வாட்ஸ் அப்பில் (லாக் அப்பில்) ராஜாராமன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 26,883
ராஜாராமன் அம்மாஞ்சி என்று நினைத்தால் அது உங்கள் தப்பு. டிரைவிங் லைசென்ஸ் வாங்க எட்டு போட வேண்டும் என்று பாழாய்ப்போன அந்த RTO சொல்ல ஆரம்பித்தது வினை… “எட்டு தலை கீழாய்ப்போடுவேன்..”. என்றான். நம்ம ஆள் “எட்டை எப்படிப் போட்டாலும் எனக்கு ஒன்று தான்” என்று RTO சொல்லி விட்டான். பிடித்தது சனியன்… எட்டு எப்படி ஒன்றாகும் என்பது ராஜாராமன் கேள்வி. சரி அடுத்து ஒற்றைச் சக்கரத்தில் இவன் எட்டு போட அது எட்டு இல்லை… நாலு தான் என்று அந்த அதிகாரி சொல்லி விட்டான்.
அதோடு விட்டானா… ராஜாராமனுக்கு இந்தியாவில் எங்கேயும் லைசென்ஸ் கொடுக்கக் கூடாது என்று கறாராக வேறு எழுதி வைத்து விட்டானாம்… அப்புறம் ராஜாராமன் ஒபாமாவைப் பிடித்து அலபாமாவில் லைசென்ஸ் வாங்கியதாகக் கேள்வி. அந்த ராஜாராமன் இப்போது வாங்கியிருப்பது நாலு இலட்ச ரூபாய் பைக்… உபயம் அவன் அக்கா…
இது ஒரு விஷயமில்லை… பரகாலன் என்ற பந்தம் தாங்கி அந்த பைக்கில் பயணப்பட வேண்டும் என்ற போது தான் பிரச்சனை. பரகாலன் சேருமிடம் கலவரம் என்பது ஜாதகம். ஆனால் அவனை விட்டால் ராஜாராமனுக்கு ஆள் கிடையாது…. இப்போது கலகம் யாரால் ஆரம்பிக்கிறது…. அதான் தெரியவில்லை.
‘டேய் …. பரகாலா…. எங்கடா மூனு நாளாக் காணாம்… பைக் பார்க்கக் கூட வரமாட்டியா… பாரு தொட்டா உறுமுதுடா… அப்படி ஸ்டார்ட்டர் மேலே கை வைச்சா பறக்குது… இன்னிக்கு நீ வர்ரே எப்படி… ஏழு நிமிஷத்திலே சாந்தோம்… எட்டாவது நிமிஷம் வீடு….’
“கடவுளே…… உனக்கு என் மேலே இவ்வளவு காட்டம் என்னத்துக்கு…. நான் என்ன கெடுதல் பண்ணினேன்…. சர்வேசுவரா… இவன் கூட பைக்லே போறதை விட கிருஷ்ணாம்பேட்டைக்கு டிக்கெட் வாங்கிடலாமே….”
“என்னடா யோசனை…. ஏழுங்கறது எட்டு நிமிஷமாகும்….. சரிதானே…..
ராஜாராமன் அசடுதான்… ஆனால் அவன் பைக் ஓட்டுவதை யாராலும் சந்தேகிக்க முடியாது. ஒரு எழவுக்கும் லாயக்கில்லாத ராஜாராமன் பைக் ஓட்டுவதில் பலே கில்லாடி… ஒரு தடவை பீச்ரோட்டில் இவன் போன வேகத்தில் ஊமை ஒருத்தன் பயந்து “ஒவ்’” வென்று அலறியதில் ஆரம்பித்து, அவனுக்கு பேச்சே வந்து விட்டதாம். அதோடு நிற்கவில்லை. அந்த ஊமையன் காளிதாசன் மாதிரி கவி பாட ஆரம்பித்ததில் அவன் பொண்டாட்டி மிரண்டு போய் ஊமையனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அட்மிட்டே செய்து விட்டாளாம்… இவன் வேகத்தில் செவிடன் ஒருத்தனுக்கு காது ஜவ்வு கிழிந்து விட்டதாகவும் கூடத் தகவல்… அதை விடுங்கள் இப்போது பரகாலன் முறை…
“எட்டு நிமிஷத்திலே சாந்தோமா… ஏன் பதினைந்து நிமிஷத்திலே போறது…” என்றான் பரகாலன்.
“அதுக்கு சென்ட்ரல் கிட்ட பழைய குதிரை வண்டி ஏதாவது பார்… ஜெர்மன் பைக்… ஹிட்லரே டிஸைன் பண்ணியதாம்… தொட்டா நூறுதான் மினிமம் ஸ்பீட்”
“முண்டக்கண்ணி முருகப்பெருமாளே என்னியக் காப்பாத்த யாருமில்லையா…” என்று முனகிக்கொண்டான் பரகாலன்… “ஏண்டா ராஜாராமா அக்காவுக்கு தெரிஞ்சா கொன்னுடுவாளே…”
“அக்காவாவது கக்காவாவது… பைக் வாங்கித் தந்ததோட அவங்க கடமை முடிஞ்சது… ஏர்றா எருமை… அக்கா சுக்கான்னு வசனம் பேசறான்… பைக் ஓட்டுறது என் பிறப்புரிமை… அந்த RTO மிரட்டியே ஆகல… பேசறான்…”
அக்கா கக்காவாக பரகாலன் சுக்கானான்… எட்டுலே சனி என்று முதல் நாள் வந்திருந்தது… இப்போது எட்டிலேயும் சனி என்று நிர்ணயம் ஆகி விட்டது… விதி ஜொ்மன் பைக்கில் வந்து விட்டது… விடாது…. ஹிட்லரே டிசைன் பண்ணின விதி…
“கவசம் போட்டுக்கலாமா… ராஜா” என்று ஆரம்பித்தான் பரகாலன்.
“சுத்த வீரனுக்கு கவசம் என்னத்துக்கு… நீ போட்டுக்கோ… நான் ஆம்பள…”
“சுரீரென்றது பரகாலனுக்கு… இவன் சுத்த வீரனாம். ஆம்பிளையானம்… நான் என்ன குளிக்காதவனா… பாவாடை தாவணி கட்டிய பொம்பளையா…
“என்ன வார்த்தை சொல்லிட்டே… நான் ரெண்டு தடவை குளி்க்கிறவன்… நானா சுத்தமில்லை… ஆம்பிளை கக்கூஸ்தானே போறேன்… அப்புறம் என்ன சந்தேகம்… பாரு இதுக்கு மேல பேச்சில்லை… உடல் பைக்குக்கு… உயிர் உனக்கு…” பரகாலன் துணிந்து விட்டான். “டேய் ராஜாராமா…” என்று கருவிக்கொண்டான்… “என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே… ஒருநாள் இருக்குடா உனக்கு…” என்று சபித்துக்கொண்டே வண்டி ஏறினான்… விதி சத்தம் போட்டு சிரித்தது… ‘மாட்னீங்கடா மகனுங்களே… செத்தீங்க…’
ஒன்பதாவது நிமிஷ ஜாதகம் பரகாலனுக்கு சொல்லவில்லை… தேவையில்லை… ஒன்பதாவது நிமிஷம் தூரத்தில் புள்ளியாய் ஒரு டிராபிக் போலிஸ்…
“டேய் வெள்ளைக்காரன்’ வாய் மூடும்போதே காரியம் மிஞ்சியது… ஒரு வினாடியில் அந்த ஜொ்மன் பைக் சார்ஜன்ட்டின் இரண்டு தொடைகளுக்கு நடுவே… ‘விஷயம்’ அடிபடாமல் “கக்” என்று நின்றது. சார்ஜன்ட்டால் தன்னையே நம்ப முடியவில்லை… ரெண்டு வினாடி முன்பு தன் ரெண்டு தொடைகளுக்கு மத்தியில் ஒரு தொந்தரவும் இல்லையே…
“ஏண்டா நடுவிலே விட்டே…” என்றான் சார்ஜன்ட். “ஏண்டா” என்றதும் ராஜாராமனுக்கு ஜிவ்வென்று ஏறியது… ஒரு போலிஸ்காரன் தன்னை டா போட்டு பேசுவதா… எம்.டெக். கம்பியூட்டர் என்ஜினியர். தான் எப்படிப்பட்ட குடும்பம்… எத்தனை போலிஸ்காரன் சல்யூட்… விடரதில்லை இவனை… சூடாக ஆரம்பித்தான்… “நீங்கதானே் நடுவிலே நின்னீங்க… இப்படி” என்று காலை பரப்பிக் காட்டினான்…’
“நான் காலை அப்படி வச்சா நீ உள்ளே விடுவே…
“நான் விடலியே… நான் நிறுத்திட்டேன்” என்றான் ராஜாராமன்.
“நீ விட்டேடா” என்று சத்தம் போட்டான் சார்ஜன்ட்.
அவனுக்கு எல்லையில்லாத கோபம்… முகம் சிவந்து விட்டது…
“நான் உட்டு நிறுத்திட்டேன்…” இது ராஜாராமன்.
“இவன் என்னய்யா சொல்றான்” என்று கூட இருந்த போலிசை துணைக்கு அழைத்தான் சார்ஜன்ட்.
