றிருந்தேன். டீ கொண்டு வைத்த பையனை கேன்டீனில் வேலை பார்க்கும் எடுபிடி என்றே நினைத்தேன். ஆனால் அவனோ முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மாணவன் என்று வெளியில் வரும் போது தான் தெரிந்தது. இது கவிஞர் தென்னவன் ஒரு உரையில் பேசின போது தெரிய வந்தது.
முனைவர் பட்டம் பெற விரும்பி ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர் மாணவியருக்கு மன அழுத்தத்தையும் உடல் சோர்வையும் கொடுக்கும் நிர்வாக விதிகளும் மேற்பார்வையாளரின் நடத்தையும் ஒருவருக்கும் வெளியே சொல்ல தைர்யம் இருப்பது இல்லை. இது தான் உண்மை.
பெங்களூரு மாதிரி நகரங்களில் இந்த மாதிரி நடப்பது அரிது தான் ஆனாலும் அரசு சார்ந்த கல்லூரிகளில் இது மிக மிக சகஜம். அரசாங்கம் ஏனோ தெரியவில்லை இந்த திசையில் யோசிப்பதே இல்லை. ஆராய்ச்சிப் பட்டம் பெரும் மாணவ மாணவியரின் நிலைமையை உணர்ந்து ஒரு விதமான கண்ட்ரோல் மெக்கானிசம் கொண்டு வருவது சிரமம் தான் ஆனால் முடியாதது என்று இவ்வுலகத்தில் ஒன்றும் இல்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கதை தான் . ஆனால் தமிழ் நாட்டில் தான் இந்த மாதிரி மன உளைச்சல் அதிகம். அவர்களது மற்றறொரு நண்பன் முனைவர் விக்னேஷ் அவனது வைவா வோஸ் பரீட்சைக்காகத்தமிழ் நாட்டு கவர்னர் ரவியை அணுக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்த சமாச்சாரம் பரணி சொல்லி செந்திலுக்குத் தெரியும். கொத்தடிமைகளாக நடத்தப்படும் இந்த மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் மனது முழுக்க கசப்புணர்வு மேலோங்க வாழ்வது இயற்கை தானே?
பரணி இப்பொழுது எலெக்ட்ரானிக் நகரத்தில் உள்ள வர்த்தக நிர்வாகப்பள்ளியில் பேராசிரியர். பரணி ஒரு கட்டழகன் என்றால் மிகை ஆகாது. வாட்ட சாட்டமான தோற்றம். முகத்தில் தற்கால இளம் பெண்களை சுட்டி இழுக்கும் தாடி. விஜயகாந்த் மாதிரி களையான முகம். தைர்யத்திற்கும் துணிவுக்கும் மறு பெயர் என்றால் பரணி தான். பரணி மாதிரி ஒரு ஆத்ம நண்பன் கிடைத்ததற்கு செந்தில் கடவுளுக்கு நன்றி சொல்லாத நாளே கிடையாது.
பரணிக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. பாசமலர் சிவாஜியைத் தோற்கடிக்கும் அளவுக்கு பரணிக்கு தங்கை பூங்கொடி மேல் பாசம். பூங்கொடி மணமாகி சென்னையில் கணவனுடனும் மூன்று வயது மகனுடனும் வாசம். பரணியின் தம்பி முத்துப்பாண்டி சென்னையில் பிலின்க் இட் கம்பனியில் ஸ்டோர் மேனேஜர்.
பரணி ஒரு அறிவாளி. படிப்பில் மட்டும் அல்ல. ஆராய்ச்சியில் கூட. பரணி வகுப்பு நடத்தும் அழகைப் பார்க்கவே அவன் வகுப்புகளில் பெண்கள் கூட்டம் அலை மோதும். நேர்மை, கண்ணியம், கம்பீரம் – இது தான் பரணி. பரணியின் ஆண்மை நிறைந்த தோற்றத்திற்கு ஏற்ற மாதிரி பெண்கள் அவனது கடைக்கண் பார்வைக்கு ஏங்கினார்கள். ஆனால் பரணிக்கோ தன் மாமன்
மகள் தெய்வானை தான் உயிர். இருவருக்கும் திருமணம் நடந்த போது செந்தில் தான் மாப்பிள்ளைத் தோழன்.
நிகழ் காலத்திற்கு வருவோமா?
“என்ன செந்தில், பேப்பர் போட்டாச்சா? என்னிக்கு ரெலிவிங்” என்று பரணி வினவ
“பரணி, பேப்பர் போட்டு ஒரு வாரம் ஆச்சுப்பா. விரைவாக விடுவித்தால் நல்லது ப்ரோ” என்றான் செந்தில்.
எலஹங்காவில் இருந்து முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருந்த ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் தான் செந்தில் பேராசிரியர். ஜுபிடர் பல்கலைக்கழகம் ஆரம்பித்து பத்து வருடம் தான் ஆகிறது. செந்தில் கோதுமை நிறம். நல்ல உயரம். முகத்தில் சிரிப்பு என்பதே அபூர்வம். சீரியஸ் டைப்பு கல்லூரி பேராசிரியர் என்றால் அது செந்தில் மட்டுமே. செந்தில் சிரித்தால் பெண்கள் அம்பேல். கன்னம் குழிய செந்தில் சிரித்தால் பெண்கள் மெய்மறந்து விடுவார்கள்.
பெங்களூரில் தனியார் பல்கலைக்கழகங்கள் புற்றீசல் மாதிரி பரவி அனைத்து உயர் கல்வி வர்த்தகப்பள்ளிகளும் பணம் ஒன்றே குறிக்கோளாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து பெங்களூருக்குப் படை எடுத்து வரும் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களும் பேராசிரியைகளும் ஒரு வரப்பிரசாதம்.
தமிழ் நாட்டை விட பெங்களூரில் சம்பளம் பன்மடங்கு அதிகம். ஆங்கிலம் பேச த் தெரியுமா, பாடங்களை ஒழுங்காகச் சொல்லிக்கொடுக்கத் தெரியுமா என்றெல்லாம் ஒருவருக்கும் கவலை இல்லை. தமிழ் நாட்டுப் படை எவ்வளவு ஆய்வுக்கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள் என்பது தான் கணக்கு. இதில் பேராசிரியர்கள் நிறைய பேர் மற்றவர்களுக்கு ஆய்வோ ஆராய்ச்சியோ செய்து பணம் குமிப்பது மிக மிக சகஜம்.
There is a cartel that operates in the Silicon Valley of India that aggregates requests for publishing papers in Scopus-indexed and Web of Science Journals. ஆதலால் இப்பொழுது நன்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் வர்த்தகப்பள்ளிகளுக்குத் தேவையே இல்லை. வர்த்தகப்பள்ளியின் பேராசிரியர் ஒருவர் வகுப்பில் கதை அளந்து, மாணவர்களுக்கு நாணல் போல வளைந்து கொடுத்து சிரிக்கச் சிரிக்கப் பேசி
மாணவர்களுக்கு கொடை வள்ளல் போல மதிப்பெண்களை வாரி வழங்கினால் அதுவே போதும். அவர்களது நெட்ஒர்க்கில் இருந்து மற்றவர்களை பட்டறைக்கு அழைப்பது, அரசாங்கத்தில் இருந்து எப்படி எல்லாம் உதவிப்பணத்தை கறப்பது என்றெல்லாம் தெரிந்து இருந்தால் பிரச்னையே இல்லை. நிர்வாகத்திற்கு பிடித்த நீலக்-கலர் கண்களுடைய பிள்ளைகளாக இவர்கள் மாறி விடுவார்கள்.
ஆனால் செந்தில் இதற்கெல்லாம் விதிவிலக்கு. பரணி மாதிரியே நேர்மை, நாணயம், கட்டுப்பாடு என்பதெற்கெல்லாம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு செந்தில் தான்., பரணியைப்போலவே …இனம் இனத்தோடு சேரும் என்பார்கள் இல்லையா?
ஜுபிடர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கூத்துக்களை வெளியிட்டால் அது ஒரு வெட்கக்கேடு.
மூன்று வருடம் செந்தில் நிறைய சிரமப் பட்டு விட்டான். இந்த கால இடைவெளியில் அவன் தந்தை தவறிப்போக அவர் சொத்தை சரியாக பிரிக்காததால் செந்திலுக்கும் அவனது இரு சகோதரர்களுக்கும் சண்டை சச்சரவு என்று மன உளைச்சல் அதிகம். தாயார் அவ்வப்போது அலைபேசியில் அழைத்து புலம்பும் போது செந்தில் தான் தாயாருக்கு ஆறுதல் கூறுவான். செந்திலுக்கு பணம் ஒன்றும் பெரிதில்லை தான். ஆனால் அப்பா விட்டுச் சென்ற சொத்துக்களை மூன்று பிள்ளைகளும் சமமாக பிரித்துக்கொள்வது தானே நியாயம். இதில் செந்திலின் மூத்த அண்ணா எல்லாவற்றையும் சுருட்டப்பார்ப்பதுதான் செந்திலுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது.
செந்திலின் மனைவி நிர்மலா அவனுக்குத் தூரத்து சொந்தம் தான். ஆனால் செந்திலின் காதல் பால்யப்பருவத்து காதல். நிர்மலா சென்னையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து முடித்து, இப்போது ஜக்கூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தாள்.
நீரிழிவு வியாதியே இல்லாத பரம்பரை செந்தில் பிறந்த பரம்பரை. ஆனால் இந்த பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து அவர்கள் கொடுத்த மன உளைச்சலில் செந்திலுக்கு நீரிழிவு நோய் அழையாத விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொண்டு விட்டது.
“செந்தில் நீ வேலையை விட்டுருப்பா. என்னோட கல்லூரியில் ஒன்றும் பெரிசாக மாற்றம் ஏதும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான். ஆனால் நீ வேலையை விடா விட்டால், உன் ஆரோக்கியத்திற்கு கேடு விளைந்து விடும் நண்பா. யோசி” என்று பரணி அறிவுரை கூறின போது செந்தில் பதில் ஏதும் பேசவில்லை. பரணி கூறியதில் இருந்த உண்மை செந்திலுக்கு உரைத்தது.
பரணியிடம் பேசி விட்டு அலைபேசியை வைத்த செந்திலின் மனதில் குழப்பமே மேலோங்கி இருந்தது. வேலையை ராஜினாமா பண்ணி விட்டானே தவிர அவன் கையில் வேறு எதுவும் வேலை இல்லை. இரண்டொரு இடங்களில்
நேர்முகத் தேர்வு நன்றாகச் சென்ற போதிலும் அவர்கள் கொடுக்கும் சம்பளம் இவன் தற்போது வாங்கிக்கொண்டு இருந்த சம்பளத்தை விடக் குறைவு.
செந்தில் குடியாத்தம் பகுதியில் வீடு ஒன்று கட்டிக்கொண்டு இருந்தான். வங்கியில் எழுபத்தி ஐந்து லக்ஷம் கடன். மாதம் ஐம்பத்தி ஏழாயிரம் EMI கட்டியாக வேண்டும். வீடு இதோ அடுத்த ஆறு மாதங்களில் முடிந்து விடும். தன் தாயாரை வேலூரில் இருந்து இந்த புது வீட்டிற்கு கூட்டி வர வேண்டும் என்பது தான் செந்தில் போட்ட திட்டம். வாரா வாரம் தாயை ச் சந்தித்து விட்டு வரலாம். செந்திலும் நிர்மலாவும் மாதா மாதம் சம்பாதித்ததில் பாதிக்கு மேல் வங்கிக்கு க்கட்டவேண்டிய தாகி விட்டது.
மூன்று மாத நோட்டீஸ் கொடுத்த பின்னர் செந்தில் புதிய வேலைக்கு மனு போட்டுக் கொண்டு தான் இருந்தான். வேலை பார்க்கும் இடத்தில் ஒரு அளவுக்குத் தான் பொறுத்துக்கொள்ள முடியும். சுய மரியாதையை விட்டுக்கொடுத்து விட்டு பணம் தான் குறி என்று செந்திலால் வாழ முடியவில்லை. நல்ல காலம். நிர்மலா செந்திலுக்கு சரியான பக்க பலம். கணவன் ஏற்கனவே மன அழுத்தத்தில் உள்ளான் என அறிந்து அவனுக்குத் தைர்யம் ஊட்டி “நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று அவள் அவ்வப்போது கூறுவது செந்திலுக்கு மிகுந்த மன ஆறுதலை அளித்தது.
செந்திலுக்குக்குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் – சங்கரலிங்கம் சுவாமி மற்றும் கோமதித் தாயார் அருள் பாலிக்கும் புண்ய ஸ்தலம் . ஆறு மாதத்திற்கு ஒரு முறை செந்திலும் நிர்மலாவும் சுவாமி தரிசனம் பண்ண திருநெல்வேலி செல்வது வழக்கம் ஆகி விட்டது.
ஆயிற்று. இன்னும் ஒரு மாதமே பாக்கி.
“பரணி ராஜினாமாவை மறு பரீசீலினை செய்யப்போகிறேன். வேறு எந்த வேலையும் கிடைத்த பாடில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேலை இல்லாமல் வங்கிக்கு மாதா மாதம் தொகையை எப்படி க் கட்டுவது. சேமிப்புகளை வைத்து மூன்று மாதம் சமாளிக்கலாம் ..அதற்குப்பின்னர்? ” செந்திலின் குரலில் தொனித்த கவலையின் அறிகுறியை பரணி கவனிக்கத் தவறவில்லை.
அந்த பல்கலைக்கழகத்தில் வேலை பார்ப்பது என்பது செந்திலுக்கு மட்டுமல்ல அவனை மாதிரி யோசிக்கும் மற்ற பேராசிரியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. கிட்டத்தட்ட அந்த பலக்லைக்கழகம் அங்கே வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு சிறை மாதிரி தான்.
“செந்தில், நான் என் கல்லூரியில் கேட்டுப்பார்க்கிறேன் நண்பா. கவலைப்படாதே” என்று பரணியின் ஆறுதல் வார்த்தைகள் செந்திலுக்குத் தேவையாக இருந்தன.
“என்னங்க, நாம குலதெய்வ வழிப்பாட்டுக்கு போய் எட்டு மாதம் ஆகி விட்டது. வாங்க, போய் விட்டு வரலாம். ஏதாவது நல்ல வழி கிடைக்காமலா போய் விடும்? நம்பிக்கை தான் வாழ்க்கை. அப்படியே கன்யாகுமரியும் போய் விட்டு வந்து விடலாம்.” என்று நிர்மலா கூறிய போது செந்தில் மறுப்பேதும் சொல்லவில்லை.
சங்கரன் கோவிலில் அவனுக்கு ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டு இருந்தது அப்பொழுது செந்திலுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்.
– தொடரும்…