வாழ்வாகும் போதினிலே…

0
தின / வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
முதல் வெளியீடு: 1995
இணைய வெளியீடு: November 15, 2026
பார்வைகள்: 464
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மஞ்சுலேகாவின் அழைப்பிதழ் சாரங்கியின் மேசையிலே கிடந்து அவளது ஆறிப்போன ரணங்களையெல்லாம் கீறிக்கிழித் துக் கொண்டிருந்தது. 

சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சுலேகா தனது நோய்க்குச் சிகிச்சைபெற வைத்தியரான சாரங்கியிடம் வந்திருந்தாள். அதன் பின் மாதமிருமுறை அவளது கிளினிக்கிற்கு வர நேர்ந்ததால் படிப்படியாக அவளது தோழியாக மாறினாள். 

ஒரே வகையான குணநலன்களும் ஈடுபாடுகளும் உள்ளவர்கள் நண்பர்களாவார்களாமே. அதுதான் இந்த நட்பிற்கும் காரணமோ? 

கலை, இலக்கியம், சமூகசேவை என எல்லாவற்றிலுமே ஈடுபாடு கொண்டவள் மஞ்சுலேகா. மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம், கலை, இலக்கிய அமைப்புகள் என்பனவற்றிலெல்லாம் அங்கம் வகிக்கிறாள். விழாவின் தலைவியென்றும். முக்கிய பேச்சாளரென்றும், சிறப்பு விருந்தினரென்றும் மஞ்சுலேகாவின் பெயர் பத்திரிகைகளில் அடிக்கடி காணப்படும். 

ஒருநாள் மஞ்சுலேகாவின் கதையொன்றை சாரங்கி விமரிசனம் செய்தபோதுதான் அந்த வைத்தியரின் இலக்கிய ஈடுபாட்டை மஞ்சுலேகா கண்டு வியந்தாள். அதன்பின் சாரங்கியின் வீட்டிற்கும் வந்துசென்று நட்பை வளர்த்துக் கொண்டாள். 

அந்த நட்பினால் கலை இலக்கிய ஈடுபாடு சாரங்கியுள் மீண்டும் உயிர்ப்பெடுத்தது. வீடு, வேலையென்று இயந்திரமாகிப் போன அவளுள் உயிரோட்டமேற்பட்டது. உயிர் வந்ததும் இதயம், வேதனை என்றெல்லா உணர்வுகளும் வரலாயிற்று. 

மஞ்சுலேகாவின் அழைப்பையேற்று, சில இலக்கியக் கூட்டங்களுக்கு அவள் போனாள். சமூகசேவை நோக்கில் மருத்துவப்பரிசோதனைகளும் சிகிச்சைகளும் செய்ய முற்பட்டாள். 

மஞ்சுலேகா அவளது கணவனுடன் மோட்டர் சைக்கிளில் வந்திறங்கி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றி அவனுடன் அடிக்கடி உரையாடியவண்ணம் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் பொழுது சாரங்கி இழந்துவிட்ட ஒன்று மனத்தினுள் நெருடும். 

பல நாட்களுக்கொருமுறை ஏதாவது கூட்டத்திற்கென்று அவள் புறப்பட்டாலே “மஞ்சுலேகா வரத்தொடங்கி, இந்தத் தேவையற்ற வேலையும் சேர்ந்து விட்டதா?” என்ற பொருள்பட வெறுப்பும் நையாண்டியுமாக அவளின் கணவர் ஐங்கரன் ஏதாவது கூறுவான். 

பல ஆண்டுகளாகப் பழகிப்போன பேச்சுகள் தானென்றாலும் மனதில் பதிந்து வேதனைதர அவை தவறுவதில்லை. 

சாரங்கியின் பேராசிரியர், ஐங்கரனை அவளுக்கேற்ற கணவனாகத் தேர்ந்தெடுத்து அவளது சம்மதத்தைக் கேட்டபோது பலவற்றையும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் அவளிருந்தாள். 

சீதனக் கொடுமை பற்றிய விவாத அரங்குகளில் பகிரங்கமாகப் பலதடவைகள் அவளுக்கு விடுக்கப்பட்ட சவால்கள் அவளது நினைவுக்கு வந்தன. 