“அவன் விட்டு நிறுத்திட்டான் ஸார்… நீங்கதான் நிறுத்தாம விட்டுட்டீங்க..”
“என்னய்யா நீ உளர்ரே…”
“நான் உளரலே ஸார்… கொஞ்சம் கீழே குனிஞ்சு பாருங்க…”
சார்ஜன்ட்டால் அது மட்டும் முடியாது… பெரிய வயிறு… கையாலே கீழே தொட நசநசத்தது… விரலாலே தொட்டு மூக்கில் வைத்தார். எல்லா ஜாதி குரங்குகளும் இப்படி மூக்கிலே வைத்துத்தான் பார்க்குமாம்.
“என்னய்யா மூச்சா நாத்தாம்…”
“அதான் சொன்னேனே ஸார்” அவன் விட்டு நிறுத்தினான்.. நீங்க நிறுத்தாம விட்டுட்டீங்க… டாங்க் ஒடஞ்சிடுச்சி…”
“அவன் டாங்கா…”
”இல்லே… உங்க டாங்க்… மூச்சா டாங்க்…”
“டேய்” என்று பீச் முழுவதும் கேட்சிற மாதிரி சத்தம் போட்டார் சார்ஜன்ட்…
“இதுக்கெல்லாம் நீதாண்டா பதில் சொல்லணும்”
“ஸார்… உங்க மூச்சாவுக்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்றது…”
“டேய்” என்று அலறினார் சார்ஜண்ட் அவருக்கு கோபத்தில் பேச்சே வரவில்லை. “உன்னை விடமாட்டேன்…”
“ஆனா மூச்சாவை விட்டுட்டீங்க” என்றான் ராஜாராமன்.
“ஸார்… அவனை அப்புறம் பாத்துக்கலாம்… முதல்ல ஜட்டி பேண்ட் மாத்திக்கலாம்… எதுக்கும் பின்னாடியும் பாத்துக்கலாம்…”
”நான் ஜட்டி போடறதில்லேய்யா… பழைய லங்கோடு… ஆமா பின்னே கூட கொஞ்சம் கசகசன்னு லங்கோட்லே…
“அட எழவே… அது வேறயா… இந்த ராத்திரியே லங்கோடுக்கு எங்கே போவது என்று பயம் வந்தது சின்ன போலிஸ்காரனுக்கு.
“வெறும் பேண்ட் போட்டா தப்பில்லே ஸார்… சமயத்திலே நானெல்லாம் அப்படித்தான்” என்றான் நடுவில் புகுந்த பரகாலன்.
இரண்டு பேரையும் எரிக்கிற மாதிரி பார்த்துவிட்டு “பேசுவீங்கடா…. வந்து கவனிச்சுக்கறேன்… ”அவன் சாவியை எடுத்துகிட்டு நீ வாய்யா” என்று உத்தரவு போட்டார்.
சார்ஜன்ட்டைப் போகவிட்டு, போலிஸ் ராஜாராமனுக்கு கை கொடுத்தான்… ”தம்பிகளா… நல்லவேலை செஞ்சீங்க… இதுவரை இவனைப் பார்த்து எல்லாம் மூச்சா போனாங்க… இவன மூச்சா போக வச்ச மொத ஆள் நீதான்… அவன் பேண்ட் மாத்தி ஜிப் போடக்கூட நான்தான் போகணும் எல்லாம் விதி…“ என்று சொல்லி ஓடினான் போலிஸ். “இப்போ நான் பழைய லங்கோடு வேற தேடணுமே… கண்றாவியான உத்தியோகம்யா இது…”
பக்கத்தில ரெண்டு மூணு குழு நின்றிருந்தது…
“எதுக்குடா பரகாலா நிக்குறாங்க…”
“அன்னதானத்துக்கு ஆள் நிறுத்தியிருக்காங்க… கொஞ்சம் பொறு… நம்மளயும் கூப்பிடுவாங்க”
“கூப்பிடுவாங்களா?“ என்று அப்பாவியாய்க் கேட்ட ராஜாராமைனைக் கொலைவெறியுடன் பார்த்தான் பரகாலன்… “சண்டாளா… நடுரோட்ல நிக்க வச்சிட்டியே… மானம்போகுது… அவன் வந்து என்ன செய்யப்போறானோ… ஆமா எப்படிடா அவ்வளவு கரெக்டா “சமாச்சாரம்” அடிபடாம நிறுத்தினே…
“அதான் ராஜாராமன்”
“நாயே ஒதச்சே கொன்னுடுவேன்… பயத்துல அவன் மூச்சா போயிட்டான் நாம எங்க போறோமோ தெரியலியே… ஏண்டா எவ்ளோ ஸ்பீட்ல வந்தே…”
”நூத்துமுப்பது…” என்றான் ராஜாராமன். குரலில் பெருமை.
“பல்லாவரத்திலே ஓட்டவேண்டியன் பல்லங்குழி ரோட்ல வந்து ஓட்டுறீங்களேடா… கடவுளே அந்த சார்ஜண்ட் என்னவெல்லாம் செய்யப்போறானோ… கபாலீஸ்வரா காப்பாத்து…“
”பொட்டை மாதிரி புலம்பாதேடா… அக்காவுக்கு போனப் போடு… உன் செல்லை எடு…”
”அதுல காசில்லைடா…” என்றான் பரகாலன்.
“தரித்திரம் பிடிச்சவனே” என்று திட்டிக்கொண்டே தன் செல்லை எடுத்தான் ராஜாராமன். ”டேய் பரகாலா செல்லுலே சார்ஜ்ஜே இல்லைடா என்ன செய்யலாம்…“
”சாவு…” என்றான் பரகாலன்.
“சர்ரென்று” வந்த போலிஸ் வேன் கொடிபிடித்த கூட்டத்தை அள்ளிக் கொண்டது… அடுத்து வந்தது ஒரு போலிஸ்ஜீப்…
“யோவ் இன்னுமா இவனுகள கொண்டு போகல? வித்தையா காட்டுறீங்க வச்சிகிட்டு”
”பின்னாலே வண்டி வருதுங்க ஐயா..”
”ஏத்தி ஸ்டேஷன் கொண்டு போங்க… சீக்கிரம்…” தொடர்ந்து ஒரு சுமோ வந்தது. உள்ளே இரண்டு பெண்கள். ஒருத்தி பொம்பளை அடியாள் போல இருந்தாள். ஒரு போலிஸ்காரன் இறங்கி வந்தான். ”எல்லாம் ஏறுங்கய்யா” என்று ஒரு கர்ஜனை செய்ய அவனிடம் இருந்த லட்டிக்கு பயந்து நம்ம ஆள் இருவரும் சட்டென்று வண்டிக்குப் பாய்ந்தார்கள். சுமோ நகர்ந்தது.
”ஸார் எங்க பைக் அங்க இருக்கு”
”அது ஸ்டேஷன் வரும். கேசுக்கு அது வேணுமில்லே…”
“எங்க மேல கேஸ் போடப்போறிங்களா… அதுக்கா ஸ்டேஷன் போறோம்” என்றான் ராஜாராமன்.
”இல்லேப்பா… உங்களுக்கு அங்க பிரியாணி, ஐஸ் வாங்கித் தருவாங்க… ஏண்டா விக்கிறது கஞ்சா எதுக்கு ஸ்டேஷன் போறோம்னு கேள்வி வேற…”
ஐயோ என்று அலறினான் பரகாலன்… ”நாங்க கம்பியூட்டர் என்ஜினியர்… கஞ்சா கேஸ் இல்லே…”
”பயில்வான் மாதிரி இருந்த பெண் சமாதானமாய்த் திட்டினாள்.
“அடங்குடா… ஏன் கூவறே… என் ஏரியாவுல வந்து கஞ்சா விக்கிறியே… உனக்கு என்ன தைரியம்… நாங்கள்ளலாம் புடலங்காய்ன்னு நெனச்சியா…”
”ஐயோ… நாங்க கஞ்சா விக்கல…”
”அப்ப பொம்பள கேஸா இருக்குமாடி விஜயா…
கம்பியூட்டா் என்ஜினியா்னு சொல்றாங்க… அதுக்கெல்லாம் இவனுங்க லாயக்கில்லக்கா… ஏங்க்கா கம்யூட்டர்லே உலகமே இருக்குமாமே”
”அடிப் போக்கத்தவளே… உலகம் கம்ப்பியூட்டர்லே இல்லேடி இங்கதான் இருக்கு… என்று ஒருவிரலால் இடத்தைக் காட்டி சிரித்தாள். நம்ம பயில்வான்… ராஜாராமனும் பரகாலனும் கண்ணை மூடிக்கொண்டார்கள்… வண்டி ஸ்டேஷனுக்கு வந்தது…”
”டேய்… எறங்குங்கடா மாப்புள்ளைகளா… சொந்த வண்டி கணக்கா வர்றீங்க…”
தொபுக்கடீர் என்று இருவரையும் கிங்கரி இழுத்து வீசினாள்… சொத்தென்று இருவரும் ஸ்டேஷன் வாசலில் விழுந்தார்கள்…
”டேய் பரகாலா… ரொம்ப மோசமா நடக்குது… ஒரு ஐநூறு தள்ளி தப்பிச்சுக்கலாம்… எப்படி ஐடியா…”
”என்கிட்ட காசு இல்லே… கார்டுதான் இருக்கு… உங்கிட்ட…”
”அதை நேத்து அக்கா புடுங்கிட்டா… என்ன செய்யலாம்…” என்றான் ராஜாராமன்.
”பீச்ல பிச்சை எடுக்கலாம்… வண்டிய ஓட்டற போதே புத்தி இருந்திருக்கணும்…”
ஸ்டேஷன் உள்ளே மூன்று பேர் கேவலமாக உட்கார்ந்திருக்க இவர்கள் உள்ளே நுழைந்தார்கள்… ”டேய் பரகாலா… நாம எங்க ஊட்கார்றது…”
”எங்க உட்கார்றது… பார்லிமெண்ட்லயா உட்கார முடியும்… அவனுங்க கூடத்தான்…” என்றான் பரகாலன்.
”புலம்பாதேடா… நான் இருக்கேன்ல சமாளிக்கலாம்…” என்று நம்பிக்கை விடாமல் பேசினான் ராஜாராமன்.
”ஏண்டி பேச்சி… நீ எங்க வந்த” என்றான் ஒரு பொம்பளை ஏட்டு…
”வழக்கம்போல ஸ்டேஷனுக்கு வான்னாங்க… வந்தேங்க்கா… ஏங்க்கா… உனக்கு ப்ரமோஷன் வருதாமே…”
”ஆமாண்டி எஸ்.ஐ. ஆகப்போறேன்… அங்க வந்து உயிரை எடுக்காதே… ஆமா யாரு இவனுங்க…”
”சாந்தோம்ல கஞ்சா விக்கிறாங்களாம்க்கா”
”ஐயோ… நாங்க கம்பியூட்டா் என்ஜினியா்” என்றார்கள் கோரஸாக.
”ஆமா… தாடி எதுக்கு இப்படி ஆட்டுக்கிடா மாதிரி வளத்திருக்கிங்க… அது அடையாளமா…?”
”என்ஜினியா் என்ஜினியா்னு திரும்பத்திரும்ப சொல்றாங்க அக்கா…”
”டேய் அக்கா அடிச்சா அம்பத்தூர் வரை கேட்கும்… ஒரு தடவை என்னைக் கிள்னாங்க பாரு… டக்கென்று புடவையை முழங்காலுக்கு மேல் தூக்கினாள் நம்ம சிங்கரி… பாத்தியா தளும்பை…”
”அடேயப்பா… எவ்வளவு நீளத்தளும்பு” என்றான் பரகாலன்…
”ச்சீ… புடவையைக் கீழே எறக்குடி மூதேவி… ஒன்னு விடாம காமிச்சிடு… சனியனே… வெட்கம் கெட்டவ… ஷண்முகம் இவளுங்ககிட்ட கையெழுத்து வாங்கி அனுப்புங்க… ஸ்டேஷன நாறடிச்சுடுவாங்க… ஏய் கஞ்சா ஓரமா போய் நில்லுங்க…”
”நாங்க கஞ்சா விக்கிற ஆளில்லே…”
”பின்னே பவுடரா… ஆளப்பாரு…”
”அக்கா அந்தக் குண்டன் அம்சமா இருக்கான்லே” என்றாள் நம்ம பயில்வான் பொம்பளை கூட வந்தவள்… ”விட்றி… நாம பாக்காததா… ஏட்டக்கா பையனை ஒன்னும் செஞ்சிடாத என்றாள் பேச்சி.
“டீய்” என்று போலிஸ்காரி கையிலிருந்த பிரம்பை பேச்சி மேல் விசிற அவர்கள் ரெண்டு பேரும் சிரித்துக்கொண்டே வெளியே ஓடினார்கள்…
“டேய் மூன்று பேரும் அங்க ஐயா கூப்பிடுறாறு போங்க…” என்று உத்தரவு வர மூன்று கேடிகளும் ஓடினார்கள்.
ரெண்டு நிமிஷம் கழித்து மூன்று பேரும் நொண்டிக்கொண்டே வந்தார்கள்… ரொம்ப சிதிலமடைந்த ஒருத்தன் “ஐயோ அப்பா” என்று நிறுத்தாமல் அலறினான்.
இன்னொருத்தன் “அவுக்கச் சொன்னா அவுத்துடறோம்…” அதுக்காக இந்த அடியா? யோவ்… பாத்தீங்களே… பேண்டை அவுத்துட்டு ஜட்டியோட அங்க உட்காருங்க… நீங்க எங்க மாதிரி அடி தாங்குவீங்களா… அந்தக் கொலகாரன் எடம் பார்த்து அடிக்றான்… டீக்கடையிலே இருந்து அவன் வந்ததும் உங்களுக்கும் இருக்கு…”
“டேய் ராஜா என்னடா செய்யறது புரியலியே… அடியா அம்மணமா…”
“ஜட்டி இருக்லாம்லே” என்று சந்தேகம் கேட்டான் ராஜாராமன்.
“அது இருக்கலாம் தப்பில்லே… சட்னு மூனு சொல்றதுக்குள்ளே அவுத்து கக்கத்திலே வச்சிகிட்டு ஓரமா உட்காருங்க…” என்றான் ஒரு கேடி.
“நாங்க ஒண்ணுமே பண்ணல்லியே… ”
“கரெக்ட்ய்யா… போலிஸ் ஸ்டேஷன்லே நாங்ககூட அப்படித்தான் சொல்லுவோம்… பாரு அனுபவஸ்தன் சொல்றேன்… ஒரு ஸெகண்ட் வேஷ்டி அவுக்கல… கும்மி எடுத்துட்டான்… ஒங்கள இப்படிப் பார்த்தா குமுறிடுவான்யா… பாவயன்யா… நீங்க சின்னப்பசங்க அடிதாங்க மாட்டீங்க… ஒரு பாரிதாபத்துக்குச் சொல்றேன்… அப்புறம் உங்க இஷ்டம்…”
“டேய் ராஜா அந்தப் போலிஸ் வந்து அடிச்சு அவுக்கறதை விட அவுத்து அடிக்கிறது மேல் இல்லையா…”
“அவுத்தாலும் அடிக்கலாம் அதுக்கெல்லாம் கியாரண்டி கிடையாது” என்றான் ஒருத்தன்.
“சரிடா பரகாலா… நம்மளாலே முடிஞ்சதை நாம செஞ்சிடலாம்… அவுத்துடலாம்…”
“நல்ல யோசனை என்று பரகாலன் ஆமோதித்த போது அவன் ஜட்டி தவிர மத்த எல்லா சமாச்சாரமும் கழட்டிவிட்டு கைம்பெண் மாதிரி நின்றிருந்தான்.
“இதேல்லாம் எங்கேடா வைக்கிறது…” ஒரு கேடி குற்கிட்டான்… “இது கூடத்தெரியாது அங்க வைங்கய்யா… எல்லாம் கேட்டு உயிரை எடுத்துட்டு… அந்த நாய் வந்தா எங்க மேல விழுவான்… நீங்க அவுக்காம போயிருந்தா ஏண்டா அவனுங்களுக்கு சொல்லலின்னும் அடிப்பான்… எல்லாம பழகிக்கணும்யா”
“என்னடா அங்க சத்தம்…”
“ஒண்ணுமில்லைங்கய்யா.. இந்த புதுப்பசங்களாலே தொல்லை… ஏன்யா இப்படி பெருமாள் மாதிரி ஜட்டியோட நிக்கறே…’
பெருமாள் இப்படி ஜட்டியோடு நிற்கிறது எங்கே என்று ராஜாராமனுக்குத் தெரியவில்லை் விஸ்வரூப தரிசனம் என்பது இதுதானோ… என்னவோ… அப்போதுதான் அந்த சந்தேகம் வந்தது.
“ஏண்டா பரகாலா… மண்டகப்படிக்கும் சாத்துப்படிக்கும் என்னடா வித்தியாசம்…”
“நடுமண்டையிலே அசடி்சா அது மண்டகப்படி… கீழே அடிச்சா அது சாத்துப்படி”.
“நம்ம மூளிக்காது போலிசுக்காரனுக்கு எல்லாமே அத்துப்படி” என்றான் ஒரு பட்டாபட்டி உன் டிராயர்-பரகாலனுக்கு உள்ளே புளி கரைந்தது…
“பரகாலா… நம்மளை இப்படி பார்த்தா ஆபிஸ்காரங்க என்னடா செய்வாங்க…”
“வாட்ஸ்ஸப்பிலே போட்டு வஸ்திரப் பிச்சை கேப்பான்… சும்மா நச்சு நச்சுன்னு ஏதாவது கேட்டுக் கலக்காத… வாயைப் பொத்திட்டு உட்காரு… ஏண்டா ஏதவாது பிகர் இருக்காடா உனக்கு…”
“இதுவரை எவளும் இல்லே…” என்றான் ராஜாராமன்.
“கவலைப்படாத இதப் பார்த்தா பெரிய கூட்டமே சேரும்…” என்றான் பரகாலன் ஒரு நப்பாசையுடன் ஒரு கேடியின் பக்கம் திரும்பினான்…
“ஏம்பா ஸெல் இருக்கா…”
“இருக்கே மூணு ஸெல் இருக்கு… ஐயா இந்தப்பசங்க ஸெல்லுக்குப் போகணுமாம்…”
“சரி… எல்லாருமா ஸெல்லுக்குப் போங்க நேரமாச்சி…”
“யோவ்… நாங்க கேட்டது… ஸெல் போன்யா…”
“அந்த ஸெல் கேட்டாலும் இந்த ஸெல்லுக்குத்தான்யா அனுப்புவாங்க…”
“பாவி… ஏண்டா ஸெல் கேட்டே என்று ராஜாராமன் கடித்தான்… அதெல்லாம் லாக்அப் ரூம்டா.. ஏண்டா அங்க வச்சி என்ன செய்வாங்க…”
பரகாலனே பதில் சொன்னான்… “அங்க வச்சித்தான் ஆப்பு அடிக்கிறது”
“வாங்க தம்பி ஐயா ஸெல்லுக்குப் போகச் சொன்னாருல்ல… வாங்க… வரல்லே அதுக்கும் வாங்க வேண்டியிருக்கும்…”
”நாங்க எதுவம் வாங்காம வந்துடறோம்” என்று பரகாலன் ஸெல்லுக்கு எழுந்தான்…
செம்மறி ஆடு மாதிரி எல்லாரும் வரிசையாக எழுந்தார்கள்… பரகாலன் புலம்பினான்…
“நாங்க ஒண்ணுமே செய்யலியே…”
“ஐயா… மந்திரிங்க உட்பட இங்க வர்ற சக்கல ஜனங்களும் இதேதான் சொல்றாங்க… சும்மா வா… கவலைப்படதே… பழகிக்கோ… புலம்பாதே… எது நடக்க இருக்கிறதோ அது நல்லதாகவே நடக்கும் என்றான் ஒரு சோமாறி…”
“யோவ் கீதையா…”
“பாரு தம்பி லாக்அப் வேற… ரிமாண்ட் வேற ஜெயில் வேற… பெயில் வேற… இங்க சொல்றத அங்க சொல்லதே… அங்க சொல்றத இங்க சொல்லதே… மாத்தி சொன்னே… மாத்து மாத்துன்னு மாத்திடுவாங்க…
“லாக்அப்னா என்ன” என்றான் ராஜாராமன்.
“ஆடு கோழி வெட்டும்போது தண்ணி தெளிப்பாங்க இல்ல… அது மாதிரி வச்சிக்கோ… இப்ப நமக்குத் தண்ணி தெளிச்சாச்சு… வெட்டு அடுத்த சடங்கு…”
“ஓ”
“அப்புறம் நாளைக்கு கோர்ட்டுக்கு கொண்டு போவாங்க… அங்க பெரியவரு எது கேட்டாலும் ஆமான்யா.. நீங்க சொல்றது சரிங்கய்யான்னும் சொல்லணும்…”
“நான் சொல்ல மாட்டேன்” என்றான் ராஜாராமன்.
“உனக்கு தலையிலே கோட்டான் ஏறிடுச்சு…. பாரேன் காலையிலே உன்ன எது கேட்டாலும் ஆமான்கய்யான்னு ஒரு ஜபம் மாதிரி சொல்லுவே…”
”என்ன சொல்ல வைக்க முடியாது…”
”முடியுமே… குனிய வச்சி அந்தப் பெரிய லட்டி அரை அடி உள்ளே உடுவான்… அப்ப முதுகிலே விழும்பாரு அடி அலை அலையா… அந்த அனுபவமே தனி…”
“பரகாலா நான் கலையிலே டாய்லட் போகலைடா… அந்த லட்டி கழுவுவாங்களா… டாய்லட் வந்துட்டா என்ன செய்யுறது…”
டிராயர் காரன் குறுக்கிட்டான்…
“இங்கயே போய்க்கலாம்… அதான் வழக்கம்… அங்க பார்… பார்த்தியா சுவரெல்லாம் மூத்திரம்…போலிஸ் ஒரு தடவை அடிப்பான்… அடிபட்டவன் ஒவ்வொரு அடிக்கும் மூச்சா அடிப்பான்.
“டேய் பரகாலா அங்க கருப்பா என்னமோ தெரியுதே அது என்னடா…”
“அது பெருச்சாளிப் புழுக்கையா இருக்கும்” என்றான் பரகாலன்.
“அது பெருச்சாளிப் புழுக்கை இல்லேய்யா மனுஷப்புழுக்கை…”
“மனுஷங்க இங்க புழுக்கையெல்லாம் போடுவாங்களா…”
”லத்தியே போடுவாங்க… அப்படி அடி உளுவுமில்லே…”
“சரி அதை யாரு எடுப்பாங்க…” என்றான் ராஜாராமன்.
“போட்டவன்தான் எடுப்பான்…”
“மனுஷக்கழிவை மனுஷன் எடுக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டாச்சே… தெரியாதா உனக்கு…”
“அப்ப நீ லத்தி போடுவே… கரடி வந்து எடுக்குமா… என்னய்யா நியாயம்”
“பரகாலா… இவன் கரடி வரும்… புலிவரும்கறான்… பயமா இருக்குடா…”
ஆமா நீங்க எதுக்கு இங்க வந்தீங்க…
”என் மேலே ஏற்கனவே பத்து கேசு இருக்கு… போடப்போறது பதினொன்னாவது…”
“என்ன கேசு?” என்றான் பரகாலன்
“நாளைக்கு கோர்ட்ல சோல்லுவான் அப்பத்தான் தெரியும்… இங்க இருக்கிற எவன் மேல என்ன கேசுன்னு யாருக்கும் தெரியாது… ஆமா உங்க மேலே என்ன கேசு…?”
“தெரியாதே…” என்றார்கள் இருவரும்.
“அதுதான் போலிஸ்… பேப்பர் எடுக்கிறவரைக்கும் அவனுக்கே கேஸ் தெரியாது”
“அட ஒரு சமாச்சாரம் கேளு… போன மாசம் நடந்தது. இங்க ஒரு பெரிய மனுஷன் வந்து ஒரு ஆள் மேலே கற்பழிப்பு கேஸ் குடுக்கிறான்… சும்மா பீச்ல நடந்துகிட்டிருக்கிற ஆளை இங்கே கொண்டு வர்ராங்க… அவனும் யதார்த்தமா வந்துட்டான்… அவன் யார்னு அடையாளம் தெரியல்யே… அவன்தான் கற்பழிப்பு செஞ்சவன்னு அடையாளம் காட்டினாங்க… அப்புறம் என்ன ஏதுன்னு கேட்காம அவனை சும்மா மாத்து மாத்துன்னு மாத்துறாங்க… ஐயோ நான் ஐ.ஜி.யான்னு அலற்றான் அவனை… விட்டாதானே தண்ணி குடுத்து தண்ணி குடுத்து அடிக்கிறாங்க… நாலு நாளா அடிக்கிறாங்க… அவன் ஒரு தப்பும் செய்யலிங்கிறான்… விடுவானுங்களா… சாத்துறாங்க… சாத்துறாங்க… சாத்திகிட்டே இருக்காங்க… அப்புறம்தான் தெரியுது அந்தாளு நிஜமாவே ஐ.ஜிதான்னு…
“ஐயோ அந்த ஆள் என்னவானான்”
”அது அந்த ஆளுக்கே தெரியல… அப்படி ஒரு அடி… இவங்க அந்த ஆள் ஐ.ஜின்னு ஒத்துக்குற போது அடிபட்டவன் தான் ஐ.ஜி.யே இல்லேன்னு கத்துறான்…
இப்ப அந்த ஆள் எங்க….?
“அவன் இப்போ பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருக்கான். அவன் போட்ட இந்தப் புழுக்கையை அவன் ஞாபகமா விட்டு வச்சிருக்காங்க…”
“இந்த விஷயம் பரவாயில்ல. மனுஷன் கற்பழிச்சான்னு ரிப்போர்ட்… ஒரு ஸ்டேஷன்லே யானை கற்பழிச்சதா ஒரு கம்பிளைன்ட் வந்து போட்டுத் தாக்கியிருக்காங்க…
“யானையையா?”
“இல்லை யானைப்பாகனை”
அப்புறம்…..
“அந்தப்பாகனை மிதிச்சதாலே ரெண்டு எலும்பு நொறுங்கிப்போச்சாம்…”
“யாரு போலிஸ் மிதிச்சதா…”
“இல்லே யானை மிதிச்சதாலே”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன… யானை தப்பிச்சிருக்கு… யானையை வலைபோட்டு போலிஸ் தேடுதாம்…”
“டேய் யானை கற்பழிச்சது… பூனை காதலிக்குது இதா நம் பிரச்சனை… ராஜா நீ எவ்வளவு புத்திசாலி… வெளியே போக வழி பண்ணுடா..”
“ராஜாராமனிடம் அவன் புத்திசாலி என்று ஒரு பிட் போட்டால் எதுவும் சாதிக்கலாம்… அப்படி ஒருத்தன் பத்தாயிரம் லவட்டிவிட அவன் கிரடிட் காரட்டு அக்கா வசம் போய் விட்டது…”
“அப்படியா சொல்றே” என்று பரகாலனை அவநம்பிக்கையுடன் பார்த்தான் ராஜாராமன்…
“ஆமா பின்னே நீ எம்.டெக். இல்லே…” அடுத்த பிட்டில் ராஜாராமன் தொபுக்கடீர் என்று விழுந்து விட்டான்.
“சரி ஒரு ரெண்டு நிமிஷத்திலே முடிவு பண்ணிடறேன்…” கால்களை சம்மணமிட்டு கண்களை மூடிக்கொண்டான் ராஜாராமன்…
“என்னய்யா உன் பிரண்ட் உட்கார்ந்துகிட்டே தூங்குறானா… ஐடியா கேட்டே…” என்றான் ஒரு கேடி.
“இப்போ பாருங்களேன்…” பரகாலன் ராஜாராமனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனா்…
“அசட்டுப்பயலை நம்ப முடியாது… சட்டென்று ஒரு ஐடியா கூடக் கொடுத்து விடுவான்…”
சட்டென்று கண்களைத் திறந்தான் ராஜாராமன்…
“பக்தா.. உன் பக்திக்கு மெச்சினேன்… உனக்கு என்ன வரம் வேண்டும்”
“என்னை ஒரு ராத்திரி பூரா செருப்பாலே அடிக்கணும்…” ஏண்டா இதுதான் உன் ஐடியா லட்சணமா… மானம் போக வக்கிறியேடா.. இவனுங்கள்ளலாம் சிரிக்கிறாங்க…”
“அமைதி… அமைதி… இப்போ நாம வெளிய போகணும் அதானே உன் பிரச்சனை… சரி கதவைத்திற… வெளியே நட…” என்றான் ராஜாராமன்.
“டேய் அசட்டுப்பயலே…லாக்அப் கதவு பூட்டியிருக்குடா…” என்று அலறினான் பரகாலன்.
“யோவ்… ஊளையிடாத… லாக்கப் கதவை எப்பவும் பூட்டமாட்டாங்க…. எங்க மேல அவ்வளவு நம்பிக்கை போலிசுக்கு…” இது ஒரு கேடியின் ஸ்டேட்மெண்ட்…
“போ பரகாலா போ… வெளியொ நட… பரகாலன் எழுந்து லாக்கப் கதவைத் தள்ள அது கிழவி இருமின மாதிரி சத்தத்துடன் திறந்தது… பரகாலனுக்கு உயிரே இல்லை…
“ராஜா எதுக்கும் நீ முன்னாலே நட எனக்கு நடக்கவே வரல… கால் பின்னுது…”
ராஜா பெயருக்கு ஏத்த மாதிரி ராஜா மாதிரி எழுந்து பரகாலனுக்கு முன்னால் கால் எடுத்து வைத்து நடந்தான்…
“டேய் ஜட்டிதான் போட்டிருக்கோம் மறக்காதே“
“கவலைப்படதோ… நம்ம பேண்ட் சட்டை நாம எடுத்துப் போட்டுக்கிறது…
அது என்ன போலிஸ்காரனா வாங்கிக் கொடுத்தான்… அவன் அப்பன் சரவணா ஸ்டோர்ஸிலே வாங்கினதா… அலட்டாமல் நடந்த ராஜாராமன் பேண்ட் சட்டைகள் எடுத்துப் போட்டுக்கொண்டான். பரகாலனும் அப்படியே…
“அப்ப அடுத்து என்னடா செய்யட்டும்” என்றான் பரகாலன்… அவனுக்கு ஸ்மரனையே இல்லை…
“என்ன செய்யறதா… வெளிய போறது…”
“உசிருக்கே துணிஞ்சிட்டியாடா ராஜா”
“நடடா” என்று முன்னால் நடந்தான் ராஜாராமன்
யாரும் தடுக்கவில்லை. ஒரு சப் இன்ஸ்பெக்டர் எதுவும் கவனிக்காமல் மும்முரமாக கண்ணை மூடிக்கொண்டு காதைக் குச்சியால் குடைந்து கொண்டிருந்தான்…
கதவைத்திற என்று ஒரு பெங்களுா் சாமியார் சொன்னதை அந்த சப் இன்ஸ்பெக்டர் காதைத்திற என்று கேட்டிருந்தான் போல… காது குடைவதை ஒரு கைங்கர்யமாகவே கொண்டிருந்தவன் என்று தெரிந்தது… ஆஹா என்ன ஒரு சுகம்… இவர்கள் இப்படி சர்வ சாதாரணமாக நடந்து வெளியே வந்திருந்தார்கள்.
“டேய்… ராஜா வெளியே வந்துடடோம்… தப்பிச்சி ஓட வேண்டியதுதான் பாக்கி…” “ஏண்டா நம்மள ஒரு நாயும் கேக்காதா… என்னடா ஸ்டேஷன்”
“அதத்தான் நான் இப்ப கேட்கப்போறேன்… உள்ளயே வா…” என்றான் ராஜா.
“டேய் இதோட ஓடிலாண்டா” என்றான் பரகாலன்.
“அது முடியது வா.. உள்ளே” என்ற ராஜாராமன் எஸ்.ஐ. மேஜை முன்பு நின்று “ஆபிஸர்” என்று அதிகாரமாக விளித்தான்.
அப்போதுதான் தன் காது குறும்பியை லாவகமாக எடுத்திருந்த எஸ்.ஐ. தன் இன்ப லாகிரியைக் கெடுத்த ராஜாராமனை ஆச்சரியத்துடன் பாத்தான்.
“என்னையா கூப்பி்ட்டே ஆபிஸா்ன்னு”
“ஆமாம் நீங்க ஆபிஸா் இல்லையா”
“திங்கிற சோத்திலே மண்ணைப் போடாதேய்யா… எவனாவது ஆபிஸா் கேட்டிருந்தா நான் பேண்ட இல்லாம நிக்கணும்… ஆப்பு வைக்க மாட்டான்… அணுகுண்டே வச்சிடுவான்… உனக்கு என்னய்யா வேணும்…”
“ஸிம்பிள்… எங்க மேலே என்ன கம்ப்ளைண்ட்… ஏன் எங்களக் கூட்டி வந்தீங்க…”
எஸ்.ஐ. வினோதமாகப் பார்த்தார்…
“வெளியே போறவன் அப்படியே போக வேண்டியதுதானே… ஏன் உள்ளே வந்த…’
திடீர் என்று பேச்சி உள்ளே வந்தாள்…
“யாருப்பா என் புள்ளஙை்கள உள்ளே வச்சது… உடமாட்டேன் என் புள்ளிகளை எவனும் தொட உட மோட்டேன்..”
“வா தாயி… வா… ஒரு தொந்தரவு ஆரம்பிச்சது… இப்ப ரெண்டாவது… ஆமா உனக்கு புருஷனே இல்லை.. புள்ள எப்படி வந்தது… அதுவும் ஒரே நாள்ல…”
“ஹாய் எஸ்.ஐ… அது என் விவகாரம்… என் புள்ளைங்க எங்க.. எங்க…”
நாலு ஆட்களுடன் வந்திருந்த பேச்சி ஸ்டேனையே துழாவினாள்… ”யாரும் காணமே… ஏய் எஸ்.ஐ. எங்க என் புள்ளைங்க…?”
“அறிவு கெட்ட முண்டம்… போய்த்தொலையுதுன்னு விடறேன்… உன் புள்ளைங்க யாருன்னு எனக்கெப்படித் தெரியும்…”
“அதானே… எனக்கே என் புள்ளைகளைத் தெரியாதே…”
“அப்படிப்போடு” என்றான் எஸ்.ஐ. “அந்த மூணுபேர்ல யார் உன்னோட புள்ளைங்க…”
“விளையாடுறியா அவனுங்க ஜில்லா கேடிங்க… ஐயோ என் புள்ளைங்களக் காணோமே…”
“இவனுங்க ரெண்டு பேருதான் இப்ப ஸ்டேஷன்ல எக்ஸ்ட்ரா… இவனுக உன் புள்ளைகளான்னு பாரு… சாமிகளா… இது உங்க அம்மாவா…”
பேச்சி குறுக்கே புகுத்தாள்… “பெத்ததான் புள்ளையா.. ஏட்டக்கா நீ சொல்லு…
“பெக்கமா புள்ள எப்படி வரும்டி… சனியனே உன் தொந்தரவு தாங்கவே முடியல… யார்தாண்டி உன் புள்ளைக… அடையானம் காட்டித் தொலையேன்…
“டேய் கண்ணு… உங்கக்கா யாருடா”
“பிரியதர்ஷினி நாச்சியார் ஐ.பி.எஸ். மத்திய உளவுத்துறை அதிகாரி.
அக்கா நான் உன் ராஜாராமன்… எனக்கு ஞாபகம் வந்திருச்சு…”
“இந்த நாய்தான் பரகாலனா…”
“அக்கா நான்தான் பரகாலன்…” ஐயோ என் ராசா… இந்தக் கருவாடு பரகாலனா…
“அக்கா” என்று அலறினான் பரகாலன்… நான்தான் பரகாலன்… என்னைக் காப்பாத்து…
“எஸ்.ஐ. இவங்களை நான் ஜாமின்லே எடுக்ணும்… இவங்கதான் என் புள்ளைங்க… கண்டுபிடிச்சிட்டேன்…”
“ஜாமீனும் வேண்டாம்… வெங்காயமும் வேண்டாம்… தாராளமா கூட்டிப்போ தாயி… மெதல்ல எடத்தைக் காலி பண்ணு… வந்துட்டா ஆட்டிகிட்டு… போடி” என்றாள் ஏட்டக்கா… இப்போது ராஜாராமனுக்கு மரண தைரியம் வந்திருந்தது…
“அதெல்லாம் முடியாது… நான் வெளியே போக முடியாது… என் மேலே என்ன புகார் அதச் சொல்லுங்க… ஏன்யா இப்படி ரோட்ல போன எங்களை ஸ்டேஷன் கூட்டிட்டு வருவிங்க… துணிகளை அவுப்பீங்க… லாக்அப்புல வைப்பீங்க… நீங்க கூப்பிட்டா வரணும்… போன்னா போகணும்… நான் என்ன இளிச்ச வாயனா…”
“யோவ் நீ இளிச்ச வாயனா சப்ப மூக்கனான்னு எனக்குத் தெரியாது… ஆனா நான் உன்னைக் கூட்டி வரலை அவ்வளவுதான்…”
“அப்ப பேண்டைக்கழட்டுனது யாரு”
“நான் உன்ன பேண்டைக் கழட்டச் சொன்னனா” இது சப் இன்ஸ்பெக்டர்.
“லாக் அப்புல வச்சியே”
”நான் உன்னை லாக் அப்ல வைக்கிலயே…”
“ஊய்” என்று ஊருக்கே கேக்கிற மாதிரி அலறினான் ராஜாராமன்.
என்னய்யா இது கொடுமை… அப்ப நாங்க எதுக்கு இங்க வந்தோம்… என்று ராஜாராமன் கூவினான்.
“அதான் நானும் கேட்கிறது… ஏன்யா ரெண்டு பேர் ஸ்டேஷன் வருவீங்களாம்.. மாப்பிள்ளைகள் மாதிரி சட்டை பேண்ட்டைக் கழட்டுவீங்களாம்… லாக் அப்பிலே போய் ஓய்வு எடுப்பீங்களாம்… கைதிகளை பேட்டி எடுப்பீங்களாம்… அப்புறம் நீங்களா போவீங்களாம்… ஏன்யா இது போலிஸ் ஸ்டேஷனா உங்க மாமியார் வீடா..?”
“இதோ பாருங்க… எனக்குக் கல்யாணமே ஆகல…”
“அது என் பிரச்னை இல்லே”. ”ஏய் இவள் என்ன குடிகாரன் மாதிரியே பேசறான்… இவனுக்கு நான் சரிப்படாது சாமி வரட்டும்” என்றான் எஸ்.ஐ.
எஸ்.ஐ. சொல்லிக் கொண்டிருந்தபோது ஒரு அதிகாரி மாதிரி தோரணையில் ஒருவர் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்… சுமார் ஏழடி உயரம் மூணடி அகலம்…
“டேய் பரகாலா அந்த ஆள் கை உலக்கைடா.. அது எதுக்குடா… அடிக்கவா… இப்ப தூக்கிலே எல்லாம் போடறதில்லையா…”
“த்தூ… உலக்கையில்லேடா… அது பேருதான் லட்டி… அந்தாள் சைசுக்கு அது கரெக்ட்..”
“ஆளும் பெரிசு… லட்டியும் பெரிசுதான்…” என்றான் ராஜாராமன்.
“டேய் பசங்களா.. வெளிய போகப் பாருங்கடா… அதவிட்டு போலிஸ்காரன் லட்டி பெரிசு… ஜட்டி பெரிசுன்னு பட்டிமன்றம் நடத்தாதீங்க… ஐயோ சாமி என்ன கேக்கப்போறாரோ…” என்றாள் பேச்சி.
“சாமி காவு கேப்பாரோ” என்றான் ராஜாராமன்…
“சாமி வரம் கொடுப்பாரு… லட்டியிலே மந்திரிச்சும் விடுவாரு…” என்றான் எஸ்.ஐ. எளக்காரமாக…..
புரியல்ல என்றான் ராஜாராமன்.
“கொஞ்சம வெலாவரியா சொல்றேனே… அந்த லட்டியை வாய்க்குள்ளே விடுவாரு அப்ப நாங்க முதுகிலே வரிசையா மாத்துவோம்…”
“அப்ப சத்தம் போட முடியதே“
“அதுக்குத்தான் வாயிலே லட்டியை விடறது”
“அவன் பின்னலே விடுவாங்கன்னுதான் சொன்னான்” என்று ஒரு கேடியைக் காட்டினான் ராஜாராம்.
“அவன் படிக்காதவன்… நீ படிச்சவனில்லையா… உனக்கு ஏத்த வைத்தியம்… யார் கண்டது… உனக்கும் பின்னாலே விடலாம்… அதெல்லாம் குறை வைக்க மாட்டாரு…”
“அந்த லட்டி சுத்தமா இருக்குமா…” என்றான் ராஜாராமன்.
“ஏண்டா பசங்களா… ஏண்டா சாகடிக்கிறீங்க… வெளிய போறதைப் பாருங்கடா… போயும் போயும் சாமி கிட்டயா சிக்கணும்…” என்று புலம்பினாள் பேச்சி.
எஸ்.ஐ. என்று உள்ளேஇருந்து சத்தம் வந்தது.
“சரி…நான் உள்ளே போயிட்டு வர்றேன்… தர்பார் ஆரம்பிக்கப் போகுது… எல்லாம் சாமி கும்பிட்டுக்கங்கப்பா…”
எஸ்.ஐ. சாமி அறைக்கு உள்ளே போய் வெளியே வந்தான்.
“எல்லாம் உள்ளே போங்க… ம் வரும் வினை வந்தே தீரும்… போங்கய்யா…”
சாமி எதிரில் மூன்று பேரும் நிற்க மூன்று பேரையும் ஏறிட்டார்.
“ம்… சொல்லு பேச்சி…”
“இவங்க என் புள்ளைங்க சாமி”
“அப்டியா… இவன் அவசரத்திலே பொறந்த மாதிரி இருக்கான்… அவன் பரவாயில்ல… பதினைஞ்ச மாசம் கழிச்சு ஆற அமரப் பொறந்திருக்கான் போலத் தெரியுது…”
“இவன் அம்மா போட்ட சோறுதான் இந்த ஒடம்பு”
“சோறு போட்டாங்களா… எருமைப் புண்ணாக்கு வச்சாங்களா…”
“அந்த அம்மா கையில சோறு வாங்கித் தின்னாலே யாரும் இம்மாம் சைஸ் வந்துடுவாங்க… இவன் அக்கா அந்தக் காலத்திலே குடுத்த புடவைதான் நான் இன்னமும் கட்டுறது…”
“நீ புடவை கூடக் கட்டறியா என்ன”
“நான்தான் சாமி இவனைக் குளிப்பாட்டுவேன்… இவனை அப்படியே அம்மணமா நிக்க வச்சிக் குளிப்பாட்டுவேன்… இவங்க அம்மா திட்டுவாங்க… அடிப்பாங்க கேட்க மாட்டேன்… எனக்கு இவன் மேல ஆசை…
“கொஞ்ச நேரம் முன்னே ரெண்டு பசங்க அம்மணமா இருந்தாங்கன்னு சொன்னாங்க… வாட்ஸ்அப்லே போட்டு வந்ததாம்”
”ஐயோ எங்களை வாட்ஸ்அப்ல போட்டாச்சா” என்று அலறினான் ராஜாராமன்.
”ஆமா பேச்சி… உன் புள்ளைகள ஏன் இங்கே கூட்டியாந்தே… நான் ராத்திரி அங்க வரும்போது காமிச்சிருக்கலாம்ல…
“சும்மா இருங்க… உங்களுக் நான்னா கேலி… சாமி நான் இவங்களை கூட்டிப் போயிடட்டுமா…”
“நீதானே கூட்டிவந்தே… கூட்டிட்டுப் போ…”
“அப்ப எஸ்.ஐ. எதுக்கு என்னைக் கூட்டி வந்தாரு…” என்றான் ராஜாராமன்.
“ஐயா… நான் இவனுங்களைக் கொண்டாரல…” கேஸ் போடு போடுன்னு அந்த குண்டன் ரகள பண்ணான்.
“எஸ்.ஐ.சும்மாயிருங்க. என்று குறுக்கே விழுந்தாள் பேச்சி… அது சும்மா தமாசுங்க சாமி…”
“சரி தமாஸா ஒரு கேசு எழுதிக்கோய்யா…” என்றார் சாமி.
“சரிங்கய்யா…” என்று பேப்பா் பேனா சகிதமாய் நின்றான் எஸ்.ஐ.
”சாமி அது என் புள்ளைங்க…”
“ச்சீ… வாயை மூடு… ஏண்டா நீ யாரு…”
”என் அக்கா பிரியதர்சினி நாச்சியார், ஐ.பி.எஸ், உளவுத்துறை.
“சரி”
“எங்க அத்தை புருஷன் ரிட்டயர்டு சீப் ஜட்ஜ்”. .. ….. காலமாயிட்டாரு…”
”ஐயோ பாவம்… ஆமா நீ யாரு…”
“அதான் சொன்னேனே”
“என்ன சொன்னே… ஏண்டா நீ யாருன்னா அக்கா பேரு அத்தை புருஷன் பேரு சொல்றே… டேய் கருவாடு நீ யாரு..
”ஐயா என் பேரு பரகாலன்… என்ஜினியர்ன்னு சொல்லுவாங்களே அதுக்கு படிச்சிருக்கேன்… அப்படியே கம்பியூட்டர் தடவுற கூலி வேலை செய்றேன். மயிலாப்பூா்ல குடி.. எங்கப்பா நேவியில மேஸ்திரிங்கிற கூலி வேல.”
”கப்பல்ல ஏதுடா மேஸ்திரி வேல?”
”கேப்டன்னு சொல்லுவாங்க ஐயா…”
”கரெக்ட்…இவன் மேல எந்த கேசும் இல்லையா… பேரு பரகாலனா.. விட்டுரு”
“சரிங்கய்யா என்று பவ்யமாக பதில் சொன்னான் எஸ்.ஐ.
அப்ப என் மேல கேஸ் இருக்கா… நான் எதுக்கும் யாருக்கும் பயப்படமாட்டேன்.. பத்து கேஸ் போட்டாலும் கவலையில்ல…
பத்தா… உன்மேலே பதிமூணு கேஸ் இருக்குடா முட்டாப்பயலே… என்றார் சாமி.
“எம்மேலே”
“ஆமா”
“பதிமூணுகேஸ்”
“ஆமா”
”நீங்க போடப்போறீங்க… ஓகே ஆபிஸர் ஐ வாண்ட் டு நோ வாட்…”
”எனக்கு மராட்டி தெரியாதுடா முண்டம்…”
”நான் பேசுனது இங்கிலீஸ்…”
”பாரு இங்கிலீஸ்லே பேசினா கெட்ட வார்த்தையிலே திட்டினேன்னு கேஸ் போட்ருவாங்க… வாயை மூடு…”
“எழுதிக்கோய்யா… ஓவர் ஸ்பீடு… வண்டிக்கு ஆர்.ஸி.இல்லை… திருட்டு வண்டி.. இவனுக்கு லைசன்ஸ் இல்ல… அப்புறம் முக்கியமா போலிஸ் சார்ஜன்ட் ஒருத்தன் மேல பைக் விட்டு…”
”மேலே இல்லை நடுவிலே” என்று திருத்தினான் ராஜாராமன்.
“சரி நடுவில விட்டதிலே அந்த ஆள் ஆண்மை முழுசும் இழந்துட்டாரு”
“என்னது… முழு ஆண்மையும் இழந்துட்டாரா… அவருக்கு அம்பத்தியேழு வயசு… எப்படி சார் முழு ஆண்மை இருக்கும்…”
“சரிய்யா… முக்காலே மூணு வீசம் ஆண்மை இழந்துட்டாருன்னு எழுதிக்கோ…”
”நான் இதை ஒத்துக்க முடியாது…”
”அவரு ஆண்மை இழக்கறதை நீ ஏன்யா ஒத்துக்க மாட்டே” …”நான் அவரு மேலே இடிக்கல்லியே”
நடுவிலே உட்டே… பயத்திலே அவரு மூச்சா டேங்க் பிச்சிகிச்சு… பேண்ட்ட அவுத்தா அவரு பீச்சாவும் பிச்சிகிச்சு…
”பீச்சான்னா?”
“முன்னாலே போனா மூச்சா.. பின்னாலே போனா பீச்சா… இது கூடத்தெரியாம என்ன ஆளுடா நீ… முன்னாலே, பின்னாலே நடுவிலே எல்லாமே அவனுக்கு போயிடுச்சு அதுவும் முழுசா…”
“அவரோட முழு ஆண்மை போயிடுச்சுன்னு வேற சொன்னீங்க.. எப்படி சார் போகும்?
“பைக் ஏறிப்போச்சு.. என்னைக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும் அவரு சொல்லிட்டாரே…
எத வச்சி சொன்னார்?”
“அவரு எத வச்சி எப்படி டெஸ்ட் எடுத்தாருன்னு எனக்குத் தெரியாது… ஆனா அவருக்கு முழு ஆண்மை போயிருச்சாம்… புலம்புறாருய்யா… விடுவமா… யோவ் எழுதுய்யா.. அவ சம்மாரம் ரோட்ல விரிச்சிப்போட்டு அழுவுறா…”
“விரிச்சிப்போட்டு” என்று கேள்வி எழுப்பினான் ராஜாராமன்.
”தலையை விரிச்சுப் போட்டு” என்று சாமி விளக்கமளித்தார்.
“அந்த ஆளுக்கு முழு ஆண்மை போனதா சொல்றதை நான் விடமாட்டேன்” என்கிறான் ராஜாராமன்.
“லேகியம் வாங்கிக் கொடுத்து சரிபண்ணப் போறியா. செக்சன் 303, செக்சன் 304, 306 போடுங்யா… அவன் பம்பர் போச்சி… டிக்கி போச்சு” என்றார் சாமி.
பேச்சி அலறினாள்… “சாமி சாமி… டேய் வாங்கடா…” என்று இருவரையும் வெளியே தள்ளிக் கொண்டு போய் தள்ளினாள் பேச்சி… சொத்தென்று ராஜாராமன் கீழே விழுந்து கிட்க்க பேச்சி பேசிக்கொண்டே உள்ளே போனாள்… “ஓடிடுங்கடா… கொலக்கேஸ் போட்டு உள்ளே வச்சிடுவாங்க… உள்ளே ஓடினாள்.
“சாமி சாமி… அவங்க ரொம்ப பெரிய எடம்.. ஏழு காம்ப்ளக்ஸ்… ஆறு பங்களா…. அத்தைகாரி மனிதஉரிமை கமிஷன்லே…”
சரோஜா உள்ளே வந்தாள்… “பொட் என்று தலையில் போட்டாள்…“அடங்குடி… நீயாங்காட்டியம் சாமி சும்மாயிருக்கார்… இவனை உள்ள வைக்கச் சொன்னதே இவன் அக்காகாரிதான்… ஏங்க ரொம்பப் படுத்தராங்க… இவ தொந்தரவு தாங்க முடியல…ட்டீய்… அவரு லட்டி பாத்திருக்கே இல்ல”.
“அவருது எல்லாம் எனக்குப் பழக்கம்தான்… நீ கூவாதே…” என்றாள் பேச்சி.
“ஏய் நீ போ” என்று சரோஜாவை வெளியெ அனுப்பினார் சாமி…
”ஏண்டி எருமை… போலிஸ்காரண் எலிப்புழுக்கையும், எள்ளுப் புண்ணாக்கும் விக்குறதுக்கு வரான்னு நெனச்சியா… மூணு நாளா இவன் அட்டகாசம் தாங்க முடியல… இவன் அக்கா சொல்லி காத்திருந்து பிடிச்சோம்… நடுவிலே வந்துட்டு கழுத்தை அறுக்கிறே”.
“எனக்கு உங்க ரகசியமெல்லாம் தெரியாதுப்பா…”
“ஆமா இந்த போலிஸ்காரி எனக்கு ஏன் சொல்லல… அத்த உடுங்க.. ராத்திரி நேரத்திலே இவளுக்கு உங்க கூட என்ன டூட்டி…?”
“நீ முதல்ல வெளியே போ…”
“பாரு… அவனுங்களுக்கு சப்போர்ட் பாண்ணா கொன்னுடுவேன்… அவனுங்க விஷயத்தை சரோஜா பேசுவா…” நீ குறுக்கு சால் ஓட்டாதே…..
“பேசுவா…பேசுவா… ஒரு நாளைக்கு வச்சிக்குறேன்… ரெண்டு பேருக்கும் இருக்குடி… சக்களத்தி… டீ…”
”பேச்சி முகத்தை நொடித்துவிட்டு வந்தாள்.
”டேய் நீங்க இன்னமும் போகலியா… ஏய் ஆட்டே இவங்களை மைலாப்பூர்ல விடு”
”நாங்க உங்க புள்ளைங்க அக்கா”
“நீங்க என் புள்ளைங்களே இல்லே… ஆள் மாறிப்போச்சு… உங்களை விட்டாச்சில்லே நீங்க போங்க… கிளம்புங்கடா…”
“இது அந்தர் பல்டி அநியாயம்” என்றான் ராஜாராமன்.
“போங்கடா என்று ராஜாராமனையும், பரகாலனையும் ஆட்டோவிற்குள் முரட்டுத்தனமாய்த் தள்ளித் திணித்துத் துரத்தினாள் பேச்சி.
பின்னால் கேலிச்சிரிப்புடன் சரோஜா நின்றிருந்தான்.
ஆத்திரத்துடன் தாழ்ந்த குரலில் பேச்சி கடுகடுத்தாள். ”பாரு… சாமியை நீ கைக்குள்ளே போட்டுக்கலாம்னு நினைச்சே மவளே சாவுதான்… சங்கு ஊதிடும்… குப்பத்திலே வச்சு பொதச்சிடுவுன்… வேலையை மாத்திரம் பாரு…”
“ட்டீங் கொய்யால… சவுண்டு உட்ரே… கவனிக்கிறேன்டி… எங்கைல சிக்கினே அன்னைக்கு இருக்குடி உனக்கு… அறுத்துடுவேன்… அறுத்து சாமி சொன்னாலும் விடமாட்டேன்… என்னையா மிரட்ரே… நான் போலிஸ்காரிடி” என்று முஷ்டியை உயர்த்தினாள் சரோஜா…
”அங்க என்ன சத்தம்” என்று சாமி சத்தம் போட்ட போது எல்லாருமே ஓடியிருந்தார்கள்.
