உயிரிழந்த உபதேசம்
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழகாக மடிக்கப்பட்டு மேசைமேல் பத்திரமாக வைக்கப் பட்டிருந்த அந்தப் பத்திரிகையை இதயத்துள் இசை பிரவகிக்கும் ஆனந்தத்துடன் எடுத்துப் பார்க்கிறாள்.
சாரதா அதை எத்தனையாவது தடவையாகப் பார்க்கிறாள்.?
நூறு தடவைக்கு மேலிருக்கும் போலிருக்கிறது. ஏழாந் திகதிப் பத்திரிகை அது. ஆனாலும் இன்னும் ஒன்பதாந் திகதி வந்தபாடாக இல்லை.
‘… எங்கள் வாரமலரில் தொடராக வந்து உங்கள் உள்ளங் களையெல்லாம் கொள்ளைகொண்ட குறுநாவல் “உன்னை மட்டுமே உயிருட்கொண்டு….” நூலுருவில் வெளிவருகிறது. வெளியீட்டுவிழா இம்மாதம் ஒன்பதாந் திகதி காலை பத்து மணிக்கு யாழ் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகும்.’
ஒன்பதாந் திகதியை நோக்கி மனம் ஓடுகிறது வெளியீட்டு விழாவிற்கு அதையெழுதிய சத்தியஜித் வருவான்.
அவன் எப்படியிருப்பான்?
சில சமயம் அடிக்கடி அவளை வீதியிலே கடந்து செல்லும் ஒருவனாகக்கூட இருக்கலாம். அவனைச் சந்தித்ததும் அவள் ஆச்சரியத்திலே உறைந்து போகவும் கூடும்.
இந்த ஒன்பதாந் திகதி வரமாட்டேனென்கிறதே! நிமிடங்க ளெல்லாம் நாட்களானது போன்ற உணர்வு.
விழாவிலே சத்தியஜித்தைச் சந்திக்கவேண்டும். நாவலைப் பற்றி, ஏன் அவன் எழுதிய சிறுகதைகள், குறுநாவல்கள் அனைத் தையும் பற்றி விமர்சிக்க வேண்டும். விமர்சனமென்ன விமர்சனம், ஒரே புகழ்மாலைகளாகத்தானிருக்கும்.
அவனைச் சந்திக்க முடியுமா? நிச்சயமாக ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சுமார் நான்கு மாதங்களாக வெளிவந்து அனேகரைக் கவர்ந்த குறுநாவல் அது. அதன் காரணமாக அதிக பிரதிகளை அந்தப் பத்திரிகை அச்சிட நேர்ந்ததாம். நான்கு பேர் சந்தித்தால் நிச்சயம் இதைப்பற்றியும் பேசுவார்கள்.
இளவயதினர் அனைவரும் அதில் வரும் பார்த்திபன் அகல்யா போலத்தான். தாங்களும் தங்கள் வாழ்கைத்துணையுடன் வாழவேண்டுமெனக் கனவுகாண வைத்த கதை அது.
காதல் கதையென்று கூறமுடியாது. பார்த்திபனும் அகல்யாவும் இளம்தம்பதியினராகத்தான் அதில் அறிமுகப்படுத்தப்படு கிறார்கள். இல்லறத்தில் அவர்களைப் பிணைத்திருந்த காதலை மிக அற்புதமாகச் சித்திரித்திருந்தான் சத்தியஜித். அந்த எழுத்தாற்றலின் ஈர்ப்புச்சக்தியிடம் எல்லோருமே வசப்பட்டிருந்தனர்.
அகல்யா இடம்பிடித்த பார்த்திபனின் மனதினுள் எந்தச் சந்தர்ப்பசூழலிலும் வேறெந்தப் பெண்ணும் உட்புக முடியாது. அவளையே தன் உயிராக்கிக் கொண்டிருக்கும் பார்த்திபனைப் பாத்திரமாக்கி பெண்களிடையே தன் கதைக்கு அமோக வரவேற்பைப் பெற்றிருந்தான் சத்தியஜித்
பாலியல் வன்முறை பற்றி வன்மையாகக் கண்டித்து வாய்கிழிய பேசுவோர்களில் ஒருவராவது தனக்குச் சந்தர்ப்பங் கிடைத்தால் சீதாராமராக இருப்பாரா? என்பது சாரதாவைப் பொறுத்தவரை சந்தேகமான ஒன்று.