“மருத்துவம் பயிலும் சாரங்கி தான் மருத்துவரான பின், ஒரு விவாசாயியை மணம் புரிய முன்வருவாளா?” 

“நிச்சயமாக நான் தயங்கமாட்டேன்” சாரங்கியின் அன்றைய பதிலிலிருந்த உறுதி இன்றும் அவளது மனத்திலிருந்ததை அவள் உறுதிப்படுத்திக் கொண்டாள். 

படித்துப் பட்டம்பெற்ற பெண்கள் நல்ல வருவாய் பெறக் கூடிய பதவியிலிருக்கும்போது ஏன் அதே தரமுடைய அல்லது உயர்ந்த தரமுடைய பதவியிலிருப்பவரை மணம் புரிய விரும்ப வேண்டும்? பணத்தை நாடியா? 

பெரும்பாலும் அந்தஸ்தை நாடியே அவர்கள் இப்படி விரும்புகிறார்கள் போலும் என்றுதான் அன்று அவள் கருதினாள். 

பலர் நடுவே தன் கணவன் கராஜ் வைத்திருட்பவன் என அறிமுகப்படுத்தும் போது, அவர்கள் காட்டும் பதில் உணர்வுகள் அவளது மனதைப்பாதிக்காதென்று அவள் நிச்சயமாக நம்பினாள். 

கராஜில் அழுக்குப் படிந்த உடையுடன் காணப்படும்போது கூட மற்றவர்களைச் கவரக் கூடிய அழகன் ஐங்கரன் கை நிறையச் சம்பாதிக்கிறான். சீதனமும் வேண்டாமென்கிறான். வேறு சிக்கல்கள் ஏதுமிருக்குமென அவளுக்குத் தெரியவில்லை. எனவே தான் சம்மதத்தைத் தெரிவித்தாள். 

பேராசிரியர் உட்பட பெரியவர்களும், பெற்றோரும் உற்றோரும் வாழ்த்த அவர்களது திருமணம் நடந்தேறியது. 

ஆரம்பத்தில் அவளது இல்லறம் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் கணவனது முதல் வாக்கியமே அவள் எதிர் பார்க்காத ஒன்றாக இருந்தது. 

“டொக்ரரான உங்களுக்கு நான் தகுதியில்லை. ஆனாலும் மற்றப் பிரச்சனைகளை யோசித்து என்னைத் திருமணம் செய்யச் சம்மதித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.” 

“ஐயையோ அப்படியொன்றும் நான் நினைக்கவில்லை’ அவள் அவசர அவசரமாக அதை மறுத்தும் அவன் மனதிலிருந்து அந்த எண்ணம் அகலவில்லையென்பதை அவள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினாள். 

ஐங்கரன் அன்பானவன், பண்பானவன் அவளுக்கு வேண்டிய வற்றையெல்லாம் செய்துகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கிருந்தது. பல வழிகளிலும் அவன் நல்ல கணவனனாக இருந்தாலும், அந்த நல்ல மனத்திலே தாழ்வுச்சிக்கல் புரையோடிப் போய்க்கிடந்தது 

அவளுடன் படித்த பிரகஸ்பதியை அவள் சித்திராவின் திருமண வைபவத்திலே சந்தித்தாள். மருத்துவக்கல்வி மண்டை யில் ஏறாது. பாடாதபாடுபட்டு மருத்துவனானவன். ஆனால் தற்பெருமையில் தலைவீங்கிக் கிடப்பவன். 

“ஹலோ சாரங்கி எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் கல்யாணச் சாப்பாடுக்குத்தான் எங்களைக் கூப்பிட மறந்துவிட்டீர்கள். இவர்தான் உங்கள் கணவரா? என்ன செய்கிறார்? ஒரேயடியாகப் பிடித்துக் கொண்டான். 

“அவர் சொந்தமாக ஒரு கராஜ் வைத்திருக்கிறார்” இனிமை யாகச் சிரித்தபடியே சாரங்கி பதிலளித்தாள். 

