வழிப் பயணி
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 3,325
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருடன், டாக்டர் கிருபாவைப் பின்தொடர்ந்தான். கிருபா பாங்கியிலிருந்து எடுத்துச் செல்லும் ஒரு இலட்சம் ரூபாயிலேயே கண்ணாயிருந்தான். சென்னையிலிருந்து அவரோடு முதல் வகுப்பு ரயில் பெட்டியில் ஏறிக்கொண்டான்.
திருடன் மிக நாகரீகப் பேர்வழி. நன்கு படித்தவன். சில நிமிடங்களில் இருவரும் நல்ல நண்பர்களாகிக் கொண்டனர். திருடனுக்கு நல்ல வேளையாக அந்த ரயில் பெட்டியில் இருவர் மாத்திரமே இருந்தனர்.
மாலை 5:20 மணிக்கு நெல்லை விரைவு ரயில் கூச்சலிட்டுக் கிளம்பியது. முன் இரவில் நன்கு தூங்கிவிட்டால் பின் இரவில் தன் “தொழிலைச்” செய்யலாம் என்று தீர்மானித்தான் திருடன்.
திருச்சியைக் கடக்கும்போது டாக்டர் நன்கு தூங்கினார், திருடன் அங்குமிங்குமாக நடை போட்டான். நேரம் பார்த்து டாக்டரின் சூட்கேஸை எடுத்துத் திறந்தான். உள்ளே துளாவினான். பணம் இல்லை. நன்கு சோதித்தான். இல்லவே இல்லை.
ஒரு இலட்ச ரூபாய் நோட்டுக்களை ஒரு கவரினுள் வைத்து துணிப் பைக்குள் திணித்து பெட்டிக்கு அடியில் வைத்ததைத் திருடன் கண்ணால் கண்டான். அவ்வளவு பெரிய பை அவரது உடலில் எந்தப் பாகத்திலும் இல்லை என்பதையும் சோதித்து விட்டான்.
திருடனுக்கு ஆச்சரியமாக இருந்தது. டாக்டர் கையில் வேறு எந்தப் பையும் இல்லை. சூட்கேஸைப் பூட்டி இருந்த இடத்திலேயே வைத்து விட்டான்.
திருடனுக்கு ஒரே புதிர் “இவன் என்னைவிடப் பெரிய திருடனாய் இருக்கிறானே…பணப் பை எங்கே?” திருடனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவன் தொழிலில் இதுவரை தோல்வி கண்டதில்லை.
நெல்லைச் சந்திப்பில் இருவரும் இறங்கிச் செல்லும் போது திருடனுக்கு ஒரு துணிச்சல் பிறந்தது. டாக்டர் கிருபாவிடமே மனம் திறந்து பேசினான்.
இருவரும் உரையாடினர்.
“ஸார், நான் ஒரு திருடன்.”
“அது எனக்கு நன்றாகத் தெரியும்.”
“உங்களிடமுள்ள ஒரு இலட்சம் ரூபாயை அடித்தும் செல்லவே இந்த ரயிலில் ஏறினேன்.”
“அதையும் நான் நன்றாகத் தெரிந்துகொண்டேன்.”
“நாம் பிரிந்து செல்லுமுன் உம்மிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன்.”
“உமது கேள்வி என்னவென்றும் எனக்குத் தெரியும். பணத்தை எங்கே ஒளித்து வைத்தேன், என்பதுதானே?”
“ஆமாம்…”
“நீர் தூங்கும்போது உமது சீட்டுக்கு அடியில் என் பணப்பையைப் போட்டுவிட்டேன். பின்பு நான் நிம்மதியாகத் தூங்கினேன். மதுரையைக் கடந்தபோது நீர் லேவட்றிக்குள் நுழைந்தீர், அந்நேரம் பணப்பையை எடுத்து என் பெட்டிக்குள் வைத்துக்கொண்டேன்.”
திருடன் திக்பிரமை பிடித்து நின்றான்.
“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்கிறான்; பேதைகள் நெடுகப் போய் தண்டிக்கப்படுகிறார்கள்.” – [நீதிமொழிகள் 22:3]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