“… எத்தனையோ பேர் நிறைந்த இடமென்றோ இறைவன் சந்நிதானமென்றோ சற்றும் தயங்காமல் வேண்டுமென்றே பெண் களுடன் இடிபடும் இவர்களுக்கு..” மேலே சிந்திக்கவே முடியாமல் அருவருப்பு மனதைப் புரட்டியது.
சத்தியஜித், பார்த்திபனைப் போல் இருப்பாரா? இல்லாமல் எப்படி பார்த்திபனைப் படைத்திருக்க முடியும்?
ஒரு மாதிரியாக ஒன்பதாம் திகதியும் ஊர்ந்து வந்து சேர்ந்தது.
தங்கை லாவண்யாவும் அவளுடன் வருவதாகக்கூறியிருந்தாள்.
அவசர அவசரமாக வீட்டுவேலைகளைச் செய்துமுடிப்பதற்கு அதிகாலையிலேயே ஆரம்பித்துவிட்டாள் சாரதா.
ஒப்பனையிலும் உடையலங்காரத்திலும் அதிகம் கவன மெடுத்ததால் அதற்கு நேரம் சிறிது கூடுதலாகவே செலவாகியது.
இருவரும் புறப்பட்டனர். மனம் ஆவலே வடிவமாகப் பறந்தது. லாவண்யாவும் அப்படித்தானிருப்பது போலத்தென்பட்டாள்.
“சத்தியஜித்தை முந்திப் பார்த்திருக்கிறீங்களே அக்கா?” “இல்லை லாவண்யா. இண்டைக்கும் சரியான சனமாயி ருக்கப் போகுது”
“அப்ப இண்டைக்கும் பார்க்கேலாதே அக்கா?” லாவண்யா ஏங்கிப்போய்க் கேட்டாள்.
“மேடையிலை பார்க்கலாம். சந்திச்சுக் கதைக்கேலுமோ தெரியேல்லை…”
“நான் கிட்டப்போய்க் கதைச்ச பிறகுதான் வருவன்.” தன் உறுதியை லாவண்யாவின் குரலே கூறியது.
“நான் ஒரு புத்தகம் வாங்கி எப்படியும் அவரிட்டை ஒரு கையெழுத்தும் அதிலை போடுவித்துக்கொண்டுதான் வருவன்” சாரதாவும் திடமானதொரு திட்டத்துடன் வருவதை உறுதிப் படுத்தினாள்.
“நானும் அப்பிடி யோசிச்சனான். கனபோர் இந்த பிளானோடை வருவினமோ?”
இருவரும் மண்டபத்திற்கு வந்துசேர்ந்தார்கள். அவர்களுக்கு முன்பே அதிகமானவர்கள் வந்திருந்ததால் மண்டபத்தின் நடுப் பகுதியிலேதான் இருக்க இடம் கிடைத்தது.
“இண்டைக்கும் எல்லா வேலையளும் செய்து முடிச்சுத்தான் வெளிக்கிட்டீங்கள். கொஞ்சம் முந்தி வந்திருக்கலாம்” லாவண்யா கோபத்தை சாரதாவின் மேலே காட்டினாள்.
சாரதாவுக்கும் தான் பிழை செய்துவிட்டது போன்றதொரு குற்ற உணர்வு.
“அவர்தான் சத்தியஜித்” இரண்டு இருக்கைகளுக்கு அப் பாலிருந்தவள் ஒருவரைச் சுட்டிக் காட்டினாள்.
சாரதாவும் லாவண்யாவும் ஆவலுடன் திரும்பினர்.
அவன் எதிர்ப்பட்டவர்களுக்குக் கரங்குவித்து வணக்கம் கூறிக்கொண்டும். சிரித்து அளவளாவிக் கொண்டும் நின்றான்.
மகிழ்வு ஒளிரத் திரும்பிய சாரதாவின் மனதிலே மெல்லிய ஏமாற்ற முகிலொன்று தடவிச் சென்ற உணர்வு.
அவனுக்கு சுமார் நாற்பது வயதிற்கு மேலிருக்கும். உயரமாக, அழகாக, கவர்ச்சியாக இருந்தான்.
ஆனால்.. ஆனால் அந்தக் கண்கள்…
அதில் சத்தியத்தின் சுடரொன்றை அவள் கற்பனை செய்திருந்தாள்.
ஏதோ பணிவு காட்டுவது போல அந்தக் கண்களிலே தெரிந்த பாவனை ஒரு நரியின் பார்வையை அவளுக்கு நினைவு படுத்தியது அந்தக் கரங்குவிப்பும் ஏதோ ‘கூழைக்கும்பிடு’ என்பார் களே, அதை நினைவுபடுத்தியது.
“ஆளும் நல்ல வடிவு, என்னக்கா?” லாவண்யா பிரமித்தாள்.
அவனைப்பற்றி, கதையைப்பற்றி, பத்திரிகையைப் பற்றி என்று எல்லோரும் கருத்துப் பரிமாறிக்கொண்டிருக்க நேரங்கடந்தது.
விழா ஆரம்பமாகியது. ஒரே பாராட்டுமயம். பார்த்திபனும் அகல்யாவும் ஒவ்வொரு பேச்சிலும் வந்தார்கள்.
நூல் வெளியிடப்பட்டு சபையோரது கரங்களுக்கும் வந்தது. அதன் அட்டைப் படத்திலும் பார்த்திபனும் அகல்யாவுமே தோன்றினர்.
‘இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலிருக்கும் சத்தியஜித் மணமுடித்து, இக்கதையில் வரும் பார்த்திபனையும் அகல்யாவையும் போல் வாழவேண்டுமென வாழ்த்துகிறோம்” மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
“தனக்குக் கலியாணம் நடக்கயில்லையெண்டு இங்கையும் புளுகியிருக்கிறான் பார்”
சாரதாவின் பின்னாலிருந்து ஒரு குரல்!
“இதாலைதான் உமா விட்டிட்டுப்போனவள்” மற்றொரு குரல்.
“இவன்ரை காதல்கதையைப் பாராட்டி எழுதிறகன்னிப் பெண்களுக்கு இப்படிச் சொல்லிக் காதலனாகப் பார்த்தால் கட்டினவளுக்குப் பொறுக்குமே?”
“ஆனால் நானெண்டால் உமாவைப்போல கனடாவில் இருக்கிற அண்ணனிட்ட போயிருக்கமாட்டன். இங்கயிருந்து இவனின்ரை பித்தலாட்டத்தை வெளிப்படுத்தியிருப்பன்”
சாரதாவின் மனதில் நிறைந்திருந்த மரியாதை மளமளவென்று நழுவிக் கொண்டிருந்தது.
“சீ இவன் உருவாக்கிய பார்த்திபனோடு எனது கணவரை ஒப்பிட்டு சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் குறைகண்டேனே!” கழிவிரக்கம் மனதைக் கவ்விக் கொண்டது.
“அக்கா கூட்டம் முடிஞ்சிட்டுது. போய் கையெழுத்து வாங்குவம் வாங்கோ” தங்கை அவசரப்பட்டாள்.
“நேரம் போட்டுது: நான் வீட்டை போகவேணும் வாங்கிக்கொண்டு வா” சாரதா அசிரத்தையாக எழுந்து நடந்தாள்.
“அக்கா புத்தகத்தை மறந்துபோய் விட்டிட்டுப்போறியள்” லாவண்யா கூறியது பின்னிருந்து கேட்டும். கேட்காதவளாக அவள் நடந்தாள்.
– சஞ்சீவி, 02-03-1998.
– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.
November 26, 2026