* * * * * * *
இந்தப் போட்டோவைப் பாருங்க அத்தே…… பத்மாவதி பிரியாவின் கையில் இருந்த செல்லை வாங்கினாள்… “ஜட்டியோட கூட ராஜா மாதிரிதான் இருக்கான்டி…”
“எல்லாம் சரி ஸ்டேஷன்லே ரகளையாம்… முதல்ல வண்டியை வித்துடணும்… இல்லே புள்ள நமக்கில்லே…”
“விடுடி அவன் வர்ற நேரம்… இவர்கள் பேசிக்கொண்டிருந்போதே புயல் மாதிரி உள்ளே வந்தான் ராஜாராமன்.
“அக்கா… அக்கா… ஒரு சம்பவம் நடந்து போச்சு… இந்த பீச் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இருக்கானே…”
“இர்றா… இரு… இதென்ன உடம்பு இந்த நாத்தம் நாறுது… நீ கம்பியூட்டா் வேலைக்கு போனியா… இல்ல கக்கூஸ் கழுவப் போனியா..?”
“இல்லக்கா இதக் கேளேன்… அந்த பீச் ஸ்டேஷன்”
”ஏண்டா பதற்றே… எதுவா இருந்தா என்ன… பாரு முதல்ல குளி… அத்தை நாத்தம வரல்லே… சோபாவிலே உட்காரதேடா சனியனே…”
”போடா கண்ணு… அக்கா சொல்றாள்ல அவ் இப்பத்தான் குளிச்சா… இவளைத் தொடதே… போய் குளிச்சி பெருமாளசை் சேவிச்சிட்டு வந்து பேசு… ராத்திரி பூரா பேசு.. உன்னை யாரு கேக்குறது… போ… ராஜா… கண்ணு இல்ல…”
”அத்தை …. உன்னைச் சொன்னே்… அவன் மதிக்கல… திமிர் பிடிச்ச ஆளு…”
“அத விட்ரா.. நீ மொதல்ல பாத்ரூம்போடா…”
அவனை பாத்ரூம் வரை தள்ளிக் கொண்டு போய் உள்ளே தள்ளினாள் பிரியா…
ஹாலுக்கு வந்தாள். “எமப்பயல்… செய்யறதெல்லாம் இவன் மத்தவன் மேலே தப்பு சொல்றது… கொய்யால வச்சிக்கரண்டா…”
“ச்சீ… என்ன பாஷைடி இது….”
அடுப்படியிலிருந்து தாயாரு வெளியில் வந்தாள்.
“பிரியா ஒரு சமாச்சாரம்… அந்த சாமி இன்னைக்கு மார்கட் வந்திருந்தான்… இவன்தான் இங்க இன்ஸ்பெக்டராம்… எவ்வளவு ஆசையா இருக்கான் தெரியுமா… உன்னையப் பாக்குறதுக்கு”.
“கெட்டது குடி என்றாள் அத்தை. இது ஒரு ஜோக்கர்டி… கரெக்டா சீன் குறுக்கே வந்துடுவாள்…”
“அம்மா… அந்த பால்காரி நாலு நாளா கூப்பிடுறாளே போகக்கூடாது…”
“அதாண்டி புறப்பட்டேன்… அவன் வெளியில் வந்ததும் கவனிச்சுக்கோ… மேலேயும் கீழேயும் குதிப்பான்…”
“நடுவிலே விட்டு கலகம் கூடப் பண்ணுவான்…”
“நீ என்னடி சொல்றே…”
“நீ போயிட்டு வாம்மா நான் பாத்துக்குறேன்”
“சமயத்துல நீ பேசறது எதுவும் புரியறதில்லேடி”
தாயாரு வெளியே போக இருவருக்கும் நிம்மதியாக மூச்சு வந்தது…
”மேடம்” என்ற சத்தம் கேட்க இருவரும் வெளியே வந்தார்கள்…
ஒரு எஸ்.ஐ. ”அடுத்த கஷ்டம்“
“என்ன சார்”
ஒரு விரைப்பான சல்யூட்டிற்குப் பின் அந்த போலிஸ்காரன் ஒரு கவரை நீட்டினான்.
“வண்டி சாவிங்க மேடம்”
பின்னால் திரும்பி வீட்டிற்குள் பார்த்தாள் பிரியா. சுனாமி வந்தால்கூட ராஜாராமன் கால்மணிநேரம் கழித்துதான் வெளியே வருவான்.
”ஐநூறு ரூபா அபராதம். போட்டுக் கட்டியாச்சு மேடம்…”
“நாலு சாத்தறது…”
ஐயோ… தொடுவமா… மேடம் உள்ளே வைக்கவே சாமிக்கு மனசில்லே… அவன் குழந்தைனார்…”
“துள்ளுவானே”
”வேற எவனாவது இவர் மாதிரி பேசியிருந்தா சாமி தோலையே உரிச்சிருப்பார்…”
”சரி நீங்க போங்க…”
போலிஸ் சல்யூட்டோடு பின் வாங்கினான்…
இன்னொருத்தன் உள்ளே வந்தான்…
யார்ரா நீ…
“அம்மா வண்டி கொடுக்கிறதா சொன்னீங்களாம்… மெக்கானிக் அனுப்பினாரு…”
”நாலு நாள் கழிச்சுதானே வரச் சொன்னே்… ஏன் முன்னே வந்தே… ஓடிரு… வண்டி அது இதுன்னு எவனும் வந்திராதீங்க…”
அவன் ஓடிப்போக பிரியா திரும்பியபோது ராஜாராமன் ஹாலுக்கு வந்திருந்தான்.
”குளிச்சியா…பெருமாளைச் சேவிச்சியா… அங்க தளிகை வச்சிருந்தேன் எடுத்துக்கோ…”
“அக்கா அங்க ஸ்டேஷன்லே”
“மொதல்ல தளிகையை எடுத்துக்கோடா… இதோ காப்பி கலந்துட்டு வந்துடறேன்… பாவம் சுத்திட்டி வர்றே.. காப்பி சாப்புட்டு அத்தைகிட்ட பேசிட்டீரு…”
பிரியா உள்ளே போக பத்மாவதி சாதாரணமாக ஆரம்பித்தாள்.
“சொல்லுடா… உனக்கு என்ன பிரச்சனை… மொல்ல எங்க பிரச்சனைனாலும் என் பேர சொல்லு… இல்ல உங்கக்கா பேரச் சொல்லு விஷயம் முடிஞ்சிரும்… இல்லையா…” என்று பத்மாவதி ஆரம்பிக்க ராஜாராமன் தளிகை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
”நெய் வழிய ஊத்தியிருப்பாளே…”
“இரு அத்தை சாப்பிடும்போது குறுக்கே பேசாதே… என்றான் ராஜாராமன்.
அப்படி இறங்கு என்று கருவிக் கொண்டாள் கிழவி… நூத்தி முப்பதுலேயே உட்ரே… அவ வந்து உட்ரா பாரு… “ஏண்டா… ஏதாவது பிரச்சனைன்னா எங்களுக்கு போன் பண்ணக் கூடாது…?
“என் ஸெல்லுலே சார்ஜ் இல்லே… அவன் ஸெல்லுலே காசில்லே…”
”சிம்மை மாத்திப் போடறது… அதுகூடத் தெரியாது உனக்கு..”
“ஆமாம் இல்லே… என்று சாப்பிடுவதை நிறுத்தினான்… எனக்கு ஞாபகம் வரலை… ஒரே டென்சன்… அதான்… அப்படி செஞ்சிருக்கலாம்… இல்லத்தே…”
பிரியா ஒரு காபியுடன் திட்டிக்கொண்டே வந்தாள்…”நாசமாய்ப்போனவனே எதுக்கு எம்டெக் படிச்சே… ஒரு சின்ன விஷயம் மூளைக்கு எட்டலை… இதுலே உனக்கு கல்யாணம் வேற பண்ணணும்… எவ சிக்கப்போறாளோ… எவளுக்கு விதிச்சிருக்கோ… பெருமாளே… இவன் எனக்கு வாய்ச்சானே…”
புயல் போலிஸ் ஸ்டேஷன் தாண்டி வீட்டையும் தாண்டிவிட்டதால் அது திரும்பி சரியான திசைக்கு மாற்றப்படாது என்று திட்டமாக ரமணன் சொல்லிக் கொண்டிருந்தார். பரியாவும், கிழவியும் இவன் பேசின எதுவும் காதில் வாங்காமல் மூச்சு விடாமல் அர்ச்சனை பண்ண ஆரம்பிச்திருந்தார்கள். சன்டீவியின் தெய்வத்திருமகள் பிரகாஷ் மாதிரி ராஜாராமன் “அத்தே நானு…” “அக்கா நானு…” என்பது தவிர வேறு எதுவும் பேசத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்… இரண்டு பேரின் டெக்னிக்கைப் புரிந்து கொள்கிற அளவுக்கு அவனுக்கு புத்தியில்லை… ஏனென்றால் அவன் அம்மாஞ்சி…
ஹாஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹாஹா என்னால சிரிப்பை அடக்க முடியல சரியான காமெடி .. அருமையா இருந்துச்சி ஐயா வாழ்த்துக்கள் …
அருமை! நகைச்சுவை தெரிக்கிறது அய்யா!