“கராஜா..? அதுதான் எங்களுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பவில்லையா?” பிரகஸ்பதி பேசிக் கொண்டிருக்கும் போதே “போகலாமா?’ என்று ஐங்கரன் நடக்கத் தொடங்கிவிட்டான்.1 கேலிச்சிரிப்பும் கிண்டல் தொனியுமாகப் பிரகஸ்பதி பேசிய பொழுது அவளுக்கே கோபம் பற்றிக்கொண்டு வந்தது. 

சாதாரண தரத்தில் சரியாக இரண்டு பாடங்கள்தான் சித்தியடைந்தவள், பிரகஸ்பதியின் மனைவியாக வாய்த்த கல என்பது 

அவளுக்குத் தெரியும். ஆனால் பிரகஸ்பதி தேடிய அழகு. பணம் இரண்டும் அவளிடமிருந்தன. இவ்வளவு கேலி செய்யும் பிரகஸ்பதி சாரங்கியைத் திருமணம் செய்ய முன் வந்திருப்பானா? 

பிரகஸ்பதி போன்றவர்களின் பேச்சுக்கள் அவளது மனதை அலைபாயச் செய்யாதென்பதில் அவள் உறுதியாக இருந்தாலும் பூசல் வேறொரு பக்கத்திலிருந்தல்லவா புறப்பட்டிருந்தது. 

ஐங்கரனின் மனதில் முளைவிட்ட தாழ்வுச் சிக்கலுக்கு பிரகஸ்பதி போன்றவர்களின் பேச்சுக்கள் நீருற்றி வளர்த்தன. 

சிலர் சாரங்கிக்கு மட்டும் மரியாதை கொடுத்து, ஐங்கரனைக் கண்டும் காணாத்து போலப் போய்விடுவார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களும் ஐங்கரனை வெகுவாகப் பாதித்தன. 

சாரங்கி சாதாரணமாக ஒரு மனிதனின் இயல்புக்கேற்ப ஐங்கரனின் கருத்துக்களை எதிர்த்து கருத்துக்கள் கூறினாலோ, மாறுபட்ட முடிவுகள் எடுத்தாலோ தற்பெருமையால் அப்படிச் செய்வதாக ஐங்கரன் கருதினான். 

இந்த நிலை அவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் ஏற்பட இடமே கொடுக்காது மனவேதனை நிறைந்த வாழக்கையொன்றை அமைத்துக் கொடுத்தது. 

சாரங்கி சுதந்திரமாக எதையும் பேசவோ கருத்துக்கூறவோ அஞ்சி முடிந்தவரை பட்டும்படாமலும் வாழத் தன்னைப் பழக்கப் படுத்த முற்பட்டாள். மௌனமாக அனைத்தையும் ஜீரணிப்பது அப்படியொன்றும் சுலபமாக இருக்கவில்லை. 

அவனைக் குறைத்து மதிக்கும் மணோபாவம் தன்னிடம் அறவேயில்லையென அவனுக்கு உணர்த்த அவள் எடுத்த முயற்சிகள் எல்லாம் பலனற்றுப்போயின. 

தன் பிள்ளைகளுக்காக வாழ்ந்து தீரவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகத் தான் வாழ்வதாக அவள் கருதத்தொடங்கினாள். 

ஆரம்பத்தில் மற்றவர்களை விட வேறுபட்ட முடிவெடுத்த புத்திசாலி எனத் தன்னையே பாராட்டிக்கொண்ட சாரங்கி திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாமென எண்ணத் தொடங்கினாள். அல்லது சிலரைப் போல நாற்பதிற்கு மேல் திருமணம் செய்திருந்தால் இந்த நரக தண்டனையின் காலமாவது குறைந்திருக்குமென அவள் நினைத்துக் கொண்டாள். 

சாரங்கிக்கு மகளிர் தினவிழாவில் பேச அழைப்பு! 

“சரிநிகர் சமமாய் வாழ்வோம்” என்ற தலைப்பில் பேசும்படி விடுக்கப்பட்ட அழைப்பு. மேலே வைத்திருந்த பாரத்தை உதறிவிட்டுப் பறக்க முடியாது காற்றில் படபடக்கிறது. 

– மல்லிகை, ஆகஸ்ட் 1995. 

– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *