வாணி ஏன் ஓடிப்போனாள்?




“சே…ஏன் இப்படி எட்டு கிலோமீட்டர் ரெண்டு மூட்டைகளை கைநோக சுமந்துகிட்டு வந்து கொடுத்துட்டு,ஒரு வாய் டீக்கூட குடிக்காம ,சொல்லாம கொள்ளாம ஒடனும்…அவளுகிட்ட எவ்வளவு சங்கதி மனசுவிட்டு பேசனும்னு நினைச்சேன் ..ஓடிப்போயிட்டாளே…செல்போனில் தொடர்பு கொண்டாள் ..எதிர்முனை பிஸி என்றது.அவள் மனம் நோக ஏதும் சொன்னோமா நினைவை பின்னோக்கிசெலுத்தினாள்.
பிரபல தொலைக்காட்சியில் ‘சண்டையில்லா சன்டே சமையல்’நிகழ்ச்சி ஒ ளிபரப்பாகிக் கொண்டிருந்தது.நோட்டும் கையுமாக அமர்ந்து ரெசிபிக்களை குறிப்பெடுத்தக்கொண்டிருந்தாள் ராதா.
மார்க்கெட்டுக்கு போயிருக்குற கணவன் வந்ததும் சுடச்சுட சமைக்கச்சொல்லி ஒருபிடிபிடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்க,சரியாக காலிங்பெல் ஒலித்தது .
கதவு திறந்தாள்,நின்றது அவளது பால்ய சிநேகிதி வாணி.!,கிராமத்திலிருந்து வந்திருந்தாள்.
இரண்டு பை நிறைய சுமந்துவந்ததை புடலை,அவரை,பீர்க்கை,காவளி என கடைபரப்பினாள் வாணி.
‘இதையெல்லாம் ஏன்டி சுமந்துகிட்டு திரியற இதையெல்லாம் இங்க யார் சாப்பிடறா.நாங்க இப்ப சாப்பிடறதை எல்லாம் கிராமத்துல உள்ளநீங்க கற்பனை கூட பண்ண முடியாது ?’_ஏளனமாக சொல்லியபடியே ‘இருடி டீ போட்டு எடுத்து வரேன் என்று அடுக்களைக்கு சென்றாள் ராதா.
அடுத்த ஐந்தாவது நிமிடங்களில் அவள் டீக்குவளையோடு கூடத்துக்கு வந்த போது வாணியைக்காணவில்லை..’எங்க போனா இவ ..சொல்லாம போற ரகமில்லியே..யோசனையோடு அவளது செல்போனுக்கு தொடர்பு கொண்டாள்.’தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக’அறிவித்தது.
அடச்சே சலிப்புடன் ரெசிபி நோட்டை எடுத்தவள் வாணி ஓடியதன் காரணம் புரிபட வீடே அதிர சிரித்தாள்.ரெசிபி நோட்டில் ‘கோழி சூப் ‘என்பதற்கு பதிலாக ‘தோழி சூப் ‘என்று தவறுதலாம தலைப்பு கொடுத்திருந்தாள்.